Monday, August 24, 2009
சென்னை சில நினைவுகள்
எட்டாம் வகுப்பு அ பிரிவு நண்பர்களோடுதான் சென்னையை முதன்முறையாய் எதிர்கொண்டேன். ஒரு சிறுநகரப் பதின்மனின் ஆச்சர்யங்களும், வியப்பும் எனக்கு அப்போது சற்று அதிகமாகவே இருந்தது. மகாபலிபுரம்,விஜிபி கோல்டன் பீச், மெரினா என சென்னைக்கு உள்ளும் புறமும் சுற்றி வந்ததில் சென்னை மிக வசீகரமான பெரு நகரமாக எனக்கு முன் விரிந்திருந்தது. “இந்த ஊருக்கெல்லாம் நான் போயிருக்கனே!” என சக நண்பர்களிடம் பீற்றிக் கொள்ளும் வேளைகளில் ’மெட்ராஸ்’ தான் முதலில் வந்தது. உறவினர் வீடுகள்,திருமண விழாக்களென படிக்கும் காலகட்டத்தில் அவ்வப்போது சென்றதுண்டு என்றாலும் சென்னையை முழுமையாக சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு அப்போது கிட்டியிருக்கவில்லை.
படிப்பு முடிந்ததும் ஒரு நேர்முகத் தேர்வினுக்காக சென்னைக்குத் தனியாய் போன நாள் நினைவிலிருக்கிறது. ஓசூரிலிருந்து இரவுப் பயணம். எட்டு மணி நேரங்கள் பயணித்துப் போயிருந்தேன். இரவுப் பயணம் புதிதாகையால் சுத்தமாய் தூங்கியிருக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்தினுக்கு முன்னதாகவே பேருந்து பாரீஸ் கார்னர் சென்றுவிட்டிருந்தது. விடியற்காலை ஐந்து மணிக்கு தோளில் ஒரு பையுடன் அந்தப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்தேன். நடைபாதை முழுக்கத் தூங்கிக் கொண்டிருந்த மனிதர்களைப் பார்க்க புதிதாகவும் வருத்தமாகவும் இருந்தது. பாரீஸ் கார்னர் மற்றும் பூக்கடைப் பகுதிகள் பத்து வருடத்திற்கு முன்பு தங்களுடைய அதிகாலை மெல்லிய குளிருக்கு மிக அதிக வறுமையையும், அழுக்கையும், குவியலாய் மனிதர்களையும் போர்த்தியிருந்தன.
திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்து, பல்லவனைப் பிடிக்க நடந்து கொண்டிருந்தேன். உறவினர் வீட்டிற்குச் சென்று இளைப்பாறி, அங்கிருந்து நேர்முகத் தேர்வினுக்கு செல்லும் திட்டம். நடைபாதை முழுக்க மனிதர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் கீழிறங்கி சாலை ஓரமாகவே நடந்து கொண்டிருந்தேன். குப்பைத் தொட்டி ஒன்றின் பின்னால் ஒரு சிறு குடும்பம் படுத்திருந்தது. மிகவும் நைந்த அந்தப் பெண் வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் மேல் சட்டை முற்றாய் விலகிக் கிடந்து. கணவன் ஒரு புறமும் கைக்குழந்தை ஒரு புறமும் அவள் கையினை தலையணையாக்கி இருந்தனர். அதே போல் அப்பெண்ணின் ஒரு முலையை குழந்தையும் இன்னொன்றினைக் கணவனும் கைப்பற்றி இருந்தனர். ஒரு சில நிமிடங்கள் கண்ணில் விழுந்த அக்காட்சி எனக்குள் மிகப்பெரிய கசப்புகளை உண்டாக்கிவிட்டுப் போனது. சொல்லமுடியாதொரு துக்கமும் கசப்பும் அந்த அதிகாலையில் என்னுள் படர்ந்தது. நகரத்தின் குரூரமான கைகளுக்குள் சிக்குறும் இயலா மனிதர்களின் வாழ்வை யோசிக்க யோசிக்க பயமாய் இருந்தது. மேலதிகமாய் சென்னை என்கிற பெரு நகரத்தின் மீதிருந்த வசீகரம் சுத்தமாய் வடிந்து போனது.
