Thursday, August 30, 2007

துயரத்தின் இசை – கானல் நதி



கானல் நதி-யுவன் சந்திரசேகர்

நான் வெளியேற்றும் சுவாசக் காற்றில் ஒலி சேர்த்து சங்கீதமாக உருவமைக்கிறேன்.எனில் நான் உள்ளிழுக்கும் காற்றிலும் அதே சங்கீதம் இருக்கத்தானே வேண்டும்.பாடப்படாத சங்கீதத்தை உள்ளிழுத்து உயிர் தரிக்கும் விநோத ஜீவராசிதான் போலும் நான்.


மனம் இன்னும் அலைந்தபடியே இருக்கிறது.கல்கத்தாவின் வீதிகளிலும்,மாமுட்பூர் கிராமத்திலும்,காளிகாட்டிலும்,கங்கையின் கரையோரங்களிலுமாய் நினைவு சென்று தங்கிவிட்டது.தனஞ்செயனின் துயரமும் அலைவுகளும் அப்படியே மனதில் உறைந்துவிட்டது.அடர்வு மிகுந்த இந்த கணங்களை என்னசெய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் அசையாது உட்கார்ந்திருந்தேன்.நேரடியாக தாக்க வல்ல எழுத்து யுவனுடையது.இந்த நாவலை பொறுத்தமட்டில் புதிய தளத்தில் புதிய வார்த்தைகளில் எழுதப்பட்ட மோகமுள்ளின் வளர்ந்த வடிவம் என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது எனக்கப்படித்தான் பட்டது.இசையை பின்புலமாக கொண்ட செறிவான புதினமொன்றை வெகு சொற்பமாகத்தான் படித்திருக்கிறேன்.மோகமுள்ளுக்கப்புறம் லா.ச.ரா வின் தாக்ஷ்யாணியும்,பச்சைக் கனவும்தான் ஒரு அதிர்வை இசையின் பின்புலத்தோடு ஏற்படுத்தியிருந்தது.ஆனால் கானல் நதி சுத்தமாய் என் நினைவுகளை இசையில் கரையச் செய்துவிட்டிருக்கிறது.மொத்தமாய் துயரத்தை கொட்டிக் கவிழ்த்த இந்த எழுத்தின் வலிமை வார்த்தைகளில் சொல்லமுடியாதது.யுவன் சந்திரசேகரின் குள்ளசித்தன் சரித்திரம் ஏற்கனவே படித்திருந்தும் அது இந்த அளவிற்கு கட்டிப்போடவில்லை.

புனைவின் ஆரம்ப பூச்சுகளோடு துவங்குகிறது முதல் அத்தியாயம்.நம்பகத் தன்மைக்கான சாத்தியக்கூறுகளை முன் வைக்கும் விதமாக தன்ஞ்செயனின் வரலாற்றை எழுதும் கேசவ சிங் சோலங்கியின் முன்னுரையோடு துவங்குகிறது.கல்கத்தாவின் உள்ளடங்கிய கிராமமான மாமுட்பூருக்கு நம்மை கொண்டு செல்லும் யுவனின் எழுத்து யுக்தி அபரிதமானது.அழகான கிராமமொன்றில் தன் சின்னஞ்சிறு குடும்பத்தோடு வாழும் கிரிதர் முகர்ஜின் இரண்டாவது மகனான தன்ஞ்செய்முகர்ஜியின் அபரிதமான இசை ஞானமுணர்ந்து அவனை விஷ்ணுகாந்த சாஸ்திரியிடம் இசைகற்றுக்கொள்ள அனுப்புகிறார்.தனஞ்செயனின் பால்யம் மிக அழகானது அவனை சுற்றி எல்லாரும் அற்புதமான மனிதர்கள் அவனின் தேவைக்காகவே வாழ்பவர்கள்.அண்ணன் சுப்ரேதா,தங்கை அபர்ணா, இசை ஞானத்தை அன்போடு வழங்கும் குரு எல்லாவற்றிகும் மேலாய் அத்தை மித்தாலி.தனக்கு வழங்கப்பட்ட சூழலின் துணையோடு இந்துஸ்தானி இசையின் தடங்களை நேர்த்தியாய் பிடித்துக்கொள்கிறான்.

பெண்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். பெண்தான் சகல பிரச்சனைகளுக்கும் காரணம். பெண்தான் சக்தி.தனஞ்செயனையும் கடைசி வரை அலைக்கழித்தது சரயூ தான்.பதின்மங்களில் இந்த அழகான பெண்கள் எப்படியாவது மனதில் வந்து உட்கார்ந்து கொள்கின்றனர். விழியசைவில் சகலத்தையும் தட்டிப்பறிக்கின்றனர்.ஆதித்தீயின் ஊற்றுகளை அடையாளம் காட்டிவிட்டு வந்த சுவடில்லாமல் மறைந்துபோகின்றனர்.உடலழியுமட்டும் பற்றியெறிகிறது நெருப்பு. தனஞ்செயனையும் இந்த நெருப்புதான் அழிக்கிறது.பெண்ணின் இழப்புகளோடு மேதமைத் தன்மைகளும்,மதுவும் சேர்ந்து கொண்டு துயரமும் பேரின்பமும் மாற்றி மாற்றி நிகழை அலைகழிக்கிறது.இறுதியில் துயரம் மட்டும் விஞ்சி தனக்கான ஏதோ ஒன்றின் அபத்தங்களை நிருபித்துவிட்டு அற்பமாய் முடிந்து போகிறது.

பால்யம்,வாலிபம்,நாட்குறிப்பு,அழைப்பு என நான்கு பாகங்களாக நாவல் பிரிக்கப்பட்டிருக்கிறது.மனதின் ஆழ்நிலைகளை, நுட்பமான சலனங்களை,ஆழ்குளத்தின் அசைவுகளை, நகர்ந்து கொண்டிருக்கும் மணித்துளிக்கு நிகரான துல்லியமாய் நாட்குறிப்புப் பிரிவில் பதிக்கப்பட்டுள்ளது. எதைத்தேடி அலைகிறோம் என தெரியாமல் எந்த ஒன்றிலும் நிலைகொள்ளாது மிகுந்த கழிவிரக்கத்தோடும் வாழ்வின் இருளான பக்கங்களில் எதையோ தேடி அலைந்தும் நினைவின் கசப்புகளை தொலைக்க முடியாமலும் அலைக்கழியும் உடலையும் மனத்தையும் அழைப்பு எனும் பிரிவில் மிகுந்த வலிகளோடு பதிவித்திருக்கிறார்.

நான் பாடகன் அல்ல யாத்ரீகன்.சதா திரிந்துகொண்டே இருக்கிறவன் குறிப்பான திட்டம் எதுவும் கிடையாது யாத்திரை செய்வது மாத்திரமே இலக்கு.புதிய இடங்களைப் பார்க்கும் ஆவலால் அல்ல ஒரே இடத்தில் ஸ்திரமாய் இருக்கப் பிடிக்காததால் திரிகிரவன்.பாடும் நேரத்தில் என்னுள் பொங்கும் தனிமையின் ஆராதகன்.சங்கீத பூமியின் மலைப்பிரதேசங்களிலும் கடற்கரைகளிலும் வனாந்திரங்களிலும் தனியாக திரிகிறேன்.அதன் ஆளறவமற்ற இடங்களிலும் ஜன நெரிசல்களிலும் நான் சென்று சேர்வதற்கு முன்னால் என் தனிமை எனக்காகச் சென்று காத்திருக்கிறது.


நேற்றிரவில் முதன்முதலாய் ஸ்ரயூ ஒரு பெண்ணுடலாக ஆனாள்.என் கனவில் பூத்த மலரை யாரோ ஒருவன் பறித்து செல்கிறான்.இத்தனை நாளும் நேர்த்தியாக உடுத்து என்முன் நடமாடிய அழகிய பிம்பம் உடைகளை களைந்து விட்டு பளபளவென்று வழுவழுவென்று எவனோ ஒருத்தனின் ஆளுகையில் புரள்கிறது.பெரும் ஏக்கம் என்னை பீடிக்கிரது.தனியாக இருக்க கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் பரிதாபமான யோக்கியனாக இருந்துவிட்டேனே என்று குமைகிறேன்.
ஸ்ரயூவை என் உள்ளங்கைக்கு இடம்பெயர்த்தேன்.


ரகசியம் போலவும் ராட்சஸி போலவும்,ஆனந்தம்போலவும் பயங்கரம் போலவும் நீர்ப்பெருக்கு போலவும் சூரிய ஒளியில் மினுங்கும் பனித்தரை பொலவும் ஒரே சமயத்தில் காட்சி தந்த கங்கையை முடிந்த மட்டுக்கும் தன் சின்னஞ்சிறு நெஞ்சுக்குள் வாங்கி நிரப்பிக்கொள்ள முயன்றான் தன்ஞ்செயன்.


வாதையின் இடையறாது அதிரும் தந்திகளால் முடிவற்ற துயரத்தின் இசையை கசியச் செய்கிறது இந்த நாவல்.

கானல் நதி
யுவன் சந்திரசேகர்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 374
விலை:Rs.200.00

Sunday, August 26, 2007

வழி நெடுகிலும் வலிகள்


கதிரை லுலு சிக்னலில் வைத்து முதன்முறை பார்த்தபோது குமார் நினைவில் வந்து போனான்.கதிரின் உயரமும் முகச் சாயல்களும் அப்படியே அவனை நினைவு படுத்தியது.சிவாவின் வெல்ல மண்டியில்தான் குமார் வேலை பார்த்தான்.பஜாரில் எல்லா ஓனரிடமும் சுறுசுறுப்பான பையன் என்ற நல்லபெயர் அவனுக்கு.காலையிலிருந்து சாயந்திரம் ஏழு மணி வரை சிவா மண்டியிலும் ஏழு மணிக்கு மேல் திருமஞ்சனகோபுர வீதியிலிருக்கும் நண்பர்கள் பைனான்சிலும் வேலை பார்ப்பான்.கரஸில் பி.காம் முதல் வருடமும் சேர்ந்திருந்தான்.'அண்ணோவ்' என வாஞ்சையாய் கூப்பிடுவான்.கல்லுரி வார விடுமுறைகளில் ஊருக்கு வந்துவிடுவேன் பாரதி,செந்தில்,பழனியோடு என்னையும் எப்போதும் சிவா மண்டியில் பார்க்கலாம்.பாரதிக்கு குமார் மேல் அளவு கடந்த பொறாமை இருந்தது
'வெல்லம் எட போடுறவன் எவ்ளோ டீசண்டா கீரான் மச்சான் நீ ஏன் இப்படி கிறுக்கனாட்டம் சுத்துற' என சிவா அவனை கிண்டலடிப்பதும் அவன் பொறாமைக்கான இன்னொரு காரணம்.குமாரை டீ வாங்க அனுப்புவதில் உள்ளூர ஒரு திருப்தியும் பாரதிக்கு இருந்தது.

குமாருக்கு என் மேல் தனிப்பட்ட பிரியம்,தினம் பார்ப்பவர்களை விட சிறுசிறு இடைவெளிகளுக்குப்பின் பார்ப்பவர்களின் மேல் தோன்றும் அன்பு எப்போதும் தனித்தன்மை கொண்டதுதானே.அவன் குடும்ப பிரச்சினைகளை எல்லாம் சொல்லுவான்.குமாரின் அப்பா மொகைதீன் பாய் பழமண்டியில்தான் வேலை பார்த்தார்.'ஒண்ணுதுக்கும் துப்பு இல்ல' என பாய் சாயந்திரங்களில் அவன் அப்பாவை திட்டிக்கொண்டிருப்பார்.குமாரின் அப்பா பிழைக்கதெரியாதவராய் இருந்தாலும் எவ்வித கெட்டபழக்கங்களும் இல்லை.அதுவே பெரிய ஆறுதலாய் இருந்தது.அம்மா மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் தங்கையோடு சக்தி தியேட்டர் மேட்டில் ஒரு சின்ன ஓட்டு வீடுதான் அவனுடையது.அதுவும் கூட பட்டா இல்லை என ஒருமுறை சொன்ன நினைவு.ஆனாலும் குமாருக்கு தன்மானம் அதிகம்.சம்பளம் தவிர்த்து அட்வான்ஸ் கூட கேட்டதில்லை என சிவா சொல்வான்.ஒருநாள் அரைபீர் துணையோடு
'உனக்கு ஏதாவது வோனும்னா கேள்டா ஊமையாட்டம் இருக்காத புரியுதா' என சிவா சொன்னபோது கூட 'எனுக்கின்னா கொறண்ணோவ்' என்றான்.

ஞாயிற்றுக்கிழமை சாயந்திரங்களில் மலைசுற்றும் வழியிலிருக்கும் துர்க்கம்மா கோயிலுக்குப் போவது வழக்கம்.ஆள் நடமாட்டம் குறைந்த அவ்விடத்தில் இருட்டும் வரை உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம்.ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது பாரதி பரபரப்பாய் எழுந்தான் மச்சான்! ஏஏஏ!! குமார்ரா! குமார்ரா!! என கத்தியபடி டிவிஎஸ் ஐ கிளப்பினான்.என்ன ஏது எனப் புரியாமல் வண்டியை கிளப்பி பின் தொடர்ந்தோம்.குமார் தலைக்கு முக்காடிட்ட பெண்ணை பின்னால் உட்கார வைத்தபடி வண்டி ஓட்டிக்கொண்டு போனான்.பாரதி முதலில் வண்டியை விரட்டி வழிமறித்தான்.'டேய் குமாரு' என கேவலமாய் சிரித்தபடி காலை ஊனினான்.அசிங்கமாய் இருந்தது எங்களுக்கு இவன் பின்னால என்னவோ ஏதோன்னு வந்தமே என நொந்து கொண்டோம்.இருப்பினும் குமாரை இப்படி பார்க்க ஆச்சர்ய்மாய் இருந்தது.அதைவிட ஆச்சர்யம பின்னால் உட்கார்ந்திருந்தது தமிழ்செல்வி.பஜார் கவுன்சிலரின் மகள் நான்கு வட்டிக்கடை உட்பட அவளின் அப்பா கந்துவட்டி,கட்ட பஞ்சாயத்து, கட்டை கடத்தல் எல்லாவற்றிலும் பெயர் போன ஆள்.

தமிழ்செல்வி பதட்டமே இல்லாமல் இறங்கினாள்.'ஹாய் அண்ணா' என சிவாவிடம் பேச்சு கொடுத்தாள்.அவனால் எதுவும் பேசமுடியவில்லை.'சரி இருட்டிடுச்சி கிளம்புங்க' என்றான்.
பாரதியால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை மச்சான்! எப்படிடா? எப்படிடா?? என புலம்பித் தள்ளினான்.'இன்னிக்கு குடிச்சே ஆவனும்டா! என எல்லாரையும் கற்பகத்திற்கு கூட்டிப்போனான்.கேட்காமலே பீர் வாங்கிகொடுத்தான்.வழக்கமாய் பாரதி ஐந்து பைசா எடுக்கமாட்டான்.அரை பீர்தான் அவன் கெபாசிட்டி ஆனால் அன்று ஒரு பீரை குடித்துவிட்டு 'ஓ'ன்னு அழுதான்.'அந்த பொண்ண நான் லவ் பண்ணன் மச்சான்' எனத் தேம்பினான்.அடக்கொடுமையே என்றிருந்தது.சிவா மண்டிக்கு எதிர்த்த வீடுதான் தமிழ்செல்வியோடது.சிவா கடையில் உட்கார காரணமே தமிழ்செல்வி பார்க்கும் சாக்குதான் என்றபோது சிவா டென்சனானான்.ங்கோத்தா! என்ன பார்க்க வரலியா நீ! என அடிக்கப் போனான்.ஒரு வழியாய் எல்லாரும் வீட்டுக்கு போனோம்.

மறுநாள் நான் கிளம்பிப் போய்விட்டேன்.சிவாவுக்கு தொலைபேசி குமார எதும் கேட்காதீங்கடா! 'நீ மட்டும் தனியா கூட்டி போய் அட்வைஸ் பண்ணு' எனத் துண்டித்தேன்.அடுத்த வரம் வந்தபோது குமார் தயங்கி தயங்கி பேசினான்.
'அவ ரொம்ப டீப்பா கீராண்ணா..எவ்ளோ ட்ரை பண்ணி பார்த்தேன் ஆனா நான் இல்லன்னா செத்துடுவன்றாண்ணா' மொத மொறயா ஒரு பொண்ணு எங்கிட்ட இந்த மாரி சொல்லுது வுட்ரமுடியுமாண்ணா? என்றான்.'அவ அப்பா மோசமானவண்டா' உனக்கு தெரியாதா? என்றபோது 'இல்லண்ணா அவ சம்மதம் வாங்கிக்கலான்ரா ணா'..'நான் மொதல்ல பி.காம் முடிக்கனும் என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிகொடுக்கனும்' அப்புறம் இது பத்தி அவ அவங்க அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கிதரேன்னு சொல்லியிருக்காண்ணோவ் என்றான்.'அநாவசியமா வெளியில சுத்தி எவங்கண்லயாவது மாட்டி தொலைய போற பத்திரமா இரு' எனசொல்லிவிட்டு வந்தேன்.

இறுதி வருட தேர்வுகள் நெருங்கி கொண்டிருந்ததால் தொடர்ந்து மூன்று வாரமாய் ஊருக்குப் போகமுடியவில்லை.ஒரு வெள்ளிக்கிழமை இரவு செந்தில் தொலைபேசினான்.'மச்சான் நம்ம குமாரு எகிறிட்டான் டா''இன்னாடா சொல்ர?'ஆமாம் மச்சான் நேத்து நைட்டு பொண்ண தூக்கிட்டான்'என்றதும் அதிர்ந்து போனேன்..'மச்சான் கிறுக்காடா அவனுக்கு அவங்கப்பன் மோசமான தாயோலி டா எனப்பதறினேன்.'ஆமாம் மச்சான் ஊர் ஊரா தேடுறானுங்க' 'நம்ம சிவாவ ஸ்டேசன் கூட்டிப்போயிருக்கானுங்க' என்றான்.. நான் இதோ கிளம்பி வரேன் என்றதிற்கு 'உன்ன வரவேணாம்னு சொல்லத்தான் போனே பண்ணேன்'.நீ இப்ப வராதே நெலம சரியானதும் நான் போன் பன்றேன்' என தொடர்பை துண்டித்தான்.இரண்டு நாள் நிலை கொள்ளாதிருந்தது.

மூன்றாம் நாள் சிவா பேசினான் 'மச்சான் பொண்ண இட்டாண்டானுங்கடா''குமாரு என்ன ஆனான்னு தெரியலடா' என்றதும் இதுக்கு மேல தாங்காது என்றபடி கிளம்பி ஊருக்குப் போனேன்.எல்லாரும் விபிசி தியேட்டர் எதிரிலிருக்கும் கற்பகத்திற்கு போனோம்.சிவாவும் நானும் குமாரை திட்டித் தீர்த்தோம் ''ரொம்ப அவசரபட்டுட்டாண்டா' என அங்கலாய்த்துக்கொண்டோம்.பாரதி லேட்டாய் வந்தான்.ஓரமாய் போய் தலை கவிழ்ந்து உட்கார்ந்து கொண்டான்.சிவா கோபம் தாங்காது..ங்கோத்தா! வந்திடுச்சிடா உன் ஆளு போ! போய் லவ் பண்ணு' என கத்தினான்.திடீரென பாரதி பெருங்குரலில் அழத்தொடங்கினான் 'மச்சான் நம்ம குமார கொன்னுட்டானுங்கடா' அடிச்சே கொன்னுருக்கானுங்கடா' 'பாடியை தூக்கி தண்டவாளத்துல போட்டுட்டு பொண்ண தூக்கிட்டு வந்திருக்கானுங்கடா' எனக் கதறினான்.அவரவர் நிலைகளில் உறைந்து போனோம்.

