Wednesday, September 9, 2009

சுய ‘நலம்’

காற்று மணலில் கீறிச் செல்வது போல், நதியில் சூரியனின் வண்ணங்களை மினுமினுத்தபடி பயணிக்கும் நீர்க்குமிழி போல தற்காலிக வசீகர உறவுகள் அமைவதை எவரும் ஏற்றுக் கொள்ளத் தயாராய் இருப்பதில்லை. நிரந்தரத் தன்மையின் மீதிருக்கும் பிடித்தம் மற்றும் “என்றென்றைக்குமான" “ஏழேழு ஜென்மத்துக்கும்” என்பன போன்ற நாடக வாசகங்களின் மீதிருக்கும் நம்பிக்கைகள் ஏகப்பட்ட பொய்களோடு எல்லா உறவுகளையும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. வாழ்வின் மீதான பயங்களே நிரந்தரம் என்கிற போலிச் சொல்லினை மிக இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. எந்த ஒன்று நிரந்தரமாக இருக்கத் தேவையில்லையோ அதை நாம் மிகச் சுதந்திரமாக அணுகுகிறோம். இஃதெனக்கு நிரந்தரமாய் இருக்கத் தேவையில்லை என்கிற எண்ணத்தோடு ஒன்றை அணுகுவது அதன் மீதான வீண் பயங்களையும் அவசியமில்லா நமது நாடக அணுகுமுறைகளையும் குறைக்கிறது.

திருமணம் என்கிற நிர்பந்தமில்லாது ஒரு பெண்ணை/ ஆணை க் காதலிப்பது மிகச் சுதந்திரமான செயலாய் இருக்கக்கூடும். அந்தக் காதலில் மிக அதிக நேர்மையையும் தடம் பிடிக்கலாம். போலிச் சமூகத்தின் காவலர்களுக்கும் மீட்பர்களுக்கும் இஃதொரு அதிர்ச்சியூட்டக்கூடிய செயல்தான் என்றாலும் அவர்களை எவையெல்லாம் அதிர்ச்சியூட்டுகின்றனவோ அவையே உன்னதங்களாக இருக்கக் கூடும்.

உதிரி வாழ்வு மற்றும் நாடோடித் தன்மை கொண்ட வாழ்வியல் அணுகுமுறைகளின் மீதெல்லாம் மிகுந்த விருப்பங்கள் இருக்கிறதென்றாலும் அவற்றை எதிர் கொள்ளும் துணிவு மட்டும் விருப்பத்தின் தொடர்ச்சியாய் உதிப்பதில்லை. மிதமான வெளிச்சத்தில் மெல்லிதாய் இசை கசிந்து கொண்டிருக்க பேரழகுப் பெண்கள் ஊற்றித் தந்த எரியாத மதுவினை உறிஞ்சியபடி “இயந்திர வாழ்க்கை” “செம்ம போர்” “I HATE” “I H A T E this fuckin life” “LIFE sucks” என விதம் விதமாய் வாழ்வு அலுப்பதாக நண்பர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். நானும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன்தான் என்றாலும் வாழ்வு வார்த்தையில் மட்டும் அலுக்கும் போலித்தனத்தை, வார்த்தையாய் உச்சரிக்கும்போதே உணர்ந்து கொண்டு சத்தமாய் சிரித்து விட முடிகிறது.

ஒரேயடியாய் வாழ்வை அற்பத் தளத்திலிருந்து உண்மைத் தளத்திற்கு நகர்த்திவிட முடியாதுதான் என்றாலும் மெதுமெதுவாய் நகர்ந்து போய்விட வேண்டும். எது உண்மைத் தளம் என்பதையெல்லாம் விவரிக்கத் துவங்கினால் அது மிக நீளமான விவாதத்திற்கு கூட்டிச் செல்லுமென்பதால், உண்மை என்பதை நாடகத்தனமாக இப்படிச் சொல்லலாம் “எங்கெல்லாம் நடிப்புகள் தேவையில்லையோ, எங்கெல்லாம் மிகைகளும் பூச்சுகளும் அவசியமில்லையோ, எங்கெல்லாம் எளிமையான அன்பு சாத்தியமாகிறதோ, எங்கெல்லாம் சுயநலம் குறைவாய் இருக்கிறதோ, அங்கெல்லாம் உண்மைத் தன்மை இருக்கிறது.”

