எந்தத் தொடர்பதிவென்றாலும் சலிக்காமல் பதில் சொல்வதிலுள்ள ஆர்வம் இன்னும் தீர்ந்தபாடில்லை.கேள்விகள் சற்று அதிகம்தான் இருப்பினும் பகிர்வதற்கு உகந்த கேள்விகள் என்பதால் லேகாவினைத் தொடர்ந்து என் பதில்கள்..
1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது? எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
படக்கதைகள்,சிறுவர் புத்தகங்கள் இவற்றிலிருந்து ஒன்பது வயதில் வெளிவந்தாயிற்று.ஏதோ ஒரு க்ரைம் நாவல் ராஜேஷ் குமாரினுடையது பெயர் நினைவிலில்லை.
ஆனால் முதல் நாவல் வாசித்த திருப்தி எனில் பொன்னியின் செல்வன்.
2. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?
அதிகம் பூச்சுக்களில்லாத நாவல்கள் மிகப்பிடித்தமானதாய் இருக்கிறது.அகம் சார்ந்து எழுதப்பட்ட, வினோத நிலைகளின் உள்புகுந்து எழுதப்பட்ட நாவல்களைப் பிடிக்கிறது.சந்தித்திராத மனிதர்கள்,புதிய சூழல்கள், முகத்திலறையும் வாழ்வு, என உண்மைத் தன்மைக்கு நெருக்கமான நாவல்களே மிகப் பிடித்தமானதாய் இருக்கின்றது.
3. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?
ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்தினுக்கு தாமாகவே கூட்டிச் செல்லும்.இந்த வினோதத்தை எல்லாரும் உணர்ந்திருக்கலாம்.உண்மையில் புத்தகங்கள் விதைகளையொத்தவை. ஒன்றிலிருந்து இன்னொன்றாய், இன்னொன்றிலிருந்து பன்மடங்காய், வாசகனைப் பெருக வைக்கும் விசை புத்தகங்களுக்கு இருக்கிறது.
4 நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
சிறுகதை என்பது ஒரு காட்சி ஒரு நிகழ்வு.நாவலென்பது பல காட்சி பல நிகழ்வு். பக்க அளவுகள் சிறுகதை அல்லது நாவல்களை நிர்ணயிப்பதில்லை,உள்ள்டக்கமே வடிவத்தை தீர்மாணிக்கிறது. மூன்று வரி சிறுகதைகளும் உண்டு முன்னூறு பக்க சிறுகதையும் உண்டு.கோபி கிருஷ்ணனின் மொத்த சிறுகதைகளும் ஒரே நாவலின் பல்வேறு பக்கங்கள் என அறியப்படலாம்.ஒரே தளம் கொண்டு எழுதிய டேபிள்டென்னிஸ் நாவலெனவே அறியப்படுகிறது.
5. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?
வாசகனைப் பொருத்துதான்.உதாரணத்திற்கு மோகமுள்ளின் மய்யப் பாத்திரம் பாபு வா? யமுனாவா? ரங்கண்ணாவா? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வையிருக்கலாம்.அப்படிப் பன்முக சாத்தியங்களை உருவாக்குபவையே சிறந்த படைப்புகளாக இருக்க முடியும்
6. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
பக்க அளவுகள் எதையும் தீர்மாணிப்பதில்லை
7. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
ஒரு நாளை ஓட்டிவிடலாம் எனத் தோன்றும்
8. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?
இல்லை.
9. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
நண்பகல்,பின்னிரவு
10. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?
நிறைய உண்டு ஒரு கட்டத்திற்கு மேல் சில எழுத்துக்களின் மீது ஆர்வம் போய்விடும் படிக்கலாம் என வாங்கி பாதி படித்து தூக்கி போட்ட புத்தகங்கள் ஏராளம்.சமீபத்தில் புலிநகக் கொன்றை.
11. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?
கொற்றவை,உபபாண்டவம்
13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?
எம்.வி.வெங்கட்ராமின் நித்யகன்னி,தமிழவனின் வார்ஸாவில் ஒரு கடவுள்,அ.மாதவனின் கிருஷ்ணப்பருந்து
14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?
இடைவெளி - எஸ் .சம்பத்
டேபிள் டென்னிஸ் - கோபிகிருஷ்ணன்
நவீனன் டைரி - நகுலன்
அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
ஏறு வெயில் - பெருமாள் முருகன்
அஞ்சலை - கண்மணி குணசேகரன்
வெக்கை - பூமணி்
கருக்கு - பாமா
பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம்
சொல் என்றொரு சொல் - ரமேஷ் ப்ரேம்
15. படித்ததில் பிடித்த பிற இந்திய மொழி நாவல்கள் எவை?