சரியாய் ஒரு வாரம் கழித்து தமிழ்செல்வி தூக்கில் தொங்கினாள்.

Saturday, August 25, 2007

பண்புடன் அறிமுக விழா மற்றும் பதிவர் சந்திப்பு



வல்லி சிம்ஹன் அம்மா துபாய்க்கு வந்திருப்பது தெரிந்ததும் தொலைபேசினேன் கனிவும் அன்பும் கலந்து நெகிழ்வான ஒரு குரலை கடைசியாய் எப்போது கேட்டேன் என நினைவில்லை.ஆனால் பேசிய பத்து நிமிடங்கள் மகிழ்வாயிருந்தது.பண்புடனுக்கான அறிமுகமும் வல்லியம்மாவை சந்திப்பதற்குமான ஒரு வாய்ப்பாகவும் வெள்ளி மாலை அமைந்தது.கராமா பார்க்கில் கூடி அறிமுக படலம் முடிந்த பின் சிவ் ஸ்டார் பவனில் அமர்ந்தோம்.உடம்பு சரியில்லாத மகி,விடுமுறைக்கு சென்றிருக்கும் பினாத்தலார் மற்றும் லொடுக்காரையும் தவிர்த்து எல்லாரும் வந்திருந்தார்கள்.புதிதாய் சுபேர் என்றொரு பதிவரும் வந்திருந்தார்.

பண்புடனுக்கான அறிமுகத்தை நான் கொடுத்தேன்.பண்புடனுக்கென்று எந்த கொள்கைகளும் கடுமையான சட்ட திட்டங்களும் தான் தோன்றித்தனமான நம்பிக்கைகளும் இல்லை.இது முழுக்க முழுக்க சுதந்திரமான ஒரு இடம்.கருத்தாடல்,கலந்துரையாடல் அவற்றோடு அன்பையும் பண்புடன் பறிமாறிக்கொள்ள ஏதுவான இடம்.செறிவான பரந்த நோக்கமுடைய நபர்கள் நிறைந்த இடமாகவும் இருக்கிறது.வயதுக்கு வராத புனிதர்கள் யாரும் இங்கில்லை என்பதையும் சொல்லிக்கொள்ள வேண்டியுமிருக்கிறது.பண்புடன் வணக்க த்தில் குழு பற்றிய தெளிவான அறிமுகமிருக்கிறது.இதுவரை யாரும் சேராதவர்கள் இதைப் பிடித்துக்கொண்டு வந்துவிடவும்.

அமீரகத்தில் பதிவர் பட்டறை நடத்துவதன் சிக்கல்களை குறித்து அண்ணாச்சி பேசினார்.சென்னை பட்டறையின் வெற்றிக்கு பின்னிருந்த உழைப்பையும்,சரியான திட்டமிடல்களை யும் அனைவரும் சிலாகித்தோம்.கையோடு கொண்டுவந்திருந்த பதிவர் பட்டறை பை,துண்டறிக்கைகள்,குறுந்தகடு என எல்லாவற்றையும் பார்த்தோம்.அமீரகத்தில் இடவசதியும் இணைய வசதியும் தற்போதைய சவால்கள்.நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் பட்டறை நடத்திவிட வேண்டும் அதற்கான இடைவெளியில் சிக்கல்களை தீர்ப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இங்கே மாலன்கள் யாருமில்லை என்பதால் கருத்தாடல் பிரச்சினைகள் எதுவும் எழுவதற்கான வாய்ப்புகளில்லை.மேலதிகமாய் சென்னை வலைப்பதிவர் பட்டறை எடுத்துக்காட்டாய் இருப்பதால் புதிதாய் எதிர்கொள்ளவேண்டிய சிக்கல்கள் எதுவுமில்லை.

வானொலி அறிவிப்பாளர்களின் தகுதி குறித்து கேள்வி எழுப்பினோம்.துபாயில் தமிழ் வானொலி அறிவிப்பாளர்களின் கொலைவெறி குறித்து அபிஅப்பா மற்றும் லியோ சுரேஷ் மிகவும் வருத்தப்பட்டார்கள்.ஜெஸிலாவும் அபிஅப்பாவும் ஏற்கனவே பதிவிட்டதும் நினைவிருக்கலாம்.சுசித்ராவின் குரலோடு விடிந்த சென்னை காலைகள் சுறுசுறுப்பாக இருந்ததை மறுக்க முடியாது.குரல்வளத் தேர்வுகளோடு அவர்களின் அறிவு வளர்ச்சி குறித்தும் நிர்வாகங்கள் முக்கியத்துவம் கொடுக்கலாம்.தமிழ்சூழலைப் பொருத்தவரை அடிப்படைத் தகுதிகள் என்பது எதற்குமே தேவையில்லாமல் போய்விட்டது அரசியல்,கலை,இலக்கியம் என எங்கும் அரைகுறைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக விரவிக்கிடப்பதாலும் வெகு சன ஊடகங்களின் திரிபுகளாலும் தமிழில் சிறந்த படைப்புகளோ படைப்பாளிகளோ வருவது மிகவும் அரிதாகிப் போய்விட்டது.இணையத்தைப் பொருத்தவரை இலவச குழுமமொன்றைத் துவங்கி விட்டாலே சிலருக்கு கொம்பு முளைத்துவிடுகிறது.இந்த கும்பல்களின் சிறு பிள்ளைத் தனமான பேச்சுகளும் செயல்களும் சிரிப்பையோடு அவ்வப்போது கோபத்தையும் வரவைக்கிறது.தானொரு குழுமத்தை நடத்தி வந்தாலும் புதிதாய் தொடங்கப்பட்ட ஒன்றினுக்கு வந்து வாழ்த்துக்களையும் அன்பையும் பறிமாறிக்கொள்ளும் மஞ்சூர் ராசா போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


வல்லியம்மாவிற்கு நினைவு பரிசாய் ஆசிப் புத்தகங்கள் வழங்கினார்.ஃபாத்தினும் கையோடு பாட்டிக்கொரு பரிசை கொண்டுவந்திருந்தாள்.ஜெஸிலா,வல்லியம்மா,சுல்தான் பாய்,லியோ சுரேஷை அனுப்பிவைத்துவிட்டு கடைக்கு வெளியே வந்து நின்றபடியே வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.திராவிடம் பெரியாரியல் திரைப்படங்கள்,மலிந்து போன வரலாற்றுத் திரிபுகள்,படைப்புத்திருட்டுக்கள் என பேச்சு நீண்டு கொண்டே போனது.லக்கிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தொலைபேசியில் சொன்னோம்.வரிசையாய் இருபது பேருக்கு மேல் வாழ்த்துக்கள் சொல்லுவோம் என லக்கி நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.ஜி யுடனும் தொலை பேசினோம்.அண்ணாச்சியிடம் ஆள்விரட்டிகளை (புத்தகங்கள்)பறிமாறிக்கொண்டேன்.கொற்றவையை கொடுத்துவிட்டு ஐந்து புத்தகங்களைத் தள்ளிக்கொண்டு வந்தாயிற்று.திரைப்பட குறுந்தட்டுக்களும் கைமாறின.

சுபேரும் அவரின் நண்பரும் முதலில் கிளம்பி விட்டார்கள்.மின்னலும் அவரது நண்பரும் இரண்டாவதாய்.முத்துக்குமரன் நண்பன் மற்றும் குசும்பர் ஒரு வண்டியில் கிளம்பி போணார்கள்.
அண்ணாச்சியும் கிளம்பிப் போனபின் சென்ஷியும் கோபியும் டாக்சி பிடித்தார்கள்.தம்பியும் அபிஅப்பாவும் தியாகுவோடு கிளம்பினார்கள்.எல்லாரையும் அனுப்பிவைத்துவிட்டு மாடிப்படி ஏறுகையில் தோன்றியது வலையில் எழுதி நான் சாதித்தது என்னவென்றால் சில அற்புத மனிதர்களின் அறிமுகமும் சில இதயங்களின் அன்பையும் சம்பாதித்துக்கொண்டதுதான்.

Thursday, August 23, 2007

லூசி டஸ் த சேம் திங்க் எவரி டே! - 50 FiRst DaTes


இதுவரை கேட்டிராத பரிசொன்றை நீ என்னிடம் கேட்டாய்
என்னை முதன் முறையாய் முத்தமிட்டது போல இப்போது இடுவென
இருப்பதிலேயே கூர்மையான கத்தியொன்றை எடு
பழக்கத்தின் தடித்த தோலை உரித்து கொஞ்சம் முயன்று பார்ப்போம்

- மனுஷ்ய புத்ரன்
(நினைவிலிருந்து எழுதியதால் வார்த்தைகள் மாறியிருக்கலாம்)

ஒரு அழகான கடற்கரை நகரத்தில் கடற்கரையை ஒட்டிய உணவுவிடுதி யொன்றில் மிக அழகான குறும்புகள் நிறைந்த பெண்ணொருத்தியை சந்திக்கிறீர்கள்.அவளின் அழகில் கிறங்கிப்போய் பேச்சு கொடுக்கிறீர்கள்.அவளும் நன்றாய் பேசுகிறாள்.தொடர்ந்த பேச்சில் காலம் மறந்து போகிறது மதிய உணவிற்கு தயார் செய்ய வேண்டுமென உணவு விடுதி உரிமையாளரால் நினைவுறுத்தப்பட்டு வெளியில் வருகிறீர்கள்.நாளை காலை இதே நேரத்தில் சந்திப்போமென விடைபெறுகிறீர்கள்.அடுத்த நாள் மிகுந்த உற்சாகத்தோடு அவளை நெருங்கி பேசப்போய் அவள் உங்களை யாரென கேட்டால் எப்படி இருக்கும்..அப்படித்தான் நேர்கிறது ஹென்றி ராத் திற்கு.


இயற்கை,பெண்,கள்ளமில்லாத மனம் இதைத் தவிர அழகான விதயங்கள் வேறு இருக்கமுடியாதென்றுதான் தோன்றுகிறது.இத்தனை அழகாக ஒரு படத்தை எடுக்க முடியுமா என்ற அங்கலாய்ப்பு படம் பார்த்த மூன்று நாள் மிச்சமிருந்தது.ஹவாய் தீவுகளில் படம் முழுதும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.லூசியாக நடித்த ட்ரூ பாரிமூர்தான் எத்தனை அழகு குறும்பு கொப்பளிக்கும் கண்களும் அட்டகாசமான சிரிப்பும் மனதை அள்ளிக்கொண்டு போனது.

ஒரு விபத்தில் நினைவு சக்தியை இழந்துவிடும் (Short time memory loss)லூசிக்கு ஆகஸ்ட் பதிமுன்றாம் தேதி மட்டும் உறைந்துபோகிறது.அந்த நாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை அவளின் தந்தைக்கு பிறந்த நாளும் கூட அவள் வெள்ளை நிற கால்சட்டையும் ரோஸ் நிற பனியனும் அணிந்தபடி காலை உணவுவிடுதிக்கு வருவாள்.தந்தையுடன் அன்னாசி பழம் பறித்து வர செல்வாள்.கார் ஷெட்டின் சுவற்றில் படம் வரைவாள்.தந்தைக்கு பிறந்த நாள் கேக் ஊட்டுவள் சிக்ஸ்த் சென்ஸ் படம் பார்த்து தூங்கிப்போவாள்.மறுநாள் காலையும் அவளுக்கு ஆகஸ்ட் பதிமுன்றாம் தேதிதான்.அந்த நாளை அப்படியே வைத்திருக்க அவளின் தந்தையும் சகோதரனும் அவளுக்கு தெரிந்த மனிதர்களும் எடுக்கும் முயற்சிகள் நெகிழ்ச்சியானது.

கடல் உயிரினங்களின் பயாலஜிஸ்ட்டான ஹென்றி ராத் (ஆடம் சாண்ட்லர்)முதல் பார்வையிலே லூசியிடம் மனதை பறிகொடுக்கிறான்.அவளின் பிரச்சினைகளைத் தெரிந்த கொண்டபிறகு தினம் அவளை காதலிக்கிறான்.ஒவ்வொரு நாளும் அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள படாத பாடு படுகிறான்.தினமும் புதிதாய் பழகிய பெண்ணை காதலிப்பது எத்தனை சிரமம்.இந்த கணத்தில் பறிமாறிக்கொள்ளப்படும் அன்பு அதிகபட்சம் சில மணிநேரங்கள் மட்டுமே நினைவிலிருக்கும் என்பதும் அடுத்த நாள் நேற்றைய அன்பு சுத்தமாய் நினைவில் இல்லாமல் போவதுமென்பதும் எத்தனை கொடுமையானது.


லூசியின் ஒரு நாளை படம்பிடித்து அடுத்த நாள் அவளிடம் காண்பிக்கும்போது அதிர்ந்துபோகிறாள் மெல்ல அவளின் பிரச்சினைகள் அவளுக்கு தெரிய ஆரம்பிக்கிறது.இருப்பினும் ஹென்றியை காதலிப்பதில் இருக்கும் சிக்கல்கள் அதிகமாகிறது.அவளுக்கு புதிதாய் எந்த ஒன்றையும் நினைவில் பதிந்துகொள்ள முடியவில்லை.ஹென்றியுடன் ஓர் இரவு தூங்கிவிட்டு அடுத்த நாள் காலை எழும்போது அவன் பக்கத்தில் படுத்திருப்பதை உணர்ந்து பதறிப்போகிறாள்.ஹென்றியை யார் எனத் தெரியாமல் போய் அலறிஅடித்து அவனை நையப் புடைக்கிறாள்.
ஹென்றியின் முத்தங்கள் அவளுக்கு எப்போதும் முதல் முத்தமாகத்தான் இருக்கிறது கேன் யூ கிவ் மி த் லாஸ்ட் ஃப்ர்ஸ்ட் கிஸ் என ஒரு மழை பெய்யும் நள்ளிரவில் அவன் விடைபெறும் நொடிக்கு முன் கேட்டு கலங்க வைத்தாள் லூசி.

காதலை அன்பை இயற்கைப் பின்னனியோடு மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள்.
பத்து நொடிகளுக்குள் நினைவில் பதிந்தது மறந்து போகும் வினோத குறைபாடுள்ள டாம் என்கிற கதாபாத்திரம் பரிதாபத்தை வரவைக்கிறது.படம் முழுக்க ஒரு புன்னகை உதடுகளில் வந்து ஒட்டிக்கொள்கிறது.ஹென்றி லூசியை திருமணம் செயதுகொள்கிறான் வீடியோக்கள் உதவியுடன் ஹென்றி அவளின் கணவன் என்பதை அடுத்த நாள் காலையில் லூசி அறிந்து கொள்கிறாள்.அவர்களுக்கு ஒரு குழந்தையுமிருக்கிறது.

முதல் முத்தம்



ஒரு பின்பனிக்கால விடியலில்
பனியில் குளித்த ரோஜாவினையொத்த
உன் இதழ்களில் முத்தமிட்ட தருணமொன்றில்
சில பறவைகள் விழித்தெழுந்தன

தொலைவில் அபூர்வமாய் மலரும் மலரொன்றின் விதை
தனக்கான வெடிப்புகளின் முடிவில் துளிர்க்கலாம்
தன் முதல் துளிரை
காட்டு மர இடுக்குளில் இடப்பட்ட முட்டைகளிலொன்று
ஓடுடைத்து மெல்ல எட்டிப்பார்க்கலாம்
தனக்கான உலகத்தை
பாதைகளற்று அலைந்து திரிந்த சிற்றாறு
இத்தருணங்களில்
நதியின் விரிந்த கரங்களில் தஞ்சமடையலாம்

இன்னும் பிரபஞ்சத்தின் எத்தனையோ
முதல் நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதற்க்கான
சாத்தியக்கூறுகளுமிருக்கிறது

எப்போதும் அதிகாலையிலேயே
விழித்துவிடுகிறார்கள்
குழந்தைகள்

Tuesday, August 21, 2007

உணர்வறிதலும் நினைவு தொலைத்தலும்



அரப்பளீஸ்வரர் கோயிலை ஒட்டி வழிந்தோடும் காட்டாற்றைத் தாண்டினால் குறுகலாய் ஒற்றியடிப்பாதையொன்று தடம் விரித்திருக்கும்.இடறும் கற்களின் இடைவெளியில் பாதம் நுழைத்து காட்டுச்செடிகளுக்குத் தலைகுனிந்து ஒரு மைல் நடந்தால் செம்மேட்டிற்க்கு செல்லும் பாதையை வந்தடையலாம்.மூலிகைப் பண்ணைக்கு கொண்டு செல்லும் குறுகலான பாதையின் இடது புறம் பென்சிலால் கோடு கிழித்தாற்போல் செடிகளின் இடைவெளியினூடாய் பாதை ஒன்று புலப்படும் அது கொண்டு செல்லுமிடம் சிவானந்தருடைய ஆசிரம்.

நண்பகல் பதினோரு மணிக்கு அவ்விடத்தைச் சென்றடைந்தேன்.பள்ளத்தாக்குகளில் புதைந்து போயிருக்கும் அவ்விடம் சாலையின் மேட்டிலிருந்து பார்க்கையில் வட்டமாய்த் தெரிந்தது அருகில் நெருங்கினபின் சதுரமாய் சுற்றி கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தது.மூங்கில் கழிகளலான பெரிய கதவொன்றைத் திறக்கையில் கறுப்பாய் உயரமாய் சித்தன் ஓடி வந்தான்.அவன் உயரமும் ஆகிருதியும் கண்டு மெல்லப் பின் வாங்கினேன்.பின்னாலேயே வெள்ளைக்காரச் சிறுமி சித்தா! என அழைத்தபடி வந்தாள்.யெஸ்! என்ற அச்சிறுமியின் கேள்விக்கு சிவானந்தரைப்பார்க்க வந்திருப்பதாய் சொன்னேன்.முப்பட்டகக் கூரை வேய்ந்த அந்த வரவேற்பரையில் மூங்கிலாலான சாய்வு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது.உள்ளே சென்ற சிறுமி சிவானந்தரை அழைத்து வந்தாள்.ஆடைகளெதுவுமில்லாமல் ஒரு மனிதனை முதலில் பார்க்கக் கூசியது அவர் விழிகளைப் பார்க்கத் தடுமாறினேன்.

