Monday, August 17, 2009

சமவெளி மான்


1
பாசியில் நழுவும்
விலாங்கு மீனாகவும்
நீள்தெரு வளைவில்
பளிச்சிட்டு மறையும்
முதுகாகவும்
ஒவ்வொரு முடிவிலிருந்தும்
கிளைக்கும் பாதையாகவும்
அது இருந்தது
வெய்யிலின் தகிப்படங்கியிரா
பிறிதொரு நாளின் மாலையில்
இருவரும் சேர்ந்து
அதைத்
துடிக்கத் துடிக்கக்
கொன்றோம்.

அங்கையற்கன்னியுடன் சங்கமேஸ்வரன் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இருக்கைக்கு வலது புறமாய் சன்னலை ஒட்டிப் போடப்பட்டிருந்த சாய்விருக்கையில் அமர்ந்தபடி சீஷா புகைத்துக் கொண்டிருந்தேன். இப்புகைத் தேநீர் விடுதி கான் அப்துல் கபார் சாலையின் முடிவிலிருக்கிறது. வழமை தவறாமல் தினம் காலைப் பதினோரு மணிக்கு இங்கு வர இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இவ்விடுதி நகரின் மய்யத்திலிருந்தாலும் நெரிசல் கண்ணில் படாதவாறு நான்கு சிவப்பு குல்மோஹர் மரங்கள் சன்னல்களைப் போர்த்தியிருக்கின்றன. இரண்டு, பெரும்பாலும் கவ்வாலியும் எப்போதாவது வார்த்தைகளற்ற ஷெனாய் இசையும் மூங்கில் வேய்ந்த கூரையிலிருந்து கசிந்து கொண்டிருக்கும். மேலும் எனக்கானச் சரியான வாசத்துடனான கமறாத கலவையை இங்கிருக்கும் பணிப்பெண் தெரிந்து வைத்திருப்பதும் இன்னொரு முக்கிய காரணம்.

காலைப் பதினோரு மணி வெயிலுக்கான உற்றத் தோழன் காகமாகத்தான் இருக்க முடியும். குல்மோஹரின் சிறு கிளைகளில் அமர்ந்தபடி குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு மூன்றுக் காகங்கள் குரலெழுப்பிக் கொண்டிருக்கும். ஷெனாய் இசைக்கு இடைவெட்டாய் கேட்கும் காகத்தின் கரைச்சலும் என்னுடைய உடலின் லேசான மிதப்பும் சமவெளிகளில் திரியும் மானின் மனநிலைக்கு என்னைக் கொண்டுச் செல்லும்.

பதினைந்து நாட்களுக்கு முன்பு காக்கை நாடி சோதிடர் ஒருவரை மத்தலாங்குளத் தெரு அரசு மதுக்கடையில் சந்தித்தேன். கையில் மிக மோசமான போதையைத் தரக்கூடிய கால் புட்டி வஸ்து ஒன்றுடன் எனக்கு சமீபமாய் வந்து நின்றார். தொண்டையை லேசாய் கனைத்துக் கொண்டு புட்டியின் மூடியைத் திறந்து 110 டிகிரியில் உடலைச் சாய்த்து அவ்வஸ்தை அப்படியே தொண்டைக்குள் சரித்துக் கொண்டார். பின்பு சம நிலைக்குத் திரும்பி தலையை உலுக்கிக் கொண்டார். இரத்தச் சிவப்பிலிருந்த விழிகளில் உருட்டி உருட்டி என்னைச் சற்று நேரம் பார்த்து விட்டு “நீயொரு சமவெளி மான்” என்றார்.

2


சங்கமேஸ்வரன் என்னருகில் வந்து காதில் சொன்னான்.

“நீங்களொரு சமவெளி மான்”

“என்ன?”

“நீங்களொரு சமவெளி மான்”

“எப்படித் தெரியும்?”

