Monday, September 7, 2009
நடிகைக் கடவுளர்களும் பத்திரிக்கைச் சாத்தான்களும்
மற்றவர்களின் அந்தரங்கம், மற்றவர்களின் ரகசியங்கள் மீது ஏற்படும் ஈர்ப்பினுக்கான காரணங்கள் எவையாய் இருக்குமெனத் தெரியவில்லை. பிராட் பிட்டும் ஏஞ்சலினா ஜூலியும் சமீபமாய் தனித்தனி படுக்கையறையில் உறங்குவதற்கான காரணங்களை இங்குள்ள ஆங்கிலப் பத்திக்கை ஒன்று வண்ணப் புகைப்படங்களுன் அலசி ஆராய்ந்துள்ளது. என் இன்றைய காலையை அச்செய்தியுடன் தான் துவங்கினேன். அந்தப் பக்கத்தை முழுவதுமாய் படித்து முடிக்கும்வரை என் தேநீரை ஒரு மிடறு கூட அருந்தியிருக்கவில்லை. இருக்கைக்குத் திரும்பிய பின்னர் என் செயலின் அபத்தம் உணர்ந்து வெட்கினேன்.
கிசுகிசு உலகத்திலிருந்து தப்பிக்கவே முடியாது போலிருக்கிறது. அதே போல் இவரைப் பற்றி அவர், அவரைப் பற்றி இவர் என மாற்றி மாற்றி நம் முன் உரிக்கப்படும் பிறரின் அந்தரங்கத் தகவல்களையும் தவிர்க்க முடிவதில்லை. அந்தரங்கம் முழுமையாய் தெரிந்தவனே சிறந்த நண்பன் என்கிற நம்பிக்கைகள் நம்மிடையே பொதுவாக இருப்பதால் “எனக்கும் என் நண்பன் / நண்பி / காதலன் /காதலி / மனைவி / கணவனு க்கும் இடையே ரகசியங்களே இல்லை” என சொல்லிக் கொள்வதே நம் அனைவரின் பெருமையாகவிருக்கிறது. அதில் தெறிக்கும் அவநம்பிக்கைகளும் போலித்தனங்களும் ஒருபோதும் நம்மை உறுத்துவதில்லை. இயல்பாக மாறிப்போய்விட்ட இந்தக் கிசுகிசுக் கலாச்சாரத்திலிருந்து அத்தனை சீக்கிரம் வெளியே வந்து விட முடியாதெனத்தான் தோன்றுகிறது.
அயல் வாழ்வு எனக்குச் செய்த நன்மைகளில் மிகவும் முதன்மையானது தமிழ் சூழலில் வெளிவரும் தினசரிப் பத்திரிக்கைகள், இலவச இணைப்புகள், வார இதழ்கள், தொலைக்காட்சிகள் போன்றவைகளின் தொடர்பைத் துண்டித்ததுதான் அல்லது என்னை அவற்றிலிருந்து காப்பாற்றியதுதான். கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக வலைப்பதிவுகள் மட்டுமே என்னை ஆக்ரமித்துக் கொண்டிருப்பதால் தமிழ் நடிகைகளின் உள்ளாடை அளவுகள், சம்பள விபரங்கள், காதல்கள், படுக்கையறை ரகசியங்கள் போன்ற அரிய தகவல்களை பெற முடியாமல் போனது. அந்தக் குறையைத் தீர்க்கவும் முளைத்திருக்கும் பல வலைப்பதிவுகளை அவ்வப்போது கடந்து போக முடிகிறது. வெகுசனக் குப்பை இதழ்களில் கிசுகிசுக்கள் எழுதிக் கொண்டிருந்த மகாத்மியங்கள் வலைப்பதிவு ஆரம்பித்து அதிலேயும் தங்களின் வக்கிரத்தைக் கொட்டிக் கொண்டிருக்கும் பக்கமொன்றைச் சமீபத்தில் காண முடிந்தது. நடிகைகளின் அந்தரங்கத்தை கிசுகிசுக்களாக எழுதுபவனின் சட்டைக் காலரைப் பிடித்து “நடிகைக்கும் உன் அம்மாவிற்கும் இருப்பது இரண்டு முலைகள்தாம் தோழரே” என அடித் தொண்டையிலிருந்து கத்த வேண்டும் போலிருந்தது. அப்படிக் கத்த இயலாமல் போனதால் கோபி கிருஷ்ணன் சிறுகதையொன்றில் வரும் “சாக்கடையில் உழலும் பன்றிகள்” என்ற வாசகத்தை வாய்விட்டுச் சொல்லிக் கொண்டேன்.
தமிழ்சூழலைப் பொறுத்தவரை சாமான்ய சினிமா ரசிகனுக்கு நடிகைகள் மீது பெரும் காதலிருக்கிறது. கட்சித் தலைவியிலிருந்து கடவுள் வரைக்குமான அங்கீகாரங்களை சாமான்யன் நடிகைகளுக்குக் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறான். ஆனால் சாமான்யனுக்கும் சினிமாவிற்கும் பாலமாய் இருக்கும் அல்லது இருவரையும் தனது பிழைப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளும் வெகுசன/மஞ்சள் பத்திரிக்கைகளும் அதில் தனது வக்கிரங்களை கொட்டித் தீர்க்கும் எழுத்தாள/நிருப புண்ணாக்குகளும் இரண்டு உலகத்திலும் நஞ்சைக் கலக்கின்றனர். சினிமாச் செய்திகள் என்ற பெயரில் எல்லா தமிழ் பத்திரிக்கைகளும் வெளியிட்டுக் கொண்டிருப்பதெல்லாம் பெரும்பாலும் வக்கிரத்தைத் தவிர வேரென்னவாய் இருக்கிறது?
