Tuesday, December 22, 2009

தனிமையின் இசை - என்னுரை

கடந்த மூன்று வருடங்களாய் என் வலைப்பூவில் எழுதப்பட்ட கவிதை வடிவ மாதிரிகளின் தொகுப்புதாம் இவை. எழுதப்பட்ட தருணங்களில் இவை அச்சிற்கானவை என்கிற தயாரித்தல்கள் எனக்கில்லாமல் இருந்தன. சுய புலம்பல்களாகவும், மிகவும் தன் வயமான உலகின் வெளிப்பாடாகவும், இருத்தலின் ஆசுவாசமாகவும் இவ்வடிவங்கள் என்னிலிருந்து தன்னைக் கட்டமைத்துக் கொண்டிருக்கலாம். எழுதப்படும் வரையிலிருந்து எழுதப்பட்ட பின்பு வரை அதே வார்த்தைகள் தரும் உணர்வு வெவ்வேறாய் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் பெருமித மகிழ்வுணர்வைத் தரும் இதே வார்த்தைக் கோர்வைகள் பின்பொரு நாளில் ஏளனத்தையும் சலிப்பையும் உண்டாக்கி விடுகின்றன. எப்போதைக்குமான மகிழ்வுகளையும் எப்போதைக்குமான இழத்தல்களையும் காலம் மிகச் சுலபமாய் கடந்து போகிறது.

இக்கவிதைகளில் மிகப் பிரதானமாய் இருப்பது நான் தான். என்னிலிருந்து என்னைக் கண்டறிவதே மிகக் கடினமாய் இருக்கிறதெனக்கு. மற்றவர், மற்றது இவைகளின் மீதெல்லாம் எனக்குப் பெரிதாய் அக்கறையோ வருத்தமோ இல்லாமலிருந்திருக்கிறது என்பதை இத் தொகுப்புகள் அறியத் தருகின்றன. போலித்தனம் குறைவான நார்சிச மனம் என்கிற சுய மதிப்பீடுகள்தாம் தொடர்ந்து இயங்க குறைந்த பட்சக் காரணமாய் இருக்கிறது. இதற்கானதென்று அறியாத என் புற அலைவுகளில் கிடைத்த ஏமாற்றமும் அந்நிய வாழ்நிலங்கள் தந்த அயற்சியும் அக அலைவுகளை நோக்கி இடம் பெயரச் செய்தன. புறம் அகம் இரண்டையும் ஒரே கோட்டில் சமன் செய்வதுதான் இக்கவிதைகளின் உயர்ந்த பட்ச சாத்தியமாக இருக்கிறது.

பிறழ்ந்த மனதின் பல்வேறு இடுக்குகளிலிருந்து வெளியேறும் வார்த்தை பூதங்கள் வெளித்துப்பும் கோர்வைகள் மயக்கத்தையும் பயத்தையும் இரு தரப்பிலும் உண்டாக்குகின்றன. எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் வார்த்தைகளில் பிடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கைகள் கவிதை வடிவத்தின் மீதான காதலை வலுவூட்டுகின்றன.

அலைந்து திரிந்து பிறழ்ந்து தற்போது மய்யமாகிப் போன விளிம்பு மனதின் அந்தந்த நிலைப்பாடுகள் இவைகள் என்பதைத் தவிர்த்து இக்கவிதைகள் குறித்து எழுதியவனாய் சொல்ல வேரெதுவுமில்லை. இதுவே மிகையாகவும் இருக்கலாம். மற்றபடி எவரும் பேசாததையோ எவராலும் சொல்லிவிட முடியாததையோ நான் பேசிவிட மெனக்கெடவில்லை. என் வாழ்வு எனக்குத் தந்ததை வன்மமாகவும், குரூரமாகவும், இரகசியக் கிசுகிசுப்பாகவும் உங்களிடம் கடத்த முயன்றிருக்கிறேன். அந்தந்த உணர்வுகளை அந்தந்த மாதிரியே இவைகள் உங்களுக்குள் கடத்தியிருந்தால் அதுவே இதற்கான நிறைவாய் இருக்க முடியும். அப்படி இல்லாமல் போனாலும் அஃது எவரின் குறைபாடுமில்லை.

வலைப்பூ வாசகர்களுக்கு, இணைய நண்பர்களுக்கு, சக வலைப்பதிவர்களுக்கு, வலைப்பூத் திரட்டிகளுக்கு என் முதல் நன்றியும் அன்பும். எனக்கான ஆசுவாசத்தை, நிறைவை அல்லது அதைப் போன்ற ஒன்றை இக்காலகட்டங்களில் எனக்குக் கிடைக்க இவ்விணைய வெளி உதவியாய் இருந்திருக்கிறது. எப்போதும் விழிப்பாய் இருந்த எழுத்துச் சோம்பலனை சக வலைப்பூக்களும் பதிவர்களும் எழுந்து சோம்பல் முறிக்க உதவியிருக்கின்றனர்.

எதிர்பார்ப்புகளற்ற அன்பை எல்லா விதங்களிலும் எனக்குத் தந்துகொண்டிருக்கும் பவாவும் ஷைலஜாவும் இப்புத்தத்தின் மூலமாய் இவ்வுலகில் பிரவேசிக்க வைத்திருக்கிறார்கள். என்னுள் புதிய நம்பிக்கைகளை, துளிர்ப்புகளை மலரச் செய்திருக்கும் இவர்கள் என் வாழ்வில் அபூர்வமானவர்கள்.

