
கீற்றில் ஆதவன் தீட்சண்யாவின் படைப்புகளை வாசித்துக் கொண்டிருந்தபோது ஓசூர் நினைவுகள் ஆக்ரமிக்கத் துவங்கின.கவிதைகள் அழகியல் சார்ந்தவை என்பதான என் நம்பிக்கைகள் உடைந்த கணம் நன்றாய் நினைவிலிருக்கிறது.ஆதவன் தீட்சண்யாவின் சுயவிலக்கம் கவிதையை படித்த கணம்தான் அது.திரும்ப திரும்ப வாசித்து என் கவிதை பிம்பங்களை உடைத்துக்கொண்டிருந்தேன்.
சுய விலக்கம்
நகரத்தின் மோஸ்தருக்குள்
முற்றாய் பொருந்திவிட்ட என்னை
அத்தனை சுளுவாய்
அடையாளம் கண்டுவிடமுடியாது
எனக்கே தெரியுமன்றாலும்
அறுந்த செருப்பை
தெருவோர காப்ளரிடம் தான்
தைத்துக்கொள்கிறேன்
வீட்டுக்கே வந்து டோபி
துணியெடுத்துப் போகிறான்
முன்னொரு காலத்து என் அம்மா போல
நீயமரும் இருக்கையிலேயே
எனக்கும் சவரம் சலூனில்
பரம்பரையின் அழுக்கு
அண்டிவிடக்கூடாதென்று
நகங்களைக்கூட
நறுவிசாக வெட்டிக்கொள்கிறேன்
அதீத கவனத்தோடு ஊரை மறக்கிறேன்
புறப்பட்டுவந்த சுவடு தெரியாதிருக்க
சண்டேக்களில் மட்டனோ சிக்கனோதான்
பீப் என்றால் என்னவென்றே
தெரியாது என் பிள்ளைகளுக்கு
ரிசர்வேசனுக்கெதிரான உங்களின்
உரையாடலின் போதும்
"நாயைக் குளிப்பாட்டி
நடுவீட்டில் வைத்தாலும்..." என்கிற போதும்
யாரையோ வைவதாய்
பாவனை கொள்கிறேன்
பதைக்கும் மனமடக்கி
"உங்கம்மாளப் போட்டு
பறையன் சக்கிலிப் போக ..."
என்ற வசவுகளின் போது
அதுக்கும் கூட உங்களுக்கு
நாங்க தான் வேணுமா என்றும்
சாவு வீடுகளில் வதக்வதக்கென்று
யாராச்சும் ஜதிகெட்டு கொட்டடித்தால்
எங்கப்பனாட்டம் உன்னால
அடிச்சி ஆடமுடியுமா என்றும்
கேட்கத்துள்ளும் நாக்கை எத்தனை
சிரமப்பட்டு அடக்கிக்கொள்கிறேன் தெரியுமா
இருப்பினும்,
தடயங்களை அழிக்காமல்
உள்நுழைந்தத் திருடனைப்போல்
என்றாவதொரு நாள் எப்படியேனும்
பிடிபட்டு அவமானப்படும் அச்சத்தில்
உங்களோடு ஒட்டாமல்
ஓட்டுக்குள் ஒடுங்கும் என்
புத்தியிலிருந்து நீங்கள்
கண்டுபிடிக்கக்கூடும்....
இக்கவிதையை நாட்குறிப்பில் எழுதி வைத்துக்கொண்டேன்.ஓட்டுக்குள் ஒடுங்கும் என் புத்தியிலிருந்து என்ற வரிகள் மட்டும் என்னை திரும்பத் திரும்ப இம்சித்துக் கொண்டே இருந்ததன.அக்கவிதை படித்த காலகட்டத்தில் நான் ஓசூரில் வாழ்ந்திருந்ததாலும் ஆதவனின் நண்பர்கள் எனக்கும் நண்பர்களாய் இருந்ததாலும் தமுஎச கூட்டங்களுக்கு வேடிக்கை பார்க்கச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.ஆதவன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து குறிஞ்சி திரைப்பட இயக்கம் என்றொரு இயக்கத்தை துவங்கினார்கள்.உலகத் திரைப்படங்களை நண்பர்கள் அனைவரும் கூடி ஒரு இடத்தில் திரையிடுவது, பின்பு அத்திரைப்படம் முன் வைக்கும் 'மாற்று'க்களை விரிவாய் உரையாடுவதென எனக்கான ஆரம்ப சன்னல் திறப்புகள் அற்புதமானதாய் இருந்தது.
