திருச்சூரிலிருந்து
குருவாயூர் செல்லும் சாலையில் 13 ஆம் கிமீ யில் விலகி
உள்நுழைந்த வாகனம் அடர்ந்த இருளில் ஒற்றைப் பாதையில் முண்டூர் கிராமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. கேரளம்
எட்டுமணிக்கெல்லாம் தூங்கிவிடுகிறது. பத்துமணிக்கு சாலையில் ஒன்றும் இல்லை. அந்த சாலை
இருப்பதே கூட காலையில்தான் தெரிந்துகொள்ள முடிகிறது. பல வளைவுகளுக்குப் பிறகு ஒரு பெரிய
தோப்பை வந்தடைந்தோம். உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கு நடுவில் இரண்டு வீடுகள்.
கேரளப் பாரம்பரிய வீடுகளில் ஒன்றான நாலுகட்டில் வீடொன்றும் மண்ணால் மட்டுமே கட்டப்பட்ட
கெஸ்ட் அவுஸ் ஒன்றும் எங்களுக்காய் காத்துக் கொண்டிருந்தது. வீட்டிற்கு சொந்தக்காரரான
திவாகரன் திருவண்ணாமலையில் ஜெயஸ்ரீ வீட்டில் இருந்தார். அவர் மகன் தன் நண்பர்கள் சகிதமாய்
எங்களை வரவேற்றான். அந்த இரவில் பயணக்களைப்பையும் மீறி அடுத்த இரண்டு மணி நேரம் நாங்கள்
யாருமே தூங்கவில்லை. அந்த இரண்டு வீடுகளின் நேர்த்தியை அங்குலம் அங்குலமாய் சிலாகித்துக்
கொண்டிருந்தோம். , முற்றத்து மாடம்,
கல்தூண்கள் குறிப்பாய் அந்த
மண்வீடு பற்றி திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருந்தோம். மண் வீட்டை எப்படிக் கட்டினோம்
எவ்விதம் இவ்வளவு அழகாய் வந்தது என்பதை பத்தாவது முறையாக ஒரே பதிலை சலிக்காமல் ஆர்வமுடன்
அப்பதின்மன் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.
காலைச் சூரியன் தான்
அந்த தோப்பின், அந்தப் பழைய வீட்டின்
முழு அழகையும் எங்களுக்கு உணர்த்தியது. அந்த வீட்டின் மாடியின் மீது நின்று கொண்டு
ஜெயஸ்ரீ தந்த தேநீருடன் மரங்களுக்கு இடையில் மேலெழும் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
பவா அதிகாலையிலேயே வெட்டுக்கல் குறித்த ஆராய்ச்சியில் இறங்கிவிட்டிருந்தார். கேரளத்தின்
அழகான வீடுகள் எல்லாமும் வெட்டுக்கல்லில் தான் கட்டப்படுகின்றன. அல்லது வெட்டுக்கல்லால்
கட்டப்படும் எல்லா வீடுகளும் தனித்த அழகைக் கொண்டிருக்கின்றன. இக்கற்கள் எங்கே கிடைக்கும்
எப்படித் திருவண்ணாமலைக்குக் கொண்டுபோவது என கேட்கப்போன பவா தன் வாசகரோடு திரும்பவந்தார்.
தேசாபிமானியில் பவா எழுதிய தொடரைப் படித்திருந்த ஒரு முதிர்ந்த வாசகர் பவாவைக் கண்டுகொண்டு
அவரோடு பேசிக்கொண்டே வீடுவந்தார். அந்த வீட்டின் சூழலோ என்னவோ எல்லாருமே நிறைவாய் பேசிக்கொண்டிருந்தோம்.
தூண்களுக்கு சமீபமாய் அமர்ந்துகொண்டு சந்துரு தோழர் கோழிச் சண்டைக் கதைகளை விலாவரியாய்
சொல்லிக் கொண்டிருந்தார். அது ஆடுகளம் படத்தை ஒட்டிய நுட்பமான விவரிப்பாய் நீண்டு கொண்டிருந்தது.