நூறு பக்கங்களுக்கு மேல் விரல்கள் நோகத் தட்டச்சி, நேர்த்தியான முகப்பு அட்டையை மிகுந்த சிரத்தையுடன் உண்டாக்கி இவ் உள்ளடக்கத்தில் குறைந்திருக்கும் அழகியலை புத்தக வடிவத்தின் மூலமாய் கூட்டிய வம்சி நண்பர்களுக்கு என் நன்றியும் அன்பும்.

வலையெழுத வந்ததிலிருந்து இன்று வரை என்னை வாசித்தும், விமர்சித்தும் சகித்தும் கொண்டிருக்கும் தமிழ்நதிக்கு என்னுடைய அன்பு.

நன்றி என்கிற ஒற்றைச் சொல்லினை மட்டும் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் வேண்டிய மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் என் சந்தர்ப்பத் துய்த்தல்களை சில நேரங்களில் புன்னகையோடும் சில நேரங்களில் அசூசையோடும் பார்த்துக் கொள்கிறேன்.

அய்யனார்
துபாய்
30 நவம்பர் 2009

22 comments:

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்.

Mohan said...

உங்கள் கவிதைகளை மீண்டும் ஒரு முறை புத்தக வடிவில் படிப்பதற்கு ஆவலாய் உள்ளேன்.வாழ்த்துகள் அய்யனார்!

சென்ஷி said...

//
நன்றி என்கிற ஒற்றைச் சொல்லினை மட்டும் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் வேண்டிய மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் என் சந்தர்ப்பத் துய்த்தல்களை சில நேரங்களில் புன்னகையோடும் சில நேரங்களில் அசூசையோடும் பார்த்துக் கொள்கிறேன்.
//

அசத்தல் மாம்ஸ் :)

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் பாஸ் :)

ஸ்ரீவி சிவா said...

வாழ்த்துகள் அய்யனார்!!!
உங்கள் 'வலை'யில் கிட்டத்தட்ட எல்லா கவிதைகளையும் ரசித்துப் படித்திருக்கிறேன்.
ஒரு தொகுப்பாய் புத்தக வடிவில் இன்னும் புதிய உணர்வுகளைத் தருமென தோன்றுகிறது!
விரைவில் வாங்கி படிக்க ஆர்வம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் அய்யனார் !!!!!!

தன்வயமான எழுத்துகள் தன்னை உணரத்தருவதாகவும் இருக்கிறது வாசகனுக்கும் . புத்தகம் எல்லோரும் சொன்னது போல தாமத பிரசவம்

பகுப்பு மூன்றாய் இருப்பது கொடை
அவரவர்க்கான கனவுப் பெண் போல...

அ.மு.செய்யது said...

எத்தனை முறை படித்தாலும் சலிக்காத எழுத்து நடை !!!

உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேனே..கிடைக்கவில்லையா ??

அமிர்தவர்ஷினி அம்மா said...

விரைவில் வாங்கி படிக்க ஆர்வம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது //

ஆம் அதே.

chandru / RVC said...

//நன்றி என்கிற ஒற்றைச் சொல்லினை மட்டும் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் வேண்டிய மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் என் சந்தர்ப்பத் துய்த்தல்களை சில நேரங்களில் புன்னகையோடும் சில நேரங்களில் அசூசையோடும் பார்த்துக் கொள்கிறேன்.//
ஆரம்பிச்சுட்டிங்களா? கவிதையை உள்ள எழுதுங்கப்பா...

பீர் | Peer said...

வாழ்த்துக்கள். :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் அய்யனார்.

குப்பன்.யாஹூ said...

thanks for sharing.

I forgot to write in your previous posts.

You can arrange to get your books to Dubai so that Middle east bloggers would buy and read it.

குப்பன்.யாஹூ said...

I mean if you brought your books (may be 50 to 100 units) from Dubai it is easy and cheaper to courier to Saudi, Oman, Qatar, Baharain and other Gulf, UK, France based Tamil bloggers. They may not be able to visit Chennai book exhibition.

விமலா said...

வாழ்த்துக்கள் அய்யனார்!
புத்தக வடிவில் உங்கள் கவிதைகள்
இன்னும் செம்மையாக இருக்கும்
என்பதில் ஐயமில்லை!

நிலாரசிகன் said...

/எப்போதைக்குமான மகிழ்வுகளையும் எப்போதைக்குமான இழத்தல்களையும் காலம் மிகச் சுலபமாய் கடந்து போகிறது.//

அற்புதம். இதற்காகவே இந்நூல் வாங்கலாம்.

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள்

Ayyanar Viswanath said...

நன்றி டீச்சர் :)

நன்றி மோகன்

நன்றி சென்ஷி

நன்றி ஆயில்யன்

நன்றி சிவா

பகிர்வுகளுக்கு நன்றி மித்ரன்

Ayyanar Viswanath said...

நன்றி செய்யது.மின்னஞ்சல் கிடைத்தது.வார இறுதியில் தொலைபேசுகிறேன்

நன்றி அமித்து அம்மா

நன்றி சேகர் :)

நன்றி பீர்

நன்றி செந்தில்

Ayyanar Viswanath said...

ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி குப்பன் அப்படியே செய்கிறேன்.

நன்றி விமலா உங்கள் பக்கத்தில் அவ்வப்போதாவது கவிதைகளை இடுங்கள்

மிக்க நன்றி நிலாரசிகன்

நன்றி சரவணக்குமார்

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் அய்ஸ் :)

புத்தகத்திற்காக வெயிட்டிங்!

அது ஒரு கனாக் காலம் said...

வாழ்த்துகள் அய்யனார்

ஆடுமாடு said...

வாழ்த்துகள்.

Featured Post

test

 test