Thursday, July 6, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தாறு

’எழுந்து வூட்டுக்கு போம்மா’

அசையாமல் அமர்ந்திருந்த அங்கையற்கன்னியை காவலுக்கு இருக்கும் முதியவர் வேண்டிக் கொண்டிருந்தார்.

மான் தன்னைச் சுற்றிக்கொண்டிருக்கும் கொசுக்களை காதால் விரட்டியபடி படுத்திருந்தது. எங்கும் இருள். திக்பிரம்மைப் பிடித்தவளாய் மானிற்கு சமீபமாய் அங்கை மண்ணில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்.

ஆசிரமத்தின் வாயிலைப் பூட்டியிருந்தார்கள். அங்கையை வெளியே அனுப்பிவிட்டால் காவலுக்கு இருப்பவரும் போய் படுத்துக் கொள்வார். அவளை அவருக்குப் பல வருடங்களாய் தெரியுமென்பதால் மிக சமாதானமாகவும் அன்பாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். அவள் அசையவில்லை. இருந்துவிட்டுப் போகட்டும் எனப் போய் படுத்துக் கொள்ளவும் முடியாது. அதிகாலையிலேயே தியான அறையைச் சுத்தம் செய்து பூஜை செய்ய ஆட்கள் வந்துவிடுவார்கள். இவளைப் பார்த்தால் தன்னுடைய வேலை போய்விடும். முதியவர் இதையெல்லாம் சொல்லி மன்றாடிப் பார்த்தார். ஆனால் அங்கை எங்கேயோ காணாமல் போயிருந்தாள். அவளுக்குத் தன்னைச் சுற்றி நிகழ்வதெதுவும் பிரக்ஞையில் இல்லை.

அங்கைக்கு கண்ணில் நீர் வழிந்தபடி இருந்தது. உடலும் மனமும் மொத்தமாய் வெதும்பிப் போய் இருந்தன. ஒரு பூவின் ஆயுளை விடக் குறைவானதாய் இருந்தது அவள் வாழ்க்கை. நினைக்க நினைக்க ஆற்றாமையாய் இருந்தது. இன்று மதியம் பனிரெண்டு மணி வாக்கில்தான், இதே இடத்தில்தான் சங்கமேஸ்வரனைப் பார்த்தாள். முன்னிரவில் எல்லாமும் முடிந்து போயிற்று. காலங்களைக் கடந்து வந்து சேர்ந்தவன் அரை நாளிற்குள் முற்றுப் புள்ளியாகிவிட்டான். அங்கை வெடித்து அழுதாள்.

வளும் ரவியுமாய்த்தான் சங்கமேஸ்வரன் உடலை மடியில் தாங்கிக் கொண்டார்கள். ஆட்டோவில் இன்னும் இரண்டு பேர் உடன் ஏறினார்கள். சங்கமேஸ்வரன் தலை இவள் மடியில் இருந்தது.  அவன் முகத்தில் வலியின் சுவடே தெரியவில்லை. அவ்வளவு நிச்சலனமாய் இருந்தது. மானு மானு எனக் கதறியபடியே அவன் முகத்தைத் தட்டினாள். நெஞ்சில் பலமாய் அறைந்தாள். ஒரு சலனமும் இல்லை. பயத்தின் விஷ நகங்கள் அவள் நெஞ்சில்  ஆழமாய் கீற ஆரம்பித்தன. ரவி ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அரசு மருத்துவமனை அருகாமையில்தான் இருந்தது. விரைந்த ஆட்டோ ஐந்தே நிமிடத்தில் மருத்துவமனையை எட்டியது. உடன் வந்த இருவர் அவசரமாய் கீழே இறங்கி சங்கமேஸ்வரனைத் தூக்கிக் கொண்டு ஓடினர். அங்கை வாயிலிலே நின்றுவிட்டாள். எல்லாமும் முடிந்ததை அவள் உணர்ந்திருந்தாள். அவனின் சலனமே இல்லாத தூங்கும் முகம் அவளுக்கு எல்லாவற்றையும் உணர்த்தியது. ரவி அங்கையை இழுத்துக் கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவிற்குப் போனான். பைக்கில் இருந்து விழுந்துட்டோம் எனச் சொல்லி அவளை இருக்கையில் இருத்தி மருந்து போட வைத்தான். அங்கைக்கு சில சிராய்ப்புகளைத் தவிர ஒன்றுமில்லை. ரவியின் இடது கை வீங்கி யிருந்தது. அசைக்க முடியாத அளவிற்கு வலி. அவனை அட்மிட் செய்து கொண்டார்கள். அங்கை அதையெல்லாம் கவனிக்காது வெளியே வந்தாள்.