அந்த வேலை எனக்குக் கிடைக்கவில்லை அதற்கு பிறகு சென்னையில் பணிபுரிய வேண்டுமென்கிற முயற்சிகளையும் கை விட்டேன். வெவ்வேறு ஊர்களுக்குத் துரத்தியடித்த வாழ்வு ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் சென்னைக்குக் கொண்டு வந்தது. என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒரே வீட்டில் இருந்ததும் மீண்டும் நான் சென்னை வர காரணமாக இருந்ததெனச் சொல்லலாம். காசி தியேட்டர் எதிர் சந்தில்தான் வாசம். அப்போது நான் வாழ்வைக் கொண்டாட,மனிதர்களைத் தவிர்க்கப் பழகி இருந்தேன்.
கோல்டன் பாரையும், படிக்கட்டு பாரையும் சனிக்கிழமை இரவுகளில் நிரப்பினோம். நவீன திரையரங்குகள்,பைக் பயணம்,புதிய தோழிகளென பெரு நகரத்தின் வசீகரங்களை முழுமையாய் துய்க்கத் துவங்கினேன். கன்னிமாரா இன்னொரு புகலிடமாக இருந்தது. இத்தனை பெரிய பழமையான நூலகத்தில் அமர்ந்திருப்பதே மிகவும் பெருமையாக இருந்தது. பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமை பிற்பகல்களை அங்கேதான் கழித்தேன்.
சீட்டுக் கட்டை கலைத்துப் போடுவதும் என் இருப்பிடங்கள் மாறுவதும் அத்தனைச் சுலபமானது. ஏதோ ஒன்று திடீரென சலிக்கவே என் இருப்பிடத்தை அலுவலகத்துக்குச் சமீபமாய் திருவள்ளூருக்கு மாற்றிக் கொண்டேன். எட்டு மணி நேர நிம்மதியான வேலை, வீட்டிற்கு வந்து அழைத்துப் போகும் சிற்றுந்து, பத்து நிமிடப் பயணம், என நகரத்தின் பரபரப்புகள் திடீரென முற்றிலுமாய் உதிர்ந்து போயின. ஆயிரம் ரூபாய் வாடகையில் பூங்கா நகரில் மிகத் தாராளமான வீடு கிடைத்தது. என் வசிப்பிடங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த வீடு இன்று வரை அவ்வீடாகத்தான் இருக்கிறது. சுற்றிலும் அடர்த்தியான மரங்கள் வளர்ந்திருந்த வீட்டின் மாடியில் நான் குடியிருந்தேன். கிழக்குப் பக்கம் பார்த்த மிகப்பெரிய பால்கனி ஒன்று சரிவான சிமெண்ட் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் இருந்தது. என்னை முழுமையாய் புத்தகங்கள் ஆக்ரமித்திருந்த காலகட்டங்களாக அவையிருந்தன. வீட்டிற்குச் சமீபமாய் பூங்கா நகர் கிளைநூலகம் இருந்தது. பெரும்பாலான புத்தகங்களில் ஒட்டிக் கொண்டிருந்த பக்கங்களை நான்தான் பிரித்தேன். நிலைப்படிக்காய் வெறும் தரையில் தலையணை மட்டும் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருப்பேன். அந்த வீட்டில் வெப்பத்தை நான் எதிர் கொண்டதே இல்லை. கோடைகாலத்தில் கூட குளுமையான செந்நிற சிமெண்ட் தரை தகிப்பை விரட்டி விட்டிருந்தது. செய்ய வேரெதுவுமே இல்லாத நாட்களாய் அவை இருந்தன. மேலும் என்னுள் மார்க்வெஸ்,கால்வினோ,போர்ஹேஸ், ரமேஷ் ப்ரேம், கோணங்கி என குழப்பமான சித்திரங்கள் உலவிக் கொண்டிருந்தன.
பூங்கா நகர் உள்ளடங்கிய பகுதியாதலால் சப்தங்கள் மிகக் குறைவு. அப்போது அந்நகரில் அத்தனை நெருக்கடியும் இல்லாமலிருந்தது. ஒவ்வொரு தெருவினுக்கும் மலர்களின் பெயரைச் சூட்டியிருப்பார்கள். முல்லைத் தெரு,மல்லித் தெரு,செம்பருத்தி தெரு என தெருக்களின் பெயரை உச்சரிக்கவே மகிழ்வாக இருக்கும். அந்தச் சூழலும் வேலையும் பிடித்துப் போனதால் அங்கேயே நிலம் வாங்கி நிரந்தரமாய் தங்கும் எண்ணமும் இருந்தது. மீண்டும் எங்கிருந்தோ வந்த சாத்தான் அவ்விடத்தினை விட்டும் துரத்தியடிக்க வைத்தது.