குமுதம், விகடன் (குங்குமம் உள்ளிட்ட பிறவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை) என்கிற இரண்டு வெகுசனப் பத்திரிக்கைகளும் தமிழ் சினிமாவிற்காக ஆற்றிவரும் தொண்டு அளப்பறியாதது.’ நடிகையின் கதை’ என்கிற பெயரில் குமுதம் கொட்டித் தீர்த்த வக்கிரங்களை நம்மால் அத்தனை எளிதில் மறந்து விட இயலாது. குமுதத்தைப் பொறுத்தவரை வாசகனிடத்தில் எப்போதும் ஒரு நமைச்சலை உண்டாக்கிக் கொண்டிருக்க வைப்பதுதான் அதனது விற்பனைச் சூத்திரமாக இருக்கிறது. நமீதா, சோனா போன்ற பெருத்த உடல் கொண்ட நடிகைகளின் கவர்ச்சிப் புகைப்படங்கள் இல்லாமல் போனால் விகடன் என்னவாகுமெனத் தெரியவில்லை. விகடனின் எப்போதைக்குமான விற்பனைச் சூத்திரமான ரஜினியை நமீதா இந்நேரம் ஓரங்கட்டியிருக்கக் கூடும்.
பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் சினிமாவின் தொழில் நுட்பத்தை, அதன் பின்னாலிருக்கும் நுணுக்கங்களை, எது நல்ல சினிமா என்கிற அடிப்படைத் தகவல்களை, வாசகனிடத்தில் / பார்வையாளனிடத்தில் ஏன் கொண்டு சேர்ப்பதில்லை? ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமிடும் நடிகையின் உடல் மீது மொய்க்கும் புகைப்பட ஒளிகள் ஏன் அத்திரைப்படத்தில் முக்கியப் பங்காற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள் மீது விழுவதில்லை?
தமிழ் நடிகைகளின் உடல் இங்கு அனைவருக்குமான மூலதனமாக இருக்கிறது. ஒரு வேளை அனைத்து நடிகைகளும் போர்த்திக் கொண்டு நடிக்க ஆரம்பித்தால் நம் சூழலில் நிறைய பத்திரிக்கை அலுவலகங்களை மூட வேண்டியிருக்கும். கணிசமான அளவில் வேலை வாய்ப்புகள் பறிபோகும். ஆண்கள் தத்தம் சுய புணர்ச்சி பிம்பத்திற்கான பற்றாக்குறைகளால் நிறைந்து அவரவர் காதலிகளின் / மனைவிகளின் பிம்பத்தையே நினைவில் தருவிக்க வேண்டி வரும் பரிதாப நிலைக்கும் தள்ளப்படலாம். இப்படிப் பல வகையில் ஆண் சமூகத்தை உய்விக்கும் கடவுளர்களான நடிகைகளை நம்முடைய ஆழ்மன வக்கிரங்களின் வடிகாலாகவே பார்க்கப் பழகியிருப்பது எத்தனை குரூரமானது! தமிழ் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் தத்தம் அலுவலகங்களில் வைத்திருக்கும் கடவுள் புகைப்படங்களுக்கு மாற்றாய் கவர்ச்சி நடிகைகளின் சிலைகளை நிறுவுவதே நியாயமானது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
33 comments:
"குமுதத்தைப் பொறுத்தவரை வாசகனிடத்தில் எப்போதும் ஒரு நமைச்சலை உண்டாக்கிக் கொண்டிருக்க வைப்பதுதான் அதனது விற்பனைச் சூத்திரமாக இருக்கிறது. நமீதா, சோனா போன்ற பெருத்த உடல் கொண்ட நடிகைகளின் கவர்ச்சிப் புகைப்படங்கள் இல்லாமல் போனால் விகடன் என்னவாகுமெனத் தெரியவில்ல" unnmaidha... nadikaiku kovil katna.. namm kalacharathala .. attaipadam padamum avanga andharangamumdha pathirikaya nilai niruthudhu...
andha ukthi illadha pathirikaya yaar kaadhukalilum manangalilum sikkkamal kedaku ... ungalin aadhangam nirambiya padaipu arumai...!
///“நடிகைக்கும் உன் அம்மாவிற்கும் இருப்பது இரண்டு முலைகள்தாம் தோழரே”///
இருக்கலாம்...தோழரே..ஆனால் என் அம்மா நடிகையல்ல........
ஆண்கள் தத்தம் சுய புணர்ச்சி பிம்பத்திற்கான பற்றாக்குறைகளால் நிறைந்து அவரவர் காதலிகளின் / மனைவிகளின் பிம்பத்தையே நினைவில் தருவிக்க வேண்டி வரும் பரிதாப நிலைக்கும் தள்ளப்படலாம்.
கரைக்ட்
யப்பா யப்பா அருமைங்க
அதில் பங்குபற்றும் பெண்கள் என்ற அடிப்படையில் பார்க்கப்போனால், மொத்த வணிக சினிமா தொழிற்றுறையே பால்வினைத் தொழிற்றுறையாகத்தான் இருக்கிறது.
பணக்கார மொடல்கள் நடிகைகள் ஆக விரும்புவதற்கு பின்னால் இந்த star prostitute அந்தஸ்து தரும் கொள்ளை லாபம் ஒளிந்து கிடக்கிறது என்பதை மறுக்க முடியுமா?
