Wednesday, May 15, 2013

இயற்கையின் மீது வரையப்பட்ட சித்திரம் : நீலகண்டப் பறவையைத் தேடி நாவலை முன் வைத்து..இந்நாவலை வாசித்திருக்கக் கூடாதுதான். வாசித்துதான் முடித்துவிட்டோமே எனக் கடந்து போயிருக்கவேண்டும். இரண்டுமே நடந்திருந்தால் நான் எழுத ஆரம்பித்திருந்த மூன்று குறுநாவல்களை முடித்திருப்பேன்.  ஆனால் இம்மூன்றுமே நிகழவில்லை. இந்நாவல் முழுமையாக என்னுடைய ஆறு மாதத்தைத் தின்றது. ஏன், இதை எழுதிவிட வேண்டும் என்ற எண்ணம் உதித்த பிறகு கூட மேலோட்டமாக வாசிக்க ஆரம்பித்ததுதான்..  ஒரு வார்த்தை கூட எழுதாமல் மீண்டும் நாவலில் மூழ்கிப் போனேன். வேறெதிலேயும் கவனத்தைக் குவிக்காது திரும்பத் திரும்ப இந்த நாவலின் வெவ்வேறு பக்கங்களில் ஆரம்பித்து, அந்நாளின் என் கைக்குள் இருக்கும் நேரத்தின் கடைசி நிமிடம் வரை கதை நிகழும் காலத்திற்குள்ளும் பிரதேசத்திற்குள்ளும் தொலைந்து போகிறேன்.

இக்கதைப் பரப்பிற்குள் அலைவதை நிறுத்தவே முடியவில்லை. சமீபமாய் என்னை சந்தித்த நெருக்கமானவர்களிடம் இந்நாவல் குறித்து சதா பேசிக்கொண்டேயிருந்தேன். எது என்னை இப்படி பைத்தியமாக்கியது? இந்த நாவலின் எந்த தன்மையில் நான் கிறங்கிப் போனேன்? என்பதை மிகச்சரியாக என்னால் சொல்லிவிட முடியாது. ஆனால் இந்த நாவல் தந்திருக்கும் பிரம்மிப்பிலிருந்து ஓரளவிற்கு நிதானமாகி இதன் பிரம்மாண்டங்களைக் குறித்து பேசிவிடவேண்டுமென்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

அதீன் பந்த்யோபாத்யாய வினால் 1971 இல் எழுதப்பட்ட நாவலிது. அதீன் கிழக்கு வங்காளம் டாக்கா மாவட்டத்திலிருக்கும் ராயினாதீக் என்ற சிற்றூரில் பிறந்தவர். நாவல் நிகழும் களமும் கிழக்கு வங்கம்தான் என்பதால் அதீனின் இளமைக்கால நினைவுகள் இந்நாவல் செழுமையாகவும் துல்லியமாகவும் வடிவம் பெற உதவியிருக்கலாம். எந்த ஒரு படைப்பாளிக்கும் தான் பிறந்துவளர்ந்த சூழலும் இளம்பிராயத்து நினைவுகளை பொதிந்து கொண்டுள்ள பின்னணியும் படைப்புருவாக்கத்திற்கு மிகவும் இலகுவானதாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் டாக்கா மாவட்டத்திலிருக்கும் ஸோனாலி பாலி ஆற்றின் கரையோரத்திலிருக்கும் கிராமங்களில் நிகழும் கதை. பிரிவினைக்கான துவக்கப்புள்ளிகள் தென்பட ஆரம்பிக்கும் காலகட்டத்தில் இந்நாவல் மகிழ்ச்சியாய் தளும்பி, மெல்ல  லீக் மற்றும் இந்துத்வ அமைப்புகள் முள் விட்டுச் செழித்து கலவரங்கள் வெடிக்கும் காலகட்டத்தில் பதபதைப்புடன் முடிந்து போகிறது.
சாமான்யர்களின் வாழ்வைத் தலைகீழாக்கும் அரசியல் மற்றும் மத நிலைப்பாடுகளின் சிறுமைகளோடு, மனிதத்தின் உச்சத்திற்கும் வீழ்ச்சிக்குமிடையில் ஊசலாய் இந்நாவல் பயணிக்கிறது. ஸோனாலிபாலி ஆற்றின் ஒரு பக்கம் இந்துக்களும் இன்னொரு பக்கம் முஸ்லீம்களும் வாழ்கிறார்கள். இந்துக்களான டாகுர்கள் செல்வ செழிப்பு மிகுந்தவர்கள். நில உரிமையாளர்கள். ஆசாரம் மிக்கவர்கள். முஸ்லீம்களோ ஏழைகள். நிலமற்றோர். செழிப்பு மிகுந்த பகுதியில் வறுமையில் வாடுவோர். தீண்டாமை மிக உக்கிரமாக இருந்தது. முஸ்லீம்கள் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டனர். இவ்விரு குடியிருப்பில் வாழும் மனிதர்களின் யதார்த்த வாழ்வு, மனச்சிக்கல்கள், நிலவும் அரசியல், மதம் உருவாக்கும் நெருக்கடி, தனி மனிதக் கொண்டாட்டம், மனங்களின் சிதைவு, அதைத் தொடர்ந்து நிகழும் அவலம் என மனித வாழ்வின் எந்த ஒரு உணர்வையும் / நிகழ்வையும் விட்டுவிடாமல், துளி கூட பிசகாமல் ஒட்டு மொத்த தோற்றத்தையும் இந்நாவல் நம் கண் முன் கொண்டு வருகிறது.

