Friday, February 6, 2009

முத்துக்குமார் வைத்த தீ

ஏதாவது செய்.

ஏதாவது செய் ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப்படுகின்றான்
உன் சகோதரி
நடுத்தெருவில் கற்பிழக்கிறாள்
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா.

அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள்…. கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்

ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத்தவறினால்
உன் மனம் உன்னைச்
சும்மா விடாது.
சரித்திரம், இக்கணம்
இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்யமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்.

ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த
புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக் கிழி
உன் சகவாசிகளின்
கிறுக்குத் தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்.

-ஆத்மநாம்

முத்துக்குமார் வைத்துக் கொண்ட தீயில் கருகிப் போனது அவரின் உடல் மட்டுமல்ல தலைவர் பிம்பங்கள் மீது வைத்திருந்த சாமான்யனின் அடிப்படை நம்பிக்கைகளும்தான்.நமது சூழலைப் பொறுத்தவரை அரசியல்வாதிகள் எப்போதும் அரசியல்வாதிகளாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு சிறு அசைவையும் / நகர்வையும் அவர்கள் ஒருபோதும் செய்யத் துணிவதில்லை.நாம்தான் மிகையிலும், கவர்ச்சியிலும் நம்மை தொலைத்து இறுதியில் சகலத்தையும் தொலைக்கிறோம்.நாம் எப்போதும் ஏமாளியாகத்தான் இருக்கிறோம்.மேடைப்பேச்சுகளில், அடுக்குமொழி வாய்ஜாலங்களில், எண்ணற்ற வாக்குறுதிகளில், மெய்மறக்கிறோம்.நகரும் கால இடைவெளியில் மொத்தத்தையும் மறக்கிறோம்.நமக்கான இன உணர்வை எழுப்பக்கூட முத்துக்குமார்கள் தங்களை மாய்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழகத்தின் பிரதான ஊடகங்கள் (அச்சு,ஒளி,ஒலி) அதிகார வர்க்கத்தின் பிரச்சாரக் கூடங்களாய் இருப்பது / மாறிப் போனது மிகப்பெரிய சோகம்.முத்துக்குமார் சம்பவத்தை இருட்டடிப்பு செய்தும்,திரித்தும் கூட இவர்களால் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பை குறைத்து விடமுடியவில்லை.தொடர்ச்சியாய் வந்து கொண்டிருக்கும் பதிவுகள் இணைய எழுத்துக்கள் வலிமையான மாற்று ஊடகங்கள் என்பதான என் நம்பிக்கைகளை இன்னும் வலுப்படுத்துகின்றன.சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கும் சக நண்பர்களுக்கு என் நன்றிகள்.(திரித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் சேர்த்துத்தான்)

11 comments:

na.jothi said...

திரித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் சேர்த்துத்தான்
i
முன்பு படித்த சில வரிகளின் ஞாபகத்தை தூண்டுகிறது

என்னுடைய முன்னேற்றத்திற்கு
என் தாய் தந்தை என் நண்பர்கள்
அதிமுக்கியமாக என் முதுகில் குத்தியவர்களும்

na.jothi said...
This comment has been removed by the author.
கார்க்கிபவா said...

//.முத்துக்குமார் சம்பவத்தை இருட்டடிப்பு செய்தும்,திரித்தும் கூட இவர்களால் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பை
குறைத்து விடமுடியவில்லை/

இவர்களை என்ன செய்யலாம்?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நம்மால் இயன்றது கையில் கிடைக்கும் புல்லை எடுத்து குண்டர்களின் வயிற்றைக் கிழிப்பதுதான் :(

narsim said...

ஆம்.. நானும் சென்றிருந்தேன் இறுதி(அது இறுதியா ஆரம்பமா?)ஊர்வலத்திற்கு.. கட்டுக்கடங்காத கூட்டம்.. மீடியாக்களுக்கு தீனி போடும் விதம் ஏகப்பட்ட சம்பவங்கள்(கார்ட்டூன்கள்,கோஷங்கள்,கொடும்பாவிஎரிப்பு,செருப்படி)என.. என்றாலும் ஒரு மீடியாவில் கூட இதைப் பற்றி ஒரு தகவலும் இல்லை.. ஆண்மை மருத்துவர் விளம்பரங்கள் அளவைவிட சிறியதாக இரண்டு வரிகளில் எழுதியிருந்தார்கள்..(7வது 8வது பக்கங்களில்)

நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் அதை பதிப்பது தானே பத்திரிகைகளின் கடமை..

(இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தால் இன்னும் சில தற்கொலைகள் நடந்துவிடக்கூடாது என்பது நோக்கம் என்றால் நல்லது.. ஆனால் மீடியாக்களின் மெளனத்திற்கான காரணங்களாக கேள்விப்படும் சங்கதிகள் வேறுமாதிரி இருக்கின்றன..

