Thursday, March 7, 2013

நான் கடவுள்

என் அப்பாவிற்கு கடவுளர்கள் குறித்துப் பெரிதாய் புகார் கிடையாது ஆகவே வீட்டில் பக்தியின் தாக்கங்களான பூஜை, வழிபாடு,விசேஷங்கள் என எதுவும் இருந்தது கிடையாது. ஆனால் நான் பதினைந்து வயது வரை பக்திப் பழமாகத்தான் வளர்ந்தேன். பதின்மத்திற்குப் பிறகு சாமியார் பித்தும் சேர்ந்துகொண்டது. போன மாதம் கூட ஒரு வளரும் சித்தரைப் பார்த்துப் பேசிவிட்டுத்தான் வந்தேன். இப்பித்திற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது என் ஊரைத்தான். இரமணர் ஆசிரமத்திற்கு சமீபமான வீடென்பதால் என் பள்ளி விடுமுறைப் பகல்கள் முழுக்க ஆசிரமமும் அதையொட்டிய மலையடிவாரத்திலேயும் விளையாட்டாய் கழிந்தன. படிப்பு,விளையாட்டு,புகை,காதல் என எல்லாமும் பருவங்களுக்கேற்ப மாறினாலும் இடங்கள் மட்டும் மாறவேயில்லை. கூரையை முட்டும் உய:ரத்திற்குப் புற்றுகொண்ட கருமாரியம்மன் கோவிலைத் தாண்டினால் வரும் பலாக் குளம், தலைப்பிரட்டைகளை மீனெனப் பிடித்த காலத்திலிருந்து ஓர் அந்திக் கருக்கலில் கவிதாவை முத்தமிட்ட தருணம் வரை என்னை அறிந்திருந்தது. எங்கள் குழாமின் அனைத்து சதியாலோசனைகளும் குளம் சாட்சியாகத்தான் நிகழ்ந்தன. யார்ரா இந்த லூசு என ராஜசேகரை இக்குளத்திற்கு சமீபமாய் நிற்கவைத்துக் கிண்டலடித்ததும் உண்டு. ஓரிரு முறை பியர் குடித்தோம். முதல் குடி நிகழ்வில் இரண்டு மிடறு குடித்து விட்டு நாச்சி உளறினான். மூன்று நாட்களுக்கு முன்பு பாருவின் முலைகளை இங்கு வைத்துதான்…. இருங்கள் நான் சொல்ல வந்தது சாமியார்கள் குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் இந்த பலாக்குள சம்பவங்களை சொல்கிறேன்.

 சிறு வயதிலிருந்து ஆசிரமத்திற்குப் போய்கொண்டிருப்பதாலோ என்னவோ இரமணரின் மீது பயங்கலந்த பக்தி இருந்தது. எட்டாம் வகுப்பில் இரமணாசிரம நிர்வாகம் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தியது. மாணவர்களுக்கான சிறப்பு வெளியீடுகளாய் இரமணரின் வாழ்க்கை வரலாறு, உரைகள், தத்துவங்கள், பாடல்கள் போன்றவை எங்களுக்கு இலவசமாய் தரப்பட்டன. அவற்றிலிருந்து போட்டிகள் வகுக்கப்பட்டன. எல்லாவற்றையும் வாசித்து முடித்ததும் இரமணரை முழுமையாய் அறிந்து கொள்ள முடிந்தது. ‘நான்’ தத்துவம் புகைமூட்டமாய் புரிவது போலிருந்தது ஆனால் புரியவில்லை. நான் யார்? ஆன்மாவுக்கும் உடலுக்கும் என்ன சம்பந்தம்? ரெண்டும் வேற வேறன்னா உறவுகள் ஏன்? வாழ்க்கை முறை என்ன? வெற்றி தோல்வி ன்னா என்ன? ஏன் படிக்கனும் வேலைக்கு போகனும்?என பயங்கர குழப்பம் ஏற்பட்டது. ஆனால் பதிமூன்று வயதில் அய்யங்குளத்தில் மொட்டையடித்துக்கொண்டு கோவணத்தோடு ஒரு ஒல்லிப் பதின்மன், அண்ணாமலையார் கோவிலை நோக்கி கொட்டும் மழையில் ஓடும் சித்திரம் எனக்குள் பதிந்து போனது. பெரிய கோவிலில் இரமணர் அமர்ந்திருந்த இடமான பாதாள லிங்கம் இன்று வரை எனக்குப் பிடித்த இடமாக இருக்க காரணம் இந்தச் சித்திரமாகத்தான் இருக்க வேண்டும். 

