Thursday, January 1, 2009

உரையாடலினி

உரையாடலினி என் எழுத்தினுக்கு முதல் வாசகி.என் காதல் கவிதைகளையும் எப்போதாவது எழுதும் குறிப்புகள் மாதிரியான வார்த்தைத் தோரணங்களையும் மட்டுமே ரசிப்பவள்.கருமம் என்ற வார்த்தையைப் படிக்க நேர்ந்துவிட்டாலே தலையடித்துக்கொள்வாள்.இப்படிப்பட்ட மகோன்னதமான பெண்ணுடன் வார இறுதிகளில் caribou cafe வில் அமர்ந்தபடி Caribbean coffee குடிக்க நேர்வது என்னுடைய அதி உன்னத வாழ்வியலில் நிகழ்ந்த மிக அற்புத நிகழ்வாகத்தான் இருக்க முடியும்.இந்த கரிபு கஃபே எனக்கு மிகவும் பிடித்தமான இடம்.கார்னீஷை ஒட்டியபடி இருக்கும் கஃபேவும்,அப்டவுன் மிட்ரிஃப் லிருக்கும் கஃபேவும் நான் வடிவமைத்தது.இதற்கு முன்பு நான் பணிபுரிந்த நிறுவனத்தின் சார்பில் நான் அப்பணியை செய்து முடித்திருந்தேன்.மேசைகளுக்கு டார்க் மகாகனி ஃபினிஷிங்கைக் கொடுத்திருந்தேன்.வளைவான குட்டி நாற்காலிகளை பீச் உட்டில் செய்தேன்.நாற்காலியின் கால்களில் சித்திர வேலைப்பாடுகள் கொண்ட கார்விங்க் பினிஷ் இருக்கும்.இந்தக் கார்விங்கை மட்டும் துலிப் உட்டில் செய்து நாற்காலியோடு இணைத்திருந்தேன்.பீச் உட்டிற்கு டார்க் செர்ரி பினிஷ் எத்தனை வினோதமானது!ஆனாலும் நான் அதைத்தான் வடிவமைத்தேன்.புதுமையாக இருந்தது.பனி இருளோடு கலந்தபடி மெல்ல கடலின் கிளைப்பாகத்தை மூடும் அற்புதத்தை மிகக் கசப்பான காபிக்கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட குழம்பியோடு பார்த்துக்கொண்டிருப்பேன்.எத்தகைய குளிரிலும் ஐஸ்கிரீமை கடித்துத் திண்ணும் வினோதியவள்.அவள் தின்பதைப் பார்க்கையில் எனக்குப் பல் கூசும்.முகத்தை சுருக்கியபடி "எப்படி இத திங்குற?" என்றால் அவளும் என் முகத்தை இமிடேட் செய்து "எப்படி இத குடிக்கிற?" என்பாள்.

உரையாடலினி குறும்புகளால் நிறைந்தவள்.பெரிய்ய்ய்ய்யய கண்களைக் கொண்டவள்.நல்லக் கறுப்பு நிறம்.அலையலையலையலையாய் கூந்தலவளுக்கு.நீ ஆப்பிரிக்க தேசத்தவளா? என முன்பின் அறிமுகமில்லாதவர்கள் கேட்டாள் ஆமாமென்பாள்.நானும் அவளுக்கு அப்படித்தான் அறிமுகமானேன்.இதே கார்னிஷ் கரிபு கஃபேவில்தான் அவளைப் பார்த்தேன்.பத்து நிமிடம் தொடர்ச்சியாய் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.பின்பு எவ்வித தயக்கமும் இல்லாமல் எழுந்துபோய் ஆங்கிலத்தில் உரையாடலைத் துவங்கினேன்.

