Saturday, July 8, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து எட்டு


காலையில் எழுந்து வேளானந்தல் போய் கொண்டிருந்தேன். நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து வந்த அம்மா,

" அமுதா ஊட்டுக்கார் செத்துட்டார்டா. போய்ட்டு வந்துரு. பக்கந்தான் வேளானந்தலாம். நம்ம ஆவூர் மாமா வூட்டதாண்டி. என்னால முடில நீ போய்ட்டு வந்துரு" எனப் படுத்துவிட்டாள்.

நானும் நிறைப் போதையில் இருந்தேன். சாமி அப்போதுதான் கிளம்பிப் போயிருந்தார். வீட்டு ஹாலிலேயே குடித்து விட்டு போட்டிருந்த நான்கு குவாட்டர் பாட்டில்கள் சிதறிக்கிடந்தன. நான் ரகசியமாய் வீட்டில் குடிப்பேனே தவிர இப்படி வெளிப்படையாய் குடித்தது இதுவே முதன் முறை. இனிமேல் ரகசியமாய் இருந்து என்னாகப் போகிறது என்கிற வெறுப்பு. சாமி ஏதோதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் பழைய வாழ்க்கை. சிறு பிராயம். மூங்கில் துறைப்பட்டுக் கதை. துர்க்காவை மணமுடித்த கதை. பாண்டல வாழ்க்கை. அவர் கொடிகட்டிப் பறந்தது. பின் வீழ்ந்தது. என எல்லாமும் சொல்லிக் கொண்டிருந்தார். இடையில் பெரியசாமி செத்தாரா பொழச்சாரா என்கிற கேள்வியை மட்டும்தான் கேட்டேன். அவன் பொழச்சதனாலதான் எங்கள யாரும் தேடி வரல என்றார் சாமி.

துர்க்காவிற்கு அங்கை பரவாயில்லை எனத் தோன்றியது. அங்கை ஒரு பூச்சி. ஏதேதோ பகற்கனவுகளில் மூழ்கியிருந்த பேதைப் பெண். நான் மட்டும் சரியாக இருந்திருந்தால் அவள் எனக்காக உயிரையே கொடுத்திருப்பாள். எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டேன். சில நாட்கள் போகட்டும். மெதுவாய் போய் அவள் காலில் விழுந்து கெஞ்சியாவது திரும்ப இந்த வீட்டிற்கு கூட்டி வந்துவிட வேண்டும். இந்தக் குடி எழவு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுத்தமாய், மிகத் தூய்மையாய் ஒரு வாழ்வை வாழ்ந்துவிட வேண்டும். என் நேற்றை திரும்பிப் பார்க்க எனக்கே கூசியது.

 அதிகாலையிலே போதை சுத்தமாகத் தெளிந்தது. கைவலி இல்லை. கழுத்தில் மாட்டியிருந்த கயிறை அறுத்துவிட்டேன். உடை மாற்றிக் கொண்டு வேளானந்தல் கிளம்பினேன். இந்தக் கையை வைத்துக் கொண்டு பஸ் ஏறிப் போவது சிரமம். அரச மரத்தடி ஆட்டோ ஸ்டேண்டிற்குப் போனேன். என்னோடு ஐந்தாவது வரை படித்த சங்கர் அங்கிருந்தான். என்னைப் பார்த்து

"இன்னா வாத்தி" என சிரித்தான்.

"வேளானந்தல் போய்ட்டு வரலாமா அமுதாக்கா வூட்டுக்காரர் செத்துட்டார் டா"

அவன் பரபரப்பானான்.

"அய்யோ எப்ப?"

நேத்து எனச் சொல்லி முடிப்பதற்குள் ஆட்டோவைக் கிளப்பி இருந்தான். ஏறி அமர்ந்து கொண்டேன். வேட்டவலம் சாலையில் ஆட்டோ விரைந்தது. சங்கர் மெதுவாகக் கேட்டான்.

" கைல ன்னா கட்டு? "

"கீழ வூண்டண்டா"

" குட்ச்சிட்டு வண்டில இருந்து வூண்டியா? இன்னாபா ரொம்ப குடிக்கறன்னு கேள்விபட்டேன்."

  ம்ம். ஆமாடா."

"  உனுக்கு இன்னா கொற? கவுர்மெண்ட் வேல. கண்ணுக்கு லெட்சணமா பொண்டாட்டி. சொந்த வூடு. அப்புறம் இன்னாடா?

