Tuesday, April 14, 2009

மெனி மோர் ஹாப்பி ரைட்டன்ஸ்,பவா,ஜெயந்தன் மற்றும் நான் கடவுள்

என் அம்மாவைப் பொறுத்தவரை சித்திரை முதல் தேதிதான் என் பிறந்தநாள். ஆங்கிலத் தேதியையெல்லாம் அவள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இன்றைய விழிப்பு அம்மாவின் வாழ்த்தோடு தொடங்கியது.எனக்கு நேற்றுதான் பிறந்தநாள் என்றாலும் அவள் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. தொலைபேசியில், மின்னஞ்சலில், குழுமத்தில்,வலைப்பதிவில்,ஆர்க்குட்டில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்த/தெரிவிக்காத/தெரிவிக்க விரும்பாத அனைத்து நண்பர்களுக்கும் நன்றியும் அன்பும்.சந்தோஷ் many more happy writtens of the day என குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.ஹாப்பி ரைட்டிங்கையெல்லாம் இனிமேல்தான் துவங்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.உரையாடலினி இருபத்தொன்பது மின்னஞ்சல்களை அனுப்பியிருந்தாள்.தொலைபேசியில் அழைப்பதோ, நேரில் சந்திப்பதோ, இனிமேல் நடக்காதென்று இதற்கு முன்பு நடந்த கைகலப்பில் தீர்மானமாய் சொல்லிவிட்டதால் நேற்று மின்னஞ்சலோடு தன் அன்பை நிறுத்திக்கொண்டாள்.முதல் நாவலுக்கான முதல் பத்தியை நேற்று எழுதுமாறு கேட்டிருந்தாள்.எழுதி அனுப்பினேன்.

ஒரு வாரத்தில் ஊருக்கு சென்று திரும்பி மீண்டும் வேலைக்கு போவதெல்லாம் மிகவும் துன்புறுத்தலானது.வேலைக்கு போவதே இப்போதெல்லாம் துன்பமாகத்தான் இருக்கிறது.தேவைச் சாத்தானின் பல்லைப் பிடுங்கமுடியாமல், வலியோடு சிவ்விடும் இன்பத்தை துய்த்தபடி ஓடிக்கொண்டிருக்கிறேன்.வெகு சீக்கிரத்தில் நிறுத்திவிட வேண்டும் எல்லாவற்றையும்.ஊரிலிருந்த சொற்ப நாள்களின் கடைசி இரண்டு மணி நேரத்தை பவா செல்லதுரையுடன் கழிக்க முடிந்தது.இவர் வெகு காலமாக இலக்கியப் பரப்பில் இயங்கிக் கொண்டிருந்தாலும் எழுதியதென்னவோ வெகு சொற்பமான கதைகள்தாம். எளிமையான அன்பான மனிதர்.எல்லாருடனும் நட்பாய் இவரால் எப்படி இருக்க முடிகிறதென நினைத்துக் கொண்டேன்.பவா விற்காக ஒரு வலைப்பூவை தொடங்கியிருக்கிறேன் 19.டி.எம்.சாரோனிலிருந்து என்கிற இந்த வலைப்பூவில் அவர் இதுவரை எழுதியவற்றைப் பதிந்தும் தொடர்ந்து எழுதச் சொல்லியுமாய் கேட்டிருக்கிறேன். தமிழ்செல்வன், மாதவராஜ், காமராஜ் என தமுஎச படைப்பாளிகள் வலைப்பூவில் மலர்வது மகிழ்வாய் இருக்கிறது.

