Tuesday, July 11, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பத்தி ஒன்று

"தீதிலிருந்து நன்மைக்கு 
இருளிலிருந்து ஒளிக்கு 
இறப்பிலிருந்து பெருநிலைக்கு”







வேட்டவலம் பஸ் ஸ்டாண்டிலேயே இறங்கிக் கொண்டேன். லாரி என்னை உதிர்த்துவிட்டு பை பாஸ் ரோட்டிற்காய் திரும்பியது. இறங்கி நடக்க ஆரம்பித்தேன். கை வலிக்க ஆரம்பித்திருந்தது. பள்ளிக்குப் போகும் பிள்ளைகள் சாலையை நிறைத்திருந்தார்கள். புளிய மரத்தடி பேருந்து நிறுத்தத்தில் வழக்கம்போல ரமா தன் மகளோடு நின்று கொண்டிருந்ததை தூரத்திலேயே கவனித்து விட்டேன். அவசரமாய் திரும்பி வந்த வழியே நடக்க ஆரம்பித்தேன். அவள் என்னைப் பார்த்துவிடக் கூடாது. தலையைக் குனிந்து கொண்டே நடந்தேன். பின்னால் வண்டியின் ஹார்ன் சப்தம் கேட்டது. பல்லைக் கடித்தேன். சனியன் அவளாகத்தான் இருக்கும். திரும்பினால், அவளேதான்.

காலை ஊன்றி நின்றிருந்தாள். என்னைப் பார்த்து சிரிக்கவில்லை.

“ வண்டில வந்து உக்காரு ” என்றாள்.

நீ போ என முறைப்பாய் சொன்னேன்.

வந்து உக்கார் என அழுத்தமாய் சொன்னாள். மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போலப் போய் அமர்ந்தேன். வண்டியைக் கிளப்பினாள்.

”யாராவது பாக்கப்போறாங்க” என இரைந்தேன்.

”குடிச்சிட்டு தெருவில விழுந்து கெடக்கும்போது இந்த எண்ணம் வந்தா பரவால்லடா “

அமைதியானேன். அவள் ஒன்றும் பேசவில்லை. கோரிமேட்டுத் தெரு வழியாய் வண்டி தண்டராம்பட்டு சாலையை அடைந்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்  என் வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்தினாள். இறங்கிக் கொண்டேன்.

இனி வேட்டவலம் ரோடு வழியாய் போகவே கூடாது என நினைத்துக் கொண்டே உள்ளே போனேன்

ரமா பின்னாலேயே வந்தாள். அம்மா, ரமாவைப் பார்த்து சிரித்தாள்.

”வா ரமா, இவன எங்க புடிச்ச?” என்றாள்.

”தொர என்ன பாத்துட்டும் பாக்காத மாதிரி நைசா திரும்பிப் போனாரு இழுத்துட்டு வந்துட்டேன்”

அவளை முறைத்தேன்.

அவளே கேட்டாள்

“சாவுலாம் நல்ல படியா முடிஞ்சதா ”

”ம்ம்”

”பாவம் அந்த அக்கா, இனிமேலாச்சும் நல்லா இருக்கட்டும்”

நான் எதுவும் பேசவில்லை. அவளே தொடர்ந்தாள்.

”ரவி, நேத்துதான் அம்மா மொத்த கதையும் எனக்கு சொன்னாங்க. நீ அந்த பொண்ண டைவர்ஸ் பண்ணிடு.., ஊர் உலகத்துல பொண்ணா இல்ல, நல்லதா நாம பாப்பம்.”

எனக்கு கோபமும் ஆத்திரமும் பொங்கியது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

வாசலில் யாரோ கூப்பிட்டார்கள். அம்மா போனாள்.

”பூக்காரம்மா வீட்டுக்காரரா.., ஓ வாங்க வாங்க” என்றாள்.

யாரென்று எட்டிப் பார்த்தேன். சாமி

ஏனோ திடீரென நிம்மதி படர்ந்தது. கண்டிப்பாக இவனிடம் சரக்கு இருக்கும்

”வா சாமி” என்றேன்

ரமா எழுந்து நின்றாள்

அட உக்காரும்மா என்றபடியே சாமிநாதனும் உள்ளே வந்து அமர்ந்தான்.

”வாத்தி நீ கெளம்பு. வா என்னோட”.

அதற்காக காத்திருந்தேன்.

போலாம் சாமி என எழுந்து கொண்டேன்.

”போய் பட்னு கால்ல வூந்திரு”

”யார் கால்ல?”

”உம் பொண்டாட்டி கால்லதான்”

”என்ன ஒளற்ற சாமி”

”உம் பொண்டாட்டி எங்கூட்லதான்யா இருக்கா, வந்து சமாதானமா பேசி கூட்டிட்டு வந்துரு”

எனக்கு திகைப்பாய் இருந்தது.

”அவ எப்படி உங்கூட்ல?”

”நேத்து ஏரில வூந்து சாவப் போயிருக்கா.  நல்ல வேளையா வீட்லயும் நானும் அங்க இருந்தோம். பேசி கூட்டி வந்து வீட்ல வச்சிருக்கோம்”

”அவ என்ன சாவடிக்க பாக்குறா சாமி. அவளைப் போய் கூப்டு வந்து என்ன பன்றது.., சாவறதா?”

”வாத்தி, உனக்கு தெரியாதது இல்ல. ஆயிரம்  இருந்தாலும் இந்த வாழ்க்கய வாழ்ந்துதான ஆவனும்.., அதோட இல்லாம. சின்ன பொண்ணு.., உலகம் தெரியாது.., நாமதான் சொல்லித்தரணும்., ”

 சாமி பேசிக் கொண்டே போனான்.

