Saturday, December 20, 2008

வாசகனின் நாட்குறிப்பிலிருந்து...

19.02.2012 : ஞாயிறு: இரவு 8.30
இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும் ஏற்பட்ட உணர்வுகளை வினோதம் என்றுதான் சொல்ல வேண்டும்.வினோதங்களின் திகைப்புகளிலிருந்து விடுபட வெகுநேரம் பிடித்தது.

பயம்.. பயம்... பயம்... இந்த பயம் என்பதை திரும்பத் திரும்பத் திரும்பத் த்பம்ருதி சொல்கையில் அல்லது கத்துகையில் பயம் பாசியைபோல் இழை இழையாகப் படரத் துவங்குகிறது. அடிவயிற்றிலா ஆரம்பிக்கிறது பயம்?இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். யாருக்குத் தெரியும்? ஆனால் ஏற்படும் உணர்வினுக்குப் பெயர் பயம்தான்.இப்போதெல்லாம் அதிகமாக பயப்படுகிறேன்.காரணமேயில்லாமல்;பயப்பட வேண்டிய எந்த நிகழ்வுகளுமே நடந்துவிடாதபோதும் கூட என்னால் பயப்படாமல் இருக்கமுடியவில்லை....இதனால்தான் பயம் வருகிறது என்றெல்லாம் இல்லை.எல்லாமும் பய நிலைக்குத் தள்ளுகிறது.சென்ற வாரத்தில் தூக்கம் வராத பின்னிரவில் வாழ்வு மிக மகிழ்ச்சியாய் இருக்கிறதெனக் கவலைப்பட்டேன்.அடுத்தநாள் கிட்டத் தட்ட முன் தின இரவின் அதேப்பொழுதில் வாழ்வு எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறதென மிக அதிகமாய் வருந்தினேன்.இது மனநலம் தொடர்புடைய குறைபாடா என விபரீதமாய் யோசித்துத் தொலைகிறேன்.(இந்தப் பத்தியை எழுதி முடிக்கும்போது பாருங்களேன்..விபரீதம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறேன். கடந்த இரண்டு தினங்களில் இந்த விபரீதம் என்கிற வார்த்தையைப் பதினெட்டு முறை பயன்படுத்திவிட்டேன்.ஏன் சம்பந்தமே இல்லாமல் ஒரே வார்த்தை திரும்பத் திரும்பத் திரும்பத் த்பம்ருதி என் நாவிலிருந்து வெளிப்பட வேண்டும்? ஏதேனும் விபரீதம் நிகழப்போவதைதான் மறைமுகமாக இது சுட்டுகிறதோ?எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.என்மேல் பேரன்பு கொண்ட தோலர், தோழர், தோழர்காள்! தோழரே!! டேய் தோலா!!! எனக்கு யாராவது உதவுங்களேன்...

-மீப்பெருவெளியில் தொலைந்த மீ (பீ)யொலிக் குறிப்புகள்:அய்யனார்

22.05.2012 :ஞாயிறு:இரவு 11
கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்றின் நெகிழ்வுகள் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டிருக்கிறது.இந்தப் புத்தகத்தை படித்திருக்க வேண்டாம்தான்.படித்து முடித்ததும் விலகிப்போனவளின் நினைவுகள் விடாது இம்சிக்கத் துவங்கியது.

எல்லா ஞாயிற்றுக் கிழமைகளைப் போலவே இன்றும் ஏழு மணிக்கெல்லாம் வந்துவிட்டிருந்தாள்.டிசம்பர் மாதக் குளிரில் தண்ணீர் விறைத்திருக்கும்.எப்படிக் குளித்தாள் எனத் தெரியவில்லை.தலைக்கு வேறு குளித்துத் தொலைத்திருக்கிறாள்.விழித்தெழுந்த காலையில் மஞ்சள் நிற புடவையும்,தழைந்த கூந்தலில் மல்லிகைப் பூவுமாய் ஆத்மார்த்த காதலியை பார்க்கும் வாய்ப்பு கிட்டப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.அவளுக்கு விநாயகரை மிகவும் பிடிக்கும்.யானை என்றால்தான் பயப்படுவாள்.மணக்குள விநாயகருக்கு பனியில் குளித்திருந்த தாமரை மலர்களை இன்னொரு பனியில் குளித்த தாமரை சகிதமாக வாங்கிக் கொண்டு போய் சாத்தினேன்.விடுமுறை நாளை இப்படித்தான் துவங்குவோம்.எல்லாச் சனிக்கிழமை மாலைகளிலும் அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும்.இப்படிச் சொல்வாள் "முதல்ல கோயில்,அப்புறம் பீச்,..ம்ம்.. அப்புறம் கொஞ்சமா எங்காச்சிம் சாப்டுட்டு சினிமா..ஒரே ஒரு முத்தம்தான் ஓகேவா?..மதியம் எங்காச்சும் போய் நான்வெஜ்... ஹாஸ்டல் சாப்பாடு கொடும தெரியுமா?..சாயந்திரம் நம்ம பார்க்ல.. நம்ம ப்ளேஸ் அங்கயும் ஒண்ணே ஒண்ணுதான்.."அவள் சொன்ன முறை மாறாது ஒரு நாள் கழியும்.முத்தக் கணக்கில் மட்டும் சற்று தாராளமாய் இருப்பாள்.வழக்கமாய் நடப்பதை எதற்கு எழுதிக் கொண்டிருக்கிறேன் எனில் இன்று மதியம் உணவகத்தில் நடந்த ஒரு சம்பவம்தான் இப்படிப் புலம்பவிட்டது.

