Saturday, January 3, 2009

மார்க்சின் குழந்தைகளும் கோ-கோ கோலாவின் குழந்தைகளும்


Masculin, féminin (1966)

பவழமல்லி பூவீன்றவளுடனான அதிகாலை உரையாடல்களைப் படித்துவிட்டு அண்ணன் தொலைபேசினார்.கோடார்டின் Masculin féminin படத்தின் ஒரு காட்சி நினைவில் வந்து போனதாகச் சொன்னார்.நான் அந்தத் திரைப்படத்தைப் பார்த்திருக்கவில்லை.சென்ற வாரத்தில் அத்திரைப்படம் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தேன்.கிட்டத்தட்ட இத்திரைப்படக் கதாநாயகனின் மனநிலையைத்தான் அந்த உரையாடலில் நிகழ்த்திக் காட்ட விரும்பினேன்.காபிக் கடையின் கதவினுக்குச் சமீபமாய் அமர்ந்தபடி,உள்ளே நுழைந்த பின்பு கதவை சாத்த மறந்தவர்களின் பணியை நினைவூட்டியபடி,அறிமுகமில்லாத பெண்ணொருத்தியுடன் paul தொடர்ச்சியாய் பேசியபடி இருக்கிறான். அரசியல்,காமம்,கலவியென அவளிடம் விடாது (கழிவறையிலும் பின் தொடர்ந்து பேசுவான்)பேசியபடியே இருக்கும் அவனுடைய கதாபாத்திரம் வினோதமானது. பிரான்சின் புதிய அலை திரைப்பட காலகட்டத்தில் வெளிவந்த படமிது. இதே காலகட்டத்தில் (1959- 1967) வெளிவந்த இவரின் பிற படங்களான Bande à part (Band of Outsiders) மற்றும் À bout de souffle (Breathless) திரைப்படங்களிலும் வியாபித்திருக்கும் 'இளமை' இத்திரைப்படத்திலும் மிக நேர்த்தியாய் வந்திருந்தது.

கோடார்டின் திரைப்படங்கள் மிக அழுத்தமான அரசியல் கூறுணர்வு கொண்டவை.இவர் அடிப்படையில் ஒரு மார்க்சிஸ்ட்.The man of future என சக கலைஞர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்.ஒரு கதைக்கு ஆரம்பம், மத்தி்,முடிவு இருக்கவேண்டும்தான் ஆனால் அதே வரிசையில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்கிற நம்பிக்கைகளை இவரது திரைப்படத்தில் நிகழ்த்திக் காட்டியவர்.பிரான்சின் புதிய அலை காலகட்டத்தில் இளைஞர்களை மட்டுமே குறி வைத்து தொடர்ச்சியாய் படமெடுத்தவர். இத்திரைப்படம் மார்க்சியத்திற்கும் அமெரிக்க நுகர்வுக் கலாச்சாரத்திற்கும் இடையிலான உரையாடல்களை நிகழ்த்திக் காட்டுகிறது.

வியட்நாம் போருக்கெதிராக போஸ்டர்கள் ஒட்டுதல்,அமெரிக்க கொடி தாங்கிய கார்களில் பெயிண்டால் எழுதுதல்,யூனியன் போராட்டங்கள் என இயங்கும் Paul, நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கிய (தொடர்ச்சியான ஒப்பணைகள்/பெப்சி) பாப் பாடகியான மேடலைன் மீது காதல் வயப்படுகிறான்.Paul மற்றும் அவன் நண்பன், மேடலைன் மற்றும் அவளது இரண்டு அறைத்தோழிகள் இந்த அய்வரை சுற்றி நிகழும் உரையாடல்களே இத்திரைப்படம்.பிரான்சின் ஒட்டு மொத்த வாழ்வும் இவர்களை சுற்றி நிகழும் சம்பவங்களாக காட்சிப் படுத்தப்படுகிறது.படம் முழுவதும் காபிக் கடைகளும், உணவு விடுதியும், மக்கள் உலவும் வீதிகளாக மட்டுமே இருக்கின்றன.

காபிக் கடையில் அமர்ந்தபடி புத்தகங்களை(போர்னோ) சத்தமாய் வாசிப்பவர்கள், ஹூக்கர்கள், ஹோமோசெக்சுவல்கள், முலைகளை தொடாமல் பார்க்க நூறு ஃப்ராங்க் கேட்கும் பெண், இருப்பிடம் இல்லாது வாழ நேரிடும் அவலங்களென புரட்சிக் காலகட்டத்தின் பல்வேறு வாழ்வுமுறைகள் sub-text களாக படம் முழுதும் சிதறியிருக்கிறது.இயல்பு வாழ்வைச் சுற்றிலும் பரவியிருக்கும் வன்முறைகளையும் படம் சுட்டத் தவறவில்லை.மண விலக்கிற்குப் பிறகு குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்கிற பிரச்சினையில் ஒரு பெண் தன் கணவனை காபிக் கடைக்கு வெளியில் துப்பாக்கியால் சுடுகிறாள்.வியட்நாமின் அமைதிக்காக ஒருவன் தன் உடலுக்கு தீ வைத்துக் கொள்கிறான். அதற்கு முன்பாக மனைவியிடம் குழந்தைகளுக்கு தன்னுடைய முத்தத்தை வழங்கிவிடுமாறு சொல்லியப்டி paul இடம் தீப்பெட்டி வாங்கிப்போகிறான். நுகர்வுக் கலாச்சாரத்தினூடாய் உள்புகும் வன்முறைகளையும் படம் பதிவு செய்திருக்கிறது.

