Tuesday, January 6, 2009

மிடில் க்ளாஸ் கேனயன்

"யோவ் வாராவாரம் சரக்கடிக்கிறியா?"
"இல்லடா.. நிறுத்தி மாசக்கணக்காவுது"
"தம்மு"
"அதையும்தான்"
"அடப்பாவி!.. சரி ஆபிசுக்கு சோத்து மூட்ட கொண்டு போறியா?"
"ஆமாம் "
"என்ன செலவு பன்றோம்னு எழுதி வைக்கிறியா?"
"ஆமாண்டா"
"அப்ப நீ மிடில் க்ளாஸ் கேனயன் தான்யா"
"போடாங்க்க்க்க்…"

கதிரின் இந்த மதிப்பீடு சிறிது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.நான் ஒன்றும் பெரிய்ய கலகக்காரனோ, புரட்சிப் பகுத்தறிவு பாவலனோ இல்லையெனினும் சராசரி முத்திரைகள்/அடையாளங்கள் மீது போதிய வெறுப்புள்ளவனாகத்தான் என்னை நம்பிக்கொண்டிருந்தேன்.இப்போது நாமும் சராசரி வட்டத்தினுக்குள் மாட்டிக்கொண்டோமா என்கிற பயமும்,கலக்கமும் சிறிது நேரம் நீடித்திருந்தது. பிரான்சில் moron என்பது மிகப்பெரிய கெட்ட வார்த்தை.French new wave திரைப்படங்களில் you moron என்றுதான் பெண்கள் ஆண்களைத் திட்டித் தொலைக்கிறார்கள். கதிர் கெக்கலித்துவிட்டுப் போனது சிறிது நேரம் காதிலேயே ஒலித்துக் கொண்டிடுந்தது.பின்பு yes I’m a moron.. typical… middle class… morrrrrronnnnnn!!!!!! என சத்தமாய் கத்தினேன்.சக அப்பாவி ஜீவனுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்ததை எந்த எதிரசைவும் இல்லாமலிருந்ததில் இருந்து புரிந்தது கொள்ள முடிந்தது.

சாரு, ஜெமோ பக்கங்களை நண்பர்கள் பரிந்துரைத்தாலொழிய எட்டிப் பார்ப்பதில்லை.எஸ்.ரா,நாகார்ச்சுனன்,பிரம்மராஜன் பக்கங்கள் மன நலத்திற்கு தீங்கிழைக்காதவைகளாய் இருப்பதால் பாதுகாப்பான வலை வாழ்வையும் வாழ்ந்து விட முடிகிறது.சுரேஷ் கண்ணன் பரிந்துரைத்த ஜெமோ வின் மத்தகம் குறுநாவல் ஒரு அத்தியாத்தினுக்கு மேல் கொட்டாவி விட வைத்தது. ஜெமோவை இனிமேல் என்னால் படிக்கவே முடியாதோ என்கிற எண்ணங்களும் எழுந்தன.இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு அடர்பனி நாளின் பின்னிரவில் படித்து முடித்த,ஏழாம் உலகம் நாவல் அனுபவம் நினைவில் வந்தது.ஷார்ஜா வந்தப் புதிதில் வார இறுதி இரவுகளை புத்தகங்களுக்காக ஒதுக்கியிருந்தேன்.ஒரு வியாழக்கிழமை இரவு பத்து மணி வாக்கில் துவங்கி, இரண்டு மணிக்கு ஏழாம் உலகத்தை முடித்தேன்.மிக அரூபமான கசப்புகளும், குரூரங்களும் என்னை ஆக்ரமிக்கத் துவங்கின.என் இயல்பு நிலை சுத்தமாய் தொலைந்து போய்,தூங்கவே முடியாத ஒரு நிலைக்குத்தில் உட்கார வைத்தது அந்த எழுத்து.சிகெரெட் பெட்டியும் பல்லை இளிக்கவே, நடுங்கும் மூன்று மணிக்குளிரில் அறை விட்டிறங்கி,எதிர்ச்சாலை கடந்து, இருபத்தி நான்கு மணி நேர மதீனாவில் சிகெரெட் வாங்கிப் புகைத்தேன்.அதைப் போன்றதொரு இரவை ஜெமோவால் எனக்கு இனிமேல் தரவே முடியாது என்பதுதான் உண்மை.

