Wednesday, July 25, 2007

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் ஓஷோ -சில உரையாடல்கள் 2அடுத்த நாள் சனிக்கிழமை காலை 4.30 எழுந்து குளித்து 6 மணிக்கு டைனமிக் தியானம் தொடங்கப்பட்டது.இருப்பதிலேயே மிகவும் கடினமான மிகவும் சக்தி வாய்ந்த தியானமாக டைனமிக் கருதப்படுகிறது 5 இடைவெளிகளில் மாறிக்கொண்டே இருக்கும் இசை, முதல் 10 நிமிடங்கள் சுவாசத்தை மிகவும் வேகமாக உள்ளிழுத்து விடவேண்டும்.ப்ரீத் ஃபாஸ்ட்..ப்ரீத் ஃபாஸ்ட் என்கிற ஓஷோ வின் உற்சாக குரலும் துள்ள வைக்கும் இசையும் முழுமையான சுவாசம் நடக்க ஒத்துழைக்கும்.அடுத்த 10 நிமிடங்கள் ஜிப்ரிஷ் பைத்திய நிலைக்குப் போய் உள்ளடைப்புகளை வார்த்தைகளாய் வெளித்துப்பல்.அடுத்த 10 நிமிடங்கள் ஜம்ப் அண்ட் ஊ எம்பிக் குதித்து அடிவயிற்றிலிருந்து ஊ என குரலெழுப்ப வேண்டும்(மிகவும் கடினமானது இந்த முறைதான்) நான்காவது ஸ்டாப் எனும் ஓசைக்குப் பின் அந்தந்த நிலைகளிலே உறைந்து போக வேண்டும்.சகலமும் அடங்கி சொந்த வீட்டில் புதைந்து கொள்ளும் மனம்.இது 15 நிமிடங்கள்.ஐந்தாவது நிலை கொண்டாடுதல் மாறும் இசைக்கேற்ப மெல்ல உடல் தளர்த்தி நடனம் இதுவும் 15 நிமிடங்கள். இறுதியில் உடலை தரையில் கிடத்தி விடுதல்.தியானத்திற்க்குப் பின் காற்று போன பலூன் போல ஆகிவிடும் உடல்.ஒரு புள்ளியில் உறைந்து போகும் மனம்.

காலை உணவு இடைவேளைக்குப்பிறகு நாத பிரம்மா தியானம்.திபெத்திய முறையான இத்தியானம் காந்த சக்தியை தூண்டவல்லது.பின்னனியில் மணி சப்தம் ஒலிக்க உடம்பை ஒரு வெண்கல மணியாய் கருதிக்கொண்டு அடிவயிற்றிலிருந்து சப்தம் எழுப்ப வேண்டும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஒலி எழுப்பும்போது சுவாசத்தை உள்ளிழுக்க கூடாது.உடல் முழுக்க ஒரு அதிர்வு ஏற்படும் உடலின் எல்லா சக்கரங்களும் இயங்க ஆரம்பித்து உடலின் அதீத காந்த சக்தியை உணரச் செய்யும் தியானமிது.சக துணையுடன் அதாவது மனைவியுடன் இத்தியானத்தை செய்வது மிகுந்த பலனளிக்கும்.அடுத்து ஓஷோவின் ஒலிநாடா ஏதாவது ஒரு தலைப்பில் அவர் பேசிய பிரசங்கத்தை கேட்கலாம்.அதுமுடிந்த பின் நட்ராஜ் தியானம்.வழக்கம்போல் உடலதிர ஆட்டம் இறுதியில் தியானம்.ஓஷோவின் தியானமுறைகளைப் பொறுத்த வரை நாம் எதையும் மெனக்கெட்டு செய்யவேண்டியதில்லை அதுவே நிகழும் உடம்பை,மனதை தியானத்திற்க்கு தயார் படுத்திக்கொள்ளுதலே நம்முடைய வேலை.அதாவது காற்று வர சன்னலைத் திறப்பது போல்.