அந்த மேல்தட்டு உணவகத்தின் குளிரூட்டப்பட்ட பிரிவில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோம்.அந்தச் சூழலுக்குப் பொருத்தமில்லா உடைகளணிந்த இருபது வயது மதிக்கத் தக்க ஆணும், பதின்மங்களைத் தாண்டியிராத பெண்ணும்(அந்தப் பெண் பள்ளிச் சீருடை தாவணி அணிந்திருந்தாள்)மிகுந்த தயக்கங்களோடும்,பயத்தோடும் எனக்கு எதிரிலிருந்த இருக்கைகளில் வந்தமர்ந்தனர்.அந்தப் பெண் அந்த சூழலை மருண்ட பெரிய விழிகளின் துணைகொண்டு மிரட்சியாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.அவன் மிகுந்த பதட்டமாய் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.மெனு கொடுக்கப்பட்டது.வாங்கிப் புரட்டிப் பார்த்தவனின் கண்களில் அதிர்ச்சி தெறித்தது.அந்தப் பெண்ணை பார்த்தவாறு "வேற எங்காச்சும் போலாம் இங்க நம்ம ஊரு சாப்பாடு இல்ல" எனச்சொல்லி அப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு வெளியில் போய்விட்டான்.பத்து நிமிடத்திற்குள் நடந்த இந்நிகழ்வு என்னை சமநிலையில் இருக்கவிடாது துன்புறுத்தியது.இவளிடம் புலம்பியபடி இருந்தேன்."நீ இருக்கச் சொல்ல வேண்டியதுதானே நாம் கொடுத்திருக்கலாமே" என என் குற்ற உணர்வுகளை இன்னும் அதிகமாக்கினாள்..

- உதிர் நட்சத்திரங்களின் வழி பயணித்தவளோடு வாழ்ந்த தொள்ளாயிரத்து முப்பத்தியோரு நாட்கள்:அய்யனார்

19.08.2012 : ஞாயிறு : மதியம் 3 மணி
இவ்விதமான கதை சொல்லல்கள் என் இளம்பிராயத்து வாழ்வை மீட்டுவதாய் இருந்தது.நான் தொலைத்த என் கிராமம் சார்ந்த நினைவுகளை இப்புத்தகத்தில் அடையாளம் கண்டுகொண்டேன்.

"அவன் எம்மாம் பெரிய மசிராண்டியா இருந்தா எனுக்கின்னா..போடா பெரிசா வந்திட்டான்..மான ரோசத்தோட வாழறவடா நானு..ஒத்த பொம்பளயா ஒன்ன வளக்கல?. நீ இன்னா அழுவியா பூட்ட?..எவன் ஒறவுஞ்சாரமும் எனுக்கு வேணாம்.. எந்தக் கொம்பன் வூட்டுக்கும் நான் வர்ல.. எவனும் இங்க வரவும் வேணாம்".

மாமா வீட்டுத் தொடர்பு இப்படித்தான் அறுபட்டது.போன வருசக் கடேசியில் மல்லாட்டக் கொல்லியில் தப்புக்காய் பொறுக்கப் போன போது பூங்காவனத்தை கடேசியாய் பார்த்தது.காஞ்சியில் ஒன்பதாவது சேர்ந்தபிறகு முன்பு போல் வெளியில் போக முடியவில்லை.சனி ஞாயிறில் மாட்டை ஓட்டிக்கொண்டு பெரிய்ய ஏரி,காவாங்கரை எனப் போய்விடுவதால் ஊரில் என்ன நடக்கிறது என்றே தெரிந்து கொள்ள முடியாமல் போனது.ஏரிக்கரை இலுப்பை மரத்தடி மதியங்களில் விழிப்பும் கனவுமாய் பூங்காவனத்தின் முகம் வந்து போகும்.அலையலையாய் கூந்தலும், குறும்புச் சிரிப்புமாய் என்னை நிறைக்கையில் அம்மாவின் குரல் அசீரரியாய் காதில் ஒலிக்கும்."இலுப்பம்பூ வாசனைக்கு மத்தியானத்துல முனி கினி வந்து அண்டும்..அந்த பக்கமா போய் ஒக்காராதே" சற்றுத் தள்ளிப்போய் கொடுக்காப்புளி மரத்தடி முட்களை அகற்றிவிட்டு அமர்வேன்.