வரலாறும், மதமும் எழுத்தாளருக்கு மிக நெருக்கடியான மனநிலையை உருவாக்கும் தளங்கள். எழுத்தாளரின் சார்பு அல்லது  நிழல் படைப்பின் மீது விழுந்துவிடுவதற்கு எல்லா சாத்தியங்களுமுள்ள களங்கள். என்னதான் படைப்பாளியாக இருந்தாலுமே கூட எல்லாவற்றையும் முழுமையாக அனுகிப் பார்க்கும் மனப்பான்மையைப் பெறுவது கடினம். அதீன் இதை முழுமையாகக் கடந்திருக்கிறார். முழுக்க முழுக்க படைப்பவனின் மனநிலையில் இயங்கியிருக்கிறார். நாவல் வாசிப்பின் இன்னொரு வகையான அரசியல் வாசிப்பு கொண்டிருப்போருக்கும் இந்நாவல் பெரும் ஆச்சரியத்தையோ அல்லது ஏமாற்றத்தையோ தரலாம். என்னுடைய முதல் வியப்பு இந்நாவல் எவ்வித சார்புத் தன்மையுமில்லாமல் முழுப்படைப்பாக பரிணமித்திருப்பிலிருந்து துவங்குகிறது.

இரண்டாவதும் மிகப் பிரம்மாண்டமானதாகவும் நான் நினைக்கும் அம்சம் இந்நாவலில் பின்னிப் பினைந்திருக்கும்  இயற்கையின் இருப்பு. முன்னுரையில் நிகிலேஷ் குஹா குறிப்பிட்டிருப்பது போல இந்தியக் கலையின் சிறப்பு அது இயற்கையுடன் கொண்டுள்ள உறவாகத்தான் இருக்கிறது. நீலகண்டப்பறவையைத் தேடி இயற்கையின் மீது வரையப்பட்ட சித்திரமாகத்தான் வடிவம் பெற்றிருக்கிறது. இந் நாவலில் இடம்பெறும் பூக்கள், மரங்கள், பறவைகள், பெயர்களை தனியே எழுதி வைத்துக் கொண்டு அவற்றை புகைப்படங்களாய், இயன்றால் நேரில் பார்த்துவிட விருப்பம் கொண்டேன். முதலில் நீலகண்டப் பறவையையே நான் பார்த்ததில்லை. நண்பர்களின் உதவியுடன் இணையப்பக்கங்களில் தேடி அச்சிறுபறவையின் கம்பீர அழகை புகைப்படமாகக் கண்டேன்.