சுனாமி வந்த கறுப்பு ஞாயிறன்று என் நண்பி ஒருத்தியுடன் மின்சார ரயிலில் மெரினாவுக்குச் சென்று கொண்டிருந்தேன். காலைப் பதினோரு மணிக்கு சமீபமாய், அலையைப் பார்க்க நீங்கள் செல்ல வேண்டாம் உங்களைப் பார்க்க அலை வருகிறதென ரயிலில் இருந்தவர்கள் கிண்டலாய் சொல்லிக் கொண்டார்கள். நேரம் ஆக ஆக அதன் தீவிரம் மெல்ல எல்லாருக்கும் புரிய ஆரம்பித்த போது ரயிலை நிறுத்தி விட்டிருந்தார்கள். நாங்களும் உறைந்திருந்தோம். இரண்டு மணி நேரம் முன்னதாய் கிளம்பியிருந்தால் அலையோடு போயிருக்கலாமென நண்பி சொன்னாள்.
வட சென்னை நண்பர்களுடன் காசிமேடு பகுதியை சுற்றித் திரிந்த நாட்களும் சுவாரசியமானவை. சுண்ட கஞ்சி என்கிற வஸ்துவும் அது தந்த போதையும் இன்னமும் நினைவிலிருக்கிறது. ஒரு வாரம் வட சென்னையிலும், அடுத்த வாரம் சத்யம் திரையரங்கிலும், அதற்கடுத்த வாரம் ’ஈஸிஆர் லாங்க் ட்ரைவு’மாய் வாழ்வின் உச்சம், வீழ்ச்சி இரண்டையும் ஒரே மனதோடு எதிர் கொள்ளும் பக்குவம் அப்போது வாய்த்துவிட்டிருந்தது.
அயல் வாழ்வு சென்னையை ஒரு சிறு நகரமாக்கி விட்டிருக்கிறதென்றாலும் சென்னை எனக்கு பிடித்த ஊர்களின் பட்டியலில் இருக்கத்தான் செய்கிறது.பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை!
சந்தன முல்லையின் இவ்விடுகை இந்நினைவுகளை கிளறிப்போட்டது.அவருக்கு நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
37 comments:
ரைட்டு தல...நீங்களும் நல்லா தான் சொல்லிக்கிறிங்க உங்க நினைவுகளை..;))
அய்யனார்,
நகரத்தின் ஈர்ப்பும், எதிர்பார்ப்புகளும், அதைச் சேர்ந்தபிறகு இருத்தலுக்காக ஏற்படுத்திக் கொள்கிற போலித்தனங்களும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. சென்னை ஒரு குறியீடு மட்டுமே. வெவ்வேறு நகரங்கள், அது காட்டும் முகங்கள் என அனுபவங்கள் பலவாறாக தனித்தனியே வாய்த்திருக்கிறது. கைப்பற்றி அழைத்துச்சென்று, சுற்றிக்காட்டுவது போல எளிமையாக, ஆளுமையாக இருக்கிறது இந்தப் பதிவு. பகிர்தலுக்கு நன்றி.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
அற்புதம் அய்யனார்.
உங்களைப் போன்றே பலருக்கும் தூரத்தில் இருந்து பார்க்கும் /வரும் பொழுது சென்னை ப்ருமாண்டமாயும் வித்தியாசமாகவும் தெரிகிறது. சென்னைக்கு உள்ளே வந்து வாழ தொடங்கியதும் நம் சொந்த ஊர் போல ஆகி விடுகிறது.
நீங்கள் சொல்வது போல ஆயிரம் குறைகள், குப்பைகள் இருந்தாலும் சென்னை இடம் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.
சென்னை மட்டும் அல்ல தமிழ்நாடே ஒரு பாகிய்யம் பெற்ற பூமி. சிறந்த ஊர்கள் இங்குதான் உண்டு: மதுரை, திருச்சி, தஞ்சை, திருவன்னமலி, நெல்லை, நாகர்கோவில், ராமேஸ்வரம்...
சென்னை பற்றிய நினைவுகளை மிக அழகா எழுதி இருக்கீங்க. இறுக்கமாக இல்லாத நடையா அல்லது மனதுக்கு நெருக்கமான இடமா! எதுவோ, திங்கள் காலையைத் துவக்க நல்ல வழி.
முல்லையின் பதிவும் நல்லா இருந்தது. தேங்க்ஸ்.
