என்னுடைய இருபதுகளில் தண்ணீர் நாவலை முதன்முறையாய் வாசித்தேன். பிறகு அவ்வப்போது - வேறு புத்தகங்கள் வாசிக்க கைவசம் இல்லாத பொழுது - அதன் சில பக்கங்களை வாசிப்பதுண்டு. மிகக் குறைவான பக்கங்கள் கொண்ட, மிக மிக சன்னமான மொழியில் சொல்லப்பட்ட இந் நாவலுக்குக் காவியத் தன்மை இருப்பதாய் எண்ணிக் கொள்வேன். நேற்று மிக நிதானமாகவும் கவனமாகவும் தண்ணீரை வாசித்துப் பார்த்தேன். இதன் கச்சிதத் தன்மை இன்னமும் அதே வியப்பைத் தருகிறது.
ஜமுனா, சாயா, டீச்சரம்மா என இந்நாவலில் வரும் மூன்று பிரதான பெண் கதாபாத்திரங்களும், நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையே கிடந்து அல்லாடுகின்றன. நெருக்கடிகள் மிகுந்த, சவால்கள் நிரம்பிய மாநகர வாழ்வை எதிர் கொள்ளும் இப்பெண்கள், உறவுகளாலும் குதறியெடுக்கப்படுகிறார்கள். இதே சாதாரணப் பெண்கள் அத்தனை துக்கத்தையும் அழுதுத் தீர்த்து, அழுந்தத் துடைத்து எறிந்து, நாளைப் பிரச்சினையை நாளை பார்த்துக் கொள்ளலாம் இன்றை வாழ்வோம் என இன்னும் அதிக நெஞ்சுரத்தோடு முன் நகர்கிறார்கள். எந்த மொழியில் இந் நாவலை மொழிபெயர்த்தாலும் அம் மக்களால் இது எங்களின் கதை என சுவீகரித்துக் கொள்ளப்படும். உழைக்கும் பெண்களின் துயர், உலகம் முழுக்க ஒன்றாகத்தானே இருக்கிறது.
இந்த முறை வாசிக்கும்போது வரிகளுக்கிடையில் பொதிந்து வைத்திருந்த அர்த்தம் ஒன்று புதிதாய் புலப்பட்டது. ஜமுனா, சாயாவைப் பார்க்க அவளின் விடுதிக்குச் சென்றிருப்பாள். ஆரம்பத்தில் ஜமுனாவைக் கடிந்து கொள்பவள், அவளின் மகன் முரளி பற்றிப் பேச்சு வந்ததும் உடைந்து விம்முவாள். ஆறுதலாய் ஜமுனா அவளை அணைக்க முற்படும்போது, சாயா சட்டென்று ஜமுனாவை உதறுவாள். தப்பாக எடுத்துக் கொள்ளாதே இந்த மாதிரி இடத்தில் நாம் கட்டிக் கொண்டால் கூட சிலருக்கு வேறு மாதிரிதான் தோன்றும் என்பாள். இத்தனைக்கும் அது ஒரு பெண்கள் விடுதி. இந்த வரியின் யதார்த்த குரூரம் பயங்கரமாக இருக்கிறது. எழுபதுகளில் பெண்ணும் பெண்ணும் அணைத்துக் கொள்வதைக் கூட கீழ்மையாகப் பார்க்கும் பார்வை சக பெண்களுக்கே இருந்திருக்கிறது.
பெண்ணுடல் மீது ஆண் செலுத்தும் அதிகாரம், அரசின் மெத்தனம், கடமையைச் செய்ய மறுக்கும் அதிகாரிகள், அரசுப் பணிகளை எடுத்துச் செய்யும் ஒப்பந்தக்காரர்களின் ஊழல் என சாமான்யர்கள் வாழ்வின் மீது நிகழும் பல் முனைத் தாக்குதல்களை இந்நாவல் விசிறலாய் சொல்கிறது. கதையின் முதல் பக்கத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்துவிட்ட மிக நீண்ட தண்ணீர் பஞ்ச அலைவுகளிற்குப் பிறகு பெய்யும் மழை, அத்தனை பிரச்சினைகளுக்கும் முடிவாய் இருக்கும் என நாம் எண்ண ஆரம்பிக்கும்போதே எல்லா வீடுகளிலும் வரும் குடிநீரில் சாக்கடைத் தண்ணீர் கலந்திருக்கும். அந்தத் துயரத்தின் அபத்த முடிவையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை சாயாவும் ஜமுனாவும் அடைந்திருப்பார்கள். கடவுள் குறித்த ஒரு மெல்லிய கிண்டலோடு அதைத் தாண்டிப் போவார்கள். வாசலில் பாஸ்கர் ராவ் காத்துக் கொண்டிருந்தான் என அந்த அத்தியாயம் முடியும்.
தண்ணீர், மலையாளத்திலும் மிகச் சரியான வரவேற்பைப் பெற்றது. என் மலையாள நண்பர்கள் சிலர், அசோகமித்திரன் குறித்தும் இந் நாவல் குறித்தும் மிக உயர்வாக உரையாடியிருக்கிறார்கள். தமிழ் நாட்டை நேசிக்கும் பால் சக்காரியா உட்பட பல மலையாள எழுத்தாளர்களுக்கும் அசோகமித்திரனின் தண்ணீர் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மலையாளச் சூழலில் இருக்கும் ஜெயமோகனுக்கும் இது தெரிந்தே இருக்கும். ஒரு எழுத்தாளன் மிகச் சிறப்பாக எழுதினான். பரவலாய் எல்லோராலும் அறியப்பட்டான். விருதுகளைப் பெற்றான். எங்கும் எதற்கும் தன் முதுகை வளைத்துக் கொள்ள விரும்பாது, சுய எள்ளலோடும் புன்சிரிப்போடுமாய் வாழ்வாழ்ங்கு வாழ்ந்து மறைந்தான் என்பதை ஏன் இவர் இப்படித் திரித்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. போகட்டும் அது அவர் பிரச்சினை.
No comments:
Post a Comment