Sunday, March 26, 2017

இடி மின்னல் மழை


இந்நாட்டின் பருவநிலை குறித்தான என் சலிப்புகளை இதேப் பக்கங்களில் எழுதித் தீர்த்திருக்கிறேன். மழைக்கான ஏக்கம் வளைகுடாவாசிகள் அனைவருக்குமே பொதுவானது. இந்த வருடம் இந்நிலை மாறியிருக்கிறது. பிப்ரவரி மாதத்திலிருந்து இங்கு மழை பெய்கிறது. கடந்த மூன்று நாட்களாய் இடி மின்னலுடன் மழை சற்று பலமாகவே பெய்கிறது. வழக்கமாய் இரண்டிலிருந்து நான்கு செண்டிமீட்டர் மழை இங்கு பெய்யும். இந்த வருடமோ பத்து செமீ மழையைக் கடந்திருக்கிறோம். ஒரே குதூகலம்தான். ஆனால் இந்நகரம் மழைக்குத் தோதுபட்டதில்லை.இந்த மழைக்கே சாலைகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. வாகன நெரிசலும் இருமடங்காகிவிடும்.

 வெள்ளிக்கிழமை காலை, தூங்கிக் கொண்டிருந்த பயல்களை எழுப்பி எங்கள் பகுதிக்கு அருகாமையிலிருந்த கார்னீஷில் போய் விளையாடி வந்தோம். நிதானமான மழைத் தூறல், ஊடுருவும் குளிர் காற்று, பாலத்திற்கு அடியில் சன்னமாய் நகரும் நதியின் தோற்றங்களை கொண்ட கார்னீஷ் என இந்நகரம் வேறொரு குளிர் ஐரோப்பிய நகரத்தின் சாயலுக்குத் தன்னை மாற்றிக் கொண்டுவிட்டது. மிக நீண்ட வெயில் காலம், குறுகிய குளிர் காலம் என இரண்டே பருவகாலங்களைக் கொண்ட இந்நாட்டிற்கு மழைக்காலம் என்கிற புதுக்காலமும் வந்தேவிட்டதா என சந்தோஷமாய் பேசிக் கொள்கிறோம். அடுத்த வருடம்தான் தெரியவரும்.

 வெள்ளிக்கிழமை முன்னிரவில் இங்கு நடைபெற்ற ஒரு விழாவிற்கு நண்பர் அசோக்குடன் சென்றேன். பழைய எமிரேட்ஸ் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது தொலைவில் மின்னல்கள் பளிச்சிட்டன. மழை வருமோ எனப் பேசிக் கொண்டிருந்தபோதே பெரிய பெரிய தூறல்கள் அதிகமாகி மழை கொட்டத் துவங்கியது. அங்கிருந்து ஷேக் ஸாயித் சாலை வரும்வரை அதே வேகத்தில் மழை கொட்டியது. இவ்வளவு பெரிய மழையை இங்கு வந்து நான் பார்த்ததில்லை. ஒரே நேரத்தில் உற்சாகமும் மெல்லிய பயமும் மனதைக் கவ்வ வாகனத்தை செலுத்தி இடம் வந்து சேர்ந்தேன். நிகழ்வில் குட்டி ரேவதி யை சந்திப்பதுதான் பிரதான நோக்கம். ஆனால் அது நிறைவேறவில்லை. வழக்கமான தமிழ் நிகழ்வு. குழந்தைகளின் நடனம், பாடல்களைக் கேட்பதிலோ பார்ப்பதிலோ எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தமிழ் தொலைக்காட்சிகளில் நகைச்சுவை என்ற பெயரில் குதறி எடுக்கும் மேக் அப் முக பெண்களின் வெறும் பாவணை நிரம்பிய அற்பப் பேச்சுகளைத்தான் சகித்துக் கொள்ள முடிவதில்லை. வெளிநாடுகளில் நிகழும் தமிழர் நிகழ்வுகள் அத்தனையும் இப்படித்தான் இருக்கின்றன. தமிழர்களின் வெகுசன ரசனை அற்ப பாலியல் சமிக்ஞைகளைத் தாண்டி நகரவே இல்லை.