இந்நாவலில் இடம்பெற்றிருக்கும் ஹாட்கிலாப் பறவை, செங்கடம்பு மரம், கட்டாரி மரம்/பழம், பிரம்புக் கொழுந்து, கிரெளஞ்சப் பட்சி, மட்கிலாக் காடு, தர்மூஜ் பழம்/ வயல், எண்ணற்ற மீன் வகைகள் (சேலா,டார்க்கீனா,பூண்ட்டி), ஆமைகள், அரசமரம், ஆலமரம்,கல்யாண முருங்கை, வெள்ளைக் கொக்கு, மைனா, இலவமரம், அல்லி/அல்லிக்கிழங்கு, மின்மினிக் கூட்டம், மஞ்சத்தி மரம், பலிசப்பழம், மகிழ்மரம், பாக்குத் தோப்பு, சடுயிமரக்காடு, மரங்கொத்தி, பூனையவரைக்க்கொடி, வெற்றிலைக்கொடி, கள்ளிச்செடி, போன்னா மரங்கள், பிறப்பம்பழம், சாத்பாயி-சம்ப பறவைகள், காகம், மைனா, முதலை, உடும்பு, பருந்து, கோரைப்புல்காடு, சீதாப்பழமரம், தாமரை, பவழமல்லிமரம் என இன்னும் இன்னும் பட்டியலிட பட்டியலிட வந்துகொண்டேயிருக்கின்றன. அதீன் இந்தப் பூமியில் வசிக்கும் அத்தனை இயற்கை அழகையையும் மொத்தமாய் வாரி சுருட்டி இந்நாவலில் பொதிந்து வைத்திருக்கிறார். பக்கங்கள் பிரிக்கப் பிரிக்க ஒவ்வொரு அழகும் தனக்கே தனக்கான அடையாளங்களோடு மிகத் துல்லியமாய் வெளிப்படுகின்றன.

பருவ காலங்கள், அக்காலங்களுக்கேற்ற இயற்கையின் காட்சி மாற்றம், மனிதர்களின் மனநிலை என இந்நாவல் இயற்கையின் ஆதாரத்திலிருந்து வேர் விட்டிருக்கிறது. சுற்றிலும் ஏரிகள், ஆறுகள், குளங்கள், மரங்கள், பட்சிகள், வயல்கள் என செழித்த பிரதேசமாக இருந்தாலும் ஒரு பகுதி மக்கள் பசியால் வாடினர். மதமும் தீண்டாமையும் அத்தனைப் பசுமையிலும் மனிதர்களை வறிய நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. அதுவே கலகங்கள் ஏற்பட ஆதாரமாய் இருந்தது.

பைத்தியக்கார டாகுர் என்றும் பெரிய பாபு என்றும் அழைக்கப்படும் மணீந்திரநாத் நாவலின் தலைப்பிற்கான காரணமாய் அமைகிறார். பண்பாட்டைக் காரணம் காட்டி அவரது காதல் மறுக்கப்படுகிறது. அந்த ஏக்கம் அவரைப் பைத்தியமாக்குகிறது. காலம், அகாலம் என்றில்லாமல் அவர் சதா தன் காதலியைத் தேடி அந்நீர்சூழ் வெளியெங்கும் அலைகிறார். அவரது சகோதரர்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறார்கள். அந்த ஊரின் மதிப்பும் செல்வாக்கும் வாய்ந்த குடும்பம். அக்குடும்ப மனிதர்கள் மீது சுற்று வட்டாரத்திலிருக்கும் எல்லா மனிதர்களுக்கும் தனி வாஞ்சையும் அன்பும் மிகுந்திருக்கிறது. குறிப்பாக மணீந்திரநாத் மீது அனைத்து தரப்பு மனிதர்களுக்கும் தனி அன்பும் அக்கறையும் உள்ளது.

மணீந்திரநாத்தின் சகோதரனான தனபாபு விற்கு ஸோனா பிறக்கிறான். அத்தகவலை வெளியூரில் வேலை பார்க்கும் தனபாபுவிற்கு சொல்ல ஈசம் செல்வதிலிருந்து நாவல் துவங்குகிறது. நாடோடிக் கதைகள், பேய்பிசாசு பயங்கள்,அழகியல் வர்ணிப்புகளோடு துவங்கும் ஆரம்ப அத்தியாயத்தில் விழுந்து விட்டால் திரும்ப மீள்வது கடினம்.

இன்னொரு பிரதான பாத்திரம் மாலதி. இளம் விதவை. டாக்காவில் நடந்த மதக்கலவரத்தில் அவளது புதுக்கணவன் கொல்லப்படுகிறான். வனப்பின் ஒப்பணை கலையாது கிராமம் திரும்பம் மாலதி எதிர்கொள்ளும் உடல்/மன சவால்கள் முழுக்கப் பெண் பார்வையில் சொல்லப்படுகின்றன (சுய இன்பம் உட்பட)