காட்டின் உரிமை - மகேஸ்வேதா தேவி
பால்ய கால சகி - வைக்கம் முகம்மது பஷீர்
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரன் பிள்ளை
சதத் ஹசன் மண்ட்டோ கதைகள்
Interpreter of Maladies – Jumbha lahari
16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?
நூற்றாண்டுகால தனிமை - மார்க்வெஸ்
கசாக்குகள் - லியோ டால்ஸ்டாய்
மரணவீட்டின் குறிப்புகள் - தஸ்தாயெவ்ஸ்கி
அந்நியன் - ஆல்பெர் காம்யூ
தாய் - கார்க்கி
Foucault's Pendulum - Umberto eco
A Message in a Bottle - Nicholas Sparks
விசாரணை -காப்கா
விழியின் கதை - ழார் பத்தாய்
17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?
தரையில் இறங்கும் விமானங்கள், செம்பருத்தி, மரண வீட்டின் குறிப்புகள்,கரையோர முதலைகள்,மரக்கால்,ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன, கூளமாதாரி,சதுரங்க குதிரைகள்,உள்ளேயிருந்து சில குரல்கள் என மிக நீளமான பட்டியல்
18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?
நிறைய தலைப்புகள் ஈர்த்ததுண்டு.கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் ரமேஷ் ப்ரேமின் இந்த தொகுப்பின் தலைப்பு என்ன வெகுவாய் ஈர்த்தது.மேலும் மனுஷ்ய புத்திரனின் என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் தலைப்பும் எனக்கு மிகவும் பிடித்தது.
19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.
ஆரம்ப காலத்தில் இருந்தது. நா.பா வின் குறிஞ்சி மலர் படித்து சத்திய மூர்த்தியைப் போல ஆசிரியனாக ஆசைப்பட்டேன்.பின்பு நாவல்களின் பெண்கள் என்னை வசீகரிக்கத் துவங்கினர்.
நினைவுகளில் பெண்களை புகுத்திக் கொள்வது கனவுத் தன்மையை கெடாமல் வைத்திருந்தது.முதலில் காதலிக்க ஆரம்பித்த பெண் குறிஞ்சிமல்ர் பூரணி. பின் மோகமுள் யமுனா, மரப்பசு அம்மிணி, பாலகுமாரனின் நாயகிகள் என கனவிலேயே உழல துணையாய் இருந்தனர்.வாசிப்பு விரிவடைய அந்த உணர்வுகள் காணாமல் போய்விட்டன. இது ஒருவகையில் இழப்பாக இருந்தாலும் நிகழின் தளத்திற்கு வந்தேயாகவேண்டிய நிர்பந்தங்கள் என்னை அந்த தளத்தில் தொடர்ச்சியாய் இயங்கவிடவில்லை.
20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?
சூழல்,வாழ்வுமுறை, மனிதர்கள் என வெவ்வேறு தளங்களின் பரிணாமங்கள், புதுமை மனநிலைக்கு வாசகனை தள்ளும் சாத்தியங்கள் தமிழை விட பிற மொழிகளில் அதிகம்தான்.மரபு ரீதியிலான கட்டுக்கள் தமிழில் அதிகம் உண்டு.இருப்பினும் சரியாய் கவனிக்கப்படாத அபூர்வமான நாவல்கள் தமிழில் ஏராளம்.எல்லா இலக்கியச் சூழலும் அரசியலுக்குட்பட்டதுதான் என்றாலும் தமிழ்சூழலின் அரசியல் மிக மோசமானது. அபூர்வங்களை,புதுமைகளை இருட்டடிப்பு செய்துவிடுவது தொடர்ந்து வரும் சோகம்.ஆனால் வேறெந்த மொழிகளிலுமில்லாத அகநிலை சார்ந்து எழுதப்பட்ட உன்னத படைப்புகள் தமிழில் ஏராளம்.
21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?
இடைவெளி,டேபிள்டென்னிஸ்,புயலிலே ஒரு தோணி,நாளை மற்றுமொரு நாளே,பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்
22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?
ரத்த உறவு,குள்ள சித்தன் சரித்திரம்,அஞ்சலை,மோகமுள்,கோபல்ல கிராமம்,ஏழாம் உலகம்
23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?