சக மனிதர்கள் மீதான நம்பிக்கை, அவநம்பிக்கை இரண்டையுமே சூழலும் சுயநலங்களும்தான் தீர்மானிக்கின்றன. நம்பிக்கைகளும் அவ நம்பிக்கைகளும் பொய்க்கும்போது இரண்டாலுமே நாம் பழிவாங்கப்படுகிறோம். வலிகள், காயங்கள், ஏமாற்றங்கள் என எல்லாவற்றுக்குமான அடிப்படை நிறமிழக்கும் நம்பிக்கைகளாக இருக்கின்றன. குற்ற உணர்ச்சி,கழிவிரக்கம் போன்றவைகளுக்கான பின்புலம் பொய்க்கும் அவநம்பிக்கைகளாக இருக்கின்றன. அடுத்தவர் மீதான நமது நம்பிக்கைகள் எப்போது பொய்க்கின்றனவோ அப்போதே புன்னகையுடன் விலகுவதும், பிறவற்றின் மீதான நம்முடைய அவநம்பிக்கைகள் நீர்த்துப் போகும் புள்ளியில் அதற்காக வருந்துவதும்தான் ஓரளவிற்கு நேர்மையான செயலாக இருக்க முடியும். எவ்விதத் தீர்மானங்களும், முன்முடிவுகளும் இல்லாமல் உறவுகளை, சக மனிதர்களை எதிர்கொள்வதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கக் கூடும்.

ஒவ்வொரு மனித உயிரும் சுயநலத்தால் நிரம்பியதுதான். மேலும் அதில் தவறெதுவும் இருப்பதாகப் படவில்லை. தானொரு முழுமையான சுயநலவாதி என்பதை புரிந்துகொள்வது தன்சார்ந்த மிகைகளையும், அனைவரும் சுயநலமிகள் என்கிற புரிதல்கள் பிம்ப உருவாக்கங்களையும் தனிநபர் துதிக்களையும் அடிவருடித்தனங்களையும் சிறிது குறைக்கலாம்.சுயநலத்தை ஒத்துக் கொண்டால் ஏமாற்றம், துரோகம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய அவசியமுமிருக்காது. நாளையடைவில் நட்பு, அன்பு, தோழமை என்கிற வார்த்தைகளும் நீர்த்துப் போகலாம். அதனாலென்னக் குடிமுழுகிவிடப் போகிறது? இது போன்ற வார்த்தைகள் இல்லாமல் வாழ்வை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டியதுதான். அடுத்த விநாடியைக் கூட தயாரித்தல்களோடு எதிர்கொள்ளும் குரூரமான வாழ்வைத்தானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

16 comments:

manjoorraja said...

எனக்கு சுயநலம் இல்லை என பலர் சொல்ல கேட்டிருக்கலாம். அப்படி சொல்வதே சுயநலத்தை சார்ந்ததே. சுயநலம் இல்லாதவர்கள் இருக்கவே முடியாது.... அப்படிய் இருக்கிறார்கள் என்றால் அது பொய்யாகவே இருக்கும்.

ஆரூரன் விசுவநாதன் said...

சுயம் சார்ந்தவன் தான் மனிதன். சுயம் தவிர்த்த மனிதர்கள் நாட்டில் இல்லை, ஒருவேளை காட்டிலோ, அல்லது எங்காவது குகைகளிலோ இருக்கலாம்.