குழந்தை சோனா நாவலின் நாஸ்டால்ஜிக் பிம்பம். பால்யத்தின் அத்தனை அற்புதங்களும் சோனாவின் வழியாய் பதிவாகி இருக்கிறது. இந்நாவல் நான்கு தலைமுறை காலகட்டங்களை பதிவு செய்திருக்கிறது முறையே பெரியவர் மகேந்திரநாத், மணீந்திரநாத், மாலதி, சோனா ஆகியோர் வழியே காலத்தின் மாற்றங்களும் மக்களின் மன இயல்புகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

பண்பாடு, தத்துவம், தரிசனம், காதல், காமம், குழந்தமை,இளமை யாவும் இப்பாத்திரங்களின் வழியே – இந்துக் குடியிருப்பின் வழியே- இயற்கையின் பெரும் கருணையுடன் பதிவாகிவிட்டது. இதற்கு அப்படியே எதிரான வறுமை, பசி, துயரம், விளிம்பு வாழ்வின் கொண்டாட்டம், கலகம், மீறல், களிப்பு யாவும் முஸ்லீம் குடியிருப்பின் வழியாய் சாத்தியமாகி இருக்கிறது. டாகுர் குடும்ப வேலைக்காரன் ஈசம், சடுகுடு வீரன் பேலு, ஆன்னு, ஆபேத் அலி, ஜலாலி, ஜோட்டன், பக்கிரி சாயபு, ஹாஜி சாயபு அவர் மூன்று பீவிக்கள், இளைஞர்களான ஜப்பர், சம்சுதீன் போன்றோரின் வாழ்வு விலாவரியாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆக இதில் சொல்லப்படாத தன்மை எதுவுமே இல்லை. ஒரு முழுமையான நாவல் என்பதற்கான மிகச் சரியான உதாரணமாக நீலகண்டப்பறவையைத் தேடியை சொல்லலாம்

என்னை ஈர்த்த அடுத்த அடுத்த விஷயம் இந்த நாவலின் கட்டமைப்பு. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒவ்வொரு தன்மையைக் கொண்டிருக்கின்றன. ஒரு சமூகத்திற்கான/பிரச்சினைக்கான அடையாளமாக ஒரு கதாபாத்திரத்தை முன் நிறுத்துவது. இப்படியாய் அனைத்து தரப்பையும் பிம்பங்களாக உருவாக்கிவிட்டபின் சம்பவங்களை நிகழ்த்துவது. பின்பு அதன் விளைவுகளை சொல்வது. இப்படியாய் காரணம் விளைவு மற்றும் இவ்விரண்டிற்குமான நியாயங்களை எந்த பிசகுமில்லாமல் பதிவு செய்வது. மிக முக்கியமாய் காலகட்டத்தை உருவாக்குவது. அக்காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றை வரலாற்றுப் பிசகில்லாமல் முடிந்தவரை நேர்மையாக சொல்வது இந்த மொத்த விஷயங்களும் சொல்லப்படும் சூழலை உருவாக்குவது. சூழலின் கண்ணாய் மாறி தென்படும் அத்தனையும் முழுமையாய் பதிவு செய்வது. இவை எல்லாமும் அடுக்கடுக்காய் நீலகண்டப்பறவையைத் தேடியில் சாத்தியமாகி இருக்கிறது

நாவலில் பல உணர்ச்சிகரமான நிகழ்வுகள்/ காட்சிகள் வருகின்றன. அவை அழகியலின் உச்சம் எனக் கொண்டாடத்தக்க மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. ஆபேத் அலி யின் மனைவி ஜலாலி ஒரு குளிர்காலத்தில் அல்லிக் கிழங்கு பறிக்க ஏரிக்குப் போகிறாள். உணவுக்கு மிகவும் தட்டுப்பாடான காலம் என்பதால் அல்லிக் கிழங்கும் கிடைக்காமல் போகிறது. பசியின் உந்துதலில் மிகவும் ஆழமான பகுதிக்கு நீந்திச் செல்பவள் ராட்சசக் காஜர் மீனால் கொல்லப்படுகிறாள். அந்தி சாய்ந்துவிட்ட பிறகு தனியே மிதக்கும் அவள் கூடையை வைத்துதான் அவளை ஏரி விழுங்கிவிட்டதை கிராமம் அறிகிறது. ஆபேத் அலியும் அவர்களின் மகன் ஜப்பாரும் ஊரில் இல்லை. அந்தக் காட்சி இப்படித் துவங்குகிறது

