Tuesday, February 10, 2009

வ.வெ.தொ.அ.வெ.கு - 2


அத்தியாயம் இரண்டு : புனைவெழுத்தாளனும் பூனையும்

புனைவெழுத்தாளனாய் இருப்பதென்பது *கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்ட மதிலின் மேல் நடக்கும் பூனையின் லாவக நடைக்கு இணையானது.தன்னை ஒரு புனைவெழுத்தாளனாய் நம்புவதென்பது மதிலின் மேலிருந்து குதிக்கும் இன்னொரு பூனையின் லாவகத்திற்கு ஒப்பானது.நான் சில நேரங்களில் நடந்தும் சில நேரங்களில் குதித்துமாய் என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.ஒன்றை மட்டும் தெளிவாய் சொல்லிவிடுகிறேன் பூனைகள் எப்போதும் இரத்தம் சிந்துவதில்லை.அவை சாதுர்யமானவை. லாவகமானவை. மென்மையானவை. கவர்ச்சியானவை.பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தவை. திருட்டை, சோம்பலை, திடீர்பாய்ச்சலை இயல்பாய் கொண்டவை.மேலும் புலிகளின் தோற்றுவாய் அல்லது புலிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவை எனவும் நம்பப்படுகின்றன.சக புனைவெழுத்தாளர்கள் புலிகளை நினைவில் புணரும் நிஜப் பூனைகளாகத்தான் இருக்கிறார்கள் என்பது என்னுடைய திண்ணம்.

இத்தகைய புனைவெழுத்தாளனுக்கு அன்றாட வாழ்வியலில் நேரும் துயரங்கள், துக்கங்கள், எரிச்சல்கள், சொல்லி மாளாதவை. நான் புனைவெழுத்தாளனாய் வடிவமெடுத்த நாளிலிருந்து இன்று வரை தொடரும் பெருந்துக்கம் ஒன்றிலிருந்து ஆரம்பிப்பது சரியாய் இருக்கும்.இந்தத் துக்கம் என்னை ஒவ்வொரு நாளையும் மிகுந்த பதட்டத்தோடு துவங்க காரணமாகிறது.இன்றும் எவனாவது, எவளாவது கேட்டு விடுவானா/ளா என்ற பதபதப்புகள் எப்போதும் இருக்கின்றன."அலோ எக்ஸ்கியூஸ்மி நீங்க புனைவெழுத்தாளர் புண்ணியகேடிதானே" ரீதியில் எவராவது உரையாடலை தொடங்கும்போதே என் இதயம் உச்சமாய் அடித்துக்கொள்ளும் ,அடுத்ததாய் அவர்கள் கேட்கும் கேள்வி அதாய் மட்டுமே இருக்க முடியும்."என்ன இம்சடா சாமி!" என பலமுறை அலுத்து வெறுத்துப் போயிருக்கிறேன்.தமிழ் சூழலில் உலவும் உயிர்ப்பான மூளை,உச்ச மூளை,உள்ளொளி மூளை,செத்த மூளை,பாடம் பண்ணப்பட்ட மூளை, பளபளக்கும் மூளை, இன்ன பிற எல்லா வஸ்துக்களிலும் எப்படியோ இந்த கேள்வி புகுந்துவிட்டிருக்கிறது.இந்த ஒரு கேள்வியிலிருந்து எப்படித் தப்பிப்பது என்கிற உளைச்சல்கள் என்னை மனநோய்க்கு சமீபமாய் கூட்டிச் சென்றுவிடுமோ என்கிற பயங்களும் எழ ஆரம்பித்துவிட்டன.

