குளியலறையின் ஈரச் சுவற்றில்
எலுமிச்சை மர அடிக் கிளையில்
தக்காளிச் செடிக் குவியலின் வேர்களில்
பசும்நெடு புற்களில்
இன்னும் ஈரம் காய்ந்திடா
இடமெங்கிலும்
திசைக்கொன்றாய் பயணித்தபடி
எப்போதும் நிரம்பிடாத
தன் நீர்க்கூடுகளை
நிதானமாய்
சுமந்தலைகின்றன
அதிகாலை நத்தைகள்
நேற்றய அதிகாலைக் கனவில் உங்கள் பூவுடலுடன் கலவிக் கொண்டிருந்தேன் உங்களுக்கு வலிக்குமே என மிக மிக மிருதுவாய் உங்களுடல் கலக்கையில் இந்த அலாரம் அலற ஆரம்பித்தது. என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை சாரா, சனியன் எப்போது கத்துவது என்கிற விவஸ்தை வேண்டாமா? விழிகளைத் திறக்காது கையால் துழாவியெடுத்து அந்தச் சனியனை தூக்கி எறிந்தேன். அது எதன் மீதோ மோதி சிதறிப் போனது. நான் மிக மென்மையானவன் தான் சாரா ஆனால் நம்மிருவருக்குமிடையில் இடைஞ்சல் வருவதை நான் விரும்பவில்லை தடைகள் இடைஞ்சல்கள் சிக்கல்கள் பிரச்சினைகள் என எந்த வகையிலும் உங்கள் நெற்றியை சுருங்க வைக்க விடமாட்டேன் சாரா. இந்த அலாரச் சனியனால் உங்களின் உடல் எவ்வளவு திடுக்கிட்டிருக்கும் அது கனவாகவே இருப்பினும் கூட என்னால் இந்த அதிர்ச்சியிலிருந்து விலக முடியவில்லை. மீண்டும் அக்கனவினுள் என்னால் புக முடியவில்லை. கனவில் நீங்கள் வெற்றுடலுடன் காத்திருப்பீர்களே எனப் பதறி பதறி கனவினுள் புக முயன்று தோற்றேன்.
என் நேற்றைய காலை நரகமாய் இருந்தது சாரா அதனால்தான் வெளியில் எங்கும் போகாமல் அறைக்கதவை இறுக்கமாய் சாத்திக் கொண்டு உள்ளேயே இருந்துவிட்டேன். நேற்றைய பகல் கதவை யாரும் தட்டியிருக்கவில்லை. பால்கனிக்கு ஒரே ஒரு புறா மட்டும் வந்தமர்ந்து போனது. அறை முழுக்க உங்களின் அன்பைத்தான் நிரப்பி வைத்திருந்தேன் சாரா. நேற்றுப் பகல் முழுதும் உங்கள் அன்பில்தான் திளைத்திருந்தேன் உங்களின் நினைவு மிக மகிழ்வாய் இருக்கிறது சாரா. நீங்கள் ஏன் சாரா இத்தனை அழகாய் பிறந்து தொலைத்தீர்கள். ஐ லவ் யூ சாரா உங்களின் பேரன்பில் பேரழகில் நான் நீந்திக் களிக்கிறேன். ஐ லவ் யூ சாரா.
நன்றிப் பெருக்கில் என் இதயம் ததும்பி வழிகிறது சாரா. எனக்கு இங்கு கிடைத்திருப்பவை எல்லாமே மிகுதிதான். உலகத்தின் எல்லா சிறந்தவற்றையும் நான் அனுபவித்து விட்டேன் சாரா. உங்கள் முலைகளின் மீது எனக்கு பைத்தியம் சாரா. கனவில் நினைவில் பிறழ்வில் இயல்பில் மாறாத ஒன்று உங்களின் முலைத் தழுவித் தூங்கிப் போதல் மட்டுமே. இன்றைய பிற்பகலில் உங்கள் முலைத் தழுவிக் கிடந்தது கனவா நிஜமா எனத் தெரியவில்லை. கனவிற்கும் நிஜத்திற்குமான வேறுபாடுகளில் நான் வெளிறிப் போவதில்லை சாரா. கனவு நிஜமாகவும் நிஜம் கனவாகவும் ஏன் இருக்கக் கூடாது. நிகழ் – நிழல், நிழல் - நிகழ் என எந்த வித்தியாசங்களுமில்லை சாரா, நீங்கள் மட்டும்தான் எல்லாவற்றிலும் நிரம்பி வழிகிறீர்கள் அதில் நான் திளைக்கிறேன். உச்ச கட்ட நெகிழ்வில் நான் இளகி நதியாகிறேன் சாரா. உங்களை ஏந்தி பயணிப்பேன்.