ஏரியில் மிதக்கும் கூடை அசையாமல் நின்றது. காற்று அடங்கிவிட்டது.தாமரை இலைகள் அந்தக் கூடையைத் தடுத்து நிறுத்திவிட்டன. அஸ்தமிக்கும் சூரியனின் ஒளியால் தண்ணீர் ரத்தம் போல, பிறகு வெளிர் சிவப்பாக, பிறகு கொஞ்சங் கொஞ்சமாக சிவப்பு நிறம் மங்கி நீலமாகிவிட்டது. பிறகு பசுமை நிறம்,பிறகு கறுப்பாகிவிட்டது. தண்ணீர் சலனமற்று இருந்தது. அதில் குமிழி கூட எழவில்லை. குளிர் காரணமாக மீன்களுக்குக் கூட அசைய துணிவு பிறக்கவில்லை.

பைத்தியக்கார டாகுர் சொன்னார். “கேத்சோரத்சாலா

ஜலாலியைத் தேடி தோடர்பாக் இளைஞர்கள் நீரில் அங்கும் இங்குமாக ஆனால் பத்திரமாக மூழ்கி எழுகின்றனர். இரவு,சடலம் குறித்தான பயம் அவர்களிடையே இருக்கிறது. பைத்தியக்கார டாகுர் துர்கா பூஜைக்கு காவு கொடுக்கப்பட்ட எருமை மாட்டின் தலையுடன் பேசிக் கொண்டிருக்கிறார். எருமை மாட்டின் தலை கடவுள், மதங்கள், சம்பிரதாயங்கள் பெயரால் பலி மாதிரியான அக்கிரமங்கள் நிகழ்வதை உக்கிரமாய் அவருடன் விவாதிக்கிறது. அத்தலை ஒரு வெளவாலாய் மாறி ஏரியின் மீது பறக்கிறது. அத்தலைக்கு சிறகுகள் முளைக்கின்றன. டாகுர் அதனுடன் பேசுவதை நிறுத்திவிட்டு  ஏரியில் ஒரு மனிதர் மூழ்கிவிட்டதை உணர்ந்துகொண்டு ஏரியில் பாய்கிறார். ஜலாலியின் சடலத்தோடு மேலேழுபவருக்கு காட்சிகள் மாறிப்போகின்றன. தோளில் இருக்கும் சடலத்தை தன்னுடைய காதலி பாலின் என நினைத்துக் கொள்கிறார். எதிரே விரிந்திருக்கும் சூனிய வெளியை போர்ட் வில்லியசம்சாகவும் ஆங்கிலேய சிப்பாய் கூட்டம் பாலினை அவரிடமிருந்து பிரித்துக் கூட்டிக் கொண்டு போக வருவதாகவும் நினைத்துக் கொண்டு ஓடத் துவங்குகிறார். அவர்கள் மதப்படி ஜலாலியின் உடலை இந்நிலையில் அவளது கணவன் கூட பார்க்கக் கூடாது. ஆனால் இவர் தோளில் தூக்கிக் கொண்டு ஓடுகிறார். மொத்த கூட்டமும் திகைத்து அவரை வளைத்து நெருங்குகிறது. சாமு அவரிடம் போய் சின்னம்மாவை கொடுங்க எனக் கேட்கிறான். டாகுர் மிக சாதுவாய் சடலத்தை ஒப்படைக்கிறார்.

நாவலில் வரும் மிக உணர்ச்சிகரமான காட்சிகளில் இந்தப் பகுதி முதலாவது.