இந்த பிரச்சினைகளின் உச்சமாய் கடந்த செவ்வாய் இரவு நடந்த நிகழ்வைச் சொல்லலாம்.வழக்கம்போல் பத்தரை மணிக்குத் தூங்கிவிட்டேன்.அன்று மட்டும் என்னிடம் பதினெட்டு பேர் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தனர்.பதினெட்டு பேர் அந்த கேள்வியை கேட்பதென்பது எனக்கு சாதாரணமானது. ஏனெனில் ஒரு நாளில் முன்னூற்று இருபத்தேழு முறைகள் அக்கேள்வியை எதிர்கொண்டிருப்பதால் கடந்த செவ்வாய் எனக்கு சாதாரண ஒர் நாள்தான். என்னவாகிற்றோ தெரியவில்லை நள்ளிரவில் தூக்கத்தில் எழுந்து, படுக்கையில் சப்பணமிட்டு அமர்ந்து, அந்தக் கேள்விக்கு ஆயிரத்துப் பதினேழு விடைகளைச் சொல்லியிருக்கிறேன்.என் மனைவி நான் பேச ஆரம்பித்ததும் பதிவு செய்யும் கருவியை உயிர்ப்பித்து விட்டு, காதுகளில் பஞ்சை அடைத்துக்கொண்டு தூங்கி விட்டாளாம்.இன்னொரு முக்கியமான விடயத்தை சொல்ல மறந்துவிட்டேன்.ஒரு வெற்றிகரமான புனைவெழுத்தாளனாய் திகழ மனைவியின் பங்களிப்பு மிக மிக அவசியம்.பாருங்களேன் நான் பேச ஆரம்பித்ததும் பதிவு செய்யும் கருவியை உயிர்ப்பித்த அவளின் சாதுர்யத்தை எப்படிப் புகழ!!..அதனால்தான் எத்தனை விடைகளை சொல்லி இருக்கிறேன் என மறுநாள் கேட்டு மிகத் துல்லியமாய் ஆயிரத்துப் பதினேழு விடைகள் என என்னால் குறிப்பிட முடிந்தது.புனைவெழுத்தாளனுக்கு துல்லியம் மிக முக்கியம்.

அந்த ஒரே ஒரு கேள்வியை தெரிந்தவர்,தெரியாதவர், முன் பின் பார்த்திராதோர், பிறந்ததிலிருந்து பார்த்துக்கொண்டிருப்போர், பல வருடங்களாய் தெரிந்தோர், சில வருடங்களாய்த் தெரிந்தோர் என பாகுபாடில்லாமல் என் கண்ணில் படுவர்கள்/படாதவர்கள்/பட்டிராதவர்கள் எல்லாம் கேட்டுத் தொலைவதுதான் என்னை பெரும் துயரத்தில் ஆழ்த்துகிறது.ஒரே கேள்வியை பத்தாயிரம் முறைகளில் மாற்றி மாற்றிக் கேட்கமுடியும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?நம்ப முடியாவிட்டாலும் இதுவரை நான் அந்த கேள்வியைப் பத்தாயிரம் முறைகளில் கேட்டிருக்கிறேன். கேட்கப்பட்டிருக்கிறேன். உதாரணத்துக்கு இங்கே சில முறைகள் மட்டும் உங்கள் பார்வைக்கு.

/புனைவு என்றால் என்ன?/புனைவுன்னா என்ன அய்யனார்?//புனைவு அப்படின்னா?/புனைவு என்றால் என்னங்க அய்யனார்?//புனைவு ன்னா என்ன மச்சி?/டே மாமா அது இன்னாடா பொனைவு?/யோவ் மாம்ஸ் புனைவுன்னா என்னய்யா?//எலேய் எப்பபாத்தாலும் புனைவு கினைவு ன்னு என்னடா அப்படின்னா?/மரியாதைக்குரிய அய்யனார் புனைவு என்றால் என்ன என்பதை எனக்கு புரியும்படி விளக்கமுடியுமா?தங்கள் பதிலை வேண்டி (ஒவ்வொரு முறையும் ஜிமெயிலை திறக்கும்போதே இதுபோன்ற கடிதம் இருக்க கூடாது என வேண்டிக்கொண்டே திறப்பேன்.)//அய்ஸ் புனைவுன்னா என்ன?/தம்பி புனைவ கொஞ்சம் விளக்கேன்?/செல்லம் புனைவுன்னா என்ன செல்லம்?/கண்ணா என்னடா ஆஆ அது புனைவு?/Darling I saw some label called punaivu in your blog what is that?/தங்கம் நீ என்னமோ எழுதிறியே புனைவு அது என்னாது?/ Honey punaivu means Fiction?/

உங்களுக்காவது தெரியுமா புனைவு என்பதை பொட்டில் அடித்தாற்போல் எப்படிச் சொல்வதென்பதை?..

*கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்ட மதிலின் மேல் நடக்கும் பூனை : இந்தப் படிமம் ரமேஷ் ப்ரேமினுடையது.

