Thursday, July 4, 2019

பெண்களின் மன நல விடுதி கொண்டாட்டங்களால் நிரம்பியிருக்கிறது





Girl, Interrupted படம் மன நல விடுதியில் தங்க நேரிலும் பெண்களின் வாழ்வை மிகத் துல்லியமாகப் பேசுகிறது. 1999 இல் வெளிவந்த திரைப்படம். நான் நேற்றுதான் பார்த்தேன். தொடர்களைப் பார்க்கும் மனநிலையிலிருந்து தற்காலிகமாக வெளியேறியிருப்பதால் நெட்ஃபிலிக்ஸைத் துழாவி இந்தப் படத்தைக் கண்டுபிடித்தேன். One Flew Over the Cuckoo's Nest – ஐ கொண்டாடிய உலகம் Girl, Interrupted ஐ ஏன் கைவிட்டது எனத் தெரியவில்லை. அதிகம் கவனம் பெறாத மிக ஆழமான படம். பெண்களின் மன உணர்வுகளையும் சிக்கல்களையும் இவ்வளவு ஆழமாகப் பேசிய படம் எதுவும் சமீபமாய் பார்த்த நினைவில்லை.

Susanna Kaysen என்கிற அமெரிக்க எழுத்தாளர் தன்னுடைய மனநல விடுதி நாட்களை Girl, Interrupted எனும் பெயரில் நினைவுக் குறிப்புகளாக எழுதினார். அதுவே திரைப்படமானது. சுசன்னா பாத்திரமேற்று நடித்த Winona Ryder இந்தத் திரைப்படத்தை தயாரித்துமிருந்தார். அற்புதமாக நடித்திருந்தார் என்றாலும் லிசா என்கிற துணைக் கதாபாத்திரமேற்று நடித்த ஏஞ்சலினா ஜூலி நடிப்பில் இவரைப் பின்னுக்குத் தள்ளி மொத்த விருதுகளையும் வாங்கி விட்டிருக்கிறார்.

படத்தின் உரையாடல்கள் அபாரமானவை. மீண்டும் மீண்டும் வாசிக்கப் பட வேண்டியவை. மன நலம் சார்ந்த பேச்சை மிகச் சரியாக கையாண்டிருக்கிறார்கள். சில காட்சிகளை யூகிக்க முடிந்தது. டெய்சிக்கு என்ன நேரும் என்பது முன்னரே அறிந்ததுதான். கனமான திரைப்படத்திற்கு வலு சேர்க்கும் நாடகீயத் தருணங்கள் படத்தில் கிடையாது என்பதுதான் One Flew Over the Cuckoo's Nest படத்திற்கும் Girl, Interrupted படத்திற்கும் உள்ள வேறுபாடு. மேலும் ஜாக் நிக்கல்சன் என்கிற அரக்கனால் முன்னது பிரபலமானது. பின்னதில் எழுத்து வலுவானது. எழுதுபவனாய் இதுவே முதன்மையானதாய் தோன்றுகிறது.

Girl, Interrupted  படம் பார்த்து முடித்ததும் உடனடியாக ’பிக் பாஸ்’ வீட்டின் பெண்கள்தாம் நினைவிற்கு வந்தனர். 

மனம் பிறழ்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் பெண்கள் சேர்ந்து இருக்க நேரிடும் உலகம் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சிகளில் களேபரம் செய்யும் பெண்களின் உலகை விடத் தரமானதாக இருக்கிறது. 

’பிக் பாஸ்’ பெண்கள் சரியான மன நலம் கொண்டவர்கள் என சமூகத்தால் நம்பப்படுகிறவர்கள். இந்தச் சரியானப் பெண்களின் மன விகாரங்களைச் சகித்துக் கொள்ள முடிகிறதா என்ன?ஆனால் சிகிச்சைக்காக ஒரே கூரையின் கீழ் தங்க நேரிடும் பெண்களின் உலகில் இவ்வளவு வன்மங்கள் கிடையாது.  மன நல விடுதியில் பெண்களின் சக இருப்பு கொண்டாட்டங்களால் நிரம்பியிருக்கிறது. 

காழ்ப்புகளாலும் பொறாமைகளாலும் பிரபல வெறியாலும் நிரம்பி வழியும் இந்த ’சோ கால்ட்’ மன நிலை சரியான பெண்களின் உலகைப் போல, மன நல விடுதியில் இருக்க நேரிடும் பெண்களின் உலகு இல்லை. இவர்கள் தங்கள் இதயங்களை இறக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். 

லிசா வின் குரூரமானப் பேச்சைத் தாங்க முடியாமல் சுசன்னா சொல்வாள். ”உன் இதயத்தில் அன்பில்லை, உண்மை என்கிற சாக்கை வைத்துக் கொண்டு இதயத்தைச் சாகடித்துவிட்டாய். நீ ஏற்கனவே இறந்து போனவள்” என்பாள். 

இதயம் மரத்துப் போன அத்தனைப் பேரும் நடைப் பிணங்கள்தாம். நடைப் பிணங்களின் நட்சத்திர வாழ்வில்தாம் எத்தனைப் பூச்சுகள்? 

No comments:

Featured Post

test

 test