இதையெல்லாம் நாம் தீர்மானிக்க இயலாது ஆனால் வட்டார வழக்கில் எழுதப்படுபவை மிகக்குறைவானவையே விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை பதிவிக்கும் முயற்சிகளும் வெகு சொற்பமே.இத்தள உரையாடல்கள் மிக முக்கியமானவை இவை அதிகம் எழுதப்படுமெனில் எனக்கு மகிழ்ச்சியே.
24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?
தமிழின் பெரும்பாலான எழுத்தாளர்கள் குறிப்பிட்ட சாதியினரே அல்லது மேல் மட்ட வர்க்கத்தினரே.எழுத்து மட்டுமில்லாது மற்ற தளங்களிலும் இவர்களின் ஆளுமை அதிகமாய் விரவிக்கிடந்ததை நாம் உணர்ந்திருக்கலாம்.தமிழ்சூழலைப் பொருத்தவரை சாதீயத்தின் பிடியில் அல்லது மேல்மட்ட மனோபாவத்தில் பெரும்பாலான நாவல்கள் எழுதிக் குவிக்கப்பட்டுள்ளன.தி.ஜா விலிருந்து லா.ச.ரா வரையிலான பெரும்பான்மை உயர்குடிகளின் தளம் நிறைவேறாக் காமத்திலிருந்து வெளிவரவே இல்லை.அந்த தளத்திலியே அவர்கள் எழுத்தின் மிக அபூர்வ சாத்தியங்களை உருவாக்கிக் காட்டினார்கள் என்றாலும்.பிற மனிதர்களின் வாழ்வியல் குறித்தான எந்த ஒரு அணுசரனையும் இவர்கள் எழுத்துக்களில் இல்லை.இதிலிருந்து ஓரளவுக்கு வெளிவந்து புதிய சாத்தியங்களை உருவாக்கி காட்டியதில் நகுலனுக்கு மிகப்பெரும் பங்குண்டு எனினும் இந்த மய்ய நீரோட்டத்தில் பங்கெடுக்க முடியாத நிலைக்கு அவரையும் தள்ளியது இவர்களின் உயர்குடி சமூகம்.
25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?
கோபிகிருஷ்ணன் உயிரோடு இருந்திருந்தால் சந்தித்து இருக்கலாம் மற்றபடி நகுலனையும் சிங்காரத்தையும் சந்திக்கும் ஆசையிருந்தது
26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?
நாவல்களைப் பொருத்தது பெரும்பாலான புத்தகங்கள் ஒரே இரவில் படிக்கப்பட்டவையே.
27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?
யூமா வாசுகி,யுவன் சந்திரசேகர்,சாரு நிவேதிதா,கோணங்கி,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன்
28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?
ஜெயமோகனின் எல்லா கதைகளிலுமான பிரதான பாங்கு இந்த தன்னிருத்தலே.இது முதல் வாசிப்பில் பிடிபடாது போகலாம் சில புரிதல்களோடு மீண்டும் அணுகுகையில் அதன் வீச்சம் தாங்கொணா அசூசையை ஏற்படுத்துகிறது.சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகளில் தென்படும் தன்னிருத்தலைக் குறித்து சாரு நிவேதிதா எழுதிய விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை.
29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.
நாயகத் தன்மை வழக்கமே இல்லாத எழுத்துக்கள் கோபியினுடையது.கோணங்கின் மொழியிலும் இந்த வழக்கமான தன்மைகளை காணவியலாது.கி.ரா வின் கதைகளிலும் ஒற்றைத் தன்மை கொண்ட நாயக குணங்கள் இருக்காது பல்வேறு மனிதர்களின் அல்லது ஒரு சமூகத்தின் வாழ்வை இயல்பு குலையாமல் பதித்தவர்களில் கி.ரா முதன்மையானவர்.
30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?
இல்லை வடிவங்கள் ஒருபோதும் உன்னதங்களை தீர்மாணிப்பதில்லை.
31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?
கண்மணி குணசேகரனின் அஞ்சலை.
32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?
நாம் ஒரு நாவல் எழுத வேண்டுமென்ற எண்ணம் உண்டு.
33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?
எப்போதும் விழிப்பாய் இருக்கும் சோம்பலினால்தான்.
இதை இவர்கள் தொடரலாம்
நிறைய புத்தகங்கள் வாசிக்கும் தமிழ்நதி மற்றும் நதியலை
அமீரக இலக்கியவாதிகள் கதிர் மற்றும் சென்ஷி
எழுதக் கேட்ட லேகாவிற்கும் உஷாவிற்கும் நன்றி..
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
22 comments:
/உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?
