Saturday, October 13, 2007

கடிதங்களை சேகரிப்பவனின் முதல் கடிதம்


உனக்கான ஒரு கடிதத்தை எப்படியாவது எழுதிவிடவேண்டுமென்கிற தவிப்பை இன்றோடு முடித்துவிட எண்ணி இதைத் தொடங்குகிறேன்.இந்த கடிதத்தில் என்ன எழுதவென்று சரியாய் தெரியவில்லை.தொடங்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இருந்தது (இனி அது பார்த்துக்கொள்ளும்) இதில் ஒரு சிக்கல் என்னவெனில் ஒழுங்கான திட்டமிடல்கள் எதுவும் இல்லாததால் இதன் வடிவம் கண்டிப்பாய் ஒழுங்காய் வராது எனத்தான் தோன்றுகிறது.எந்த ஒரு ஒழுங்கும், திட்டமிடல்களும் இல்லாத ஒன்றாய்த்தான் உன்னை நேசிக்க ஆரம்பித்தேன் மிகச் சரியாய் சொல்லப்போனால் அதுதான் என் இயல்பாக இருக்கிறது. என் நேசத்தினை பிரியத்தினை உன்னிடம் சரியாய் சொல்லிவிட்டதாய்த்தான் நம்புகிறேன்.தொலைபேசியிலோ நேரிலோ சண்டை போடுவதைப் போல என்னால் கடிதத்தில் உன்னுடன் சண்டை பிடிக்க முடியாது.உன் மீதான என் கோபங்கள் என் எரிச்சல்கள் இவற்றை வார்த்தைகளாக மாற்றக்கூடிய அவகாசம்தான் எப்போதும் கிடைக்கிறதே தவிர அவற்றை எழுத்துக்களாக்கிப் பார்க்கும் வரையில் அவை நீடிப்பதில்லை.என் கடிதங்களுக்கு நீ பதில் போடுவதில்லை என்கிற உன் கொலுசு சிணுங்கல்களுக்கு பதிலாய் இருக்கட்டுமே என்கிற நினைப்பில் ஓய்வான மனநிலையில் இதை எழுத ஆரம்பிக்கிறேன்.

என் பதின்மங்களில் கடிதங்கள் மீது மிகப்பெரிய காதல் இருந்தது.யாரிடமிருந்தாவது வந்து சேரும் கடிதங்கள் என்னுள் ஏற்படுத்தும் மலர்ச்சியினை மழையில் நனைந்த மரமல்லிப் பூக்களின் வாசத்தை ஆழமாய் உள்ளிழுக்கும்போது ஏற்படும் பரவசத்தினோடு ஒப்பிடலாம். பொங்கல் மற்றும் தீபாவளி வாழ்த்து அட்டைகளை அனுப்பாத நண்பர்களை அந்த நொடியிலிருந்து வெறுக்க ஆரம்பிப்பதும், அனுப்பும் நண்பர்களை மிக அதிகமாய் நேசிக்க துவங்குவதுமான மனநிலை அப்போதெனக்கு இருந்தது.மேலதிகமாய் கடிதங்களை சேகரிப்பது என்னுடைய பிடித்தமான செயலாக இருக்கிறது. என் விடுதி முகவரிக்கு வந்து சேர்ந்த முதல் கடிதத்தை கூட இன்னும் பாதுகாப்பாய் வைத்துள்ளேன்.இந்த சேகரித்தலில் இனம் புரியாத ஒரு நேசத்தினை நான் உணர்கிறேன். எனக்காக எழுதப்பட்ட வரிகள் என்றும் என்னைத் தேடிப் பயணித்து வந்த எண்ணங்கள் என்றுமாய் நினைத்துக்கொள்வேன்.இந்த சேகரித்தல்களில் இன்னொரு அசெளகரியமும் உள்ளது.இந்த பழைய கடிதங்கள் எப்போதும் இறந்த காலத்தை கண்முன் நிறுத்துகிறது.கடிதத்தை சேகரித்து வைத்திருக்கும் பெட்டியினை திறக்கும்போது இழந்த எல்லாமும் மீண்டும் உயிர்பெறத் துவங்குவதாய் தோன்றும்.வித்தைக்காரரின் கைகளிலிருந்து திடீரெனப் பறக்கத் துவங்கும் புறாவினைப் போல மனம் சடுதியில் அந்த கடிதம் எழுதப்பட்ட சூழலுக்குத் தாவிவிடும்.பின்பு அலைந்து திரிந்து நிகழிற்கு திரும்பும்போது ஏற்படும் வெறுமையை விட வலி மிகுந்தது எதுவுமில்லை.

