Thursday, August 6, 2009

தற்கொலை ஒரு விடுபடல் அவ்வளவுதான்


அப்பாஸ் கைரோஸ்டமியின் A taste of cherry யைச் சென்ற வார இறுதியில் பார்க்க முடிந்தது. படம் பார்த்து முடித்த பின்பு ஒரு சம நிலையின்மையை, ஒரு பதட்டத்தை என்னால் உணர முடிந்தது. மீதியிருந்த இரவு சப்பணமிட்டு என் எதிரில் அமர்ந்து கொண்டது. ஈரானியத் திரைப்படங்கள் பெரும்பாலும் எனக்குத் தந்ததெல்லாம் அமைதியின்மையே. இதுவரை பார்த்திருந்த எல்லா ஈரானிய படங்களும் ஏதோ ஒரு வகையில் என் சம நிலையைக் குலைத்துவிட்டே போயிருக்கின்றன. அப்பாஸ் கைரோஸ்டமி, மஜித் மஜிதி, Makhmalbaf, என மிகச் சிறந்த கலைஞர்களை கொண்ட களமாக ஈரானிய சினிமா இருக்கிறது. சினிமா என்பற்கான வரையறுக்கப்பட்டப் பொதுக் கூறுகளை ஈரானிய சினிமா களைந்துவிடுவதாலோ என்னவோ பொதுக் கூறிலேயே உழன்ற சாதாரணப் பார்வையாளர்களை இவை வசீகரிப்பதில்லை. பின்னணி இசையைக் கூட முற்றாய் தவிர்த்தவையாகத்தான் அப்பாஸின் படங்களிருக்கின்றன.

அப்பாஸின் the wind will carry us ஐ இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். கதை, திரைக்கதை, காட்சியமைப்பு, விறுவிறுப்பு போன்ற வஸ்துக்கள் எதையும் திணிக்காமலேயே ஒரு மிகச் சிறந்த திரையனுபவத்தை நிகழ்த்திக் காட்ட முடியும் என்பதற்கு அப்பாஸின் திரைப்படங்களை உதாரணமாய் சொல்லலாம்.இவரின் பெரும்பாலான படங்களில் கதை என்று தனியாய் எதுவுமிருக்காது. ஏதாவது ஒரு சூழலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கு நிகழ்பவற்றை அச்சூழலின் இன்னொரு கண்கொண்டு பார்ப்பதுபோல பதிவிப்பதுதான் இவருக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. சம்பவங்களை நிகழ்த்தாது தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதுபோன்ற ஒரு மன நிலையை பார்வையாளனுக்குக் கடத்துவதுதான் இவரின் அணுகுமுறையாக இருக்கிறது.

இன்றளவும் காட்சிகள் ஏற்படுத்தும் அழுத்தங்கள் திரையில் நிகழாது பார்வையாளனிடம் நிகழ்வதுதான் தூய சினிமாவின் சாத்தியங்களாக இருக்கின்றன.

தற்கொலைச் செய்து கொள்ள முடிவெடுக்கும் தருணம் மிகக் குரூரமானதாக இருக்கக் கூடும். இழப்பை, துயரை எதிர்கொள்வதை விட அதற்குப் பின் வரும் நாட்கள் மிகுந்தச் சிரமமானவை. இயல்பாய் வாழ விடாதவை. நினைவில் மிகும் இழந்தவை குறித்தானத் தொடர்ச்சியான எண்ணங்களே தன்னை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கத் தூண்டுபவயாகவும் இருக்கலாம். தன்னுடைய சவக் குழியில் தானே போய் படுத்துக் கொள்ளும் அவலம் எதன் மூலமும் பகிரமுடியாதது. இவ்வுலகில் ஒற்றையனாய் வாழ்வதன் துயரத்தை இத் திரைப்படம் பேசுகிறது. தனிமனிதனின் இழப்பென்பது நட்பு, கடவுள், மனிதம், போதனை, அறம் என பிற எந்த ஒன்றினாலும் ஈடு செய்து விட முடியாதது. இழப்பு எப்போதும் இழப்பாகத்தான் இருக்கிறது.