 இந்த ‘நான்’ குழப்பங்கள் எல்லாம் சில மாதங்கள்தாம் நீடித்தன. எங்கள் பகுதியில் மிகப் பரந்த அளவில் வயல்களை அழித்துவிட்டு தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியம், ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்தது. சில HIG வீடுகள் தயாராகி புதிதாய் குடும்பங்களும் வர ஆரம்பித்திருந்தன. சம வயதை ஒட்டிய பெண்களை அங்கும் இங்குமாய் பார்த்ததும் எல்லாம் மறந்து போனது. பத்தாம் வகுப்பில் ஞானப் பிரசன்னா என்கிற பேரழகியைத் தொடர்ந்து போய் பிரம்மகுமாரிகள் அமைப்பைத் தெரிந்து கொள்ள நேரிட்டது. தியானம் கற்றுக் கொள்ளும் ஆர்வம் குபீரென முலைத்து தினம் மாலை இராஜயோக தியான நிலையத்திற்குப் போக ஆரம்பித்தேன். ஆரம்பம் வேறாக இருந்தாலும் நல்ல பயன் இருந்தது. நான் பற்றிய கேள்விகளுக்கு அங்கு வெள்ளையுடை அணிந்தவர்களிடம் பதில் இருந்தது. ஒரு காரின் படத்தைக் காட்டி இந்த என்ஜின் தான் ஆன்மா என்றார்கள். சுலபமாகப் புரிந்தது. தியானம் பற்றிய அடிப்படைகளை கற்றுக் கொண்டதும் அங்கு போவதை நிறுத்திக் கொண்டேன். இல்லையென்றால் ராஜஸ்தான் அனுப்பியிருப்பார்கள். 

அடுத்த ஆறுவருடம் சாமி, பக்தி, கோவில், ஆன்மீகம், சிந்தனை, குழப்பம், என எதுவும் என்னைத் தாக்காதவாறு கல்வியும் நண்பர்களும் தோழிகளும் காதலியும் பியரும் பார்த்துக் கொண்டார்கள். 

இருபத்தோரு வயதில் Prodigal son ஐப் போலத்தான் என் சகோதரனிடம் திரும்பி வந்தேன். ஓசூர் நகரம் அக்காலகட்டத்தில் எனக்கான எல்லாவற்றையும் கொண்டிருந்தது. தனிமை வீடும், ஏராளமான புத்தகங்களும், பிடித்த வேலையுமாய் அந்நாட்கள் நகர்ந்தன. இலக்கியத்தோடு ஓஷோவும் புத்தகங்கள், கேசட்டுகள் வழியாய் அறிமுகமானார். தமிழில் வந்த என் இளைமைக்கால நினைவுகள், புல் தாமாகவே வளர்கிறது, வெற்றுப்படகு போன்ற புத்தகங்கள் ஓஷோவின் மீது பிடித்தத்தை ஏற்படுத்தின. The new man கேசட்டை திரும்பத் திரும்பக் கேட்டுத் தேய்த்தேன். Individuality, Responsibility, Freedom குறித்தெல்லாம் மிகப் பெரிய திறப்பு ஒன்று எனக்குள் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக திருச்சி, கோவை, போபால், குச்வாடா என பயணித்ததும் Swami Prem aika எனப் பெயர் வந்ததும் போதியமட்டில் இதே பக்கங்களில் புனைவாகவும் கட்டுரைகளாகவும் எழுதித் தீர்த்திருக்கிறேன். இதனோடே வேதாத்திரி மகரிஷி கும்பலோடும் நெருக்கமான தொடர்பிருந்தது. ஓசூரில் மனவளக் கலை மைய நண்பர்களோடு தினம் உடற்பயிற்சி, தியானம், அவ்வப்போது கோவில்களுக்குப் பயணம் என வேறொரு பாதையில் உற்சாகமாய் பயணித்துக் கொண்டிருந்தேன். உலக சமாதானத்திற்கு தியானம் செய்வது, மழை வேண்டி தியானம் செய்வது போன்றவற்றையெல்லாம் மிகுந்த ஆத்மார்த்தமாக செய்து கொண்டிருந்தேன். எப்படி ஓஷோ,வேதாத்திரி என்ற இரு வேறு துருவங்களையும் அப்போது ஒன்றாகப் பார்க்கமுடிந்தது என்ற ஆச்சரியம் எனக்கு இப்போதும் உண்டு. சில நேரங்களில் அப்போது மிகத் தூய்மையான மனதோடு இருந்ததாக நினைத்துக் கொள்வேன்.                               