அடுக்கடுக்காய் ஏராளமான சம்பவங்கள். திருவிழாக் கலகம் விவரிக்கப்படும் முறை இன்னொரு உச்சம். சிறுவன் சோனாவைத் தவறவிட்ட ஈசமின் பதபதைப்பும் பயமும் நம்மையும் தொற்றிக் கொள்ளும். கலகங்களுக்கு முன்பு - லீக் மற்றும் ஆர் எஸ் எஸ் தேவைகளுக்கு முன்பு- மக்களிடையே ஒரு இணக்கம் இருந்தது. பைத்தியக்கார டாகுரை பத்திரமாய் பார்த்துக் கொள்வதை தங்களது கடமையாகவே மொத்த முஸ்லீம் குடியிருப்பும் உணர்கிறது. மாலதி யின் இளம் பிராயத்து தோழர்களான சாமுவும் ரஞ்சித்தும் முறையே லீக் மற்றும் இந்துத்வ பிடிகளில் விழுகின்றனர். சாமு கிராமம் முழுக்க போஸ்டர் ஒட்டுகிறான். மக்களைத் திரட்டி கூட்டம் போட்டு அவர்களின் வறிய நிலைக்கான காரணம் இந்துக்களே என கற்பிக்கிறான். அதன் வழியாய் இந்துக்கள் மீது வன்மம் எல்லோருக்கும் முளைவிட காரணமாகிறான். ரஞ்சித் ஏற்கனவே தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறான். அதன் நீட்சியாய் சில காலம் கிராமத்தில் வந்து தங்கியிருக்கிறான். முஸ்லீம்களிடமிருந்து காத்துக் கொள்ள பெண்கள் சிறுவர் உட்பட அனைவருக்கும் இரவில் ரகசியமாய் கத்திப் பயிற்சி மற்றும் சண்டைகளை கற்றுத் தருகிறான். இந்தத் தீவிரங்களை நீக்க சோனாவின் பால்யம் இடையிடையே மிக விஸ்தாரமாய் சொல்லப்படுகிறது. இந்துச் சிறுவர்கள் மனதில் ஆழமாய் தீண்டாமையை நுழைப்பதை சோனாவின் வழியாய் டாகுர் குடும்பப் பெண்கள் வழியாய் சொல்லப்படுகிறது

நாவலின் இன்னொரு சுவாரசியப் பாத்திரம் ஜோட்டன். மூன்று கல்யாணம். பதினாறு குழந்தைகள் ஆனாலும் உடம்பிற்கு வரி கொடுக்க ஏங்கும் நாற்பது வயதுப் பெண். நான்காவதாய் பக்கிரி சாயபு வந்து அழைத்துப் போவார் எனக் காத்திருக்கிறாள். ஓர் இரவில் டாகுர் வீட்டில் வெகுநாட்களுக்குப் பிறகு நல்ல சாப்பாடு சாப்பிட்டுவிட்டு நீரில் நீந்தித் திரும்ப வருபவள் வழியில் அவளின் சம வயது மன்சூரைப் படகில் வைத்து சந்திக்கிறாள். கேலியும் கிண்டலுமான பேச்சு கலவியில் முடிகிறது. ஒருநாள் பக்கிரி சாயபு வந்தே விடுகிறார். அவருடன் ஜோட்டன் கிளம்பிப் போய் தொலை தூரம் நடந்து ஒரு இடுகாட்டில் வசிக்கிறாள். மனம் முழுக்க காதலுக்காகவும் நல் உணவிற்காகவும் ஏங்கும் தூய ஆத்மா ஜோட்டன். கதையில் நிகழும் பயங்கரங்களில் ஒன்றான மாலதி சிதைக்கப்படும் தருவாயில் அவளை ஜோட்டன் தான் மீட்கிறாள். இறுதியாய் ரஞ்சித்தோடு வெளியேறும் மாலதி அவனோடு தொடர்ந்து போக முடியாத நிலை வரும்போது ஜோட்டனிடம் கொண்டு போய் தன்னை விடச் சொல்வதோடு நாவல் முடிந்துபோகிறது.

மாலதியைக் காப்பாற்றி அவளது வீட்டாரிடம் பக்கிரி சாயபு ஒப்படைக்கும் காட்சியும் ஜலாலியை டாகுர் மீட்டெடுக்கும் காட்சியும் மனித நேயத்தின் ஆழமான தரிசனங்கள். இந்த நேயம் ஆதாரமாக, நாவலின் மைய்யமாக எல்லாப் பக்கங்களிலும் படர்ந்திருக்கிறது. சம்பவங்களின் விநோதக் குழம்பலே பல திரிபுகளுக்கான காரணங்களாக அமைந்துவிடுகின்றன. டாகுர் குடும்ப உறவுகள், திருவிழாக்கள், படோபகங்கள், சோனாவின் உறவுக்கார சிறார்கள் அவர்களிடையே நிலவும் சம்பாஷனைகள், போன்றவை மிக விஸ்தாரமாக சொல்லப்பட்டிருக்கும் பகுதி மட்டுமே சற்று அலுப்பாக இருக்கிறது. ஆனால் பைத்தியக்கார டாகுர் பாத்திரம் இந்த அலுப்பை சமன் செய்துவிடுகிறது.