பிரதான கதாபாத்திரம் தன்னுடையப் பிணத்தை புதைக்க ஒரு நபரைத் தேடி படம் முழுவதும் அலைவதுதான் இத்திரைப்படத்தின் கதை. இக்கதாபாத்திரத்தின் சிக்கல் இதுவரை நான் கண்டிராதது. தன்னுடைய இழப்புகளுக்கான காரணத்தையோ குற்றச் சாட்டுகளையோ நீதிதவறலையோ இக்கதாபாத்திரம் முன்வைப்பதில்லை. தான் எதற்காக தற்கொலை முடிவினுக்கு வந்தோமென்பதைக் கூட இப்பாத்திரம் சொல்வதில்லை. ஆனால் இப்பாத்திரம் தன் உடல் மண்ணோடு புதைய வேண்டுமென விரும்புகிறது. மிகுந்த அன்போடு தன்னை ஒருவர் அடக்கம் செய்ய வேண்டுமென விரும்புகிறது. அதற்கான நபர் ஒருவரைத் தேடி அலைகிறது.

மரணத்தைப் பற்றிய உரையாடல்கள் மிகுந்த வசீகரமானவை. அல்லது எனக்கு மிகவும் பிடித்தவை. பிரபஞ்சத்தின் அதி ரகசியங்களில் ஒன்றான மரணத்தைப் பற்றிப் பேசவே, கேட்கவோ எனக்கு எப்போதும் சலிப்பதில்லை. The Curious Case of Benjamin Button இல் வரும் மரணம் குறித்தான பின் விவரணங்களை நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். (முதியோர் இல்லங்களில் மரணம் ஒரு அழையா விருந்தாளியைப் போல் எப்போதும் தங்கியிருக்கிறது)

இத் திரைப்படக் கதாபாத்திரங்கள் தொடர்ச்சியாய் மரணம் குறித்து உரையாடுகின்றன. எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் தற்கொலைக்கு துணை போக மாட்டேன் என ஒருவன் விழுந்தடித்து ஓடுகிறான். தற்கொலை கடவுளுக்கு எதிரானது என ஒருவன் பிரசங்கிக்கிறான். ஒரு முதியவர் தான் தொடர்ந்து வாழ மல்பெரிப் பழத்தின் சுவையே போதுமான காரணமாக இருந்தது எனச் சொல்கிறார். இடி சப்தங்கள் மிகும் ஒரு இரவுப் பொழுதில் பிரதான காதாபாத்திரம் குழிக்குள் சென்று படுத்துக் கொள்கிறது.மழை சகலத்தையும் மூடும் வண்ணம் பொழியத் துவங்குகிறது.
அப்பாஸின் திரைப்படங்களில் இன்னொரு பிரதான அம்சம் landscape. ஈரானின் உள்ளடங்கிய கிராமங்கள், மணற்பிரதேசங்கள், சமவெளிகளென திரையில் விரியும் நிலம் பார்வையாளனுக்கு புது அனுபவமாகவிருக்கும். பெரும்பாலான காட்சிகளை தொலைவிலிருந்து பதிவிப்பது இவரது விருப்பமாக இருக்கலாம்.

Mr. Badii என்கிற பிரதான கதாபாத்திரத்தினை ஏற்று நடித்திருப்பவர் Homayoun Ershadi. இவரின் இறுகிப் போன முகமும் உணர்வுகள் எந்த நிமிடமும் உடைந்து விடலாம் ரீதியிலான பாவனைகளும் வெகுநேரம் மனதில் நின்றது.

தற்கொலை பாவமோ குற்றமோ அல்ல ஒரு விடுபடல் அவ்வளவுதான் என்பது மேலோட்டமான, குரூரமான சிந்தனையாகத் தோன்றினாலும் தற்கொலை செய்து கொண்டவனின் வலிகள் எவராலும் தீர்க்க முடியாதவையாகத்தான் இருக்க முடியும்.

31 comments:

குழலி / Kuzhali said...

//தற்கொலை பாவமோ குற்றமோ அல்ல ஒரு விடுபடல் அவ்வளவுதான் என்பது மேலோட்டமான, குரூரமான சிந்தனையாகத் தோன்றினாலும் தற்கொலை செய்து கொண்டவனின் வலிகள் எவராலும் தீர்க்க முடியாதவையாகத்தான் இருக்க முடியும்
//
எப்போதும் தற்கொலையை எதிர்த்து வந்தவனே என்ற போதும் என் மாணவ பருவத்தில் எழுதிய கவிதை(?) நினைவுக்கு வருகிறது.

தற்கொலை பாவமாம்!
சொன்னவனுக்கு தெரியுமா?
எனக்கு அது ஒரு வரமென்று

இன்னும் அப்போது எழுதிய மிகச்சரியான வரிகள் நினைவில் இல்லை, டைரியில் தேடினால் கிடைக்கும்

நட்புடன் ஜமால் said...