கோடார்டின் எள்ளல்கள்,கிண்டல்கள் தனித்துவமானவை.மேடலைன், அவள் அறைத்தோழி மற்றும் paul மூவரும் ஒரே படுக்கையில் உறங்கியபடி பின்புறத்தினுக்கு சரியான சொல் அல்லது வெவ்வேறு சொற்களைத் தேடிப்பிடிக்கிறார்கள்.சமூக வாழ்வினை பதிவு செய்யும் பணிக்காக தொடர்ச்சியாய் பெண்களிடம் கேள்விகளை வைக்கிறான். அதிகாரத்தின் முன் கேள்விகளை எழுப்புவதுதானே கலகத்தின் அடையாளம்.

நுண்ணுனர்வு, பிடித்தமான வாழ்க்கை, அரசியல், கலை, கலகம், கவிழ்ப்பு என்பதெல்லாம் தேய்ந்த பழைய ரெக்கார்டுகளாகிவிட்டனவோ என்கிற சந்தேகங்கள் இந்தப் பொழுதை நிறைக்கத் துவங்குகின்றன.மனிதனும், உலகமும் யந்திரத்தின் வடிவத்தை எப்போதோ அடைந்து விட்டிருக்கிறோமெனத்தான் தோன்றுகிறது.இன்னமும் பிரான்சின் காபிக் கடைகளில் சத்தமாய் வாசிக்கிறார்களாவெனத் தெரியவில்லை. பெருகிய மீடியாக்கள், தீவிர வலது சாரித் தன்மையை மறைமுகமாகவோ, நேரடியாகவோ நம் மீது திணிக்கத் துவங்கிவிட்டன என வளர்மதி எப்போதோ குறிப்பிட்டிருந்தார்.அதைத்தான் நினைத்துக் கொள்கிறேன்.

5 comments:

Anonymous said...

i watched this movie long time ago,but now only i realized the values of the movie.

thank you for your review and keep writing

- Raji

MSK / Saravana said...

அசத்தல் அய்யனார்.. நிச்சயம் பார்த்து விட்டு சொல்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி..

MSK / Saravana said...

நீங்கள் குறிப்பிட்ட இயக்குனர் Tinto Brass-இன் Cosi fu tutte பார்த்தேன் அய்யனார்.. மற்றும் Piano Teacher..

//சதை அசைவுகள் மட்டும்தான் காமம்னு நினைக்கிறவங்களுக்கு சுயபுயணர்ச்சிக்கு தேவையான பிம்பங்களுக்காக தேடி அலைபவங்களுக்கு அது சரியா படும்.எனக்கு அப்படி இல்ல.நான் காமத்திலிருக்க அதிகாரத்த களைய விரும்புறேன்.நுழைப்புகள் தவிர்த்து உச்சத்திற்கான மாற்றுக்களைத் தேடறேன்னும் சொல்லிக்கலாம்.நீ பியானோ டீச்சர் னு ஒரு படம் பார்.மாற்று உச்சம் பத்திலாம் பிறகு பேசலாம்.உங்கிட்ட விலாவரியா சொல்லி புரிய வைக்க என்னால முடியாது.நீ பார்த்திட்டு சொல்லு அப்புறம் பேசலாம்....//

இப்போ சொல்லுங்க..

MSK / Saravana said...

Ingmar Begman-இன் The Silence, Wild Strawberries இந்த வார இறுதியில் பார்த்து விடுவேன்.. கையிலிருக்கிறது.. :)

anujanya said...

உங்கள் கடைசிப் பத்தி நிறைய சிந்திக்க வைக்கிறது. உண்மைதான், நீங்கள் கூறியவைகள் தேய்ந்த தகடுகள்போல் ஆகிவிட்டன. கலகம், கவிழ்ப்பு, நுண்ணுணர்வு, அரசியல், கலை எல்லாம் போதை வஸ்துக்கள். பசியைத் தீர்க்காது என்ற முடிவுக்கு பெரும்பான்மை வருவதற்கு அதிகாரம் எப்போதோ முனையத் துவங்கி விட்டது.

செயலாற்றும் விதத்தில், இடது சாரி வெளிச்சம்/ஒளி என்றால், அதிகாரம் இருள் எனலாம். நிறைய முனைப்பு தேவைப்படுகிறது ஒளியைப் பாய்ச்ச. இருள் தானாகத் தழுவி, எங்கும் வியாபிக்கிறது, எவ்வித தீவிர முயற்சியின்றியும். Like a Default mode. இதனை ஒரு கலக ஆதரவாளன் தொனியிலோ, வலது சாரி எதிர்ப்பாளன் என்ற தொனியிலோ சொல்லவில்லை. ஒரு பார்வையாளன் என்ற கோணத்தில், இவ்விரு சக்திகள் செயல்படும் விதங்கள் எனக்கு இவ்வாறு தோன்றுகின்றதைச் சொல்ல வந்தேன்.

அனுஜன்யா

Featured Post

test

 test