ஒரு நாள் என் நண்பன் ஒரு ஜோசியரைப் பார்க்க அழைத்துச் சென்றிருந்தான். ஒரு தாளில் என் பெயர், பிறந்த நாள், நேரம் எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்தேன். சில மணி நேரங்கள் கழித்து என்னை உள்ளே கூப்பிட்டார். எனக்கு அப்போது நீளத் தாடி வைத்த யாரைப் பார்த்தாலும் ஓஷோ போல இருக்கும். அவரும் நீளத்தாடி வைத்திருந்தார். அவர் சொன்னது 

1. உனக்கு உன் குலதெய்வமே தெரியாது. தேடி கண்டுபிடி. குடும்பத்தோடு போய் கும்பிடு 

2. ஈரோடு தாண்டி கொடுமுடிக்கு போ. பவானி ஆற்றில் வேட்டியோடு இறங்கி குளித்துவிட்டு வேட்டியை ஆற்றோடு விட்டுவிட்டு அரசமரத்தடி பிள்ளையாரை கும்பிடு 

3. நங்கநல்லூர் ஆஞ்சநேயரைப் போய் கும்பிடு 

அடுத்த வாரமே ஊருக்குக் கிளம்பிப்போய் நம் குலசாமி எதென வீட்டில் கேட்டேன். அய்யனார் என்றார்கள். "எங்கிருக்கிறது கோவில்?"  "பெண்ணாத்தூர்ல எங்கயோ.." என விட்டேத்தியாய் பதில் வந்தது. அப்பாவை கழுவி ஊற்றிவிட்டு பெண்ணாத்தூர் போய் என் தாத்தாவின் சகோதரரைக் கண்டுபிடித்து அவர் மூலமாய் அந்த கோவிலையும் கண்டுபிடித்தேன். அது கோவில் அல்ல நுணாமரத்தடியில் மண்ணில் ஊன்றப்பட்ட ஒரு மைல்கல். அவ்வளவுதான். பிறகு எல்லோரையும் கூட்டிக் கொண்டு போனேன். அடுத்த வாரமே கொடுமுடி. நல்லவேளையாக பவானியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இடுப்பளவு ஆழத்தில் அந்த அதிகாலையில் இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம்? என்ற அவ நம்பிக்கையோட வேட்டியை ஆற்றில் விட்டு வந்தேன். அதற்கடுத்த வாரம் சென்னை. சென்னை பால்ய நண்பர்கள் குழாம் போதையோடு வரவேற்று மிகுபோதையோடே வழியணுப்பியது. ஒரு மாதத்தில் பொட்டியை கட்டிக் கொண்டு சென்னை வந்துவிட்டேன். வேறுவேலை. இப்போது நான் இங்கிருக்க காரணமான வேலை. அபாரமான தற்செயலாகக் கூட இருக்கலாம். ஆனால்.. ஆனால்.. 