"நீங்கள் ஆப்பிரிக்க தேசத்தை சார்ந்தவரா?"
"ஆம்.அதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா?"
"இல்லை நீங்கள் அசாதரண அழகாய் இருக்கிறீர்கள்.என்னால் உங்களிடம் பேசாமல் கடந்து போக முடியவில்லை.நான் பேசும் மொழியில் தேவதை எனும் சொல்லால் உன் போன்ற அழகுடையவர்களை குறிப்பிடுவோம்."
"அட த்தூ! பேமானி!! யார்கிட்ட கத உடுற? கருப்பா இருந்தா தேவதன்னு நம்ம ஊர் பசங்க சொல்லிட கில்லிட போறானுங்க.. கருவாச்சினுதான் கூப்டுவானுங்க" என சிரிக்காமல் கண்ணிமைக்காமல் சொன்னபோது நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.
"அட! நீங்க தமிழா?"
"நார்த் மெட்ராசுய்யா நானு.. வான்ரபேட்" எனச் சத்தமாய் சிரித்தாள்.
நான் சிறிது நேரம் திகைத்து நின்றேன்.பின் மெல்ல அவளருகில் சென்று அவளை இறுக்கமாய் அணைத்துக்கொண்டேன்.
"உனக்காகத்தான் இத்தனை வருட தவம்.ஒழுங்காய் காதலித்து விடு!".
என் அணைப்பிலிருந்து விலகியபடி சொன்னாள்
"சாரி! குண்டு பையா எனக்கு கல்யாணமாகிடுச்சி."
"அதுனால என்ன?என்னையும் காதலி"
"செருப்பு பிஞ்சிடும். நான் சீதையோட கடேசி வாரிசு.. நீ வேற ஆள பாரு.."
"ஒரே ஒரு தப்பு மட்டும் பண்ணிட்டு தீக்குளிச்சிக்கோ.ப்ளீஸ்! என்ன காதலி"
"ம்ம்ம்..உன்ன காதலிக்க உன்கிட்ட என்ன தகுதி இருக்கு?"
"நான் கவிதலாம் எழுதுவேன்.."
"அட! அப்டியா!! அப்ப ஓகே.. ஐ லவ் யூ!!"
இருவரும் சத்தமாய் சிரிக்கத் துவங்கியதில் நான் வடிவமைத்திருந்த மேசைகள் நொருங்கும் தன்மைக்கு சமீபமாய் சென்றதை என்னால் அக்கணத்தில் உணரமுடிந்தது.

அதற்குப் பின் அவளுக்கு உரையாடலினி எனப் பெயர் வைத்தேன்.உடல் ரீதியிலான தொடர்புகளுக்கு அவளின் சீதை பிம்பங்கள் தடையாய் இருந்ததால் அத்தடையை இருவருமே ஏற்றுக்கொண்டோம்.என் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்ததும் என்னை அவளுக்கு இன்னும் பிடித்துப் போனது.அவளுக்கு சுமாரான இலக்கிய ஆர்வமும் இருந்தது.ஹவுஸ் ஆஃப் சாண்ட் அண்ட் ஃபோக் மாதிரியான படங்களுக்கு தேம்பித் தேம்பி அழும் மென்மையான மனம் கொண்டவள்.அவள் சிரிக்காமலிருந்த நொடிகள் வெகு அபூர்வம்.ஒரு விடுமுறை நாளின் அதிகாலையில் தொலைபேசியில் கூப்பிட்டாள்."ரெடியா இரு கோபர்கான் போறோம்!" என தொடர்பைத் துண்டித்தாள்.இங்குள்ள இன்னொரு எமிரேட்சிலிருக்கிறது அக்கடற்கரை.கிட்டத்தட்ட கோவா கடற்கரைக்கு நிகரானது.லக்சஸ் எடுத்து வந்திருந்தாள்.நான் சில பியர் போத்தல்களை எடுத்துக்கொண்டேன்.பெப்ஸி பாட்டிலில் சிறிது பாலண்டைனை அவளுக்கு தெரியாமல் கலந்துகொண்டேன்.