சுய நலத்தை ஒப்புக்கொள்ளவேண்டும் என்பதை விட, அடுத்தவர் சுயநலத்தை நியாயப்படுத்த நம்மால் இயலவில்லை என்பது தான் அடிப்படை. அங்கே நம் சுயநலம் விட்டுக்கொடுப்பதில்லை.

அந்த சூல்நிலையில் நானாக இருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பேன் என்று ஒப்புக்கொள்ளும் மனநிலை நமக்கு வருவதில்லை என்றே நினைக்கின்றேன்.

நல்லபடைப்பு
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

குப்பன்.யாஹூ said...

நல்ல படைப்பு அய்யனார். சிந்தனைகளை தூண்டும் இந்த பதிவை வழஅங்கியதற்கு நன்றிகள்.

என்ன செய்வது, பொருளியல் சார்ந்த வாழ்க்கை முறை இன்று நட்பு, அன்பு, விருந்தோம்பல் என்பனவற்றை எல்லாம் விழுங்கி கொண்டு இருக்கிறது.

வீடுகளிலேயே இன்று அப்பாவிற்கு தனி அரை, தனி தொலைகாட்சி, கணினி, குழந்தைகளுக்கு தனி அறை, கணினி என்று காலம் மாறி வருகிறது.

சொந்த சகோதர சகோதர்களுக்கு இடையே கூட சுயநலம் மிகுந்து காணப் படுகிறது.

பணம் பாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க பார்க்கிறது.

ஒரு வேளை உலகமயமாக்கல், சந்தை பொருளாதாரத்தின் பாதிப்போ இது. (பணம் தரம் அறிவு ஆற்றல் இருக்கும் மனிதருக்கு மட்டுமே மதிப்பு, அது இல்லாத மனிதரை நான் ஏன் மதிக்க வேண்டும், அவருடன் பேசி நான் ஏன் என் பொழுதை வீண் அடிக்க வேண்டும் என்ற எண்ணம்).

ஸ்ரீவி சிவா said...

//எந்த ஒன்று நிரந்தரமாக இருக்கத் தேவையில்லையோ அதை நாம் மிகச் சுதந்திரமாக அணுகுகிறோம்//
மிகப் பெரும்பான்மையாய் இது உண்மைதான்.
//உதிரி வாழ்வு மற்றும் நாடோடித் தன்மை கொண்ட வாழ்வியல் அணுகுமுறைகளின் மீதெல்லாம் மிகுந்த விருப்பங்கள் இருக்கிறதென்றாலும் அவற்றை எதிர் கொள்ளும் துணிவு மட்டும் விருப்பத்தின் தொடர்ச்சியாய் உதிப்பதில்லை//
மிகச் சரி.'நிரந்தரத் தன்மை'யின் சுழல்களில் சிக்கி கொண்டு, நாம் இவற்றை பார்க்க மட்டுமே முடியுமே தவிர, இந்த 'நாடோடி' திசை நோக்கி நடக்க திராணியற்றவர்களாய்தானிருக்கிறோம்.

பதிவின் மிகக் கடைசி வரி அதிகமாய் சிந்திக்க வைத்தது.

நல்ல பதிவு. நன்றியும் வாழ்த்துகளும் அய்யனார்.

Deepa said...

சிந்தனைகளைத் தூண்டும் மிக உன்னதமான பதிவு.

//எந்த ஒன்று நிரந்தரமாக இருக்கத் தேவையில்லையோ அதை நாம் மிகச் சுதந்திரமாக அணுகுகிறோம்.//

//எங்கெல்லாம் நடிப்புகள் தேவையில்லையோ, எங்கெல்லாம் மிகைகளும் பூச்சுகளும் அவசியமில்லையோ, எங்கெல்லாம் எளிமையான அன்பு சாத்தியமாகிறதோ, எங்கெல்லாம் சுயநலம் குறைவாய் இருக்கிறதோ, அங்கெல்லாம் உண்மைத் தன்மை இருக்கிறது.”//

இந்த வரிகள் மிக அற்புதம்.

