Monday, February 25, 2013

கடைசி நாளில் மழை பெய்தது - 1

விடுமுறைக்குப் போவதற்கு முன்பு உற்சாகம் தரக் கூடியதாய் இருந்த எண்ணங்களில் முதலாவது மழை. இருக்கப்போகும் நாற்பது நாட்களில் எப்படியும் நான்கைந்து நாட்களாவது மழை இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் கடைசி நாளில் கிளம்புவதற்கு ஆறு மணிநேரங்களுக்கு முன்புதான் மழையை தரிசிக்க முடிந்தது. பயல்களாகிய நாங்கள் பெரியவர்களின் பாதுகாப்பு வேலிகளை உடைத்து மழையில் நனைந்து குதூகலித்தோம். திருவண்ணாமலையிலிருந்த ஒவ்வொரு நாளுமே புதிதாகத்தான் இருந்தது. எதிர்பார்த்திராத பல விஷயங்கள் நடந்தன. ஒவ்வொரு நாளுமே ஒரு வியப்பைத் தக்க வைத்திருந்தது. பவா வும் ஷைலஜாக்காவும் ஒரு நாளை அப்படியே சாதாரணமாய் கடந்து போய் விட அனுமதிக்கவே இல்லை. ஏராளமான நிகழ்ச்சிகள், நிகழ்வுகள், புதுப்புது மனிதர்கள் என ஒரு நொடி கூட சலிப்போ அலுப்போ இல்லாமல்தான் கடந்தது.

 ஊருக்குப் போய் சேர்ந்த அடுத்த நாள் மதியவாக்கில் வம்சிக்குப் போனேன். என் வருகையை யாரிடமும் தெரிவித்திருக்கவில்லை. பவா வைக் கண்டதும் கட்டியணைத்துக் கொண்டேன். எல்லோரிடமும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது. முருகன் காரில் எல்லோருமாய் கிளம்பி ஒரு நிச்சயதார்த்த விழாவிற்குப் போய் பிரியாணி சாப்பிட்டோம். மலையைப் பின்புறமாக சுற்றிக்கொண்டு சமுத்திர ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் ஆனந்த் காயத்ரி வசிக்கும் நிலத்திற்குப் போனோம். அங்கங்கு சிறுசிறு குடில்கள், மண்ணால் செய்த உருவபொம்மைகள், நிறைய பூச்செடிகள், பழமரங்கள் என இரண்டாண்டுகளுக்கு முன்பு பார்த்த அந்த வயல்வெளி ஒரு சின்னஞ்சிறு சோலையாக மாறியிருந்தது. ஒரு பெரிய கொட்டகைக்கு அடியில் ஆனந்தும் காயத்ரியும் ஆதித்யாவும் பிற நண்பர்களோடு குழுவாய் சமைத்து, மண்தரையில் அமர்ந்து அந்த எளிய உணவை சாப்பிட்டுக் கொண்டு ஆனந்தமாய் வாழ்ந்துவிடுகிறார்கள். என்னுடைய வழக்கமான வீடு பற்றிய கற்பிதங்கள் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது. ஒரு ஓலைக் கொட்டகைக்குள் அமர்ந்துகொண்டு, இடையறாது வீசிக்கொண்டிருக்கும் காற்றின் தழுவலை அனுமதித்தபடி, கம்பீரமாய் அமர்ந்திருக்கும் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் உன்னதம் என்பதை மீண்டும் எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். என்னுடைய வருங்காலம் பற்றிய கனவு கூட இதுமட்டுமேதான். இதை எவ்வளவு சீக்கிரம் அடைகிறேன் என்பதுதான் என் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய சவால். எனக்காக இங்கே ஒரு துண்டு நிலம் தன் எல்லா அற்புதங்களையும் உள்ளடக்கிக்கொண்டு காத்திருக்கிறது என்பதை மந்திரம்போல் உச்சரித்துக் கொண்டேன்.

