Saturday, November 8, 2008

இரண்டு முன்னாள் காதலிகள்..

ஜப்பானிய இயக்குனரான Yasujiro Ozu யின் இரண்டு திரைப்படங்களைப் பார்க்க நேரிட்டது.ஜப்பானிய திரைப்படங்களின் ஊடாய் அவர்களின் கலாச்சாரம், வாழ்வு, தொன்கதைகள், பண்பாடு, இவற்றை அறிய நேரிடுவது அலாதியானது.மிகப் பெரும்பான்மையான புள்ளிகளில் திராவிட கலாச்சாரங்களோடு அவைகள் ஒத்துப்போவது மிக ஆச்சர்யமான ஒற்றுமை.உலகமெங்கிலும் உள்ள வழமைகள் ஒன்றுக்கொன்றுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவைதான் என்றாலும் ஜப்பானியர்களை என்னால் மிக நெருக்கமாக உணர முடிகிறது. 1959 ல் வெளிவந்த இவரின் Ukigusa aka The floating Weeds திரைப்படம் ஒரு மறுபதிப்பு.1934 ல் இவர் கருப்பு வெள்ளையில் எடுத்த சலனப் படத்தை 1959 ல் வண்ணப்படமாக பிரசித்தி பெற்ற ஒளிப்பதிவாளர் Miyagawa வினால் மீணடும் எடுக்கப்பட்டது.Miyagawa அகிராவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்.

1.The floating Weeds


இத்திரைப்படம் Kabuki கலைஞர்களின் வாழ்வைப் பேசுகிறது.ஜப்பானிய தொன்கலைகளில் ஒன்றான Kabuki கிட்டத் தட்ட நமது தெருக்கூத்துக் கலைக்கு ஒப்பானது.சிறு குழுவாய் நகரெங்கிலும் பயணிக்கும் இக்கலைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் தங்கி தங்களின் நிகழ்ச்சியை நடத்துவார்கள்.அக்குழுவின் தலைமை நடிகர் Komajuro, அவரின் மனைவி Sumiko, இளம் நடிகை Kayo, உள்ளிட்ட குழுவினரோடு கடற்கரையோர கிராமத்திற்கு ஒரு வெயில் தகிக்கும் மதியத்தில் சென்றடைகிறார்கள்.அந்நகரத்திற்கு இக்குழு ஏற்கனவே வந்திருக்கிறது.ஆனால் இப்போதிருக்கும் பலர் அப்போதிருக்கவில்லை.Komajuro வின் ரகசிய மனைவி அல்லது முன்னாள் காதலி இந்நகரத்தில் தனது வளர்ந்த மகனோடு வசித்து வருகிறாள்.இவர்களின் உறவை அவள் மகனுக்கும் தெரிவித்திருக்கவில்லை.மாமா எனவே இவரைத் தெரிந்துவைத்திருக்கிறான்.இவர்களின் உறவு sumiko விற்கு தெரிந்து போகிறது.தன் கணவனை பழி வாங்கும் பொருட்டு அவர் மிகவும் நேசிக்கும் அவரின் மகனை தன் குழுவில் இருக்கும் இளம் பெண்ணை வைத்து காதலிக்க வைக்கிறாள்.அதன் மூலம் குழப்பங்கள் ஏற்படுகின்றன.அவரின் மகனுக்கும் இவர் தந்தை என தெரிந்து போகிறது.அவரின் எதிர்ப்பை மீறி அவ்விளம் நடிகையை மணந்து கொள்கிறான்.இடையில் அக்கலைக்குழு தோல்வியடைகிறது. மொத்தப் பணத்தையும் இழக்கிறார்கள். தலைமை நடிகர் பிற நடிகர்களை திருப்பி அனுப்புகிறார்.இறுதியில் அவரின் முன்னாள் காதலி, மகன், என எல்லாரையும் துறந்து அந்நகரை விட்டுச் செல்கிறார்.ரயில் நிலையத்தில் அவரால் ஏற்கனவே துரத்தியடிக்கப்பட்ட மனைவி்யோடு இணைந்துகொள்வதாய் படம் நிறைவடைகிறது.

குறுகலான ஜப்பானிய தெருக்கள், வெயில் உண்டு வாழும் சாமான்யர்கள்,கோபமும், ஆத்திரமும், வன்மமும், பெருமிதமும் , கொண்டாட்டமுமான பல்வேறு பாத்திரங்கள் என இத்திரைப்படம் தனது மண்சார்ந்த பதிவுகளை மிக நேர்த்தியாய் நம் முன் வைக்கிறது.

