எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ஜுலை மாத வெயில் மதியத்தில்தான்
இந்த நாட்டிற்கு வந்தடைந்தேன். இந்த நகரத்தின் நிறம், சாம்பல் வெண்மையாக இருந்தது. இவ்வளவு
பிரகாசமான ஒளி வெள்ளம் நிரம்பிய நகரத்தைப் பார்க்க விநோதமாகவும் இருந்தது. நீல வானம்
மற்றும் வெண்ணிற மேகங்கள் என்பதெல்லாம் என் ஆதிக் கனவானது. வெகு தொலைவிற்குப் புழுதிய
மண்டிய, கலங்கலாய் நீலம் தெரியும் விரிந்த வெளிதான் என் வானமாகிற்று. கண் கூசும் வெயில்
பிறகு குளிர் கண்ணாடிகளுக்கு பின் பாந்தமானது. பிறகெப்போதுமே இந்நகரம் முதன்முறை தந்த விநோத நிற உணர்வைத் திரும்பத் தரவேயில்லை. மறந்து போன முதல் முத்த உணர்வைப் போலவே இந்நகரகம் தன்
வழமைக்குள் என்னை அழுத்திக் கொண்டது. Incendies திரைப்படம்
வாயிலாக எனக்கந்த உணர்வுகள் திரும்பக் கிடைத்தன. இந்த மத்தியக் கிழக்கு நாடுகளின் நிறத்தை
இத்திரைப்படத்தில் பார்க்க முடிந்தது. லெபனான் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் சந்து பொந்துகள்,
மலைப்பாதைகள் எங்கும் சோர்வோடுயும் துயரத்தோடும் சுற்றி அலைந்துவிட்டுத் திரும்பிய
மனநிலையும் பெற்றேன்.
Incendies திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் The Bridges of Madison County திரைப்படத்தை நினைவுபடுத்தின. படத்தின் பிரதானக் கதாபாத்திரமான
நவ்வல் மார்வன் திடீர் வலிப்பு வந்து இறந்து போகிறாள். அவளின் மகள் ஜீனும் மகன் சைமனும்
இரட்டைக் குழந்தைகள். அவர்களிற்கு உயிலாக சில வேண்டுகோள்கள் அவளின் மேலாளரும் வக்கீலுமான
லேபெல் வழியாய் வந்தடைகிறது. அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரனும் தகப்பனும் இருப்பதாகவும்
அவர்களிடம் சேர்க்கச் சொல்லி இரண்டு தனித்தனி கடிதங்களை வக்கீல் இருவரிடமும் தருகிறார்.
நவ்வல் தன் உடல் வழக்கமான கிறிஸ்துவ முறைகளின் படி புதைக்கக் கூடாதெனவும், உடைகளைக்
களைந்துவிட்டு மண்ணில் முகத்தைத் திருப்பி வைத்து (புட்டங்களை இந்த உலகிற்குக் காட்டியபடி) புதைக்க வேண்டுமெனவும் உயிலில் கேட்டுக் கொண்டிருக்கிறாள். மேலும் தர வேண்டிய கடிதங்களை உரியவர்களிடம் சேர்த்துவிட்டுப் பின்பு வந்து தன் கல்லறையில் சிலுவை நட்டு
பெயரைப் பொறித்து வைக்கலாம் அதுவரை தன் கல்லறை அப்படியேதான் இருக்க வேண்டும் எனவும்
கேட்டுக் கொண்டிருக்கிறாள். இது இரட்டையர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தருகிறது.
தாயின் மரணத்திற்குப் பிறகு அவளைப் பற்றியதான புதிர்கள் மகள்களுக்கு ஆதூரமாகவும் மகன்களுக்கு
அசூசையாகவும் இருப்பது உலகம் முழுக்கப் பொதுவாக இருக்கும் ஆண் மனப்பான்மைகளில் ஒன்று.