பதிவுலகத்திற்கு வந்த பின்

ஈரான் மற்றும் கொரியன் படித்தின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்படுகின்றது.

தங்களை போன்றோர் விமர்சணங்கள் இன்னும் அதனை அதிகப்படுத்துகின்றது.

-----------------


[[தற்கொலை செய்து கொண்டவனின் வலிகள் எவராலும் தீர்க்க முடியாதவையாகத்தான் இருக்க முடியும்.]]

அவரை இழந்தவர்கள் வலியை பற்றியும் சொல்லிவிட இயலாது ...

மணிஜி said...

//(முதியோர் இல்லங்களில் மரணம் ஒரு அழையா விருந்தாளியைப் போல் எப்போதும் தங்கியிருக்கிறது)//

living too long is risky..இது இன்ஷூரன்ஸ் அடிப்படை பாடம்.
முதியோர் இல்லங்களில் இருப்பவர்கள்
மறக்கப்பட்டவர்கள்..மரணம் அவர்களுக்கு விடுதலை..
படம் பார்க்க ஆவல்...

நேசமித்ரன் said...

இந்தப் பதிவு இன்னும் கொஞ்சம் நீளாதா என்று தோன்றுகிறது அல்லது
மீதி சொற்களை அகழ்ந்து கொள்ளத் தூண்டுகிறது எனக்குள்

குப்பன்.யாஹூ said...

wow thanks for sharing, will try to watch this film.

குப்பன்.யாஹூ said...

இப்பொழுது எல்லாம் இண்டர்நெட்டில் சினிமா ஒரு விண்டோ, கூடவே யாஹூ சாட், தமிழிச் ப்லோக், கலந்து பார்ப்பதால் , எனக்கு உங்கள் அளவு சினிமாவில் ஈடுபாடு வருவது இல்லை.

சமீபத்தில் மகா நதி, பருத்தி வீரன் போன்ற சினிமாக்கள் கூட ஒரு விண்டோவ்வில் பார்க்கும் பொழுது தீவிரம், ஈடுபாடு இல்லாமல் சாமானியமாக செல்கிறது.

சமீபாத்திய காமெடி, வேலு பிரபாகரனின் காதல் கதை, டவுன் லோஅது செய்த முதல் கோப்பு பார்க்கவே எனக்கு 3 நாட்கள் பிடித்தது. கதையோடு என்னால் ஒட்டவே முடிய வில்லை.

சக பதிவர்கள் சொல்வடர்க்காக கடும் முயற்சி எடுத்து பார்த்து கொண்டு இருக்கிறேன் அந்த படத்தை.

இளவட்டம் said...

/// குரூரமான சிந்தனையாகத் தோன்றினாலும் தற்கொலை செய்து கொண்டவனின் வலிகள் எவராலும் தீர்க்க முடியாதவையாகத்தான் இருக்க முடியும்.///

நிதர்சனமான உண்மை! படம் பார்த்துட்டு சொல்றேன் பாஸ்....

anujanya said...

படத்தின் களம் மிக வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும், வலியுடனும் இருக்கும் போல இருக்கு. நீங்க பதிவில் போட்டிருக்கும் புகைப்படக்காரரின் முகத்தில் பிரதானமாக அப்பியிருக்கும் சோகம், இழப்பு, அதையும் தாண்டிய ஏதோ (மரணம் பற்றிய சிறு ரகசியம் புரிந்ததாகவும் இருக்கலாம்) என்று எல்லாமும் இருக்கு.

இந்தப் படங்களை எங்கே, எப்படி, எந்த மாதிரித் தருணங்களில் பார்க்கிறீர்கள் அய்ஸ்?

அனுஜன்யா

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஒரு படத்தை இவ்வளவு அழகாக எழுத முடியுமா? அதுவும் உங்கள் எண்ணங்களுடன் எழுதிய விதம் அருமை..

ரௌத்ரன் said...

இப்படம் எனக்கு மிக மிக பிடித்த ஒன்று...சவ குழியில் படுத்து வெளியை வெறிக்கும் அந்த கண்களும்,மேகங்களிடையே மறையும் நிலவுமாக அந்த இறுதி காட்சி அப்படியே உறைந்து போய்விட்டது மனதில்...(மழை மூடுவதாக எழுதியிருக்கிறீர்கள்,ஸ்தம்பித்து கிடந்திருக்க கூடும் நான்,மழை மூடியிருந்தது என் கண்களில்,மறுபடியும் பார்க்க வேண்டும்)....