சாமி இவ்வளவு பொறுப்பாய் பேசுபவனா என எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. அம்மா அவன் பேச்சில் கரைந்தாள்.

”நான் வரேன்., நான் வந்து அவள கூட்டிட்டு வரேன்., ரமா நீயும் வா போகலாம்.,, என எழுந்தாள்.

நான் உள்ளே போய் படுத்துவிட்டேன்.

மூவரும் வெளியே வந்தபோது சரியாய் அங்கையின் அம்மாவும் அப்பாவும்  வந்து சேர்ந்தார்கள்.

சரியான நேரத்துல வந்தீங்க என்றான் சாமி

”இருங்க வாத்தியையும் கூப்டு போய்டலாம். எல்லாத்தையும் பேசினா தீர்த்திட முடியாதா என்ன!”

உள்ளே வந்தவன் என்னை எழுப்பினான். நான் பலமாய் மறுத்துவிட்டேன்.

”அவ வர்ரதுல எனக்குப் பிரச்சின இல்ல. போய் கூட்டி வாங்க”

என திரும்பிப் படுத்துக் கொண்டேன்.

சாமி வெளியே வந்தபோது ஒரு ஆட்டோ வந்து நின்றது. துர்க்காவும் அங்கையும் அதிலிருந்து இறங்கினார்கள்.

வாசலில் இருந்த கும்பலைப் பார்த்து அங்கை தயங்கி துர்க்காவின் விரல்களைப் பிடித்துக் கொண்டாள்.

துர்க்கா  நின்றிருந்தவர்களைப் பார்த்து

“உள்ள போய் பேசலாம் ” என்றாள்

இருக்கைகள் அனைவருக்கும் போதாது. ரமா உள்ளே போய் பாய் கொண்டு வந்து தரையில் விரித்தாள்.

சாமி என்னை வந்து எழுப்பி, ஒம் பொண்டாட்டியே வந்துட்டா எனச் சொல்லிச் சிரித்தான்.

நம்ப முடியாமல் எழுந்து வெளியில் வந்தேன்.

பாயில் அங்கையும் துர்க்காவும் அமர்ந்தார்கள். மற்றவர்களையும் உட்காரச் சொன்னார்கள்.

துர்க்கா பேச ஆரம்பித்தாள்.

”நடந்தது நடந்து போச்சு. யாருக்கும் எந்த கோபதாபமும் இல்லாம இத அப்படியே முடிச்சுக்கலாம்”

அம்மா பதறினாள். முடிச்சுக்கலாம்னா?

”உங்க புள்ளைக்கு வேற பொண்ண பாருங்கம்மா”

”என்னம்மா இப்படி சொல்ற.,” என்ற அம்மாவின் குரலை மீறி

அங்கையின் அப்பா சத்தமாய் கத்தினார்.

“ நீ யாரு இத சொல்ல”

துர்க்கா அவருக்காய் திரும்பி நிதானமாய் சொன்னாள்.

“இனிமே இவளுக்கு எல்லாம் நான் தான். இவள பெத்து வளத்தீங்க அதுக்கு ஒரு கும்பிடு போட்டுக்கறேன். இனிமே இவள பத்தின கவல உங்களுக்கு வேண்டாம்.”

அங்கையின் அம்மா மெளனமாக இருந்தாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. துர்க்காவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் இரவில் மட்டுமல்ல பகலிலும் அம்மனைப் போலவே தான் இருந்தாள்.

துர்க்கா என்னை நிமிர்ந்து பார்த்து.

“ரவி நீ யார வேணா கல்யாணம் பண்ணிக்கலாம். அதுல இவளுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லன்னு எழுதி கொடுத்திடுறோம். ஒரு பேப்பர் எட்த்தா”

”அதுக்கு அவசியம் இல்ல.., அங்கைக்கு எது சரின்னு படுதோ அதைப் பண்ணட்டும் ”

எனச் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டேன்.

அங்கை, அவள் அம்மாவைப் பார்த்துச் சொன்னாள்,

“நான் இவங்களோட கொஞ்ச நாள் இருக்கம்மா”

அங்கையின் அம்மா எழுந்து கொண்டாள்.

அவளின் அப்பா கத்த ஆரம்பித்தார்,

“ என்னா வேல பாத்துட்டு என்னா திமிரா இருக்கா பார்”  என்றபடியே அங்கையை அடிக்கப் பாய்ந்தார்.  அங்கையின் அம்மா அவரை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

ரமா தன் மகளின் பள்ளிப் பேருந்து வந்துவிடும் எனச் சொல்லியபடியே   கிளம்பினாள்.

துர்க்கா, சாமியிடம் சொன்னாள்

”நாங்க வெளியூர் போறம். அப்புறமா வருவோம். நீ வீட்டையும் கடையையும் பத்திரமா பாத்துக்க”

சாமிக்கு திகைப்பாய் இருந்தது. மறைத்துக் கொண்டே சரியென தலையாட்டினான்.

ரவியின் அம்மாவிடம் அங்கையும் துர்க்காவும் சொல்லிக் கொண்டு வெளியே வந்தார்கள். அரச மரத்தடி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பேருந்து புறப்படத் தயாராய் நின்று கொண்டிருந்தது.

துர்க்கா, அங்கையைப் பார்த்துக் கேட்டாள்.

“அந்த பஸ்ஸ  உன்னால புடிக்க முடியுமா.?”

அங்கை தீவிரமாய் முடியும் என்றாள்

இருவரும் பேருந்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்.


- முற்றும்



No comments:

Featured Post

test

 test