Tuesday, April 28, 2009

கிம் கி டுக் கின் The Isle : நீர் மோகினிThe Isle (2000)
இத் திரைப்படத்தின் கடைசிக் காட்சி இப்படி இருக்கும்

நதியிலிருந்து ஒருவன் வெளிப்படுவான்.அடர்த்தியாய் உயரமாய் வளர்ந்திருக்கும் பசும் புற்களினுள் நுழைந்து காணாமல் போவான்.நதியும்,பசும்புற்களும் அவனுமாய் அவளின் யோனிக்குள் உள்ளடங்கி இருப்பதாய் காட்சி அவளின் உடலில் சுருங்கும். நீரில் மூழ்கியிருக்கும் அவளது வெற்றுடலின் யோனிக்குள் இன்னொரு நதியும்,நெடிதுயர்ந்த பசும்புற்களும்,அவளின் காதலனும் பத்திரமாய் இருப்பதாக இந்த திரைப்படம் முடியும்.புனைவுகள் தொடும் உயர் எல்லைகள் பார்வையாளனுக்கு / வாசகனுக்கு பெரும் கிளர்வுகளைத் தருவதாய் இருக்கின்றன.திரையில் இப்புனைவின் உச்சம் வந்து போவது இரண்டு நிமிடத்திற்கும் வெகு குறைவானதே.ஆனால் அந்தக் காட்சி ஏற்படுத்திய தாக்கம் அல்லது ஆச்சர்யம் இன்னமும் நீடித்திருக்கிறது.ஒரு திரைப்படத்தை ஒரே காட்சியின் மூலம் இன்னொரு தளத்திற்கு நகர்த்துவது என்பது அசாத்தியமானது.கொரிய இயக்குனரான கிம்கிம்கிடுக்கின் திரைப்படங்கள் பெரும்பாலும் கனவுத் தன்மையை ஒட்டியவை.தியானத்திற்கு நிகரானவை.இவரது திரைப்படங்களின் ஒவ்வொரு காட்சியும் புதிர்,தியானம்,அமைதி மூன்றும் கலந்த கலவையை கண்முன் கொண்டுவரும்.இயற்கையை அதன் அழகோடும்,கம்பீரத்தோடும்,சாந்தத்தோடும் இவரால் திரையில் கொண்டு வர முடிகிறது. Spring Summer fall Winter and spring திரைப்படம் இயற்கையை அதன் தூரிகை கொண்டே திரையில் வரைந்த உணர்வைத்தான் தந்தது.இவரது இன்னொரு திரைப்படமான 3 iron இன்னொரு உச்சத்தை தொட்டிருக்கும்.காதல்,மனிதம்,வினோதம் இதனோடு myth ஐயும் வெகு ஆழமாக இவரால் திரையில் கலக்க முடிகிறது.

The isle (தீவு) என்கிற இந்தத் திரைப்படம் உலகின் பார்க்கவே முடியாத குரூரமான முதல் பத்து படங்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கிறது.இந்தப் பட்டியல்கள் மீதெல்லாம் எனக்கு பெரும்பாலும் நம்பிக்கை இருப்பதில்லை.சில காட்சிகள் பார்க்க கடுமையாய் இருந்தாலும் என்னால் அதை குரூரமாகவெல்லாம் அணுகமுடியவில்லை.ஒரு காட்சியில் மீன் பிடிக்க உதவும் கொக்கிகளை hee-jin னின் காதலன் முழுங்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பான்.அவள் ஒரு கொறடாவைக் கொண்டு அவன் தொண்டையினுள் சிக்கி இருக்கும் கொக்கிகளை வெளியில் எடுப்பாள்.இன்னொரு காட்சியில் அவன் பிரிவினை தாங்க முடியாது மீன் கொக்கிகளை அவள் தன் யோனிக்குள் செலுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயலுவள் அதை அவளின் காதலன் கொறடாவைக் கொண்டு எடுப்பான்.படம் முழுவதும் நீரால் நிறைந்திருப்பதால்,அவள் எப்போது வேண்டுமானாலும் நீரிலிருந்து தோன்றுவாள் என்றுமாய் படம் நகர்வதால் நான் இருவரையும் மீனாகக் கருதிக் கொண்டேன்.மீனின் உடலுக்குள் சிக்கிய கொக்கியை விடுவிப்பது குரூரமாகுமா என்ன?