சென்ற பதிவு போலவே கடைசி பத்தியில் எனக்கு முரண்!

//நாளையடைவில் நட்பு, அன்பு, தோழமை என்கிற வார்த்தைகளும் நீர்த்துப் போகலாம். அதனாலென்னக் குடிமுழுகிவிடப் போகிறது? //

அப்படி இல்லை. சுயநலம் இருப்பதை ஒத்துக் கொண்டால் மற்றவர்களின் பார்வையைப் புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்காது. ஒவ்வொருவரும் தனது பார்வையே சரி என்று பிடிவாதம் கொள்வது தான் உறவுச் சிக்கல்களில் பெரும் பங்கு வகிக்கின்றது.

தேவையில்லாத அலங்காரங்களாலும் மிகைப்படுத்தப் பட்ட செய்கைகளாலும் இவற்றை (அன்பு, நட்பு) நிரூபிக்கும் அவசியமும் அற்றுப் போகலாம். கூடவே இந்த உணர்வுகளுடன் பெரும்பாலும் கூட வரும் பொறாமை, ஆளுமை இவையும் தவிர்க்கப் படலாம்.


//ஆரூரன் விஸ்வநாதன்: சுய நலத்தை ஒப்புக்கொள்ளவேண்டும் என்பதை விட, அடுத்தவர் சுயநலத்தை நியாயப்படுத்த நம்மால் இயலவில்லை என்பது தான் அடிப்படை. அங்கே நம் சுயநலம் விட்டுக்கொடுப்பதில்லை.//

முழுக்க உடன்படுகிறேன்.

enbee said...

//அடுத்த விநாடியைக் கூட தயாரித்தல்களோடு எதிர்கொள்ளும் குரூரமான வாழ்வைத்தானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.//

Unmai-pola thondrugirathu!

கோபிநாத் said...

ரைட்டு தல ;))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான பதிவு அய்யனார்.
LIFE SUCKS என்று ஏன் சொல்கிறோம்? எப்பொழுது சொல்கிறோம்?

ஏதோ ஒன்றை எதிர்பார்த்துவிட்டு கிடைக்காத போதே நமக்கு வாழ்க்கை சலிப்படைகிறது. இதற்குத் தான் எதிலும் பற்று வைக்க வேண்டாம் என்று கூறினார்களோ?

அதீத எதிர்பார்ப்புகள் தானே சுய நலத்திற்கும் வழிவகுக்கிறது.

நமது எதிர்பார்ப்புகளை எட்டக்கூடியதாய் வடித்துக் கொண்டால் சலிப்பு வருவதைத் தவிர்க்கலாம் தானே.

இன்னொரு வகையான அணுகுமுறை இருக்கிறது. நம் விருப்பம் நிகழாவிட்டால் நமக்கு என்ன இழப்பு என்பதைப் புரிந்து உணர்ந்து கொண்டாலே சலிப்பையும், சோகத்தையும் தவிர்க்கலாம்.

Bharathi said...

// சுயநலத்தை ஒத்துக் கொண்டால் ஏமாற்றம், துரோகம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய அவசியமுமிருக்காது. நாளையடைவில் நட்பு, அன்பு, தோழமை என்கிற வார்த்தைகளும் நீர்த்துப் போகலாம். அதனாலென்னக் குடிமுழுகிவிடப் போகிறது? இது போன்ற வார்த்தைகள் இல்லாமல் வாழ்வை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டியதுதான். //

அருமையான கருத்து !

மாதவராஜ் said...

வாழ்வை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பார்க்கிறோம். அதற்கென பிரத்யேகச்சூழல்கள், காரணிகள் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன. அடிநாதமாய் சுயநலம் இயங்குவதை விருப்பு வெறுப்பற்று பார்க்கும்போது புரிய நேரிடுகிறதுதான். அந்தச் சுயநலமும் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. எல்லாம் இருக்கட்டும். ஆனால் வெறுமையை நோக்கி நகராமல் மனித சமூகத்தை/சமுத்திரத்தை நோக்கி நகர்வதாய் இருக்க வேண்டும் என ஆசையாவதுப் பட வேண்டுமென்று நினைக்கிறேன். குளவி தன் கூட்டைத் தேடுவது போல என வைத்துக் கொள்ளுங்களேன்...!