யூமா வாசுகி,யுவன் சந்திரசேகர்,சாரு நிவேதிதா//
சாரு????? ஒரு படைப்பை அதன் படைப்பாளியின் மீதுள்ள அபிப்பிராயத்தால் அணுகுவது எனக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் ஏனோ சாருவை மட்டும் அப்படி பார்க்க முடியவில்லை. மேலதிகமாக, அவரின் மேல் எனக்கு ஏற்பட்ட கோவத்திற்கும் அவருடம் எழுத்தே காரணமாக இருக்கிறது. அவரது புனைவல்லாத எழுத்தையும் சேர்த்து படித்ததால் வந்ததாக இருக்கலாம். அவரின் பலமென அவரது நடையை சொன்னாலும் அதில் ஒரு பெரிய ஈர்ப்பு எனக்கு ஏற்படவில்லை.
உயர்குடிகளை பற்றிய உங்கள் கவணிப்பு எனக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் உங்கள் அளவிற்கு மற்ற எழுத்தாளர்களை பற்றிய பிரக்ஞை இல்லாததால் பிடிபடவில்லை. டேபிள்டென்னிஸை பற்றி என் அண்ணன் சொல்லியிருக்கிறான். படிக்க வேண்டும். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே..
யப்பா..
தல.. நீங்க சொன்ன நாவல்களில் இடைவெளி மட்டுமே படித்திருக்கிறேன்..
ஆனா.. ரொம்ப பொறாமையாய் இருக்கு.. இவ்ளோ படிக்கறதுக்கு ஏற்ப ஒரு சூழல், வாழ்வு நிலை, மற்றும் இன்ன பிற வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்திருக்கு எனும்போது பொறாமையா இருக்கு..
இருந்தாலும் இப்போ இந்த புத்தகங்களை கேள்விபட்டதே மகிழ்ச்சி, இத்தருணத்திலாவது.. படிக்க ஆரம்பிக்கணும்..
வணக்கம் நண்பரே....
உங்கள் பதிவை பார்த்தேன்.....
மிகவும் மகிழ்ச்சி................
உங்களுக்கு பிடித்த நாவல்கள் பற்றி குறிப்பிட்டிர்கள்.......
ஏன் வண்ண நிலவனின் கம்பா நதி மற்றும் ரைநீஸ் ஐயர் தெரு போன்ற நாவல்கள் உங்களுக்கு புடிக்கலையா...?
என்னை உங்கள் நண்பராக ஏற்று கொள்ளுங்கள்....
நன்றி..
---ரொட்ரிக்ஸ்
http://tamilwriter.blogspot.com
மிக நல்ல ஒரு பட்டியல் கிடைத்திருக்கிறது !
லா.ச.ரா.வின் சிந்தாநதி உங்களைப் பாதிக்கவில்லையா?
நித்யகன்னியும் புராணம் சார்ந்த புனைவுகளில் மிகவும் யோசிக்க வைத்தது.
அய்யனார்! மிக்க நன்றி. நான் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிலரில் நீங்களும் ஒருவர். என் நம்பிக்கை வீண் போகவில்லை. அதெப்படி
கோபால கிருஷ்ணனை தவிர விட்டேன் என்று தெரியவில்லை :-)
//தி.ஜா விலிருந்து லா.ச.ரா வரையிலான பெரும்பான்மை உயர்குடிகளின் தளம் நிறைவேறாக் காமத்திலிருந்து வெளிவரவே இல்லை.//
.//பிற மனிதர்களின் வாழ்வியல் குறித்தான எந்த ஒரு அணுசரனையும் இவர்கள் எழுத்துக்களில் இல்லை.//
தி.ஜா.ரா, நா.பிச்சமூர்த்தி. கு.பா.ரா என்று ஒரு சேர வாசிக்கும்பொழுது எனக்கு இதே கேள்வி தோன்றியது. மீண்டும் மீண்டும் அக்கிரஹாரமும், வேலி தாண்டாத காமமும் :-). எழுதுபவர்களும், வாசிப்பவர்களும் இதே வட்டம் என்பதால், அதில் இருந்து மீள முடியவில்லையா அல்லது வேறு உலகம் இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லையா? நிறைய யோசிக்க வைக்கிறது.