- பூங்காவனம் : அய்யனார்

23.12.2012 : ஞாயிறு பின்னிரவு 2.00
இன்று சுத்தமாய் தூங்க முடியவில்லை.பல கவிதைகள் எனக்குப் பொருந்திப் போனது.வெறும் அழகியல் சார்ந்தவைதான் என்றாலும் நெடுநாள் புகைக்காமல் இருந்த என்னை புகைக்க வைத்தது இத்தொகுப்பு...

பூவரசமர பெஞ்சிலமர்ந்தபடி
மதிய மழையும்
கடலும்
கலவுவதினை
பார்த்துக் கொண்டிருந்தோம்
மஞ்சள் நிற இறக்கைகளும்
நீலக் கழுத்தையும்
கொண்ட சிறுபறவையொன்று
மஞ்சள் நிற பூவரசம் பூவிலிருந்து எட்டிப்பார்த்தது
பூ பிரசவித்த பறவை என பரவசப்பட்ட
அவளின் முகமேந்தியபடி சொன்னேன்
பூவீன்ற இப்பறவையும்
இன்னொரு பூவினை பிரசவிக்கப்போகும் நீயும்
அபூர்வமானவர்களென

...................................
ஒரு மழை நாளில்
வந்திருக்க வேண்டிய நேரம் வரை
வராமல் போனாள்
குத்தும் சாரல்களின் துணையுடன்
வழியெங்கிலும் தேடியலைந்து
திரும்பினேன்
அவளோடு சேர்ந்து
நனைந்த பூனைக்குட்டியொன்றும்
பூட்டிய கதவுகளுக்கு முன்
ஒண்டிக்கொண்டிருந்தது


-நானிலும் நுழையும் வெளிச்சம்:அய்யனார்

13 comments:

Anonymous said...

நன்று.

Unknown said...

முதலில் நாட்குறிப்பின் தேதியைப் பார்க்காமல் வாசித்து வந்தேன்...பிறகு தேதியைப் பார்த்ததும் புன்னகைத்தேன். அலைக்கழிப்புக்களின் தீவிரத்தில் எழுதப்பட்ட உக்கிரமான வார்த்தைகள் அவை...என்ன ஆச்சு அய்யனாருக்கு என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்பதிவு.. கவிதைகள் மட்டும் இல்லாவிட்டால் ISD போட்டு திட்டியிருப்பேன்..../பூவீன்ற இப்பறவையும் இன்னொரு பூவினை பிரசவிக்கப்போகும் நீயும் அபூர்வமானவர்களென // அருமையான வரிகள்...சொல் நீயொரு பூனைக்குட்டியா என்ற உங்கள் கவிதையொன்றின் வரிகள் என்னால் மறக்கவே முடியாது.

எழுத்து நம்மை அழைத்துச் செல்லும் இடங்கள், மனப் பிரதேசங்கள் சில நேரங்களில் அதி உன்னதமாக இருக்கும், சில சமயம் பெரும் அலைக்கழிப்பாக மாறும்....உன்னதங்களை கண்டடையும் மனம் அலைக்கழிக்கப்படுவதும் சாத்தியம் தானே....19.02.2012 : ஞாயிறு: இரவு 8.30 அன்று பதிவிட்ட வாசகன் சீக்கிரம் பயம் தெளிவான் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் அய்யனார்.

ரௌத்ரன் said...

"வேற எங்காச்சும் போலாம் இங்க நம்ம ஊரு சாப்பாடு இல்ல"

மிகவும் துன்புறுத்துகின்றன இவ்வரிகள்...மிரண்டு வெளியேறியவனுமாய்,வெளியேறியவர்களை கண்டு மிரண்டவனுமாய் நானும் இருந்திருக்கிறேன்.சிலவற்றை சொல்லாக்கக் கூடாது என நினைப்பதுண்டு.சில சொற்கள் ஆறிப்போன பழைய வடுவில் புதிய காயத்தை ஏற்படுத்திவிடுகிறது.....
----------------------------------
"பூவீன்ற இப்பறவையும்" என்ற பதம் அற்புதமான க்ஷ்னத்தின் புகைப்படம் போல் இருக்கிறது.மிக சில சொற்கள் மட்டும் சொல்லின்மைக்குள் வீசியெறிகின்றன....சொல்லின்மையின் க்ஷ்னங்களை தேடுதலில் தான் வாசிப்பும் நிகழ்கிறது போலும்....