"ஒண்ணும் இல்லடா. ஏதோ கிறுக்கு. வுடு. "

"ம்ம். எல்லாம் அப்படித்தான் பேசிக்கிறாங்க. நீ சின்ன வயசுல இருந்தே பட்ச்சுகினே இருப்ப. அதான் இப்படி. "

"எப்படி?"

" ஹாங் லூசாயிட்ட இல்ல அத சொன்னேன்."

 எனக்கு சிரிப்பு வந்தது. ஃப்ரியா வுட்றா டேய் என்றேன் 

"சரி சரி கைல ஏதாவது வச்சிருக்கியா?"

"   என்னது?"

" இல்லடா நீ எப்பவும் சரக்கும் கையுமாதான் இருப்பன்னு சொல்லிகிட்டாங்க. சாவுக்கு வேற போறம் அதான்" என இளித்தான்.

 ரெயில்வே கேட்டை வண்டி தாண்டி இருந்தது.

" கைல இல்லடா போற வழில வாங்கிக்கலாம்."

நல்லவேளையாக கடை எதுவும் திறந்திருக்கவில்லை. அப்புறம் பாத்துக்கலாம்டா நீ ஓட்டு என்றேன். வேளானந்தலுக்குள் வண்டி நுழைந்தது. மிகச் சிறிய கிராமம். சாவு வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் எதுவுமில்லை. சாவு மேளம் உக்கிரமாய் இருந்தது. பாட்டுக்கார லட்சுமி உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தாள். பத்துப் பதினைந்து பெண்கள் முதுகை சேர்த்தணைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். அமுதாக்கா பிணத்தின் தலை மாட்டில் உட்கார்ந்திருந்தாள். பெயருக்கு கூட அவள் அழுததாய் தோன்றவில்லை. எங்களை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. வாங்கி வந்திருந்த மாலையை பிணத்தின் கழுத்தில் போட்டேன்.

அமுதாக்கா எழுந்து வந்து வா என்றாள். அம்மாவுக்கு முடில என்றேன். நீ வந்ததே பெரிசு என புன்னகைக்க முயன்றாள். மேளம் அடிப்பவர்களிடம் போய் பத்து ரூபாய் கொடுத்தேன். பறை உக்கிரமாய் ஒலிக்க ஆரம்பித்தது. பாடை கட்டும் ஏற்பாடுகளை யார் பார்க்கிறார்கள் என விசாரித்தேன். ஒருவர் அதற்கான முயற்சியில் இருந்தார். அவரிடம் இருபது ரூபாய் தாளொன்றை நீட்டினேன்.

அவர் பூ வோணும் சார் கொஞ்சம் தென்னங்கீத்து வேணும் என்றார்.

சங்கரை அழைத்து இருநூறு ரூபாய் கொடுத்தேன். அவனுக்கு கோட்டர் வாங்கிக் கொண்டு பூ வாங்கி வரச் சொன்னேன். இளிப்பாய் நகன்றான்.

அந்த ஓட்டு வீட்டிற்குள் போய் கத்தியைத் தேடி எடுத்துக் கொண்டு தோப்பிற்குப் போனேன். மரம் ஏறத் தெறிஞ்சவங்க யாராவது இருக்கீங்களா என்றதற்கு இரண்டு இளைஞர்கள் முன் வந்தனர். போய் தென்னங் கீற்றுகளை வெட்டி வந்தோம். பாடை தயாரானது. சங்கர் பூக்கூடையை கொண்டு வந்து கொடுத்து விட்டு ஆட்டோவில் போய் படுத்துக் கொண்டான்.

பிணம் கிளம்பியது. கழியின் முன் பாகத்தைத் தாங்கிக் கொண்டு சுடுகாடு போனோம். குழி தயாராக இருந்தது இறக்கி வைத்துவிட்டு சடங்குகளை கவனித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். அமுதாக்கா வீட்டை நீரால் கழுவி இருந்தாள். அங்கிருந்த சிறு திண்ணையில் அமர்ந்து கொண்டேன். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. உடன் யாருமே இல்லை. எல்லோருமே கிளம்பிப் போயிருந்தார்கள். சங்கரிடம் மேலும் ஒரு நூறு ரூபாய் தாளைத் தந்து போய்விடச் சொன்னேன். அம்மாவிடம் நாளை வருவதாய் சொல்லச் சொன்னேன். அதற்குள் அமுதாக்கா குளித்திருந்தாள். என்னையும் குளிக்கச் சொன்னாள். அணிந்திருந்த உடையோடு போய் தலைக்கு நீரூற்றிக் கொண்டேன். ஒரு புது வேட்டியை எடுத்து வைத்திருந்தாள். கட்டிக் கொண்டு வெறும் உடம்போடு வாசலில் அமர்ந்தேன். அமுதாக்கா யாரையோ அழைத்து பால் வாங்கி வரச் சொன்னாள். ஏழு மணி வாக்கில் எவர் சில்வர் டம்பளரில் டீ வந்தது . களைத்திருந்தேன். டீயை அமிர்தமாய் குடித்தேன்.

