Saturday, May 25, 2013

ஓநாய் முயல் மற்றும் நரி


1.

பனித் துண்டங்கள் சூறைக் காற்றில் அலைந்து கொண்டிருந்த அகாலத்தில் சாலையோர மரவீட்டின் கதவு தட்டப்பட்டது. ஓநாய் தோலாடையணிந்தவள் கதவைத் திறந்து இடுங்கிய கண்களால் உற்றுப் பார்க்கிறாள். பனி பூத்திருந்த பூட்ஸ் கால்களோடும் மூச்சிழுப்புகளோடும் கரடித் தோலணிந்த ஒருவன் நடுங்கிச் சிரிக்கிறான். தலையசைப்பிற்குப் பின் உள்ளே வருகிறான். அறை நடுவில் எரிந்து கொண்டிருந்த தீயின் தணல் கூடுகிறது. வோட்கா புட்டி அவன் தொண்டைக்குள் சரிகிறது. கரையும் பனி நிமிடங்களுக்கிடையில் மிகலேவிச் என் பெயர் என்றபடி மஞ்சள் பற்களால் சிரிக்கிறான். அவள் திடுக்கிடுகிறாள். அவனை உற்றுப் பார்க்கிறாள்.பின் ஆடைக்குள் வைத்திருந்த குறுவாளினை அவனறியாமல் எடுத்து கைகளுக்குப் பின்னால் மறைத்துப் பிடித்துக் கொள்கிறாள். இப்போது இரவை நகர்த்தவும் அவளைக் கிளர்த்தவும் வரிசையாய் சாகஸக் கதைகளைச் சொல்லத் துவங்கியவனை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

அவன் மீண்டும் புட்டியை தொண்டைக்குள் சரிக்கும் நொடி

அவளுக்கானது.


- Inspired from coen brother’s ‘A serious Man’



2.

ஒவ்வொரு இதழ் முத்தத்திற்கும்
சின்னச் சிணுங்கலோடு
கண்ணாடி வளையல்
குலுங்க
உதடுகளை அழுந்தத்
துடைத்துக் கொள்வாள்
துடைக்கத் துடைக்க
என்னிலிருந்து
முத்தம் சுரந்து கொண்டிருக்கும்
நேற்று 
தன் சின்னஞ்சிறு முன்னங்கால்களால்
முகத்தை சதா துடைத்தபடியிருந்த
வெண்முயல் ஒன்றை
கண்ணாடியறைக்குப் பின்னாலிருந்து
பார்த்தேன்
முயல்களுக்கு
கொம்புகளோ, றெக்கைகளோ
முளைக்காதென்பதும்
முயல்கள் ஒருபோதும் 
நரிகளாகாதென்பதும்
நியதியாயிருப்பது
நிம்மதியைத் தந்தது
ஒரு கணம்
ஒரே ஒரு கணம்
விலங்குப் பண்ணையிலிருந்து
நரியொன்று வெளியேறியதை
கண்ணாடியும் நானும் பார்த்தோம்

No comments:

Featured Post

test

 test