பாலுமகேந்திராவின் கதை நேரத்தை இரண்டு மாதத்திற்கு முன்பு டிவிடியில் பார்த்தேன்.பாஷை என்கிற ஜெயந்தனின் கதையை படமாக்கியிருந்த விதமும் கதையும் மனதிற்கு மிக நெருக்கமாய் இருந்தது.சில கதைகளை வலையில் தேடிப் பிடித்து படித்தேன். வெகு சாதாரண தளத்தில் இயங்கும் துல்லியமான எழுத்து ஜெயந்தனுடையது.சாரு கிண்டலடிக்கும் குமாஸ்தா மனோபாவத்தின் சஞ்சலங்கள்தாம் பெரும்பாலான கதைகளாக இருக்கின்றன.குமாஸ்தாக்கள் என ஒரேயடியாய் ஒதுக்கிவிட்டவர்களின் படபடப்புகளும், ஊமைக் கோபங்களும்தான் பெரும்பாலான கதைகளில் விரவி இருக்கிறது.ஆத்மாநாம் சொல்லும் புல்லைக் கொண்டு குண்டர்களின் வயிற்றைக் கிழிப்பதுதான் ஜெயந்தனின் கதைகள்.நிராயுதபாணியின் ஆயுதங்கள் என்கிற தலைப்பில் வம்சி வெளியிட்டிருக்கும் ஜெயந்தனின் முழுக் கதைகளின் தொகுப்பை வாங்கி வந்தேன்.முழுவதுமாய் படித்துவிட்டு விரிவாய் பகிர்கிறேன்."ஜெயந்தனை பெரிசா யாரும் பேசலை" என வருத்தத்தோடு குறிப்பிட்டார் பவா.பெரிதாகப் பேசப்பட விரும்பாதவர்களாலேயே உன்னதங்கள் சாத்தியமாகின்றன என நினைத்துக் கொண்டேன். புத்தகத்தை பார்த்தவுடன் ஆசிப் வியந்தார்.”ஜெயந்தன் கதைகளலாம் புத்தகமா போட்ட அப்பாவி யாருய்யா?” என்றார்.பவா செல்லதுரை என்றேன்.

நான் கடவுள் படத்தை திரையில் பார்க்க முடியவில்லை.தியேட்டரில் நல்ல கேமராவைக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு டிவிடியை ஆசிப்புடன் பார்த்தேன். படத்தில் ஆர்யா கதாபாத்திரத்தை தவிர்த்திருந்தால் இன்னும் கச்சிதமாய் இருந்திருக்கும்.அதாவது ஏழாம் உலகத்தை மட்டும் படமாக்கி இருந்தால் படம் தமிழ்சினிமாவின் அடுத்த கட்ட நகர்வாய் இருந்திருக்க முடியும்.விளிம்பு நிலை மனிதர்களை இந்த அளவு தமிழ் திரையில் எவரும் பதிவித்ததில்லை. உன்னதங்கள்,நம்பிக்கைகள்,புனித பிம்பங்கள் என எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு கிண்டலடித்திருப்பது மகிழ்வையும் ஆச்சரியத்தையும் தந்தது. இம்மாதிரி திரைப்படங்களும் கூட ஹீரோயிச பிடியிலிருந்து முற்றாய் விலகவில்லை என்கிற வேதனையும் படம் பார்த்து முடிந்தவுடன் எழுந்தது. ஆர்யா மூன்று வருடங்களாக உழைத்தது/ஒளிந்திருந்தது தலைகீழாய் நிற்க மட்டும்தானா? என்கிற ரீதியில்தானிருந்தது அவரது நடிப்பு.பாலா மாற்றுச் சினிமாக்களை சாத்தியப்படுத்தும் முன் அவரின் சினிமாக்களில் பிரதானமாய் துருத்தி நிற்கும் ஹீரோயிசத்திலிருந்து வெளிவருவது அவசியம்.

ஏகப்பட்ட பில்ட் அப்போடு வெளிவந்த சாருவின் நான் கடவுள் விமர்சனத்தோடு ஓரளவு ஒத்துப் போக முடிந்தது.ஆனால் Lower depths படத்தை நான் கடவுளோடெல்லாம் ஒப்பிடுவது சற்று அதீதம்தான்.அகிராவின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்களாக dreams ஐயும் Lower depths ஐயும் சொல்லலாம்.(எல்லா படங்களுமே பிடித்தவைகள்தாம் என்றாலும் கூட) புனிதம் அ.புனிதம் இரண்டினையும் ஒரு பொந்துக்குள் அகிரா நிகழ்த்திக் காட்டியிருப்பார்.பொந்து போன்ற ஒரு இருப்பிடத்தில் வாழும் விளிம்புகளின் உரையாடல்கள்தாம் lower depths.வயதான பயணியின் மூலமாய் ஜென்/பெளத்த/கடவுள் நம்பிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டு குடிகாரன்,வேசி,கொலைகாரன்,திருடன் பாத்திரங்கள் மூலமாய் புனிதங்களை நிர்மூலமாக்கியிருப்பார் அகிரா.