ஓஷோவின் தியானத்தில் நடனத்திற்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.சிரிப்பு தியானம்,நாத பிரம்மா,நட்ராஜ்,நோ மைண்ட்,குண்டலினி,விர்லிங்,கெளரி சங்கர்,சக்ரா,மண்டலா,நோ டைமென்சன் இப்படி தியான முறைகளை ஓஷோ வடிவமைத்துள்ளார் நடைமுறை வாழ்விற்கேற்ப உடல் மனம் எல்லாம் இயங்க செய்யும் அதி அற்புத தியான முறைகள்.வாழ்வு,மரணம்,காதல்,காமம்,இன்பம்,துன்பம்,தனித்தன்மை,போராட்டம்,தியானம் என்பது குறித்த சரியான புரிதல்கள் இவரிடம் மட்டும்தான் உள்ளது.ஆனால் கவனம் மேலோட்டமான வாசிப்பும் அரைகுறை தியானமும் உங்கள் கவனத்தை திசைதிருப்பலாம்.ஓஷோ மிகவும் ஆபத்தான மனிதரும் கூட.வலையில் உலவும் சில கிறுக்குகள் கூட அவரின் சன்னியாசிகள் எனக்கேள்விப்பட்டபோது சிரிப்புதான் வந்தது.
0----------------0-----------------
முதல் முகாம் முடித்து விட்டு வந்து நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.தியானத்தன்மையின் நீட்டிப்பை எப்போதும் விரும்பியது மனம்.மூளையில் யதார்தத்தின் பிரச்சினைகள் படிய ஆரம்பித்தது, இழந்ததை இடைவிடாது யோசித்தபடி இருக்கும் மனத்தை நிகழில் ஒட்டவைக்கப் போராட வேண்டியிருந்தது.மனம் அலைவுறுவது தெரியாத வரை எந்த பிரச்சினையுமில்லை.அது நிகழின் சுவையை தெரிந்து கொண்டுவிட்டால் அலைவுக்கும் நிசப்சத்திற்க்குமுள்ள வேறுபாடுகளைத் தெரிந்துகொண்டுவிட்டால் சிக்கல்தான்.அடுத்த இரண்டு மாதங்களிலேயே அடுத்த தியான முகாமிற்க்கு சென்றேன்.அந்த முகாமில் சன்னியாசத்திற்க்கான உறுதியுமெடுத்துக்கொண்டேன்.சன்னியாசம் வாங்கிய அனுபவத்தை தனிப்பதிவாய் எழுத வேண்டும்.
ஒவ்வொரு தியான முகாம் முடிந்து திரும்பும்போதும் தொண்டையிலிருந்து மூன்று நாளைக்காவது குரல் சுத்தமாய் வராது.
0--------------0-----------------
ஹாய்டா!
ஹே வீணா!
நாளைக்கு எனக்கு ஆஃப் டே வர்ரியா மேட்னி போலாம்..சரியா 1.30 க்கு ஆபிஸ் வந்தின்னா ரெட்ட கால் போட்டு உன் பைக்ல உட்காருவேன் 5 நிமிசம் லேட்டானாலும் ஒரு சைட்தான் ஓ கே வா?
வீணா! நாளைக்கு செந்தில் வீட்ல தியானம் பன்றோம் அவங்க வொய்ஃப் லாம் இருப்பாங்க நீயும் வாயேன்
என்னாஆஆஆஅது தியானமா??
ம்..ஓஷோ ..நாதபிரம்மா பண்ணப்போறோம்..
ஏய் ச்ச்சு அதெல்லாம் கேன்சல் பண்ணு ..ஒழுங்கா வா
இல்ல வீணா! நீ வர்ரதா இருந்தா செந்தில் வீட்டுக்கு வா! நான் கிளம்பறேன்.
0----------------0----------------------
மூன்று முகாம்களுக்குப் பிறகு ஓஷோ பிறந்த வீட்டிற்க்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் குச்வாடா எனும் குக்கிராமத்திற்க்கு நண்பர்களுடன் சென்றேன்.அருகிலிருக்கும் மிக அழகான ஆசிரமத்தில் ஒரு வாரம் தங்கினோம்.தினம் அவரது வீட்டில் நாத பிரம்மா தியானம் செய்தோம்.மறக்கவே முடியாத அற்புத அனுபவங்களாக இருந்தது அந்த நாட்கள்.அத்தனை அனுபவங்களையும் தொடர் கட்டுரைகளாக எழுதவும் உத்தேசம்.மேலும் இராஜ யோகம்,வேதாத்திரி மகரிஷி,ப்ராணிக் ஹீலிங்க் மேலதிகமாய் சென்னையடுத்த திருமுடிவாக்கத்தில் தம்ம சேது தியான மையத்தில் 10 நாட்கள் தங்கி விபாஸனா தியானம் மற்றும் தம்மம் பயின்றதென என் அலைவுகளைனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசையுமிருக்கிறது.எப்போதும் விழிப்பான என் சோம்பலை தூங்கச் செய்துவிட்டுத்தான் எழுத ஆரம்பிக்க வேண்டும்.

கோயம்பத்தூரில் ஞான் ரிக்தா என்பவர் தியான முகாம்கள் நடத்தி வருகிறார்.வெகு சிறப்பாய் இருக்கும்.இந்த தியான முகாம்களில் கலந்துகொள்ள நமது பதிவர்கள் ஓசை செல்லா அல்லது ஆனந்த் நிரூப்பை தொடர்பு கொள்ளவும்.
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...