ஒரு பின் மதிய மேலோட்டப் புணர்வில் உடைந்த அவளுடைய இளஞ்சிவப்பு நிறக் கண்ணாடி வளையல் துண்டெடுத்து மார்பில் அப்போதுதான் முளைவிட ஆரம்பித்திருந்த மயிர்களுக்கு மத்தியில் என் மீது படுத்த வாக்கிலேயே மூன்று இடங்களில் லேசாய் கீறினாள். இரத்தம் துளிர்த்து வியர்வைக் கசகசப்புகளோடு எரிந்தது. சிவப்பு வண்ணம் பூசியிருந்த குளிர்ந்திருந்த சிமெண்ட் தரையில் என் மீது படுத்திருந்தவளை மல்லாத்தி அவள் விளையாட்டில் கிழிபட்டு லேசாய் கசிந்த இரத்தத் துளிகளை ஆட்காட்டி விரல் நுனியில் சேகரித்து ஏற்கனவே தளர்ந்திருந்த அவளது மேல் சட்டையை வலது பக்கமாய் முற்றும் விலக்கி என் பெயரினை எழுதினேன்.
0
எப்போதும் அறை நிறைக்கும் சூரியனை இன்று காணவில்லை. புரண்டு மணி பார்க்கையில் ஒன்பது மணியாகியிருந்தது. எழுந்து திரைச்சீலைகளை அகற்றுகையில் சத்தமில்லாத மழை சன்னலுக்கு வெளியே கோடுகளாய் இறங்கிக் கொண்டிருந்தது. விழித்தெழுந்த காலையில் முதலில் பார்க்கும் மென்மழை மிகுந்த உற்சாகத்தை தருவதாய் இருந்தது. ஒரு பெரிய வீட்டின் மேல் தளமிது. கிழக்கு பக்கம் வாசலும் மேற்கில் அகலமான பால்கனியும் இருப்பதால் குளிர் காலங்களில் சூரிய உதயத்தையும் வெயில் காலங்களில் சூரிய அஸ்தமனத்தையும் தேநீரோடு சாவகாசமாய் அமர்ந்து பார்க்க இந்த வீடு மிகவும் வசதியாய் இருந்தது. சற்றுத் தள்ளிக் கடல் இருப்பதால் இரவில் அலைகளின் சப்தத்தைக் கூட கேட்க இயலும். இதுபோன்ற ஒரு மழை நாளில்தான் வீணா இந்த வீட்டிற்கு வந்தாள். ஒழுங்கற்றவனின் வீடு மட்டும் எப்படி இத்தனை ஒழுங்காய் இருக்கிறது என சிரித்தபடியே கேட்டாள். பால்கனியில் சரிந்திருந்த புங்கை மரக் கிளையிலிருந்து மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. வீடு முழுக்க ஈரமும் மெல்லிதான இருளும் ஒலிப்பானில் கசிந்த கொண்டிருந்த மொஸார்டும் அவளை ஏதோ செய்திருக்க வேண்டும். இம்மாதிரி வீட்டில் வசிப்பதற்காக உன் மாதிரி ஜந்துக்களையும் சகித்துக் கொள்ளலாம் என்றாள். ஜந்துக்கள் என்ன செய்யும் என்பதை அவளுக்கு காண்பித்த நாளும் அதுதான்.
தன் நீளக் கூந்தலை பால்கனி மரத்திலிருந்து சொட்டும் மழை நீர் படும்படி விரித்து தரையில் படுத்திருந்தாள். கருப்பு நிறப் பின்னணியில் வெள்ளைப் பூக்கள் சிதறிய காட்டன் புடவை அணிந்து வந்திருந்தாள். அதன் முந்தானையை அகலமாய் தரையில் பரப்பி இடக்காலை சற்று மடித்து வலது காலை முழுதுமாய் நீட்டி அவள் படுத்திருந்தாள். மழை அவள் கூந்தலை நனைத்து என்னுள் இறங்க ஆரம்பித்திருந்தது.