ராஜதந்திரங்கள் வேறு.. எப்பொழுதும் தந்திரமான ராஜாவாக‌ இருப்பது வேறு.

நல்ல பதிவு

ஆதவா said...

இயன்றதைச் செய்வோம்...
இயலாமல் இருப்பதைக் காட்டில்உம்.

பத்திரிக்கைகளுக்கு எப்பொழுதுமே காசுமேலதான் மோகம்... ஒருசில விதிவிலக்குகள்

குப்பன்.யாஹூ said...

இந்த மாதிரி பொய்யான ஊடகங்களை மக்கள் புறக்கணிக்க தொடங்கி விட்டனர், எனவேதான் வெகுஜன எழுத்தாளர்கள் பலர் பதிவை தேடி வர தொடங்கி உள்ளனர்.

என் கவலை பதிவு உலகிலும் இந்த அரசியலை கலந்து விடுவார்களே என்பது தான்.

வழக்கம் போல அருமையான பதிவு அய்யனார்.


குப்பன்_யாஹூ

anujanya said...

ஏதாவது செய் என்று உள்ளுணர்வு சொன்னாலும், சொல்லிக்கொண்டே இருந்தாலும், கவிதையோ, கட்டுரையோ (அதுவும் சம்பந்தமே இல்லாத வெளி மாநிலத்தில், வசதிகளுடன்) எழுதுவது மிக சுய அருவருப்புத் தருகிறதாய் உணர்ந்தேன்.

"இணைய எழுத்துக்கள் வலிமையான மாற்று ஊடகங்கள் என்பதான என் நம்பிக்கைகளை இன்னும் வலுப்படுத்துகின்றன" என்று நீங்கள் சொல்வது சிறிது நிறைவைத் தருகிறது.

ஆத்மநாமின் இந்தக் கவிதையை நான் இதுவரை படித்ததில்லை. 'தீர்க்க தரிசனம்' என்பது இதுதான் போலும்.

நாமெல்லாம், உண்மையிலேயே உருப்படியாக என்ன செய்ய முடியும்? என்னிடம் கைவசம் விடைகள் தயாராக இல்லை :((

அனுஜன்யா

எறும்பு said...

// தொடர்ச்சியாய் வந்து கொண்டிருக்கும் பதிவுகள் இணைய எழுத்துக்கள் வலிமையான மாற்று ஊடகங்கள் என்பதான என் நம்பிக்கைகளை இன்னும் வலுப்படுத்துகின்றன //

எழுத்தாளர்கள்??

வேளைக்கு ஒன்று வீதம் தினசரி மூன்று கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர்களும், உலகத்தின் அனைத்து இலக்கியத்தையும் தலைகீழாக மனப்பாடம் செய்துவிட்டு இலக்கியத்துக்கு வாரிசுகள் உருவாக்கி கொண்டிருக்கும் எழுத்தாளர்களும், இந்தியாவின் நீளம், அகலத்தை கட்டைவிரலால் அளந்து வைத்திருக்கும் எழுத்தாளர்களும் Fevicol சாப்பிட்டிட்டு உட்காந்திருக்கிறார்களே?? :(

எறும்பு said...

// தொடர்ச்சியாய் வந்து கொண்டிருக்கும் பதிவுகள் இணைய எழுத்துக்கள் வலிமையான மாற்று ஊடகங்கள் என்பதான என் நம்பிக்கைகளை இன்னும் வலுப்படுத்துகின்றன //

எழுத்தாளர்கள்??

வேளைக்கு ஒன்று வீதம் தினசரி மூன்று கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர்களும், உலகத்தின் அனைத்து இலக்கியத்தையும் தலைகீழாக மனப்பாடம் செய்துவிட்டு இலக்கியத்துக்கு வாரிசுகள் உருவாக்கி கொண்டிருக்கும் எழுத்தாளர்களும், இந்தியாவின் நீளம், அகலத்தை கட்டைவிரலால் அளந்து வைத்திருக்கும் எழுத்தாளர்களும் Fevicol சாப்பிட்டிட்டு உட்காந்திருக்கிறார்களே?? :(

அருண்மொழிவர்மன் said...

அரசியல்வாதிகள் எப்போதும் அரசியல்வாதிகளாகவே//


பேச்சு, நடிப்பு என்ற தகுதிகளையே கொண்டு அரசியல் செய்ய வந்தவர்கள் எல்லாம் இப்போது தமது நாடகத்தின் மிக மோசமான கட்டங்களை அரங்கேற்றிக்கொண்டு உள்ளார்கள்

Featured Post

test

 test