Monday, July 23, 2007

கவிதை குறித்தான என் புரிதல்கள் மற்றும் சில பகிர்வுகள்
கவிதையை விட வேறெதுவும் என்னை இட்டு நிரப்பமுடியுமா என்பது சந்தேகம்தான்.கவிதை என்கிற வடிவம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் தமிழின் தொன்மையும் வரலாற்றையும் வேறெந்த வடிவம் கொண்டும் சிறப்பாய் பதிவித்திருக்க முடியாது.தொன்மையான வடிவமான இக்கவிதையே நம் மொழியின் அடையாளமாக கலையின் பிறப்பிடமாக அமைந்திருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து மாறிக்கொண்டும் வடிவத்தை அவ்வப்போது ஒழுங்கமைத்துக் கொண்டும் தன் இருப்பை மீள்பதிவித்துக்கொள்ளும் கவிதையின் வடிவம் எல்லைகளற்றது.

பாப்லோ நெருடாவின் துயரமான இந்த இரவில் ஒரு கவிதை எழுதலாம் என்கிற நிலைப்பாடுதான் வெகு இணக்கமாக இருக்கிறதெனக்கு வாழ்வு நம் மீது செலுத்துகிற வன்முறையாலோ அல்லது உணர்வுகளை அசைத்துப்பார்க்கும் மென் தொடுகையாலோ கவிதை தனக்கான விதைகளை ஒரு தனிப்பட்ட சுயத்திற்க்குள் விதைத்துவிட்டு காணாமல் போய்விடுகிறது.துளிர் விடும் விதைகள் சூழல்களின் ஒத்திசைவில் செடியாகவோ மரமாகவோ தன் இருப்பை வடிவமைத்துக் கொள்கிறது.

கவிதை ஒரு சொல் விளையாட்டோ அல்லது அழகியல் வடிவமோ அல்ல.அது தன்னுள் கொண்டிருக்கும் இலட்சியம் அபரிதமானது.தனக்குள் உயிர்ப்பாய் இருக்கும் கவிதையை பிரபஞ்சத்தில் ஒரு உயிரெனக் கொள்ளலாம். இயக்கத்திலிருக்கும் அல்லது வளர்ச்சியடையும் பொருட்கள் மட்டுமே உயிருள்ளதென கருதப்படுவது போல் வளர்த்தெடுக்கப்படும் கவிதை வடிவங்கள் மட்டுமே உயிருள்ளது.பழைய அல்லது திரிந்த வடிவத்தை பிரகடனப்படுத்தியபடி வார்த்தைகளை பிடித்துத் தொங்கும் வடிவங்கள் கவிதையாகாது.அவை நாற்றமெடுத்த இறந்துபோன உடலின் துண்டங்கள் மட்டுமே.

தானாகவே உருவாகும் அல்லது நேரும் ஒரு வடிவமே கவிதை. திட்டமிட்டு செய்யப்படும் ஒன்று கவிதையாகாது. வார்த்தைகள் துருத்திக்கொண்டோ அதீதமாகவோ இருக்குமெனில் அந்த வடிவம் தனக்கான உயிர்ப்பை இழக்கிறது. சமகால கவிதைகள் குறித்து முன் வைக்கப்படும் விமர்சனங்களில் புரிவதில்லை எனும் பொத்தாம் பொதுவான கருத்தொன்று வானம்பாடிகளின் கவசமாய் நம் தமிழ் மூளைகளை இன்னமமும் பாதுகாத்துக்கொண்டு வருகிறது.மேம்போக்கான, செத்த,பழைய அணுகுமுறைகளை தனக்கான அடையாளமாக கொண்ட சில,பல பழகிய மூளைகள் தங்களின் பாதுகாப்புணர்வின் மிகுதியால் தொடர்ச்சியாய் முன்வைக்கப்படும் வாதங்களில் ஒன்றுதான் கவிதைகளில் ஆபாசம்.

இந்த வெற்று விவாதங்களுக்கு பதில் சொல்வதை விட கவிதைகளில் படிமம் என்பதென்ன?அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்துப் பார்ப்போம். கவிதைப் படிமம் (poetic image) என்பது பொருள், எண்ணம், கருத்து, உணர்வு என்பவைகளைப் புலன்வழிக் காட்சிகளாகவோ, நுண்காட்சிகளாகவோ, புலனுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களாகவோ மாற்றி வழங்குவது.படிமம் அலைந்து திரிவதில்லை. யோசனைக்கும் தீவிர சிந்தனைக்கும் அறிவுக்கும் இட்டுச் செல்லாமல் அனுபவத்தின் நுழைவாசலில் சுருக்கமாக இயங்குகிறது. அடுத்த நிமிஷத்தில் அந்த இயக்கம் மறைந்து படிமமே அனுபவமாகிறது.

