
Jafar Panahi இயக்கத்தில், அப்பாஸ் கைரோஸ்டமியின் திரைக்கதையில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த The White Balloon படத்தையும் சமீபத்தில் பார்க்க நேரிட்டது.Taste of cherry தந்த அயர்ச்சியிலிருந்து மீட்க இது மிகவும் உதவியாய் இருந்தது.Jafar Panahi யின் இன்னொரு முக்கியமான திரைப்படம் The Circle இரண்டு மாதங்களுக்கு முன் இத்திரைப்படம் பார்த்துவிட்டு வட்டத்திற்குள் பெண் எனத் தலைப்பிட்டு ஒரு பகிர்வை எழுதிப் பார்த்தேன். அது எனக்கே திருப்தியில்லாது போனதால் பதியவில்லை. மதம், சமூகம் போன்றவை பெண்களின் மீது நிகழ்த்தும் வன்முறையை மிகச் சிறப்பாகப் பதிவித்திருந்த படம் அது. மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு விரிவாய் பகிர முயல்கிறேன்.
ஈரானியத் திரைப்படங்களில் வில்லன்களோ கதாநாயகன்களோ இருப்பதில்லை. மனிதம், அன்பு, போராட்டம், இழப்பு என மனித வாழ்வில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முடிந்த வரை ஒற்றைத் தன்மையில்லாது கதைகளாக்கும் தளமாகவே ஈரானியச் சினிமா இருக்கிறது. குறிப்பாய் இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாரிடத்தும் வெறுப்பும் துவேஷமும் இல்லை. சக மனிதர்கள் மீது இயல்பாய் இருக்கும் அக்கறையைப் பொதுத் தன்மையாக்கி இருக்கிறார்கள்.
பாம்புகளை வைத்து வித்தை காட்டுபவர், தையற்கடைக்காரர், மீன் கடை வைத்திருப்பவர், சிறுமியின் அழுகையை தாங்காது அவளுக்கு உதவ வரும் பாட்டி,சிறுமியின் அண்ணன், இராணுவ இளைஞன், பலூன் விற்கும் பதின்மன் என இத்திரைப்படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களிடத்தும் இந்த அன்பும் நேயமும் இழைந்தோடுகிறது.
ஏழு வயதுச் சிறுமி ரஸியாவிற்கு கடையில் புதிதாய் வந்திருக்கும் வண்ணமீனை வாங்க 100 டோமன்கள் தேவைப்படுகின்றன. புத்தாண்டைக் கொண்டாட அம்மாவிடம் ஒரே ஒரு நோட்டாக கைவசமிருக்கும் 500 டோமனை அண்ணன் உதவியுடன் நச்சரித்து வாங்கி கடைத்தெருவிற்குப் போகிறாள். வீட்டைக் கடந்ததும் பாம்பாட்டி வித்தைக் காட்டிக்

புத்தாண்டின் முந்தின நாளிற்கான கடைத்தெரு மிகுந்த உற்சாகமானது. நாளை பிறக்க விருக்கும் புது வருடத்தினை மக்கள் மகிழ்வாய் எதிர்கொள்ளும் கடைசி நிமிடங்களில் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்ளும். கடைகளை மூடிவிட்டு தத்தம் சொந்த கிராமத்திற்கோ அல்லது உறவினர் வீடுகளுக்கோ இடம்பெயர்வர். திடீரென எங்கிருந்தோ வித்தை காட்டுபவர்களும், வேடிக்கை நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும், பலூன் விற்பவர்களுமாய் சிறுநகரங்களுக்கு வந்துக் குமிவர். வாழ்த்துப் பறிமாறல்களும், சிறுசிறு சச்சரவுகளுமாய் சிறுநகரத்தின் கடைத்தெருக்களில் சந்தோஷமும், மகிழ்வும் நிரம்பி வழியும். அப்படியொரு ரம்மியமான மாலைப்பொழுதில் தன் வீட்டிலிருந்த மொத்த பணத்தையும் தொலைத்து விடும் சிறுமியின் மனநிலை பார்வையாளனுக்கு ஒரு வித பதட்டத்தை தந்துவிடுகிறது. அவள் அந்தப் பணத்தை மீட்கும் வரை அந்தப் பதட்டம் நீடித்திருக்கிறது. இதுவே இத்திரைப்படங்களின் வெற்றியாகவிருக்கிறது.
ரஸியாவாக நடித்திருக்கும் சிறுமி மனதை ஈர்க்கிறாள். அவளின் தொணதொண பேச்சு படம் முடிந்த பின்பும் கேட்டுக் கொண்டிருந்தது. அழுகை, பிடிவாதம், மகிழ்ச்சி என உணர்வுகளுக்கேற்றார் போல் மாறும் அவளின் முக பாவங்கள் பார்வையாளனை படத்தோடு ஒன்ற வைக்கின்றன. ஈரானியச் சினிமாக்களில் இன்னொரு பிரதான பொது அம்சம் சிறுவர் கதாபாத்திரங்கள். நடிப்பது என்பதிலிருந்து முற்றாய் விலகி வாழ்வது என்கிறத் தளத்தினுக்கு இவர்கள் எவ்வாறு இடம்பெயர்கிறார்கள் என்பது புதிராகவே இருக்கிறது. அவர்களை அத்தளத்தினுக்கு நகர்த்தும் இயக்குனர்களின் திறமை அசாத்தியமானது. மேலும் சிறுவர் கதாபாத்திரங்களின் மூலம் நசுக்கப்படும் வாழ்வினுக்கெதிரான அரசியல் எதிர் கூற்றுகளையும் இத் திரைப்படங்கள் மிக நேர்த்தியாய் முன் வைக்கின்றன.