“சென்ற வாரத்தில் அங்கையற்கன்னியும் நானும் கிழக்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களுக்கு சென்றிருந்தோம்.கானகத்தில் வழி தப்பிய அவள் நினைவு மயங்கி எங்கேயோ கிடந்திருக்கிறாள். அவளையொரு சமவெளி மான் தன்னுடலில் சுமந்து என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது.அச்சமவெளி மானின் முகம் உங்களைப் போலவிருந்தது”

“அதை நான் பார்க்க முடியுமா?”

“தெரியவில்லை.ஆனால் மீண்டும் நாங்கள் அங்கு செல்ல விரும்பவில்லை.
மீண்டும் அங்கையற்கன்னியைத் தொலைக்க நான் தயாரில்லை”

அங்கையற்கன்னி தன் கைப்பையிலிருந்து கையகலக் கண்ணாடி ஒன்றை எடுத்து வந்து என் முகத்தினுக்கு முன்னால் காண்பித்தாள்.“அந்தச் சமவெளி மான் இப்படித்தான் இருந்தது.”கண்ணாடியில் தெரிந்தது அங்கையற்கன்னியின் முகம்.

3

காக்கை நாடி சோதிடர் மலர்செல்வியிடம் அழுது கொண்டிருந்தார்.

“அவன் சமவெளி மான்தான்”

“யார்?”

“இன்று சந்தித்தவன்.பெயர் தெரியவில்லை.ஆனால் அவன்தான் சமவெளி மான்”

“சரி சாப்பிடுங்க”

“நீயொரு குழிமுயல் தெரியுமா?”

“தெரியும்”

“நானொரு நரி”

“அப்படியா?”

“ஆம் குள்ள நரி”

“சரி இருக்கட்டுமே”

“குள்ள நரி முயலுடன் சம்போகிப்பது குள்ள நரியின் அதிர்ஷ்டமாக இருக்கலாம் ஆனால் முயலுக்கு நரகம்தானே?”

“நிறைய குடிச்சீங்களா?”

“நீ பேசாம அவனை காதலி.அவன்தான் உனக்கு சரி”

“வேண்டாம்”

“தெருவில் கிடக்கும் கருங்கல்லை தூக்கி வந்து என் தலையில் போட்டுக் கொன்றுவிட்டு அவனுடன் போய்விடு”

“உளறாம சாப்பிட்டுப் படுங்க”

“மலர்”

“ம்ம்”

“உன்னைவிட நான் பதினைந்து வயது பெரியவன்”

“அதனால என்ன”

“உன்னைவிட ஐந்து வயது சிறியவனான அவனோடு சம்போகித்து என்னைப் பழிதீர்!”

“போதும் தூங்குங்க”

4

சங்கமேஸ்வரனும் நாடி சோதிடனும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். அங்கையற்கன்னி மலர்செல்வியின் கன்னத்தோடு கன்னம் ஒட்டி பக்க வாட்டில் அணைத்துக் கொண்டாள். நாடிசோதிடன் மலர்செல்வியின் பாதங்களில் முத்தமிட்டான். அங்கையற்கன்னி சங்கமேஸ்வரனை கீழே தள்ளி அவன் மீதமர்ந்தபடி அவனின் கால் சட்டைப் பொத்தான்களை லேசான வெட்கத்தோடும்,விரகத்தோடும் விடுவிக்கத் துவங்கினாள். மலர்செல்வி சமவெளி மானைப் பற்றிய கனவில் மூழ்கினாள். சமவெளி மானாகிய நான் அங்கையற்கன்னியின் உடலை சுமந்து கொண்டு பள்ளத் தாக்குகளில் அலைந்தேன்.

5

இன்று காலை பதினோரு மணிக்கு முன்னதாகவே வந்துவிட்டேன்.புத்தா பார்-III ஒலித்தது. எனக்கு வழமைகளை மாற்றப் பிடிப்பதில்லை. பணிப்பெண்ணைக் கூப்பிட்டு மாற்றச் சொன்னேன். அவள் ஒரு யுவதியினை நோக்கி விரல் நீட்டி அவளின் விருப்பம் அவள் கொண்டு வந்த இசைத் தகடு என்றாள்.நான் அவளின் இருக்கைக்குப் போனேன்.

