Sunday, July 21, 2019

கிரீஷ் கர்னாட் - குலப்பெருமையை அசைத்தல்


கிரீஷ் கர்னாட் நடித்து, திரைக்கதை வசனம் எழுதிய சம்ஸ்காரா திரைப்படம் இந்திய சமூகம் என்றும் நினைவில் வைத்திருக்க  வேண்டிய படம். பார்ப்பனியம் கோலோச்சியிருந்த, சாதி வெறியும் தீண்டாமையும் உக்கிரமாய் இருந்த காலகட்டங்களில் மாத்வ பிராமணர்கள் வசிக்கும் ஓர் அக்கிரஹாரத்தில் நடைபெறும் கதையாக சம்ஸ்காராவை யு,ஆர் அனந்தமூர்த்தி எழுதியிருப்பார்.

கிரீஷ் கர்னாட் ஒழுக்கமும், பக்தியும், நிறைந்த கல்வி ஞானமும் கொண்ட ஆச்சாரியார் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  சில பிராமணக் குடும்பங்கள் வசிக்கும்  அந்த அக்கிரஹாரத்தின் முதன்மைப் பண்டிதராகவும்  ஆச்சாரியார் இருப்பார். இன்னொரு கதாபாத்திரமான நாராயணப்பாவாக புகழ் பெற்ற எழுத்தாளரும் கெளரி லங்கேஷின் தந்தையுமான பி. லங்கேஷ் நடித்திருப்பார். நாராயணப்பா அந்த பிராமணக் குடியிருப்பின் எல்லா மரபுகளுக்கும் எதிரானவர். குடியும் கொண்டாட்டமும் பாட்டும் கூத்தும் நட்பும் காதலுமாய் வாழ்பவர்.

 ஒரு நாள் நாராயணப்பா இறந்து போகிறார்.  அவர் பிறப்பால் பிராமணன் என்பதாலும் அவரை அக்கிரஹாரத்தை விட்டு விலக்கி வைக்காததினாலும் இன்னொரு பிரமணனே இறுதி காரியங்களைச் செய்ய வேண்டும். ஆனால் அதை யார் செய்வது என்பதில் குழப்பம் வரும். சண்டியராகத் திரிந்ததால் பிற பிராமணர்கள் யாரும் இறுதி காரியத்தைச் செய்ய முன் வர மாட்டார்கள். அப்போது அவரின் மனைவியான சந்திரி தான் அணிந்திருக்கும் நகைகளைக் கழற்றி ஆச்சாரியாரிடம் கொடுப்பாள். இறுதி காரியங்களைச் செய்பவர்களுக்கு இந்நகைகள் போகட்டும் எனச் சொல்லிவிடுவாள். இதைக் கேள்விப்பட்டதும் ஊரில் இருக்கும் அத்தனை பிராமணர்களும் நாராயணப்பாவிற்கு இறுதி காரியத்தைச் செய்ய முன்வருவார்கள். ஆனால் ஆச்சாரியார் கடவுளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்.

 இறுதிக் காரியம் யார் செய்ய வேண்டும் என்பதற்கான பதில் வேண்டி ஆஞ்சநேயருக்கு இரவு பகலாக பூஜை செய்து கொண்டிருப்பார். அவரின் மனைவி பல வருடங்களாக படுத்தப் படுக்கையாகக் கிடப்பவள். மனைவிக்கான பணிவிடைகளையும் ஆச்சாரியாரே செய்து வருவார். பதில் எதுவும் கிடைக்காததால் ஆச்சாரியார் மிகுந்த ஏமாற்றத்துடன் கோவிலை விட்டு வெளியே வரும்போது  எதிரே நாராயணப்பாவின் மனைவி சந்திரி அமர்ந்திருப்பாள். உடலும் பொழுதும் உந்தவே அவளுடன் ஆச்சாரியார் உறவு கொண்டுவிடுவார்.