நீளமான தாடியும் மிதக்கும் கண்களையும் கொண்டிருந்த அவர் மெல்லச் சிரித்துக்கொண்டார்.மின்னஞ்சல் கிடைத்ததாயும் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கி கொள்ளுமாறும் சொன்னார்.உதடுகள் அசையாது பேச்சு எங்கிருந்து வருகிறது என வியந்தேன்.உணவு மற்றும் குடில் குறித்து நிவேதனாவிடம் பேசிக்கொள்ளுங்கள் என சொல்லி சென்று விட்டார்.நிவேதனா என்ற பெயர் எனக்குத் தயக்கத்தை தந்தது.தைரியத்தை வரவைத்துக்கொண்டு செந்நிற ஓடுகளால் ஆன அந்த கட்டிடத்தை நோக்கி சென்றேன்.நிவேதனா சிவப்பு நிறப்புடவை உடுத்தியிருந்தது பெருமூச்சை வரவைத்தது.எங்கிருந்து வருகிறீர்கள் என விசாரித்தபடி ரெஜிஸ்டர் புத்தகத்தில் விவரங்களை குறித்துக் கொண்ட நிவேதனா உணவு விதயங்களை கேட்டறிந்து இரவில் வெளியே செல்வதை தவிர்க்க மட்டும் கேட்டுக்கொண்டார்.குடிலுக்கான சாவியை வாங்கிக்கொண்டு மரங்களடர்ந்த அவ்வாசிரமத்தின் அடுத்த முனையிலிருக்கும் கூரை வேய்ந்த குடிலுக்குள் சென்றேன்.

ஆடைகள்தான் எவ்வளவு அபத்தமானது.ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான் நமக்கிருந்த மிருக அடையாளம் தொலைந்து புத்தியில் மட்டும் மிருகம் குடியேறியிருக்க வேண்டும்.ஆண் பெண் வேற்றுமை அதைத் தொடர்ந்த சிக்கல்கள் சகலத்திற்க்கும் மூலகாரணி ஆடையாகத்தானிருக்க வேண்டும்.கலவியின்போது அவிழ்த்தெறியப்படும் ஆடைகள் மூலமாய் நாம் உள்ளும் வெளியுமாய் முழுமையான மிருகமாகிறோம்.ஏனோ நிர்வாணம் என்னை வசீகரிக்கிறது.என் தயக்கம், கூச்சம்,பெருமை, எனக்கே தெரியாமல் என் உள்மனம் கட்டமைத்துக்கொண்ட பல்வேறு பிம்பங்கள் எல்லாம் தொலைத்து இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் சக உயிரினங்களில் நானுமொருவன் என்பதை உணரச்செய்ய ஒரேவழி இந்த நிர்வாணம்தான்.

தம்மபதாவில்* உடலின் அத்தனை உணர்வுகளையும் உணர்ந்து அவற்றை முமுமையாய் புரிந்து கொள்வதே ஆரம்பப்பாடமாக இருக்கிறது.விழிப்புணர்வு என்ற நம் இயல்பான நிலையை நாம் தொலைத்துவிட்டதே சகல பிரச்சினைகளுக்கும் காரணமாயிருக்க வேண்டும்.எப்போதும் விழிப்பாயிருக்க தடை செய்யும் காரணிகளில் இந்த ஆடையும் ஒன்றாயிருக்க வேண்டும்.முதன் முறை என் ஆடைகளைந்து நான் நிர்வாணமான நொடியில் மென் காற்று என் உடலின் எல்லா பாகங்களையும் தழுவிச் சென்றபோது அப்படித்தான் தோன்றியது எனக்கு.

சூரியக்கதிர்கள் மதிய பொழுதுகளில் மட்டும் மெல்ல என் உடலைத் தொடுகிறது இந்த இதமான குளிரில் அக்கதிர்கள் என் உடலின் எல்லாத் துளைகளையும் ஊடுறுவும்போது உடல் சிலிர்த்துப்போகிறது.எதுவும் செய்யாமலே மனம் அலைவது நின்று போகிறது.பாதங்கள் மறையுமளவு வளர்ந்திருக்கும் இப்புல்வெளியில் மெல்ல என் உடலைக் கிடத்தும்போது அங்கங்கே உறைந்து போய் கிடந்த என் உடல் உணர்வுகள் அனைத்தும் விழிப்படைகின்றன.நிவேதனா முதன் முறை என்னைக் கடந்து சென்றபோது பிடுங்கித் தின்ற வெட்கமும் கூச்சமும் அடுத்த பொழுதுகளில் விட்டு விலகத்துவங்கியது.

தூக்கம் என்பது தேவைப்படவில்லை எப்போதும் விழிப்பாய் இருப்பது போன்ற உணர்வுநிலை வரத்துவங்கியது.மனம் என்ற ஒன்று சுத்தமாய் மறைந்துபோனது.சொற்களோ ஞாபகக் குப்பைகளோ எதுவும் இல்லை.அசையாத குளத்தைப் போன்று சலனமேயில்லாதிருந்தது நினைவு. மாலையில் அண்ணாந்து வானம் பார்த்தபடி படுத்துக்கிடந்தேன் மேகக் கூட்டங்களின் நகர்வுகளை விழியசைக்காது பார்த்துக்கொண்டிருந்தேன்.எந்த ஒன்றிலேயும் எவ்வளவு நேரம் நிலைத்திருக்கிறதென்றும் எப்போது அது வேறொன்றினுக்கு தாவுகிறதென்றும் சரியாய் பிடிபடாமலிருந்தது.

மேகம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் நினைவு தப்பி,விழிப்பு கடந்து மனம் தூக்கத்திலாழ்ந்துவிட்டது. காலில் ஏதோ ஊர்வது போலிருந்த உணர்வு விழிப்பைத் தந்தது.கண்விழிக்கையில் நான் படுத்திருந்த கொய்யா மரத்தடியும் சுற்றுப்புறமும் கண்ணிற்க்குத் தெரியவில்லை. இருள் கவிழ்ந்திருந்தது வானத்தில் நட்சத்திரங்கள் பளிச்சிட துப்புரவாய் மேகங்களற்றிருந்தது.அந்த பாம்பு மிக நீளமானதாய் இருந்திருக்கவேண்டும் சொரசொரப்பான அதன் வயிற்றுப்பாகம் என் காலிலிருந்து தலையை நோக்கி மெல்ல ஊர்ந்தது.பயமும் கிளர்ச்சியும் உடலில் படர ஆரம்பித்தது.பயத்தில் உடம்பு மெல்ல நடுங்குகிறது.இன்னும் அதிகமாய் உள்ளாழ்ந்து பயம் எங்கிருந்து வருகிறதோ அந்த துவக்கப்புள்ளியைத் தேட அரம்பித்தேன்.பயத்தை உணர்வது விழிப்புணர்வின் உச்சநிலை என சொல்லப்படுகிறது பயத்தின் வேர்களைத் துழாவி கண்டுபிடித்து அதை கவனிக்க ஆரம்பிக்கும்போது அவ்வுணர்வு காணாமல் போய்விடுகிறது.அந்த பாம்பு மிக கனமாய் இருந்தது என் நடு நெற்றியில் அதன் வாலின் நுனி வழுக்கி இன்னொரு புள்ளியை நோக்கி அது ஊர்ந்தபோது மனம் ஆசுவாசம் கொண்டது.

லேசாக வியர்த்திருந்தது செயற்கையாய் உருவாக்கப்பட்டிருந்த குளத்தில் நீர் பளிங்கை ஒத்திருந்தது.நட்சத்திரங்களை பிரதிபலித்தபடி அசைவற்றிருந்ததில் இறங்கி மிதக்கத் துவங்கினேன்.நீரில் மிதந்தபடி வானம் பார்க்க சுற்றம் மறந்துபோனது.பிரபஞ்சத்துடன் முழுமையாய் கலந்துபோனேன் எந்த நொடியில் அவ்விடம் விட்டு அகன்றேன் எந்த உணர்வு என்னை அந்த நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை.

மறுநாள் கண்விழிப்பில் என் உடைகளை அணிந்து கொண்டேன்.ஆசிரமம் விட்டு வெளியில் வந்தபோது ஹோ வென இருந்தது.சிறிய பேருந்தில் ஏறி அமர்ந்தபோது எல்லாரின் பார்வைக்கும் இரையானேன் பல சோடிக் கண்கள் என்னை ஒரே நேரத்தில் பார்ப்பது பயத்தைத் தந்தது பேருந்தின் இரைச்சலுக்கு உடல் அதிர்ந்தது.படபடப்பும் பயமும் கூடியது.நடத்துனரிடம் நாமக்கல் ஒண்ணு என்கிற சொல்லை வெகு நேரமாய் சொல்லிக்கொண்டிருந்தேன் ஆனால் அது வெளியில் வரவில்லை.அப்போதுதான் உணர்ந்தேன் நான் பேசி வெகுநாள் ஆகியிருப்பதை.ஒருவழியாய் சென்னை வந்து காசி தியேட்டரில் சிக்னலில் இறங்கியபோது இரவு 10 மணி.

கோல்டனைத் தவிர்த்துவிட்டு படிக்கட்டு பார் போனேன்.முனுசாமியை அழைத்த போது அவன் நெருங்கி வந்து பதறிப்போனான் இன்னா கோலம் இது? என்ற அவன் கேள்விக்கு பதிலளிக்காமால் கூலிங்காய் என்ன இருக்கு என்றேன்.


*தம்மபதா-புத்தரின் வழி/புத்தரின் தியானமுறைகள்

Sunday, August 19, 2007

'அன்புடன் புனிதர்களுக்கு' - எதிர்வினை 2

எதிர்வினை - 1

நகைச்சுவை என்கிற பெயரில் தமிழர்களின் புறநானூற்றை 'முறநானூறு' என்று எழுதி மகிழ்கிறது ஆனந்த விகடன். மன்னர்கால நகைச்சுவைத் துணுக்குகள் என்கிற பெயரில் தமிழர்களின் மூளைகளில் இவர்கள் செய்ய நினைக்கிற தொழிற்பாடுகளும்.. தமிழர்களின் வீரமரபை இழிவு செய்கிற செயலும்...புரியாமலில்லை.

எனவே, தமிழினம் மேம்படக் கூடாது என்கிற உள்நோக்கில் செயல்படும் ஆனந்த விகடன் பார்ப்பனர்களைப் பாதுகாப்பதில் மட்டும் விழிப்புணர்வோடு இருக்கிறது என்பதில் எனக்கு நேர்ந்த அனுபவமே சாட்சி.

ஹாய் மதன் கேள்விபதில் பகுதியில் இது கேள்வி...

பாரதியார் காதலித்திருக்கிறாராமே?

இதற்கு மதனின் பதில்...

மனைவியோடு வாழ்வதற்கே நேரமில்லாத பாரதிக்குக் காதலியா? எல்லாம் பொய்.

இந்தப் பதிலைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன். பாரதியார் தம் சுயசரிதையிலேயே தம் பிள்ளைப் பிராயத்துக் காதலைப் பற்றி உணர்வுப் பூர்வமாக எழுதியிருக்கிறரர். அவரது வரிகளையே ஆதாரமாகக் கொண்டு இந்தத் தவறான பதிலை மதனிடம் கூறி திருத்தி வெளிடுங்கள். ஒரு மகாகவியின் வரலாற்றில் பல இலட்சம் வாசகர்களுக்கு ஒரு பிழையைப் பதிவு செய்வது தவறு என்று மடல் எழுதி அனுப்பினேன்.

ஆனந்த விகடன் அந்தப் பிழையைத் திருத்த முன் வரவில்லை. அடுத்த வாரம் மதனுக்குத் தொலைபேசி செய்து "பதினோரு வயது பாரதி ஒன்பது வயது பெண்ணைக் காதலித்திருப்பதாக சுயசரிதையில் கூறியுள்ளார். எனவே, தங்கள் தவறான பதிலுக்குத் திருத்தம் வெளியிடுங்கள். அதுதான் நாகரிகம்" என்றேன்.

"வயசுக்கு வராத பெண்ணை பாரதி காதலித்திருக்கிறானா?" இதுதான் மதன் என்னிடம் கேட்ட கேள்வி. மதன் கேள்வி பதில் ஆனந்த விகடனின் வியாபாரத்திற்கான ஒரு பகுதி. மதனின் மீதான வாசகர்களின் நம்பகத்தன்மை குறைதல் கூடாது என்பதற்காகவே ஒரு மகாகவியின் வாழ்க்கை வரலாற்றை மறைக்கத் துடிக்கிறது ஆனந்த விகடன்!

இந்த ஆனந்த விகடனில்தான் ஞாநி அறிந்தும் அறியாமலும் என்ற பாலியல் மருத்துவ அறிவியல் தொடரை எழுதுகிறார். இந்தத் தொடரை வெளியிடும் தகுதி ஆனந்த விகடனுக்கு இல்லை என்பது எம் கருத்து. நோயுற்ற பெண்ணுக்கு மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால் மருத்துவரிடம் போகவேண்டுமே தவிர விபச்சாரத் தரகனிடம் அழைத்துப் போக வேண்டிய அவசியமில்லை. ஆனந்த விகடன் தமிழ்ச் சமுகத்தைச் சீரழிக்கத் துடிக்கிற விபச்சாரத் தரகுவேலையை பார்க்கிறது என்பதற்கு இதோ இந்தக் குறுங்கதையே எடுத்துக்காட்டு. 27.6.2007 ஆனந்த விகடனில் வந்தது.

"வா" என்றான் அவன்.

"ஊகூம்" என்றாள் அவள்.

"வா" என்றான் மீண்டும்.

"இல்ல" என்றாள்.

"வா" என்றான் திரும்பவும்.

"தப்பு" என்று முறைத்தாள்.

அதன் பிறகும் "வா" என்று இழுத்தான்,

"போடா" என்று அவன் தலையில் ஒரு குட்டு வைத்தாள்.

‘வ’ பக்கத்துல ‘¡’ போட்டிருந்தா தான் ‘வா’ன்னு இழுக்கணும், இது 'வ' என்று பொறுமையாக அந்த சிறுவனுக்குத் தமிழ்ப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தினாள் அந்த மிஸ்! ஒரு சிறுவனுக்கு ஒரு தமிழாசிரியை தமிழ் சொல்லிக் கொடுக்கும் காட்சியை வைத்தே இவ்வளவு வக்கிரமாக காம இச்சையைத் தூண்டி தமிழர்களிடம் காசு பார்க்கத் துடிக்கிற ஆனந்த விகடனா தமிழ்ச் சிறுவர்களுக்குப் பாலியல் கல்வியை நடத்தும் காகிதப் பள்ளிக் கூடமாக விளங்கப்
போகிறது. நம்புகிறீர்களா தமிழர்களே?

ஆனந்த விகடன் நமக்கு.. நம் தமிழர்களுக்கு ஏதேனும் செய்யுமென்று நம்புகிறீர்களா? இதோ 9.06.2007இல் ஆனந்த விகடனில் வந்த நகைச்சுவைகளைப் படியுங்கள்.

"என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு நேத்துதான் தெரிஞ்சது"

“தெரிஞ்சதும் என்ன பண்ணினே?”

"கலாவை வேலைய விட்டு நிறுத்திட்டேன்".


"நம்மோட கள்ளத் தொடர்பு தெரிஞ்சுட்டதால். உன்னை வேலையைவிட்டு நிறுத்தப் போறா என் மனைவி!"

"கவலைப்படாதீங்க எஜமான். உங்களுக்கு வெளியில இருந்து ஆதரவு தர்றேன்!"

ஆனந்த விகடன் ஆசிரியர் அவர்களே! பத்திரிகையாளர் ஞாநி அவர்களே! உங்கள் வீட்டிற்கு வந்து பண்டம் பாத்திரம் கழுவி, உங்கள் அழுக்குத் துணிகளைத் துவைத்து. உங்கள் அழுக்குத் துணிகளைத் துவைத்து. உங்கள் அறைகளைக் கூட்டிப் பெருக்கி - அதிலிருந்து வருகிற வருமானத்தில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்களே, அந்தப் பிள்ளைகளுக்கு அவர்களின் அம்மாக்களைப் பற்றி இவ்வளவு கேவலமாக அறிமுகப்படுத்துகிற ஆனந்த விகடனிலா எங்கள் பிள்ளைகள் பாலியல் அறிவைக் கற்றுக் கொள்ள வேண்டும்?

தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் எங்களையெல்லாம் படியுங்கள் படியுங்கள் என்று போராடிப் படிக்க வைத்ததெல்லாம் இப்படி நீங்கள் எங்கள் தாய்மார்களைப் பற்றி கேவலமாக எழுவதைப் படிக்கத் தானா ஞாநி!

ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லி ஓ போட வைக்கிற ஞாநியே! இப்படி சமூக பொறுப்பற்ற முறையில் பெண்களைக் கேவலப்படுத்தி பெண்களின் அரை நிர்வாணப் படங்களைப் போட்டு, படிக்கும் தமிழர்களின் காம இச்சையை வக்கிரமாகத் தூண்டிவிட்டு பணம் பறிக்கும் ஆனந்த விகடன் விற்பனையை அதிகப்படுத்துவதற்கான பச்சை மன்னிக்கவும். நீல வியாபாரத் தந்திரமே உங்களின் இந்தப் பாலியல் அறிவியல் மருத்துவத் தொடர்.

"ஒரு மருத்துவர், மருத்துவத்துக்கான கல்வித் தகுதி இல்லாத ஒருவரை, அதுவும் சிறுவனை.. அறுவை சிகிச்சை செய்யவோ, அதற்கு உதவியாக இருக்கவோ அனுமதிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அது மருத்துவத் துறையின் அற நெறிகளுக்கு மட்டுமல்ல... மானுட அறநெறிகளுக்கும் விரோதமானது."

இப்படி... 4.7.2007 ஆனந்த விகடனில் சொல்லியிருப்பது வேறு யாருமென்று.. பத்திரிகையாளர் ஞாநி அவர்களே. ஞாநி அவர்களே! இதே கருத்து தங்களுக்கும் பொருந்தும் இல்லையா! பாலியல் அறிவியல் தொடர் எழுதுவதற்கான மருத்துவக் கல்வியைத் தாங்கள் எந்த மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுள்ளீர்கள்?

தாங்கள் எழுதும் பாலியல் அறிவியல் கருத்துகளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால்.. மருத்துவப் பட்டம் பெறாத தாங்கள் சொல்வதை நம்பி எப்படி தெளிவு பெறுவது? மருத்துவத் துறையின் அறநெறிகளுக்கும் மானுட அறநெறிகளுக்கும் இது மட்டும் விரோதமாகாதா? ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளும்.. ஞாநி போன்ற பத்திரிகையாளர்களும்.. திரைப்பட, தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் தமிழர்களிடம் மட்டும்.. பாலியல் சார்ந்த காமத்தை வக்கிர உணர்ச்சியாக வைத்து வணிகம் செய்வதற்கான காரணம் என்ன?

ஒரே காரணம்தான்...