மாநகர பால்வினைத்தொழிலாளிகள், மஞ்சள் பத்திரிகைகள் தொடக்கம் Star prostitution வரை எல்லாமே இந்த சினிமாவை நம்பித்தான் இருக்கிறது. சினிமா முதலீடும் இந்த சைட் பிசினசை கணிசமாக நம்பி இருக்கிறது.
பெரும் கறுப்புப்பணப்புழக்கம் கொண்ட சினிமா வணிக சூதாட்ட முதலீட்டின் அடிப்படைகளே கள்ள லாபமும் சமூகவிரோதமும்தான்.
இப்படி இருக்க இரண்டாம் மூன்றாம் நிலையில் இருக்கும் வெளிப்பாடுகளைக் காய்வது பொருத்தமாயில்லை.
நடிகைகளைக் கேவலப்படுத்தும் போக்கு மீதான கண்டனங்கள் தமிழில் சினிமா ஆரம்பித்தகாலத்தில் வைக்கப்பட்டிருந்தால் பொருத்தமானது. இன்று சினிமா முதலீடே மாபெரும் பாலியல் வணிகமாக மாறி விட்ட நிலையில் இதெல்லாம் சும்மா மேலோட்டமான கண்டனங்களகத்தான் மாறிப்போக முடியும்.
அருமையான பதிவு அய்யனார்.
நல்ல பகிர்வு அய்யனார்...
கிட்டதட்ட இதே விதமான மனவோட்டம்..(ஏன் வாசிக்கிறோம் என்பது போல) நேற்று மாலை இருந்தது நினைவு வருகிறது.
ரகசியம் அறிவது உயிர் இயல்பு..இந்த புள்ளியில் விரல் வைத்து குழைத்து கொண்டே போனால் "Return to the Roots" என்று விரிந்து கொண்டே போகும்...உணராமல் செயல்படும் மனதின் மேலோட்டமான 'Extra Fittings' களாகத்தான் இந்த ஊடக கவர்ச்சி தோன்றுகிறது போலும்...
மானே தேனே பொன்மானே என்று எழுத சுலபமாக இருப்பது போல் உளவியல் ரீதியான எண்ணங்களை கோர்வையாக சொல்ல கடினமாக தோன்றுகிறது.எல்லாம் கலங்கலாகவே தெரிகிறது..எழுதுபவர்களை கண்டு வாய் 'பே' என்று பிளந்து கொள்கிறது :)
லேபிள் ரொம்பவே ரசிக்க வைக்கிறது அய்யனார்:)
கிசுகிசு ஒரு போதை!
பால் வித்தியாசமில்லாமல் அனைவரையும் பீடித்திருக்கிறது!
ஹாட்ஸ் ஆஃப். அய்யனார்.
//அந்தப் பக்கத்தை முழுவதுமாய் படித்து முடிக்கும்வரை என் தேநீரை ஒரு மிடறு கூட அருந்தியிருக்கவில்லை. இருக்கைக்குத் திரும்பிய பின்னர் என் செயலின் அபத்தம் உணர்ந்து வெட்கினேன்.//
:-) எனக்கும் இப்படி நேர்ந்ததுண்டு. அடுத்தவர், குறிப்பாகப் பிரபலங்களின் அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் விருப்பம் ஒரு போதை மாதிரி.
நியாயமான கோபம், பளீரென்ற வார்த்தைகளில் அழுத்தமான பதிவு. ஆனால் கடைசி பத்தியில் ஒரு இடத்தில் முரண்பாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது.
//ஆண் சமூகத்தை உய்விக்கும் கடவுளர்களான நடிகைகளை நம்முடைய ஆழ்மன வக்கிரங்களின் வடிகாலாகவே பார்க்கப் பழகியிருப்பது எத்தனை குரூரமானது! //
உங்கள் கூற்றுப் படி பார்த்தால் அவர்கள் உய்வதே அந்த வக்கிரங்களின் வாயிலாகத் தானே?!
புனைவு என்ற பெயரில் அதே முலைகளையும் யோனியையும் கூறுகட்டி விற்கும் போது எளக்கியமாகவும்,முன்/பின் நவீன வெங்காயங்களாகவும் பார்த்து சிலாகிக்கும் கும்பலைப் பார்த்து “புனைவில் வரும் தோழிக்கும் உன் அம்மாவிற்கும் இருப்பது இரண்டு முலைகள்தாம் தோழரே” என அடித் தொண்டையிலிருந்து கத்த வேண்டும் போலிருக்கும்.
**
சினிமா கிசுகிசு எழுதிய சும்பன்களே கட்டுடைக்கும் புனைவு எழுதும் தமிழ் இளக்கியவாதியாக இருப்பதில் எல்லா விளக்கமும் அடங்கியுள்ளது.
**
காமம் மற்றும் கவர்ச்சியை பாலியல் வறட்சியில் இருந்து அணுகும் சல்லிக்கும்பலுக்கு புனைவும் ,கிசுகிசுவும் ஒன்றே. எழுதுபவனாக இருந்தாலும் படிப்பவனாக இருந்தாலும்.
**
நன்றி யாழினி
புரியவில்லை அனானி
நன்றி பாலா
மயூரன்
சினிமா முதலீடே பாலியல் வணிகம்தான் என்கிற உங்களின் கருத்து பொதுப் புத்தி சார்ந்ததாகத்தான் இருக்கிறது.அப்பொது புத்தியை கட்டமைப்பதில் பெரும் பங்கு பத்திரிக்கைகளுக்கிறது.அதைத்தான் இதில் சொல்ல விழைந்திருக்கிறேன்.
