அவனும் அவளும் சந்தித்துக் கொண்டது ஒரு மழை நாளின் மாலையில்.ஏற்கனவே அறிமுகமானவர்கள் தாமெனினும் அப்போதுதான் பேசிக்கொண்டார்கள்.ஒரே புள்ளியில் அவர்கள் நிலைபெற்றிருப்பினும் அந்த மழை மாலைக்கு முந்தய கணம் வரை ஏனோ அவர்கள் பேசிக்கொண்டதில்லை.எந்த ஒன்றின் அவசியத்தில் இருவர் பேசிக்கொள்கிறார்கள் என்பது இன்றுவரை புதிராகவே இருந்து வருகிறது.பிறகெப்பாவது அந்த கணத்தை தவிர்த்திருக்கலாமோ என்கிற இயலாமைகளின் புலம்பல்கள் தோன்றாத வரை அக்கணம் எப்போது நினைத்தாலும் சிலிர்ப்பையே ஏற்படுத்தி வந்திருக்கிறது.முதலில் வெட்கங்களும் தயக்கங்களும் மிகுந்தவளாய் ஒரு பொய்த்தோற்றத்தை அவள் நிர்மாணித்தாள் பின்பு ஏதோ ஒன்று உடைந்ததைப் போன்று பேச ஆரம்பித்தாள்.பருவ முடிவுகளில் பெரும்பாலும் மாலை நேரத்திலே ஏன் மழை பெய்கிறதென்பது அவளின் நெடுங்கால சந்தேகமாய் இருந்து வந்திருக்கிறது.மெல்லிய தூறலில் நனைவதென்பது அவளுக்கு பிடித்தமான ஒன்றாம்.இடியுடன் மழை பெய்தால் போர்வைக்குள் சுருண்டு கொள்வாளாம்.தமிழ் திரைப்படங்களுக்கு பாடலெழுதும் ஒரு மட்டமான கவிஞனின் சில வரிகளை சொல்லி சிலாகித்தாள்.அதிக புத்தகங்கள் விற்றுத்தீர்க்கும் மூன்றாந்தர கவிஞன் ஒருவனின் கவிதை தொகுப்புகள் அத்தனையும் பிடிக்குமாம்.பின்பு அவனை பற்றி பேச ஆரம்பித்தாள்.அவனின் மெளனம் அவளுக்கு பிடித்தமான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.அவனின் அறிவுஜீவித்தனம் குறித்தெழும் விமர்சனங்களின் மீது அவளுக்கு உடன்பாடு இருந்ததில்லையென்றும் எப்போதும் விவாதங்களை தவிர்க்கும் அவனின் அனுகுமுறை பிடித்தமான ஒன்றாக அவளுக்கு இருந்து வந்திருக்கிறது எனவும் சொன்னாள். அவன் தலைவாரி இருக்கும் முறை தன் ஆதர்ச தமிழ் சினிமா கதாநாயகனின் சாயலை ஒத்திருக்கிறதெனவும் சிலாகித்தாள்.அவன் தலையசைப்புகளோடும் குறுநகைகளோடும் அவள் விழிகளையே பார்த்துக்கொண்டிருந்தான் நீரில் மென்காற்று சுழியிடும் வட்டங்களைப் போல அவை விரிந்தும் குவிந்தும் விலகியும் நெருங்கியுமாய் பல்வேறு தோற்றங்களை பதிவித்துக்கொண்டிருந்தது.அவளின் முலைகள் அம்மழை மாலையில் அவனினுள் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. தன் ஒற்றை சடையை முன்புறம் தொங்கவிட்டு விரல்களால் அவற்றை பிடித்தபடியுமாய் பேசிக்கொண்டிருந்த அவளின் முகத்தில் மழைத்துளியொன்று பட்டுத் தெறித்த கணத்தில் அவளைக் காதலிப்பதென்று முடிவு செய்தான்.
பின்பொரு பேருந்தில் அருகருகே அமர்ந்து சென்றபோது அவளின் வாசம் மிகுந்த இணக்கமாய் இருந்ததவனுக்கு.மழை விட்ட பின்பும் சொட்டிக்கொண்டிருக்கும் தூறலை நினைவு படுத்திய அவளின் பேச்சு மிகுந்த கிளர்ச்சியை ஏற்படுத்தியது.ஒரு திருப்பத்தில் அவள் விடை பெற்று சென்ற போது இதே கணத்தில் எப்போதோ இருந்ததாய் அவனுக்கு தோன்றியது இதே கணத்தைப் போன்றதொரு முன்பொரு கணத்தின் தொடர்ச்சியா அல்லது இது புதிதா என்பது குறித்த சந்தேகங்களுடன் நகர் விட்டு தள்ளியிருக்கும் அவன் இருப்பிடம் சென்று தாழிட்டுக்கொண்டான்.அவனின் கதவுகள் வேறு யாரையும் அனுமதிப்பதில்லை. பெரும்பாலும் தூங்கிப்போகும் அவன் இரவுகள் அன்று விழித்துக்கொண்டது.