ஜப்பானில் அகிராவின் திரைப்படங்கள் வெகு சன சினிமாவாகத்தான் அணுகப்பட்டன/படுகின்றன.நாம் கலைப்படங்கள் எனக் கொண்டாடும் சொற்பமான படங்கள் கூட இன்னும் வெகு சன சினிமாவிற்கான தரத்தை எட்டவில்லை என்பதுதான் வருத்தமான நிதர்சனம். பாட்டு, சண்டை, அடித்துநொறுக்கும் ஹீரோ என எல்லா சகிப்புகளோடும் ஒரு மணி நேர உன்னதமாக நான் கடவுள் இருந்தது. சமீபமாய் மனதில் நின்றுபோயிருந்த இறுதிக் காட்சிகளான ”பருத்திவீரன்” பிரியா மணியின் அவலம் மற்றும் ”பூ” பார்வதியின் இறுதிக் காட்சி கேவல்,இவற்றினோடு பூஜாவின் இறுதிக் காட்சி சிதைந்த மரணமும் மனதில் வெகு நேரம் தங்கியிருந்தது.புதுப்பேட்டை பாலகுமாரன் வசனத்திற்கு பிறகு நான் கடவுள் ஜெமோ வின் வசனங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

24 comments:

thamizhparavai said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யனார்... ‘நான் கடவுள்’ பற்றிய உங்கள் பார்வையை வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்தேன். கண்டதும் மகிழ்ச்சி..

வால்பையன் said...

//என் அம்மாவைப் பொறுத்தவரை சித்திரை முதல் தேதிதான் என் பிறந்தநாள். ஆங்கிலத் தேதியையெல்லாம் அவள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை//

சரிதானே!

நான் பிறந்ததும் சித்திரை ஒன்று தான்!
ஏப்ரல் பதினாலு தான்!
ஆனால் சித்திரை ஒன்று ஏப்ரல் பதிமூணிலே வந்து விட்டால் அப்பவே கொண்டாடி விடுவேன்.

பெருசா என்ன பண்ண போறோம்!
நண்பர்களோடு சரக்கடிப்போம், அதை ஒரு நாள் முன்னாடியே செய்தால் தவறா!

Kumky said...

பிறந்ததின வாழ்த்துக்கள் அய்யனார்.
விளிம்பு நிலை மனிதர்களை பற்றிய படத்தில் அகோரி கதாபாத்திரம் நுழைக்கப்பட்டதல்ல என்றே தோன்றுகிறது.பாலா வேறொரு உயரங்களை நோக்கி தனது பார்வையை (ஆன்மிகம்)கொண்டுசெல்வதாகவே நான் புரிந்துகொண்டேன்.
இருப்பதைத்தானே ஒளிவு மறைவின்றி காட்டியிருக்கிறார்...என்ன இங்கிருப்பதையும்,அங்கிருப்பதையும் அல்லவா...

Anonymous said...

birthday wishes ayyanar.. May this year bring you all success..

தமிழன்-கறுப்பி... said...

\\
தமிழ்செல்வன், மாதவராஜ், காமராஜ் என தமுஎச படைப்பாளிகள் வலைப்பூவில் மலர்வது மகிழ்வாய் இருக்கிறது.
\\
புதிய அறிமுகத்திற்கு நன்றி.
ஆமா ஊடகங்களின் கவனிப்புகள் இன்னும் அதிகமாகிக்கொண்டிருக்கு...

நான் கடவுள் இன்னமும் பார்க்கவில்லை ஏழாம் உலகம் வாசித்த பிறகுதான் படத்தை பார்க்கலாம் என்றிருக்கிறேன்...

அப்ப நாவல் எழுத தொடங்கிட்டிங்கன்னு சொல்லுங்க எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் தல

Sridhar Narayanan said...

பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யனார்.

உங்கள் நாவலின் வெற்றிக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

//பாட்டு, சண்டை, அடித்துநொறுக்கும் ஹீரோ என எல்லா சகிப்புகளோடும் ஒரு மணி நேர உன்னதமாக நான் கடவுள் இருந்தது.//

மிகச் சரி. உண்மையைச் சொல்லப் போனால் அந்த பிச்சைக்காரர்களின் உலகம் ஏழாம் உலகத்தின் (நான் இன்னமும் படிக்கவில்லை) பின்னனியில் எதிர்பார்த்தபடியே சிறப்பாக படமாக்கப் பட்டிருந்தது. ஆனால் அகோரிகளின் உலகம் சரியானபடி வரவில்லை.
’அரைகுறை கடவுள்’ என்று நான் நினைத்ததும் இந்த அடிப்படையில்தான்.