இவரது 10 என்ற மற்றொரு படம் இருக்கிறது...ஒரு சிறுவன் பேசுவதயே 20 நிமிடங்கள் காட்டியிருப்பார்...எப்பே...இந்தாளுக்கு இருக்கும் நெஞ்சழுத்தம் யாருக்கும் இருக்காது...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க அய்யனார்...

குசும்பன் said...

மேலே உட்காந்துக்கிட்டு ”அங்க ” வெச்சுக்கிட்டு ஒரு பொண்ணு வீனை வாசிச்சுக்கிட்டு இருந்துச்சு அந்த பொண்ணை இப்ப கானும்! தனிமையின் இசைக்கு அந்த பொண்ணு செம பிட்டா இருந்துச்சு, அத பாக்க வந்தா அந்த பொண்ணு படத்தை தூக்கிட்டீயே ராசா!

வால்பையன் said...

நல்ல விமர்சனம்

the story of sex adict பார்த்தாச்சா

லேகா said...

அய்யனார்,

மரணம் குறித்து அதிகமாய் நீங்கள் பேசி தான் கேட்டு இருக்கின்றேன்!!இந்த பதிவு அருமை...

// பிரபஞ்சத்தின் அதி ரகசியங்களில் ஒன்றான மரணத்தைப் பற்றிப் பேசவே, கேட்கவோ எனக்கு எப்போதும் சலிப்பதில்லை.//

:-))

Dream Tiger said...

Thanks for sharing. The same actor had acted so well in 'Kite Runner' movie as well. You can see the movie, just for his acting itself.

குப்பன்.யாஹூ said...

குசும்பன் இப்போ டிஸ்ப்ளே படம் ஒரு பொட்டல் மரம்.

இலைகள் எல்லாம் உதிர்ந்து verumai நிற்கிறது. ஒருவேளை மரணம் பற்றி பதிவின் சிம்பாலிக் டச்சிங்கா அய்யனார்.

geethappriyan said...

நல்ல பகிர்வு நண்பர் அய்யனார்.
இரானிய படங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு உழைப்பு,தரம் ?
நல்ல இலக்கியம், இசையையும் கொண்டுள்ளதே?
நேரில் பார்த்தால் வாங்கிக் கொள்கிறேன்.
இந்த மனிதர் தானே கைட் ரன்னரில் பாபாவாக வந்தவர்.
wonderful actor
saw fargo
worthy watch
cheers

MSK / Saravana said...

//தனிமனிதனின் இழப்பென்பது நட்பு, கடவுள், மனிதம், போதனை, அறம் என பிற எந்த ஒன்றினாலும் ஈடு செய்து விட முடியாதது. இழப்பு எப்போதும் இழப்பாகத்தான் இருக்கிறது.//

தல, என் மனதின் உணர்வுகளை, என்னால் சொற்களால் விவரிக்க முடிவதில்லை. ஆனால் நீங்கள் அதை சரியாக சொற்கள் கொண்டு எழுதி விடுகிறீர்கள். உங்கள் எழுத்துக்களை படித்து கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. இந்த பதிவு இன்னும் நீளமாக இருக்கணும் போல இருக்கிறது. எனக்கு இப்போதெல்லாம் எழுதவே தோன்றுவதில்லை. அதான் நீங்க எழுதறீங்களே.

தினமும் ஒரு பதிவு, எதை பற்றியாவது நீங்க எழுதிகிட்டே இருக்கணும் என்பது எனது பேராசை.

MSK / Saravana said...

திரைப்படம் பற்றிய பகிர்வுக்கு நன்றி. கூடிய சீக்கிரம் பார்த்துவிடுகிறேன்..
:)

MSK / Saravana said...

தல header image 970px ஆக இருந்தா சரியா பொருந்தும்.

MSK / Saravana said...

கடந்த header image மிக கச்சிதமான ஒன்று என்றாலும், அலுவலகத்தில் தளத்தை பார்ப்பதில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது.

யாத்ரா said...

மரணம் தற்கொலை குறித்த உரையாடல்கள் என்னையும் வெகுவாய் ஈர்ப்பவை, படத்தை தேடி அவசியம் பார்க்க வேண்டும், பகிர்வுக்கு மிக்க நன்றி.

seethag said...

Some thots on suicide. for many reasons i can never condone suicide in certain circumstances.
Just the other day when i was talking to some one about how sylyia platt and athmanam are revered almost as heroes coz of their tragedy, it occured to me , suicide is glamorous when certain people do it.Sorrow is glorified or any story with sad ending is considered more realistic than a happy ending. However what about the epic ramayana. Almost all the characters are miserable and infact seetha commits suicide. but do those characters sound attractive?
Rama sounds like a loser ,doesnt he?more so when mr.mu.ka lampoons him.'Sylvia platt,athmanam, matrum ramayanam'sounds funny?