கணவனும் மனைவியும்.. தனித்துப் படுக்க ஒரு வீடு கிடைக்காத, ஓர் அறை கிடைக்காத குந்தக் குடிசையில்லாத.. புறம்போக்குகளாய்ப் பெரும்பகுதித் தமிழர்கள் வாழவேண்டியிருப்பதன் சோகம்தான் இதற்கு அடிப்படைக் காரணம். இதற்கான அரசியல் விழிப்புணர்வு பெற்று எம் தமிழ் இளைஞர்கள் சமூகப் போராளிகளாக மாறிவிடக்கூடாது.. என்றும் இவர்கள் இரசிகர் மன்ற உறுப்பினர்களாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.. இவர்கள் இந்த மூன்றாம் பால் வியாபாரத்தை நம்மிடம் மும்முரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால்.... ரஜினி குறித்து எழுதுகிற ஆனந்த விகடன், ‘சினிமா ஓகே. அரசியல்?’ என்று எழுதுமா?(4.06.2007)

ஏன் தமிழ்நாட்டை தமிழர்களே ஆளக்கூடாதா? நீங்கள்தான் அதிகார மய்யமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் நடிகர்கள்தான் ஆளவேண்டுமா? அரசியலுக்கு ரஜினியை அழைக்கிற ஆனந்த விகடனே.. பல்கலைக் கழகம் கட்டி... பள்ளிகள் கட்டி.. ஏழைகளுக்கு இலவசக் கல்வி கொடுக்க.. எடுக்கப்பட்ட சிவாஜி படத்தில் நடித்த ரஜினி அவர்களின் பணத்தில் (அதாவது அவரது உயிருக்குயிரான எம் தமிழ்ச் செல்வங்கள் கொடுத்த பணத்தில்) கட்டப்பட்ட.. 'ஆஸ்ரம்’ பள்ளியில் இலவசக் கல்விபெறும் மாணவர்களின் பட்டியலை.. அல்லது எந்தெந்த ரஜினி ரசிகர் மன்ற பிள்ளைகள் படிக்கிறார்கள் என்கிற பட்டியலை.. அல்லது ஒரு குழந்தைக்கான ஓர் ஆண்டு கட்டணம் எவ்வளவு என்கிற பட்டியலையாவது ஆனந்த விகடன் கேட்டு வெளியிட்டுவிட்டு .. அவரை அரசியலுக்கு அழைக்குமா? இது என்ன ஆனந்த விகடன் ஆசையா? இல்லை அக்ரகாரத்து ஆசையா? இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களை ஏமாற்றிப் பிழைத்தது போதாதா?

விடுங்கடா சாமி.
-----------×××----------------

இந்த கட்டுரையை பரவலாய் எல்லாரையும் படிக்கவைக்க உறுதுணையாய் இருந்த அன்பின் சேதுக்கரசி aka சேவைக்கரசி க்கு நன்றியும் அன்பும்.நீங்கள் நாலோ ஆறோ புத்தகம் மட்டும் படித்தால் போதாது தோழி ஒரு குழுமத்தை நிர்வகிக்க/வழிநடத்த பரவலான வாசிப்பனுபவமும் பன்முக பார்வையும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தான சிந்தனைகளும் முக்கியமாய் கருத்து சுதந்திரம் மற்றும் எதிர்வினைகளுக்கான ஆரோக்யமான பதில்கள் சொல்லுமளவிற்க்கு விசய ஞானமுமிருந்தால் குழுமம் தனக்கான நோக்கங்களில் முழுமையடைய வாய்ப்பிருக்கிறது.ஆனால் அன்புடன் புகாரியை துதிபாட மட்டும்தான் துவங்கப்பட்டது என்ற நோக்கம் உண்மையாக இருக்குமெனில் அதற்கெந்த அடிப்படைத்தகுதிகளும் தேவையில்லை.ஒரு தமிழ்படித்த பேராசிரியர்,நல்ல பேச்சாளரை வைத்தே தமிழின் தொன்மையை குலைத்த பார்ப்பனிய நுண்ணரசியல் எத்தகைய ஆபத்தானது இதைப்புரிந்துகொள்ளக்கூட உங்களின் மெத்த படித்த பண்பான நண்பர்களால் முடியவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது.மேலும் அறிவுமதியைப் பற்றி விமர்சிக்க புகாரி போன்றவர்களுக்கு எவ்வித தகுதியுமில்லை என்பதை நான் சொல்லியா இத்தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்துகொள்ள வேண்டும்?

மேலதிகமாய் அன்புடனில் வேகாத பருப்பென்ற சொல்லை நீங்கள் பயன்படுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நவீனத்துவத்தின் துவக்கப்புள்ளி பருப்பை வேகவைப்பதிலிருந்துதான் துவங்குகிறது இந்த சிந்தனைகள தொடர்ந்தால் நீங்கள் விரைவில் பின்நவீனத்துவத்தை எட்டிவிடலாம் ஒரு பின்நவீன சிந்தனையாளராக நீங்கள் அடையாளப்படுத்தபட்டால் அதில் எந்த ஆச்சர்யமும் எனக்கிருக்காது. மாறாய் மகிழ்ச்சியே பொங்கும்.

சாய்வான எழுத்துக்களில் சுட்டியிருப்பவை அன்புடனில் எடுத்தது
நன்றி: கீற்று இணையதளம்

'அன்புடன்' புனிதர்களுக்கு -எதிர்வினை -1

போர், துயரம், வலி, வேதனை, இழப்பு, மரணம், விளிம்பிற்க்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படும் வாழ்வின் அவலம், அதிகாரத்தின் கொக்கரிப்பு, வெளியெங்கிலும் நுட்பமாய் பரவிகிடக்கும் சாதிய நுண்ணரசியல் இவைகளை அபூர்வமாய் செய்தியாகப் படித்துக்கொண்டோ தொலைக்காட்சியில் பார்த்தபடியோ கெந்துகி சிக்கன்களை கொரித்தபடி சூரியனின் நடு நெற்றியில் விழுந்த பனிக்கட்டியாய் உருகும் மிகச் சக்திவாய்ந்த புனிதர்கள் தமக்கு அரிதாய் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தமிழுக்காய் சேவை புரிய தமிழின் நுண்கலைகளை வளர்த்தெடுக்கத் தொடங்கிய குழுமம் அன்புடன் என நான் அறிந்திருக்கவில்லை.

என் தவறான புரிதல்களாலும் அல்லது சலிப்பின் மிகுதியால் அவ்விடத்தை எட்டிப்பார்க்க தவறியதாலும் அங்கே விவாதிக்கப்படும் கருத்துக்கள் பற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை.ஆனால் அவ்வப்போது அங்கே எழுதப்படும் தமிழின் நுண்கலைகளில் ஒன்றான கவிதைகளைப் படித்து மட்டும் சத்தமாய் சிரித்துக்கொள்வதுண்டு. தியாகு தந்திருந்த சுட்டியை பிடித்துக்கொண்டு போனால் ஆசிப் விவாதித்துக்கொண்டிருந்தார் அட இவரெல்லாம் கூட இங்கு எழுதுகிறாரா?என்ற ஆச்சர்யம்தான் முதலில் எழுந்தது.

அறிவுமதியின் கட்டுரை நீக்கப்பட்டதற்க்கான எதிர்வினைக்கு அங்கே சொல்லப்பட்டிருந்த காரணங்கள் உவப்பைத் தந்தது..(புகாரிக்கு குமட்டிக்கொண்டு வந்ததாம்).இதுதான் ஒரு எழுத்தின் வெற்றி காலம் காலமாய் புதைந்து போயிருந்த எதிராளியின் அதிகாரத்தைப், பரவலாக்கலை பெயர்த்து வாந்தியெடுக்க செய்துவிட்டாலே போதும் படைப்பாளியின் கோபம்/எதிர்ப்பு மிகச் சரியாய் எதிராளியை தாக்கியிருக்கிறது என மகிழ்ந்துகொள்ளலாம்.கட்டுரையைப் படித்த பின்பு யார்யாருக்கெல்லாம் வாந்தி பேதி மற்றும் இத்யாதிகள் வந்ததோ நீங்கள் அனைவரும் அதிகாரத்தின் வழித்தோன்றல்கள் எனக்கொளக..

தமிழை இங்குபெட்டர் அறையில் வைத்து பாதுகாக்கும் இப்புனிதர்களின் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.சென்ற நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டிய மனிதர்கள் காலப்பிறழ்வின் பழிவாங்கலால் இந்த நாகரீகமில்லாத உலகத்தில் தங்களின் புனிதங்களை காப்பாற்றிக்கொள்ள அரும்பாடுபடும் அவர்களின் அவலம் என்னைத் துயரத்திலாழ்த்துகிறது....

தவறான கட்டுரை கீழ்த்தரமான கட்டுரை என புகாரியால் விமர்சிக்கப்பட்ட கட்டுரையை இங்கே இடுகிறேன்.மேலும் அன்புடன் பற்றியெல்லாம் எதிவினையாற்ற என் வலைப்பக்கமொன்றும் புனிதத்தின் இருப்பிடமல்லவே..
-----------×××----------------

பார்ப்பன வாத்தியார்கள்
பாவலர் அறிவுமதி

ஞாநி இப்போது தமிழ்ச்சமுகத்தின் பாலியல் வாத்தியாராகப் பதவி உயர்வு பெற்றுவிட்டார். அதனால்தான் ஆனந்த விகடனில் 'அறிந்தும் அறியாமலும்' எழுதுகிறார்.

மூன்று வயது ஆண்குறி விறைப்பது குறித்தும், மூன்று வயது பெண்குறி பிசுபிசுப்பது குறித்தும் எழுதி எழுதி... முதன் முதலாக எப்போது நீங்கள் அதைத் தொட்டது.. முதன் முதலாக எப்போது நீங்கள் இதைப் பார்த்தது என்று கேள்விகள் கேட்டு வந்த பத்திரிகையாளர் ஞாநி... கடைசியாக ஆண் - பெண் உறுப்புகளின் படங்கள் வரைந்து பாகங்கள் குறித்து விலாவாரியாக எழுதலாமா என்று கேட்டு.. ஆறுகோடித் தமிழர்களும் அதற்கு அங்கீகாரம் அளித்து விட்டதாகவும்.. இனி துணிந்து பாலியல் குறித்துப் பக்கம் பக்கமாக ஆனந்த விகடனில் எழுதப் போவதாகவும் ஏகப்பட்ட குஷியில் அறிவித்திருக்கிறார்.

அரசியல் விமர்சனங்கள் எழுத பத்திரிகையாளர் ஞாநிக்குத் தகுதியுண்டு. பாலியல் சார்ந்த சிறுகதைகள், புதினங்கள் எழுதவும் தகுதியுண்டு. ஆனால், மருத்துவர்களாகிய பெற்றோர்களின் மகன் மகப்பேறு பார்த்தது எவ்விதம் பிழையோ அவ்விதமே பாலியல் கல்வி குறித்தத் தொடர் எழுதுதல் ஞாநிக்குப் பிழை என்பதை ஞாநியும் உணர வேண்டும். நாமும் உணர வேண்டும்.

ஞாநி அடிப்படையில் பாலியல் மருத்துவம் படித்த வல்லுநரன்று. பாலியல் நூல்களைப் படித்து அல்லது பாலியல் மருத்துவர்களிடம் கேட்டுக் கேட்டு எழுதப் போகிற தொடர்தான் இந்தப் பாலியல் மருத்துவத் தொடர். இந்தத் தொடரில் அவரது பணி, மொழி பெயர்ப்பாளர் அல்லது நேர்காணல் செய்பவர் என்கிற அளவில் மட்டுமே பயன்படப் போகிறது. அப்படியானால் இந்தப் பாலியல் தெளிவுகளுக்கான அறிவுக்குச் சொந்தக்காரர்கள் வேறு நபர்கள்.

இப்படி அடுத்தவர் உழைப்பை, அடுத்தவர் அறிவைத் திருடிப் பிழைக்கும் வகையறாக்களே ஞாநியின் வகையறாக்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்படிப்பட்ட ஈனப் பிழைப்பை நடத்தி வருகிறவர்கள்தாம் இவர்கள். ஏரோட்டியவர்களின் கால்களில் கட்டிய சலங்கை பத்மா சுப்ரமணியத்திற்குப் பல பட்டங்களைப் பெற்றுக் கொடுத்த உண்மையை... நாற்று நட்ட தாய்கள் பாடிய இராகங்கள் பாம்பே ஜெயஸ்ரீக்குப் பட்டம் பெற்றுக் கொடுத்த உண்மையை... உணர்ந்தவர்களுக்குத் தான் நான் சொல்கிற உண்மை புரியும்.

அன்று இசையை, நடனத்தைத் திருடியவர்கள் இன்று அடுத்தவர்களின் அறிவியல் உழைப்பையும் திருடிப் பிழைப்பு நடத்துவதின் அடையாளமே ஞாநியின் அறிந்தும் அறியாமலும், சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், மதனின் ஹாய் மதனும்!

இந்த வகையறாக்களின் கைகளில் இருக்கும் அறிவுக் குழந்தைகளின் அப்பா அம்மாக்கள் யார் யாரோ. இவர்கள் பல நூலகங்களில் திருடி வந்த குழந்தைகளை விற்கும் அசிங்கத் திருடர்கள், அருவருப்புத் திருடர்கள்.

இவர்களுடைய பணி இந்தத் திருட்டு வேலைகளோடு நின்றுவிடவில்லை. இவர்களுடைய இந்த எழுத்துகளைப் படிக்கும் தமிழர்களிடையே இவர்கள் மிகச் சிறந்த பத்திரிகையாளர்களாக, பாராட்டுக்குரிய அறிவியல் அறிஞர்களாக, "இவர்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிற கருத்துருவாக்க மனிதர்களாக...." இவர்கள் மாறுகிற இடத்தில்தான் தமிழகத்திற்கான ஆபத்துகள் தொடங்குகின்றன. தேர்தல் நேரத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு தொலைக்காட்சிகளில் அமர்வது போன்ற ஆபத்துகள்.

சுஜாதாவின் எழுத்துகளையும், கேள்வி பதில்களையும் படித்துப் படித்து வியப்புற்ற தமிழர்கள் சுஜாதாவின் மீது மிகுந்த மரியாதை வைத்தார்கள். சங்க இலக்கியங்களான புறநானூறு, குறுந்தொகைக்கெல்லாம் உரையெழுதியதைப் பார்த்து மிகச் சிறந்த தமிழ்மேதையென்று மதிப்பும் வைத்தார்கள் (புறநானூறுக்கு அவர் எழுதிய உரையில் இருந்த அடிப்படையான தவறுகளை ஆதாரத்துடன் 'இந்தியா டுடே' இதழ் மூலம் பேராசிரியர்கள் இருவர் சுட்டிக் காட்டியும், இன்றுவரை அதற்கு எந்த விடையும் சொல்லாமல் பதுங்கிக் கொண்டது வேறு விசயம்.)

புறநானூற்றுக்கு உரையெழுதிய இந்த தமிழ்மேதைதான் 'சிவாஜி’' படத்திற்கு வசனகர்த்தா! அந்தப் படத்தில் ஒரு காட்சி எழுதிக் கொடுத்திருக்கிறார் இந்த மேதை! அங்கவை, சங்கவை பாரி மகளிராக அறியப்பட்ட பெயர்கள். இந்தப் பெயர்கள் கொண்ட, இயல்பாக இருக்கிற தமிழ்ப் பெண்களின் முகங்களில், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் மணிரத்னம் போரளிகள் முகத்தில் பூசிவிட்டதைப் போல... இராமாயணத்தில் அரக்கர்கள் என்றது போல, கரியைப் பூசி தமிழ் படித்த கேணையன் சாலமன் பாப்பையா வாயால்... "வாங்க எங்கிட்ட ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க, வந்து பழகுங்க.. புடிச்சிருந்தா கட்டிக்கிங்க.. புடிக்கலன்னா பிரண்ட்சா வச்சிக்கிங்க" என்று பேச வைத்திருக்கிறார். ஒரு தமிழ்ப் பேராசிரியரை வைத்தே தமிழ்ப் பெண்களை இவ்வளவு கேவலப்படுத்திருக்கிறார் சுஜாதா!

நல்ல தமிழ்ப் பெண்கள் எங்கே கிடைப்பார்கள் என்பதற்கு, ‘எல்லா தமிழ்ப் பெண்களும் கால்சென்டருக்குப் போய்விட்டார்கள். ஒண்ணு ரெண்டு கோயில்ல இல்லன்னா.... யாழ்ப்பாணத்துல...’ என்றும் எழுதியிருக்கிறார் சுஜாதா. வேலைக்குப் போகிற பெண்களெல்லாம் விபச்சாரிகள் என்று பெரியவாள் சொன்ன குரலை சுஜாதாவின் குரல் அப்படியே எதிரொலிக்கிறதா இல்லையா? படித்த தமிழ்ப் பெண்களையெல்லாம் இப்படிக் கேவலப்படுத்தி எழுதியுள்ள சுஜாதாவைப் பற்றி... இந்த உரையாடலைப் பயன்படுத்திய இயக்குநரைப் பற்றி, நடிகர்களைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமல் ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்து விட்டு வருகிற தமிழர்களைப் பற்றி என்ன சொல்வது!

'யாழ்ப்பாணம்' என்ற சொல்லை முன்பொருமுறை மணிரத்னம் தனது படத்திலும் பயன்படுத்தியிருந்தார். வருகிற ஒருவரை எங்கிருந்து வர்ற என்று கேட்க, தெற்கே என்று சொல்ல... யாழ்ப்பாணத்திலிருந்தா.. என்று கேட்பான், தமிழ்நாட்டில் நடக்கும் கதையில்! இந்தப் படத்திலும் அப்படியே.. ஊறுகாய் போல 'யாழ்ப்பாணம்' பயன்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்து எம்தமிழ் உறவுகள் படுகிற வேதனை குறித்து இந்த சுஜாதாவிற்கு என்ன கவலை இருக்கப் போகிறது? அங்கே வயதுக்கு வந்த பெண்களை... பையன்களை வைத்துக் கொண்டிருக்கிற தாய்களின் வலிகுறித்து இந்த ஆளுக்குத் தெரியுமா? வெள்ளை வண்டி சோகம் புரியுமா? 'யாழ்ப்பாணம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர்களின் கடின உழைப்பு ஊதியத்தை ஏமாற்றிப் பிடுங்க மட்டுமே இவர்களுக்குத் தெரியும். (சிங்களவர்களை விட தம் வாழ்விற்கு இவர்கள் மிக மோசமான எதிரிகள் என்கிற உண்மையை உணராமல், எம் புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள் தமிழர்களுக்கும், தமிழ்க் கலாச்சாரத்திற்கும் எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த மிக மோசமான படத்தைப் பார்க்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு வலிக்கிறது. ஆனாலும், சுவிசின் துர்க்கா வாழ் தமிழ் உறவுகள் ஒட்டுமொத்தமாக இதனை நிராகரித்திருப்பது ஆறுதலாக இருக்கிறது).

அப்புறம்... 'வாங்க வந்து வடைய தட்டுங்க...' என்று தொலைக்காட்சி புகழ் உமாவிற்கு வசனம் கொடுத்திருக்கிறார் சுஜாதா. அறிவுள்ள அந்தப் பெண் இந்த உரையாடலைக் கூச்சமின்றி பேசிக் கொடுத்திருக்கிறார்!

'ஆதி' என்று சொல்லி இன்னொரு சொல்லைச் சொல்லப் போக, விவேக்கின் வாயை ரஜினி மூட, கபோதி என்று சொல்ல வந்தேன் என்று வசனம் எழுதியிருக்கிறார் சுஜாதா! இதையே இந்தியன் படத்திலும் 'ரெண்டெழுத்துக் கொழுப்பு’ என்றும் 'கேணக்கூ'....என்றும் எழுதி ஒரு பெரிய நடிகரின் வாயால் உச்சரிக்க வைத்தவர்தான் இந்த சுஜாதா!

அந்த உறுப்பு வழியாகத்தானே சுஜாதா அவரது மரியாதைக்குரிய அம்மாவின் வயிற்றிலிருந்து உலகிற்கு வந்தார்! இந்த உரையாடலை எழுதியவர்.... வாயை அடைத்தவர்... இயக்கியவர் இவர்களும் இதன் வழியாகத்தானே உலகிற்கு வந்தார்கள்! அந்த உறுப்பு அவ்வளவு கேவலமானதா? கேலிக்குரியதா? கிண்டலுக்குரியதா?