அமுதாக்காவும் ஒரு புதுப்புடைவையை அணிந்து கொண்டு உலை வைத்திருந்தாள். இருள் அடர்ந்து வந்தது. எந்தப் பிடிமானமும் இல்லாமல் இவள் எப்படி இத்தனை வருடம் வாழ்ந்தாள் என்கிற எண்ணம் வந்து போனது. எட்டு மணி வாக்கில் சுடச்சுட சாதத்தையும் குழம்பையும் எடுத்து வந்து வாசலில் வைத்தாள். அவளையும் சாப்பிடச் சொன்னேன். சேர்ந்து சாப்பிட்டோம். சாவு வீட்டின் காமம் துலக்கமாய் என்னுடலில் ஏறியது. குண்டு பல்பு வெளிச்சத்தில் அமுதா ஒளிர்ந்தாள். வெளியே பாய் கொண்டு வந்து போடச் சொன்னேன். அவள் மறுத்து உள்ளே வந்து படுக்கச் சொன்னாள். ஒரு புதுப் பாயை அந்தச் சிறுவீட்டின் நடுவில் விரித்து தலையணைகளைப் போட்டாள். சாவு வீட்டுப் பூ வாசம் இன்னும் மீதமிருந்தது. உடலளவிலும் மனதளவிலும் நான் நசுங்கி இருந்தேன்.

வாசல் கதவைத் தாழிட்டுவிட்டு,  தன் புடவையைக் களைந்து விட்டு என்னருகில் வந்து படுத்துக் கொண்டாள். நான் மிக மெதுவாய் மிக ஆழமாய் அவள் உதடுகளில் முத்தினேன். அவ்வளவு தவிப்போடும் அவ்வளவு ஆசையோடும் என்னை ஏந்திக் கொண்டாள். அதுவரை எனக்குப் பழகிய உடல்கள் யாவும் உடலின் பழக்கங்களைப் போலவே இல்லை. அத்தனை புத்தம் புதிதாய் ஒரு கதவு திறந்தது. உடலின் மாய வெளி எங்கள் இருவருக்குமாய் திறந்து கொண்டது. அத்தனை துக்கங்களையும் அதுவரைக்குமான இழப்புகளையும் நாங்கள் பறிமாறிக் கொண்டோம். ஒரு தேவ ரகசியம் உடைந்து எங்களை எங்களுக்கே புதிதாய் அறிமுகப் படுத்தியிருந்தது. என் எல்லா பாவங்களும் அவள் உதட்டு நீரில் கரைந்தன. நான் மேலும் மேலும் எழுந்தேன். கரைந்தேன். அவளுடலில் தஞ்சமடைந்தேன். வறண்டு போன அவளின் உணர்வுகளனைத்தும் துளிர்த்தன. ஆழ்ந்த கலவிக்குப் பிறகு எங்களின் வெற்றுடல்கள் ஓய்ந்தன.

அதிகாலையில் கூரையின் மீது மழைத்துளி விழுந்த சப்தம்தான் என்னை எழுப்பியது. அப்படி ஒரு உறக்கம். என் வாழ்நாள் முழுக்கத் தூங்கியிராத உறக்கம். பால்யத்திற்குப் பிறகு அவ்வளவு ஆழமாய் போதையில்லாது உறங்கியிருக்கிறேன்.  மின்னல் வெட்டியது. படுத்த வாக்கிலேயே அவ் வெளிச்சத்தில் அமுதாவின் முகம் பார்த்தேன். அவள் அசையாமல் தூங்கிக் கொண்டிருந்தாள். யுகங்களாய் தீர்ந்திரா அலைவுறல்களின் முடிவு அவள் முகத்தில் துலக்கமாய் தெரிந்தது. இனி எழவே போவதில்லை என்பது போல் உறங்கிக் கொண்டிருந்தாள். நான் அதைக் கலைக்காது அந்த வீட்டின் மிகப் பழைய பின்  கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தேன். மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. இருள் விலகியிருக்கவில்லை. இடுப்பில் இருந்த வேட்டியையும் அவிழ்த்தெறிந்து விட்டு மழையில் போய் நின்றேன். உடல் சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது. நானொரு புதுப் பிறப்பெடுத்தேன்.

- மேலும்

No comments:

Featured Post

test

 test