நான் கடவுள் பாடல்கள் திருவண்ணாமலை கிரி வல நினைவுகளைத் தூண்டின.மலை சுற்றும் பாதை,அண்ணாமலையார் கோவில்,இரமணாசிரமம் என எங்கும் ஒலிக்கும் பாடல்களை நினைவூட்டியது.பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் பாடலை நான் ஏற்கனவே இளையராஜா குரலில் கேட்டுள்ளேன் அல்லது அதே போன்றதொரு பாடலாகவும் இருக்கலாம்.படம் ஏழாம் உலகத்தின் தழுவலாய் இருக்கும்பட்சத்தில் தமிழில் நல்லதொரு முயற்சியாய் இருக்கக் கூடும்.தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை வணிக ரீதியிலான வெற்றி தோல்வியே ‘நல்ல’ ‘கெட்ட’ திரைப்படங்களைத் தீர்மானிக்கிறது.ஒரு படம் தோல்வியுற்றால் தயாரிப்பாளரை விட பார்வையாளன்தான் அதிகம் வருத்தப்படுகிறான்.பண முதலைகளான ஆதர்சப் புருசர்கள் திரைப்படங்கள் மூலமாக நட்டமடைவது ரசிகக் குஞ்சுகளின் வருத்தத்தை இன்னமும் அதிகரிக்க வைக்கிறது.”நாலு ‘செழித்த’ குத்து,ரெண்டு சுறுசுறு பன்ச் வைச்சா போதும் படம் மினிமம் கேரண்டி” ரீதியிலான வணிகக் ‘குறி ‘கள் எப்போது உட்சுருங்குமெனத் தெரியவில்லை. சினிமாவை, நம்மைத் தவிர்த்த உலகம் வெகு காலமாய் கலை வடிவமாகவும் அணுகிக் கொண்டிருக்கிறது என்பதை நம் பார்வையாளனின் புத்தியில் உறைக்கச் செய்ய எங்கிருந்தாவது கடவுளர்கள் முளைத்தெழட்டும்.

இஸ்லாம்,அராபிய இலக்கியம்,அராபிய வாழ்வு குறித்தான விரிவான பகிர்வுகளை கொண்ட சாருவின் தப்புத் தாளங்கள் எனக்குப் பிடித்தமான தொகுப்பு.அராபிய பயணி இபன் பதூத்தா குறித்தான பகிர்வுகள்,(சில குறிப்புகளை இந்த பக்கத்தில் முன்பு எழுதியிருந்தேன்)சார்லஸ் ப்யூக்கோவெஸ்கி பற்றிய பகிர்வுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.இந்த வருடத்தில் அராபிய இலக்கியத்தை படிக்க திட்டமிட்டிருக்கிறேன். சென்ற வருடத்தில் பார்த்த / பிடித்த திரைப்படங்கள்,புத்தகங்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். கோபி கிருஷ்ணன்,சம்பத் இருவரும் சென்ற வருடத்தில் மறக்க முடியாதவர்கள்.கோபியிடம் கண்ட இணக்கமும், உண்மைத் தன்மையும் வேறெங்கிலும்,வேறெதிலும் கண்டிராதது.கடந்த வருடத்தில் மூன்று சிறுகதைகள் நினைவின் அடுக்குகளில் தெளிவாய் படிந்தவையாகச் சொல்லலாம்.ஆதவன் தீட்சண்யாவின் இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை, எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன, இளங்கோவின் ஹேமா அக்கா.

இந்த வருட புத்தாண்டு நண்பர்களின் குடும்பத்தினரோடும் ஏராளமான குழந்தைகளின் உற்சாகக் கத்தல்களோடும் துவங்கியது.சென்ற வருட, அதற்கு முந்தைய வருடங்களின் துவக்கங்கள் தந்ததுபோல் அடுத்த நாள் அயர்ச்சிகள் ஏதும் இந்த வருடத்தில் இருக்க வில்லை.சடுதியில் மாறிப்போய்விட்ட வாழ்வின் வண்ணங்களில் கரைந்து போவதோடு, எல்லாவற்றையும் உள்ளிருந்தபடி, சலனமில்லாமல் பார்க்கும் ஒருவனையும் உயிர்ப்பாய் வைத்திருக்க மெனக்கெடுவதுதான் moron னின் அதிகபட்ச நகர்வாய் இருக்க முடியும்.

நெடுங்காலமாய் தொடர்பிலிருக்க விரும்பாத நண்பியொருத்தி தொலைபே(ஏ)சி என்னைக் கோழையென்றாள்.மேலும் அக்கோழைத்தனம் எனது இரத்தத்திலேயே கலந்திருப்பதாகவும் சொன்னாள்.நானொரு சமூகப் பிராணி என்பதால், எனது சமூகம் சக இனத்தவரின் பிணங்களைத் தின்று அரசியல் வயிறு வளர்க்கும் பூதங்களை கொண்டிருப்பதால், அவர்கள் பேசும் மொழியையே நானும் பேசுவதால், அவர்கள் வாழ்ந்துவரும் சூழலில் நான் வாழ்ந்திருப்பதால், இக்கோழைச் சமூகத்தின் இரத்தம் என்னுடம்பிலும் கலந்திருப்பதில் வியப்பு ஏதுமில்லையெனச் சொன்னேன்.மேலும் moronகள் அடிப்படையில் கோழைகள்.இதை அவளிடம் சொல்லவில்லை.
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...