பவாவின் முதிர் வாசகர் எங்களை அவர் வீட்டிற்கு அழைத்தார். தன் சகோதரனும் மலையாளத்தில்
எழுதுபவர்தான் என்றார்.
எல்லோருமாய் கிளம்பி
அவர் வீட்டிற்குப் போனோம். மிகச் சாதாரணமான அந்த வீட்டு முகப்பைத் தாண்டி உள்நுழைந்தோம்.
பிரதான வீட்டின் முற்றத்தில் சாய்வு இருக்கைகளில் இரண்டு பெரியவர்கள் அமர்ந்திருந்தனர்.
வாரப்பத்திரிக்கைகளும் தினப்பத்திரிக்கைகளும் இருக்கைகளுக்கு முன்பிருந்த சிறு மேசை
மீது கிடந்தன. அந்த எழுத்தாளர் எழுந்து எங்களை வரவேற்றார். தன் பெயர் மாடாம்பு குஞ்சுகுட்டன்
என அறிமுகப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அவர்
சொன்ன செய்திகள் எல்லாமும் எங்களை வியப்பில் ஆழ்த்தின. மலையாளத்தில் இருபது நாவல்களை
எழுதியுள்ளார். கேரள சாகித்ய அகடாமி விருது பெற்றவர். தவிர ஜெயராஜ் இயக்கத்தில் வெளிவந்த
கருணம் படத்தின் திரைக்கதையை எழுதியவர். அதற்காக தேசிய விருது பெற்றவர். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே
அருகாமையிலிருந்த வீட்டின் பழமை எங்களை ஈர்த்தது. ஆம் 300 வருடப் பழமையான தரவாடு அது. ஒரு வீடு முன்னூறு
வருடங்கள் இருக்கமுடியும் என்பதே திகைப்பாக இருந்தது. அவ்வப்போது அவ்வீட்டைப் பழுது
பார்த்துக் கொண்டு அதன் பழமை சிதையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பிரதான வீட்டில்தான்
நூலகம் இருந்தது. குறுகலான மண்படிகள் வழியாய் அவ் வீட்டின் முதல் தளத்தை அடைந்தோம்.
அவரின் மிகப் பழைய விஸ்தாரமான நூலகம் எங்களை வரவேற்றது. ஏராளமான புத்தகங்கள் மிகப்
பழைய வாசனையுடன் உயிர்த்திருந்தன. அவர் பயன்படுத்திய பேனாக்கள், இங்க்புட்டிகள், எல்லாமும் காலத்தை அழித்துக் கொண்டு அப்படியே இருந்தன.
இந்தப் பயணத்தின் மொத்த உன்னதத்தையும் அந்த நூலகம் எங்களுக்குத் தந்துவிட்டது. பல ஆங்கிலப்
புத்தகங்கள் இருந்தன. சமகாலப் படைப்புகளையும் பார்க்க முடிந்தது. எழுத்தாளரின் தந்தை
யானை வைத்தியம் அறிந்தவர். அந்தப்பகுதியில் பிரபலமானவர். சுவரில் மாட்டப்பட்டிருந்த
அவரின் புகைப்படங்கள் இன்னும் இன்னும் பழமையைக் கண்முன் கொண்டுவந்தன.
ஒரு மிகப் பழைய வீட்டில்
மூன்று பெரியவர்கள் முற்றத்து சாய்விருக்கைகளில் அமர்ந்துகொண்டு யாருக்காவது காத்துக்
கிடக்கும் காட்சி எனக்குள் ஒரு ஓவியம்போல படிந்துபோனது. வெளியேறவே மனமில்லாமல்தான்
அவ்வீட்டை விட்டு வெளியேறி விடை பெற்றோம்.