Anonymous said...

ஏம்ப்பா...

ஒடம்பு ஏதும் சரியில்லையா? எனக்கு அப்போ தான் இப்டிலாம் தோனும்.

//நாளையடைவில் நட்பு, அன்பு, தோழமை என்கிற வார்த்தைகளும் நீர்த்துப் போகலாம். அதனாலென்னக் குடிமுழுகிவிடப் போகிறது?//

இப்ப மட்டும் என்ன வாழுது. அதுவும் நமது சுயநலத்தை ஒத்து தானே காலபோக்கில் மாற்றிக்கொண்டு வருகிறோம். கேட்டா ஃப்ரீக்வென்சி ஒத்துப் போகலை இப்பல்லாம்னு ஈசியா சொல்லிட்டு விலகித்தானே போகிறோம். அந்த சோ & சோ அன்பு, நட்பு, தோழமை எல்லா புல்ஷிட்டுக்கும் ஒரு விலை அ எதிர்பார்ப்பு வைத்துக் கொண்டு தானே அணுகுகிறோம்?

இந்த இடங்களில்(குடும்பங்களில்) அம்மாக்கள் எக்ஸெம்ட்டட்...குடும்பத்துக்கு வெளியே அவர்களும் சுயந்லமிக்கவர்களே

-பொட்"டீ"கடை

Unknown said...

நல்ல பதிவு அய்யனார். ஆழமான அக விசாரணைகள். 'தனக்கு மிஞ்சினாத்தான் தானம்' என்ற சொல்லாடல் இருப்பது உனக்கு தெரிந்திருக்கும். ஆனால் சிலர் (பலர்?) தனக்கு மட்டுமே எல்லாம் என்று பேராசைக்காரர்களாக இருப்பது தான் பிரச்சனை. இன்று ரயில்வே ட்ராக் அருகே வேகமாக சென்ற ஒரு பைக்காரன் ஒரு லாம்ப் போஸ்டில் முட்டி விழுந்துவிட்டான்...ரெயில்வே கேட் ரீலீஸ் ஆகவே அனைவருக்கும் அதை கடந்து வீட்டுக்கு செல்லும் அவசரம்...நாங்கள் விழுந்தவரை நேருங்கும் போது, இன்னொருத்தவரும் வந்து கைதூக்க, விழுந்த அவமானமும் வலியும் துரத்த அவர் ஓடாத குறையாக பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்துவிட்டார். என்ன செய்வது? அவரவர் அவசரம் அவர்களுக்கு..அடுத்தவன் விழுந்து கிடந்தால் என்ன என்பது என்ன போக்கு? கொஞ்சம் தூக்கி விட்டவனிடம் நன்றி கூட சொல்லாமல் ஓடியவன் விழுந்தால் என்ன எழுந்தால் என்ன என நினைக்கத் தோன்றுகிறதா? 'கடமையை செய் பலனை எதிர் பார் என்பது புது மொழியல்லவா? எல்லாரும் corporate pressure எனும் கொடிய வியாதியால் பீடிக்கபட்டிருக்கிறோம்.ஒவ்வொருவரும் அலுவலக கேபினுக்குள் கண்ணுக்குத் தெரியாத வயர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளோம்.compartamentalisation of human beings..அதில் நீயென்ன, நானென்ன, அவரென்ன, இவரென்ன? நீதிசெத்து விட்ட காலகட்டத்தில், எதிக்ஸ் என்று ஏதும் இல்லாத ஒரு கொடுமையான வாழ்நிலை சூழலில் சிக்கியுள்ள நாம் செய்வதற்கு ஏது உள்ளது அய்யனார், எழுதுவதைத் தவிர? (ரொம்ப புலம்பிவிட்டேனா? இன்று அ.மார்க்ஸ் அவர்கள் கூட்டத்தில் பேசியதும் உன் பதிவில் நீ எழுதியதும் என்னை இப்படி ரியாக்ட் செய்ய வைத்துவிட்டது. நன்றி அய்ஸ்)

Unknown said...