ரவுண்டு ரவுண்டா நா ஒண்ணுக்கு உடுறேம்பாரு... அப்படி நீ உடுவியா என்று ஒரு சிறுவன் சிறுமியிடம் கேட்பதாக எழுதிய சுஜாதாதான் இன்று ஆனந்த விகடனில் கற்றதும் பெற்றதும் எழுதுகிற அறிவியல் மேதை! குங்குமம் இதழில் இவர் கூறுகிறார்... தமிழர்கள் கடல்வணிகம் செய்தவர்கள் இல்லையென்று! 'கட்டுமரம்' என்கிற சொல்லையே - உலகத்திற்குக் கொடுத்த தமிழர்களுக்குக் கடல் வணிகம் தெரியாதாம்!

இன்னொரு அறிவியல் மேதை ஹாய் மதனிடம்... மல்லிகை மன்னன், மதுரை-17 என்ற நபரிடமிருந்து ஒரு கேள்வி...

ஆண்களுக்கு மட்டும் காம உணர்சி கடைசி வரையிலும் குறையாமல் இருப்பதன் மர்மம் என்ன? இப்படிக் காமம் தொடர்பான கேள்விகளுக்குக் கிளுகிளுப்பான பதில்களாக நூலகங்களில் திருடித் திருடி எழுதுகிற மதன்... ஒருமுறை இறையன்பு கேட்ட. "வந்தார்கள் வென்றார்கள் எழுதியது போல சோழப் பேரரசுவின் பின்புலத்தில் ஒரு வரலாற்று நாவல் எழுதினால் என்ன?" என்ற கேள்விக்கு, "தமிழர்களுக்கென்று ஏதடா வரலாறு...?" என்று எகத்தாளமாகப் பதில் சொன்னவர்.

நாடற்ற வந்தேறியாகிய இவரிடம் மிகப்பெரும் தமிழுணர்வாளரே தமிழர்களின் கருத்துருவாக்கச் சிந்தனையாளனாய் ஏற்றுக்கொண்டு கேட்ட கேள்விக்குக் கிடைத்த மரியாதையிது. தன் இனமக்களை ஊருக்குத் தள்ளிய புறம்போக்குச் சேரிகளில் வாழவைத்துவிட்டு எங்கிருந்தோ ஏய்க்க வந்த நாய்களையெல்லாம் வரவேற்று அழகழகாய் மாடமாளிகைகள் கட்டிக் கொடுத்து பிரம்மதேயங்களாய் ஆயிரமாயிரம் காணி நிலங்களை எழுதிக் கொடுத்து உழைக்கத் தேவையில்லையென்று உட்கார வைத்தே சாப்பிட வைத்த சோழ மன்னர்களுக்கு இவர்கள் காட்டுகிற நன்றியைப் பார்த்தீர்களா? ஆனால் இதற்காக மதனுக்குக் கிடைத்த மரியாதையை varalaru.com கண்டு மகிழ்க...

சுஜாதாவாக இருந்தாலும் மதனாக இருந்தாலும் ஞாநியாக இருந்தாலும்.. இவர்களை பயன்படுத்திக் கொண்டு ஆனந்த விகடன் தமிழர்களிடம் வணிகம் செய்து வயிறு கழுவுகிறதே தவிர, சமூகப் பொறுப்புணர்வோடு தமிழர்களுக்கென்று எந்த ஒரு நல்ல நோக்கத்திலும் பயன்பட நினைக்கவில்லை.

இவர்களைத் தமிழர்களிடம் நம்பகத்தனமான அறிவாளிகளாகக் காட்டி... அதன் வாயிலாகத் தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை, விழுமியத்தை, அரசியலை அழிப்பதே.. இடறி விடுவதே.. ஆனந்த விகடனின் சூழ்ச்சிப் பணியாக இருந்து வருகிறது. கம்பராமயணத்தை.. மகாபாரதத்தை அழகுத் தமிழில் வாலியை விட்டுத் தொடர்களாக எழுதி மகிழ்ந்த ஆனந்த விகடன் திருக்குறளை மட்டும் சென்னைத் தமிழில் எழுதி இழிவுபடுத்தியது (இதையே பகவத் கீதையை நகர தலித் மொழியில் நாம் எழுதியிருந்தால் என்ன துள்ளு துள்ளியிருப்பார்கள்!)

(தொடரும்)

Saturday, August 18, 2007

சிலந்தியின் வலைப்பின்னல்கள்



சிலந்தியின் வலைப்பின்னல்களென உன் பேச்சுக்களிருக்கிறது
எப்போதும் ஏதாவது ஒரு இரையை
நேர்த்தியாய் பின்னப்பட்ட வலைகள் தக்கவைத்துக்கொள்கிறது
வலைகளை சிதைக்ககூடிய வலிமையுள்ள பூச்சிகளும்
உன் வலையிலிருந்து தப்புவதில்லை
உன்னைச்சுற்றியும் மற்றவர்களைசுற்றியுமாய்
எப்போதுமே பிணைந்தபடி இருக்கிறாய்.
கள்வெறியேறிய பைத்தியக்காரனின் சலம்பல்களைப் போன்று
எப்போதும் யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கிறாய்
அல்லது பதினைந்து பக்கங்களுக்கு குறையாது யாருக்காவது கடிதமெழுதிக்கொண்டிருக்கிறாய்.
வலைப்பின்னிய நேரம் போக குரூரமான உலகம் ஒன்றை நிறுவத்துவங்குகிறாய் உனக்கு மிகவும் பழக்கமான
கற்பனையின் துணைகொண்டு நீ புனைந்து கொள்ளும் உலகம் அபத்தமானதென்றோ சாக்கடை நாற்றமடிக்கிறதென்றோ உன்னை மேலும் கழிவிரக்கத்திலாழ்த்த எனக்கு விருப்பமில்லை.

சற்று அமைதியாய் இரேன்

டோன்ட் இமேஜின் திங்க்ஸ் பேபி!



தேவதைகளின் இறக்கைகளைப் பிய்த்தெறிந்துவிட்டு
மரங்களே இல்லாத நேர்கோட்டுச் சாலையொன்றில்
தகிக்கும் உச்சி வெயிலில்
விரல்கோர்த்தபடி
செருப்பணியாத பாதங்களோடு நடந்துகொண்டிருந்த
பின் மதிய கனவொன்றை
உனது சன்னமான அழுகை கலைத்துப்போனது.

நானுதிர்த்த ஒற்றைச்சொல்லை கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு
அதன்வேர்களைத் துழாவியதில் கண்டெடுத்த
முன் எப்போதோ உதிர்த்த சொற்களையும் துணைக்கழைத்தபடி
புனைந்து கொண்ட உன் தனிமை உலகின் மூலையில்
கால்கள் குறுக்கியமர்ந்தபடி விசும்பிக்கொண்டிருந்தாய்.

தமிழ்சினிமாக்களை விடாது பார்த்தோ
தமிழ்தொலைகாட்சி அலைவரிசைகளை மாற்றி மாற்றிப் பார்த்தோ
மாதமொருமுறை மாதமிருமுறை
வாரமொருமுறை வாரமிருமுறை
தினசரி ஒன்று தினசரி இரண்டென பரப்பை நிறைக்கும்
தமிழ் பத்திரிக்கைகளை/நாவல்களைப் படித்தோ தொலையாதே என்றால்
நீ கேட்பதாய் இல்லை

என் மீதான வெறுப்புகள் அதிகமாகும் கணங்களில்
உன் அறைமுழுக்க நிறைத்து வைத்திருக்கும்
என் கவிதைகளைப் கிழித்துப்போடு
என் புகைப்படத்தின் மீது நின்றபடி மூத்திரம்பெய்
என்னைக் காதலித்த உன் முகத்தினை கண்ணாடியில் பார்த்தபடி
காறி உமிழ்ந்துகொள்
அப்போதுமடங்காத ஆத்திரமெனில் குளியலறையை தாழிட்டுக்கொண்டு புகைத்தபடி சுயமைதுனம் கொள்

ஒருபோதும் விசும்பாதே

டோண்ட் இமேஜின் திங்க்ஸ் பேபி!

குரூரப் புன்னகையின் பின் மறையும் உண்மைகள்



மிக கவனமாய் சொற்களைத் தேர்ந்தெடுத்தெல்லாம்
என்னால் பேசமுடியாது தோழி!
வார்த்தைகளின் மீதோ
ஒப்பனைகளின் மீதோ
எனக்கெந்த கவர்ச்சியும் இல்லை

வெகு நாகரீகமாய் பேசாதிருப்பதும்
விகாரங்களை அழகான கவசங்கள் கொண்டு மறைக்காமலிருப்பதும்
வெளித்துப்பும் சொற்களின் முன் பின் பக்க விளைவுகள் குறித்து சிந்திக்காமலிருப்பதும் மொத்தத்தில் சிந்திக்காதே இருப்பதும் வாழ்வதற்க்கான ஆபத்தான வழிகளை கண்டறிந்தவர்களின் அகராதியிலிருந்து என்னால் திருடப்பட்டவை

தனக்கான புனித பிம்பங்களை புனைந்துகொள்பவர்களை
பொய்களின் ஒட்டு மொத்த குத்தகைக்காரர்களை
பின்னால் குத்தும் பழகிய பேடிகளை
பெண்களை கிளர்த்த காதல் கவிதைகளாய் எழுதிக் குவிப்பவர்களை
இனிமேல் குடிப்பதில்லை என்றபடி தினம் குடிப்பவர்களை
கடவுள் வரிசையாய் நிற்கவைத்து குறிகள் அறுப்பாரென
இனிவரும் குழந்தைகளுக்கு கதைகளாக சொல்லலாம்

உன் வழமையான பழக்கமான உலகத்திலிருந்து
என்னிடம் பேசும்போதாவது வெளியில் வந்துவிடு
பொய்மையும் வாய்மையிடத்து என்றவர்களின் சிலைகளின் மீது
காகங்கள் பல வருடங்களாய் கழிந்து கொண்டிருக்கிறது.
ஒரு உண்மையின் மூலம்
சில புனிதர்களின் இரவுகளைத் தூங்கவிடாமல் செய்துவிட்டு
குரூரமாய் புன்னகைத்துக்கொள்ளலாம் வா!

Wednesday, August 15, 2007

எதுவுமற்று இருத்தல்



இன்றைய நாளில் எதிர்கொள்ளப்போகும்
எந்த முகங்களும்
எனக்குத் தெரிந்தவையில்லை
எனக்கான புன்னகைகளைத் தேக்கி வைத்திருக்கவோ
மற்றவர்களுக்கென ஒரு புன்னகையைத் தரவோ
இரு தரப்புமே தயாராய் இருப்பதில்லை

வழக்கமாய் எதிர்கொள்ளும் முகங்கள்
மிகவும் அரிதானவை
அப்படியே எதிர்கொள்ள நேரிடினும்
அவை மிக இறுக்கமானவை மட்டுமே
காலை வெயிலில் எல்லா நெற்றிகளும்
சுருங்கிக் கிடக்கின்றன.

மிகத் தெரிந்த உலகத்தில் கூட
அழுத்தமான கைக்குலுக்கல்களை
யாரும் வரவேற்பதில்லை.
அவரவர் உலகங்களில் அவரவர்

எனக்கான உலகங்கள் எழுத்து வடிவம் கொண்டிருக்கிறது
அபூர்வமாய் சிலசமயங்களில் அது குரல் வடிவமெடுக்கும்.
மேலதிகமாய் அங்கங்கே எழுதப்படும்
எனக்குரியதான/என்னைப்பற்றியதான சில குறிப்புகள்
என்னையும் இவ்வெளியில் துருத்திக்கொண்டிருக்கலாம்.

எங்காவது ஒரு நினைவு என்னப்பற்றியதாய் இருக்கக்கூடும்
அன்பு வெறுப்பு பொறாமை எரிச்சல் கோபம் நட்பென
எவ்வித உணர்வாயிருப்பினும் அது எனக்குரியது
எனக்கென அனுப்பப்பட்ட அன்புகள்
பெரும்பாலும் மூடப்பட்ட என் அறை வாசலில்
காத்திருந்து சலித்து
திரும்பியே வராத தீர்மானங்களுடன்
திரும்பிப்போகிறது.

வரவேற்பதற்க்கும் வழியனுப்புவதற்க்கும்
எப்போதுமிருந்ததில்லை எனக்கான இன்னொன்று
எப்போதுமிருக்கிறது அறையை சூழ்ந்தபடி இருள்

நாளைய கண்விழிப்பில்
சிட்டுக்குருவியொன்றை
முதலில் பார்க்க நேரிட்டால்
அது மிகவும் முக்கியமானதொரு நாள்

Sunday, August 12, 2007

தூங்க இடம்தேடியலையும் பூனைக்குட்டியின் முகச்சாயல்களையொத்தவள்



வீணா அதிகம் பொய் பேசுவாள்.அவளைப்பற்றிய அவளின் பெரும்பான்மைத் தகவல்கள், மற்றவர்களைப்பற்றி அவள் சொன்னவை, நிகழ்ந்தவை என சொல்லப்பட்டவை எல்லாமே பொய்களாக இருந்ததை ஒவ்வொரு முறையும் வெகு தாமதமாகத்தான் என்னால் கண்டுகொள்ள முடியும்.ஆனாலும் எனக்கு அவளின் மேல் கோபம் வராது. கோபிக்கவே முடியாத முகம் அவளுக்கு. கண்களில் எப்போதும் சின்னதாய் குறும்பொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.நன்றாய் சாப்பிட்ட பூனைக்குட்டி தூங்க இடம்தேடியலையும் முகச்சாயல்களுடன் வசீகர கன்னத்துக்குழியோடு சத்தமாய் சிரிப்பாள்.வீணா அழுதோ,கலங்கியோ, வருந்தியோ நான் பார்த்ததில்லை. சோகத்தின் சாயல்கள் கூட அவளின் பேச்சிலோ பழக்கத்திலோ இருக்காது கிண்டலும் குறும்புமாய் வளைய வருவாள்.வீணாவிற்கு பெண் தோழிகள் யாருமில்லை பனிரெண்டாம் வகுப்பில் சித்ராவோடு சில மாதங்கள் பழகி பின் சண்டைபோட்டுப் பிரிந்துவிட்டாள். வீணா எப்போதும் எங்களோடுதான் இருப்பாள்.(நான் பாலா நாச்சி செந்தில்)எங்களைத் தவிர்த்தும் அவளுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள்.பழகிய ஐந்தாம் நிமிடத்திலேயே நெருங்கிவிடுவாள்.டா வென்றும் மச்சி என்றும் உரிமையோடு கூப்பிடுவாள்.

பதினோராம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையில் பாலாவின் தங்கை சடங்கிற்கு அம்மாவை கூட்டிக்கொண்டு அவன் வீட்டிற்க்குப்போயிருந்த அன்றுதான் வீணா அறிமுகமானாள்.நான் ஆண்கள் பள்ளியிலும் அவளும் பாலாவும் டேனிஷ்மிசனிலும் படித்துவந்தோம்.பாலா அவ்வப்போது என்னைப்பற்றி அவளிடமும் அவளைப் பற்றி என்னிடமும் சொல்லியிருந்தது எங்கள் அறிமுகத்தடைகளைத் தகர்த்தது.எப்படி உடனே ஒட்டிக்கொண்டாள் என்பது இன்னமும் ஆச்சர்யமான ஒன்று. அவன் வீட்டிற்க்குப் பின்னாலிருக்கும் கொடுக்காப்புளி மரத்தடியில் கேரம்போர்டு விளையாடினோம்.டிவிஎஸ் ஓட்ட சொல்லிக்கொடுத்தேன் ஒரு பெண்ணை வெகு நெருக்கத்தில் அணுகும் தயக்கங்கள் எதுவும் இல்லையெனக்கு பெண்களுக்கான எந்த வாசனைகளும் அவளிடம் இருக்கவில்லை அல்லது எனக்கப்படி தோன்றவில்லை.வெளிப்படையான பெண்களின் மீதெல்லாம் பெரிய கவர்ச்சி ஒன்றும் ஏற்படாதது நமது தமிழ்மரபின் தவறாகத்தான் இருக்கக்கூடும்.அந்த நாளை நினைவு வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தில் 1996 ம் வருட நாட்குறிப்பில் இப்படி எழுதினேன்.உன் விரல்கள் பட்டு சிதறியது/கேரம்போர்டின் காயின்கள் மட்டுமல்ல/என் இதயமும்தான்.இந்த நாட்குறிப்பை அவள் பத்து வருடங்களுக்குப் பிறகு படித்து பெரிதும் மகிழ்ந்துபோனாள்.எனக்காக எழுதப்பட்ட கவிதையா இது என மாய்ந்துபோனாள்.

பனிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் வீணாவிற்கு கல்யாணம் முடித்துவிட்டார்கள்.பக்கத்து கிராமத்தில் விவசாயம் செய்துகொண்டிருந்த முருகனை கட்டிவைத்துவிட்டார்கள்.வீடுதேடிவந்து பத்திரிக்கை கொடுத்தாள்.என் அண்ணனை வம்புக்கிழுத்தாள். மிகவும் சந்தோஷங்களோடு கலியாணம் செய்து கொண்டு போனாள்.கல்யாணத்தில் அவளை வெட்கப்பட வைக்க படாதபாடுபட்டோம்.இன்னிக்கு ஒரு நாளாவது பொண்ணு மாதிரி இருடி என கேட்டுக்கொண்டோம்.அவள் விடாது சிரித்தாள்.எங்கம்மா தலைய குனிடி ன்னு திட்டறாங்கடா அவங்கள இன்னான்னு கேளேன் எனக் குறும்பாய் சிரித்தாள். படிப்பிற்க்காக வெளியூர் போய்விட்டாலும் விடுமுறையில் ஊருக்கு வரும்போது தவறாமல் அவள் நலன் விசாரித்துக்கொண்டதும் கூட சில வருடங்களில் விட்டுப்போனது.

தொடர்ச்சியான அலைவுகள் சென்னைக்கு 2005 ல் கொண்டு சேர்த்தது.காசி தியேட்டருக்கெதிரே இருக்கும் கோல்டன் பாரில் பாலா உளறினான் வீணா இங்கதான் மச்சி இருக்கா அவ புருசனோட ஒத்து வரல டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டாங்க கேஸ் நடந்திட்டிருக்கு என குழறி குழறி சொன்ன அவன் சட்டையைப் பிடித்தேன். ஏண்டா இவ்வளவு நாளா சொல்லல என்றதற்கு அவ யாரிடமும் சொல்ல வேண்டாம்டாடா என அழுதான்.இரண்டு நாட்களாய் மனம் அலைந்தபடியே இருந்தது.மூன்றாம் நாள் அலுவலகத் தொலைபேசியில் அழைத்தாள் அதே குரல் அதே உற்சாகம்.உன்ன உடனே பாக்கனும்டா என்றாள்.