சென்னை வாழ்க்கை ஓசூர் வாழ்க்கையைப் போல தூய்மையானதாக இல்லை. மீண்டும் பெண்கள், குடி, நண்பர்கள் குழாம் என அல்லோகலப்பட்டது. ஒரு திடீர் வெறுமையில் பத்து நாட்கள் தொடர்ச்சியாய் விடுமுறை எடுத்துக் கொண்டு திருமுடிவாக்கம் விபாசனா மையத்திற்குப் போய்விட்டேன். வழக்கம்போல உபயம் என் சகோதரர்தான். மொழியை எல்லா வகையிலும் துறந்துவிட்டு மெளனத்திற்குள் செல்வது எனக்கொரு பிரச்சினையாக இல்லை. சொல்லப்போனால் மிகுந்த மகிழ்ச்சியோடே மெளனத்திற்குள் புக முடிந்தது. முதல் மூன்று நாட்கள் கடும் பசியில் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தாலும் நான்காம் நாள் பழகிவிட்டது. நாள் முழுக்க சுவாசத்தையும், புலன்களையும் வேறொரு ஆளாய் பார்த்துக்கொண்டிருந்தது தனி அனுபவம். ஆறாம் நாளோ ஏழாம் நாளோ எனக்கு Exhibitionist என்கிற புதிய சொல்லும், ஒரு மனிதனும் அறிமுகமானார்கள். 

மாலை ஆசிரமத்தை சுற்றி ஒரு நடை போவது எல்லோருடைய வழக்கமாகவும் இருந்தது. சூரியன் மறைந்துபோன அந்தி. அப்போது அங்கு கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. எங்களோடு பயிற்சிக்கு வந்த ஒரு கண்ணாடி அணிந்த குண்டு இளைஞன் கட்டிடத்தின் மீதேறி நின்றுகொண்டிருந்தான். இவன் ஏன் மேலே ஏறி நிற்கிறான்? என குழப்பத்தோடே அவனைப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தோம். எங்களோடு சில வெளிநாட்டுப் பெண்களும் பயிற்சிக்கு வந்திருந்தனர். இரண்டு அழகான பெண்கள். அந்தப் பயல் மேலே நின்றுகொண்டு அவ்விரு பெண்களையும் பார்த்தபடியே தன் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து… அதிர்ச்சியில் உறைந்தேன். எல்லோருமே பார்த்துவிட்டு தலையை குனிந்துகொண்டோம். விஷயம் நிர்வாகிகளுக்குப் பரவி அவனை வெளியேற்றிவிட்டார்கள். தனிப்பட்ட முறையில் என்னை இந்நிகழ்வு பாதித்தது. இரான் சினிமா, ரஷ்ய இலக்கியம், ஆங்கிலத் துப்பறியும் நாவல்கள் தாண்டி பெரியதாய் என் உலகம் விரிவடைந்திராத காலகட்டம் அது. காமமும் மனப்பிறழ்வும் அத்தனை நெருக்கமாக இருக்கமுடியுமா? என்கிற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.


அடுத்த நாள் மன ஒருமை கைவிட்டுப் போனது. போலவே சிலருக்கும். எல்லோருமாய் கிசுகிசுப்பாய் பேச ஆரம்பித்துக் கொண்டோம். மாலையில் மதிலேறி குதித்து வெகுதூரம் நடந்து போய் சிகரெட் பிடித்தோம். ஒன்பதாவது நாளைக் கடக்க பெரும் சிரமப்பட வேண்டியிருந்தது. பத்தாம் நாள் அடித்துப் பிடித்து ஆசிரமத்தை விட்டு வெளியேறிஒரு வழியாய் பஸ்ஸை பிடித்து அலைபேசியில் நண்பர்களை பிடித்து நேரா பாருக்கு வந்துருங்கடா” எனச் சொல்லிவிட்டு வழக்கமாய் செல்லும் பாரில் போய் விழுந்தேன்.