கங்காவின் கடிதங்கள்,ஹேமா தன் சாய்வான எழுத்துக்களில் எனக்கெழுதிய நூற்று சொச்ச கடிதங்கள், என் அப்பாவின் உடைந்த கையெழுத்து, என் அண்ணனின் கொம்பில்லாத எழுத்துக்கள், வீணாவிடமிருந்து வந்த வாழ்த்து அட்டைகள், அபூர்வமாய் சங்கமித்ரா எழுதிய ஒரே ஓர் கடிதம், கல்லூரி நண்பர்கள்,பள்ளி நண்பர்கள் எனக்கனுப்பிய வாழ்த்து அட்டைகள், “ஏதாவது வேல அங்க கெடைக்குமா மச்சான்” கள் தீபாவளி பொங்கல் வாழ்த்துக்கள் என குவிந்திருக்கும் பெட்டியினை இப்போதெல்லாம் திறக்க அவகாசம் கிடைப்பதில்லை.மேலும் ஒரு கட்டத்தில் கடிதங்கள் வருவதும், எழுதுவதும் சுத்தமாய் நின்று போயிற்று.

உன்னுடைய முதல் கடிதம் எனக்கு வந்த போன வருடத்தின் செப்டம்பர் மாதத்தின் ஒரு நாளை இப்போது நினைத்துப்பார்க்கிறேன் அந்த நாள் மிகுந்த மகிழ்ச்சியளித்தது அந்த மகிழ்வான மனநிலையை இப்போது நினைவு கூர்ந்தாலும் அந்த மகிழ்ச்சியின் மீதங்கள் நினைவில் பரவுகிறது.முதல் கடிதத்திலியே உன் காதலை சொல்லியிருந்தாய் இருபத்தியிரண்டு பக்கங்களில் நீ சொல்லியிருந்த உன் காதல் என்னை மூச்சடைக்க செயதது. கடிதம் படித்து முடித்துவிட்டு என்னால் சீராய் மூச்சுவிடமுடியவில்லை.பிட்டர்ஸ்வீட் என்கிற ஆங்கில வார்த்தைக்கு அந்த சூழலைத்தான் நினைவு கொள்கிறேன்.ஏதோ ஒரு பயமும் தவிப்பும் உடல் முழுக்க பரவத் துவங்கியது.சலனங்களை விதைப்பது மனதை அசைத்துப்பார்ப்பது நம்பிக்கைகளையும் இணக்கத்தை ஏற்படுத்துவது போன்ற செயல்களை நான் அறவே தவிர்த்து வந்தேன் எப்படியோ உன்னிடத்தில் அதன் சாத்தியக்கூறுகளை நான் செயல்படுத்தியிருப்பது எனக்கே ஆச்சர்யமான ஒன்று.

உன் காதல் புறக்கணிக்க முடியாத வலிமையான ஒன்றாய் என் முன் அமர்ந்து புன்னகைக்கிறது.என் அத்தனை விறீடல்களையும் ஒரு பொருட்டாய் மதிக்காமல் பசி கொண்ட பாம்பு இரையினை மெல்ல விழுங்க ஆரம்பிப்பதைபோல உன் நேசங்களும் பிரியமும் என்னை விழுங்க ஆரம்பிக்கிறது.உன் காதலை மொத்தமாய் எடுத்துக்கொள்ளமுடியாத என் தவிப்பினை எப்படி சொல்வது?.யாரையுமே காதலிக்க முடியாமல் போகச் செய்துவிட்ட காலத்தின் இரக்கமற்ற சாபத்தினை இடையறாது நினைத்துக் கொள்கிறேன்.இந்த கணத்தில் செய்ய இயலுவதை மட்டும், இந்த கணத்தில் என்னால் தர முடிந்ததை மட்டும் பிரியத்தின் மிகுதிகளோடு நான் தருகிறேன் என்பதைத்தவிர சொல்ல வேரெதுவும் இல்லை.