நல்ல பதிவு அய்யனார். ஆழமான அக விசாரணைகள். 'தனக்கு மிஞ்சினாத்தான் தானம்' என்ற சொல்லாடல் இருப்பது உனக்கு தெரிந்திருக்கும். ஆனால் சிலர் (பலர்?) தனக்கு மட்டுமே எல்லாம் என்று பேராசைக்காரர்களாக இருப்பது தான் பிரச்சனை. இன்று ரயில்வே ட்ராக் அருகே வேகமாக சென்ற ஒரு பைக்காரன் ஒரு லாம்ப் போஸ்டில் முட்டி விழுந்துவிட்டான்...ரெயில்வே கேட் ரீலீஸ் ஆகவே அனைவருக்கும் அதை கடந்து வீட்டுக்கு செல்லும் அவசரம்...நாங்கள் விழுந்தவரை நேருங்கும் போது, இன்னொருத்தவரும் வந்து கைதூக்க, விழுந்த அவமானமும் வலியும் துரத்த அவர் ஓடாத குறையாக பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்துவிட்டார். என்ன செய்வது? அவரவர் அவசரம் அவர்களுக்கு..அடுத்தவன் விழுந்து கிடந்தால் என்ன என்பது என்ன போக்கு? கொஞ்சம் தூக்கி விட்டவனிடம் நன்றி கூட சொல்லாமல் ஓடியவன் விழுந்தால் என்ன எழுந்தால் என்ன என நினைக்கத் தோன்றுகிறதா? 'கடமையை செய் பலனை எதிர் பார் என்பது புது மொழியல்லவா? எல்லாரும் corporate pressure எனும் கொடிய வியாதியால் பீடிக்கபட்டிருக்கிறோம்.ஒவ்வொருவரும் அலுவலக கேபினுக்குள் கண்ணுக்குத் தெரியாத வயர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளோம்.compartamentalisation of human beings..அதில் நீயென்ன, நானென்ன, அவரென்ன, இவரென்ன? நீதிசெத்து விட்ட காலகட்டத்தில், எதிக்ஸ் என்று ஏதும் இல்லாத ஒரு கொடுமையான வாழ்நிலை சூழலில் சிக்கியுள்ள நாம் செய்வதற்கு ஏது உள்ளது அய்யனார், எழுதுவதைத் தவிர? (ரொம்ப புலம்பிவிட்டேனா? இன்று அ.மார்க்ஸ் அவர்கள் கூட்டத்தில் பேசியதும் உன் பதிவில் நீ எழுதியதும் என்னை இப்படி ரியாக்ட் செய்ய வைத்துவிட்டது. நன்றி அய்ஸ்)

Ayyanar Viswanath said...

உண்மைதான் மஞ்சூர் ராசா

பகிர்வுகளுக்கு நன்றி ஆரூரன்

நன்றி ராம்ஜி

நன்றி சிவா

விரிவான பகிர்வுகளுக்கு மிக்க நன்றி தீபா

Ayyanar Viswanath said...

நன்றி enbee

நன்றி கோபி

விரிவான பகிர்வுகளுக்கு நன்றி செந்தில் வேலன்

நன்றி பாரதி

மிக்க நன்றி மாதவராஜ்

உண்மைதான் சத்யா :)

விரிவான பகிர்வுகளுக்கு நன்றி உமாசக்தி

அன்புடன் அருணா said...

மிக அருமையான பதிவு...பூங்கொத்து!

Featured Post

test

 test