Wednesday, February 10, 2010

கினோகுனியா

இருவரும் திகைத்துத்தான் போனோம். கிட்டத் தட்ட இரண்டு மணி நேரத்தினுக்கும் மேலாக இந்தப் பேரங்காடியின் இரண்டாவது தளத்தில் கினோகுனியா வைத் தேடிக் கொண்டிருக்கிறோம். கினோகுனியா என்பது புத்தகக் கடையின் பெயர். உலகின் பெரும்பாலான பகுதிகளில் இந்தக் கடை தங்களின் கிளைகளை வைத்துள்ளது. பெரும்பாலான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால் இந்தக் கடைக்கு அடிக்கடி வருவோம். இவள் இக்கடையின் உறுப்பினர் திட்டத்திலும் இருக்கிறாள். இருநூறு திர்ஹாம்களுக்கு மேல் வாங்கினால் இருபது திர்ஹாம் தள்ளுபடியும் இவளுக்கு கிடைக்கும். இன்று இந்தக் கடையைக் காணோம். சுற்றி சுற்றி ஒரே இடத்தினுக்கு வந்து கொண்டிருந்தோம் இருவருக்குமே மிக நன்றாகப் பரிச்சயமான இடமிது. திடீரென எப்படி மறைந்து போகும்? இவ்வளவு பெரிய கடையினை காலி செய்யவே கிட்டத்தட்ட பத்து நாட்கள் பிடிக்கும் இவள் போன வாரம் வேறு இங்கு வந்து போயிருக்கிறாள். இந்த வாரம் கினோகுனியா இருந்த இடத்தில் பாரீஸ் காலரி என்கிற வாசனைத் திரவியக் கடை இருக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய பேரங்காடியான இதில் இடக்குழப்பங்கள் சாதாரணமென்பதால் பழியை எங்களின் கவனத்தின் மீது போட்டுக் கொண்டு இந்தத் தளம் முழுக்க சுற்றியலைந்தோம். உண்மையிலேயே அந்தக் கடை இல்லை.

வேறு உதவியை அணுகலாம் என்கிற நோக்கில் அங்குத் தென்பட்ட பேரங்கடிக் காவலர்களிடம் விசாரிக்க முடிவு செய்தோம். சீருடை அணிந்த மண்ணின் மைந்தர் ஒருவரிடம் விசாரிக்கையில் “அப்படி எதுவும் இங்க இல்லயே” என்றார். இவள் துணுக்குற்றாள் “முன்னாடி வந்திருக்கோம் இடம் மறந்திடுச்சி” “இல்ல மேடம் அந்த மாதிரி கட எதுவும் இங்க இல்ல. வேணும்னா அங்க இருக்க மேப்ப பாத்துக்கோங்க” என்றபடியே விலகிப் போனார். ஒவ்வொரு தளத்திலும் பேரங்காடியின் வரைபடம் சட்டம் போட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிந்தும் அதை இருவருமே மறந்துவிட்டிருந்தோம். லேசாய் சிரித்தபடியே வரைபடத்தை நோக்கிச் சென்றோம். வரைபடத்திலும் கினோகுனியா இல்லை. இருவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு மணி நேரம் அலைந்ததில் இருவரின் முகத்திலும் சோர்வு படித்திருந்தது. ஆனாலும் கடை குறித்தான தகவல்களையாவது அறிந்து கொண்டேயாக வேண்டுமென இவள் பிடிவாதமாய் இருந்தாள். என்னால் அவளை சமநிலைக்கு கொண்டு வர முடியவில்லை.

பேரங்காடியின் உதவி மேசை நினைவுக்கு வரவே அங்கு சென்று விசாரித்தேன். உதவி மேசையிலும் அப்படி ஒரு கடை இல்லை என்றார்கள். இவளின் ஆத்திரம் அதிகமானது ஆங்கிலத்தில் இரையத் துவங்கினாள். “நான் போன வாரம்தான் அந்த கடைக்கு வந்து மூணு புக் வாங்கினேன் இதோ இதே தளத்துலதான் அந்த கட இருந்தது. அதுக்குள்ள எப்படி காணாம போகும்? நீ வேலைக்கு புதுசா? எவ்ளோ நாளா இங்க இருக்க? இந்த மால் மேனேஜர கூப்டு” என்கிற அவளின் கத்தலுக்கு அங்கங்கே சென்று கொண்டிருந்தவர்கள் ஒரு கணம் நின்று விட்டு பின்பு நடக்க ஆரம்பித்தனர். நான் பொறுமையை மெதுவாய் இழக்கத் துவங்கினேன். பசி வேறு கோபத்தை அதிகமாக்கியது.

“ஏய் வா போலாம்.” “இல்ல நான் இந்த மால் மேனஜர பாத்துட்டுதான் வருவேன். உங்க மேனஜர கூப்ட போறிங்களா இல்லயா” என உதவி மேசைக்காய் திரும்பி அவள் கத்தத் துவங்கினாள்.

