Saturday, November 15, 2008

வாரணம் ஆயிரமும் முதல் முத்தமும்


திரைப்படம் பார்த்து முடித்த பின்பு லேசாய் குடித்தால் நன்றாகவிருக்கும்போல் தோன்றியது. இரவு பதினோரு மணிவாக்கில் Grand ல் போய் அமர்ந்தேன்.மூன்று வாரங்களாய் தொட்டிராத பியர் வாசனை தந்த மகிழ்வை விட வெகு காலம் கழித்து நம் சூழலில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் நிறைந்திருந்தேன்.உறவுகள் தொடர்கதை யென கிதார் பின்னனியில் தொடங்கும்போதே மகிழ்வாய் இருந்தது.ரயில், மழை, கிதார், காதல் என பதின்மங்களை புரட்டிப்போடும் காட்சியமைப்புகள்.நெடிய திரைப்படத்தில் அங்கங்கு கவிதைத்தனம்.(அவளோடு வாழ்ந்த தொண்ணூ்று நாள் ஒரு இளையராஜா பாடல் மாதிரி).கல்லூரியில் படிக்கும்போது எல்லாருக்கும் ஒரு கனவிருக்கும். கையில் ஒரு கிதார், ஒரு அழகான பெண், என் இனிய பொன்நிலாவே, வென தன்னைப் பிரதானப்படுத்தி காட்சிகள் பகல்கனவில் விரியும்.அதை திரையில் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்வு அளவில்லாதது.சூர்யா- சமீராரெட்டி காதல் ஒரு இளமை fantasy.

அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு நமது சூழலில் அழுகாச்சி காவியங்களாகவே சொல்லப்பட்டிருக்கிறது.முதன்முறையாய் இயல்பான, நட்புரீதியிலான, நெகிழவைக்கிற, அற்புதமான கதை சொல்லல் இத்திரைப்படத்தில் சாத்தியமாகி இருக்கிறது.கிருஷ்ணன் கதாபாத்திரம் தமிழ்சூழலுக்கு மிகவும் புதிது.நானா படேகர் இப்பாத்திரத்தில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான் என்றாலும் சூர்யாவின் உழைப்பு எவ்வகையிலும் உறுத்தவில்லை.உடல்மொழி, குரல், உடைத்தேர்வுகள் காட்சியமைப்புகளென கிருஷ்ணன் கதாபாத்திரம் மிகக் கச்சிதம்.பதின்ம சூர்யா, கல்லூரி சூர்யா, காதல் சூர்யா, பொறுப்பான சூர்யா, தடுமாறும் சூர்யா, அலையும் சூர்யா, திரும்பும் சூர்யா, உழைக்கும் சூர்யா, சாகச சூர்யா, குடும்ப சூர்யா,அப்பா சூர்யா,சந்தோஷமாய் மரணிக்கும் சூர்யா ..மூச்சுமுட்ட வைக்கும் சூர்யாக்கள்.ஒவ்வொரு காட்சியிலும் புதிய சூர்யாவை பார்க்க முடிகிறது.ஒரு திரைப்படத்திற்காக உழைக்கும் கலைஞனை பார்க்க மகிழ்வாய் இருக்கிறது.சுயசரிதைப் படங்கள் பிரதான பாத்திரத்தின் உழைப்பைக் கோருபவை Raging Bull ல் Robert di niro அபரிதமாய் உழைத்திருப்பார்.ஒரு குத்துச் சண்டை வீரனாய் ஆரம்பித்து குடிகார குப்பனாய் மாறும் வரையிலான உடலை அப்படியே நம் முன் கொண்டு வந்திருப்பார். சூர்யாவின் உழைப்பும் உலகத் தரம்தான்.

இந்த படத்தில் நொட்டை சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.நீளத்தை வெட்டியிருக்கலாம்,தேவையில்லாத காட்சிகளை நீக்கியிருக்கலாம், இன்னும் கச்சிதமாக்கியிருக்கலாம், தமிழில் பேசியிருக்கலாம், இப்படி ஏகப்பட்ட லாம்கள்.ஆனால் சுயசரிதை படங்கள் கசாமுசா வென இருப்பது தான் எனக்குப் பிடித்திருக்கிறது.நேர்கோட்டில் எவரின் வாழ்வும் இல்லை.அப்படி நேர்கோட்டில் சொல்வதெல்லாம் சுயசரிதைப் படங்களாக முடியாது.கெளதம் தன் அப்பாவிற்கு செலுத்திய மிக உயர்ந்த பட்ச நன்றியாய் இப்படம் இருக்கலாம்.சினிமாவை நேசிக்கும் மிகச் சொற்பமான நபர்களுக்கு நிச்சயம் இத்திரைப்படம் பிடிக்கலாம்.
.............................................................

வியர்வைக் கசகசப்புகள் மிகுந்த ஒரு வன்கோடையின் பின் மதியத்தில்தான் நிகழ்ந்தது அது.அழுக்கேறிய தலையணைகள், எப்போதுமே மடித்திராத போர்வைகள், சுருட்டியிராத பாய்கள் எங்களைச் சூழ்ந்திருந்தன.அடுத்தவரின் படுக்கையறையை ஆவென வாய்பிளந்து சன்னலின் வழி உள்நுழைந்து பார்க்கும் சூரியனை ஒரு கனமான போர்வையினைக் கொண்டு தடுத்திருந்தேன்.முருங்கை மரமொன்றும்,மாமரமொன்றும் மிகச் சோம்பலான நிழலை,மென் காற்றை, இணைப்பாய் தேன் சிட்டுகளின் ட்விட் ட்விட்டை தந்துகொண்டிருந்தன.எவ்வித முன் தீர்மாணங்களும் அந்நிகழ்விற்கு இல்லை.வெளிர் நீலமும் வெளிர் பச்சையும் எனக்குப் பிடித்தமான நிறங்கள்.அன்றைய நாளில் பச்சை நிறம் உடுத்தியிருந்த அப்பச்சை நிற தேவதையின் நெற்றி வியர்வை நீர்,அவளின் மென் சங்கு கழுத்திலிறங்கும் காட்சி மழைக்காலத்தில் வெள்ளைக் கோட்டின் சாய்ல்களில்,பாறையின் மீது வழுக்கும் தற்காலிக அருவியினை நினைவூட்டியது. நீர் அருந்தும் மனநிலைதான் இருந்ததெனக்கு.மிகுந்த தாகத்துடன் அந்நீரைக்குடித்துவிட முனைகையில் அஃதொரு முத்தமாய் வடிவமெடுத்தது.முத்தங்கள் வடிவமிலிகள், உருவமிலிகள், எண்ணற்றத் தன் பெருக்கிகள், உடையக் காத்திருக்கும் நீர்க்குமிழிகள், உடைவதற்காய் ஏங்கும் உயிருள்ள கூடு முட்டைகள்.மேலும் முத்தங்கள் உடைந்த நொடியில் பறக்கத் துவங்கும் அசுர வளர்ச்சி கொண்டவை யாகவுமிருக்கின்றன.சமதளத்திற்கு வெகு சீக்கிரத்தில் வந்து விட விரும்பாத முத்தங்கள் இலக்கற்ற வெளியில் தன் எழுச்சியைத் தொலைத்து மீண்டும் திரும்புகின்றன.நாங்கள் மீண்டு திரும்பியபோது சூரியனை மறைக்க ஆரம்பித்திருந்தன அடர் கரு மேகங்கள்.

(கென்னிற்கு....)
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...