“இந்த இசை எனக்குப் பிடிக்கவில்லை”

“அதனாலென்ன. எனக்குப் பிடித்திருக்கிறது”

“நல்லது “

நான் திரும்ப வந்து என் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.சற்று நேரம் கழித்து அவள் என்னருகில் வந்து சொன்னாள்.

“நீங்களொரு சமவெளி மான்”

நான் புன்னகைத்தேன். போய்விட்டாள்.

வழக்கமான நேரத்திற்கு சங்கமேஸ்வரனும் அங்கையற்கன்னியும் வந்து சேர்ந்தார்கள். அங்கையற்கன்னி எனக்காய் வந்து என் முகத்தினை வருடினாள். முதுகினை வருடினாள். என்னுடலை இறக்கிவிடுங்களேன் என மண்டியிட்டு அழுதாள். முடியவில்லையென நானும் அழுதேன். காக்கை நாடி சோதிடனும் மலர்செல்வியும் வந்தனர். எங்களிருவரின் கேவல் தாங்காது சோதிடனும் அழ ஆரம்பித்தான். சங்கமேஸ்வரனுக்கு ஏனோ சிரிப்பு பொங்கிப் பொங்கி வந்து கொண்டிருந்தது. மலர்செல்வி புரியாமல் விழித்தாள். சங்கமேஸ்வரன் திடீரெனக் கத்தினான்

“அய்யனார் நீங்களொரு சமவெளி மான்!”

மலர்செல்வி திடுக்கிட்டாள்.பரபரப்பின் உச்சத்தில் அவள் இதயம் துடிக்க ஆரம்பித்தது. முதன்முறையாய் சமவெளி மானைப் பார்த்தாள். பின்பு மிகுந்த சினத்துடன் தன் இடுப்பில் இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த பிஸ்டலை வெளியெடுத்து முதலில் அங்கையற்கன்னியினை நோக்கிச் சுட்டாள். அருகில் அழுது கொண்டிருந்த சோதிடனின் நெற்றிப் பொட்டில் அடுத்த குண்டு பாய்ந்தது. ஓட ஆரம்பித்த சங்கமேஸ்வரனின் பின்னந்தலையில் அடுத்த குண்டு. மூவரும் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். இரத்தம் அந்தத் நேநீர் விடுதியின் தரைகளில் திட்டுத் திட்டாய் தேங்கி நின்றது. மலர்செல்வி சமவெளி மானை அள்ளியெடுத்து திட்டாய் தேங்கியிருந்த இரத்தத்தில் முக்கினாள். பின்பு இரத்தம் தோய்ந்த அச் சமவெளி மானைத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டு குல்மோஹர் மரத்தடி நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

15 comments:

சென்ஷி said...

:)

ரொம்ப நாள் ஆச்சுங்க அய்யனார் உங்களுக்கு முதல் கமெண்ட் போட்டு. பொறுமையா வாசிச்சுட்டு அப்புறம் வர்றேன்!

சென்ஷி said...

படிச்சுட்டேன் அய்யனார். சூப்பர்ன்னு ஒரு வார்த்தையில் முடிச்சுக்கறேன். எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குது

சூர்யா ௧ண்ணன் said...

நல்லாயிருக்கு

anujanya said...

அய்ஸ்,

மாஜிகல் ரியலிசம் - "சாராவின் இறக்கைகளும் ஜோவின் பியானோவும்..." - அதற்குப் பின் ரொம்ப நாட்களுக்குப் பிறகு மீண்டும் மாய யதார்த்தப் புனைவு.