ஒரு மழை கொட்டும் மாலையில் இரண்டு நாட்களாக வயிற்றில் உணவு விழாத ஜலாலி, மாலதி வளர்க்கும் வாத்துகளில் ஒன்றைத் திருடி வறுக்க வழியில்லாமல் சுட்டுத் தின்னும் பகுதி, முஸ்லீம் குடியிருப்பிற்கு பைத்தியக்கார டாகுர் வந்து எல்லாரையும் பார்த்துவிட்டு போவதும் அவருக்கு ஊரே தங்களிடமிருப்பதைக் கொடுத்து அனுப்பும் பகுதி, சோனாவும் பாத்திமாவும் தொலைந்து போகும் பகுதி, யானை மீதேறி டாகுர் தொலைந்து போகும் பகுதி, என எழுத் எழுத நினைவிலிருந்து அற்புதமான காட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்நாவலின் முதல் பதினெட்டு அத்தியாயங்கள் பதினெட்டு தனித் தனி சிறுகதைகளாக எழுதப்பட்டனவாம். பின்பு முழு நாவல் வடிவமாக வந்திருக்கிறது. அதீன் இந்த நாவலை எழுத பத்துவருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். 1961 லிருந்து 1971 வரைக்குமான காலகட்டத்தை இந்நாவலுக்காக செலவிட்டிருக்கிறார்.
இந்நாவல் வாசித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென முடிந்து போனது. எல்லாமே அந்தரத்தில் நின்றுவிட்டதைப் போன்ற தோற்றம் நாவலை வாசித்து முடித்த இரண்டு நாட்களுக்கு இருந்து கொண்டிருந்தது. பின்பு இணையத்தில் தேடிப்பார்த்ததில் நீலகண்டப் பறவையைத் தேடி இவர் எழுதிய Trilogy யான Nilkantha Pakhir Khonje, Aloukik Jalajan and Ishwarer Bagan யின் முதல் பாகம் மட்டுமேதான் எனத் தெரியவந்தது. மற்ற இரண்டு நாவல்களும் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்படவில்லை. இவரைப் பற்றிய விக்கி பக்கமும் ஏனோ தானோ வென்று இருக்கிறது Panchashati Galpo என்கிற சிறுகதைத் தொகுப்பிற்காக 2001 இல் சாகித்ய அகடாமி விருதைப் பெற்றிருக்கிறார். இந்நாவலை மொழிபெயர்த்திருப்பவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி. வாசிப்பிற்குத் தடையில்லாத சிறப்பான மொழிபெயர்ப்பு.

இரவுக் காட்சியை விவரிக்கும் பகுதியில் இந்த வரி வரும் “உலகம் முழுதும் நிலவில் முழுகிக் குளிக்கும்போது ஆழமான நீரில் முழுகிச் சாக ஆசை யாருக்குத்தான் ஏற்படாது?” இதை வாசிக்கும்போது உதட்டில் சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டது. நீரில் மூழ்கிச் சாவதைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். காலம், பிரதேசம், பேதங்கள் எல்லாம் தாண்டிய பொது பைத்தியம்மட்டும்தான். இந்தப் பைத்தியத்தன்மையின் சாரம் ஒன்றே ஒன்றுதான் அது சகலத்திலும் ஆழத்தைத் தேடும், இதில்லை இதில்லை எனக் கதறியபடி உச்சம் நோக்கி ஓடும். இந்நாவலை எழுதியவரின் பெயரைக்கூட என்னால் சரியாக உச்சரித்துவிட முடியாது. இவர் காட்சிப்படுத்தியிருக்கும் உலகத்தை கற்பனையில் கூட கண்டதில்லை. ஆனால் நானும் இவரும் ஒரே பைத்தியக் குழாமாகத்தான் இருக்க முடியும். இந்த எண்ணம் உதித்த நிமிடம் பயங்கர இறுமாப்பாக இருந்தது. நாவலின் தலைப்பாக இடம்பெற்றிருக்கும் நீலகண்டப்பறவை நாவலில் ஒரு இடத்தில் கூட வரவில்லை. நாவலிலேயே இடம்பெறாத பறவை ஏன் தலைப்பில் வந்தது? என யோசித்துக் கொண்டிருந்தேன். பிறகு மெதுவாய் பைத்தியங்கள் என அறியப்படுவோர் தேடுவது, எப்போதும் எளிதில் தட்டுப்படாதவற்றைத்தானே என மன சமாதானம் செய்து கொண்டேன்.

No comments:

Featured Post

test

 test