புகைவளையங்களுக்கு நடுவே அவன் அறிவுஜீவி தோழியின் நினைவு வந்து போனது.
தனது மிருக நினைவுகளை அவன் தேடிக்கொண்டிருந்த சமயத்தில் வழி தப்பி அலைந்து கொண்டிருந்த அவளை சந்திக்க நேரிட்டது.அவளின் அலைவுகளில் துக்கம் கவிழ்ந்திருந்தது.இடைவிடாமல் துயரத்தை சிலாகித்த வண்ணம் எப்போதும் புகைத்துக் கொண்டிருப்பாள்.புலிப்படிமம் மீதவளுக்கும் கிளர்ச்சி இருந்தது தானொரு பெண்புலியாக எனது தனிமை புனைவுகளில் உருவமெடுத்துக் கொள்கிறேன் என அவள் இருகிய முகத்தோடு சொன்னபோது அவனுக்கு மனம் பிறழ்ந்தது.ஒரு நாள் அவளுடைய ஓவிய கூடத்திற்க்கு அவனை கூட்டிச் சென்றாள்.தொடர்ச்சியாய் ஓவியங்களை வரைவது அவளுக்கு எப்போதும் பிடித்தமான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாது அவள் வரையத்தொடங்கி முடியும் தருவாயில் பெரும்பாலும் அவை புலிகளாக மட்டுமே உருவம் கொள்கிறதென வருந்தினாள்.புலியின் ஓவியம் தவிர என்னால் வேறெந்த ஒன்றையும் வரைந்து விட முடிவதில்லை என் அவள் துயருற்ற போது அவன் அவ்வோயியங்களை பார்க்க கேட்டான்.அதற்க்கு அவள் தான் வினோத குணம் ஒன்றைக் கொண்டிருப்பதாகவும் தொடர்ச்சியாய் பத்து ஓவியங்களை வரைந்த பின் மொத்தமாய் சுருட்டி எடுத்துக்கொண்டு நள்ளிரவில் கடற்கரையில் எறிந்துவிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் சொன்னாள்.அதற்க்கான விளக்கம் கேட்டபோது பதில் அவளிடம் இருக்கவில்லை.
வினோதங்களின் மொத்த உருவமாய் அவள் தன்னை முன் நிறுத்த விழைந்தது அவனுக்குப் பிடித்திருந்தது.இன்றைய இவளின் மயக்கத்தில் தோன்றிய காதலிக்கும் முடிவுகள் அப்போதும் தோன்றியதவனுக்கு.அவன் தன்னுடைய காதலை கடற்கரை இருளில் அவள் விரல்களைப் பற்றியவாறு மனம் நெகிழ்ந்து சொன்னபோது அவள் பெருங்குரலெடுத்துச் சிரித்தாள்.நீ முப்பதாவது ஆள் என அவள் சொன்னபோது அவனுக்கு கோபம் வரவில்லை மாறாய் அவளின் மீதான காதல் எண்ணம் வலுப்பெற்றது.மேலும் அவள் நீ என்னைப் புணர்வதென ஆசைப்பட்டாள் இந்த வெளியில் இந்த இருளின் துணையொடு என்னைப் புணர்ந்து கொள் காதல் என்றெல்லாம் பிதற்றாதே அந்த சொல் இப்போது புழக்கத்தில் இல்லை என்றாள்.முகத்திலறைபட்ட அவன் தனக்கான புனிதங்களை சேமித்தபடி
இல்லை புணர்வதில்லை என் நோக்கம் உண்மையிலே உன்னை காதலிக்கத் தோன்றியது உன் ஆளுமை எனக்குப் பிடித்திருக்கிறதுஎன்றபடி தனது பசப்பு வார்த்தைகளை துணைக்கழைத்து அவளின் நிகழ்வை சிதைத்தான்.
அவளை விட பதினைந்து வயது சிறிய அவனது விடலைப் பருவத்தின் கிளர்ச்சிகளே இப்பிதற்றல்களுக்கு காரணமெனப் புரிந்த அவள் அவனிடம் ஒரு சிறிய விளையாட்டைத் தொடங்கினாள்.தொடர்ச்சியாய் காதல் கவிதைகளெழுதியும் ஒரே நாளில் முப்பது பக்கத்திற்க்கு கடிதமெழுதியும்,தமிழ் சினிமா நாயகிகளை அப்படியே பிரதிபலிக்கும் த்வனியில் அவனை, அவன் இளமையை மிகுந்த குரூரங்களோடு ஆக்ரமித்தாள். இருவரின் நிகழும் வேறெந்த தளத்திற்க்கும் நகரவியலாது சில மாதங்கள் உறைந்து போனது.ஒரு நள்ளிரவு மழையில் தட்டப்பட்ட அவன் அறைக்கதவுகளை திறந்தபடி வெளிவந்த அவன் குழம்பி நின்றான் மழையோடு மழையாய் நின்று கொண்டிருந்தாள் அவள். தான் விடிவதற்க்குள் இனி திரும்பியே வரமுடியாத தன் சொந்த தீவுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருப்பதை மிகுந்த பதற்றங்களோடு கூறினாள்.விடைபெற்று போவதற்க்காய் வந்ததாகவும் சில காலம் அவளை காதல் வயப்படவைத்ததிற்க்கு அவனுக்கு நன்றிகளையும் ஒரே ஒரு முத்தமொன்றையும் தந்துவிட்டுப்போக எண்ணி வந்தேனென சொல்லியபடி அவன் உதடுகளை கவ்விக் கொண்டாள்.
