Friday, March 20, 2009
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
என் நிலப்பரப்பு எனக்கு மட்டுமே சொந்தமானதென்றும் ஒரு ராவேட்டைக்காரனைப் போல் மொழியின் துணையோடு அதன் நீள அகலத்தில் நான் மட்டுமே நடந்து திரிய வேண்டும் என்கிற பேராசையும் எனக்கு உண்டு - பவா
சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்தபோது பவா.செல்லதுரையினைச் சந்திக்க முடிந்தது. விடைபெறுகையில் அவரது சிறுகதைத் தொகுப்பான நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறையைப் படிக்கத் தந்தார்.எழுத்தாளனை எழுத்தாளன் என்கிற அடையாளங்களோடு இதுவரை எவரையும் சந்திக்கச் சென்றதில்லை.நட்பு அல்லது அன்பு மட்டுமே எழுத்தாள நண்பர்களைச் சந்திக்கப் பிரதான காரணமாய் முன் நிற்கிறது. கோபியின் எழுத்துக்களை வாசித்தபின் மிகுந்த நெகிழ்ச்சியோடு அவரை ஒரு எழுத்தாளனின் ஆதர்ச வாசகனாய் சந்திக்க விரும்பினேன்.வாழ்வின் பெரும்பாலான உயிர்ப்புகளை,உன்னதங்களை கடந்து போன பின்னரே அறியும் உண்மத்தனான எனக்கு அவரது பிரிவு வழக்கமான ஏமாற்றத்தைத்தான் தந்தது. பெருமூச்சோடு கலந்த வருத்தத்தை மட்டும் அந்தக் கணத்தில் உதிர்த்திருந்தேன்.தமிழ் இலக்கிய சூழலைப் பொறுத்தவரை பெரும்பாலான எழுத்தாளர்கள் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். வட்டாரம் சார்ந்த, மொழி சார்ந்த, வாழ்வு சார்ந்த, எழுத்துக்கள் தென் தமிழகத்தை அதிகமாய் பதிவு செய்திருக்கின்றன. வட தமிழகத்திலிருந்து எழுதியவர்கள் / எழுதிக்கொண்டிருப்பவர்கள் குறைவாக இருப்பதாலோ என்னமோ நான் வாழ்ந்த சூழலை,நான் பேசிய மொழியை என்னால் இலக்கியமாக அதிகம் படிக்க முடியாமலேயே போய்விட்டது.
எப்போதுமே புழங்கியிராத திருநெல்வேலியையும், தாமிரபரணியையும் அந்த ஊர்காரர்களை விட என்னால் மிகச்சரியாய் சொல்லிவிடமுடிகிற அளவுக்கு நமது இலக்கியச் சூழல் தெற்கால் நிரம்பியிருக்கிறது. அழகியபெரியவனையும் கண்மணி குணசேகரனையும் படிக்கும்போது பக்கத்து வீட்டில் உலவுவது போன்ற மனநிலை இருந்தது.ஆனால் எப்போதுமே என்னால் சொந்த வீட்டில் புழங்க முடிந்ததில்லை.இந்த நெடுநாள் ஏக்கத்தை, ஏமாற்றத்தை காணாமல் செய்துவிட்ட தொகுப்பு இது. திருவண்ணாமலை, திருவண்ணாமலையை சுற்றியுள்ள கிராமங்கள், அதன் மனிதர்கள், என் மிகச் சொந்த மொழி, என் மிகச் சொந்த இடம், நான் கேள்விப்பட்ட மனிதர்கள், நான் படித்த நகராட்சிப் பள்ளி, குதித்து மகிழ்ந்த தாமரைக் குளம், விளையாடித் தீர்த்த மைதானம், மண்டித் தெரு கசகசப்புகள்,இன்னமும் நடந்து போகும் சாலை இவற்றையெல்லாம் எழுத்துக்களாய் படிக்கும்போது/பார்க்கும்போது ஏற்பட்ட நெகிழ்வை என்னால் சரியாய் எழுதிவிட முடியவில்லை.