மற்றபடி ஓவர் டிரமாட்டிக்காக முடிக்க வேண்டும் என்பதற்காக சில முடிவுகள் ஒட்டாமல் இருப்பதும் ஒருவகையில் ‘தேய்வழக்கு’தான் (Cliche). உதாரணம் - வெண்ணிலா கபடிக்குழு உச்சக்காட்சி.

♫சோம்பேறி♫ said...

Belated அல்லது Advance பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ச.பிரேம்குமார் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யனார். ரொம்ப பிசியோ? ஆள பாக்கவே முடியறதில்லை??

நாவல் எழுதுகிறீர்களா? சொலல்வேயில்லை...வாழ்த்துகள் :)

அது உண்மையாயின் அதில் புதுவை பற்றிய குறிப்புகள் இருக்குமா என்று ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன் :)

anujanya said...

சற்று தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள். இன்று உங்கள் திருமண நாள் என்று கேள்விப் பட்டேன். உங்கள் இருவருக்கும் மணநாள் வாழ்த்துகளும்.

சந்தோஷின் குறுஞ்செய்தியை ரசித்தேன். குழந்தைகள் சூட்சுமம் மிக்கவை. ஆகக் கடவது !

யோவ், இன்று உன் திருமண நாள். இதற்காவது "உரையாடிலினி நாற்பத்தியாறு மின்னஞ்சல்களும், பதினாறு குறுஞ்செய்திகளும் அனுப்பியிருந்தாள்' என்று (உண்மையாக இருந்தாலும்) சொல்வதைத் தவிர்ப்பது நலம் :)

பவா தளத்திற்கு உங்க தளத்திலிருந்து லிங்க் (சக பயணிகள் வரிசையில்) கொடுங்களேன். சுலபமாக இருக்கும்.

ஜெமோ வசனத்திற்கு தேசிய விருது உடனே கொடுத்துவிடலாம். சாருவும், நீங்களுமே பாராட்டியாச்சுன்னா ......... :)

அனுஜன்யா

கே.என்.சிவராமன் said...

பிறந்தநாள் மற்றும் திருமணநாள் வாழ்த்துகள் அய்யனார்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பிறந்த நாள் & திருமண நாள் வாழ்த்துகள் அய்யனார்.

அப்புறம், இந்தியா வந்துட்டு ஏன்யா ஒரு ஃபோன்கூடப் பண்ணலை?

உங்க கவிதைகள் மணல்வீட்டில் பார்த்தேன். ஏற்கனவே படித்த மாதிரி இருந்தது. வலைப்பதிவில் இருந்துதான் கொடுத்திருந்தீர்களா?

பிச்சைப்பாத்திரம் said...

//நிராயுதபாணியின் ஆயுதங்கள் என்கிற தலைப்பில் வம்சி வெளியிட்டிருக்கும் ஜெயந்தனின் முழுக் கதைகளின் தொகுப்பை//

ஜெயந்தனின் கதைகள் முழுவதையும் ஏற்கெனவே (நர்மதா பதிப்பகம் என்று நினைக்கிறேன்)வெளிவந்திருக்கிறது. 'ஞானக்கிறுக்கன் கதைகள்' என்று அவர் எழுதியிருக்கும் தொடர் முன்பு சுபமங்களாவில் வந்தது. தத்துவ ரீதியிலும் தர்க்க ரீதியிலும் ஆழமான சிந்தனைகளை அடக்கியுள்ள கதைகள் அவை. எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளிகளில் ஒருவரான ஜெயந்தன் பரவலாக பேசப்படாதது துரதிர்ஷ்டவசமானதுதான்.

()

நான் கடவுள் அரைகுறையாக கிளறப்பட்ட உப்புமா. அது அகிரா படங்களோடு ஒப்பிடப்படும்படியான அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது.

குப்பன்.யாஹூ said...

அய்யனார், நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பதிவிற்கு மிக்க நன்றி, பவா செல்லதுரையின் பதிவுகளை கண்டிப்பாக படிக்கிறேன், புதிய பதிவு ஆர்ம்பித்தளுக்கும் நன்றிகள் பல.

இந்த பதிவை இன்னும் நிதானமாக படிக்கிறேன், நிறைய தகவல்கள் உள்ளன.


வாழ்த்துக்களுடன்

குப்பன்_yahoo

ச.முத்துவேல் said...

வாழ்த்துகள் அய்யனார்.பவாவுக்கு வலைப்பூ சொன்னபடி ஏற்படுத்திவிட்டீர்கள்போல. நல்லது.

Ayyanar Viswanath said...