அதனால் குற்ற உணர்வு அடையும் ஆச்சாரியார் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது மனைவி இறந்திருப்பாள். அவள் உடலைத் தனி ஒருவராகத்  தகனம் செய்துவிட்டு அந்த ஊரை விட்டு ஓடிப்போவார். வெளியூரில் தன்  அடையாளத்தை மறைந்துக் கொண்டு அலையும்போது உடன் வருபவனின் நிர்பந்தத்தின் பேரில் திருவிழா நடைபெறும் கோவில் ஒன்றில் அமர்ந்து உணவருந்துவார். அங்கு ஒருவரால் இன்னார் என அடையாளம் காணப்படவே அங்கிருந்து தலை தெறிக்க ஓடுவார். பின்னாலேயே வரும் வெள்ளந்தியான சக பயணியிடம் தான் யார் என்பதையும் எதனால் இங்கு அலைகிறேன் என்பதையும் சொல்வார். அதைக் கேட்டுத் திகைப்படையும் பயணி அவரை விட்டு விலகிப் போவான். மீண்டும் தன் சொந்த கிராமத்திற்கு வரும் ஆச்சாரியார், இறந்து போன நாராயணப்பா தன்னை விட மேலானவர் என சுயத் தெளிவு அடைவதோடு படம் நிறைவடையும்.

இன்று வரைக்குமே இந்த நாவலும், திரைப்படமும் அடிப்படைவாதத்தில் ஊறிப்போன மனங்களை அடித்து நொறுக்குவதாகத்தான் இருக்கிறது. சம்ஸ்காரா நாவலுக்குத் திரையிலும் நியாயத்தைச் செய்த வகையில் கிரீஷ் கர்னாட் ஒரு முக்கியமான கலைஞனாகிறார்.

இதைத் தொடர்ந்து எஸ்.எல் பைரப்பாவின் வம்ச விருக்‌ஷா நாவலை பி.வி. காரந்தோடு சேர்ந்து இயக்கி திரைப்படத்தில் ராஜா ராவ் என்கிற முக்கியக் கதாபாத்திரம் ஏற்றும் நடிக்கிறார். வம்ச விருக்‌ஷா நாவல் பரம்பரை கண்ணியத்தை உடைத்து நொறுக்கும் வண்ணம் எழுதப்பட்டிருக்கும். பிராமணர்களின் குலப்பெருமையை அசைத்துப் பார்க்கும் புத்துலக நாவல். திரையிலும் இந்த உணர்ச்சி சரியாகவே வெளிப்பட்டது. யு. ஆர்.அனந்த மூர்த்தி, பைரப்பா, குவெம்பு, சிவராம காரந்த், மாஸ்தி, பி.லங்கேஷ், கிரீஷ் கர்னாட் என கன்னடத்தின் அத்தனை எழுத்தாளர்களும் சுய சாதி மற்றும் சுய மதத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும், அதிகாரத்தை தங்களின் எழுத்துக்களின் வழியாய் எதிர்த்தும் வந்தனர். எனவேதான் கன்னட இலக்கியத்தை இந்தியாவின் மிக முன்னோடி இலக்கியம் என நான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்.

கன்னூரு ஹெக்கடத்தி, காடு ஆகிய இரண்டு படங்களும் கிரீஷ் கர்னாட் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்கள். சம்ஸ்காரா, வம்ச விருக்‌ஷா, கன்னூரு ஹெக்கடத்தி, காடு இந்நான்கு படங்களையும் கிரிஷ் கர்னாட் மறைவிற்குப் பிறகு தொடர்ந்து பார்த்தேன். எழுத்து, நாடகம், நடிப்பு, இயக்கம் இப்படி கலையின் எல்லா வடிவங்களிலும் தன் தனி முத்திரையைப் பதித்தவர். சாகும் வரையிலும் மூக்கில் ஒரு குழாயை சொருகிக் கொண்டாவது அதிகாரத்திற்கு எதிராகப் போராடியவர். சம காலத்தின் மிக முக்கியமான அர்பன் நக்சலான கிரீஷ் கர்னாடிற்கு அஞ்சலி


No comments:

Featured Post

test

 test