அந்த பிலிப்பைன் தேசத்துப் பெண் இவளின் கத்தலில் பயந்து போனது யாருக்கோ அவசரமாய் தொலைபேசியது. குட்டி மாமிச மலையையொத்த அராபியர் ஒருவர் அசைந்து அசைந்து வந்தார். என்ன விசயம் என இவளிடம் கேட்க இவள் கினோகுனியா புராணத்தை ஆரம்பித்தாள். குட்டி மலை சிரமப்பட்டு வாய் திறந்து என் முப்பது வருட அனுபவத்தில் அப்படி ஒரு கடையை நான் கேள்விப்பட்டது கூட இல்லை என்றார். இவளுக்கு கண்களில் நீர் திரண்டது. என் விரல்களை அழுத்தமாய் பிடித்துக் கொண்டாள். பின்பு உதவி மேசையை விட்டு நகர்ந்தாள். சற்று தூரம் நடந்து சென்று அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து அழத் துவங்கினாள். எனக்கு கோபம், எரிச்சல், பரிதாபம், என எல்லா உணர்வுகளும் ஒரே சமயத்தில் எழுந்தன.

மெல்ல அவளருகில் அமர்ந்து தலைவருடிச் சொன்னேன் “இங்க இருக்க எல்லாப் பயலுகளும் முட்டாளுங்க புக்க பத்தி இவனுங்களுக்கு என்ன தெரிய போவுது. ஒரு வேள நாம எந்த தளம்னு மறந்து போயிருக்கலாம் அடுத்த வாரம் வந்து மெதுவா முதல் தளத்துல தேடலாம் இப்ப வா போலாம்” என்றேன். அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். “அப்படியும் இருக்கலாம். வா இப்பவே போய் முதல் தளத்துல தேடலாம்” என என்னை இழுத்தபடியே தானியங்கி படிக்கட்டுகளுக்காக காத்திருக்காது படிகளில் தாவித் தாவி இறங்கினாள். எனக்கு கண்கள் இருண்டன.
0

இந்த நாள் இத்தனை மோசமாக விடிந்திருக்கவில்லை. இந்தப் பாலையில் எப்போதாவது பெய்யும் அபூர்வ மழை நேற்றைய இரவில் ஆரம்பித்திருந்தது. அடர்ந்த மேகங்களும் பிசுபிசுத் தூறல்களும் என் சொந்த தேசத்தில் வாழும் உணர்வைத் தூண்டியிருந்தன. பின்னிரவு முழுக்கத் தூங்காது மழையோடும் பாடல்களோடும் நொடிகளை நகர்த்திக் கொண்டிருந்தேன். லேசாய் வெளிச்சம் வர ஆரம்பித்த போது வெகு மாதங்கள் கழித்து ஒரு கவிதையை வேறு எழுதி விட்டிருந்தேன். மிகுந்த நிறைவோடு தூங்கச் செல்கையில்தான் தொலைபேசியில் இவள் அழைத்தாள். பத்து நாட்களுக்கு முன்பு செத்தாலும் என் முகத்தில் விழிப்பதில்லை என்ற சபதங்களோடு சென்றவள் இன்றுதான் அழைக்கிறாள். நடுவில் நான் இரண்டு முறை தொலைபேசியில் அழைத்தும் ஒரு முறை நேரில் சென்றும் கூட அவளின் கோபத்தை தணிவிக்க முடியாமலிருந்தது. ஒருவேளை மழையைப் பார்த்து இளகிவிட்டாளோ என புன்னகைத்தபடியேதான் தொலைபேசியை உயிர்ப்பித்தேன்.

அவள் குரலில் இன்னும் லேசாய் கோபமிருந்தது. ஆனாலும் அவளுக்கு கடந்த ஆறு நாட்களாக நடக்கும் சம்பவங்களின் புதிர் தன்மை என்னிடம் சொல்லாதிருக்க முடியாததாய் இருந்திருக்கிறது. இதுவரை அவள் பதினேழு பொருட்களைத் தொலைத்திருக்கிறாள். இன்னும் என்னவெல்லாம் காணாமல் போகுமோ என்று நினைத்து பயந்துதான் என்னை அழைத்திருக்கிறாள். முதலில் தொலைந்தது அவளின் செல்போன். என்னிடம் கோபித்துக் கொண்டு போன மூன்றாம் நாள் மாலை அது காணாமல் போயிருக்கிறது. மாலை நடைக்கு அவள் வழக்கமாய் செல்லும் டெய்ரா ஆப்ரா சாலையில்தான் அது காணாமல் போயிருக்கிறது. இவள் நடைக்கு செல்லும்போது உடன் கைப் பை எதுவும் எடுத்துச் செல்வதில்லை. செல்போனை மட்டும் எடுத்துச் செல்வாள். வழியில் தெரிந்தவர் தென்பட்டாலும் கூட ஒரு புன்னகையோடு கடந்து விடுவது இவள் வழக்கம். அந்த போன் எப்படி மாயமானது என்பது இந்த நிமிடம் வரை அவளுக்குப் புதிராக இருப்பதாகச் சொன்னாள். இரண்டு புத்தகங்கள், நான்கு டிவிடிகள், இரண்டு ரேபான்கள், கார் சாவி, தங்கக் கொலுசு (ஒரே ஒரு காலில் மட்டும் அணிந்திருப்பாள். மிக மெல்லிதான ஒரே ஒரு முத்து வைத்த கொலுசு அதை மட்டும் அணிவதாய் ஒத்துக் கொண்ட இரவில் நான் வாங்கித் தந்தது) இரண்டு வளையல், ஒரு நகவெட்டி, இரண்டு சிகரெட் லைட்டர் என இத்தனையும் காணாமல் போயிருக்கின்றது.