ஆன்மீகத்தின் வழியாய் தன்னை அறிவது ஒரு குழப்பமான சித்திரமாகவே எனக்குள் இன்னும் இருந்துவருகிறது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இந்தக் கட்டுரையில் இழையோடியிருக்கும் விடலைத் தனம்தான் தன்னையறிதலில் என் நிலை. திருவண்ணாமலையில் சில இளம் சாமியார்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன். எல்லாம் உதறி தனியாய் வந்து அண்ணாமலையைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தத்துவார்த்தமாகப் பேசினாலும் அவர்களும் சராசரி லெளகீக வாழ்க்கையை இரகசியமா வாழ்கிறார்கள். சரியாய் சொல்லப்போனால் இன்னும் வசதியான லவ்கீகம். வாழ்ந்துவிட்டுத்தான் போகட்டுமே என்கிற மனப்பான்மைதான் என்னிடம் எப்போதுமிருக்கிறது. அந்த லெளகீக வாழ்வு நூறு ஏக்கர் நிலம்கோடிகள்ரஞ்சிதாபோலீஸ்ஜீப்பில் புளகாங்கிதமாய் ஏறுவதென விரிவடையும் போதுதான் பொறாமை எட்டிப் பார்க்கிறது. ஸ்ரீதர் கிண்டலடித்திருக்கும் இக்கட்டுரைதான் இந்நினைவுகளைக் கிளறிப்போட்டது. நித்தியை விஞ்சும் சாமியாராகும் எல்லாத் தகுதிகளும் என்னிடம் உண்டு. ஆன்மீகம்இலக்கியம்,அரசியல்வரலாறுபுவியியல்,சினிமா என எல்லாவற்றைக் குறித்தும் ஆழமாய் பேசுவது போன்ற பாவணையை எளிதில் உருவாக்கிவிடுவேன். திருவண்ணமலையின் அடுத்த நித்தியாய் நான் வரவேண்டும் என நீங்கள் அனைவரும் உளமாற வேண்டிக்கொள்ளுங்கள். அதுவே இப்போதைக்குச் செய்ய வேண்டியது.



6 comments:

Sridhar Narayanan said...

அய்ஸ்! ப்ளஸ்ஸில் நீங்கள் பகிர்ந்த போதே பாதி படித்துவிட்டு 'அட, இவருக்கும் இப்படி ஒரு கட்டுரை எழுதவேண்டும் எனத் தோன்றியிருக்கிறது பாரேன்' என நினைத்துக் கொண்டிருந்தேன். பார்த்தால்... கீழே என் கட்டுரைக்கு தொடுப்பு கொடுத்து எழுதியிருக்கிறீர்கள்... :-)

அப்படியே நிற்காமல் ஒரே மூச்சில் எழுதிக் கொட்டி விட்டீர்களோ? படித்து முடித்ததும் நீங்கள் மூச்சு வாங்கும் ஓசைக் கூட கேட்கிறது. :-)

Babu said...

புத்தகதின் மூலமாகவோ இளம் சாமியார்களின் மூலமாகவோ தாங்கள் தேடிய கடவுளோ; தன்னையறிதலோ இயலாத ஒன்று.
காதல் எப்படி ஒரு ஸ்பார்க்; அப்படியானதே தன்னையறிதலோ. காலம் வரும் அய்யனார். நித்தி போன்று வாழ முயற்சிக்க வேண்டாம்; அய்யனார், அய்யனாரகவே இருக்கலாம் :)

Babu said...

புத்தகதின் மூலமாகவோ இளம் சாமியார்களின் மூலமாகவோ தாங்கள் தேடிய கடவுளோ; தன்னையறிதலோ இயலாத ஒன்று.
காதல் எப்படி ஒரு ஸ்பார்க்; அப்படியானதே தன்னையறிதலோ. காலம் வரும் அய்யனார். நித்தி போன்று வாழ முயற்சிக்க வேண்டாம்; அய்யனார், அய்யனாரகவே இருக்கலாம் :)

உங்களில் ஒருவன் said...

கண்ணுக்கு புலப்படாத,அறிவியளுகுக்குள் சிக்காத விஷயங்களை உணர்தல் என்பது எளிது ஆனால் புரிதல் என்பது சாத்தியமற்றது. காரணம் அவை புரியாமல் இருக்க படைக்கப்பட்டவை புரியாமல்இருப்பதே மேல்.. "நான்" - "கடவுள்" இந்த இரண்டையும் புரிதல் என்பது முடியாத ஒரு விஷயம். so better understand what ther are for than trying to know wat they are...

உங்களில் ஒருவன் said...

கண்ணுக்கு புலப்படாத,அறிவியளுகுக்குள் சிக்காத விஷயங்களை உணர்தல் என்பது எளிது ஆனால் புரிதல் என்பது சாத்தியமற்றது. காரணம் அவை புரியாமல் இருக்க படைக்கப்பட்டவை புரியாமல்இருப்பதே மேல்.. "நான்" - "கடவுள்" இந்த இரண்டையும் புரிதல் என்பது முடியாத ஒரு விஷயம். so better understand what ther are for than trying to know wat they are...

உயிரோடை said...

யென்ன்?

Featured Post

test

 test