சங்கமேஸ்வரனை தூக்கிக் கொண்டு ஓடியவர் வெளியே நின்று கொண்டிருந்தார். இவளைப் பார்த்ததும் நெருங்கி வந்து

“உசிரு நிக்கலமா அப்போவே பட்டுனு பூட்டு கீதுமா” என்றார்.

அங்கை அப்படியே நின்றுவிட்டாள். அவளுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் என்றாலும் உள்ளுக்குள் ஒரு நப்பாசை இருந்தது. அவர் அவளைத் தொட்டு உலுக்கி

”அவரு உங்க வூட்டுக்கார்ரா? யாரண்டயா சொல்லனுமா? ”

என ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார். அங்கை அப்படியே நடக்க ஆரம்பித்தாள்.

”த., இந்தாம்மா.., ம்மா.., ”

என அவர் இவளை விதம் விதமாக கூப்பிட்டுப் பார்த்து ஓய்ந்தார். அங்கைக்கு காதுகள் அடைத்துக் கொண்டன. கண்கள் இருட்டின. கால்கள் மட்டும் நடந்து கொண்டிருந்தன. மனம் எண்ணம் எல்லாமும் உறைந்து போயிருந்தது. மழையால் ஊரே நசநசத்திருந்தது. கிழிந்த உடைகளோடும் தலைவிரி கோலத்தோடுமாய் பஜாரை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். இருள் கவிய ஆரம்பித்திருந்தது. வாகன நெரிசல் காமராஜர் சிலையருகில் அதிகமாக இருந்தது. அங்கை பிரதான சாலையின் நடுவில் அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தாள். இரு சக்கர வாகனங்களின் ஒலிப்பான்கள் அலறின. ஒரு பேருந்து அவளுக்கு வெகு சமீபமாக வந்து நின்று பாங்க் என அலறியது அப்படியே மல்லாக்க விழுந்தவள். சுய நினைவை இழந்தாள். யாரோ அவளைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். சற்று முன்பு மருந்திட்ட அதே செவிலியர் குழாமிடம் அவளைச் சேர்த்தனர். அவளைத் திட்டிக் கொண்டே ரவிக்கு அருகில் இருந்த ஒரு படுக்கையில் அவளைக் கிடத்தினார்கள். முதலுதவிகளை ஆரம்பித்தார்கள்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அங்கை கண் விழித்தாள்.  இடது கையில் குளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. எழுந்து உட்கார்ந்தாள். தனக்கு நேர்ந்த சகலமும் கண் முன் ஓடியது. சாதாரணமாய் திரும்பியவள் பக்கத்துப் படுக்கையில் இருந்தவனை உற்றுப் பார்த்தாள். அது ரவி. அவனும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் கையில் கட்டு போடப்பட்டிருந்தது. மெல்ல நரம்பில் ஏறிக் கொண்டிந்த ஊசியைப் பிடுங்கினாள்.  சகலத்திற்கும் காரணமான ரவியைத் தன் கைகளால் கொன்று தீர்த்துவிடும் வெறி அவள் நரம்புகளில் ஏறியது. படுக்கையிலிருந்து இறங்கியவளின் உடலில் அசாத்திய வலு குடியேறியிருந்தது. மெல்ல நடந்து போய் அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.

அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். யார் இவன்? ஏன் அவளுடைய வாழ்வில் நுழைந்தான்? எதற்கு அவளைப் பார்த்து வெருண்டும் மருண்டும் ஓடினான். அவள் தன்னை அவனுக்குத் தர தயாராகத்தான் இருந்தாள். தன் புள்ளி மான் கனவுகளை அப்படியே விட்டுவிட்டு அவனோடு சேர்ந்து வாழ விரும்பியும் இருந்தாள். பாவி  அவளின் அருகாமைக்கு கூட வரவில்லை. அங்கை வைத்த கண் வாங்காமல் ரவியையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். போதையில் துவளும் அவன் உடல் நினைவில் வந்து எரிச்சலையும் ஆத்திரத்தையும் இரட்டிப்பாக்கியது. அவனை கைகளால் நெறித்துக் கொல்வதே சரியாக இருக்கும். அவளின் இருப்பு அவன் நினைவை அசைத்துப் பார்க்க மெல்லக் கண் விழித்தான்.

எனக்கு ஒண்ணும் இல்ல அங்க என்றான்.  அங்கை பற்களைக் கடித்தபடி சொன்னாள்.

