Thursday, January 3, 2008

ஜனவரி-04 1996

எப்போதாவது வரும் கனவுகளில்
எப்போதும் வருகிறதுனது பிம்பம்
சாத்தியமாகியிருந்திருப்பவைகளைப் பற்றிய நினைவுகளோடு
சாத்தியமின்மைக்கான நிசங்கள்
கனவுத் தன்மையை
குரூரத்தோடு இடம்பெயர்க்கிறது
செயலற்றுப்போன எஞ்சியிருப்பவைகள்
குற்ற உணர்வுகளைத் தவிர்க்கும் பொருட்டு
உன் நிமித்தமெனும் சாக்குகளின் துணைகொண்டு
இருப்பை மதுவினால்/கேளிக்கைகளால் நிறைக்கிறது
அவைத் தனக்கான திருப்திகள் என்பதையுணரும்போது
உன் மரணத்தைப் போலவே
அர்த்தமற்றுப்போனது
உன்னைச் சுற்றியிருந்தவர்களின் இருப்பும்....

தொலைதூர சமவெளியொன்றில்
உனக்குப் பிடித்த புல்லாங்குழலை இசைத்துக்கொண்டிருப்பாய்
ஏழைகளே இல்லாத நகரமொன்றிலும்
ஏழைகளைத் தேடிப்பிடித்து
எதையாவது கொடுத்துக் கொண்டிருப்பாய்...
நீ பரிதாபப்படுவதற்கும்
பார்த்து இரங்குவதற்கும்
எவருமில்லா ஒரு நகரை உருவாக்கித்தர
சொர்கத்தின் கடவுளர்கள்
மிகுந்த சிரமப்பட்டிருக்ககூடும்

எதை நோக்கித் துவங்கியதுனது ஆரம்பம்?
எதை விடுத்துப் பறந்தது உன் கூட்டுப் பறவைகள்?
எல்லாவற்றிர்கும் காரணங்களை ஆராய்பவர்களிடம்
நான் எதைச் சொல்ல?
உன் மரணமும் பன்முகத் தன்மை கொண்டதென்பதை
இப்புனிதர்கள் அறியா வண்ணம்
அடர்வான சொற்களில்
சில ரகசியங்களைக் கொன்று புதைத்துவிடுகிறேன்
தேடியெடுப்பவன் தூக்கமில்லாது போகட்டும்.....

உன்னைப்பிடித்திராத இந்தச் சனி
என்னைப் பிடித்துக்கொண்டிருப்பதால்
எந்தக் குற்றவுணர்வும் இல்லாது
என் கோப்பைகளை நிறைக்கிறேன்
உன்னைப் பற்றிக் கவியெழுதுகிறேன்
எங்கிருந்தாவது கைத்தட்டல் ஓசையோ
இல்லை காறிஉமிழும் ஓசையையோ
நீ கேட்க நேர்ந்தால் அது எனக்கானதில்லை
உனக்கானது....

No comments:

Featured Post

test

 test