 இரண்டு நாட்கள் கழித்து கேரளாவிற்குப் போனோம். ஒரு டெம்போ ட்ராவலரில் பவா மற்றும் ஜெயஸ்ரீ குடும்பத்தாருடன் பயணம். பவாவிற்கு உணவு குறித்த பிரக்ஞை அதிகம். முதல்நாளே அரூர் ஹோட்டலுக்கு போன்செய்து இவ்வளவு பேர் வரப்போகிறோம் எல்லாமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என்கிற தகவலைத் தந்துவிட்டிருந்தார். நாங்கள் போய்சேர்ந்த போது எல்லாமும் இருந்தது. ஒரு முழு ஆட்டின் சகல பாகங்களையும் தனித்தனியே விதம்விதமாய் சமைத்துத் தருகிறார்கள். ருசியும் அற்புதம். அந்தக் காலை வேளையில் வயிறு புடைக்க சாப்பிடமுடிந்தது. திருப்பூரை நெருங்க நெருங்க அரங்கசாமி யிடமிருந்து தொடர் அழைப்புகள். மதிய உணவை அவருடனும் அவர் பயல்களுடனும் வைத்துக் கொண்டோம். கேரள எல்லையில் ஒரு சிற்றூரில் பவாவின் வாசக நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த மாலைச் சந்திப்பில் கலந்துகொண்டோம். பவா பாவண்ணனின் பயணம் கதையையும் ஜெமோவின் ஊமைச் செந்நாய் கதையையும் சொல்லி முடித்தபோதுதான் எங்களை ஏற்கனவே இரவு சூழ்ந்திருந்ததை உணர்ந்தோம். ராத் தங்கல் அருண் வீட்டில். ஊர் பெயர்களெல்லாம் மறந்துவிட்டேன். வளைந்து நெளிந்து போகும் மங்கை மேகக் கூந்தல் பாதைகள். தெருவிளக்குகள் ஏதுமற்ற அசல் இருள் பயண முடிவில் ஒரு தன்னந்தனி வீட்டை அடைந்தோம். எங்களுக்காக காத்துக் கொண்டிருந்த நட்பின் இணக்கங்கள் நல் உணர்வைத் தந்தன.

  மீண்டும் காலையில் வளைந்து நெளிந்து செல்லும் அதே பாதைகளில் பயணம். வழிநெடுக பசுமையின் ஊழித் தாண்டவத்தைப் பார்த்துக் கொண்டே பயணித்தோம். பவாவின் நண்பர் அருணின் இரப்பர் தோட்டங்களை மலையேறிப் பார்த்தோம். மாலை போர்ட்கொச்சினில் நடைபெற்றுக் கொண்டிருந்த பினாலே வைப் பார்க்கப் போனோம். கண்களை விரிய வைத்த நிகழ்வு அது. உலகின் பல பாகங்களிலிருந்த படைப்பாளிகளின் பங்களிப்புகள் இடம்பெற்றிருந்தன மாயாவின் படைப்புகளை கண்டேன். அந்த இடமே எனக்கு மிகவும் பிடித்துப் போனது. மிகப் பழைய பிரெஞ்சுக் கட்டிடங்கள். தொட்டடுத்து கடல். புகைப்படங்கள், ஓவியங்கள், அசைபடங்கள், டாக்குமெண்டரிகள், நுண்கலைகள் என சகலமும் ஒரே இடத்தில் காணக் கிடைத்தன. வல்சனை சந்தித்துப் பேசினோம். அவர் காட்சிக்கு வைத்திருந்தவற்றைப் பார்த்து வியந்தோம். தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடக்க வாய்ப்பே இல்லை என மிகை உணர்ச்சி ததும்ப ஷைலஜாக்காவிடம் சொன்னேன்.

  ஃபோர்ட்கொச்சினின் Ambiance எனக்குப் பிடித்திருந்தது. கிட்டத்தட்ட பாண்டிச்சேரியின் வார்ப்பு. இந்த பிரெஞ்சுக்கார கிராதகர்கள் எங்கே போனாலும் தமக்கான தனித்தன்மையோடுதான் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனந்தின் சகோதரி ஏற்பாடு செய்திருந்த தங்குமிடம் எங்களுக்கு உவப்பில்லாமல் போய்விட்டது. தனிப்பட்ட முறையில் என்னால் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ள முடியும். இந்த ஆறுவருட அயல்வாழ்வில் என் தோல் தடித்துவிட்டது. ஆனால் பவா மிகத் தூய்மையான திருவண்ணாமலைவாசி. அவரால் ஒருபோதும் நகர நெருக்கடிக்கு தம்மை ஒப்புக்கொடுத்துவிட முடியாது. நண்பர்களைத் தொடர்புகொண்டு திருச்சூரை அடுத்திருக்கும் ஒரு நண்பர் வீட்டில் தங்க முடிவு செய்தோம். நாங்கள் எடுத்த முடிவின் மகத்துவம் குறித்து அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

 மேலும்

No comments:

Featured Post

test

 test