சைமன் அவ்வாறே அதை வெளிப்படுத்துகிறான். தாயின் வேண்டுகோளின் படியெல்லாம் யாரையும்
தேடிக் கொண்டு போக முடியாது. அவள் சொன்னபடி இறப்புச் சடங்குகளை செய்யவும் முடியாது
என மறுக்கிறான். ஜீன் அவனைத் தேற்ற முயற்சிக்கிறாள். பிறகு தானே கிளம்பி தாயின் பழைய
வாழ்க்கையைத் தேடிப் போகிறாள்.
நவ்வல் மார்வனின்
முன் கதையும், எப்போதுமே உக்கிரமாக போர் நடந்து கொண்டிருக்கும் தாயின் சொந்த நிலங்களில்
அவளின் தடயங்களைத் தேடி மகள் ஜீன் அலைவதும் லெபனான் நாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் திரைப்படத்தில் வரும் நகரங்களுக்கும் ஊர்களுக்கும் கற்பனைப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள்.
நவ்வல் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவள் என்பதும் நேரடியாக சொல்லப்பட வில்லை. முஸ்லீம்
குழுவிற்கும் கிறிஸ்தவ குழுவிற்கும் இடையே நிகரும் போராக திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
குழந்தைகள் மிகக் குரூரமாக சுட்டுக் கொல்லப்படுவதை அழுத்தமாய் சொல்லியிருப்பதன் மூலம்
பாலஸ்தீன- இஸ்ரேல் பின்னணிக் களத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிய வரும்.
ஆனால் மிகக் கவனமாய் அதன் அரசியல் எல்லைகளுக்குள் போவதை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு திரைப்படத்தின் மூலம் அனுக இயலக்கூடிய சிக்கலாக இந்த யுகாந்திரப் பிரச்சினை இல்லாதிருப்பதால்
அது குறித்த நெருடலும் எனக்கு இல்லை. அவ்வளவு எளிமையாய் பாலஸ்தீன- இஸ்ரேல் பிரச்சினையை
பேசிவிட முடியாதுதானே. ஆனால் போரின் விளைவுகளை, வலியை மிக ஆழமாய் நம்மால் கடத்த இயலும்.
இத்திரைப்படமும் அதைத்தான் செய்திருக்கிறது.
தாயின் பின்புலத்தைத் தேடி வரும் ஜீனிற்கு தாயின் உறவினர்கள்
ஒருவருமே உதவ முன் வருவதில்லை. அவளைப் பற்றி பேசுவதையும் தவிர்க்கிறார்கள். தங்களின்
குடும்பத்திற்கு தீராத களங்கத்தை நவ்வல் உண்டாக்கி விட்டதாய் ஆத்திரப்படுகிறார்கள்.
இடைவெட்டாய் நவ்வலின் முன் கதையும் ஜீனுடன் பயணிக்கிறது.
நவ்வல் ஒரு முஸ்லீம் இளைஞனுடன் காதற் கொண்டு ஓடிப்போகத் திட்டமிடுகிறாள்.
அவளின் சகோதரர்கள் அந்த இளைஞனைக் கொன்று அவளையும் கொல்ல வரும்போது பாட்டியினால் காக்கப்படுகிறாள்.
நவ்வல் கர்ப்பமாக இருப்பதை அறிந்து பதபதைக்கும் பாட்டி குழந்தை பிறந்த பின்பு அவளை
வேறொரு நகரத்திற்கு அனுப்பிப் படிக்க வைப்பதாக சொல்கிறாள். குழந்தை பிறந்ததும் அடையாளத்திற்காக
குழந்தையின் குதிகாலில் மூன்று புள்ளிகளை பாட்டி பச்சை குத்துகிறாள்.பின்பு உடனடியாய்
அக்குழந்தையை அநாதை விடுதியில் சேர்ப்பித்து விடுகிறாள். நவ்வலும் வேரொரு நகரத்திற்குப்
போய் வசிக்க ஆரம்பிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவளால் குழந்தையின் நினைவிலிருந்து மீளமுடியாமல்
தேடிக் கொண்டு வருகிறாள். மிக குரூரமான போர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வழியில்
பல்வேறு கொடுமைகளை சந்திக்க நேரிடும் நவ்வல் இந்தப் போர்களுக்கு காரணமான ஒரு தலைவனை
கொன்று விடுகிறாள். பதினைந்து வருட சிறை தண்டனையும் பெறுகிறாள். இரவில் சதா பாடிக்கொண்டிருக்கிறாள்.