அதிகாலைக் குளிரை
சுமந்துகொண்டு வீடுவந்தேன். போர்வைக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெரியவனை மெல்ல அணைத்தபோது
கண்ணைத் திறக்காமல் கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொண்டான். எங்கபா போன? என்றான். கடந்த இரண்டு வருடத்தில் அவனை விட்டுப்
பிரிந்திருந்த முதல் மூன்றுநாட்கள். இடையிடையே என்னைக் கேட்டு அழுததாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
அடுத்த ஒரு வாரத்திற்கு பயல்களை விட்டு நகரவில்லை.
புத்தகக் கண்காட்சியை
ஒட்டி சென்னைக்குப் போனேன். என்னுடைய பால்ய நண்பர்களில் பெரும்பாலானோர் சென்னையில்தான்
வாசம். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் அவர்களின் வீடுகளுக்குப் போகாதது குறித்து
குறைபட்டுக் கொள்வார்கள். அதையும் நிவர்த்தி செய்துவிடும்பொருட்டு ஒரு நாளைக்கு ஒரு
நண்பன் வீடு எனப் பிரித்துக் கொண்டு தங்கினேன். ஏழு வயதிலிருந்து நாங்கள் நண்பர்கள்.
இன்று வரை எங்கள் நட்பில் எந்தக் குறையுமில்லை. எங்களை இணைத்திருந்த பால்ய நட்புச்
சங்கிலி கண்ணாடியினால் ஆனது. அக்கண்ணாடியில் சதா மது நிரம்பி வழிந்து கொண்டிருக்கும்.
ஆக எங்கள் இரவுகள் முழுவதும் மதுவால் நிரம்பின.
இதனால் சென்னையில் சந்திக்க விரும்பியிருந்த இணைய நண்பர்கள் ஒருவரையும் தொலைபேசியில்
கூட அழைக்க முடியாமல் போனது. ஒரு மதியமும் இன்னொரு மாலையும் புத்தகக் கண்காட்சிக்குப்
போக வாய்த்தது. எழுத ஆரம்பித்து அதன் மூலமாய் நட்புத் தொடர்புகள் ஏற்பட்ட புதிதிலிருந்தே
புத்தக கண்காட்சியின் மீது ஒரு ஏக்கம் இருந்தது. அங்கு நடக்கும் சந்திப்புகள் குறித்தெல்லாம்
வாசிக்கும் ஒவ்வொரு முறையும் அடுத்த ஆண்டு நாமும் அவசியம் போகவேண்டும் என நினைத்துக்
கொள்வதுண்டு. அச்சில் எழுத்து வந்தபோது இந்த ஆர்வம் இன்னும் இரட்டிப்பானது. ஆனால் நேரில்
அப்படி எதுவுமே இல்லை. கற்பனை தான் இருப்பதிலேயே மிக உயர்ந்த விஷயம். கற்பனையை விட
இன்பம் தரக்கூடிய இன்னொன்று கிடையவே கிடையாது. கண்காட்சிக்குப் போன இரண்டு நாட்களில்
நண்பர்களை சந்திக்க முடிந்ததுதான் ஒரே ஆறுதல். சந்தித்த நண்பர்களில் வாசுவைத் தவிர
அனைவரையுமே முதன்முறையாய் சந்தித்தேன். மிஷ்கின் அலுவலகத்தில் ஒரு நாள் இரவு போனது.
திருவண்ணாமலை வந்ததும்
மீண்டும் அடுத்த நிகழ்விற்கு தயாரானோம். எஸ்கேபி கல்லூரியில் இரண்டு நாட்கள் திரைப்பட
விழா
- மேலும்
1 comment:
வீடு முன்னூறு வருடங்கள் தாங்குவதில் வியப்பு இல்லை. திருநெல்வேலி அம்மன் சன்னதித் தெரு பல வீடுகள் (எங்கள் வீடு உட்பட) நானூறு வருடங்கள் பழமையானவை
அவ்வப்போது சிற்சில மாற்றங்கள்/பூச்சுக்கள் செய்தாலும் அவையும் ஏழு/எட்டு தலைமுறைகள் தாண்டி இருக்கின்றன
Post a Comment