அனுஜன்யா
பாரிஸில் இருந்த அந்த திருவள்ளுவர் நிலையத்தை இப்போது எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? கன்னிமரா புத்தக நிலையத்தின் அடர்ந்த மரங்களின் அடியில் எத்தனை நாள் உட்கார்ந்து வேடிக்க பார்த்துக் கொண்டு இருந்திருப்பேன். இப்போது அங்கு பாலம் கட்டி, பஸ்ஸில் போகும் போது மரத்தின் மேல்புறம் தெரிகிறது. அய்யனர் உங்களது குறிப்புகள் எனக்குள் நிறைய நினைவுகளை மீட்டிக் கொண்டு இருக்கிறது. நன்றி. தொடர்ந்து நானும் இந்த ஆட்டத்தை ஆட வேண்டும் போலிருக்கிறது. சந்தன்முல்லைக்கும் நன்றி.
நினைவுகளில் மூள்குவதே ஒரு போதை, ..... உங்களின் நினைவுகள்...ஹும்... ஒரு கிறக்கு கிறக்கி.... நன்றாக உள்ளது
//ஒரு சில நிமிடங்கள் கண்ணில் விழுந்த அக்காட்சி எனக்குள் மிகப்பெரிய கசப்புகளை உண்டாக்கிவிட்டுப் போனது. சொல்லமுடியாதொரு துக்கமும் கசப்பும் அந்த அதிகாலையில் என்னுள் படர்ந்தது. நகரத்தின் குரூரமான கைகளுக்குள் சிக்குறும் இயலா மனிதர்களின் வாழ்வை யோசிக்க யோசிக்க பயமாய் இருந்தது. மேலதிகமாய் சென்னை என்கிற பெரு நகரத்தின் மீதிருந்த வசீகரம் சுத்தமாய் வடிந்து போனது.//
சில நிமிடத்தின் கசப்பு மாற பல வருடங்கள்.........
அருமை
நன்றி.
நன்றி!
எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க...சூப்பர்! நானும் இப்படியெல்லாம் ஃபில் பண்ணியிருக்கேன்..ஆனா, எழுதத்தான் தெரியலை! ஹிஹி! அதோட தொடர்ச்சியா, இந்த வாரமெல்லாம் (சென்னை கலாசார வாரம்) போட ரெண்டு போஸ்ட் எழுதி வச்சிருக்கேன்..இதைப் பார்த்ததும்...போடணுமா-ன்னு இருக்கு! :-))
சென்னையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருவதனால் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை போலும் :)
தேர்வினுக்காக, நேரத்தினுக்கு என்று எழுதுவது எதற்காக... தேர்வுக்காக, நேரத்திற்கு என்று எழுதினால் பொருள் மாறுகிறதா என்ன?
நல்ல பதிவு அய்யனார். எனது கல்லூரி நாள்கள் நினைவிற்கு வந்துவிட்டது.. நன்றி!
மிகவும் ரசித்து வாசித்தேன்.
அவ்வளவாக உலகம் சுற்றாதவனாக இருந்தும்,சென்னையை போன்ற ஒரு வசீகரமான,மனதிற்கு நெருக்கமான
ஒரு ஊரை நான் பார்த்ததில்லை.
கடந்த ஆறு மாதங்களாக சென்னையை பிரிந்து வாழ்வது நரக வாழ்க்கையாக இருக்கிறது.
ஷேர் ஆட்டோக்கள் பற்றியும், வடசென்னை குறித்தும் நான் எழுதிய பதிவுகள்.நேரமிருந்தால் வாசித்து பார்க்கவும்.
http://amsyed.blogspot.com/search/label/ஷேர்%20ஆட்டோ
மிக அருமையான பதிவு.சென்னை!!! எப்போதும் ஒரு மர்ம புன்னகைவுடனே எல்லோரையும் வரவேற்கிறது...ஆரம்பத்தில் சிறிது திகைப்பாக இருந்தாலும் போக போக அதன் போலி கவர்ச்சியில் யாம் ஒன்றி பொய் விடுகிறோம் என்பதே உண்மை...
ஞாபாகங்களை தூண்டியமைக்கு நன்றி ....
நல்ல பதிவு அய்யனார், நீண்ட விடுமுறைக்கு மதுரை அல்லது நெல்லைக்கு சென்று திரும்பிய சமயங்களில் எக்மோரில் இறங்கி எங்கள் வீட்டிற்கு செல்லும் ஆட்டோவில் ஏறியதும், வழியெங்கிலும் கண்கள் எதையோ தேடியபடி இருக்கும், புதிதாய் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரை ஆவலுடன் வாசிப்பேன். சின்ன சின்ன மாற்றங்களையும் கண்டு பிடித்துவிடுவேன்.சில சமயம் ஏன் எதற்கு என்று தெரியாமலேயே கண்களின் நீர் திரையிட்டிருக்கிறது. இனம் தெரியாத நிம்மதி வந்து சேரும். 'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா'..சென்னையைத் சில சமயம் திட்டினாலும் சென்னை மிகப் பிடிக்கும் ;)))
உமா ஷக்தியை வழி மொழிகிறேன்
அன்பின் அய்யனார்,
இந்தப் பதிவை வாசிக்கத் துவங்கும போது எனக்குத் தெரியாது சில அதிர்ச்சிகள் எனக்கு காத்திருக்கிறது என்று.