ரொம்ப நல்லா வந்திருக்கு அய்ஸ். பாராட்டுவதற்கு முன், முன்னர் எழுதிய பதிவிலிருந்து (பகிங்கரப் பின்னூட்டம்) செக் லிஸ்ட் எடுத்துச் சரி பார்த்தேன்:

"மா.ய. படைப்புகளின் இன்னபிற குணாதிசயங்களை பின்வருமாறு பட்டியலிடலாம்:

1) மாற்றுக் கருத்து ('other' perspective)
2) ஒரு குறிப்பிட்ட நாகரிக/வரலாற்று/பூகோளப் பின்னணியில் கதை இருத்தல்
3) கனவுகளும் கற்பனைகளும் கதையினூடே இருத்தல்
4) சுதந்திர, பின் நவீனத்துவ (ஆஹா, கிளம்பிட்டாங்கையா!) பாணி எழுத்து
5) விளக்கவியலாத நிகழ்வுகள் மிகச் சாதாரண சூழலில் நடப்பதும் மற்றும் கதைமாந்தர்கள் அத்தகைய தர்க்கத்தை மீறும் நிகழ்வுகளை சட்டை செய்யாதிருப்பது

மேலும் உயர்கற்பனைகள் கதையின் பின்புல தளத்தையே கேள்விக்குறி ஆக்குதல்; வினையும், விளைவும் தலைகீழாதல் (சோக நிகழ்விற்கு முன்பே கதை மாந்தர் விசனப்படுதல்); காலத்தை உருமாற்றல் அல்லது சுருக்குதல் என்று அனைத்து தகிடு தத்தங்களும் செய்யலாம், மிக வசிகரமாக. முடிவாக அழகிய நீதி (poetic justice) வெளிப்படும்."

இந்த முறையும் மேற்கூறிய அம்சங்களில் நிறைய இருக்கின்றன. நிறைய முறை படிப்பேன். இதத்தான், இதத்தான் எதிர்பாக்குறோம் அய்ஸ்.

அனுஜன்யா

குப்பன்.யாஹூ said...

கலக்ரிங்க போங்க. பதிவு அருமை நன்றிகள்.

இந்த வகை எழுத்துக்கு பதிவு சரியான தளம்.

இளவட்டம் said...

அருமையா இருக்கு அய்யனார் ...நான் ரியலிசதிற்கு புதிது என்றாலும் ....அருமை ...
அருமை ...அருமை...

Ayyanar Viswanath said...

நன்றி சென்ஷி காத்தாடுற இடத்துல போய் என்ன முதல் கமெண்ட் :)

நன்றி சூர்யா கண்ணன்

அனுஜன்யா : மாயா யதார்த்ததுக்கான முயற்சிகளாகத்தான் என்னோடத பாக்கிறேன்.உச்சம் அடைய போக வேண்டிய தூரம் அதிகம்தான்.எனினும் உங்களின் பார்வை மகிழ்ச்சியளிக்கிறது.

நன்றி ராம்ஜி

நன்றி இளவட்டம்

நித்தி .. said...

ayyanar romba alaga yetho oru padam patha madhiri ovaru katchigalum kanmunae arumayai therigirathu....

amam intha picture engae pidichinga romba alaga irukku aana etho intha pathivukku sambantham illamal iruku...
just a view...
as usual fantastic!!!!

நித்தி .. said...

ayyanar romba alaga yetho oru padam patha madhiri ovaru katchigalum kanmunae arumayai therigirathu....

amam intha picture engae pidichinga romba alaga irukku aana etho intha pathivukku sambantham illamal iruku...
just a view...
as usual fantastic!!!!

தமிழன்-கறுப்பி... said...

நன்றி அய்யனார் இந்த நன்றியை பிடிச்சிருக்கு என்றும் கொள்ளலாம், நல்ல பெயர்கள்.

:)

Rajasekar said...

Dei...ennadaa ithu..?

Ayyanar Viswanath said...

நன்றி நித்தி

நன்றி தமிழன்

சேகர் என்ன ஆச்சு :)

மண்குதிரை said...

romba pothaiya irukku

ippa onnum solrathukkillai

மஞ்சூர் ராசா said...

கடைசியில் அய்யனார் என்ன ஆனார்.


நல்லதொரு கதை. நன்றி.

MSK / Saravana said...

ப்ப்ப்ப்பா.. சான்ஸே இல்ல தல. செம கலக்கல்.
இந்த மாதிரி மேஜிகல் ரியலிசம் நீங்க எழுதி ரொம்ப நாள் ஆச்சு.

Featured Post

test

 test