சமூகத்தின் பயன்படுத்துதல் தன்மையை பலூன் விற்பவனின் மூலம் காட்சிப்படுத்தியிருப்பார். பாதாளச் சாக்கடையிலிருந்து பணத்தை எவராலும் வெளியிலெடுத்து விடுமுடியாத நிலையில் பலூன் விற்கும் பதின்மன் பலூன்களை கட்டி வைத்திருக்கும் நீண்ட கழியில் பபுள் கம்மை ஒட்டி அப்பணத்தை வெளியில் எடுத்து தருகிறான். பணம் கிடைத்த மகிழ்வில் ரஸியாவும் அவள் அண்ணனும் சிட்டாய் பறந்துவிடுகிறார்கள். பலூன் விற்கும் பதின்மன் ஒரே ஒரு வெள்ளைப் பலூனுடன் அப்படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பதோடு படம் நிறைவடைகிறது.
மஜித் மஜிதியின் Children of Heaven, Color of Paradise, Father போன்ற திரைப்படங்களில் இழையோடும் மென்சோகமும், கவித்துவமும் இத்திரைப்படத்தில் சற்றுக் குறைவுதான் என்றாலும் ஜாஃபர் மற்றும் அப்பாஸின் அணுகுமுறை வித்தியாசமானது. இவர்கள் கவித்துவத்தை திணிப்பதில்லை மாறாய் பார்வையாளனிடத்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள்.
14 comments:
மிகுந்த நன்றிகள் அய்யனார்.
புதிது புதியதாய் திரைப்படங்களை அறிமுகம் செய்து, அற்புதமாய் விமர்சனம் செய்து எமக்கு நீங்கள் அளிக்கும் தகவல்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரிய வில்லை.
உங்கள் பதிவு நானே திரைப் படம் பார்த்த திருப்தி அளிக்கிறது.
தொடரட்டும் உமது நற்பணி.
ராம்ஜி_யாஹூ
நல்ல விமர்சனம்...!! அழகு....!!
அய்யனார்
மிக நல்ல பகிர்வு திரைப் படத்தை பார்த்த ஒரு உணர்வைத்தந்திருக்கிறது
உங்களின் பதிவு
good post man...keep it up !!!!!!
நல்லதொரு சிறப்பான பகிர்வு.
ஈரானிய சினிமா ஏற்கனவே "சொற்கத்தின் குழந்தைகள்" எனும் படத்தின் மூலம் பரவலான பார்வையையும் கவனத்தையும் பெற்றிருந்தன. ஒரு தெருவின் உணர்வைக்கூட வண்ணங்களாலும் ப்ளியாலும் காட்டக்கூடிய நுட்பம் ஈரானிய் சினிமாவில் உள்ளன. வாழ்த்துகள் அய்யனார்.
Children of heavenம் color of paradiseம் பார்த்திருக்கிறேன். அடேயப்பா..! வாழ்வோடு சினிமா எவ்வளவு நெருக்கமானது என்பதை மஜித் மஜிதி அழகாகச் சொல்லியிருந்தார்.
//ஈரானியத் திரைப்படங்களில் வில்லன்களோ கதாநாயகன்களோ இருப்பதில்லை. மனிதம், அன்பு, போராட்டம், இழப்பு என மனித வாழ்வில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முடிந்த வரை ஒற்றைத் தன்மையில்லாது கதைகளாக்கும் தளமாகவே ஈரானியச் சினிமா இருக்கிறது.// உங்கள் பார்வை சரியானது.
குறிப்பிட்ட திரைப்படத்தை பார்க்க வேண்டும் போலிருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
அய்ய்ஸ்! பின்ன சொன்னது போல ,இப்படம் ,Children of Heaven னை நினைக்க தூண்டுகிறது! எங்கேர்ந்து யா இந்த dvd லாம் எடுக்கறே?? அருமை ..
நல்ல அருமையான விமர்சனம்..
ஏற்கனவே இப்படத்தைப் பற்றி எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.
உங்கள் விமர்சனம் இப்படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.
நிச்சயம் பார்க்க வேண்டிய படம் தான்.
ஈரானிய படங்கள் என்னை மிகவும் கவர்பவை.. ஆனால் இன்னும் ஒரு முழு படத்தையும் பார்க்க வாய்ப்பமைந்ததில்லை..
தொடருங்கள். வாழ்த்துகள்.
-பூமகள்.
பகிர்வுக்கு நன்றி அய்யனார்.
நல்லதொரு பகிர்வு, children of the heaven பார்த்திருக்கிறேன், இதையும் பார்க்க வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி அய்யனார்..இந்த படம் பற்றி கேள்விப்பட்டதில்லை...இங்கு வந்த முதல் படமும் பார்க்கறதில்ல..வாசிக்கறதுமில்ல.. ஆமா நீங்கள்லாம் தூங்குறீங்களா இல்லையா? :)
ராம்ஜி,மேடி,நேசமித்ரன்,ரவி,ராஜா,
பாலமுருகன்,மாதவராஜ்,அருண்,பூமகள்,தமிழன்,யாத்ரா மற்றும் ரெளத்ரன் பின்னூட்டங்களுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி.. பார்த்துட்டு சொல்றேன்.
:)
Post a Comment