முதலில் காசி தியேட்டர் எதிர் சந்தில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள், காசி தியேட்டர் ஒட்டிய சந்தில் நானும் ஒரு வருடம் குடியிருந்தேன், பிறகு சுண்டக்கஞ்சி பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள், வேளச்சேரி மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் பணி நிமித்தமாக நான்கு வருடங்கள் தங்கியிருந்ததால் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை பெசன்ட்நகர் பீச்சிற்கு சென்று பக்கட் பக்கட்டாக வடிகட்டின சுண்டக்கஞ்சி வாங்கி நண்பர்களோடு அருந்திய நாட்களை நினைவுப்படுத்தியது.
திருவள்ளூர் என்றீர்கள், அது தான் அதிர்ச்சி தாங்க வில்லை ( நீங்கள் கடந்து வந்த பாதையை என் எழுத்துகள் நினைவுறுத்துவதாக உங்கள் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள் ) என் பூர்வீகமே திருவள்ளூர் தான் நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து எல்லாம்,,,,,,,,
மேலும் அதிர்ச்சி என்ன வென்றால் பூங்கா நகர் என்றீர்கள் பாருங்கள், அங்கு ஒரு நிமிடம் வாசிப்பதை நிறுத்தி விட்டு பயங்கரமாகச் சிரித்தேன். கடந்த பதினைந்து வருடங்களாக பூங்கா நகரில் தான் வசித்து வருகிறேன், யாருக்குத் தெரியும், நீங்கள் இங்கு இருந்த போது நாம் சந்தித்துமிருக்கலாம். ஒரே பூக்கள் பெயராக இருக்கும் என்ற இடத்திலும் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. நீங்கள் குறிப்பிட்டிருந்த அந்த நூலகத்திலிருந்து ஒரு ஐந்து நிமிட நடை தூரத்தில் தான் என் வீடு இருக்கிறது.
இந்தப் பதிவு அளவில்லாத மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் பகுதியில் பூங்காநகருக்கென்று நிறைய கதைகளிலிருக்கிறது, அத்தனையும் காதல் கதைகள் தான், திருவள்ளூர் சுற்று வட்டாரத்தில் பூங்கா நகர் காதல் தேசம் என்றே வர்ணிக்கப்படுகிறது. நீங்கள் எனக்கு வெகு அருகாமையில் தங்கியிருந்திருக்கிறீர்கள்
திருவள்ளூரில் எந்த நிறுவனத்தில் பணியாற்றினீர்கள், எதற்கு கேட்கிறேனெனில் நீங்கள் பணிபுரிந்த அதே நிறுவனத்தில் நானும பணியாற்றியிருக்கலாம் என்ற சந்தேகமிருக்கிறது எனக்கு.
பகிர்ந்தமைக்கு நன்றி!
எப்போ சந்திக்கலாம்!?
உங்களைப்போலவே சென்னையை ரசித்து,ருசித்து வெறுத்தவர்களில் நானும் ஒருவன்.
அழகான,இயல்பான எழுத்து நடை.
குப்பைத் தொட்டி ஒன்றின் பின்னால் ஒரு சிறு குடும்பம் படுத்திருந்தது. மிகவும் நைந்த அந்தப் பெண் வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் மேல் சட்டை முற்றாய் விலகிக் கிடந்து. கணவன் ஒரு புறமும் கைக்குழந்தை ஒரு புறமும் அவள் கையினை தலையணையாக்கி இருந்தனர். அதே போல் அப்பெண்ணின் ஒரு முலையை குழந்தையும் இன்னொன்றினைக் கணவனும் கைப்பற்றி இருந்தனர். ஒரு சில நிமிடங்கள் கண்ணில் விழுந்த அக்காட்சி எனக்குள் மிகப்பெரிய கசப்புகளை உண்டாக்கிவிட்டுப் போனது. சொல்லமுடியாதொரு துக்கமும் கசப்பும் அந்த அதிகாலையில் என்னுள் படர்ந்தது. நகரத்தின் குரூரமான கைகளுக்குள் சிக்குறும் இயலா மனிதர்களின் வாழ்வை யோசிக்க யோசிக்க பயமாய் இருந்தது.//
எனக்குப் புரியாத சொற்றொடர்கள் இவை.