13 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஐயோ, இதே கேள்விக்கு நானும் இஷ்டத்திற்குப் பதில் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். சில சமயம், பழைய பதில்களை ஞாபகம் வைத்துக் கொண்டு கிடுக்கிப் பிடி போடுபவர்களும் இருக்கிறார்கள் :)

நல்லா வந்திருக்கு அய்யனார்!

வால்பையன் said...

//சக புனைவெழுத்தாளர்கள் புலிகளை நினைவில் புணரும் நிஜப் பூனைகளாகத்தான் இருக்கிறார்கள் என்பது என்னுடைய திண்ணம்.//

ஹா ஹா ஹா

வால்பையன் said...

என் பங்கு விட்டு போச்சே!

what is punaivu?

:)

anujanya said...

இங்கும் பூனை பதிவா? ஒரு குரூப்பாத்தான்யா கிளம்புறாங்க.

"மதில் மேல் நடக்கும் பூனைகளுக்காக பதிக்கப்பட்ட கண்ணாடிச் சில்லுகள்" என்றும் சொல்லலாமோ.

நல்ல வேளை லேபல் "அயல் வெளிக் குறிப்புகள்' என்று மட்டும் உள்ளது. 'புனைவு' இருந்தால், முற்றிலும் புதிய பாணியில் அதே கேள்வியை நானும் கேட்டிருப்பேன் :)

அனுஜன்யா

na.jothi said...

போன பதிவில் போட்ட comment தான்
இந்த பதிவுக்கு பதில் ?
இன்று நான் எத்தனையாவது ஆள்

na.jothi said...

போன பதிவில் போட்ட comment தான்
இந்த பதிவுக்கு பதில் ?
இன்று நான் எத்தனையாவது ஆள்

கோபிநாத் said...

;))))))))))))

Karthikeyan G said...

//புனைவு அப்படின்னா?//

எனக்கு தெரியும்!!

அது திருச்சிக்கு பக்கத்துல இருக்கு, திருச்சில இருந்து அஞ்சு ரூவா சார்ஜு. போயிருக்கேன்.

ரௌத்ரன் said...

full form ல இருக்கீங்க அய்யனார்...

Ayyanar Viswanath said...

நன்றி சுந்தர்

வால்பையன் :))

அனுஜன்யா வேரெங்கு பூனை பதிவு? :)

ஸ்மைல் நீங்கள் கேட்கவே இல்லையே :)

கோபி வலைப்பூக்கள் நன்றி

அதேதான் கார்த்திக் :)

நன்றி ரெளத்ரன்..

TKB காந்தி said...

அய்யனார்,

உங்கள் எழுத்துக்கள்/நடை ரொம்பவும் ஈர்க்கக்கூடியவை, சிறந்த வாசிப்பின்பம் தருகிறது.

இந்த பதிவிற்கு நீங்கள் சரவணன் blog-ல், ஸ்ரீமதி-யின் கமெண்ட்டை quote-டியது ஞாபகம் வந்தது...


அய்யனார் said...

//புனைவில் வாசகன் கதை சொல்லியா இருக்கணுமேத் தவிர, யாரோ ஒரு கதை சொல்லியோட கைப் பிடிச்சு வாசகன் நடக்கற மாதிரியான நடை இருக்கக்கூடாது அப்படிங்கறது என் தாழ்மையான கருத்து..!! சரியா??//

என்னளவில் இது மிகச்சரி :)

OCTOBER 9, 2008 10:26 PM


http://msaravanakumar.blogspot.com/2008/10/blog-post_09.html

anujanya said...

அய்ஸ்,

என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? வேற யாரு. மொழி விளையாட்டு செய்பவர், பூனைகளுடன் (ஒரு குறியீடாக) விளையாடியிருக்கிறார். மீள்பதிவு (நீங்க கூட பின்னூட்டம் போட்டிருக்கீங்க!) என்றாலும், இப்போதுதான் நான் படித்தேன் :)

அனுஜன்யா

MSK / Saravana said...

இந்த பதிவுக்கு சில நாட்கள் முன்பு தான் இது (புனைவு மற்றும் இன்னபிற) சம்பந்தமாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பி தொந்தரவு செய்யலாமா என்று நினைத்து கொண்டிருந்தேன்.. இந்த பதிவுக்கு பின்பு எப்படி அனுப்ப?

Featured Post

test

 test