2.Kohayagawa-ke no aka The End of Summer(1961)



சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் என்று கூட இத்திரைப்படத்தை சொல்லலாம்.காலமும் சூழலும் ஒரு குடும்பத்தை வெவ்வேறு தளங்களுக்குள் கொண்டு செல்வதையும், இழப்பு/மகிழ்வு, வெறுமை/அன்பு என இரு வேறு நிலைப்பாடுகள் மத்திய தர வாழ்வை மாறி மாறி அலைக்கழிப்பதையும் நேர்த்தியான பின்புலம் கொண்டு சொல்லியிருக்கிறார் Yasujiro Ozu.மனைவியை இழந்த ஒரு குடும்பத் தலைவன்,மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண், இந்தக் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களைத் திரைப்படமாக தந்திருக்கிறார்.இதிலும் வெக்கை மிகுந்த வெயில் படம் முழுவதும் பயணிக்கிறது.மிக நேர்த்தியான ஒளிப்பதிவு,ஒத்திசைவாய் அற்புதமான இசை, எனக் காட்சி இன்பத்தினைத் தூண்டும் பதிவாக்கம் வேறொரு மனநிலைக்கு பார்வையாளனை அழைத்துச் செல்கிறது.இத்திரைப்பபடத்தை ஒளிப்பதிவு செய்திருப்பவர் Tomoichi Nakai.இவர் குறித்த தகவல்கள் எதுவும் இணையத்தில் காணப்பெறவில்லை.மிகுதி எனச் சொல்லப்படும்படியான கதை சொல்லல்கள் இல்லாதிருந்தது ஆச்சர்யத்தைத் தந்தது. நகரும் மேகத்தைப் போல, கடக்கும் கணத்தினை போல, மிக இயல்பான காட்சிப் பதிவாக்கம் மிகவும் நெகிழ்வுத் தன்மைக்கு தள்ளியது.

வயதான Kohayagawa-ke (Ganjiro Nakamura) தனது பொறுப்புகளிலிருந்து விலகி பழைய காதலியின் வீட்டிற்கு அடிக்கடி செல்கிறார்.கணவனை இழந்த முதல் பெண், வாய் துடுக்கு மிகுந்த இரண்டாவது மகள், படிக்கும் மூன்றாவது மகள்,அதிக விஷயஞானமில்லாத மகன் என அனைவரும் தந்தையின் இச்செயலின் மீது மனவருத்தம் கொள்கின்றனர்.தந்தையின் மீதிருக்கும் அபரிதமான அன்பை மய்யமாக கொண்டிருக்கிறது இத்திரைப்படம்.பொறுப்பில்லாத தகப்பனார்கள் தரும் அயர்ச்சி விவரிக்க இயலாதது.அவரின் உடல்நிலை கெடும்போது நால்வரும் பரிதவித்துப் போவதும்,அவரின் வயதுக்கொவ்வாத செயல்களின் மீது ஏற்படும் வெறுப்பை நேரிடையாய் வெளிக்காட்ட முடியாததுமாய் தவிக்கும் காட்சிகள் நடிப்பின் உச்ச சாத்தியங்கள்.மரணம் குறித்தான உரையாடல்கள் தென்னிந்திய தத்துவங்களின் மறுபதிப்பாக ஜப்பானில் உலவும் ஒற்றுமை இன்னொரு ஆச்சர்யம்.முதல் மகளாய் நடித்திருந்த பெண்ணின் கண்களில் ஒளிர்ந்த கருணையும் அமைதியும் வெகுநேரம் கட்டிப்போட்டது.சுற்றியுள்ளவர்களிடத்தில் அன்பை பொழியும் இவளின் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது.

இரண்டு திரைப்படங்களின் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பவர் Ganjiro Nakamura தலைமை கலைஞனாகவும்,வயதான தகப்பனாகவும் இரண்டு படங்களிலும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.இரண்டிலும் பொதுவான அம்சம் old Flame ஆக இருக்கிறது.

பதின்மங்களின் கிளைகளில் பூக்கும் காதல் பரவசங்கள்,விலகிப் போக நேரிடின் அவற்றைப் பின் தொடராதிருப்பதே அப்பரவசங்களுக்கு நாம் தரும் மிகக் குறைந்த பட்ச மரியாதையாய்/ நன்றியாய் இருக்கமுடியும்.இன்றளவிலும் அவளின் திசையறிய எவ்வித முயற்சிகளுக்கும் மெனக்கெட்டதில்லை.எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாய்த்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன்,முதல் காதலும் இன்னும் சில முத்தங்களும்..

9 comments:

தமிழன்-கறுப்பி... said...

\\
பதின்மங்களின் கிளைகளில் பூக்கும் காதல் பரவசங்கள்,விலகிப் போக நேரிடின் அவற்றைப் பின் தொடராதிருப்பதே அப்பரவசங்களுக்கு நாம் தரும் மிகக் குறைந்த பட்ச மரியாதையாய்/ நன்றியாய் இருக்கமுடியும்.இன்றளவிலும் அவளின் திசையறிய எவ்வித முயற்சிகளுக்கும் மெனக்கெட்டதில்லை.எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாய்த்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன்,முதல் காதலும் இன்னும் சில முத்தங்களும்..
\\

சரியென்பதே என்னுடைய கருத்தும் இது பற்றி சொல்லிக்கொள்ள ஒரு விசயம் மனதுக்குள் முட்டிக்கொண்டிருக்கிறது உறக்கம் வர மறுக்கிறதொரு பின்னிரவில் எழுதப்படலாம் அது பற்றிய குறிப்பொன்று...

இப்போதைக்கு பதின்மங்களில் தோன்றிய என் காதல் இருபதுகளில் தோற்றுப்போயிற்று என்கிற ஆரம்பத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்...