கிண்டியில் ஆடை வடிவமைப்பு டிப்ளமோ இன்ஸ்டிடியூட்டில் அவளை ஏழு வருடங்கள் கழித்துப் பார்த்தேன்.அவளிடம் பெரிதாய் ஒன்றும் மாற்றங்களில்லை சொல்லப்போனால் இன்னும் அழகாயிருந்தாள்.மிகுந்த வருத்தங்களோடு தயங்கி தயங்கிப்பேச அவளோ நான் இப்போதாண்டா சந்தோசமா இருக்கேன்.ஒரே ஆணோட எத்தன வருசம் டா இருக்கிறது சுத்த போர்! என்றாள்.வீணாவின் உலகத்தை நான் பாலா நாச்சி என மூவரும் நிறைத்தோம்.வார இறுதிகளில் சினிமா பீச் என சுற்றிவந்தோம்.காசில்லாத மாதக் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் அறைக்கு வந்து சமைத்துப்போட்டாள்.சிரிப்பும் குதூகலமும் அவளோடும் அவளைச் சுற்றி இருப்பவரிடமும் இருக்கும்படி பார்த்துக்கொண்டாள்.அவ்வப்போது பிரச்சினைகளையும் கொண்டுவந்தாள்.

அவள் படிக்கும் இன்ஸ்டியூட் மாணவர்கள் இருவர் அவளை காதலிப்பதாய் சொல்லி தொல்லை கொடுப்பதாக சொன்னாள்.நாங்கள் சென்று விசாரித்ததில் வீணா இருவரிடமும் பழகி இருக்கிறாள்.ஒரு பதின்ம வயது பையன் நான் ஐ லவ் யூ ன்னு கார்டு கொடுத்தேன் மி டூ டா ன்னு சொன்னாங்க சார் என்றான்.கூட பீச்சுக்குலாம் வந்தாங்க சார் இப்படி இன்னொரு பையன்.கோபம் பொங்கி வந்தது எனக்கு இப்படித்தான் பசங்க மனச கெடுப்பியா என அவளை ஓங்கி அறைந்தேன்.அவள் சிறிது கூட கலங்கவோ வருந்தவோ இல்லை.என்ன நேசிக்கிறேன்னு ஒருத்தன் சொல்லும்போது முடியாதுன்னு எப்படிடா சொல்றது ? என கேட்டாள்.அந்த பசங்க ரத்தத்தில லட்டர் எழுதினாங்க சரி ரொம்ப முத்திடுச்சோன்னு பயந்துதான் உங்கிட்ட சொன்னேன் என சிரித்தபடியே சொன்னாள். அந்த நிமிடத்தில் அவளை அணைத்துக்கொள்ளத் தோன்றிற்று.அடித்ததிற்க்காய் மனம் வருந்தினேன்.நீ என்ன அடிச்சிட்ட இல்ல ஒழுங்கா ஐஸ்கிரீம் வாங்கித் தா! என என் குற்ற உணர்வைப் போக்கினாள்.

நாச்சியும் பாலாவும் ஊருக்குப் போயிருந்த சனிக்கிழமை மதியம் தொலைபேசினாள் என்னா ஷிப்டு டா? என்றாள் டே என்றேன் சரியென்று வைத்துவிட்டாள்.மாலை அறைக்குப் போனபோது அறையில் சிகெரெட்டை கையில் வைத்து உருட்டியபடி உட்கார்ந்திருந்தாள்.என்னைப் பார்த்து சிரிக்கவில்லை ஏதோ சிந்தனையிலிருந்தாள்.தம் அடிக்க ஆரம்பிச்சிட்டியா நாயே என்றபடி அவளிடமிருந்து சிகெரெட்டைப் பிடுங்கினேன்.சிகெரெட்ங்கிறது ஆம்பளத்தனமாடா?விழிகள் உயர்த்திக்கேட்டாள்.குறும்போ சிரிப்போ அப்போது அவ்விழிகளில் இல்லை.எனக்கு திக்கென்றது என்ன? வீணா என்ன? ..இல்லடா சிகெரெட்ங்கிறது ஆம்பளத்தனமா?மறுபடியும் கேட்டாள்.பொண்ணுங்க உடம்பென்ன ஆஷ்ட்ரே வாடா இந்த சிகெரெட்டுக்கு?எனக்கு ஒன்றும் பேசத்தோன்றவில்லை.நல்லா தூங்கிட்டிருப்பண்டா..நடுராத்திரில குடிச்சிட்டு வந்து சிகெரெட்டை என் முதுகில அணைப்பான்.அந்த பயத்திலே எனக்கு நைட்லாம் தூக்கம் வராது.நான் நைட்ல தூங்கியே ரொம்ப வருசமாச்சிடா... சரி நீ அப்படியே கொதிக்காத என்னமோ.. இந்த சிகரெட் பாத்ததும் சின்னதா ஒரு பயம் வந்தது.. என்றாள்.எனக்கு சுத்தமாய் பேச்சு வரவில்லை.என்னடி சொல்ற எனப் பிடுங்கினேன்.என் உடம்பு முழுக்க தழும்பிருக்குடா.. சிகெரெட் தழும்பு.. கருப்பா.. வட்டமா.. சின்னதா.. உள்ள வெள்ளையா.. இருக்கும் பாக்கிறியா? என விலக்கப்போன அவள் கையைப் பிடித்துக்கொண்டேன்.நீ பார்த்தபிறகு நிச்சயம் ஒரு வாரமாவது தூங்கமாட்டாடா என சகஜமானாள்.சரி இத வெளியில சொல்லிட்டிருக்காத ஏதோ திடீர்னு தோணுச்சி என்ன யாராவது அசிங்கமா திட்டினாலும் பரவாயில்லடா ஆனா பரிதாபமான ஒரு பார்வை இருக்கு பார் அப்படியே செத்துட தோணும்...நீ !இந்த மேட்டர மறந்திடு! என சொல்லி விடுவிடுவென போய்விட்டாள்.

(......................காயத்ரிக்கு)

Saturday, August 11, 2007

சுஜாதாவால மட்டுந்தான் இப்படி எழுத முடியுமா என்ன?



இன்று மாலை காற்று அதிகமில்லாதிருந்தது இறகுப்பந்து விளையாட ஏதுவாயிருந்தது.இந்த வாரத்தில் இன்றுதான் சிறப்பாக விளையாடினோம்.நடந்தாலே வியர்க்கும் துபாயில் விளையாடினால் கேட்கவா வேண்டும். விளையாடி முடித்து திரும்பும்போது பனியனை கழட்டி பிழிந்த வியர்வையை தண்ணீர் பாட்டிலில் பிடித்தேன்.
-----------×××----------------
குசும்பன் அண்ட் கோ கராமா வருவதாய் தொலைபேசினார்கள்.எல்லோரும் பனோரமா போனபோது வாசலில் பெரிதாய் பூட்டு தொங்கியது.இன்று துபாயிலிருக்கும் அத்தனை மதுவிடுதிகளுக்கும் விடுமுறை எனத் தெரியவந்தது.வீக் எண்டல லீவா என குமைந்தபடி மீனாபிளாசாவையும் கராமா ஓட்டலையும் எட்டிப்பார்த்து அங்கேயும் பூட்டுக்களை உறுதி செய்துவிட்டு கராமா பார்க் வந்தோம்.இதுவே நம்ம ஊரே இருந்தா காந்தி ஜெயந்திக்கு கூட பிளாக்கில வாங்கலாம் என்ன இருந்தாலும் நம்ம ஊர் மதிரி வருமா? எனப் புலம்பியபடி பார்க்கில் கதையளந்தோம்.பிலிப்பைன் தேசத்துப் பெண்ணொருத்தியை இருளின் துணையோடு ஆராய்ந்து கொண்டிருந்த நம் தமிழ்பையனின் அதிர்ஷ்டத்தை எண்ணிப் புலம்பி அவரவர் காதில் புகைவிட்டுத் திரும்பினோம்.நள்ளிரவில் வாகன நெரிசல் எத்தனை எரிச்சலான ஒன்று.
-----------×××----------------
பின்னிரவில் படிப்பதற்க்குக் கவிதை உகந்தது.அனிதாவின் தனிமைப்பெருவெளி மிக இணக்கமாக இருந்தது.நிகழ்வுகளின் மென் தொடுகை,மறைந்திருக்கும் குரூரம்,கசப்பின் வேர்,என எல்லா உணர்வுகளும் கவிதையில் அழகாய் வெளிப்படிருந்தது.அணில், குளம், மரம், பேருந்து, சன்னல், நெரிசல், தனிமை என பழகிய படிமங்களினூடாய் இவர் பார்த்திருக்கும் உலகம் அற்புதம்.மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுவது அன்பின் மிகுதியென்பதைத் தவிர வேறென்னவாய் இருக்கமுடியும்?.
-----------×××----------------
விழிக்கும்போதே படிக்காமல் சேர்ந்துவிட்டிருந்த புத்தகங்களை நினைத்துக்கொண்டேன்.தற்கால மலையாளக் கவிதைகள் ஜெயமோகன் மொழிபெயர்த்திருக்கிறார்.அத்தனை கவிதைகளிலும் யதார்த்தம் நிரம்பி வழிந்தது.அழகுணர்ச்சியோ படிமங்களோ நுட்பமோ இல்லை வெற்றுச் சொற்கள் மூலம் கோபம் கொட்டி எழுதுகிறார்கள் மலையாளக் கவிகள்.ஜெமோ சொல்வது போல் தமிழ் மலையாளத்திலிருந்தும் மலையாளம் தமிழிலிருந்தும் கற்றுக்கொள்ளக் கவிதையைப் பொறுத்தமட்டில் நிறைய இருக்கிறது.நகுலன் நாவல்களை மிக மெதுவாய் படிக்கப் பிடித்திருக்கிறது.நவீனன் டைரியை மீண்டும் படித்தபோது முன்பு படித்தது போல இல்லை.
கொற்றவையின் முதல் பத்து பக்கங்கள் எரிச்சலாக இருந்தது.நான் எழுதும் கவிதைகளை புரிந்து கொள்ள முடியாத வாசகனின் மனோநிலையும் இப்படித்தானே இருக்கும் என எண்ணிச் சிரித்துக் கொண்டேன்.கானல் நதியை வாங்கிப்போன கதிர் எவன்யா இப்படி எழுதுறான்?.ஒரு மண்ணும் புரியல ஏதோ மொழிபெயர்ப்பு நாவல் போல என்று சலித்தபடி திருப்பித்தந்தான்.கதிருக்கு புனைவு பற்றி விரிவாய் ஒரு நாள் சொல்லனும்.கானல்நதியின் ஆரம்பப் பக்கங்களே அட்டகாசம்! யுவனின் எழுத்து எனக்குப் பிடித்திருக்கிறது.குள்ளசித்தன் சரித்திரம் என் வாழ்வோடு வெகு தொடர்புடைய நாவல்.யுவன் சந்திக்க வேண்டிய நபர்களில் ஒருவர்.
-----------×××----------------
மதியம் பொன்னுசாமியில் நடப்பன பறப்பனவைகளை வதம் பண்ணித் திரும்பிய களைப்பில் கண்ணைச் சுழற்றியது.ஓஒ வென்ற தொலைக்காட்சி அதிர்வில் பதைத்துக் கண்விழித்தபோது தோனி வாண வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தான். அட நம்ம பசங்களா! என ஆச்சர்யமாய் வெகு நாட்கள் கழித்து விளையாட்டைப் பார்த்தேன்.தோனியின் தைரியம் மிகவும் பிடித்திருந்தது.டெஸ்ட் மேட்சுகளில் 90 ஐ தொட்டுவிட்டாலே ஆடு திருடிய கள்ளனைப்போல நம் வீரர்கள் விழிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.தடவி தடவி 100 அடித்து பின் அடிக்க முயன்று 103 க்கு அவுட் ஆகித் திரும்புவர்.அதுபோல இல்லாமல் தொடர்ந்து மூன்றாவது சிக்ஸ்ருக்கு பந்தை அனுப்பமுயன்ற தோனியின் அணுகுமுறை சுத்த விளையாட்டு.கும்ப்ளே அடித்த செஞ்சுரி விசேச போனஸ்.
-----------×××----------------
இளவஞ்சி பின்னூட்டம் படிய்யா மோகந்தாஸ் பதிவிலே என்று கதிர் தொலைபேசினான் வெள்ளிக்கிழமை யாருடனும் சாட்டுவதில்லை.ஆஃப் லைனில் வலை மேய்ந்தபோது இளவஞ்சியின் பின்னூட்டம் படித்து சிரித்துக்கொண்டேன்.வெங்கட்ராமன் கண்டிப்பாய் அதிர்ந்துபோய் இருப்பார்.நான்கு சுவர்களுக்குள் கயமைத்தனத்தின் மொத்த உருவமாய் இருக்கும் மனித மனம் நான்கு பேர்களுக்கு மத்தியில் புனித பிம்பங்களை புனைந்துகொள்கிறது.சயந்தன் பின்னூட்டத்தின் மூலமாக தந்திருந்த தகவல் முள்ளாய் தைத்தது.டிசே அநாமதேய பின்னூட்டங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் ஆனாலும் அவரின் விளக்கமும் செறிவு.மொக்கை கிங்காய் ரவி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகச்சரியன தேர்வு.பொட்டி கடை கெட்ட ஆளுய்யா அதும் அவரோட சேர்ந்து லக்கி அண்ட் கோ அடிக்கும் கும்மி ச்சே கெட்ட பசங்கபா.உங்க பதிவில பின்னூட்டம் போட்ட தமிழச்சி நிசமாய்யா? இல்ல நீங்களே கிரியேட் பண்ணிங்களா?பெயரிலி யை வழக்கம்போல் மெதுவாய்த்தான் படிக்க வேண்டும்.லக்ஷ்மியின் விளக்கமும் பொன்ஸின் தொலைந்த எலியும் புன்முறுவலைத் தந்தது.எலி தான பொன்ஸ் போன போகட்டும் விடுங்க.எனக்கென்னமோ நந்தா மேலதான் டவுட் :)
-----------×××----------------

வார இறுதி நாளில் பியர் குடிக்காமலிருப்பது உடல் நலத்திற்க்குத் தீங்கானது என்ற சான்றோர் வாக்கை பொய்க்க விரும்பாமல் கராமா ஓட்டல் போனோம்.நலம் விசாரித்த பல்லுக்குக் கிளிப் போட்டிருந்த பிலிப்பைன் தேசத்துப்பெண்ணை பதிலுக்கு நலம் விசாரித்தேன் உன் கிளிப்பை எப்போது கழட்டப்போகிறாய் என்றதற்க்கு இன்னும் ஆறுமாதமிருக்கிறது என வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள்.கிளிப் போட்டாலும் உன் புன்னகை வசீகரமானதுதான் என்பதற்க்குப் பதிலாய் சூடான பாப்கார்னகளை கிண்ணத்தில் நிரப்பினாள்.சில பொய்களுக்கு பலன் உடனே கிட்டி விடுகிறது.முடித்துத் திரும்புகையில் தாட்டியான ஆப்பிரிக்க தேசத்துப் பெண் வோட்கா பாட்டிலை இடுப்பில் சொருகியபடி வான்னா ட்ரை டகீலா என்றாள்.ஆள விடு ஆத்தா நாளைக்கு ஆபிசு போகனும் எனத் தமிழிலேயே சொல்லி நடையை கட்டினோம்.
-----------×××----------------

எனக்குப் பிடித்த கவிதை-அனிதா

எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்

மௌனமாய் விம்மத்துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்தான்.
ஏன் அழறீங்க என்றவன் பின் தயங்கி
அழாதீங்க என்றான்.
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.
அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்
-----------×××----------------

Tuesday, August 7, 2007

வெறுமை,கசப்பு,சலிப்பு மற்றும் தனிமை



யாரிடமாவது ஐ லவ் யூ சொன்னால்
நன்றாக இருக்கும்போலிருக்கிறது
இணக்கமான புன்னகைகளோடு
படிய வாரிய தலையில்
மல்லிகைப்பூ
மற்றும் பவுடர் பூச்சின் வாசனைகளோடு
சுடிதார் அணிந்த பெண்ணொருத்தியைப்
பார்த்து நெடுங்காலமாகிறது..

வீட்டிற்க்கெதிரிலிருக்கும் பூங்காவில்
வெறுமையாயிருக்கும்
மரபெஞ்சுகளை பார்த்துக்கொண்டிருக்க
சலிப்பாயிருக்கிறது.
பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கவாவது
எவளாவது ஒருத்தி வேண்டும்

விரல்களைப் பிடித்து கொண்டோ
பழங்கதைகளை சொல்லிக்கொண்டோ
பெருமையடித்துக்கொண்டோ
கடந்து போகும் குழந்தைகளை
சிலாகித்துக்கொண்டோவாவதிருக்க
எவளாவது ஒருத்தி தேவைப்படுகிறது.

பிலிப்பைன் தேசத்தவர்
எப்போதும் கூட்டமாகவே திரிகின்றனர்
தலைமுறையாய் இங்கிருக்கிருக்கிறார்கள் மலையாளிகள்
நாளைக்கான கனவை சுமந்தபடி
மொட்டை வெயிலில் ஒற்றையாய் அலைகிறான் தமிழன்

உண்மை சிதைவுகளாலானது அது எப்போதும் சிதைந்த வடிவத்தை மட்டுமே பெற்றிருக்க முடியும்



நகர்ந்துகொண்டிருக்கும் வாழ்வில் இளைப்பாறிய இடங்களைப் பற்றிய அக்கறையையோ/பிரக்ஞையையோ எதிர்பார்ப்பது எத்தனை அபத்தமானதென்பது எனக்குப் புரிகிறதுதான்.இருப்பினும் இழந்தவைகளை எப்போதும் விடாது தொடர்ந்தபடி இருக்கும் மனதின் அலைவுகளை என்ன செய்வதென்று தெரியவில்லை.
-----------×××----------------
அவ்வப்போது உன் முகம் (ஒருமுறைகூட நேரில் சந்தித்திராத) வந்து கலைத்துப்போடுகிறது ஒழுங்குகளுக்கான சாத்தியக்கூறுகளை. உன் சிரிப்பு (உன் சிரிப்பினில் பொன் சிரிப்பினில் என் மனதில் பாதியும் போக.. ‘இந்தப் பாடல் எப்போதும் உன்னை நினைவுபடுத்துகிறது இந்தப் பாடல் உனக்குப் பிடித்த காரணம்தானோ என்னவோ எனக்கும் பிடித்துப்போனது.தினம் இந்த பாடலை தவிர்க்க முயன்று கேட்டுத் தொலைக்கிறேன்) காதல்,காமம்,கவிதை துயரம், அழுகை, கோபம், பொறாமை,திமிர்,கர்வம்,பொய்,வஞ்சம் என மாறிக்கொண்டே இருக்கும் மனதின் காட்சிகளை எவ்வித அலங்காரங்களுமில்லாமல் அப்படியே என்னிடம் அனுப்பிவைத்தாய்.(புனிதங்களின் தடம் பற்றி வந்திருந்த மிக நேர்மையான பிம்பம் எனக்கு. உண்மைகளின் வெப்பத்தை கவித்துவ முலாம் பூசித் தணிவித்து எனக்கான சிகரெட்டினை பற்ற வைத்துக்கொண்டிருந்தேன்) அவற்றின் அழகு குறித்து சிலாகித்தபடியிருக்கும் நொடியின் முடிவில் விகாரத்தின் குரூர முகம் முன் வந்து பல்லிளிக்கும்.வெறுத்துத் திரும்புகையில் நீ தளர்த்தும்போது பிய்ந்த உள்ளாடையின் ஊக்குகளிலொன்று மிகுந்த கிறக்கத்தின் குறியீடென காட்சிப்படிமங்களினூடாய் தெரியவரும்.பின் உன்னை கிளர்வுகளோடு பின் தொடர்கையில் உன் முதுகுத் தண்டின் குறுக்கே போடப்பட்ட (மண்ணின் காவலர்களின் கூர்மையான கத்தியல் கிழிக்கப்பட்ட) கோட்டின் தடத்தை கண்டு மனம் வெதும்பும்.