Living is hell at times, and those that are left behind in a suicide live a life that is indescribable.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வெகு நாட்களுக்குப்பிறகு ஒரு படம் பார்த்தே ஆகவேண்டும் என்ற உணர்வை தந்துள்ளது தங்கள் பதிவு... ஒருவேளை படத்தின் களமும் கருவும் காரணமாயிருக்கலாமோ... அதிகமாய் வசீகரிக்கும் நிகழ்வுகளில், வார்த்தைகளில் மரணத்திற்கே வாய்புக்கள் அதிகம் இல்லையா...
நன்றி அய்யனார்

கிருத்திகா ஸ்ரீதர் said...

அப்புறம் புது வீடு நல்லாருக்கு.. ஆழ் நீல நிற வர்ணம் எப்போதும் வசீகரிக்கத்தான் செய்கிறது.

Ayyanar Viswanath said...

பழைய டைரிக்களை பத்திரமாக வைத்திருக்கிறீர்களா? :)
பகிர்வுக்கு நன்றி குழலி

ஜமால் நன்றி

தண்டோரா நன்றி

நன்றி நேசமித்ரன்

குப்பன்.யாகூ & ராம்ஜி.யாகூ பின்னூட்டங்களுக்கு நன்றி

இளவட்டம் நன்றி

அனுஜன்யா
ஆந்தை அல்லது கோட்டான் போல விழித்திருக்கும் இரவுகளில்தாம் :)

நன்றி செந்தில்வேலன்

Ayyanar Viswanath said...

ரெளத்ரன்
அப்பாஸ் பெரிய நெஞ்சழுத்தக்காரர்தான் :)

மழை மூடுவதா காட்சி இருக்காது மின்னல் ஒளில மழை அவர் முகத்துல இறங்குறது தெரியும்.விடிந்ததும் சேறும் சகதியுமான அந்த பாதைல இராணுவ வீரர்கள் பயிற்சிக்காக ஓடுவாங்க..திடீர்னு எங்கிருந்தோ அப்பாஸும் கேமிரா மேனும் எந்திரிப்பாங்க :)

குசும்பர்ர்ர்ர்ர் உன்ன மாதிரி ஆளுங்க வெறிக்க ஆரம்பிச்சதால தூக்கிட்டேன் :)

இன்னும் இல்லை வால்

Ayyanar Viswanath said...

நன்றி லேகா :)

Dream tiger
கைட் ரன்னர் படத்தில் பாபாவாக நடித்திருப்பதும் இவர்தான்

பகிர்வுக்கு நன்றி கார்த்திக்

சரவணக்குமார்
தொடர்ச்சியான விருப்பங்களுக்கு நன்றி.இமேஜை சரியாக பொருத்திவிடப் பார்க்கிறேன் :)

நன்றி யாத்ரா

Ayyanar Viswanath said...

சீதா வசீகர மரணங்கள் குறித்தான உங்களின் பகிர்வுகள் முக்கியமானவை வாழ்தலின் துயரங்களிலிருந்து விடுபடுதலை நாம் கொண்டாடுவது கூட ஒரு வகையில் குரூரம்தான் ஆனாலும் சில்வியா பிளாத்,ஆத்மநாம்,கோபி கிருஷ்ணன் போன்றோரின் மரணங்கள் ஒரு விடுதலையை பறைசாற்றுகின்றன என்பதை நம்மால் மறுக்கவியலாது.சீதாவின் தற்கொலையை நீங்கள் அணுகியிருக்கும் கோணம் மிக நன்று.

கிருத்திகா
இந்தப் படத்தை தேடிப் பிடித்து பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.நன்றி.

nagai said...

எல்லோருக்கும் இந்த எண்ணம் ஓரு மூலையில் இருக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

நல்ல பகிர்வுக்கு நன்றி அய்யனார்.

சிலாகிக்கிற எழுத்து.

KARTHIK said...

ஒரு வருசம் முன்னாடி பாத்தது ஏனோ இவர்படங்கள்ல அவ்வளவு ஈர்ப்பு ஏற்ப்படலை.
உங்க பதிவு மறுபடியும் இந்த படத்த பாக்க தூண்டுது.
பகிர்வுக்கு நன்றி அய்ஸ்.

Featured Post

test

 test