பவாவின் மொழியில் அதிக சாயம் இல்லை.கவித்துவ மிகைகளோ,பொருள் பொதிந்த அடர் கருத்துக்களோ எதுவுமில்லாத மிகச் சாதாரண மொழி.அதிகம் வாசித்தவர்களால் சாதாரண மொழியில் எழுதிவிட முடிவது சற்றுக் கடினம்தான். சேமித்து வைக்கப்பட்ட அறிவுச் சாத்தான் எளிமைக்குத் திரும்ப ஒருபோதும் அனுமதிப்பதில்லை.பவா அந்த அறிவுச் சாத்தானை துரத்தியடித்துவிட்டு,எளிய கிராமத்து மனிதர்களை மிக எளிய மொழியில் பதிவு செய்திருக்கிறார். வன்மமாய் விரிந்து கிடக்கும் வாழ்வை, சாமான்யர்களுக்குப் பழகிப்போன தின வாழ்வின் கழுத்து நெறிப்பை, இந்த மொழி சன்னமான குரலில் பேசுகிறது.எல்லாக் கதையினூடும் என்னால் ஒன்றிப் பயணிக்க முடிந்தது.வண்ணநிலவனின் எழுத்துக்கள் பிற பகுதி சார்ந்த வாசகனுக்கு தரும் இன்பத்தை விட திருநெல்வேலி மற்றும் சுற்றுப்புறம் சார்ந்த நகரங்களைப் பிறப்பிடமாக கொண்டவர்களுக்கு மிக அதிகக் கிளர்வைத் தந்திருக்க முடியும் என நினைத்துக் கொண்டேன்.
இந்தத் தொகுப்பில் முகம்,வெவ்வேறு மனிதர்கள்,மண்டித்தெரு பரோட்டா சால்னா,ஏழுமலை ஜமா, சிங்காரக்குளம்,வேட்டை,பச்சை இருளன்,ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்,சத்ரு,சிதைவு,நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை ஆகிய பதினோருக் கதைகள் இருக்கின்றன.சடுதியில் வண்ணமிழக்கும் வாழ்வின் நிறங்களைத்தான் பவா வெவ்வேறு கதைகளாக எழுதியிருக்கிறார்.மனிதர்களின் மீதிருக்கும் பரிவு, ஏமாற்றங்கள், இயலாமை, வலிய திணிப்பவைகளை எதுவும் செய்ய இயலாது ஏற்றுக்கொள்ளல் என்பது போன்ற பல்வேறு இயல்புத் தோல்விகளை இக்கதைகள் பதிவு செய்திருக்கின்றன. பச்சை இருளன்,ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்,சத்ரு ஆகிய மூன்று சிறுகதைகளும் இருளர்கள் பற்றிய வாழ்வை முன் வைக்கின்றன. கோட்பாட்டுப் புரிதல்களோ,பிரச்சார நெடிகளோ இல்லாது அவர்களின் வாழ்வை வாழ்விலிருந்தே பதிவித்திருப்பது ஒன்றி வாசிக்க மிகுந்த ஆசுவாசமாய் இருந்தது.
சிதைவு சிறுகதையில் சொல்லப்பட்டிருக்கும் டில்லி வீடும்,விஜயாவும் நான் படித்த பள்ளிக்கு சமீபமானவர்கள்.அவர்களை கதாபாத்திரங்களாக வாசிக்கமுடியும் என்பதே எனக்கு நிறைவைத் தருவதாய் இருந்தது.சிங்காரக் குளத்தின் முடிவும் துணுக்குறலாகத்தான் இருந்தது. கலைஞர்கள் சமூகத்தின் புறக்கணிக்கப்புக்கு ஆளாகும்போது அடைகிற மன உளைச்சல்களையும் சிதைவுகளையும் சித்தரிக்கிறது ஏழுமலை ஜமா சிறுகதை. ஊர்த்திருவிழாக்களில் கூத்து ஒதுக்கிவைக்கப்பட்டு வீடியோ திரைப்படத்துக்கு முக்கியத்துவம் பெருகிய காலகட்டங்களில் கூத்துக்கலைஞர்கள் பிழைப்பைத் தேடி பெங்களூருக்கு கூலி வேலைக்கு செல்லும் அவலத்தை சித்தரிக்கும் இச்சிறுகதை இத்தொகுப்பில் மிகுந்த வீச்சானது.
ஏழுமலை ஜமா என்கிற இச்சிறுகதையை எஸ்.கருணா குறும்படமாக்கி இருக்கிறார்.கூத்துக் கலையை தெரு வீடியோக்கள் மற்றும் சினிமா நடனங்கள் விழுங்கிய அவலத்தை மிகுந்த வேதனைகளோடு பதிவு செய்த சிறுகதையை சிறப்பாய் படமாக்கி இருக்கிறார்கள்.பின்பொரு சமயம் அக்குறும்படத்தை விரிவாய் பகிர்ந்துகொள்கிறேன்.
