Sunday, February 8, 2009

வயல்வெளி தொலைத்த அயல்வெளிக் குறிப்புகள்


அத்தியாயம் ஒன்று : எண்கள்

என் செல்லிடைப்பேசி சென்ற வாரத்தில் ஒரு நாள் அற்பாயுளில் உயிரை விட்டபோது எனக்கந்த விபரீதம் புரிந்திருக்கவில்லை.புதிய பேசியை வாங்கி உயிர்பித்தபோதுதான் சிம்மில் எந்த எண்ணையுமே சேமிக்கவில்லை எனத் தெரியவந்தது.எனக்கான உலகம் திடுமெனக் குழம்பிப் போனதைப்போல உணர்ந்தேன். நான் உயிர்த்திருக்க உதவும் எண்களை வேறு எங்கேயுமே எழுதிவைத்திருக்கவில்லை.என் நினைவுக் குமிழி் சோப்பு நுரைகளாலானது. காற்றின் சாயல்களையொத்த கடினமான எதையுமே உள்ளே அனுமதியாமல் என் குமிழ் வீங்கிப் பருத்திருந்தது. ஏற்கனவே தெரிந்திருந்த எண்களையெல்லாம் பதட்டத்தில் குழப்பிக் கொண்டேன்.என் வங்கி அட்டைகளின் ரகசிய எண்கள் கண்ணாமூச்சி ஆடத் துவங்கின.ரகசிய எண்களைக் கூட செல்லிடைப் பேசியில் சேமித்து ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் சரிபார்த்துக் கொள்ளும் வழக்கம் எனக்கு.அட்டை சிக்கிக் கொண்டுவிடுமோ என்கிற லேசான பயத்துடன் ரகசிய எண்ணைப் பிரயோகித்தேன். எதிலேயும் சிக்கிக் கொள்ளாமல் பணமும் அட்டையும் இலகுவாய் வெளியில் வந்து விழுந்தன.என் நினைவுக் குமிழ் கடின நீரின் பின்புலத்தில் உருவாகி இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

எதிலேயும் பொறுப்பில்லை.எந்த ஒன்றையும் சரியாய் செய்வதில்லை. எல்லாவற்றிலும் மெத்தனம்.எல்லாவற்றிலும் சோம்பேறித்தனம்.என என்னை நானே கடுமையாய் திட்டிக்கொண்டேன்.இந்த சனிக்கிழமையாவது மூன்று மாதங்களாய் தள்ளிப்போடும் வங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என வெள்ளி இரவு தூங்கப்போகும் முன் மனதில் கறுவிக் கொண்டேன். புதிய நிறுவனத்தின் விலாசத்தை வங்கிகளுக்கு இன்னும் தரவில்லை.வரவு செலவு விவரங்களடங்கிய வங்கி அறிக்கைகள் பழைய நிறுவனத்திற்கே சென்றுகொண்டிருக்கின்றன.எப்போதாவது வரும் திடீர் பொறுப்பில் கடனட்டைகளுக்குத் தொலைபேசி விசாரிப்பேன். அவர்கள் நம்ப முடியாத ஒரு தொகை நிலுவையில் இருப்பதாகப் பதில் தருவார்கள்.அசலுக்கு வட்டியா? வட்டிக்கு வட்டியா? என்ன வாங்கினோம்? என ஒரேயடியாய் குழப்பங்கள் சூழும்.இந்த சனிக்கிழமையாவது புதிய விலாசத்தை தந்து அறிக்கைகளை உடனுக்குடன் சரிபார்க்க வேண்டும் என நினைத்துக் கொள்வதோடு அந்த கணங்களைக் கடந்து விடுவேன்.எதிர்பாராமல் ஏற்பட்ட எண்களின் பழிவாங்கல் என்னைத் திடீர் சுறுசுறுப்பாளியாக்கியது.

வங்கிகள்,பேரங்காடிகள்,பயணப் பதிவு செய்யுமிடங்கள்,அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட எந்த பொது இடங்களில் புழங்கினாலும் பெண்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பது என் வழக்கம்.பெண்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் மட்டுமே என் கால்கள் நகரும் திசையாகவிருக்கும்.நேற்றும் அப்படித்தான்.