"உனக்கு கார்ல வேகமா போக பிடிக்குமா அய்யனார்"
"ம்ம்..பிடிக்கும்"
"200 ல போகவா"
"எக்கச்செக்கமா ஃபைன் கட்ட வேண்டி வரும்."
"பரவால்ல உனக்கு என் ட்ரைவிங்க் ஸ்கில்ல எப்படி காமிக்க"
"ஆத்தா 120 தாண்டாதே வேணும்னா ஒனக்கு கார்மங்கைன்னு பட்டம் கொடுக்கிறேன்"
"போர்..லைஃப் னா த்ரில் வேணும்டா"
"தனியா போய் செத்து தொல..என்ன கொன்னுடாதே"
"நேத்து நீ அனுப்பின பாட்ட கேட்டேன்..செவ்வந்தி பூக்களில் செய்த வீடு..செம பாட்டுடா..இதான் மேஜிகல் ரியலிசம் இல்ல"
"எது?"
"இந்த பாட்டு.."
"நீ எம்.ஜி சுரேஷ் எதாச்சும் படிச்சியா?"
"இல்லையே ஏன்?"
"அவன மாதிரியே பேசுற"
"போடா வெண்ண.. போர்ஹேஸ் எழுதினாதான் மாஜிக்கல் ரியலிசமா என்ன?வாலியோ வைரமுத்தோ எழுதினா கூட அதே இசம்தான்"
"நீ ஆள விடு.. நான் இந்த ஆட்டத்துக்கு வரல"
"அப்ப உன்ன பொறுத்தவர எது மேஜிக்கல் ரியலிசம்?"
"கருத்த பெண்களுக்கு கனத்த முலைகள் இருப்பதுதான் மே.ரியலிசம்"
"தூ கருமம் புடிச்சவனே! பின்னால போய் ஒக்காரு.இந்த பனியன் போடும்போதே நெனச்சேன்"

நண்பகல் பனிரெண்டு மணிக்கு அக்கடற்கரையைச் சென்றடைந்தோம்.கடலினுக்கு எதிராய் அமர்ந்தபடி அவளின் கண்களின் வழியாய் நீலம் வரைந்திருந்த கடலினைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.நொடிக்கொருதரம் இமைகளினை மூடிப் போக்குக் காட்டிக்கொண்டிருந்தவளின் முகத்தில் சிதறிய அலைத்துளிகள் வந்தமர்ந்தன.பொறுத்திராத என் கிளர்வுகளின் உத்வேகத்தில் அவளை அப்படியே அள்ளி கடலில் வீசினேன்.உரையாடலினி... உரையாடலினி.. உரையாடலினி..இவளுக்காக உயிரையும் தரலாம். உரையாடலினி... உரையாடலினி...