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை(சிறுகதைகள்)
ஆசிரியர்: பவா செல்லத்துரை
முதல் பதிப்பு: ஜனவரி 2008
பக். 110
விலை ரூ. 60
வம்சி புக்ஸ்
19, டி.எம். சாரோன் திருவண்ணாமலை-1.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
13 comments:
அறிமுகத்திற்கு நன்றி..அந்த குறுந்தகடு கிடைக்கும் இடம்?
//அதிகம் வாசித்தவர்களால் சாதாரண மொழியில் எழுதிவிட முடிவது சற்றுக் கடினம்தான். சேமித்து வைக்கப்பட்ட அறிவுச் சாத்தான் எளிமைக்குத் திரும்ப ஒருபோதும் அனுமதிப்பதில்லை//
//வண்ணநிலவனின் எழுத்துக்கள் பிற பகுதி சார்ந்த வாசகனுக்கு தரும் இன்பத்தை விட திருநெல்வேலி மற்றும் சுற்றுப்புறம் சார்ந்த நகரங்களைப் பிறப்பிடமாக கொண்டவர்களுக்கு மிக அதிகக் கிளர்வைத் தந்திருக்க முடியும்//
வழிமொழிகிறேன்.
எஸ்தரும், எஸ்தர் டீச்ச்ரரும் பற்றி செவிவழியாக கேட்டறிந்திருக்கிறேன்.
இதுவரை பவா செல்லத்துரையை வாசித்ததில்லை.
அறிமுகத்திற்கு நன்றி !
ஒரு சுவையுள்ள புத்தகத்தை & எழுத்தாளரை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி அய்யனார்.
அதிகம் வாசித்தவர்களால் சாதாரண மொழியில் எழுதிவிட முடிவது சற்றுக் கடினம்தான். சேமித்து வைக்கப்பட்ட அறிவுச் சாத்தான் எளிமைக்குத் திரும்ப ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
சடுதியில் வண்ணமிழக்கும் வாழ்வின் நிறங்களைத்தான்
அருமையான வரிகள்.
நன்றிகள் மற்றும் வாழ்த்துக்களுடன்
குப்பன்_யாஹூ
//என் நிலப்பரப்பு எனக்கு மட்டுமே சொந்தமானதென்றும் ஒரு ராவேட்டைக்காரனைப் போல் //
ராவேட்டைகாரனை போல் பகல்லையும் குனிஞ்சிகிட்டு, சுத்தி சுத்தி பார்த்துகிட்டு மெதுவா போன பார்க்குறவங்க தப்பா நினைக்க மாட்டாங்க!
வடமாவட்டங்கள் இன்னும் அவ்வளவு எழுதப் படவில்லை. உங்களுக்காகத் தான் காத்திருக்கிறதோ 'வன்மமாய் விரிந்து கிடக்கும் வடமாவட்டங்களின் வாழ்வு'?
ஒரு நூல் அறிமுகத்திற்கு நன்றி. ஒரு நூலைப் பற்றி எழுதுகையில் எத்தனை அழகு வரிகள்!
குப்பன் யாஹூ குறிப்பிட்ட வரிகள் எல்லாமே பிரமாதம்.
அனுஜன்யா
நர்சிம்
நான் திருவண்ணாமலை வம்சி புத்தக கடையில் வாங்கினேன் சென்னையில் எங்கு கிடைக்குமெனத் தெரியவில்லை.நண்பர்களிடம் விசாரித்து சொல்கிறேன்
மண்குதிரை,குப்பன்,வால்பையன் மற்றும் அனுஜன்யா பின்னூட்டங்களுக்கு நன்றி...
ஆமங்க நம்ம வட்டார வழக்குல அதுவும் நம் ஊர்சார்ந்த கதைய படிக்கரதே ஒரு தனி சுகந்தாங்க.
// நர்சிம்
அந்த குறுந்தகடு கிடைக்கும் இடம்?//
இந்தப் படமா இருந்தா நம்ம கும்க்கிட்ட கேட்டுப்பாருங்க கிடைக்க அதிகவாய்ப்பிருக்கு.
பகிர்வுக்கு நன்றி அண்ணன்...
எதை எழுதினாலும் மொழி உங்களுக்கு வசப்படுகிறது அய்யனார்...!