தமிழன்-கறுப்பி... said...

ஜப்பானியத் திரைப்படங்கள் தருகிற இயல்பான கதை சொல்லல் ரசனைக்குரியது என்கிறதாகத்தான் அறிந்திருக்கிறேன்...
வெகுநாட்களாயிற்று ஜப்பானியப் படங்கள் பார்த்து...
ஆனால் ஒன்று ஒரு பிற மொழிப்படத்தை விளங்கிக் கொள்வதற்கு நான் அதனை குறைந்தது மூன்று முறையாவது பார்ப்பேன் (அவ்வளவுதான் என் மொழியறிவு)முதல் முறையில் அது என்னை கவர்ந்திருந்தாலே அடுத்த தடவைகளுக்கான சந்தர்ப்பம் கொடுக்கப்படும்...

Unknown said...

திரைப்படங்களை நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது..இரண்டாம் படத்தை உடன் பார்க்க ஆவல் எழுகிறது...நல்ல பதிவு அய்யனார்

கார்க்கிபவா said...

/பதின்மங்களின் கிளைகளில் பூக்கும் காதல் பரவசங்கள்,விலகிப் போக நேரிடின் அவற்றைப் பின் தொடராதிருப்பதே அப்பரவசங்களுக்கு நாம் தரும் மிகக் குறைந்த பட்ச மரியாதையாய்/ நன்றியாய் இருக்கமுடியும்.இன்றளவிலும் அவளின் திசையறிய எவ்வித முயற்சிகளுக்கும் மெனக்கெட்டதில்லை.எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாய்த்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன்,முதல் காதலும் இன்னும் சில முத்தங்களும்.//


என்னால் இயலவில்லை. இன்னமும் நான் பக்குவப்படவில்லை என்பதை இது காட்டுகிறதா எனத் தெரியவில்லை.

MSK / Saravana said...

இன்னும் இதுவரை ஒரு ஜப்பானிய திரைப்படங்களை பார்த்ததில்லை. பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக இருக்கிறது இப்பதிவு..

MSK / Saravana said...

//பதின்மங்களின் கிளைகளில் பூக்கும் காதல் பரவசங்கள்,விலகிப் போக நேரிடின் அவற்றைப் பின் தொடராதிருப்பதே அப்பரவசங்களுக்கு நாம் தரும் மிகக் குறைந்த பட்ச மரியாதையாய்/ நன்றியாய் இருக்கமுடியும்.இன்றளவிலும் அவளின் திசையறிய எவ்வித முயற்சிகளுக்கும் மெனக்கெட்டதில்லை.எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாய்த்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன்,முதல் காதலும் இன்னும் சில முத்தங்களும்.//

//பதின்மங்களின் கிளைகளில் பூக்கும் காதல் பரவசங்கள்,விலகிப் போக நேரிடின் அவற்றைப் பின் தொடராதிருப்பதே அப்பரவசங்களுக்கு நாம் தரும் மிகக் குறைந்த பட்ச மரியாதையாய்/ நன்றியாய் இருக்கமுடியும்.இன்றளவிலும் அவளின் திசையறிய எவ்வித முயற்சிகளுக்கும் மெனக்கெட்டதில்லை.எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாய்த்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன்,முதல் காதலும் இன்னும் சில முத்தங்களும்.//

நானும் ஒத்து போகிறேன்.. ஆனால் அதிரஷ்டசாலி நீங்க. முத்தங்களெல்லாம் கிடைக்கபெறவில்லையே எனக்கு.

MSK / Saravana said...

நானும் ஒரு திரைப்படம் பார்த்த பாதிப்பில் ஒரு பதிவு ஒன்று எழுதி இருக்கிறேன். நேரமிருந்தால் படிச்சு பாருங்க. திரைப்படத்தையும் பாருங்க.

http://msaravanakumar.blogspot.com/2008/11/jacket-2005-important-thing-in-life-is.html

KARTHIK said...

// மரணம் குறித்தான உரையாடல்கள் தென்னிந்திய தத்துவங்களின் மறுபதிப்பாக ஜப்பானில் உலவும் ஒற்றுமை இன்னொரு ஆச்சர்யம்.//

ஆமாம் அய்ஸ் நீங்க சொன்னதுக்கப்புறம் தான் Dreams படத்துல வர்ற அந்த முதல் கனவு எப்படி நம்ம கதையோட ஒத்துப்போகுதுன்னு புரிஞ்சிக்க முடிஞ்சுது.

// பதின்மங்களின் கிளைகளில் பூக்கும் காதல் பரவசங்கள்,விலகிப் போக நேரிடின் அவற்றைப் பின் தொடராதிருப்பதே அப்பரவசங்களுக்கு நாம் தரும் மிகக் குறைந்த பட்ச மரியாதையாய்/ நன்றியாய் இருக்கமுடியும். //

ரசிக்கும்படியான மொழிநடை.

Ayyanar Viswanath said...

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் தமிழன்,உமாசக்தி,கார்க்கி,சரவணக்குமார் மற்றும் கார்த்திக் : நன்றி

Featured Post

test

 test