MSK / Saravana said...

-மீப்பெருவெளியில் தொலைந்த மீ (பீ)யொலிக் குறிப்புகள்:அய்யனார்
- உதிர் நட்சத்திரங்களின் வழி பயணித்தவளோடு வாழ்ந்த தொள்ளாயிரத்து முப்பத்தியோரு நாட்கள்:அய்யனார்
- பூங்காவனம் : அய்யனார்
-நானிலும் நுழையும் வெளிச்சம்:அய்யனார்

இப்படியாக, அய்யனாரின் புத்தகங்களை இப்போதே (2008) வாசிக்க ஆவலாய் இருக்கும் வாசகன்..

MSK / Saravana said...

மனதின் அலைகழிப்புகளையும், குற்ற உணர்வுகளையும், காதல் நினைவுகளையும் தூண்டிவிட்டீர்கள் அய்யனார்..

MSK / Saravana said...

//அவளின் முகமேந்தியபடி சொன்னேன்
பூவீன்ற இப்பறவையும்
இன்னொரு பூவினை பிரசவிக்கப்போகும் நீயும்
அபூர்வமானவர்களென //

தெய்வமே.. எங்கயோ போயிட்டீங்க........ மைன்டில வசிக்கிறேன்.. யூஸ் பண்ணிக்கிறேன்..

anujanya said...

வாசகனின் நாட்குறிப்பு. கதை சொல்லும் உத்தி கவர்ந்தது அய்ஸ். வெவ்வேறு புத்தகங்களின் தலைப்பு சிறிது சுய எள்ளல், நிறைய கவிதை என்று அழகு. மற்றபடி சொல்லவேண்டியதை உமாவும், ரௌத்ரனும் அழகாகவே சொல்லிவிட்டார்கள். வர வர பின்னூட்டம் கூட சரியாக எழுத வரவில்லை. வாலி போல எதிராளியின் சக்தியில் பாதி உங்களுக்குச் சென்று விடுகிறது போலும் :))

அனுஜன்யா

உயிரோடை said...

வித்தியாச‌மாக‌வும் அருமையாக‌வும் இருக்கு அய்ய‌னார். வாழ்த்துக‌ள் க‌விதைக‌ள் தொகுப்பப‌டிச்சிட்டேன் அத‌னாலே விய‌ப்பா இல்லை.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"அனுஜன்யா said...
.....வர வர பின்னூட்டம் கூட சரியாக எழுத வரவில்லை. வாலி போல எதிராளியின் சக்தியில் பாதி உங்களுக்குச் சென்று விடுகிறது போலும் " -
ரசிக்கவைக்கும் பின்னூட்டம். மற்றபடி தங்கள் பதிவு பத்திச்சொல்ல நான் புதியதாய் சொல்ல ஏதுமில்லை. பதட்டம் நீங்க இருமுறை படித்துதீர்த்தேன் என்பதைத்தவிர...:)

நித்தி .. said...

விழித்தெழுந்த காலையில் மஞ்சள் நிற புடவையும்,தழைந்த கூந்தலில் மல்லிகைப் பூவுமாய் ஆத்மார்த்த காதலியை பார்க்கும் வாய்ப்பு கிட்டப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.//
ச்ச....என்ன ரம்மியமான ரசனை உங்களுக்கு....
உங்க ஆத்மார்த்த காதலிதான் பாக்கியசாலி அய்யனார்..
உங்க வார்தைகள் பிரயோகம் மலைக்க வைக்குது..

Ayyanar Viswanath said...

நன்றி டிசே..

நன்றி உமாசக்தி..

சொல்லின்மைக்குள் வீழ்ந்த கணங்களை சொற்கள் கொண்டு திரும்ப எழுதப்படுவது கூட வன்முறைதான் ரெளத்ரன் நான் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேனோ எனக்கூட சில தருணங்களில் நினைத்துக்கொள்வேன்..

Ayyanar Viswanath said...

சரவணக்குமார்,அனுஜன்யா,மின்னல்,கிருத்திகா
மற்றும் நித்தி
தொடர்ந்த வாசிப்பிற்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி நண்பர்களே

Pot"tea" kadai said...

பிடிச்சிருக்கு!

Featured Post

test

 test