நன்றி இளவட்டம்
பகிர்வுகளுக்கு நன்றி ரெளத்ரன் :)
ஆமாம் வால்
நன்றி நந்தா
தீபா
தங்களுடைய திருப்திக்காக / இலாபத்திற்காக நடிகை எனும் பிம்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆண்சமூகமும் பத்திரிக்கைகளும் அவர்களுக்கான குறைந்த பட்ச அங்கீகாரங்களைக் கூட வழங்காமல் கிசுகிசு வக்கிரங்களால் அவர்களை நசுக்குவதைத்தான் இதில் சுட்டியிருந்தேன்.
/அவர்கள் உய்வதே அந்த வக்கிரங்களின் வாயிலாகத் தானே?!/ இதிலிருக்கும் உண்மையும் சுடாமல் இல்லை
கல்வெட்டு
தடாலடியாக இருக்கிறது :)
பாலியல் வறட்சி என்கிற நோக்கில் நீங்கள் சொல்லியிருப்பது சரிதான்.ஆனால் அப்பாலியல் வறட்சியை பொதுவில் / தனிமனிதனிடத்தில் உண்டாக்குபவை புனைவுகளா கிசுகிசுக்களா என்பதை உங்களின் யூகத்தினுக்கே விட்டுவிடுகிறேன்.
//சினிமா முதலீடே பாலியல் வணிகம்தான் என்கிற உங்களின் கருத்து பொதுப் புத்தி சார்ந்ததாகத்தான் இருக்கிறது//
அய்யனார்,
இந்திய வணிக சினிமா முதலீடே பாதாள உலக சூதாட்ட முதலீடுதான் என்பதையும் அத்தொழிற்றுறை பெரும்பாலும் தங்கியிருப்பதே பாலியல் வணிகத்தில் தான் என்பதையும் நீங்கள் மறுக்கிறீர்களா?
//அப்பொது புத்தியை கட்டமைப்பதில் பெரும் பங்கு பத்திரிக்கைகளுக்கிறது//
பெரிய மொடல்கள் சினிமாவை நாடிப்போவதற்கும் பெரிய நடிகைகள் சினிமாவில் தங்க விரும்புவதற்கும் ஒரு Start prostitution value தான் காரணமாக பெரும்பாலும் இருக்கிறது என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?
என்னைப்பொறுத்தவரை இந்த இரு உண்மைகளை மூடி மறைப்பதிலேயே விகடன் மாதிரி பத்திரிகைகள் பங்காற்றுகின்றன.
இவையே சினிமாவின் மறுபக்கத்தை மறைத்து நிற்கின்றன.
கிசுகிசுக்கள் அனைத்துமே சினிமா வணிகத்தின் பங்காளர்களை மறைமுகமாக புனிதப்படுத்துகின்றன என்றே நான் கருதுகிறேன்.
மிகப்பெரும் பாலியல் வணிகமான Fashion Industry இனை புனிதப்படுத்துவதை மேற்கின் கிசுகிசுக்கள் செய்யவில்லையா?
பாலியல் வணிகம் பற்றின அருவருப்புப் பார்வை எதுவும் என்னிடத்தில் இல்லை. அந்த வணிகம் தான் அப்படி அல்ல என்று ஒரு புனித முகமூடியை இந்த கிசுகிசுப்பத்திரிகைகள் வாயிலாகப் போட்டுக்கொண்டு பாதாள உலகச்சூதாட்ட முதலீட்டின் இடமாக இருப்பது மற்ற ஆக்களுக்கு நல்லதல்ல என்ற அடிப்படையிலேயே சொல்கிறேன்.
//ஆனால் அப்பாலியல் வறட்சியை பொதுவில் / தனிமனிதனிடத்தில் உண்டாக்குபவை புனைவுகளா கிசுகிசுக்களா என்பதை உங்களின் யூகத்தினுக்கே விட்டுவிடுகிறேன்.//
:-))
அய்யனார்,
கிசுகிசுக்கள் உரையாடலின் மற்றொரு வடிவம். ப்ளாக்கர் மற்றும் டீவீட்டர் போல என்று வைத்துக் கொள்ளுங்கள்.
கிசுகிசுக்கள் எல்லாத் துறைகளில்லும் உள்ளது. அலுவலகத்தில் அடுத்தவன் பிரமோசன் பற்றிய கோபம்/பொறாமை/இயலாமை/வன்மம் கிசுகிசுவாகவே பகிரப்படும்.
மனிதனிடம் காமம் உள்ளவரை காமம் சார்ந்த இந்த உரையாடல் வடிவம் இருக்கும்.
தமிழ்சினிமாவில் நடிகைகள் விரும்பியே அல்லது அவர்களிம் அதீத /முயற்சி/விருப்பத்தால் சில கிசுகிசுக்கள் வருகிறது என்பதும் உண்மை.லைம்லட்டில் இருக்க வேண்டிய தொழில் சார்ந்த நிர்ப்பந்தம்.
**
நடிகயின் மார்பு சைஸ் என்ன என்று கிசுகிசுக்கும் வராப்பத்திரிக்கைக்கும் (1) ,முலைகள் பற்றிய அயல்வெளிக்குறிப்பு என்றுவரும் முன்/பின்/பக்கவாட்டு நவீனக் கட்டுரையும் (2) , "அவள் முலையில் முகம்பத்திது நெய்தல் நிலத்தில் மாடு மேய்த்தேன்" என்று அர்த்தமற்ற வார்த்தைகளில் தனது காமத்தை புனைவு (3) என்ற பெயரில் ஏற்றி, வாசிப்புக்கு விடுவதும் ...... பாலியல் வறட்சியால் பீடிக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்துக்கு , ஒரே பாதிப்பைத்தான் ஏற்படுத்துகிறது...என்பது எனது கருத்து.