நானும் இக்காட்சிகளைச் சித்ரா டாக்கீசு அருகிலும், திருவல்லிக்கேணி சேரிக்கரிகிலும் விடிகாலையில் கண்டதுண்டு.
பாலருந்தும் குழந்தைகள் திறந்து போட்ட மார்பகங்களை நான் கண்டதுண்டு. ஆனால், விடியலில், கணவன் கைப்பற்றிய் மார்பகத்தை நான் கண்டதில்லை.
ஏழைப்பெண்ணின் திறந்த மார்பகங்கள் ஏன் கசப்பை ஏற்படுத்துகின்றன எனத் தெரியவில்லை. ஏழைப்பெண்ணின் திறந்த மார்பகமும், என் மனைவி குழந்தைக்குப் பாலூட்டிய்வண்ணம் உறங்கிவிடும்போது நான் காணும் மார்பகத்திற்கும் எனக்கு எந்த வேறுபாடும் தெரிவதில்லை. இடம்தான் மாறிவிட்டதே தவிர அங்கு வேறொன்றுமில்லை. பெண்மையது. அதில் ஏழை என்றும் பணக்காரர் என்றும் உண்டோ?
ஏழையின் மார்பகம் கசப்புணர்ச்சி தரின், ‘மேல்வகுப்புத் திமிர்’ எனச் சொல்லலாம். வேறென்ன?
நன்றி கோபி
உண்மைதான் வாசு.இங்கு சென்னை ஒரு குறியீடு மட்டுமே.
பின்னூட்டங்களுக்கு நன்றி ராம்ஜி.
நன்றி அனுஜன்யா
மாதவராஜ் நீங்கள் குறிப்பிட்ட இரண்டு இடங்களையும் பார்த்து மூன்று வருடங்களாகி விட்டன.உங்களின் பகிவுக்கு காத்திருக்கிறேன்.
நன்றி சுந்தர்ராமன்
நன்றி என்பக்கம்
சந்தன முல்லை
உங்கள் பதிவைப் படித்த பின்புதான் இந்த கொசுவர்த்தியை சுற்ற முடிந்தது.மற்ற இரண்டையும் பதிவிடுங்கள் :)
ஆம் சுந்தர் சென்னைவாசிகளுக்கு அப்படி இருக்கலாம்.பொருள் மாறாது என்றுதான் நினைக்கிறேன்.அப்படியே எழுதுகிறேன்.நன்றி :)
நன்றி செந்தில்
நன்றி செய்யது.படித்துவிட்டுப் பகிர்கிறேன்.
அதென்ன மனிதர்களைத் தவிர்த்து விட்டு வாழ்க்கையைக் கொண்டாடுவது? புரியவில்லை.
நன்றி இளவட்டம்
நன்றி உமாஷக்தி.
யாத்ரா
உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.ifpl இல் தான் பணிபுரிந்தேன்.2003 லிருந்து 2005 வரைக்குமான காலகட்டத்தில் அங்கு வாழ்ந்தேன்.தனி மடலில் விரிவாய்
நன்றி துபாய் ராஜா
ராம்ஜி.யாஹூ said...
அற்புதம் அய்யனார்.
உங்களைப் போன்றே பலருக்கும் தூரத்தில் இருந்து பார்க்கும் /வரும் பொழுது சென்னை ப்ருமாண்டமாயும் வித்தியாசமாகவும் தெரிகிறது. சென்னைக்கு உள்ளே வந்து வாழ தொடங்கியதும் நம் சொந்த ஊர் போல ஆகி விடுகிறது.
நீங்கள் சொல்வது போல ஆயிரம் குறைகள், குப்பைகள் இருந்தாலும் சென்னை இடம் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.
சென்னை மட்டும் அல்ல தமிழ்நாடே ஒரு பாகிய்யம் பெற்ற பூமி. சிறந்த ஊர்கள் இங்குதான் உண்டு: மதுரை, திருச்சி, தஞ்சை, திருவன்னமலி, நெல்லை, நாகர்கோவில், ராமேஸ்வரம்...
