Friday, January 25, 2008

தமிழச்சி,ஜெயமோகன் இன்ன பிற கடுப்புகள்

0
அலுவலக சக மல்லு ஒருவன் எதையோ தரவிறக்கம் செய்யப்போய் சர்வரைக் கொன்றுவிட்டான். கடுப்பான ஐடி மக்கள் ஜிமெய்லை மட்டும் விட்டுவிட்டு மத்ததைப் பூட்டி விட்டார்கள்(என் சிறு வயது இம்சைகள் தாளாமல் "உன் கண்ண ரெண்டும் விட்டுட்டு ஒடம்பு தோலை உரிக்க சொல்றண்டா உங்கப்பாகிட்ட"என்ற என் அம்மாவின் வாசகம் சம்பந்தமில்லாமல் நினைவில் வந்துபோனது..ஒருபோதும் சொன்னதில்லை என்பது வேறுவிசயம்) சட்டென்று உலகமே ஸ்தம்பித்துப் போனது. இரண்டு நாட்கள் சவுண்ட் கொடுக்காமல் மூன்றாவது நாள் லிமிடட் ஹவர்ஸ் என எதையோ சொல்லி இரண்டு மணி நேரம் வாங்கிவிட்டேன். கண்டதையெல்லாம் படித்து கடுப்பாகத் தேவையில்லை என்ற நன்மை இருப்பினும் கண்ணில் பட்டுத் தொலைவதெல்லாம் கடுப்பாவதற்கே
என்பது போலத்தான் இருக்கிறது..
0
தமிழச்சிக்கான எதிர்வினைகள் எத்தனை அவசியம்?என்றெல்லாம் யோசித்துப் பார்த்து எழுதும் மனநிலையில் இல்லை. இருப்பினும் மேம்போக்கான வறட்டுக்கூச்சலுக்கு, விளம்பர மோகத்திற்கு, மூலத்தை சிதைக்கும் அபத்தங்களுக்கான எதிர்வினைகளை வைத்தேயாகிவிடுவது என்ற நிலைக்குத் தள்ளியது என் உள்வெளி.மேலும் இந்த இடுகைக்குப் பிறகு அவரை முற்றிலுமாய் புறக்கணித்து விடுவது என்கிற முன் தீர்மானங்களோடு இதை எழுதத் தொடங்குகிறேன்.தமிழச்சிக்கான பின்னூட்டங்களைக் கூட மிகுந்த யோசனைகளுக்குப் பிறகே எழுதத் தோன்றும். பெண் என்ற பிரத்யேக காரணங்களுக்கான சலுகையே இத்தனை நாட்கள் என் கடுப்பை தள்ளிப்போட்டதென்றும் சொல்லலாம்.எதுவிருப்பினும் தமிழச்சியின் தீரம் பாராட்டத்தக்கது.பெண்கள் இயங்கத் தயங்கும் ஒரு தளத்தை இவர் தேர்வு செய்ததற்காகவும் தொடர்ச்சியான ஆபாசத் தாக்குதல்களை புறந்தள்ளிக்கொண்டு போவதற்காகவும் தமிழச்சியினைப் பாராட்டியே ஆகவேண்டும்.ஆனால் ஆபாசப் பின்னூட்டங்களை எவ்வித தயக்கங்களும் இல்லாமல் வெளியிடும் இவர் என் எதிர் கருத்து சார்ந்த பின்னூட்டத்தை வெளியிட மறுத்தது ஏன் எனத் தெரியவில்லை.ஒரு வேளை நான் ஆபாசமாக எழுதாமல் விட்டது புரியாமல் போனதோ என்னமோ..

எப்போதாவது எழுதும் இவரது சொற்பமான சொந்த எழுத்துக்கள் இவரை அதிகார வர்க்கத்தின் குறியீடாகத்தான் அடையாளம் காட்டுகிறது. (தட்டுக்கழுவி முதல் தேவடியா வரையிலான சொல்லாடல்கள்) பெரிய டைப்பிஸ்ட் பெரியாரிஸ்ட் இல்லை என்கிற கொழுவியின் வாக்கியம் கச்சிதமாக இவருக்குப் பொருந்துகிறது.இந்த குற்றச் சாட்டிலிருக்கும் உண்மையை இவர் புரிந்துகொண்டாரா? எனத் தெரியவில்லை.அப்படிப் புரிந்துகொண்டிருப்பின் அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகள் எதையும் இவர் எடுத்ததாய் தெரியவில்லை.பகுத்தறிவு வாதி என்கிற சக்தி வாய்ந்த ஒரு அடையாளத்தை மேம்போக்காக புரிந்துகொள்வதின் சரியான அடையாளம்தான் தமிழச்சியின் எழுத்து.பெருமதிப்பிற்குரிய பகுத்தறிவுவாதிகளே! உங்களுக்கான அடையாளங்கள் கீழ்கண்டவைகள் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.