நன்றி தமிழ்பறவை
படத்தை எங்கும் பார்க்கமுடியவில்லை.வேறுவழியில்லை என்ற பிறகே டிவிடி யில் பார்த்தேன்.அதே குற்றவுணர்வுகளோடு குறிப்புகளாய் மட்டுமே எழுத முடிந்தது..

நன்றி வால்பையன் :)

கும்க்கி பகிர்வுக்கு நன்றி..

நன்றி அனானி

நன்றி தமிழன்

Ayyanar Viswanath said...

ஸ்ரீதர்
நான் கடவுள் விமர்சனங்களில் முதலில் படித்தது உங்களினுடையதாக நினைவு...பகிர்வுக்கு நன்றி

நன்றி சோம்பேறி :)

இன்னும் பெரிசா ஆரம்பிக்கல நிர்வாகி பாண்டி இல்லாமயா :)

அனுஜன்யா
சந்தோஷ் குறுஞ்செய்தியை சரியாக புரிந்து கொண்டதற்கு நன்றி..ஒரு நபர் குழந்தை எழுத்தை கிண்டலடித்துவிட்டதாய் கடித்து துப்பிவிட்டார் நீங்கள் புரிந்துகொண்டதுதான் நான் சொல்ல வந்தது எப்போதும் என் அலைவரிசையை சரியாய் பிடிக்கும் உங்களுக்கு நன்றியும் அன்பும்..
பிறகு
என் வயது இருபத்தி ஒன்பது என்பது உலகம் அறிந்த உண்மை :)

Ayyanar Viswanath said...

நன்றி சுந்தர்ஜி
பல நெருக்கடிகளில் நண்பர்களை அழைக்க முடியாமல் போனது அடுத்த முறை மீண்டும் அதே இடத்தில் சந்திப்போம் :)மணல் வீட்டில் வெளியானவை இங்கு ஏற்கனவே எழுதியவை தாம்..

மிக்க நன்றி குப்பன்

முத்துவேல் தொடங்கியாயிற்று :)

விமலா said...

பிறந்த நாள் & திருமண நாள் வாழ்த்துகள்!மகிழ்ச்சியும்,அமைதியும்,அன்பும்
எப்பொழுதும் எந்நாளும் நிலைத்திருக்கட்டும்!
தொடர்ந்து எழுதுங்கள்!

விமலா said...

பிறந்த நாள் & திருமண நாள் வாழ்த்துகள்!மகிழ்ச்சியும்,அமைதியும்,அன்பும்
எப்பொழுதும் எந்நாளும் நிலைத்திருக்கட்டும்!
தொடர்ந்து எழுதுங்கள்!

Unknown said...

ஊருக்கு வந்து உருப்படியா செய்த ஒரே விதயம் பவாவிற்கான வலைத்தளம்தான் போல..:))))

காமராஜ் said...

vபிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யனார்.

சில நாட்களுக்குமுன், சாத்தூருக்கு
ஆதவன் வந்திருந்தார். வலையுலகில்
அவருக்கு அடர்த்தியான அறிமுகம்
கொடுத்ததைச் சொன்னேன்.

பவா வின் பதிவுகள் அவர்போலவே
நெகிழ்ச்சியானவை.

நான் கடவுள் விமர்சனம் அருமை.

காமராஜ் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யனார்.

சில நாட்களுக்குமுன், சாத்தூருக்கு
ஆதவன் வந்திருந்தார். வலையுலகில்
அவருக்கு அடர்த்தியான அறிமுகம்
கொடுத்ததைச் சொன்னேன்.

பவா வின் பதிவுகள் அவர்போலவே
நெகிழ்ச்சியானவை.

நான் கடவுள் விமர்சனம் அருமை.

கே.என்.சிவராமன் said...

//ஜெயந்தனின் கதைகள் முழுவதையும் ஏற்கெனவே (நர்மதா பதிப்பகம் என்று நினைக்கிறேன்)வெளிவந்திருக்கிறது.//

சுரேஷ் கண்ணன்,

ஜெயந்தன் கதைகள் முழுவதையும் வெளியிட்டது கலைஞன் பதிப்பகம்

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Ayyanar Viswanath said...

பைத்தியக்காரன் : மிக்க நன்றி

பகிர்வுக்கு நன்றி சுரேஷ்

வாழ்த்துக்களுக்கு நன்றி விமலா

ஆமாம் உமாசக்தி :)

மிக்க நன்றி காமராஜ்

Featured Post

test

 test