ஒவ்வொரு முறை ஊரிலிருந்து
திரும்பும்போதும் கிட்டத்தட்ட ஒரு மாதகாலத்திற்கு அங்கிருந்த நாட்களில் ஏமார்ந்த அனுபவங்களை
மிகுந்த கொதிப்போடு அசைபோட்டுக் கொண்டிருப்பேன். ஒரு பக்கம் என் அறியாமை குறித்த அவமானம்
இருந்தாலும் பிறரை ஏமாற்றுவதை, பிறர் பொருளை எந்தக் குற்ற உணர்வுமில்லாமல் திருடும்
மனநிலையை, எம் மக்கள் எவ்வாறு பெற்றனர்? என்பது குறித்தும் யோசித்துக் கொண்டிருப்பேன்.
இந்நாட்களில் ஊரில் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் அதன் மூலம் பெறும் ஏமார்ந்த
அனுபவங்கள் சற்று அதிகமாகவே உள்ளன. பார்க்கும் எல்லா மனிதர்கள் மீதும் இயல்பாகவே ஒரு
அவநம்பிக்கை வந்து படிகிறது. கிரகித்துக் கொள்ள சற்று சிரமமாக இருந்தாலுமே கூட சதுரங்க
வேட்டை திரைப்படம் தரும் ’உனக்கு கத்துக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதுன்னு நினைச்சிக்கோ’
வென அந்த சூழலை,அனுபவத்தைத் தாண்டிப்போக வேண்டியதாக இருக்கிறது.
இந்த நகரீயத்திற்கு
முன்பு, இந்த பொருள்மயவாதத்திற்கு முன்பு, உலக முதலாளிகள் இந்தியாவின் சந்து பொந்துகளை
ஆக்ரமிப்பதற்கு முன்பு, எம் மக்களின் மனநிலை இப்படி இல்லை. அடுத்தவரை ஏய்த்துப் பிழைப்பதை
திறமை என்கிற பெயரிட்டு அழைக்கும் ஈனத்தனங்கள் வந்தடைந்திராத காலமும் வாழ்க்கைமுறையும்
நமக்கு இருந்தது. கங்கைப் பருந்தின் சிறகுகள் நாவல் மக்களின் இந்த மன நகர்வைப் பேசுகிறது.
கிராமங்களுக்கு சாலைகள் போடப்படுவது மக்களின்
பயன்பாட்டிற்கு மட்டுமேயல்ல என்கிற புள்ளியிலிருந்து அந்த கிராம மக்களின் வாழ்வு முறையின்
மாற்றத்தை மிகத் துல்லியமாய் சொல்கிறது. இந்திய தேசத்தின் வரைபடத்தில் மிகச்சிறிய புள்ளியாய்
இருக்கும் ஒரு கிராமத்தின் வாழ்க்கை மாற்றங்களுக்கான காரணமும் ஒட்டு மொத்த தேசத்தின்
மாற்றங்களுக்கான காரணமும் ஒன்றாகத்தான் இருக்கிறது. இதைத்தான் வேற்றுமையில் ஒற்றுமை
என்கிறோமோ என்னவோ.
இந்திய செவ்வியல்
நாவல்களில் இருக்கும் பொதுத்தன்மைகளில் நிலக்காட்சிகள் குறித்த விவரணைகள் எனக்குப்
பிடித்தமானவை. அக்னி நதியாகட்டும், நீலகண்டப் பறவையைத் தேடி நாவலாகட்டும் நிலக்காட்சிகளைப்
பதிவு செய்வதில் அவ்வளவு மெனக்கெடலைச் செய்திருக்கின்றன. பருவகால மாற்றங்கள், அதற்கேற்ப
மாறும் மக்களின் வாழ்வாதார வேலைகள். சடங்குகள், வழிபாடுகள் என அந்தப் பிரதேசத்தின்
மொத்த பண்பாட்டு/ பயன்பாட்டு தகவல்களையும் வாழ்வோடு ஒட்டிக் கதையாக சொல்லப்பட்டுவிடுகின்றன.
இந்தத் தன்மை வெறும் புனைவெழுத்து வாசிப்பாக மட்டும் நின்றுவிடாமல் மானுட வாழ்வு குறித்த
ஆவணமாகவும் மாறுகிறது. கங்கைப் பருந்தின் சிறகுகள் நாவலும் இதே தன்மையைக் கொண்டிருக்கிறது.
சோனாய் ஆறு இந்நாவலில் ஒரு கதாபாத்திரமாகவே இடம் பெற்றிருக்கிறது. சோனாய் ஆற்றை மையமாக
வைத்து மொத்தக் கதையும் சொல்லப்படுகிறது.