நுஸ்ரத் பானு என்கிற அந்த வாடிக்கையாளர் சேவகி புன்னகையுடன் வரவேற்றாள்.என் பிரச்சினைகளைச் சொன்னேன்.புதிய விலாசத்தை சொல்லுங்கள் என்றபடி அவள் படிவத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தாள். சொல்லிக்கொண்டே வந்தேன்.அலுவலக தொலைபேசி எண்? என்றபோது எனக்கு திக் கென்றது அதுவரை நினைவில் வைத்திருந்த எண் மறந்து போனது. தடுமாறினேன்.எண் மறந்துவிட்டது என்றேன்.வீட்டுத் தொலைபேசி எண்ணை சொல்லுங்கள் என்றாள்.அய்யகோ! எனக்கு அதுவும் நினைவிலில்லை. செல்லிடைப்பேசி குளறுபடியால் எண்களைத் தொலைத்துவிட்டேன் எனப் பரிதாபமாக சொன்னேன்."வீட்டு எண்ணைக் கூடவா" எனக்கேட்டுச் சிரித்தாள்.”உங்கள் செல்லிடைப்பேசி எண் நினைவிருக்கிருதா?” என்றாள்.நல்ல வேளையாக அது நினைவிலிருந்தது. “சரி அஞ்சல் பெட்டி எண்ணைச் சொல்லுங்கள்?” என்றாள். நான் எதைச் சொல்ல? அவள் விழிகளைத் தவிர்த்துவிட்டு நினைவிலில்லை என்றேன்.”பின் எந்த விலாசத்திற்கு வங்கி அறிக்கைகளை அனுப்ப?” எனக் கேட்டுச் சிரித்தாள்.அவளிடத்தில் நான் இருந்திருந்தால் கோபப்பட்டிருப்பேன்.பத்து நிமிட அவகாசமும் உள்ளூர் தொலைபேசி எண்களின் முழுப்பட்டியலையும் கேட்டு வாங்கினேன்.என் நிறுவனத்தின் பெயரைத் தேட ஆரம்பித்தேன்.அதிர்ஷ்டவசமாக இருந்தது.அதற்குத் தொலைபேசி நான் பணிபுரியும் பிரிவின் எண்ணை கேட்டுக் குறித்துக் கொண்டேன்.என் பிரிவிற்குத் தொலைபேசி நமது அஞ்சல் பெட்டி எண் என்ன? எனக் கேட்டேன்.தொலைபேசியை எடுத்தவன் கொட்டவி விட்டபடி சொன்னான்.வெற்றிப் பெருமிதத்தோடும் என் சமயோசித அறிவை மெச்சிய படியுமாய் நுஸ்ரத் பானுவை எதிர் கொண்டேன்.

இரண்டு நாட்களில் சரியாகிவிடும் என்று சொல்லியபடி பானு ஒரு படிவத்தை நிரப்புமாறு பணித்தாள்.அது வாடிக்கையாளர் கருத்துப் படிவம்.அதில் முழுத் திருப்தியை தேர்வு செய்து இரண்டு வரிகள் அதிகமாகவே பானுவை பாராட்டி எழுதி, கையொப்பமிட்டு எழுந்தேன்.விடைபெறுகையில் சற்று யோசித்து தன் செல்லிடைப் பேசி எண் கொடுத்தாள் எந்தப் பிரச்சினையென்றாலும் (வங்கியில்தான்)தன்னை நேரடியாய் அழைக்கச் சொன்னாள்.இனிமேல் பேசவே மாட்டேன் என கண்ணைக் கசக்கிக் கொண்டு போன உரையாடலினி நினைவிலாடினாள்.அவளைத் தவிர உலகத்தில் எல்லாப் பெண்களுக்கும் என்னைப் பிடித்துத் தொலைகிறது.

இன்னும் இரண்டு வங்கிகளுக்குப் போக வேண்டும்."என்ன அவசரம் மெதுவாய் பார்த்துக்கொள்ளலாம்" என அதுவரைத் தூங்கியிருந்த விழிப்பாளன் சோம்பல் முறித்தான். இன்று சனிக்கிழமை மதியம் மாதிரியே இல்லை.வானம் முழுக்க மேகம் அண்டியிருந்தது.மிக அபூர்வமான பாலைத் தென்றல் சன்னமாய் வீசிக் கொண்டிருந்தது.மதியப் பொழுதினுக்கு இருக்கும் கலவிச் சோம்பல், உயர்ந்த கட்டிடங்களின் வழி கசிந்து கொண்டிருந்தது.பிரதான சாலையைப் புறக்கணித்து கார்னீஷ் வழியைத் தேர்ந்தெடுத்தேன்.சலனமற்று விரிந்திருந்த நீர்ப்பரப்பின் கரைகளில் நீ(ல)ளமான, வெள்ளை நிற இறக்கைகளைக் கொண்ட பறவைகள் கும்பல் கும்பலாக அமர்ந்திருந்தன.எவருடைய நகர்வையும், நடத்தலையும் சற்றும் பொருட்படுத்தாது செந்நிறப் பூனையொன்று நடைபாதையின் குறுக்கில் படுத்திருந்தது.குள்ளமான பேரீச்சை மரங்கள் வரிசையாய் சாலையின் நடுவில் நடப்பட்டிருந்தன.நீளமான, சுத்தமான, நடுவில் மரங்கள் வளர்ந்திருந்த, ஓரங்களில் பசும் புற்கள் வளர்க்கப்பட்டிருந்த சாலையில், மேகங்கள் மூடிய மதியப் பொழுதில் நடந்து செல்ல இதமாய் இருந்தது. பதின்மனொருவன் சக்கரங்கள் வைக்கப்பட்ட பலகையில் படுவேகமாய் நடைபாதையில் சறுக்கிக் கொண்டு வந்தான்.நான் சற்றுப் பின் வாங்கி வழிவிட்டேன்.பதின்மம் என்னைப் படுவேகமாய் கடந்து செல்வதை எதனோடோ தொடர்புபடுத்திப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தயாரித்தல்கள்,பாதுகாப்புகள் மீதெல்லாம் எப்போதிலிருந்து தூசு படிய ஆரம்பித்தன எனத் தெரியவில்லை. என்னுடைய மூளை என்கிற வஸ்துவை பயன்படுத்தாமலிருக்க பலர் பல விதங்களில் உதவியாய் இருக்கிறார்கள்.ஒரு அசாதாரண மிருகத்தைப் போல பல்கிப் பெருகும் அறிவியலின் வளர்ச்சி மூளையை சும்மா வைத்திருக்க பெரும் உதவியாய் இருக்கிறது. எப்போதாவது சில குளறுபடிகளில் சிக்கிக் கொண்டாலும் சும்மா இருப்பதென்பது அலாதியானது.
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...