யாராவது உன் நண்பர்கள் எடுத்து வைத்து விளையாடுவார்கள் என அவளைத் தேற்றினேன். அவளுக்கு அதிகம் நண்பர்களில்லை மேலும் அவளின் வீட்டிற்கெல்லாம் அத்தனை எளிதில் யாரையும் அனுமதிப்பவளுமல்ல என்பதினால் என்னுடைய ஆறுதல்கள் பலனில்லாமல் போனது. தன்னைச் சுற்றி ஏதோ வினோதமாக நடக்கிறது என புலம்பினாள். ஒவ்வொன்றாய் காணாமல் போய்கொண்டு வந்து கடைசியில் தானும் காணாமல் போய்விடுவதுதான் நடக்கப் போகிறது என பயந்தபடியே அவள் சொன்னபோது எனக்கு வந்த தூக்கமும் காணாமல் போனது.

அடுத்த அரை மணிநேரத்தில் அவளின் வீட்டிலிருந்தேன். என்னைப் பார்த்ததும் கோபத்துடனே சிரித்து வைத்தாள். ஏதாவது கவன குறைவில் எங்காவது வைத்திருப்பாள் என்றுதான் அவள் முகத்தினைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது. உள்ளே தோன்றிய வினோத மனநிலை சமநிலைக்கு வந்தது. அவள் ஒவ்வொரு பொருளும் காணாமல் போன நேரம், இடம், சம்பவங்கள் என துல்லியமாய் விளக்க ஆரம்பித்தாள். நான் ஒரு சின்ன கொட்டாவியுடன் வரவேற்பரையிலேயே தூங்க ஆரம்பித்தேன்.அவள் நான் தூங்குவது தெரிந்தும் கூட சொல்லிக் கொண்டிருந்தாள்.

மதிய உணவிற்காகவும் அப் இன் த ஏர் படம் பார்க்கவும்தான் இந்தப் பேரங்காடியினுக்கு வந்தோம். இரண்டு மணிக் காட்சி நிறைந்து விட்டதால் நான்கரை மணிக் காட்சிக்கு இரண்டு டிக்கெட்டுகள் எடுத்துக் கொண்டு மீதமிருக்கும் இரண்டு மணிநேரத்தை கினோகுனியாவில் கழிப்பதுதான் எங்களின் திட்டமாக இருந்தது.

0
முதல் தளத்திலும் இதற்கும் அதற்குமாய் விறுவிறு வெனத் தேட ஆரம்பித்தாள். எல்லாரிடமும் விசாரித்தாள். ஒரே பதிலே திரும்பத் திரும்பக் கிடைத்தது. நான் பொறுமை இழந்து அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்துகொண்டேன். காலையிலிருந்து எதுவுமே சாப்பிட்டிருக்கவில்லை. நன்கு தெரிந்த ஒன்றை எல்லாரும் இல்லை இல்லை எனும்போது ஆத்திரமாக வருகிறது. அவள் இன்னும் குழம்பிப் போய் இருந்தாள். இழுக்காத குறையாய் அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினேன். கீழ்தளத்திலிருந்து காரை உயிர்ப்பித்து வெளியே வந்தோம். இவள் புலம்பலை நிறுத்தவில்லை. கண்களில் மெல்லிதாய் நீர் பளபளத்தது.

“எவ்ளோ பெரிய கட எப்படி யாருக்கும் தெரியாம போகும்” இப்பவாச்சும் நம்புறியா என்ன சுத்தி ஏதோ நடக்குது” என பேசிக்கொண்டே வந்தவள் திடீரென சக்கரங்கள் அதிரும்படி ப்ரேக் பிடித்து காரை நிறுத்தினாள். கதவுகளை வேகமாய் திறந்து கொண்டு “அவன் தான் அதே கிழவன் தான். ஒவ்வொரு பொருளும் காணாம போவும்போதும் இந்தக் கிழவன பாக்குறேன் இந்த கடைய மறைச்சது இவனாதான் இருக்க முடியும். உன்ன விட மாட்டேண்டா!” எனக் கத்தியபடியே யாரையோ நோக்கி ஓடத் துவங்கினாள்.
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...