முன்பொரு காலத்தில் நான் இரவு முழுக்க விழித்திருந்து கடிதங்கள் எழுதி குவித்ததைப்போல இன்று எனக்காய் நீ விழித்திருந்து கடிதங்களை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறாய். “எதை விதைக்கிறீர்களோ அதை அறுவடை செய்கிறீர்கள்” என்பது இந்த மட்டில் உண்மையாயிற்று.என் கடிதப்பெட்டியினுள் உன் கடிதங்களையும் சேர்த்துவிட அஞ்சுகிறேன்.இந்த பெட்டி தோல்விகளின் உள்வாங்கலாக மட்டும்தான் இருக்கிறது.நீயும் மற்றுமொரு துயரத்திற்கான ஆரம்பம்தான் என்பது தெளிவாய் தெரிந்திருந்தும் இந்த விளையாட்டினை ஆரம்பிக்கிறேன்.தோற்றுவிடுவோம் எனத் தெரிந்தே விளையாடுவதில் பெரிதாய் இழப்புகள் ஏற்படாது என்பது போல காட்டிக்கொண்டாலும் இழப்புகள் எப்போதும் இழப்புகளாக மட்டுமே இருக்கின்றன.

இரண்டு பக்கங்களுக்கு மேல் எழுத முடியவில்லை தேவி!.. ஏதோ ஒரு சங்கடம் அடி மனதில் பரவுகிறது...நீளம் குறைவான இந்த கடிதத்தை நீ மிகுந்த ஆவலுடன் வேகவேகமாய் படித்துமுடிப்பதை நினைத்துக்கொள்கிறேன். அது ஐஸ்கிரீமை வேகமாய் தின்றுவிட்டு மேலும் எதிர்பார்க்கும் சிறுமியின் மனோநிலையோடு ஒத்துப்போவதாய் இருக்கலாம்.

நாட் எக்ஸிஸ்ட்,புல்ஷிட்,சுயநலம், ஃபார் த சேக் ஆஃப் செக்ஸ்,என்றெல்லாம் ஒரு பாறையின் மீதேறி சத்தமாய் பிரசிங்கித்துக்கொண்டிருந்த என் தோள் தொட்டு திருப்பினாய் இடைவிடாது சொற்களைக் கொட்டியபடியிருந்த என் உதடுகளில் மிகுந்த தவிப்புகளோடு நீ முத்தமிட்ட கணத்தில் சகலமும் உறைந்து போனது.என் விரல்களை பிடித்துக்கொண்டபடி நீ முன்னால நடந்துபோகிறாய் இதோ உன் தடம் பற்றி பின்னால் நடந்துவருகிறேன்.நீ கூட்டி செல்லும் இந்தப்பாதை நானறியாதது வியப்பும் பிரம்மிப்புமாய் வேடிக்கை பார்த்தபடி உன் பின்னால் வருகிறேன்.அடர்வான மர இடைவெளிகளில் வெகு இயல்பாய் நீ நடந்து செல்கிறாய்.வளைந்தும் நெளிந்தும் குறுகியுமான இப்பாதைகளில் உன் வெகு பழகிய லாவகமான நடை இப்பாதைகளின் ஏகபோக உரிமைக்காரி என்பதுபோல இருந்தது...நீ! அற்புதங்களால் நிறைந்தவள்.

நேசங்களை மட்டுமே கொண்டிருக்கும் உன் உலகத்தில் என்னை அனுமதித்ததிற்கு நன்றி.’இது நானறியாதது’,’நான் இதுபோன்று இருந்ததில்லை’ என இடைவிடாது புலம்புகிறேன்.’நான் உனக்கு மட்டும்தான்’ என்றபடி இறுக்கி முத்தமிடுகிறாய்.நான் கொஞ்சம் கொஞ்சமாய் இறந்துகொண்டிருக்கிறேன்.

இழப்புகள் இழப்புகளாகவும்
நேசங்கள் நேசங்களாகவும்
பிரியங்கள் பிரியங்களாகவும்
முத்தங்கள் முத்தங்களாகவும் தான்
எப்போதுமிருக்கின்றன

- நான் -
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...