பாலியல் சார்ந்த சினிமாகிசுகிசு --> நாட்டுச்சாராயம் கீழ்மக்கள் சரக்கு.
பாலியல் வர்ணனை உடைய புனைவு --> சீமைச்சரக்கு மேல்மக்கள் அயிட்டம்.
**
காமம்,கவர்ச்சி,கூடல் .. புரிந்து கொள்ளப்படும் சமயத்தில் மேலே சொன்ன மூன்றையும் எளிதாகக் கடக்கமுடியும்.
அய்யனார்,
காமக்கதைகள் முப்பது என்றும் குட்டிக்கதை நாற்பது என்று ஜட்டிக்கதை பதினேழு என்றும் இளக்கியவியாதிகள் கதைவடிக்கிறார்கள். அதை பலர் சிலாகிக்கிறார்கள்.
இது போன்ற புனை கதைகளும், வாரமலர் சினிமா பொன்னையாவின் கிசுகிசுவும் ஒரே உள்ளடக்கம் கொண்டவை.ஆனால் பகிரப்படும் தொனியும் , இடமும் படிக்கும் மக்களும் மட்டுமே வித்தியாசமானவை.
**
உங்கள் கோபம் உள்ளடக்கத்திற்கு என்றால், புனைவின் டவுசரையும் அவிழ்க்கவேண்டும். கிசுகிசு-பாணி மட்டும் என்ன செய்தது அய்யனார்?
அருமையான பதிவு அய்யனார்.
உண்மையிலேயே விகடன், குமுதத்தை வளர்த்தவர்கள் குஷ்பூ, ரூபினி, நமீதா, சிம்ரன்,நக்மா போன்றோர்.
அதுவும் குறிப்பாக நீச்சல் உடையில் அழஅகாய் இருப்பவர் சிம்ரனா, பானு ப்ரியாவா, பாவனாவ போன்ற கேள்வி பதில்கள்.
ஆனால் அவர்கள் உடனே வாசகர்கள் அதைத்தான் விரும்புகின்றனர் என்பர்.
கணையாழி, உயிர்மை, தீராநதியின் விற்பனை எங்கே ஜூனியர் விகடன் (இவர்தான் உங்கள் ஹீரோ), நக்கீரன், நெற்றிக்கண் விற்பனை எங்கே..
கல்வெட்டு
விரிவான பகிர்வுகளுக்கு நன்றி.
இரண்டு எதிரெதிர் புள்ளிகள் என நாம் கருதுபவைகளின் அடிநாதம் ஒன்றாகவே இருப்பதை சில குழப்பஙகளோடே ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.இது சரி இது தவறு என்றெல்லாம் திட்டவட்டமாக எந்த ஒன்றையும் அணுக முடிவதில்லை.கிசுகிசுக்கள் செய்யும் அதே பாதிப்புகள்தாம் புனைவுகளும் ஏற்படுத்துகின்றன என்கிற பார்வை அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.இந்த அதிர்ச்சி என் சார்ந்த நம்பிக்கைகள் பொய்ப்பதால் ஏற்படுகின்றன என்பதையும் புரிந்து கொள்ளமுடிகிறது.
வெகுசன ரசனை x கலை சரோஜாதேவி x ழார் பத்தாய்
கிசுகிசு x புனைவு
இம்மாதிரியான எதிரெதிர் புள்ளிகளின் அடிநாதம் ஒன்றுதான் என்றால் வளர்ச்சி அல்லது விடுபடல் என்பதற்கான சாத்தியங்கள் என்னவாய் இருக்க முடியும்? ஒருவேளை சிறந்தது உன்னதம் என்றெல்லாம் எதுவும் இல்லையோ?
சாராயம் சீமைச்சரக்கு இரண்டும் போதையைத்தான் தருகிறது என்கிற உதாரணத்தின் மூலம் இந்த உரையாடல்களை ஒரு புள்ளியில் குவிக்க என்னால் முடியவில்லை.
சாராய போதை தரும் பாதிப்புகளை நானும் சீமைச்சரக்கின் பாதிப்புகளை பிறிதொருவரும் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருப்பதில்தான் நமது உயிர்ப்பு இருக்கிறது போலும்..
மயூரன்
வணிக சினிமாவின் பின்புலம் உடலாக இருக்கிறது என்கிற பார்வையில் ஓரளவு உண்மையிருந்தாலும் அதுவே முழு முதற் உண்மையாக இருக்க முடியாது என நான் நம்புகிறேன்.ஒரு வேளை சினிமாவை கலை வடிவம் எனக் கருதும் / நம்பும் என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கையாகவும் அது இருக்கலாம்.
மதூரின் fashion திரைப்படம் fashion industry யில் ஈடுபடும் பெண்களின் அலைவுகளை துல்லியமாய் படம் பிடித்திருக்கிறது.நீங்கள் சொல்லும் லைம் லைட் விவகாரங்கள் இருக்கிறதுதான் என்றாலும் முழுமையாய் இன்னும் உடல் சார்ந்தே இத்துறை இயங்கவில்லை என நான் நம்புகிறேன்.
உங்களின் பகிர்வுகளுக்கு நன்றி
அட பாவமே அய்யனாரை பத்தி வீரர் ஆக விடமாட்டாங்க போலருக்கு..
ஆனா இதுவும் ஒரு வகை சுவாரஸ்யம் தான் அய்யனார் பத்தி என்றாலே அதனோடு கூடிய விவாதங்களும் கட்டாயம் வரத்தானே வேண்டும்.