நல்லதொரு அறிமுகம்,
கோபி கிருஷ்ணன் அவர்கள் நினைவில் வரும் போதெல்லாம், நினைவூட்டப்படும்போதெல்லாம் கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்துவிடும்,
உள்ளேயிருந்து சில குரல்களின் பாதிப்பு எப்போதுமிருக்கிறது என்னிடம்,
மற்றும் டேபிள் டென்னிஸ், இடாகினிப்பேய்கள், தூயோன், மானுட வாழ்வு தரும் ஆனந்தம் அனைத்தையும் வாசித்திருக்கிறேன்,
எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி சென்றுவிட்டார்
கோபி கிருஷ்ணன், ஆத்மாநாம், ஜி.நாகராஜன்,,,,,,,
//வண்ணநிலவனின் எழுத்துக்கள் பிற பகுதி சார்ந்த வாசகனுக்கு தரும் இன்பத்தை விட திருநெல்வேலி மற்றும் சுற்றுப்புறம் சார்ந்த நகரங்களைப் பிறப்பிடமாக கொண்டவர்களுக்கு மிக அதிகக் கிளர்வைத் தந்திருக்க முடியும்//
ஆமாம் அய்யனார். என் பதின்ம வயதில் 'கடல்புரத்தை' வாசித்திருக்கிறேன். என் பெற்றோர்களுக்கு திருநெல்வேலி சொந்த ஊர், நான் சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், ஒவ்வொரு வருடமும் ஊருக்குச் சென்றுவிடுவேன்...எங்கள் ஊருக்கு போகும் போதெல்லாம் வணணநிலவனின் முட்டுச் சந்துக்களையும் முடுக்கு வீதிகளையும் தேடியலைந்திருக்கிறேன்....
பவாவின் தொகுப்பை அவர் மனைவி எனக்கு அனுப்பியிருந்தார். இன்னும் வாசிக்கவில்லை. உங்கள் பதிவை படித்ததும் உடனே வாசிக்கத் தோன்றுகிறது. சுற்றிலும் புத்தகங்கள் மனதை நிறைத்துக்கிடக்கும் ஆசைகள், வாசிக்கத்தானே வாழ்க்கை அய்யனார்? புத்தகங்களால் மட்டுமே என்னை கிறுக்காக்க முடியும், மீண்டும் என்னை நிலைபெறச் செய்யும். நல்ல பதிவு அய்யனார், பவாவிடம் பேச வேண்டும், திருவண்ணாமலைக்கு போக வேண்டும் என்றெல்லாம் இப்போது எடுத்துள்ள முடிவை எப்போது செயல்படுத்தப் போகிறேன்?
இதில் பகிர்ந்துகொள்ள எனக்கு நிறைய இருக்கிறது அய்யனார்.
பவா வீட்டில் நான், பவா,பவா மனைவி கே.வி.ஷைலஜா,வ.ஐ.ச. ஜெயபாலன் இன்னும் சில வெளி நாடு வாழ் தமிழர்களோடு ஏழுமலை ஜமா குறும்படத்தை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.வட மாவட்ட எழுத்தின் உங்கள் ஏக்கம் எனக்கும் உண்டு.ஜீ.முருகன் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.தி.மலை சார்ந்து நிறைய வரும்.(gmuruganwritings.wordpress.com),
(vanam.wordpress.com)
நானும் படித்துவிட்டேன், அய்யனார்.
கார்த்திக் நீங்கள் சுட்டி இருக்கும் படம்தான்.மேலதிக தகவலுக்கு நன்றி..
நன்றி தமிழன்
உண்மைதான் யாத்ரா நீங்கள் குறிப்பிட்டவர்கள் எனக்கும் நெருக்கமானவர்கள்..
பகிர்வுக்கு நன்றி உமாசக்தி விரைவில் செயல்படுத்துங்கள்..
முத்துவேல் ஜீ.முருகனின் சுட்டிக்கு நன்றி.அவரின் ஓரிரு சிறுகதைகளைப் படித்திருக்கிறேன்.தொகுப்பாய் வாசித்ததில்லை.கொட்டாவூரைச் சேர்ந்தவர் இல்லையா?
//தமிழன்-கறுப்பி... said...
பகிர்வுக்கு நன்றி அண்ணன்...
எதை எழுதினாலும் மொழி உங்களுக்கு வசப்படுகிறது அய்யனார்...!//
அதே. அதே.
Post a Comment