1.கருப்பு நிற ஆடை அணிவது..
2.உடையில் பெரியார் அல்லது சேகுவாராவின் உருவத்தை பதிந்துகொள்வது
3.தோழர்,புரட்சி,வெங்காயம் என்கிற சொல்லாடல்களை சம்பந்தமே இல்லாமல் திரும்ப திரும்ப பேச்சு வழக்கில் நுழைப்பது...
4.எங்காவது ஓரமாக நின்று நோட்டிஸ் கொடுத்துவிட்டு பெரிய சீர்திருத்ததை செய்ததாய் புளகாங்கிதம் அடைவது,அதை போட்டோ எடுத்து கண்ணில்பட்டவர்களுக்கெல்லாம் அனுப்பி வைப்பது..
5.பெண்,பெண்ணியம் எனக் காதில் விழுந்த சொற்களை வைத்துக்கொண்டு பொதுவெளியில் இயங்கும் பெண்களுக்கு நூல் விடுவது.

நம்முடைய வாழ்வு,நம்முடைய மிகச்சிறந்த தலைவர்கள்,புனிதர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர் அனைவரும் சித்தாந்தங்களை அதன் சாராம்சத்தோடு புரிந்துகொள்கிறார்களா/கொண்டார்களா என விளங்கவில்லை. அவர்களை அடியொற்றியே நாமும் செம்மறி ஆட்டுக் கூட்டங்களைப் போல் ஜே! போட்டுப் பின் தொடர்கிறோம். தொடர்ச்சியான தலையாட்டல்களில்,வாழ்க! கோஷங்களில் சொந்த மூளை சிந்திக்கும் திறனை எப்போதோ இழந்துவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.மேலும் சமீப காலங்கலாய் இவரது புரட்சித் தலைப்புகள் தாங்கி வரும் பெரியார் மற்றும் ஓஷோவின் உள்ளடக்கங்கள் அதன் மூலங்களை சிதைப்பதாகத்தான் எனக்குப் படுகிறது.ஓஷோவை நேசிக்கும் பெரியாரை நேசிக்கும் ஒருவன் இவ்வித வறட்டுக் கூச்சல்களால் சந்திக்க நேரிடும்
பெரும் அசூசையை மொழியில் எவ்வாறு கடத்துவதெனத் தெரியவில்லை.

தமிழச்சி இப்படித்தான் எழுதவேண்டும் என நான் எதையும் வலியுறுத்தவில்லை இருப்பினும் இவரின் அபத்தங்கள், அரைகுறைப் புரிதல்கள் ஏற்படுத்தும் எரிச்சல்கள் எழுத்தில் சொல்ல முடியாதது.இவை மட்டுமில்லாது தன்னை ஒரு இலக்கியவாதி என்றும் எழுத்தாளர் என்றும் இவரே சொல்லிக்கொள்வது வன்முறையின் உச்சம்.பெண்மொழி,இலக்கியம் என்றெல்லாம் இவர் பேசும்போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. பெண்ணின் மொழியைப் பற்றியோ இலக்கியத்தைப் பற்றியோ இவர் சொல்லி நான் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற நிலையில் இல்லை என்பது என் பதிவுகளையும் அவர் பதிவுகளையும் தொடர்ச்சியாய் படிப்பவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.பெண் என்பவள் பெண்ணால் மட்டும் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதில்லை.சக பெண்ணை தேவடியா! என்றழைக்கும் கண்டவன் போகட்டும்! என விளம்பரப்படுத்தும் இவரின் சிந்தனைகளை விட பெண்ணை நான் ஓரளவு புரிந்துகொண்டுள்ளேன் என்பது ஆசுவாசத்தை அளிக்கிறது. பெண்மொழிகளை /உடல்மொழிகளை மொத்தத்தில் பேதமில்லா மொழிகளைப் புரிந்துகொண்ட சுகுணா போன்ற தமிழச்சியின் தோழர்கள் தமிழச்சியின் புரிதல்களின் எல்லைகளை ஓரளவிற்கேனும் விரிவுபடுத்தினால் என் போன்றவர்கள் சந்திக்க நேரிடும் அசூசை உணர்வு ஓரளவேனும் தவிர்க்கப்படலாம்.