ஓர் இரவு முழுவதும் அவளோடு இருக்க விரும்பினேன்.நெடுநாள் காத்திருப்புகளுக்குப் பிறகு சரியென்றாள்.முன்னிரவில் டெய்ராவின் குறுகலான,நெரிசலான தெருக்களில் சுற்றியலைந்தோம். ஆப்பிரிக்கர்கள்,பாகிஸ்தானியர்கள்,தமிழர்கள், மலையாளிகள் இன்னும் பல லட்ச விதவிதமான முகக் கூட்டங்களுக்கிடையிலும் அவள் தனித்துத் தெரிந்தாள்.வீதியோர நாற்காலிகளில் அமர்ந்தபடி ஷவராமாவும் கட்டன் சாயாவும் பருகினோம்.பெரும்பாலும் ஆப்பிரிக்கர்கள் மட்டுமே புகைக்கும் இடுக்கும் சிடுக்குமான புகைவிடுதிகளில் ஹூக்கா புகைத்தோம்.எனக்குக் கமறிக்கொண்டு வந்தது.அவள் நிதானமாய் உள்ளிழுத்து, உதடுகளைக் குவித்து மிக நிதானமாய் புகையை வெளியேற்றினாள்.நளினங்களின் மொத்த உருவமவள்.இன்னொரு கூட்டமான மதுநடன விடுதிக்கு அழைத்துப் போனேன்.இந்த நகரத்திலிருக்கும் பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள் கூடும் இடமது. ஆப்பிரிக்க,சைன,பிலிப்பைன்ய தேசத்துப் பெண்களை பின்னிரவுத் துணைக்கு அழைத்துப் போகலாம்.மதுவை உறிஞ்சியபடி நிதானமாக பேரம் பேசலாம்.உன் இடமா? என் இடமா? என்பதில்தான் பேச்சு அதிக நேரம் நிலைகொண்டிருக்கும்.இவன் இடமென்றால் இவளும், இவள் இடமென்றால் இவனும் ஏமார்ந்துபோவார்கள்.பெரும்பாலான பேரங்களின் இழுபறியே இடச் சிக்கலாகத்தான் இருக்கும்.வெகு சுவாதீனமாய் அணைத்தபடி பேரம் பேசும் ஆண்களையும் பெண்களையும் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தாள்.அவர்கள் பேசுவதற்கு மிக அருகில் சென்று காது வைத்துக் கேட்டாள்.பின் என் பக்கமாய் திரும்பி வந்து என் தோளில் கைபோட்டு அணைத்தபடி
"வர்ரியா! ஜஸ்ட் ஆயிரம் திராம்தான் பட் என்னோட இடம் ஓகே?"
எனச் சொல்லி சத்தமாய் சிரித்தாள்.திடீரென ஹரே ராம்! ஹரே ராம்!! ஹரே கிருஷ்ணா! ஹரே ராம்! என்கிற இந்திப் பாடல் சத்தமாய் அதிரத் துவங்கியது.குடித்திருந்த பியர் கிறுகிறுக்கவே அவளை இழுத்துக்கொண்டு நடன மேடைக்கு ஓடினேன்.இருவரும் படு வேகமாய் நடனமாடினோம்.அவளுக்கு மூச்சு வாங்கியது.சற்று நின்று,மூச்சை உள்ளிழுத்து, ஆடிக்கொண்டிருந்த என்னை நிறுத்தும்படியாய் அழுத்தினாள்.வலதுபுறமாய் இருந்த இருள் மறைவிற்காய் இழுத்துப்போனாள்.சீதாப் பிராட்டி மன்னிப்பாளாக என முணுமுணுத்தபடி என் உதடுகளில் அழுத்தமாய் முத்தமிட்டாள்.
ஹரே ராம் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா ஹரே ராம்.
ஹரே ராம் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா ஹரே ராம்.
ஹரே ராம் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா ஹரே ராம்.
ஹரே ராம் ஹரே ராம் கிருஷ்ண கிருஷ்ணா ஹரே ராம்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் தொலைபேசி,அலுவலக நிமித்தமாய் தான்சானியா போவதாய் சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தாள்.நாளை வருகிறாளாம்.நாளையும் நான் அதே கார்னிஷ் கரிபு கஃபேவில் அமர்ந்திருப்பேன்.பின்னால் வந்து தலையில் லேசாய் தட்டுவாள்.எனக்குக் கோபம் தலைக்கேறும்.

"யார் நீங்க?"
"உன் உரையாடலினி"
"அப்படின்னா?"
"அப்படின்னா பூதம்"
"அலோ யார் நீங்க? என்ன வேணும் ஒங்களுக்கு?"
"ஏய் விளையாடாதே"
"நீங்க தப்பான ஆள்கிட்ட பேசுறீங்கன்னு நெனைக்கிறேன்"
"ஆமா நீ ரொம்ப மோசமானவன்"
"அட நெஜம்மாவே நீங்க தப்பான ஆள் கிட்ட பேசுறீங்க"
"ஆமாண்டா நீ தப்பான ராஸ்கல்தான்"
"கொஞ்சம் மரியாதையா பேசுங்க"
"உனக்கென்னடா மரியாத.. எரும"
"நான் போலிச கூப்டுவேன்"
அவள் சன்னமாய் அதிர்ந்தபடி "என்ன ஆச்சு ஒனக்கு?"
"நீங்க யார்னே தெரியாதுங்குறேன் திரும்ப திரும்ப பேசிட்டிருந்தா எப்படி?..ஐ திங்க் யூ ஆர் மிஸ்டேக்கன்"
அவள் முகம் வெளிறி வெளியில் நடப்பாள்.எனக்கு பரிச்சயமான அந்தக் கஃபேவின் குறுக்கில் நுழைந்து அவள் எதிரினில் போய் நிற்பேன்.கண்ணீர் துளிகள் தெறிக்க என்னை நிமிர்ந்து பார்ப்பாள்.நான் சுற்றம் மறந்து அவளை நெருங்கி அவளின்.. அவளின்.. அவளின் உதடுகளைக் கவ்விக் கொள்வேன்.
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...