கிம் கி டுக்கின் பிரதான பாத்திரங்கள் பெரும்பாலும் பேசுவதில்லை.(3 iron இல் இருவருமே பேசுவதில்லை)இத்திரைப்படத்தின் கதாநாயகியும் பேசுவதில்லை.உணர்வுகளை உடல்/செயல் மூலமாக கடத்துவதையே கிம் கி டுக் விரும்புவார் போலும்.


நமது சூழலில் மோகினி,யட்சி,நீலி என பல்வேறு பெயர்களில் காடுகளில் எப்போதும் வசிக்கும் பெண்ணைப் பற்றியக் கதைகள் உலவுவது உண்டு.கிட்டத் தட்ட அதே குணாதிசியங்களுடனான பெண்தான் இக்கதையின் நாயகி.நமது சூழல் வனமென்றால் இங்கே நீர்.ஏரியில் மிதக்கும் வீடுகளைக் கொண்ட ஒரு சுற்றுலா இடத்தில் இக்கதை நிகழ்கிறது.படகில் அவ்வீடுகளுக்கு மனிதர்களையும்,உணவுகளையும்,இன்பத்தையும் கொண்டு செல்வது இப்பெண்ணின் தினசரியாய் இருக்கிறது.மனைவியைக் கொன்றுவிட்டு அங்கே பதுங்கி இருக்கும் hyun-shik ன் மேல் இவள் காதல் வயப்படுகிறாள்.இருவருக்கும் இடையூறுகளாக குறுக்கிடும் காவலர்கள்,பாலியல் தொழிலாளி,மற்றும் அவளின் முதலாளி போன்றவர்களை இருவரும் கடந்து வருகிறார்கள்.இருப்பினும் விடாது துரத்தும் பிரச்சினைகளிலிருந்து தப்பித்து தீவில் தொலைந்து போகிறார்கள் அல்லது தீவாய் மாறுகிறார்கள்.அவனையும் அத் தீவினையும் தனது யோனிக்குள் மறைத்துக் கொண்டு அவள் நதியினில் மிதந்து கொண்டிருக்கிறாள்.


கிழக்காசிய படங்களின் மீது மேற்கத்தியர்களுக்கு எப்போதும் ஒரு இளக்காரமான பார்வை இருக்கிறது.கிம் கி டுக் கின் திரைப்படங்கள் பிராணி வதையை பிரதானப்படுத்துகிறது என்கிற ரீதியிலான அமெரிக்கர்களின் விமர்சனங்கள் மொன்னை வாதத்தின் உச்சம்.உலகின் எல்லாப் பாகத்திலிருந்தும் எடுக்கப்படும் திரைப்படங்கள் அமெரிக்காவினையே அடியொற்றி இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் அளவுகோல்களாக இருக்கக் கூடும்.கொரியர்கள் மாமிசங்களை பச்சையாக உண்பது வழக்கம்.அவர்களின் திரைப்படங்களில் அவர்களின் உணவுப் பழக்கத்தைக் காண்பிப்பது பிராணி வதையாகுமா? Imdb யில் இன்னொரு பிரகஸ்பதி இத்திரைப்படக் கதாநாயகி வாய்பேசமுடியதவள் என்பதாய் ஒரு விமரிசனத்தை எழுதியிருக்கிறார்.நமது சாரு imdb மற்றும் wikipedia வில் தரப்பட்ட தப்பும் தவறுமான தகவல்களை அப்படியே தனது விமர்சனமாக்கி இருக்கிறார்.

ஒரு படைப்பை கண்டடைய சிறந்த விமர்சகன் அவசியம்தானென்றாலும் உன்னதங்களை எந்தச் சிறந்த விமர்சகனாலும் இருட்டடிப்பு செய்துவிட முடியாது என்பதற்கு கொரியத் திரைப்படங்கள் சிறந்த உதாரணம்.சமீப காலமாய் கொரியத் திரைப்படங்களின் மீதும் கிழக்காசியத் திரைப்படங்களின் மீதும் உலகின் கவனம் திரும்புவதையும் நல்ல மாற்றாக நாம் அணுகலாம்.
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...