இன்று தூங்காமலே விடிந்ததும் அன்று விடிந்த பின்பு விலகிய உதடுகளும் ஒரே மாதிரி உணர்வையே தந்தது வெளுத்த உதடும் வெளுத்த கண்களும் இவ்வுடலில் ஒரே மாற்றங்களையே ஏற்படுத்துகிறது.
ஒரு புள்ளியில் நிலை கொள்ள விடா இருப்பு தனக்கான நகர்வுகளை கட்டமைத்துக் கொள்கிறது.நிலையானதென்பதோ மாறாத ஒன்றென்பதோ இறந்த ஒன்றின் சுவடுகளாய் மட்டுமே இருக்க முடியும் என்றுணர்ந்து நிகழ்கால இவளின் மீதான தன் அன்பை படரவிட்டான். அஃதொரு காட்டு கொடியினையொத்து வேர்களையே சூழ்ந்து கொண்டது.
தன் காதலை சொல்லாமல் விட்டு வந்த அம்மழை மாலையின் தொடர்ச்சியாய் இன்னொரு மழை மாலைக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.எப்போதும் தொடர்புகளின் தொடர்புகள் அவனுக்கு மிகுந்த நிறைவைத் தருவதால் தொடர்புகளற்ற செயல்களை அவன் செய்யத் துணிவதில்லை.
கால சுழற்சியின் எந்த ஒரு மாலையிலும் மேகங்கள் கூடவில்லை.வானம் பார்த்தபடி தன் கனவுகளனைத்தையும் பிரதிகளாய் மாற்றியபடி அந்த நாளின் பரவசத்திற்க்காய் காத்திருந்தான்.ஊழி நிறைக்கும் பெருமழையொன்று அவளை சந்தித்துப் பிரிந்த நூற்றி முப்பத்து மூன்றாவது நாள் பெய்ய ஆரம்பித்தது பொழுதுகளின் மேல் தனது வன்மத்தைக் கொண்டு போர்த்தி மழை மட்டுமே இவ்வுலகின் பிரதானம் என ஆங்கர குரலில் சப்தங்களின் துணையொடு தாண்டவமிட்டது ஆதியின் பெருமழை.
தொடர்புகளின் சாரம் குலையாத மாலையொன்றில் விரகங்களையும் காதலையும் துணைக்கழைத்து மழையில் நீந்திச் சென்றான்.நகரின் எந்த ஒரு இடத்திலும் மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் காணப்படவில்லை.சந்தித்துப் பிரிந்த அவ்விடத்தை அடைந்தபோது ஒரு உடல் அவள் சாயலில் மிதந்து கடந்தது.
10 comments:
//பிறகெப்பாவது அந்த கணத்தை தவிர்த்திருக்கலாமோ என்கிற இயலாமைகளின் புலம்பல்கள் தோன்றாத வரை அக்கணம் எப்போது நினைத்தாலும் சிலிர்ப்பையே ஏற்படுத்தி வந்திருக்கிறது.//
அற்புதமான வரிகள் அய்யனார்.
your last poem and this story are interesting
ஆரம்பிச்சுட்டாரு அடர்கானக புலி.
அய்யனார் இந்த குறிப்பிட்ட படைப்பு, என் நண்பனொருவன் எங்கள் கல்லூரி கையெழுத்துப்பிரதிக்காய் எழுதியதை ஒத்திருக்கிறது. அவன் ஒரு மாலையும் சில நனைதலுமென பெயரிட்டிருந்தான். இப்போது தொடர்பற்றுப்போய்விட்ட அவனை ஞாபகப்படுத்தி விட்டீர்கள் .
நல்லா இருய்யா....
புனைவு நல்லாவே இருக்கு. ஆனால் நீங்கள் சேமித்து வைக்கும் கற்பனையை அடர்கானகத்திலும், புலியிலும், காதலிலும் தொலைக்காமல் வேறு தளத்திற்கு சென்றால் நன்றாக இருக்கும்.
நன்றி லக்ஷ்மி
thanks..anony
சந்தோஷம் கென் :)
மின்னல் கோச்சுக்காதயா
நன்றி ஜெஸிலா
இந்த மூன்றும்தான் இப்போதைக்கு வசீகரமா இருக்கு....கண்டிப்பா அடுத்த தளத்துக்கு எப்பவுமே நான் ரெடிதான் :)
can we meet sun day buddy!!
Nice!
-Mathy
உரை வீச்சு.. இது தானே லேபிள் போட்டிருக்கு... எழுதிய படிதான் எப்போதும் நீங்கள் ஊரை வீசுவிங்களா?
:))))
Post a Comment