மேராபூர் கிராமத்தில்
வசிக்கும் போக்ராம் கடின உழைப்பாளி. பருவ காலத்திற்கேற்ப நெல், கடுகு, சணல் மற்றும்
ரெடிமேட் துணிகளை பக்கத்து ஊர் சந்தைகளில் விற்றுப் பிழைப்பு நடத்தும் வியாபாரி. மனைவி,
குழந்தைகள், இளம் தங்கை மற்றும் முதிர்ந்த தாய் என ஒரு சிறு குடும்பத்தை நிர்வகிப்பவன்.
போக்ராமின் தங்கை வாசந்தி சகோதரனின் நண்பனான தனஞ்செயன் என்கிற இலட்சியவாத இளைஞன் மீது
காதல் வயப்படுகிறாள். அவனுடைய சோகம் நிரம்பிய முன் கதையும், ஊர்மக்களுக்காக அயராமல்
உழைக்கும் அவனின் நற்குணங்களின் மீதும் காதற் கொள்கிறாள். ஊர்மக்களுக்கு ஹோமியோபதி
வைத்தியம் செய்வதோடு நிற்காமல் அக்கிராம மக்களின் எல்லா அரசு சார்ந்த தேவைகளையும் பூர்த்தி
செய்பவனாகவும் தனஞ்செயன் இருக்கிறான்.
தேர்தலுக்கு முன்பு
கிராமங்களை நகரத்துடன் இணைக்கும் சாலைகள் மிக விரைவில் போடப்படுகின்றன. இதனால் பட்டணத்தில்
பொருட்கள் வாங்கி உள்ளூர் சந்தைகளில் விற்று இலாபம் பார்க்கும் போக்ராமின் தொழில் நசிவடைகிறது.
மேலும் பட்டணத்திலிருந்து பெரு முதலாளிகள் நேரடியாகவே பொருட்களை மக்களிடமிருந்து வாங்கவும்
பல்வேறு நகரங்களிலிருந்து சிறு சிறு முதலாளிகள் தங்களின் பொருட்களை உள்ளூர் சந்தைகளில்
விற்கவும் படையெடுத்து வருவதால் போக்ராமின் வியாபாரம் மொத்தமாகவே நசிந்து போகிறது.
விரக்தியடையும் போக்ராம் குடும்பத்தாரிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறான். இதற்கிடையில்
தேர்தலில் போட்டியிடும் வக்கீல் ஒருவர் போக்ராமை தனக்காக பிரச்சாரம் செய்ய அழைக்கிறார்.
போக்ராமிற்கு புதிய வாசல் ஒன்று திறக்கிறது. நிறைய பணம், பொய், புரட்டு என ஆள் சடுதியில்
மாறிப்போகிறான். மக்களிடம் செல்வாக்கு பெற்ற உள்ளூர் தலைவர் ஒருவரை எதிர்த்து வக்கீல்
நிற்கிறார். தனஞ்செயன் மக்கள் தலைவருக்கு ஆதரவளிக்கிறான். இதனால் போக்ராமிற்கும் தனஞ்செயனுக்கும்
விரோதம் முளைக்கிறது. தேர்தலில் வக்கீலே ஜெயிக்கிறார். போக்ராமிற்கு நிறைய காண்ட்ராக்ட்களை
வழங்குகிறார். போக்ராம் மிகப்பெரும் செல்வந்தனாகிறான். தங்கை வாசந்திக்கு செல்வாக்கான
குடும்பத்திலிருந்து மாப்பிள்ளைப் பார்த்து நிச்சயம் செய்கிறான். வேறு வழியில்லாமல்
வாசந்தி தனஞ்செயனோடு ஓடிப்போக திட்டமிடுகிறாள். ஒரு அதிகாலையில் படகுத் துறையில் அவளை
அழைத்துப் போக தனஞ்செயன் காத்திருக்கிறான். வீட்டைவிட்டு வெளியேறும் வாசந்தி படகுத்
துறையை அடைவதற்கு முன்பு அவள் விரலில் அணிந்திருக்கும் நிச்சய மோதிரத்தை ஒரு கணம் பார்க்கிறாள்.
தாயின் மீதும், குடும்பத்தாரின் மீதும் பாசமும் கடமையும் நினைவை அழுந்த மீண்டும் வீட்டிற்கே
வந்துவிடுகிறாள். அதனால் அவளடையும் வாழ்க்கை மாற்றத்தை சமூக மாற்றப் பின்புலத்தோடு
இந்நாவல் முன் வைக்கிறது.
இந்திய சுதந்திரத்திற்குப்
பின்பான காலகட்டத்தின் கிராம வாழ்வியல் மாற்றங்களை விலாவரியாகப் பேசினாலும் மக்களிடமிருந்த
தீண்டாமை, அறியாமை, பெண்ணடிமைத்தனம் போன்ற இந்தியப் பொது பிரச்சினைகளும் நாவலில் பேசப்படுகின்றன.