 உள்ளே போய் அமர்ந்த பதினைந்தாவது நிமிடத்தில் வெளியேறினேன். எனக்கும் முன்பு நண்பர் ஆசிப் மீரான் வெளியில் டீ குடித்துக் கொண்டிருந்தார். பார்த்ததும் உற்சாகமாகி அவரை அணைத்துக் கொண்டேன். ஆத்மார்த்தமான உரையாடல் பல வருடங்களுக்குப் பிறகு சாத்தியமானது. தொடர்ந்த நகைச்சுவைகளைக் காணும் தெம்பில்லாமல் அசோக்கும் வெளியே வர, காத்திருந்து குட்டிரேவதியை காணும் மனநிலையை இழந்தோம். ஒன்பது மணிக்கு கிளம்பிவிட்டோம். நம் சூழலில் மட்டும் ஊடக வெளிச்சம் ஏன் சரியான ஆட்களின் மீது விழுவதே இல்லை என அங்கலாய்த்தபடி திரும்பினோம்.

 சனிக்கிழமை கேம் ஆப் த்ரோனின் ஆறாவது சீசனைப் பார்க்கத் துவங்கினேன். இடையில் நிசப்தம் படம் பார்க்காமல் இருப்பது நினைவிற்கு வந்தது. மைக்கேல் அருண் எங்கள் வட்டத்தைச் சார்ந்தவர் என்பதால் நிசப்தம் படம் பார்க்க ஆர்வமாக இருந்தேன். கொரியப் படத்தின் காப்பி என்கிற விமர்சனத்தைப் பார்த்துக் கசந்தேன். நம்மிடம் கதைக்கா பஞ்சம்? இத்தனைக்கும் மைக்கேலைச் சுற்றியும் எழுத்தாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஏன் கொரியா வரைப் போனார் எனத் தெரியவில்லை. எதற்கும் படத்தை பார்த்துவிடுவோம் என ஆரம்பித்தேன். அரை மணி நேரம் தாக்குப் பிடிக்க முடிந்தது. அவ்வளவுதான். நாயகனுக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வரவில்லை. மோசமான இசை, மிகப் பழைய டயலாக்குகள். நிறுத்திவிட்டேன். கைக்காசைப் போட்டு இப்படி ஒரு படம் எடுக்க வேண்டுமா என்கிற பரிதாபம்தான் எஞ்சியது.

 யாக்கை படமும் பார்க்காமல் இருந்தது. நண்பர் லக்‌ஷ்மண் பணிபுரிந்த படம்.நிறைய குறைகள் இருந்தாலும் முழுப் படத்தையும் பார்த்து முடித்தேன். ஸ்வாதியைப் பிடித்திருந்தது. லக்‌ஷ்மணைப் பொறுத்தவரை நல்ல துவக்கம். வெற்றிகளை நோக்கி நகர வாழ்த்துகள். 

தூங்கப் போவதற்கு முன்பு அசோகமித்ரன் குறித்து ஜெயமோகன் பேசிய ஒலிக்குறிப்பைக் கேட்டேன். இழப்பின் வேதனையில் கசந்த பேச்சு என தள்ளிவிட முடியாத அளவிற்கு அப்பேச்சிருந்தது. ஏராளமான தகவல் பிழைகள். அப்பாவிற்கு கார் ஓட்டவே தெரியாது என அசோகமித்ரன் மகனும் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஜெயமோகனுக்கும் அஞ்சலிக் கட்டுரைகளைக்கும் ஏழாம் பொருத்தம். விஷயத்தைக் கையிலெடுத்திருப்பது மாமல்லன் என்பதால் குறைந்தது பத்து நாளிற்கு வாண வேடிக்கை நிச்சயம். அடுத்த டேப் பில் தண்ணீர் திறந்திருக்கிறது. இன்று வாசித்துவிட்டு நாளை எழுதுகிறேன்.

No comments:

Featured Post

test

 test