0
ஜெயமோகனின் எழுத்துக்கள் எனக்குப் பிடித்தமானவை. இவரது எல்லா எழுத்துக்களையும் தேடித் தேடி படிக்கும் வசீகரத்தை இவரது மொழி தன்வயப்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரியிலிருந்து நான்காவது கொலை வரை இவரின் எல்லா எழுத்துக்களையும் முழுமையாய் வாசித்திருக்கிறேன். கொற்றவை மட்டும் இன்னும் படித்து முடிக்கவில்லை.ரப்பர், காடு, திசைகளின் நடுவே, குறுநாவல் தொகுப்பு, அறிபுனைவு கதைகள் என எனக்குப் பிடித்தமான இவரின் பட்டியல்கள் நீளமானவை. இவரின் மிகப் பெரிய நாவல்களைக் கூட விலை கொடுத்து வாங்கித்தான் படித்திருக்கிறேன்/படிக்க வேண்டும் என்கிற தீவிர சிந்தனைகளும் இருக்கிறது.கம்யூனிசம் பற்றிய அறிமுகத்தை இவரது பின்தொடரும் நிழலின் குரலிலிருந்துதான் பெற்றுக்கொண்டேன் என்பது தீவிர சிந்தாந்தவாதிகளுக்கு கேலியாய் படலாம் ஆனால் என்னளவில் அதுதான் உண்மை.ஆனால் அதை ஒரு தொடக்கமாகத்தான் நான் புரிந்துகொண்டேனே தவிர தீர்க்கமானதாய் இல்லை.இருப்பினும் பொதுவெளியில் ஜெயமோகனின் பங்களிப்பு குறித்து எனக்கு பல்வேறுவிதமான மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன.வலை ஊடகத்தின் மீதான இவரின் ஏளனப் பார்வை,விருதுகள் பற்றிய மதிப்பீடுகள் மற்றும் சுந்தரராமசாமி கொடி என்பன போன்று பல்வேறு பங்களிப்பில் இவரின் அரசியல் எரிச்சலைத் தருகிறது.எழுத்துக்கும் எழுத்தாளனுக்குமிடையேயான இடைவெளிகளின் தூரத்தை நிரூபிக்கும் இன்னொரு எழுத்தாளனாகவே ஜெயமோகன் எனக்குப் படுகிரார். சா.கந்தசாமியின் எழுத்துக்கும் பேச்சுக்கும் இடையிலான வித்தியாசத்தை கறுப்பியும்,அசோகமித்திரனின் மீதெழுந்த கோபங்களை மதியும், ஜெயமோகனின் இயல் அரசியல்களை பகிரங்கப்படுத்திய டிசேவும், இணைய ஏளன விமர்சனங்களுக்கு வெகுண்டெழுந்த சன்னாசியும்,அனாதை ஆனந்தனையும் எனது முன்னோடிகளாகச் சொல்லலாம்.

ஒரு படைப்பாளியை நாம் ஏன் படைப்பாளியாகவே அணுகுவதில்லை?இவர் சிங்கத்தைப் போன்று நடக்கிறார்,புலியைப் போன்று உறுமுகிறர், டைனோசர் போல எழுதுகிறார், தீர்க்கமாய் பார்க்கிறார் என்பன போன்றெல்லாம் சிலாகிக்க வேண்டிய அவசியம் என்ன?தனிமனித துதிக்களை விட்டு நாம் வெளிவரவே முடியாதா?சுகுமாரனின் தனிமையின் வழி எனக்குப் பிடித்தமான கட்டுரைத் தொகுப்பு அதில் அவர் காட்டியிருந்த சுந்தர ராமாசாமி பக்தி எரிச்சலின் உச்சத்திற்கு என்னைக் கொண்டு சென்றது.கலைஞர்/ஜெயலலிதா அடிபொடிகளுக்கும், ரஜினி/விஜய் ரசிக குஞ்சுகளுக்கும், சுரா/ஜெமோ பக்தியாளர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?எவனையாவது ஒருத்தனை தலைவனாக்கி அவன் காலை வருடிக்கொண்டிருப்பதில் அப்படியென்ன திருப்தி?மணிகண்டன் போன்ற நுட்பமான கவிஞர்களுக்கும் இன்னமமும் ஷங்கரின் சுஜாதாதான் முகவரியா? இந்த சிந்தனைகள் ஏற்படுத்திய கடுப்பை எப்படிச் சொல்ல?