பெண் செய்யும் தவறு ஆணையும் குடும்பத்தையும் பலி வாங்கும் என்பது போன்ற நீதிகள் மூத்த
பெண்களின் வாயிலாக இளம் பெண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கற்பு நெறி மிக ஆழமாக பெண்
மனங்களில் பதிய வைக்கப்படுகிறது. வாசந்தியின் கனவணான மதுரா, நற்குணங்களையும் மனைவி மீது
மிகுந்த அன்புள்ளவனாகவும் இருக்கிறான். ஆனால் வாசந்தி தனஞ்செயனோடு ஓடிப்போகத் துணிந்தவள்
என்பதைக் கேள்விப்பட்டவுடன் விரக்தியடைகிறான். மனைவியை வெறுத்து ஒதுக்குகிறான். ஒட்டு
மொத்த சமூகமே தன்னைக் கேலியாக பார்ப்பதாய் கழிவிரக்கம் கொண்டு மடிகிறான். இலட்சியவாதமும்
நேர்மையும் துணிவும் கொண்ட தனஞ்செயன் விதவைக் காதலியை, எல்லாம் இழந்து அநாதரவாய் நிற்கும்
காதலியை, அவளாகவே வரத் துணிந்த பின்பும் ஏற்கத் தைரியமில்லாதவனாய் ஓடிப்போகிறான்.
புதுக்கணவனையும், பிரசவிக்கையில் குழந்தையையும், தாயையும் இழந்த வாசந்தி மாமனார் மாமியார் வீட்டிலேயே
தஞ்சமடைகிறாள். சதா சோனாய் ஆற்றைப் பார்த்தபடியும், ஊர் நிலவரங்களையும் இன்னும் பல வேடிக்கைக்
கதைகளையும் பேசும் வேலைக்காரி மூலம் அவள் பொழுது நகர்கிறது. அவள் வழியாய் தனஞ்செயனோடு
சேரும் முயற்சிகளும் தோல்வியடைய உள்ளூரில் காதலிக்கும் இன்னொரு ஜோடி ஓடிப்போக தன் நகையை
விற்றுப் பணம் கொடுத்து நிறைவடைகிறாள். கிராம இளைஞர்கள் பிழைப்பிற்காய் பட்டணம் நோக்கி
நகரும் மாற்றத்தோடு நாவல் முடிகிறது.
கங்கைப் பருந்தின் சிறகுகள் நாவல் அஸாமி
மொழியில் லக்ஷ்மி நந்தன் போரா என்பவரால் 1963 ஆம் ஆண்டு எழுதப்பட்டிருக்கிறது.
திருமதி துளசி ஜெயராமன் இந்நாவலை 1975 இல் மொழிபெயர்த்திருக்கிறார். Ganga Chilonir
Pakhi என்கிற
நாவலின் பெயரிலேயே 1976 இல் திரைப்படமாக
வெளிவந்தது.
வாசந்தி என்கிற
இளம்பெண்ணின் துயரக் கதை என்கிற ஒரே வரிதான் இந்நாவல் என்றாலும், ஏராளமான வங்க நாவல்களில்,
சத்யஜித்ரே சினிமாக்களில் பேசப்பட்டுவிட்ட கைம்பெண் துயரம் குறித்து பேசும் இன்னொரு
நாவல் என்றாலும் அஸ்ஸாம் போன்ற அதிகம் அறியப்படாத பகுதியின் வாழ்க்கை முறையை, மக்களின்
பண்பாட்டு விழுமியங்களோடு மிக நேர்மையாய் எழுத்தில் கொண்டுவந்தமைக்காக இந்நாவல் மிக
முக்கியமான இடத்தைப் பெறுகிறது. வாசந்தி தனஞ்செயன் மீது காதல் வயப்படும் முற்பகுதி
எனக்குப் பல குறுந்தொகைப் பாடல்களை நினைவுபடுத்தின. இயற்கையும் காதலும் படபடப்பும்
துயருமாக இந்நாவலின் காதற்பகுதிகள் எழுதப்பட்டிருக்கின்றன. நாவலின் தலைப்பு இருத்தலியல்
சார்ந்த படிமமாக துலக்கப்படுகிறது. தலைப்பிற்கான பொருத்தமாய் நாவல் இப்படியாய் முடிகிறது
பருந்தின் சிறகுகளில் ஆறு பருவங்களின் வர்ண ஜாலங்கள் நிரம்பியிருந்தன. உயிர் வாழும் ஆசை மிகவும் தீவிரமாக அப்பருந்தின் சிறகுகளில் படபடத்தது. சோனாய் நதியின் மீது மேலும் கீழுமாகப் பறந்து செல்லும் கங்கைப் பருந்து நதியில் மீன் நீந்துவதற்கான சைகை காட்டியது கங்கைப் பருந்தின் சிறகுகள் படபடக்க அதன் காற்று வாசந்தியின் உடலிலும் பட்டது. ஆனால் அந்தக் காற்று அசைவற்று நின்றுவிட்டது. அழகிய சோனாய் நதி எப்போதும் போல் பாய்ந்து கொண்டேயிருந்தது.
No comments:
Post a Comment