நான் மொஸார்டை நிறுத்தினேன். இசைத்து வெகுநாள் ஆகியிருந்த பியானோவை உயிர்பித்தேன் அவள் படுத்திருந்த இடத்திலிருந்து ஆங்கில எழுத்து T வாக்கில் நான் அமர்ந்து இசைக்கத் துவங்கினேன். பயிற்சிக்காய் வாசித்துப் பழகிய குறிப்புகளை இசைக்கத் துவங்கியதும் அவள் கண்களை மூடிக் கொண்டாள். மழை அதே மென்மையோடு தொடர்ந்து கொண்டிருந்தது. நான் என் வானிலே வை வாசிக்கத் துவங்கியதும் அவள் எழுந்து கொண்டாள் அந்தப் பாடலை நான் வாசித்து முடிக்கும் வரை அசையாது அமர்ந்திருந்தாள். பின்பு எழுந்து வந்து பியானோ மரச்சட்டங்களில் வலது கை முட்டி யூன்றியபடி என் கண்களை ஆழமாய் பார்க்கத் துவங்கினாள்.
0
சொந்த ஊரில் வசிக்க நேர்ந்தால் என்னால் ஒரு வரி கூட எழுத முடியாதெனத்தான் தோன்றுகிறது எழுத வேண்டிய அவசியமும் நேர்வதில்லை. நேரப் போதாமின்மை என்பதை விட எல்லாவற்றையும் எழுத்துக்களாக்கிப் பார்க்கும், தன்னுலகத்தைப் பிரதானப்படுத்தி பொதுவில் வைக்கும் அல்லது எழுத்தின் மூலமாக அக அரிப்பை, விளம்பர நமைச்சலைத் தீர்த்துக் கொள்ளும் மனநிலை சொந்த நில வாழ்வில் இல்லாதிருப்பதும் எழுத்தை உற்பத்திச் செய்யாதிருப்பதிற்கான காரணங்களாக இருக்கலாம். மேலும் எழுத்தை செய்பவர்களுடனான சகவாசமும் இல்லாதிருப்பதால் நமைச்சல்கள் சற்றுக் குறைவுதான். எனக்குத் தெரிந்த எழுத்தாளர் நண்பர்கள் பலர் எழுதுவதை நிறுத்தி விட்டிருக்கிறார்கள், அல்லது பல வருடங்களாய் ஒன்றுமே எழுதுவதில்லை. அவர்களின் இந்த நிலைப்பாட்டின் மீது எனக்கு வாஞ்சை இருக்கிறது. எவரிடமும் நீங்கள் ஏன் எழுதுவதில்லை என்ற கேள்வியை கேட்க விரும்புவதில்லை. மேலும் முன்பொரு காலத்தில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் சமீபத்திய எழுத்துக்களையெல்லாம் கவனமாகத் தவிர்த்து விடுகிறேன். என்றைன்றைக்குமானவைகள் சிலரால் மட்டுமே சாத்தியமாகின்றன. அல்லது அப்படி எதுவும் இல்லாதிருக்கவும் கூடும்.
எழுதுவது என்பதிலிருந்து செய்வதினுக்கு நகர்வது மனிதனின் அற்பத் தனங்களில் ஒன்றுதான். இதெல்லாம் எழுதப்பட்டது இதெல்லாம் செய்யப்பட்டது என திட்டவட்டமாய் எதையும் சொல்லிவிடமுடியாதுதான் என்றாலும் அவரவருக்கு போலித்தனமாய் தோன்றும் எழுத்துக்கள் அந்தந்த வாசகனின் துயரமாகத்தான் இருக்கிறது. தான் இயங்கும் தளத்தின் விரிவையும் ஆழத்தையும் உணர்பவனால் மட்டுமே ஓரளவிற்கு நேர்மையானவற்றை நிகழ்த்திக் காட்ட முடியும் பூனையின் கண் கொண்டு இப்பரப்பில் பிதுங்கி வழிபவர்களால் உண்டாவது வாசகனின் வெளியேற்றம் மட்டுமே.
0
நீர் சேகரித்த
நத்தைக் கூடுகள்
கானகத்தில் வழி தவறிய
சிறுவனின் தாகம் தணிக்கலாம்
பாதாளச் சிறையிலடைக்கப்பட்ட
இளவரசியை உயிர்த்திருக்க வைக்கலாம்
நண்பகல் வரை கத்திக்கொண்டிருந்த
தவிட்டு வால் குருவியின் தொண்டையை
இதப்படுத்தலாம்.