\
ஆனால் சினிமாவை பாலியல் தொழில் துறை என குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடிருப்பதாய் தோன்றவில்லை.
\
அய்யனார்,
தெளிவாக "வணிக சினிமா" என்று தனிபிரித்தே சொன்னேன். வணிக சினிமாவிலும் கலை இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை. கொலையில் கூட கலை இருக்கிறது.
குறித்த கலையின் பின்புலங்கள், அது மக்கள்மீது செலுத்தும் தாக்கம் செல்வாக்கு போன்றவற்றின் படிநிலைகள், சிக்கல்களினூடாகவே என்னால் கலையை ஏற்றுக்கொள்ள நிராகரிக்க முடிகிறது.
வணிக சினிமாவின் கலை ஊக்குவிக்கப்படுவதானால், அந்த ஊக்குவிப்பு அந்த சினிமாவில் வந்து இறையும் பெரும் பாதாளப்பணத்தின் விரிவுக்குத்தான் உதவும் என்ன?
பாதாளப்பணத்தின் விரிவு, அதனைச்சார்ந்து இயங்கும் பெரும் கட்டமைப்பைக் காப்பாற்றத்தான் உதவும்.
எனது பின்னூட்டங்களின் வழி நான் பகிர நினித்த முக்கியமான விடயம்,
கிசுகிசுக்கள் சினிமா பற்றிய தவறன தோற்றத்தை பொதுப்புத்தியில் ஏற்படுத்தவில்லை, மாறாக சினிமா தொழிற்றுறையின் தவறான முகத்தினை பொதுமக்களிடம் மறைக்கவும், அதன் தீமைகளை புனிதப்படுத்திக்காட்டவுமே பயன்படுகிறது என்பது.
Fashion தொழிற்றுறையில் இன்றைக்கு சம்பந்தப்பட்டிருப்பவர்களின் தனிப்பட்ட உள அலைவுகள், நுணுக்கமான உபகதைகள் எல்லாவற்றையும் கவனிக்கும் நாம், அந்த நுணுக்கக்கவனிப்பில் அப்பெரும் தொழிற்றுறை பற்றிய, அதன் அடிப்படைகள் பற்றிய கேள்விகளைத் தவறவிட்டுவிடுகிறோமோ தெரியவில்லை.
இத்தாலியில் முசோலினிகாலத்தைய Fashion உருவாக்கம், அதன் அரசியல்களை இங்கே நினைவுபடுத்தலாம்.
தனிமனித எழில் ரசனை என்கிற ஆரோக்கியமான விஷயத்தை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த Fashion தொழிற்றுறையை நியாயபடுத்த முடியாது. இரண்டும் வேறு வேறானவை.
ஏதேதோ சொல்லணும் போல இருக்கு முடிந்தால் பிறகு வருகிறேன், ஆனால் ஒரு சராசரி ரசிகனா சொல்லுறேன் இந்த நடிகர்களுக்கு கொடுக்கிற மரியாதையிலும் நடிகைகளுக்கு நிறையக்கொடுக்கலாம்.நீங்க சொன்ன மாதரி கடவுளர்கள்தான்.
:)
மயூரன்
கிசுகிசுக்கள் ’வணிக’ சினிமாவை புனிதப்படுத்துகின்றன என்கிற உங்களின் நிலைப்பாட்டை ஏற்றும் கொள்ளும் மனநிலை இப்போது எனக்கில்லை.இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ள முயலுகிறேன்.பிறிதொரு முறை விரிவாகப் பேசுவோம்.
fashion துறையின் பிரதானமே உடல்தான் என்பதால் அதைக் கட்டமைத்திருக்கும் அத்துறையின் நேர்மைகளை / பித்தலாட்டங்களை எப்புள்ளியில் நின்று விமர்சிப்பது என்கிற கேள்விகள் எழுகின்றன.
நடிகைகள் x வெகுசனப் பத்திரிக்கைகள் என்கிற புள்ளியில் துவங்கிய இவ்வுரையாடல்களை fashion துறைக்கு நகர்த்துவது சற்று காத்திரமாக இருப்பதால் அது குறித்தும் பின்பு உங்களுடன் பேச முயலுகிறேன்.
பகிர்வுகளுக்கு மிக்க நன்றி.
நன்றி ராம்ஜி
தமிழன் பத்தி வீரருக்கு முதல் நாளே டவுசர் கிழிஞ்சிடுச்சி :))
அய்யனார்,
//இரண்டு எதிரெதிர் புள்ளிகள் என நாம் கருதுபவைகளின் அடிநாதம் ஒன்றாகவே இருப்பதை சில குழப்பஙகளோடே ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.//
"நாம் கருதுவது" இந்த இந்த ஒரு வார்த்தைதான் அடிநாதம் என்று நன் நினைக்கிறேன் அய்யனார்.
புள்ளிகள் அது பாட்டுக்கு இறைந்து கிடக்கின்றன. நாம் ஒரு புள்ளியில் நிற்கும்போது, அடுத்த புள்ளிகள் அருகாமை,எதிர்,தூரம்..நம்பமுடியாத தூரமாகத் தெரியும். அதுவே இயல்பு என்றும் நினைக்கிறேன் என்னளவில்.