உண்மை வழி மொழிகிறேன்....(அது திருவண்ணாமலை) நம் இந்தியாவுக்கு தமிழகமும் அதன் சிறப்பும் மேலும் சிறப்பை சேர்க்கிறது....
sword Fish
உங்களின் புரிதல் தவறு. கசப்பைத் தந்தது ஏழைப் பெண்ணின் மார்பகங்கள் அல்ல. மனிதர்களின் வாழ்வை நசுக்கும் நகரத்தின் குரூரம் மட்டுமே.அந்தப் பத்தியை இன்னொரு முறை படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.
சாலையோரத்தில் மனிதர்கள் தூங்குவதையே பார்த்திராத ஒரு சிறுநகரத்திலிருந்து வந்தவனின் கண்ணில் விரியும் பெரு நகரத்தின் அதிர்ச்சிக் காட்சிகளாகவே அவை இருந்தன.
ஒரு எழுத்தைப் புரிந்துகொள்ளாமலேயே அதை எப்படி உங்களால் தவறாக விமர்சிக்க முடிகிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
பிரகாஷ்
சென்னை எனக்கு பிடிக்காமல் போனதிற்கான காரணம் அது மனிதர்களை நசுக்குகிறது மிக அதிக சாலை மனிதர்களை உருவாக்குகிறது என்பதாகத்தான் இருந்தது.ஆறு வருடங்களில் அந்த உணர்வு என்னிடம் காணாமல் போயிருந்தது.
சுயநலப் பிசாசாக மாறியிருந்தேன் எனப் பொருள் கொள்ளலாம்.
விரைவில் சந்திக்கலாம் வால்
நன்றி தமிழரசி
என்னது ifplஆ??
ஐயோ... நீங்கள் குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறை அந்தக் கம்பெனிக்கு வருவேன்.
அடுத்த முறை பேசும்போது நிறைய பகிர்ந்து கொள்ளணும்.
ஆஹா... அருமையான தமிழ் எளிமையான நடை. அய்யனாரே! அசத்திவிட்டீர்கள்.
சென்னை மீதான என் காதலை, இன்னும் அதிகப்படுத்தியது உங்கள் வார்த்தைகள்.
மிக அழகான பதிவு.
அய்யனார்,
நீங்கள் சொன்னது போல தான் நானும் இப்போதும் வாழ்வைக்கொண்டாட மனிதர்களைத் தவிர்த்து வருகிறேன்.
அது போல, அடிக்கடி மாறிய வீடுகளும் அவை தந்த சூழல்களும் என்னை, ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு அனுபவமாகவே நிறைந்திருக்கின்றன. வீடுகள் எம் மன நிலையை,ரசனைகளக் கூட மாற்றிச் செல்கின்றனவோ என்று நான் நினைப்பதும் உண்டு
ஆஹா சுந்தர்ஜி :)நேர்ல பேசுவோம்
நன்றி ஊர்சுற்றி
நன்றி விக்னேஷ்வரி
உண்மைதான் அருண்
நம் மனநிலையை வாழ்விடங்கள்தான் தீர்மாணிக்கின்றன.
பதிவும் சில பின்னூட்டங்களும் பழைய ஞாபகங்களை கொண்டு வருகிறது..
மற்றும்படி சென்னையை ஒரு முறை அலச வேண்டும்..
நீல நிறத்தில் வார்ப்புரு...!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை!!
//சிறுநகரத்திலிருந்து வந்தவனின் கண்ணில் விரியும் பெரு நகரத்தின் அதிர்ச்சிக் காட்சிகளாகவே அவை இருந்தன.
ஒரு எழுத்தைப் புரிந்துகொள்ளாமலேயே அதை எப்படி உங்களால் தவறாக விமர்சிக்க //
சிறுநகரந்த்திலிருந்து வந்தவர்கள் முதலில் இவற்றை அதிர்ச்சிகாட்சிகள் என்கிறார்கள்.
‘என்ன கொடுமையிது...ஊரவர் கீழ்மை உரைக்கும் தரமாமோ?’ என்று கொதிப்படைகின்றனர்.
பின்னர் என்ன நடக்கிறது அவர்களுக்கு ?
இப்படித்தான்...
//கோல்டன் பாரையும், படிக்கட்டு பாரையும் சனிக்கிழமை இரவுகளில் நிரப்பினோம். நவீன திரையரங்குகள்,பைக் பயணம்,புதிய தோழிகளென பெரு நகரத்தின் வசீகரங்களை முழுமையாய் துய்க்கத் துவங்கினேன். கன்னிமாரா இன்னொரு புகலிடமாக இருந்தது. இத்தனை பெரிய பழமையான நூலகத்தில் அமர்ந்திருப்பதே மிகவும் பெருமையாக இருந்தது. பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமை பிற்பகல்களை அங்கேதான் கழித்தேன்....