அதனால் பாடும் பெண் என்கிற அடையாளத்தைப் பெறுகிறாள். தண்டனை இறுதிக் காலத்தில் அங்கு
வரும் சிறைக் காவலன் ஒருவன் நவ்வல் பாடுவதை நிறுத்த தினம் மிகக் குரூரமாக வன்புணர்கிறான்.
அதனால் கருத்தரிக்கும் நவ்வல் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். பிரசவ தாதியின்
உதவியால் அக்குழந்தைகளை சிறையிலிருந்து வெளியே வந்ததும் பெற்றுக் கொண்டு கனடா வந்தடைகிறாள்.
ஜீன் இந்த கதையைப் பலரின் வழியாய் கண்டடைகிறாள். ஜெயிலில் பணியிருந்த
முதியவர் சிறையில் நவ்வலுக்கு குழந்தை பிறந்ததாக சொல்கிறார். உடைந்து போகும் ஜீன் தன்
சகோதரனை தொலைபேசியில் அழைத்து எல்லா விஷயங்களையும் சொல்லி அழுகிறாள். வக்கீலோடு சைமனும்
வந்து சேர்கிறான். மூவரும் சில அதிகாரிகளின் தொடர்பு மூலம் விரிவாய் தேட பல புதிர்கள்
ஒன்றன் பின் ஒன்றாய் அவிழ்கின்றன. சமீபத்தில் பார்த்த
திரைப்படங்களில் இந்தத் திரைப்படம் தந்த அதிர்ச்சித் திருப்பத்தைப் போல வெறெந்த படமும்
தரவில்லை. தேடிக்கொண்டிருந்த உண்மை
சகோதரனின் வாயிலாய் அறிந்த
பிறகு ஜீனின் கேவல் எழுந்தடங்கும் காட்சி நினைவில் அப்படியே உறைந்து விட்டது.
நவ்வல் மார்வனாக
லுப்னா அஸெபெல் என்கிற பெல்ஜிய நடிகை நடித்திருக்கிறார். ஏற்கனவே இவரை டோனி காட்லிஃபின்
Exils (2004) திரைப்படத்தின் கதாநாயகியாகப் பார்த்திருக்கிறேன். நைமா என்கிற கதாபாத்திரம்
ஜிப்சி வாழ்வின் அத்தனை பரவசங்களையும் நமக்குத் தரும். எப்படி காட்ஜோ டிலோ வின் ரோமைன்
தூரிசையும் ரோனா ஹார்ட்னைரையும் மறக்கவே முடியாதோ அப்படியே எக்ஸில் நைமாவையும் சீக்கிரம்
மறந்து விட முடியாது. லுப்னா அஸெபெலிற்கு இன்செண்டிஸ் மிக முக்கியமான திரைப்படம். இந்த
நவ்வல் கதாபாத்திரம்தான் இதுவரைக்கும் அவர் பெற்றிருக்கும் அனைத்து விருதுகளையும் தந்திருக்கிறது.
இன்செண்டீஸ் 2010 இல் வெளிவந்த
கனேடியத் திரைப்படம். Wajdi Mouawad என்கிற லெபனான் எழுத்தாளரின்
இதே பெயரில் வெளிவந்த நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. Denis Villeneuve இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சமகாலப் புது
இயக்குனர்களில் டெனிஸ் மிக அதிகம் பேசப்படக்கூடியவராக இருக்கிறார். இதுவரை ஆறு திரைப்படங்களை
இயக்கி இருக்கும் டெனிஸ் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறார்.
No comments:
Post a Comment