என் முன் ஆசுவாசத்தோடு உடைகள் களைந்து அமர்ந்துகொண்டு புகைத்துக்கொண்டிருந்தாய் மணிக்கணக்காய், நாள்கணக்காய், மாதக்கணக்காய்..

சலிப்பின் பிரதிநிதிகளான இருவரும் எவ்வித ஈர்ப்பில் நூற்று முப்பத்தி ஏழு நாட்கள் இணைந்திருந்தோம் என்பதற்க்கான காரணங்கள் இன்னமும் பிடிபடவில்லை.அவற்றைக் கண்டறிந்து நாட்களை நொடிகளாக மாற்றிய பின்பு வரும் கூட்டுத்தொகையின் எண்ணிக்கையளவின் பக்கங்களில் ஒரு புத்தகமொன்றை என் கடைசி நாளிற்க்குள் எழுதிவிட வேண்டும். நீ என்னுடைய பிரதியென்றும் உன் முன் அமர்ந்து பேசுவது கண்ணாடியில் என் பிம்பத்தை பார்த்துக்கொள்வது போன்றொரு உணர்வை தருகிறதென்றும் அவ்வப்போது இருவரும் சொல்லிக்கொண்ட விநாடிகள் மனதிற்க்குள் இனம்புரியாதொரு இணக்கத்தைத் தந்தது.முதல் முறை ஒரு பெண்ணின் விரல் தீண்டலின் சிலிர்ப்பையோ அல்லது ஏதாவது ஒரு விலகளில் பாதி பளிச்சிட்ட அவளின் முலைத் துள்ளல்களில் ஏற்பட்ட கிளர்வுகளையோ ஒத்திருக்கிறதென நான் சொல்லியபோது விடாது ஆறு நிமிடங்கள் சிரித்தாய். ஒப்பீடுகள் முட்டாள்தனமானவை அவை நிகழ்வை சிதைக்கிறதென சிரிப்பு முடிந்த அமைதிக்குப்பின் இறுகிய குரலில் சொன்னாய்.எப்போதும் எதையோ ஒப்பிடும் நீ! நிகழின் பிரதி இல்லை வார்த்தைகளால் கட்டமைத்துக்கொண்ட பாசங்கு மிருகமென எனக்கே தெரியாத என் பிம்பத்தை சிதைத்தாய்.மிருகமொன்று அழிந்த திருப்தியில் புதியதொரு ஏதோ ஒன்றின் (மிருகமென்றும் புனிதமென்றும் எப்படி சொல்லிக்கொள்ள முடியும் நாளை வேறொருவர் இப்பிம்பத்தை சிதைக்கலாம்) பளபளப்புடன் உன்னை நெருங்கியபோது நீ உன் எச்சிலையும் யோனி ஈரத்தையும் துப்பாக்கி குண்டு துளைத்திருந்த துளைவழி கசிந்த குருதியைக் கொண்டுமாய் பளபளப்பை பழசாக்கினாய்.பளபளப்பான ஒன்று போலித்தனமாய் மட்டுமே இருக்கமுடியும் உண்மை சிதைவுகளாலானது அது எப்போதும் சிதைந்த வடிவத்தை மட்டுமே பெற்றிருக்க முடியுமென்றாய்.உன் சித்தாந்தங்கள், கொள்கைகள், நுட்பமான அலசல்கள்,மனதிற்க்குள் புதைந்த உண்மையின் வெளிக்கொணரல்கள் மூலமாய் அறிவுஜீவிகள் பெருமளவு வாழும் தீவிலொன்றிலிருந்து புலம்பெயர்ந்தவள் என்பது வெகு தாமதமாய் தெரியவந்தது.

உன் சொந்தத் தீவிலிருந்து தப்பிக்கையில் வீடுகளெங்கிலும் மிகுந்திருந்த துயரங்களையும் தெருக்களில் வழிந்துகொண்டிருந்த வலிகளையும் சேகரித்து வந்திருப்பதாய் சொன்னாய். ஒரு நாள் மிக ரகசியமாய் நீ சொன்னது அதிர்வையும் மகிழ்வையும் ஒருங்கே தந்தது.எமது சிறுமிகளை புணர்ந்த சிலகுறிகளை வெட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்.அவற்றை ஐஸ்துண்டங்களுக்கிடையில் பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன்.அவை நான் வளர்த்து வரும் சிறுமிகளுக்குப் பூச்சாண்டிகளாக இருந்துவிட்டுப் போகட்டும் மேலும் அக்குறிகளின் நாகரீக வெளிப்பாடு பல்லிளிப்பாகவோ நேர்த்தியான கவிதையாகவோ இருக்ககூடுமென்று எம் சிறுமிகளுக்கு அறிவுறையும் சொல்லி வருகிறேன் என்றாய்.அன்றிலிருந்து நான் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

தனிமைப் புணர்வுகளின் சிலாகிப்பை நான் வேறெந்த பெண்ணிடமும் கேட்டதில்லை புகைத்தபடி சுய மைதுனம் கொள்வதின் பேரின்பத்தை யாரிடமும் சொல்லிவிடாதே எனக் கேட்டுக்கொண்டாய்.சில ரகசியங்களை பகிர்ந்து கொள்வதிலிருக்கும் ஆபத்துக்கள் உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையென்றும் ரகசியங்களின் வழித்தடம் ஒரு கொலையிலோ அல்லது தற்கொலையிலோதான் முடியக்கூடும் என்றும் எச்சரித்தாய்.
-----------×××----------------
கொல்வது ஒரு கலையென்ற ஹிட்ச்காக்கின் ரசிகன் நான்.ரகசியங்களை உடைப்பதில் எனக்கிருக்கும் ஆவல் உனக்குத் தெரியாதது. பகிரங்கப்படுத்துதல்களின் மூலம் சுளிக்கப்படும் முகங்களின் அழகின் மேல் எனக்கு கவர்ச்சி அதிகம். ஆகவே பெண்ணே! (இப்பிரதியை எழுதும்போதே நினைத்துக் கொள்கிறேன்) அதிரப்போகும் புனிதங்களின் பாதுகாப்பான உலகத்தையும் அலறித் துடிக்கப்போகும் வெயில் படாத தொட்டிச்செடிகளின் கூக்குரல்களை பற்றியுமான பயத்தை விடு.உன் விழியுயர்வில் எரிந்துபோகலாம் பாசாங்குகளின் வழித்தோன்றல்களனைத்தும்.
-----------×××----------------
இப்பிரதியில் அவளுக்குப் பிடித்தவை

1. இழந்தவைகளை எப்போதும் விடாது தொடந்தபடி இருக்கும் மனதின் அலைவுகள்.
2. உண்மைகளின் வெப்பத்தை கவித்துவ முலாம் பூசித் தணிவித்து எனக்கான சிகரெட்டினை பற்ற வைத்துக்கொண்டிருந்தேன்
3. நீ தளர்த்தும்போது பிய்ந்த உள்ளாடையின் ஊக்குகளிலொன்று
4. சலிப்பின் பிரதிநிதிகளான இருவரும்
5. ஏதாவது ஒரு விலகளில் பாதி பளிச்சிட்ட அவளின் முலைத் துள்ளல்கள்
6. எப்போதும் எதையோ ஒப்பிடும் நீ! நிகழின் பிரதி இல்லை
7. பளபளப்பான ஒன்று போலித்தனமாய் மட்டுமே இருக்கமுடியும் உண்மை சிதைவுகளாலானது அது எப்போதும் சிதைந்த வடிவத்தை மட்டுமே பெற்றிருக்க முடியும்
8. அக்குறிகளின் நாகரீக வெளிப்பாடு பல்லிளிப்பாகவோ நேர்த்தியான கவிதையாகவோ இருக்ககூடும்
9. ரகசியங்களின் வழித்தடம் ஒரு கொலையிலோ அல்லது தற்கொலையிலோதான் முடியக்கூடும்
-----------×××----------------

Friday, August 3, 2007

அன்புள்ள சுகுணாதிவாகர்



அ மார்க்ஸ் உங்க நண்பரா
கட்டுரைகள் தொகுப்பா வந்திருக்கா?
ஆமாம், ஏன்?
யாருடைய கட்டுரைகளைக் கேட்கறீங்க?
தீராநதியில் படிக்கிறதோட சரி
அ மார்க்ஸ்
தனி தொகுப்பு ஏதாவது வந்திருக்கா
சிரிப்புதான் வருது, அந்த கிழட்டுபாடு ஒரு 75 புத்தகம் எழுதியிருப்பாரு.
:)
மன்னிச்சிரு நண்பா
எனக்கந்த ஞானம் கம்மி
தேடி படிக்கனும்
நீதான் காரல்மார்க்ஸையே யாருன்னு கேட்ட ஆளாச்சே((-
-------------- ××----------------
புதன் கிழமை இரவு 1 மணிக்கு வந்திருந்த குறுந்தகவலை வியாழக்கிழமை காலை ஆறு மணிக்குத்தான் பார்த்தேன்அதிர்ந்துபோய் கதிரை எழுப்பியதில் அவனுக்கும் விவரங்கள் தெரியவில்லை.ஜெஸிலாவின் கணவர் ரியாஸ் தொலைபேசி உறுதி செய்தார். நாள்முழுக்க கண் முன் அந்தக் குழந்தைகளின் பிம்பம் வந்து வந்து போய் கொண்டிருந்தது.தான் இருக்கும் இடத்தை எப்போதுமே ககலப்பாக வைத்திருக்கும் தனித்தன்மை கொண்ட ஆசிப் இந்த இழப்பை எப்படித் தாங்கிக்கொள்வார் எனத் தெரியவில்லை.ஆசிப்பின் குரலில் இருந்த உருக்கம் மனசை அசைத்துப்போட்டதென துக்கத்தில் கொஞ்சத்தை மடலில் அனுப்பியிருந்த மதிக்கும் தொலைபேசியில் கதறி அழுத ஜெஸிலாவிற்க்கும் பதில் சொல்ல மறுத்து எப்போதுமே மிதந்தலையும் என் நேசத்திற்க்குரிய சொற்கள் அசிங்கமாய் ஓடி ஒளிந்துகொண்டன.
-------------- ××----------------
பணம் என்கிற மிகச் சக்திவாய்ந்ததாய் சொல்லப்படுகிற வஸ்துவை வெற்றுத்தாள்களாக கருதத் துவங்கினால் துபாய் வாழ்வு கொண்டாட்டம்தான்.புனிதங்களை கட்டுடைத்ததில் பெரும்பங்கு நடனப்பெண்களைத்தான் போய் சேர வேண்டும்.ஒருமுலை விலக்கியோ மேல் துப்பட்டா இல்லாமலோ மதுவை கண்ணாடி குவளைகளில் வார்க்கும் பெண்கள் அனைவரும் உயிருள்ள பின்நவீன பிரதிகள்.தடுக்கி விழுந்தால் தென்னிந்திய மதுவிடுதிகள் நிறைந்த ஊர் இது.பனோரமா பாரில் நடனமாடும் ராதிகா பெரும்பாலும் வெள்ளை நிற உடைகளைத்தான் அணிந்திருப்பாள்.திறந்த முதுகும் பிதுங்கிய மார்புமாய் உயிர் உருகி நடனமாடும் அவள் தேவதை/மோகினி சாயலில் இருப்பாள்.ராசா ராசா உன்ன வச்சிருக்கென் நெஞ்சிலே ரோசா பூவப்போல என அவள் உருகும்போது அரைபோதையில் வாலியையும் வைரமுத்துவையும் கொண்டாடத் தோணுகிறது.
-------------- ××----------------
சுகுணாவின் கடிதங்களைப் போல ஹேமாவின் கடிதங்களும் குழந்தைத்தனமானதுதான்.அவள் எழுதிய 47 கடிதங்களிலும் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் நன்றாக சாப்பிடவும் என்பதைத் தவிர்த்து மேலதிகமாய் ஒன்றுமிருக்காது.எப்போது உங்களுக்கு கடிதமெழுத ஆரம்பித்தாலும் கிண்டலடிப்பீர்களே என பயந்து பயந்துதான் எழுதுகிறேன் ஆனால் இதற்க்கு மேல் எழுதத் தோணவில்லை என்பாள்.ஆனால் அவளின் கடைசிக் கடிதம் மட்டும் 13 பக்கங்களிலிருந்தது.சுகுணா,ஹேமா போல எப்போதும் வாழும் ஒருத்தி / ஒருவன் எல்லோர் மனதிலும் இருக்ககூடும்.
-------------- ××----------------
யார் கடிதமெழுதினாலும் பத்திரமாய் வைத்துக்கொள்வது இது வரை பழக்கமாக இருக்கிறது பத்தாம் வகுப்பு முடித்த கையோடு லீவிற்க்கு ஊருக்கு போன ராஜேஷின் கடிதம் கூட இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்.25 பைசா அஞ்சலட்டையில் சாய்வான எழுத்துக்களில என் அப்பா எனக்கெழுதிய ஒரே ஒரு கடிதத்தை அவ்வப்போது புன்னகையோடு பார்த்துக்கொள்வதுண்டு.
-------------- ××----------------
புகழேந்தி வாத்தியார் இங்கிலாந்தில் படித்தவர் என்பது நம்புவதற்க்கு சற்று கடினமான விதயம்.நல்ல கருப்பும் பெரிய தொந்தியுமாய் ஒரு உருவம்.ஆனால் அவரைப்போல் ஆங்கிலம் பேச ஒருவரும் இல்லை.அல்லது நான் பார்த்ததில்லை.மனிதர் ஆங்கிலச் சிறுகதைகள் வரும் இரண்டாம் தாளை எடுக்கும்போது உருகிப்போக வைப்பார்.குறிப்பாய் எ செல்பிஷ் ஜெய்ண்ட் என்றொரு கதை குழந்தைகளை தனது தோட்டத்தில் விளையாட அணுமதிக்காத ஆஜானுபாகான ஒருவனின் கதையை அவர் சொல்லிய விதம் இன்னும் மறக்க முடியாது.தன் உடல் முழுதும் அடுத்தவர்களின் காயங்களை சுமந்திருப்பதாய் ஒரு சிறுமி சொல்லும் கட்டத்தில் அவர் உட்பட அனைவரும் உருகிப்போனோம்.கடுகடுவென முகம் அவருக்கு ஆல் பெலோஸ் கமிங் ஃப்ரம் காடு என எல்லரையும் திட்டுவார்.ஒருமுறை டு யு நோ வாட் ஈஸ் ரேபிட் என என் பக்கத்திலிருந்தவனை கேட்டதற்க்கு அவன் சாதாரணமாய் எழுந்து எலி சார் என்றான்.
-------------- ××----------------
ஓசூரில் வாழ்ந்தவரை ஆதவன் தீட்சண்யா,க.சீ சிவக்குமார்,போப்பு, பா வெங்கடேசன் போன்ற செறிவான ஆட்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பார்ப்பேன்.குறிஞ்சி திரைப்பட இயக்கத்தின் திரைப்படங்களை ஓரமாய் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த நபர்களில் நானும் ஒருவனாய் இருந்திருக்கிறேன்.எப்போதும் வாயைத் திறந்திராமல் வந்து போன சுவட்டை ரெஜிஸ்டர்களில் மட்டும் குறித்துவிட்டு ஓடிப்போய்விடுவேன்.அவர்களின் கலந்துரையாடல்கள் பெரிய உலகத்தின் சன்னல்களாக இருந்தது.ஒருவேளை ரமேஷின் தம்பி என்றால் யாருக்கேனும் அபூர்வமாய் நினைவிற்க்கு வரலாம்.இந்த முறை விடுமுறைக்கு போகும்போது நிறைய கேள்விகளுடன் செல்ல உத்தேசம்.

-------------- ××----------------
கேலி,கிண்டல்,எள்ளல்,கலகம்,திமிர் இவற்றோடு உன் அன்பும் கட்டற்றதாய்த்தான் இருக்குமென நம்புகிறேன்.நான் ஓரினச்சேர்க்கையாளனாய் இல்லாதிருப்பது சற்று வருத்தமாய் இருக்கிறது.அப்படி இருந்திருந்தால் சித்தார்த் மற்றும் இளங்கோவோடு உன்னையும் முத்தமிட்டிருக்கலாம்.
-------------- ××----------------

Wednesday, August 1, 2007

அஞ்சலி - இங்கமர் பெர்க்மென்



சுவீடிஷ் இயக்குனரான இங்க்மர் பெர்க்மன் நேற்று முன் தினம் இறந்தது சற்றுமுன் மூலமாக தெரிய வந்தது.ஒரு கலைஞனின் மரணம் மட்டுமே அவனைப்பற்றி யோசிக்க வைப்பது குரூரமான நிதர்சனம்.இந்த மனிதர் உயிரோடு இருக்கிறாரா என்று கூட யோசிக்காதிருந்தது வெட்கத்தை தந்தது. வாய்கிழிய எத்தனை பேரிடம் இங்க்மர் பெர்க்மெனை சிலாகித்திருப்போம் என்பது போன்ற நினைவுகள் மேலெழும்ப குற்ற உணர்வை தவிர்க்க முடியாத நீட்டிப்பில் தி சைலன்ஸ் படத்தை நேற்றிரவு மீண்டும் பார்த்தேன்.என்னைப் பொறுத்த வரை ஒரு உண்மையான கலைஞன் என்பவன் நாளைக்கான பிரதியை இன்றே படைப்பவனாக மட்டும்தான் இருக்கமுடியும்.இங்கமர் பெர்க்மனின் இரண்டு திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன்.1957ல் வெளிவந்த Wild strewberries மற்றும் 1963ல் வெளிவந்த The silence இரண்டு படங்களும் ஏற்படுத்திய வெறுமையும் கசப்பும் வேறெந்த படங்களும் தராதது.

இவரின் திரைப்படங்களில் தனிமையை,காமத்தை.பேராசையை,வெறுமையை மனோரீதியிலாக வெகுநுட்பமாக பதிவித்திருப்பார்.எக்ஸிஸ்டென்சியலிஸ்ட் (இருத்தலிய வாதி?) என அடையாளம் காணப்படும் பெர்க்மேன் இருப்பை சந்தேகித்தல் மற்றும் புனிதங்களை கேள்விக்குட்படுத்துதல் மூலமாய் புதிய பரிமானங்களை திரைப்படங்களில் மிளிரச் செய்தவர்.

I want audiences to feel, to sense my films. This to me is much more important than their understanding them."