************
//இது சரி இது தவறு என்றெல்லாம் திட்டவட்டமாக எந்த ஒன்றையும் அணுக முடிவதில்லை.//
//வளர்ச்சி அல்லது விடுபடல் என்பதற்கான சாத்தியங்கள் என்னவாய் இருக்க முடியும்? ஒருவேளை சிறந்தது உன்னதம் என்றெல்லாம் எதுவும் இல்லையோ?//
சிறந்தது,உன்னதம்,சரி தவறு என்று எதுவும் இல்லை என்பதே நான் அறிந்து கொண்டது (நாளை அது மாறலாம் அல்லது வேறு புதிய கோணங்கித்தனமான எண்ணங்கள் வந்து இதை அடித்துச் செல்லலாம்.)
இடம் ,காலம்,பொருள் போன்ற புறக்காரணிகள் ஒரு செயலை/ஆக்கத்தை/நிகழ்வை.. பல வடிவங்களில் பலருக்கு காட்டும் என்றும் நம்புகிறேன்.
நியூயார்க் நகரின் மத்தியில் ஒரு கூட்டம் நிரம்பிய நடைபாதையில் காலை 9:00 மணிக்கு ஜோடி ஒன்று உதட்டில் முத்தமிட்டுக் கொண்டால் அது அங்கிருக்கும் ட்ராபிக் சிக்னல் போல சாதரணமனது. அதே செயல் சென்னையில் அசாதரணமானது. அரேபியாவில் அதுவே தண்டனைக்குரிய குற்றமாக இருக்கலாம். <<<<< ஒரல் செக்ஸ் (கணவன் மனியானாலும்) தண்டனக்குரிய குற்றம் இந்தியாவில் என்று புருனோ சொன்னதாக நினைவு >>.
*****
//கிசுகிசுக்கள் செய்யும் அதே பாதிப்புகள்தாம் புனைவுகளும் ஏற்படுத்துகின்றன என்கிற பார்வை அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.//
நான் சொல்வது "புனைவும் ,கிசுகிசுவும் ஒரே உள்ளடக்கம் கொண்டது".
1. நேரடியாக பகிர்ந்துகொள்ளமுடியாததை , அல்லது தயங்குவதை ஊகமாக,உறுதிப்படாத தகவலாக சொல்வது.
2. உண்மை என்று தான் நம்பும் ஒன்றிற்கு இயல்பான வடிவத்தினூடே மெருகூட்டி சுவராசியமாய் அதே சமயம் அழுத்தமான செய்தியைச் சொல்வது.
3. இன்னும் பல வடிவங்கள்....
******
//சாராயம் சீமைச்சரக்கு இரண்டும் போதையைத்தான் தருகிறது என்கிற உதாரணத்தின் மூலம் இந்த உரையாடல்களை ஒரு புள்ளியில் குவிக்க என்னால் முடியவில்லை.//
அப்படி நீங்கள் குவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. :-)))
"கிசுகிசு" உங்களுக்கு கிச்சுமுச்சு மூட்டி தார்மீகக் கோபத்திக் கிளறுவதைப் போல, புனையப்படும் புனைவுகள் எனக்கு... அவ்வளவே. “புனைவில் வரும் தோழிக்கும் உன் அம்மாவிற்கும் இருப்பது இரண்டு முலைகள்தாம் தோழரே” என அடித் தொண்டையிலிருந்து கத்த வேண்டும் போலிருக்கும் எனக்கு.
*
இது உரையாடலே தவிர ஏற்றுக்கொள் அல்லது மறு என்ற தொனியில் வரும் விவாதம் அல்லவே அய்யனார். :)))
பதிவுகளில் பல இடங்களில் கல்வெட்டுவின் பின்னூட்டங்களைக் கண்டால் எளிதில் கடந்துவிடாமல் தொடர்ந்து வாசிப்பவள் நான். காரணம் இடுகையில் சொல்லப்பட்டிருக்கும் விசயத்திலிருந்து உரையாடி அதே விசயத்தில் சொல்லப்படாது விடப்பட்ட இன்னொரு பரிமாணத்துக்கு அவரது தர்க்கங்கள் கூட்டிப் போகும். இங்கும் அதே.
///காமம் மற்றும் கவர்ச்சியை பாலியல் வறட்சியில் இருந்து அணுகும் சல்லிக்கும்பலுக்கு புனைவும் ,கிசுகிசுவும் ஒன்றே. எழுதுபவனாக இருந்தாலும் படிப்பவனாக இருந்தாலும்.////
வழிமொழிகிறேன்.
இடுகைக்கு நன்றி அய்யனார்.
சினிமா பாலியல் சார்ந்த தொழிலே , நானும் உங்கள் கட்சி தான் இந்த விசயத்தில்.
நான் இதற்கு முன்பே கேபிள் சங்கர் அல்லது ஜாக்கி ஷங்கர் பதிவில் எழுதி இருந்தேன். இத்தனை தொழில் நுட்பம் சின்மாவில் வந்தும் இன்னமும் ஒரு பெண்மணி தனது வாய்ப்புக்காக தன உடலை விற்கத் தான் வேண்டி உள்ளது.
வெகு ஜன பத்திரிக்கைகளைப் பொருத்த வரை, என் போன்ற வாசகர்கள் குமுதம் லைட்ஸ் ஆன், ஜூ வி மசால் மிக்ஸ், வாரமலர் இதப் படிங்க முதல்ல, நெற்றிக்கனில் வரும் பிரபு தேவ நயன் தார ரகசிய போடோஸ், போன்றவற்றை தானே முதலில் விரும்பி படிக்கிறோம்.
அதை முடித்து தானே நாங்கள் வண்ண நிலவன் பேட்டி, மனுஷ்ய புத்திரன் கவிதைகள், நகுலன் கட்டுரை எல்லாம் படிக்கிறோம்.