 "நீ என் புள்ளிமான கொன்னுட்டடா"

என்ன, என்ன சொல்ற? என்கிற அவன் பதட்டத்தைப் பொருட்படுத்தாது  உரத்தக் குரலில் கத்தினாள்

"நீ என் புள்ளிமானக் கொன்னுட்டடா கொலகாரப் பாவி"

தடுமாறி எழ முயன்றவனின் மீது பாய்ந்தாள். அவன் கழுத்தை நெருக்கினாள். அவ்வளவு ஆழமாக, அவ்வளவு ஆசையாக அவனது கழுத்தை இறுக்கினாள். அவன் தொண்டைக் குழி நசிக்கும் நொடிக்கு முன்னர்   யாரோ அவளை, அவன் மீதிருந்து இழுத்துக் கீழே போட்டனர். ரவி நெஞ்சே வெடித்துவிடும்படி  இருமி அவன் உயிரைக் காத்துக் கொண்டான். தன்னுடைய எந்த ஆசையுமே நிறைவேறாமல் போன அங்கை வெடித்து அழுதாள்.

யாரோ போலிசைக் கூப்பிடச் சொன்னார்கள். ரவியின் அம்மாவின் முகம் தென்பட்டது. அங்கை நிதானத்திற்கு வந்தாள். மெல்ல வெளியே நடக்க ஆரம்பித்தாள். இரவு அடர்ந்திருந்தது. கடைகளை மூடி விட்டிருந்தார்கள். மருந்தகங்கள் மட்டும் திறந்திருந்தன. அப்படியே நடக்க ஆரம்பித்தாள். மாடுகளும் பன்றிகளும் நாய்களும் சுதந்திரமாக சாலையில் நடமாட ஆரம்பித்திருந்தன. அங்கையின் கால்கள் அவளை சேஷாத்ரி ஆசிரமத்தில் இருக்கும் மானிடமே கூட்டிச் சென்றன. காவலர் கேட்டை அடைத்திருந்தார். இவள் அந்தக் குறுகலான காம்பவுண்டின் மேல் ஏறி உள்ளே குதித்தாள். என்ன ஏது என ஓடிவந்தவர் இவளின் கோலத்தைப் பார்த்துப் பதறினார்.

‘என்னம்மா இப்படி வந்து நிக்குற என்னாச்சி.., என்னாச்சி..,?

 என்கிற கேள்விகளைப் பொருட்படுத்தாது உறங்க ஆரம்பித்திருந்த மானின் அருகாமையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

எப்படி எப்படியெல்லாமோ அவளைச் சமாதானப் படுத்த முயன்று சலித்துப் போன முதியவர் நுழை வாயிலுக்கு சமீபமாய் நடந்து வந்தார். கேட்டில் யாரோ நின்று கொண்டிருப்பதைப் போல் பட்டது.
யாரு என்றபடியே முன்னால் சென்றார். ஒரு பதின்மன் தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்தான்.

”எங்கக்காவ காணம் தாத்தா” என்றான்

அவனை அவருக்கு தெரிந்திருந்தது.

”இங்கதான்யா இருக்கா.  வா.., உள்ள வா.,  வந்து சீக்கிரம் கூட்டிட்டு போ! ” என்றபடியே கதவைத் திறந்து விட்டார்.

அங்கையின் தம்பி ஓட்டமும் நடையுமாக அங்கை அருகில்போய் நின்றான்.

அக்கா எழுந்து வீட்டுக்கு வா!

எனக் கெஞ்சினான். அங்கை அழுது ஓய்ந்திருந்தாள். சற்றுத் திடமானாள். எழுந்து கொண்டாள்.

வா! போலாம் என்றபடியே முன்னால் நடந்தாள்.  பின் சடாரென நின்று மீண்டும் மானிடம் நடந்து வந்து அதைக் கடைசி முறையாய் பார்த்துக் கொண்டாள். உடலைக் குலுக்கிக் கொண்டாள்.

வாயிலை நோக்கி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். பெரியவர் நிம்மதியாய் அவர்கள் இருவரையும் வெளியில் விட்டு கதவைப் பூட்டிக் கொண்டார்.

நள்ளிரவில் இருவரும் வீட்டை அடைந்திருந்தனர். அங்கையின் அப்பாவும் அம்மாவும் செய்வதறியாமல் அமர்ந்திருந்தனர். அரசல் புரசலாய் அவர்களுக்கு விஷயம் தெரிந்து விட்டிருந்தது. உள்ளே நுழைந்த அங்கை எதுவும் பேசாமல் அவர்கள் முன் நின்றாள். இனி மீண்டும் ரவி வீட்டிற்குத் தான் போகப்போவதில்லை என்றாள். ரவியும் இங்கு வரக்கூடாது என்றாள். அவர்கள் ஒன்றும் பேசாமல் திகைத்து நின்றனர். அங்கையற்கன்னி உள்ளறைக்குப் போய் அங்கிருந்த மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பழைய பாய் ஒன்றை எடுத்து உதறி தரையில் போட்டுப் படுத்துக் கொண்டாள்.

- மேலும்



No comments:

Featured Post

test

 test