0
அச்சு ஊடகங்களுக்கும் இணைய ஊடகங்களுக்குமிடையேயான வேறுபாடுகள்/ மதிப்பீடுகள் மிகுந்த கசப்பைத் தருகிறது.அச்சு ஊடகங்களின் பங்களிப்பு காலாவதியாகிவிட்டடது என நான் தீர்க்கமாய் சொன்னால் நம் மிகப்பெரிய எழுத்தாளர்கள்/பதிப்பகத்தார் அடையும் அதிர்ச்சிகள் எந்த அளவு வலிமையோ அதற்கு சற்றும் குறைவில்லாதது இணைய எழுத்துக்களின் மேல் தொடர்ச்சியாய் வைக்கப்படும் சுஜாதா மற்றும் ஜெமோக்களின் திட்டவட்ட அறிவிப்புகளும்.இதை இதே சூழலில் இயங்கும் சக வலைப்பதிவர்களும் ஏற்றுக் கொள்வதும் சிலாகிப்பதும் எத்தனை பெரிய அபத்தம்? உதாரணத்திற்கு ஹரன் பிரசன்னாவின் சமீபத்திய பதிவில் ஏதோ சுஜாதாவைத்தான் எல்லாரும் காப்பி அடிக்கிறார்கள் என்பது போலச் சொல்வதெல்லாம் படு அபத்தமாகத்தான் படுகிறது.பல்வேறு விசயங்களைத் தொட்டிருக்கும் அவரது வலை ஆய்வு அச்சு ஊடகத்தை மட்டுமே பிரதானமாய் முன்னிருத்துவது ஏனெனத் தெரியவில்லை.அச்சில் இருக்கும் அதிகாரத்தன்மைகள், ஒற்றைச் சாளர குறைகள் களையப்பட்டுவிட்டன இனி வலைப்பதிவே இலக்கியத்திற்கான முன்னோடியாய் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.இலக்கியப் பிதாமகர்கள் என எவரும் இல்லை.எவரும் எதையும் அங்கீகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. உனக்குத் தெரிந்ததை நீ எழுது! எனக்குத் தெரிந்ததை நன் எழுதுகிறேன். இதுதான் இலக்கியம்.. இதுதான் வாழ்வு.பூனையின் உலகம் எனப் பகடி செய்வீர்களேயானால் நாளொன்றுக்கு அறுபது பேருக்கு குறையாதவர்களால் ஒரு வலைப்பக்கம் படிக்கப்படுகிறது உங்களின் எழுத்துக்கள் எத்தனை பேரால் படிக்கப்பட்டு உள்வாங்கப்படுகிறது ரீதியிலான விளம்பர ஆய்வுகளையும் செய்ய சித்தமாக உள்ளேன்.உங்கள் அச்சு இலக்கியவாதிகளின் காலம் காலாவதியாகிவிட்டது.மேலும் வலையில் சினிமாப் பொண்ணையாக்களாலும், ஜெமோக்களாலும், சுஜாதாக்களாலும் தாக்குப் பிடிக்கமுடியாதென்பது நிரூபணமான உண்மை. முடிவாய் ஆனந்தனின் சில வரிகளை மீள்பதிவிப்பதின் மூலம் இன்றைய கடுப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

இந்த மசிரான்கள் தான் நவீன தமிழிலக்கியத்தை கட்டிக் காப்பவர்கள் மற்றும் ஞானகுருக்கள் என்றால் ஓக்காளி இந்தத் தமிழ் நாசமத்துப் போகனும்

தொடர்புச் சுட்டிகள்
http://anathai.blogspot.com/2008/01/blog-post.html
http://nizhalkal.blogspot.com/2008/01/blog-post_21.html
http://pesalaam.blogspot.com/2008/01/blog-post_24.html
http://mathy.kandasamy.net/musings/archives/2007/08/16
http://karupu.blogspot.com/2007/05/blog-post.html
http://padamkadal.blogspot.com/2008/01/blog-post_11.html
http://thamizachi.blogspot.com/2008/01/blog-post_9536.html
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...