எனவே பத்திரிக்கை ஆசிரியர்கள் மட்டும் அல்ல என் போன்ற வாசகர்களும் காரணம் இதற்கு.
அல்லது கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாம் நடிகர் நடிகைகளின் அந்தரங்களை எழுத கட்டற்ற சுதந்திரம் வழங்கி விட்டோமா
//தங்களுடைய திருப்திக்காக / இலாபத்திற்காக நடிகை எனும் பிம்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆண்சமூகமும் பத்திரிக்கைகளும் அவர்களுக்கான குறைந்த பட்ச அங்கீகாரங்களைக் கூட வழங்காமல் கிசுகிசு வக்கிரங்களால் அவர்களை நசுக்குவதைத்தான் இதில் சுட்டியிருந்தேன்.//
புரிகிறது. ஆனால் அவர்களின் உடலை வியாபாரப் பொருளாக்கிக் கொண்டாடுபவர்கள் அகத்தைக் குப்பை போல் பாவிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
நமீதாவோ மும்தாஜோ தங்களை உய்விக்க வந்த பிம்பம் என்பதால் அவரைப் பற்றிக் கிசுகிசு எழுதும் பத்திரிகை அலுவலகத்தை எதிர்த்துப் போராடுவார்களா என்ன? அவர்களும் இதை எதிர்பார்ப்பது இல்லை.
தங்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தில் ஒரு சதவீதம் கூட கண்ணியமானதல்ல என்பது நடிகைகளுக்குத் தெரியும் தான்.
சிலர் மனதைச் சில நேரம் அது மோசமாகப் பாதிப்பதன் விளைவு தான் அவர்களது தற்கொலை முயற்சிகள்.
நமீதாவுக்குக் கோயில், குஷ்புவுக்குப் பாலாபிஷேகம் என்பதில் எல்லாம் மரியாதையோ அவர்கள் நடிப்புக்கு அங்கீகாரமோ இருக்கிறதா என்ன?
பொது இடத்தில் வாய்ப்புக் கிடைத்தால் அவர்களைச் சில்மிஷம் செய்பவகளும் பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களும் இந்தக் கோயில் திருப்பணி செய்பவர்கள் தான்.
ஆனால் இந்த நிலை நடிகர்களுக்கு இல்லை. அவர்கள் இதற்கு நேர்மாறாக, கௌரவமான குடும்ப வாழ்க்கையும் பொது வாழ்க்கையும் வாழ முடிகிறது. கடவுளுக்குச் சமமாகப் போற்றவும் படுகிறார்கள்.
அது தான் பெரிய எரிச்சல்.
நடிகைகளை மதிக்கிறோமோ இல்லையோ இந்த நடிகர்களைக் கொண்டாடுவதை விட்டொழித்தாலே போதும்.
அய்யனார்,
ஒருவர் எந்த ஒரு நிலையை அடைய வேண்டுமென்றால் அதற்கு ஒரு விலை கொடுத்தாக வேண்டியுள்ளது. நாம் துபாயில் சில ஆயிரங்கள் அதிகம் சம்பாதிக்க உறவுகளைவிட்டு இங்கே வருவதைப் போல. "எல்லாம் துபாய்க்காசு விளையாடுது"னு நம்ம பக்கத்து வீட்டுக்காரங்க சொல்றதக் கேட்கறதில்லையா?
இது நடிகைகளுக்கும் பொருந்தும். அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழியைப் பொருத்து அவர்கள் சம்பளமும் உயர்வும் (??) அடைகிறார்கள். நமக்கு எத்தனையோ கன்னியமான நடிகைகளைத் தெரியும் தானே!! நமிதாவையோ, மும்தாஜையோ வற்புறுத்தினால் தான் தவறு. அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்திற்கு அவர்கள் கொடுக்கும் விலை தான் ஆடைகுறைப்பு.
விகடன் போன்ற வார இதழ்களில் நல்ல தொடர்கள் வராமல் இல்லை. நல்ல தொடர்கள் வருவது அதனைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்குத் தெரியும். வேற எதையோ எதிர்பார்க்கும் வாசகர்களை வாசிக்க வைக்க நமிதா புகைப்படம் தேவைப்படுகிறது. அவ்வளவு தான்.
பசுமை விகடன், நாணயம் விகடன், சுட்டி விகடன் போன்ற நல்ல முயற்சிகளும்கூட விகடனில் வந்துகொண்டு இருப்பது உங்களுக்கும் தெரியுமென்று நினைக்கிறேன்.
ஆகவே, நடிகைகளைக் காட்சிப்பொருட்களாகப் பார்க்கும் போக்கு மாற வேண்டுமென்றால் மொத்த சமூகமே மாற வேண்டியிருக்கும்.
நடிகைகளை மதிக்கிறோமோ இல்லையோ இந்த நடிகர்களைக் கொண்டாடுவதை விட்டொழித்தாலே போதும்.
அய்யனார், இப்போதான் உங்கள் இரண்டு பதிவையும் படித்தேன் .வயதில் முத்த பெண்ணை காதலிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் கடினம் எது தெரியுமா, நிங்கள் சொன்னிர்களே திருமணம் என்ற ஒரு நிகழ்வு....அப்போதான் பிரச்சினை.சேர்ந்து வாழ்வது thaan ஞாயம் , ஆனால் இந்த சித்தாந்தம் unconventional relationships kku மட்டும் வசதியாக வைத்துக்கொண்டால் அதில் நீர்மை இல்லை. மற்றபடி எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. போச்சு , கலாச்சார காவலர்கள் எல்லாம் பறந்து வருவாங்க.
விளக்கமான பதிவு அருமை
Post a Comment