ஒரு திரைப்படத்தை புரிந்துகொள்வதைவிட உணர்ந்துகொள்வதுதான் எனக்கு முக்கியமாய்படுகிறதெனும் பெர்க்மென்னின் உணர்வுரீதியிலான அணுகுமுறை காட்சிப்படுத்துதல்களில் அதிக கவனத்தை எடுத்துக்கொள்கிறது.வைல்ட் ஸ்ட்ராபெர்ரிஸ் படத்தின் துவக்க காட்சியில் ஒரு கனவைப் பதிவித்திருப்பார்.இருளாய் நிழலொன்று
பின் தொடர்வதை,புரியாத வெளியின் பயத்தை, விளக்கு கம்பத்தில் தொங்கும் உடலை, தன் பிணத்தை தானே கனவில் காணும் திடுக்கிடலை நேரடியாய் மனதில் பதியவைத்தது அந்தக் காட்சி. இத்தனைக்கும் கருப்பு வெள்ளையில் அத்தகைய உணர்வை ஏற்படுத்த எத்தனை மெனக்கெட்டிருப்பார் என யோசித்தபோது பிரம்மிப்பாய் இருந்தது.அதே படத்தில் புரபசர் தன் பழைய நினைவுகளை நிகழில் இருந்தபடியே பார்க்கும்/ தொடமுயலும் கனவுதன்மையை மிக நேர்த்தியாய் பதிவித்திருப்பார்.ஒரு நாளில் நிகழும் சம்பவங்களை சொல்லும் இப்படம் எக்ஸிஸ்டென்சியலித்தின் மிகச் சரியான பிரதி என சொல்லலாம்.


நிறைவேற்றிக் கொள்ள முடியாத காமத்தின் வெறுமை,காமத்தின் மீதான பேராவல் இவரது பெரும்பாலன பட நாயகிகளின் பொதுகுணமாக இருக்கிறது.தி சைலன்ஸ் படத்தில் வரும் அன்னாவும் எஸ்தரும் வெறுமையின் உச்சம்.நுரையீரல் பாதிக்கப்பட்ட எஸ்தர் கதாபாத்திரம் விடாது புகைத்தபடியும் குடித்தபடியும் அவ்வப்போது தனது டைப்ரைட்டரில் மொழிபெயர்த்தபடியுமாய் தகிப்பு கொண்ட வெறுமையோடு படம் முழுக்க அலைகிறது.அவளது சகோதரியான அன்னா அழகாய் உடுத்திக் கொள்கிறாள் பேராவல்களோடு காதல் கொள்கிறாள்.வாசனைப் பூச்சுகளோடு நகரில் அலைகிறாள் வெளியே கொட்டி தீர்க்க முடியாத துவேசமும் வெறுப்பும் அன்னாவிற்க்கு எஸ்தரின் மேல படிந்திருக்கிரது.விமர்சகர்கள் ஒரே பெண்ணின் இருவேறு பிம்பங்கள்தான் எஸ்தரும் அன்னாவும் என்கிரார்கள்.இயல்பாகவே இவரது திரைப்படங்களில் கவிதைத்தன்மையும் பன்முகத்தன்மையும் அதிகம் விரவி இருக்கிறது.

ஜீலை 14 ,1918 ஆம் ஆண்டு ஸ்வீடனில் பிறந்தவர்.60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களுக்கு இவரேதான் திரைக்கதை எழுதியிருக்கிறார் (சுமார் 35 படத்திற்க்கும் மேல்) டாக்குமெண்டரி,டெலிவிசன் தொடர்களென எல்லாத்துறைகளிலும் செயலாற்றியிருக்கிறார். The Virgin Spring (1961); Through a Glass Darkly (1962); and Fanny and Alexander (1984).என்கிற மூன்று திரைப்படங்களும் சிறந்த வெளிநாட்டுப்படத்திற்க்கான அகாடமி விருதுகளைப் பெற்றது.இவரது திரைப்படங்களைப் பற்றி கேட்டபோது அவருக்குப் பிடித்த அவரின் படங்களாக மூன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். Winter Light,[11] Persona, and Cries and Whispers.இவரின் படங்கள் இவரை மிகுந்த மன அழுத்தத்திற்க்கு உள்ளாக்கி இருக்கிறது.இனிமேல் இவைகளைப் பார்க்கப் போவதில்லை என 2004 ம் ஆண்டு ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிரார்.பெர்க்மேனின் மூன்று திரைப்படங்களை (Through a Glass Darkly, Winter Light, and The Silence) trilogy என விமர்சகர்கள் வரிசைப்படுத்துகிறார்கள் ஆனால் பெர்க்மென் திட்டமிட்டு நிகழவில்லை இது என மறுக்கிறார், திரைக்கதையை முழுவதுமாய் எழுதி சரிபார்த்து விட்ட பின்பே திரைப்பட வேலைகளை துவங்குவது இவரின் வழக்கமாய் இருந்திருக்கிறது.

இரண்டு கொரியோகிராபர்கள்,ஒரு ஜர்னலிஸ்ட்,ஒரு பியானிஸ்ட்,ஒரு வித்வையென ஐந்து பெண்களை சட்டரீதியாய் திருமணம் செய்திருக்கிறார்.அதைத் தவிர்த்து 3 பெண்களிடமும் நெருக்கமிருந்தது.ஒன்பது குழந்தைகளை அதிகாரப்பூர்வமாய் தன் குழந்தைகளென் சொல்லிக்கொண்டார்.இவரது கடைசி மனைவி இங்கிரிட் வோன் ரோசனை 1971 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாய் திருமணம் செய்திருக்கிறார்.இவர்களுக்கு பிறந்த மரியாவின் பிறந்த வருடம் 1959 :) .

இங்கமர் பெர்க்மென் பற்றிய மதியின் இடுகை

ஒப்பிடு
http://wikipedia/commons/2/27/Sv-Ingmar_Bergman.ogg

எண்களால் நிரம்பிய சங்கமித்திரையின் அறை



சங்கமித்திரையை குறுகலான டெம்போ அமர்வுகளுக்கிடையில்தான் முதலில் பார்த்தேன்.பேருந்து நிலையத்திலிருந்து லாஸ்பேட் போகும் டெம்போவினுள் குறுகி உட்கார்ந்து போகும் சுகம் சற்று அலாதியானதுதான்.மிக நெருக்கமாய் மனிதர்களுடன் பயணிப்பது எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று.தொடர்ந்து ஒரே இடத்தில்,ஒரே சம்பவங்கள்,ஒரே மனிதர்களென கடந்து போகும் நாட்கள்
மிகவும் இதமானவை.சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரே மனிதர்களை ஒரே இடத்தில் ஒரே கால அவகாசத்தில் பார்ப்பது சற்று அபூர்வம்தான்.பாண்டிச்சேரியில் இது சாத்தியம்.டெம்போ ஸ்டேண்டில் காலை எட்டு மணிக்கு ராஜா டெம்போவில் நான் உட்பட நான்கு பேர் தினசரி அதே டெம்போவில் உடன் வருவர்.இது ஒரு மாதிரி பழகிவிட்ட சுகம்.வேறெந்த வசதி அந்த சமயத்தில் கிட்டினாலும் அதைத் தவிர்க்கத்தான் தோன்றுகிறது.சங்கமித்திரை அந்த நால்வரில் ஒருவள்.

தமிழ்சினிமாக்களில் நிகழ்வது போலத்தான் தொடர்ந்து ஒரு மாதமாய் அதே டெம்போவில் பயணித்தாலும் சின்னதாய் புன்னகைத்துக் கொள்ளக்கூட இல்லை.அஜந்தா தியேட்டர் சிக்னலில் நான் இறங்கி கொள்வேன்.சங்கமித்ரா லாஸ்பேட் வரை போவாள்.சில்லறை இல்லாத ஒருநாளில் நாளை தருகிரேனென ராஜாவிடம் சொல்லிவிட்டு இறங்கிப் போனேன்.அவள் இறங்குமிடத்திலும் சில்லறை பிரச்சினை எழவே எனக்கும் சேர்த்து காசு கொடுத்திருக்கிறாள்.மறுநாள் அது தெரியவரும்போது புன்னகைத்தாள்.உடனேவெல்லாம் பழகிவிடவில்லை.ஏதோ ஒரு புள்ளியில் இருவருக்குமான தடைகள் இணைந்திருந்தது.சனவரி மாத நேரு பூங்கா மலர் விழாவில் கூட்டத்தில் ஒருத்தியாய் அவளை சந்தித்தபோது அலோ சொல்ல முடிந்தது.இப்படியாய் சின்ன சின்ன சந்திப்புகள்.மெல்ல இருவரும் நட்பானோம்.

ஒருநாள் தொலைபேசினாள் மதியம் கடற்கரைக்கு வர முடியுமா என கேட்டாள். மதிய நேரங்களில் கடற்கரைக்குப் போக எனக்கு மிகவும் பிடிக்கும் ஆளில்லாத அந்த மொட்டை வெயிலில் பூவரச மரத்தடி பெஞ்சில் அமர்ந்திருப்பேன்.சிந்தனைகள் இல்லாது நுரைதெறிக்க எழும் அலைகளை பார்த்துக் கொண்டிருப்பது பிடித்தமான ஒன்றாக இருந்தது.

எண்களை சங்கமித்ராவைப்போல் யாராவது ஞாபகம் வைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.சில சம்யங்களில் என் தொலைபேசி இலக்கமே எனக்கு மறந்துபோய்விடுகிறது.கூகுள் விக்கிபீடியா என்றெல்லாம் வந்துவிட்டபிறகு மூளையின் தேவை அவசியமில்லாமல் போய்விடுகிறது.அபத்தமாய் சிந்திப்பதற்க்கு பதிலாய் சும்மா இருப்பது சுகமாய்த்தான் இருக்கிறது.இப்போதெல்லாம் மூளை என்கிற வஸ்து நமக்கிருக்கிறதா என யோசித்து சிரித்துக் கொள்வதுண்டு.

சங்கமித்ரா ரகுமானை முதலில் பார்த்தது 1997 ஆகஸ்ட 4 ம்தேதி மதியம் 3 மணிக்கு ரகுமான் சங்கமித்ராவை காதலித்ததாய் சொன்னது 1997 நவம்பர் 4 ம் தேதி இருவரும் ஒன்றாய் பேருந்தில் இரவில் பயணித்தது 1997 டிசம்பர் 30.சங்கமித்ராவை ரகுமான் வீட்டுக்கு நண்பர்களோடு நண்பர்களாய் கூட்டி சென்றது 1998 ஜீலை 3ம் தேதி.ரகுமான் சங்கமித்ராவை முத்தமிட்டது 1998 ஆகஸ்ட் 4 மதியம் 3 மணிக்கு.ரகுமானுக்கு சென்னையில் வேலை கிடைத்த நாள் 1999 மே 28.சங்கமித்ரா ரகுமானைப் பற்றி வீட்டில் சொன்னது 1999 நவம்பர் 23 . சங்கமித்ராவின் அப்பா ஒரு நள்ளிரவில் ரகுமான் வீட்டிற்க்கு போய் அவன் அம்மவை மிரட்டியது 1999 டிசம்பர் 3. கடிதமெழுதி வைத்துவிட்டு சங்கமித்ரா வீட்டை விட்டு வெளியே வந்தது 1999 டிசம்பர் 21 இரவு மணி 11,பேருந்து எதுவும் கிடைக்காமல் லாரி ஒன்று அவளுக்காய் நின்றபோது மணி 12.30 அந்த லாரி போகுமிடம் குமாரபாளையம் எனத் தெரிந்து மகிழ்ந்து குமாரபாளயம் சங்கரி வீட்டிற்க்கு போய் சேர்ந்தது விடியற்காலை 4.30.ஒரு வாரத்திற்க்குப் பிறகு ரகுமான் தொடர்பு கொண்டு பாண்டிச்சேரியில் நண்பன் வேலை செய்யும் நிறுவனத்திற்க்கு அப்ளிகேசன் போடச் சொல்லியிருக்கிறான்.இண்டர்வியூ நடந்தது 2000 சனவரி 7 ம் தேதி. பொங்கல் கழிந்து 16 ம் தேதி வேலையில் சேர்ந்திருக்கிறாள்.

ரகுமான் அம்மாவிற்க்கு இவளை பிடிக்காமல் போனது.நேரடியாக சொல்லாவிட்டாலும் அம்மா உயிரோடு இருக்கும்வரை கல்யாணம் நடக்காதென இருவருக்கும் திட்டவட்டமாய் தெரிந்த நாள் பிப்ரவரி 3 ம் தேதி.அம்மா மனசு மாறும்வரையோ அல்லது இறக்கும் வரையோ காத்திருப்பேன் என இவள் அவனிடம் சொன்னது பிப்ரவரி 5.வாரம் இரண்டு முறை அவனும் இரண்டு முறை இவளுமாய் தொலைபேசிக்கொண்டிருந்ததும் சில மாதங்களிலேயே பறிபோயிற்று நல்ல வாய்ப்பு வந்திருக்கிறதென மலேசியாவிற்க்கு ரகுமான் போனது 2000 ஏப்ரல் 27ம் தேதி.

இரண்டு வருடங்களில் பதினோரு முறை அவன் தொலைபேசியதாயும் அவன் தொடர்பு எண் எதுவும் தரவில்லை எனவும் சொன்னாள்.அவன் அம்மாவை சமீபத்தில் பார்த்ததாகவும் அவள் முன்பை விட ஆரோக்கியமாய் இருப்பதாயும் சொன்னாள்.அடுத்த வருடம் அவன் ஊருக்கு வரும் தகவலும் அவன் அம்மாவின் மூலம்தான் தெரியவந்ததாம்.அந்தரங்கம் தெரிந்து கொண்டபிறகு வெகு நெருக்கமாய் உணர முடிந்தது.எல்லா சனிக்கிழமை மதியங்களிலும் சினிமாவிற்க்கோ கடற்கரைக்கோ சென்றோம் பெரும்பாலான விசயங்கள் ஒத்துப்போனது.ஆனால் ரமணிசந்திரனிடமிருந்து அவளை விடுவிக்க முடியவில்லை.வேறெந்த புத்தகத்தையும் அவளால் படிக்க முடியவில்லை என சிரித்தபடியே ஒரு நாள் சொன்னாள்.

ஏப்ரல் பதினேழாம் தேதி அவளுக்கும் ஏப்ரல் பதிமூன்றாம் தேதி எனக்கும் பிறந்த நாள் இதென்ன இப்படி இருக்கிறதென் சிரித்தபடி நடுவில் ஒரு நாளை தேர்ந்தெடுத்து 2002 ஆம் ஆண்டின் ஏப்ரல் 15 ம் தேதியை இருவரும் தத்தம் பிறந்த நாளாய் கருதி கொண்டாடினோம்.அன்றுதான் சங்கமித்ராவின் அறைக்கு முதலில் போனேன்.பேச்சிலர் ஆணின் அறைக்கும் பெண்ணின் அறைக்கும் பெரிதாய் வித்தியாசம் ஒன்றுமில்லை.என்ன..சிகெரெட் நாற்றமில்லை அவ்வளவுதான்.இருப்பினும் குறுகலான அந்த அறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.எப் எம் ஓடிக்கொண்டிருக்க பேசியபடியே சமைத்தாள்.எப்போது பேசினாலும் நாட்கள் தேதிகளை துல்லியமாய் குறிப்பிட்டு பேசுவது அவள் வழக்கம்.இதெப்படி முடிகிறது என என் கேள்வியை சின்னதாய் ஒரு புன்னகையின் மூலம் தவிர்த்து பழக்கமாயிடிச்சி என்றாள்.
சங்கமித்ராவின் அறைத்தோழி பூங்கொடிக்கு 30 வயதிற்க்கு மேல் இருக்கும்.திருமணமாகி விவாகரத்தும் ஆகி விட்டதென பிறிதொரு சந்தர்ப்பத்தில் சங்கமித்ரா சொன்னாள் அதுவும் நான் வலிந்து கேட்டபின்பே.

ஒரு வருடம் நீடித்தது இந்த நட்பு. மீண்டும் என் மாறுதலின் நிமித்தமாய் சென்னைக்குப் போய்விட்டேன்.ஈஸிஆர் ரோடில் 4 மணிநேரத்தில் வந்து பார்க்கும் தொலைவுதான் என்றாலும் ஏனோ அவளை மீண்டும் சந்திக்க தோணவில்லை எனது சோம்பலை நேரமில்லை என்ற சமாளிப்புகளுடன் அவளிடம் தொலைபேசும்போது சொல்வேன்.ஒரு நள்ளிரவில் ஏனோ எனக்கு பிடித்தவர்கள் வெகு சீக்கிரத்தில் என்னை விட்டு விலகிப்போய்விடுகிறார்கள் என சொல்லியபடி தொலைபேசியை வைத்தாள்.மீதமிருந்த இரவை அவளின் துயரம் மிகுந்த சொற்கள் என்னை ஆக்ரமித்து தூங்கவிடாமல் செய்தது.

ஒருவேளை தலைக்குனிந்த, ஓரக்கண்ணால் பார்க்கும் வழக்கம் கொண்ட, எல்லாவற்றுக்கு மறுத்தும் தனியான சந்தர்ப்பங்களில் மறுத்தைவிட அதிக துணிவாய் விழைந்தும், கிறக்கமாய் பேசும், பொய் சொல்லும், அடிக்கடி துப்பட்டாவையோ, புடவையின் மாராப்பையோ அட்ஜஸ்ட் செய்தபடி பேசும் ஏனைய பெண்களில் ஒருத்தியாய் அவள் இல்லாதிருந்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.ஏனோ தெளிவான பெண்களின் மேல் சராசரி ஆணிற்க்கு இருக்கும் பயம் எனக்கப்போது இருந்ததும் அவளை பார்ப்பதை தவிர்த்ததிற்க்கு காரணமாய் இருந்திருக்ககூடும்.

சரியாய் ஒரு வருடம் கழித்து அவளை பார்க்க போயிருந்தேன் அதே அலுவலகம்தான் ஆனால் வீடு மாறியிருந்தாள்.சாரத்தில் ஒரு அடுக்குமாடிகுடியிருப்பில் அவள் வீட்டிற்க்கு சென்றபோது மகிழ்ந்துபோனாள்.வீடு சுத்தமாய் இருந்தது.மிகுந்த ஆவலுடன் திருமணமாகி விட்டதா என கேட்டேன் அவள் ரகுமானுக்கு ஆகிவிட்டது என்றாள்.என்னிடம் சொல்ல வார்த்தைகள் எதுவும் வரவில்லை. 2003 பிபரவரி பதினாலாம் நாள் இரவு 11.45 க்கு ரகுமான் தொலைபேசியில் அழைத்திருக்கிறான் தன் அம்மாவின் பிடிவாதம் தகர்க்க முடியாத ஒன்றாயிருக்கிறது எனவும் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும்,நாம் பிரிந்து விடுவதுதான் சரியென தோன்றூகிறதெனவும் அவளை மறந்து விடச்சொல்லியபடியுமாய்ச் சொல்லித் தொடர்பை துண்டித்திருக்கிறான்.சங்கமித்ராவின் உடல் முழுதும் பற்றி எரிந்திருக்கிறது.கசப்பும் வேதனையும் உள்ளிருந்து மிகுந்தெழுந்து அருவெருப்பில் குமைந்து போயிருக்கிறாள்.ஆனால் அவள் அழவில்லை.குளியலறையின் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு எரிச்சல் தீரும் வரை குளித்திருக்கிறாள்.பின் சரியாய் துவட்டப்படாத தலையோடு இரவு 1.35 க்கு தூங்கி கொண்டிருந்த பூங்கொடியை உலுக்கி எழுப்பி அவள் உதடுகளில் வன்மமாய் முத்தமிட்டதாய் சொன்னாள்.

Featured Post

test

 test