தேனுண்ணும் வண்ணத்துப் பூச்சியினுக்கோ
கவிதை எழுதும் எனக்கோ
தாகம் குறித்துச் சொல்ல
எதுவுமில்லை
ஒருவேளை
மென் சிறு புன்னகையை
எப்போதும் தேக்கி வைத்திருக்கும்
அவளின் ஈர உதடுகளுக்குத்
தெரிந்திருக்கலாம்
16 comments:
த்ராபை :)
நத்தை கவிதைகள் இரண்டும் வெகு அழகு புலி
த்ராபை..இந்த வார்த்தையால் ஈர்க்கப் பட்டு தான்உள்நுழைந்தேன்,
நிதானமான அடர்ந்த எழுத்து.வாசிக்க நன்று.
வாசித்து முடிக்கையில் நத்தைகள் மேல் அபிமானம் வந்து விடும் போல !அழகான நத்தைகளை கவனம் பெற வைத்தமைக்கு நன்றி .
for e-mail follow up
பிரதியை படிக்கும் வாசகனையும்,பிரதியில் உலவ விட்டு விடுகிறீர்கள்.அருமையாக இருந்தது அய்யனார்!
நல்ல பதிவுங்க அய்ஸ்.
அட அட அட.
//முன்பொரு காலத்தில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் சமீபத்திய எழுத்துக்களையெல்லாம் கவனமாகத் தவிர்த்து விடுகிறேன். என்றைன்றைக்குமானவைகள் சிலரால் மட்டுமே சாத்தியமாகின்றன. அல்லது அப்படி எதுவும் இல்லாதிருக்கவும் கூடும்.//
இது வரை உங்கள் எழுத்து சலிக்கவில்லை. In fact this one is vintage Aiys.
அனுஜன்யா
நேர்த்தியான நடை.. மென்மை சொட்டும் கவிதை வரிகள்..
//தன் நீர்க்கூடுகளை
நிதானமாய்
சுமந்தலைகின்றன//
நத்தை அழகான படிமம்.
நத்தை கவிதைகள் நத்தை நகல்வை போல் அழகாகவும்.
முதல் பத்தி மஞ்சள் வெயில் போலவும்(நாட் எக்சாக்டிலி கொஞ்சம்)
இரண்டாம் பத்தி அதிர்வாகவும்,
மூன்றாம் பத்தி புனைவாகவும்,
நான்கு நிஜம் போலவும் இருக்கு.
//நேரப் போதாமின்மை என்பதை விட எல்லாவற்றையும் எழுத்துக்களாக்கிப் பார்க்கும், தன்னுலகத்தைப் பிரதானப்படுத்தி பொதுவில் வைக்கும் அல்லது எழுத்தின் மூலமாக அக அரிப்பை, விளம்பர நமைச்சலைத் தீர்த்துக் கொள்ளும் மனநிலை சொந்த நில வாழ்வில் இல்லாதிருப்பதும் எழுத்தை உற்பத்திச் செய்யாதிருப்பதிற்கான காரணங்களாக இருக்கலாம்//
:)) நல்ல குட்டு!. என் தலையையும் சேர்த்து தான் அய்ஸ் :))
உடனடியா ஒரு நத்தையை பார்க்கனும் போல இருக்கே :)
த்ராபை :)
நத்தை கவிதைகள் நன்று
என்னென்னவோ உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. நேற்றே படித்து விட்டாலும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
நத்தை கவிதை ரொம்ப அழகு!
நன்றி கென்
நன்றி கார்த்திகா
நன்றி மோகன்
நன்றி கார்த்திக்
அனுஜன்யா மிக்க நன்றி
தொடர்பவன் தொடருங்கள் :)
நன்றி லாவண்யா
ஆதவன் நன்றி :)
அமித்து அம்மா நத்தைகளை உடனடியாகப் பார்க்க முடியும் தேசத்திலிருப்பதுதான் எழுதுவதை விட மகிழ்வானதாய் இருக்க முடியும் :)
நன்றி அஷோக்
மிக்க நன்றி தீபா
சாரா, வீணா.
ம்ம்...நடக்கட்டும் :)
நத்தைகளை பார்த்தே வருசங்களாகிறது அய்யனார். :(
இன்னொண்ணு சொல்லணும் ஆனா இப்ப இல்லை. ;)
படித்து முடித்தபின் மனதை என்னவோ செய்கிறது ....... மிக அருமை !!!
நீண்ட நாட்கள் கழித்து உங்கள் வலைப் பக்கம் வருகிரேன் அய்யனார்.
அனுபவித்து வாசிக்க வாசிக்க ஒர் அற்புத அனுபவம்.
உங்களுடன் மசினகுடியில் நான்(கதிர்,வெயிலான் மற்றும் செல்வா) கழித்த ஓர் இரவை நான் நினைவு அலைகளில் திரும்பி பார்க்கிறேன்.
Post a Comment