எட்டு மணி நேர நிம்மதியான வேலை, வீட்டிற்கு வந்து அழைத்துப் போகும் சிற்றுந்து, பத்து நிமிடப் பயணம், என நகரத்தின் பரபரப்புகள் திடீரென முற்றிலுமாய் உதிர்ந்து போயின. ஆயிரம் ரூபாய் வாடகையில் பூங்கா நகரில் மிகத் தாராளமான வீடு கிடைத்தது. என் வசிப்பிடங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த வீடு இன்று வரை அவ்வீடாகத்தான் இருக்கிறது. சுற்றிலும் அடர்த்தியான மரங்கள் வளர்ந்திருந்த வீட்டின் மாடியில் நான் குடியிருந்தேன். கிழக்குப் பக்கம் பார்த்த மிகப்பெரிய பால்கனி ஒன்று சரிவான சிமெண்ட் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் இருந்தது. என்னை முழுமையாய் புத்தகங்கள் ஆக்ரமித்திருந்த காலகட்டங்களாக அவையிருந்தன. வீட்டிற்குச் சமீபமாய் பூங்கா நகர் கிளைநூலகம் இருந்தது. பெரும்பாலான புத்தகங்களில் ஒட்டிக் கொண்டிருந்த பக்கங்களை நான்தான் பிரித்தேன். நிலைப்படிக்காய் வெறும் தரையில் தலையணை மட்டும் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருப்பேன். அந்த வீட்டில் வெப்பத்தை நான் எதிர் கொண்டதே இல்லை. கோடைகாலத்தில் கூட குளுமையான செந்நிற சிமெண்ட் தரை தகிப்பை விரட்டி விட்டிருந்தது. செய்ய வேரெதுவுமே இல்லாத நாட்களாய் அவை இருந்தன. மேலும் என்னுள் மார்க்வெஸ்,கால்வினோ,போர்ஹேஸ், ரமேஷ் ப்ரேம், கோணங்கி என குழப்பமான சித்திரங்கள் உலவிக் கொண்டிருந்தன.
...சுண்ட கஞ்சி என்கிற வஸ்துவும் அது தந்த போதையும் இன்னமும் நினைவிலிருக்கிறது. ஒரு வாரம் வட சென்னையிலும், அடுத்த வாரம் சத்யம் திரையரங்கிலும், அதற்கடுத்த வாரம் ’ஈஸிஆர் லாங்க் ட்ரைவு’மாய் வாழ்வின் உச்சம், வீழ்ச்சி இரண்டையும் ஒரே மனதோடு எதிர் கொள்ளும் பக்குவம் அப்போது வாய்த்துவிட்டிருந்தது.//
இப்படித்தான். நகர வாழ்க்கை சுவைக்கத்தொடங்கதொடங்க...
‘மார்பை குழந்தைக்குக் கொடுத்துக்கொண்டு...கையை தலையணையாக கணவனுக்குக் கொடுத்துக்கொண்டு, சாலையோரத்தில் துயிலும் பரம ஏழை மாந்தர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
Such raw and bitter realities of city life recede into background, getting pushed back far into the subconsciousness and crushed, lost in limbo for ever. In fact, to recollect them becomes nasty inconveniences. We become moronic and get fortified ourselves to enjoy everything that the city life offers us.
The city is good to us, only because it does good to us - hell with what it does to millions of others who made you inconvenient when you first came out of Egmore or Central Railway Station and nearly stepped on them sleeping.
The degradation and degeneration of mind, just like the one K.Balachandar portrays in his feature film, Achamillai..Achamillai, where how politics and power corrupt and generates a good man.
இதுதான்...நான் உங்கள் பதிவிலிருந்து அறிய வந்தது!
உண்மை சுடும்!!
நான் சொல்லவருவதெல்லாம, உங்கள் முதல் அனுபவம் போலியானது. அது எதற்காக இங்கே எழுதப்பட்டது? யாரை ஏமாற்ற?
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க தல.
அய்ஸ் என்ன கொடும பாருங்க
நீங்க சொன்ன அதே கம்பனில நானும் வேலை செய்தேன்.(2001ம் வருடம்)
அப்போ அதுக்கு கோத்தியார்னு பேரு.
நான் தங்கி இருந்தது புட்லூர்ல.
மணவாழன் நகர் துளசி தியேட்டர் ஆஞ்சிநேயர்கோவில் இதெல்லாம் ரொம்ப புடிச்ச இடம் :-))
அருமையான பதிவு
பகிவுக்கு நன்றி.
Post a Comment