'பாம்புப் பிடாரன் சுருள் சுருளாக வாசிக்கிறான் ' இது பாரதியின் படிமம், இசையை கண்களில் கொண்டு வந்து நிரப்பும் உணர்வைப் பெற முடிகிறதல்லவா?.


இன்னும் சில படிமங்கள்


'கூழாங்கற்களின் மெளனம்- கவிஞனுடைய உலகில் அஃறிணை என்பது இல்லை. 'மூலைகள் வெடித்துப் பெருகி இன்னும் இன்னும் மூலைகள் ' 'ஒருகை மீது இப்போது மழைவீழ்கிறது, மற்றதிலிருந்து புல் வளர்கிறது ' 'ஒரு நாள் கூந்தல் இழைகளிடை காற்று பிணங்கள் இழுத்துக் கொண்டோடியது ' இந்த சர்ரியலிசப் படிமங்கள் தம் இருப்பிடங்களில் 'விநோதம் ' என்று தோன்றாமலே வித்தியாசமான உணர்வுகளை எழுப்பக் கூடியவை
'என் பிடறியில் குடியிருக்கும் இருள் கலைந்து புறப்பட்டு நிசப்தத்தில் வானை நிரப்புகிறது '
இது இன்னொரு சிறந்த படிமம்

பாஷோவின் ஒரு ஹைகூ கவிதையை பார்ப்போம்


நங்கூரத்தின் மீது

ஒரு கடற்பறவை

அமைதியாக

திடாரென்று நங்கூரம்

நீரில் மூழ்கியது

காற்றில் அலை மோதி

வானில் ஏறியது பறவை.


இதில் நங்கூரம், பறவை ஆகியவை வாசகனால் எப்படியும் அர்த்தம் தரப்படலாம். இக்கவிதை ஒரு அர்த்த சட்டகத்தை உருவாக்கவில்லை. ஒரு உள நிகழ்வின் சட்டகத்தை மட்டுமே உருவாக்குகிறது
இப்படி நல்ல கவிதைப் படிமங்கள் ஏராளமாகச் சொல்லிப் போகலாம். மொத்தத்தில் இன்றைய படிமங்கள் அரூப நிலைகளை நோக்கியவை; மெளனத்தைத் தொடமுயல்பவை. இந்தவிதமான நுண்மையை உவமை உருவகம் கொண்டு சாதிக்க முடியாது. அவை செல்வாக்கு இழந்ததற்கு இது ஒரு காரணம், அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டது; அலங்கரிக்க, சாமர்த்தியம் காட்ட, விளக்கம் சொல்ல எனக் கவிதைக்குப் புறம்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டது. மற்றபடி இன்றும் இனியும் நல்ல உவமைகளுக்கு மதிப்பு இல்லாமல் போய்விடாது.


அடர்வு தன்மை கொண்ட அரூப கவிதைகள் ஒருபுறமும் படிமமும் நுட்பமும் புனைவும் மாந்திரீக யதார்த்தவியங்களும் ஒருபுறமும் கண்ணில் படுவதையெல்லாம் கவிதையாக்கும் யுக்தி ஒருபுறமும் விளிம்பின் வலிகளை அப்பட்டமாய் முகத்திலறைவது போல பதிவித்தபடி எந்த கட்டுக்களிலும் அடங்காத கவிதைகள் ஒருபுறமுமாய் தமிழ்க் கவிதைகள் தனக்கான நகர்வுகளில் திருப்தியாகவே இருக்கிறது.செத்த உடல்களை புணர்ந்து திரியும் பரிதாபத்திற்க்குரிய வாசகனையும் வெற்றுச் சொற்களால் பரப்பை நிறைக்கும் தமிழ்க்கவி சல்லிகளையும் புறந்தள்ளியபடி முன் நகர்கிறது உயிர்ப்பான கவிதை.


ஒப்பீடு


அபி நேர்காணல்

தேவதேவன் நேர்காணல்

ஜெயமோகன் குற்றால பதிவுகள் இலக்கிய அரங்கு 2
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...