சின்னண்ணன்,பா.வெங்கடேசன்,போப்பு,க.சீ.சிவக்குமார் என பெரும் கூட்டமே அங்கிருந்தது.எல்லாவற்றையும் ஓரமாய் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். மேலும் நான் அங்கிருந்த காலகட்டங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளாக பலவற்றைக் குறிப்பிடலாம்.குறும்படங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு கிட்டத் தட்ட இருபது நபர்களுக்கும் மேல் ஒரே அறையில் கூடி நண்பரொருவர் வாங்கிவந்திருந்த ஒரே புட்டி மதுவினை பகிர்ந்துகொண்டோம். பத்து மில்லி அளவிற்கு எனக்கும் வந்தது.அதை கையில் வைத்தபடியே சுயவிலக்கம் கவிதை தந்த உணர்வுகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன். டி.அருள்எழிலனின் ஒரு ராஜாங்கத்தின் முடிவில் குறும் படத் திரையிடல், பெயர் மறந்து போன ஒருவரின் கவிதை தொகுப்பு வெளியீடு (அவ்விழாவிற்கு பிரபஞ்சன் வந்திருந்தார்.அவர் சொன்ன ஜென் கதை நினைவிலிருக்கிறது), Children of Heaven பார்த்துக் கசிந்துருகியது என என் ஓசூர் காலங்கள் மறக்க இயலாதவை.மேலும் இங்கு எழுத்து போல் ஒன்றை கிறுக்கிக் கொண்டிருப்பதற்கான நன்றியுடைய துவக்கங்களாகவும் அவை இருக்கின்றன.
எழுத்தோடு மட்டும் நின்றுவிடாது களப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஆதவனின் சமூகப் பங்களிப்பு சம காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.விளிம்பிலிருந்து எழும் விசும்பலான குரல்களுக்கிருக்கும் கழிவிரக்கமோ பச்சாதாபமோ ஆதவனின் குரலுக்கில்லை.ஆதவனின் குரல் அதட்டலானது.
வாழத்தேவையான எதையும் கற்றிராத நீங்கள்
அறிவிலும் அந்தஸ்திலும்
தகுதியிலும் திறமையிலும்
பிறப்பிலேயே என்னை விட
ஒசத்தி எந்தவகையிலென்று
இப்போது நிரூபியுங்கள்
அதுவரை
எனக்கு சமதையற்ற உங்களைத்
தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை
தீண்டுவது வெறுமனே
சரீரம் சம்பந்தப்பட்டதல்ல.
'மாற்று' அரசியல் மாற்றுச் சமூகமென தங்களுக்கான அடையாளங்களைத் துவக்கியவர்கள் மிகப் பெரும் நிறுவனங்களாக மாறிப் போய்விட்ட/போய்விடும் அபத்தங்கள் தொடர்ந்து நம் சூழலில் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. இதற்கான அடிப்படைக் காரணங்கள் அங்கீகாரமின்மை என்கிற புள்ளியில்தான் முடியக் கூடும் அல்லது வாழ்வியல் தேவைகளாகவும் இருக்கலாம். நமது சூழல் எழுத்தாளனுக்கான போதிய அங்கீகாரத்தை தருவதில்லைதான் எனினும் அங்கீகாரமோ,புகழோ தனது நிழல்களைக் கூட தொட அனுமதியாத ஆதவன் தீட்சண்யாக்களும் நம் சூழலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் / இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிகுந்த ஆசுவாசமாய் இருக்கின்றது.