Sunday, August 18, 2019

அம்பிலி - கடவுளின் கண்



இதயத்திலிருந்து வாழும் ஒரு மனிதனைக் குறித்த முழுமையானச் சித்திரம்தான் அம்பிலி. கள்ளங் கபடமில்லாத தூய அன்பு, உயிரைப் பிழியும் இசை, இயற்கையின் பேரெழில் மிளிரும் மகத்தான நிலக் காட்சிகள் ஆகிய இவை மூன்றையும் சரிவிகிதத்தில் கலந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கினால் எப்படிக் கரையாமல் இருக்க முடியும். பல காட்சிகளில்  உருகிப் போனேன். படத்தின் முதல் பாதியில் மூன்றாம் பிறை ’டைப்’ காதல் கதையாகி விடுமோ என்ற என் யூகம் இரண்டாம் பாதியில் தவிடு பொடியானது. கேரளத்தின் கட்டப்பனையிலிருந்து காஷ்மீர் வரைக்குமான ஒரு சைக்கிள் பயணமாக, ஓர் அற்புதமான பயணத் திரைப்படமாக அம்பிலி உருக்கொள்கிறது. இறுதியில் காஷ்மீரின் கம்பீர மலைகளுக்கு முன்பு அம்பிலியின் சின்னஞ் சிறு இதயம் நெகிழ்ந்தும் கரைந்தும் வெடித்துமாய் தன்னை அறிகிறது. கவித்துவமும் தத்துவமும் அம்பிலி - ஷெளபினின் நிகரில்லா நடிப்புமாய் பின்னிப் பிணைந்து நமக்கு ஓர் அபாரமான காட்சி அனுபவத்தை இந்தத் திரைப்படம் வழங்குகிறது.

அம்பிலியின் திரைக்கதை எழுதப்பட்ட விதம் சவாலானதுதான். முதல் ஒரு மணிநேரத்திற்கு கேரளத்தின் எழில், அம்பிலியின் சின்னஞ்சிறு நண்பர்கள், கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள், நகைச்சுவை, நாயகி தான்வியினுடனான காதல், ஒரு முன் கதை என ஏராளமான விஷயங்கள் சொல்ல இருக்கின்றன. ஆனால் இரண்டாம் பாதியில் சாலைப் பயணம் மட்டும்தான், பெரும்பாலும் இரண்டே கதாபாத்திரங்கள் மற்றும் நிலங்கள் அவ்வளவுதான். இரண்டாம் பாதியை நிறைக்க இயக்குனர் எந்த விதத் தனி - ஸோ கால்டு சுவாரசிய விஷயங்களையும் திணிக்கவில்லை. இந்திய நிலம் பார்வையாளர்களை ஒன்றச் செய்துவிடும் என நம்பியிருக்கிறார்கள். அது நடந்திருக்கிறது. எந்தத் திருப்பங்களுமில்லாமல் நேர்கோட்டில் மிக நிதானமாக நம்மையும் இணைத்துக் கொண்டு படம் நகர்கிறது.

அம்பிலி ஒரு காட்சி அனுபவம். படம் முழுக்க ஏரியல் ஷாட் களைப் பயன்படுத்தி மொத்த நிலத்தின் அழகையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். கிட்டத் தட்டக் கடவுளின் கண் கொண்டு இந்தப் பூமியைப் பார்ப்பது போன்ற உணர்வை அடைந்தேன். படத்தின் ஒளிப்பதிவாளரான Sharan Velayudhan புதியவர். அவரின் மிகச்சிறந்த படமாக இது இருக்கும். இசையமைப்பாளரான Vishnu Vijay இயக்குனார் ஜான் பால் ஜார்ஜின் முந்தைய படமான Guppy யில் இணைந்து பணியாற்றியவர். இசையால் படத்தை நிறைத்திருக்கிறார். ஆராதிகே பாடலை நேற்றிலிருந்து திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒளிப்பதிவும் இசையும் அம்பிலியின் முழுமைக்கு முக்கியக் காரணங்களாகின்றன.



கேரளத்தின் In to the Wild என்றும் கூட அம்பிலியைச் சொல்லிவிட முடியும். இன் டு த வைல்ட் தனிமைப்படுதலைக் கொண்டாடி, வழமையின் நமுத்தத் தன்மையை பயணத்தின் வழியே களையும் திரைப்படம். ஆனால் அம்பிலி அன்பை, முழுமையை பயணத்தின் வழியே உணர்த்தும் படம். இந்தக் கள்ளங்கபடமற்றச் சிறுவன் செல்லுமிடமெல்லாம் அன்பை விதைக்கிறான்.
அவசியம் திரையரங்கில் காண வேண்டிய படம்.

No comments:

Featured Post

test

 test