கார்க்கி
சாருவின் மீது நிறைய விமர்சனங்கள் எனக்கும் இருக்கிறதென்றாலும் ஆரம்பகால சாருவின் உழைப்பை அத்தனை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.மாற்று எழுத்துக்களுக்கான தளங்களை நிகழ்த்திக் காட்டியவர்களில் சாருவும் ஒருவர்.பலமும் பலவீனமும் நிறைந்தவர்கள்தாம் மனிதர்கள்.எழுத்தாளர்கள் என்போர் வானத்திலிருந்து குதித்தவர் அல்லவே..நாம் உடன்படா அவர்களின் நிலைப்பாடுகளினை விமர்சிப்போம்,கேள்விக்குட்படுத்துவோம் ஒரேயடியாய் நிராகரிப்பது தேவையற்றது...
சரவணக்குமார்
வாசிப்பின் உச்சத்தை நீங்கள் ஆரம்பத்திலியே தொட்டிருக்கிறீர்கள் தொடர்ந்து படியுங்கள்
ரோட்ரிகஸ்
எனக்கு robert rodrigus ரொம்ப பிடிக்கும் :)
பதிவு மிக நீளமாகிவிட்டதால் நிறைய பேசமுடியவில்லை மேலும் லேகா வண்ணநிலவனை பற்றிக் குறிப்பிட்டுவிட்டதால் அவரை விட்டுவிட்டேன்..
கடல்புரத்தில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று மேலும் அவருடைய எஸ்தர் குறுநாவலும் மறக்கமுடியாத ஒன்று..
அறிவன்
லாசராவின் சிந்தாநதி எனக்குப் பிடித்தது மேலும் தாக்ஷாயணி குறுநாவலும் கழுகு நாவலும் என்னை வேறு தளத்திற்கு இழுத்த நாவல்கள்..பச்சைக்கனவின் பிரம்மிப்பு வெகுநாள் இருந்ததாலே அதைக் குறிப்பிட்டேன்..
நித்யகன்னி படித்துவிட்டுச் சொல்கிறேன்
நன்றி உஷா
ஓரளவுக்கு இதில் தப்பியவர்களென அசோகமித்திரனையும் இந்திரா பார்த்தசாரதியையும் குறிப்பிடலாம் மற்றபடி அவரவருக்கான தளங்களில் மட்டுமே அவர்கள் இயங்கினார்கள் என்பதில் அய்யமில்லை.மேலும் எழுத்தாளனுக்கு சமூகப் பிரக்ஞை சற்றுக் குறைவுதான் என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் :)
எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிடும் போது சற்று ஜாக்கிரதையாக இருப்பது நலம்.
//கோபால கிருஷ்ணனை தவிர விட்டேன் என்று தெரியவில்லை :-)//
கோபி கிருஷ்ணன்?
//தி.ஜா.ரா, நா.பிச்சமூர்த்தி. கு.பா.ரா என்று //
தி.ஜ.ரங்கநாதன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன்.
சு.ரா. (சுந்தர ராமசாமி) இதைப் பற்றியோர் கட்டுரையில் எழுதியிருப்பார். குறைந்த பட்சம் எழுத்தாளின் பெயர்களைக் கூட அஜாக்கிரதையாக எழுதுவதைப் பற்றி அதில் விமர்சித்த ஞாபகம்.
இதுல கருத்து சொல்லற அளவுக்கு நம்ம வாசிப்பு இன்னும் இல்லை அண்ணன்..
நிறையப்படிக்க இருக்கு...
//குறிப்பாய் கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் ரமேஷ் ப்ரேமின் இந்த கவிதை தொகுப்பின் தலைப்பு என்ன வெகுவாய் ஈர்த்தது//
அது கவிதைத் தொகுப்பு இல்லை என்று நினைக்கிறேன்.
”கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்” இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று. :)
மன்னிக்கவும் சுரேஷ் கண்ணன். தட்டிக்கொண்டு இருக்கும்பொழுது, கெஸ்ட். திரும்ப சரி பார்க்க முடியாமல் அப்படியே போட்டேன். அது தி.ஜானகிராமன்
மோகன் தாஸ், இதுக்கூட நாவல் இல்லை. சிறுகதை தொக்குப்பு Interpreter of Maladies – Jumbha lahari
சுரேஷ் திருத்தங்களுக்கு நன்றி
நன்றி தமிழன்
மோகன் ஆம் அது கவிதை தொகுப்பில்லை மாற்றிவிட்டேன்..
உஷா
இதில் நாவல்கள் அல்லாத புத்தகங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டிருக்கிறேன்..சதத் ஹசன் மண்டோவினோடதும் சிறுகதைகளே டேபிள் டென்னிஸ், ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன, பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் இவைகளும் சிறுகதைகள் அல்லது குறுநாவல்களே..
அய்யனார் எழுத்துக்களே ஆளை அடிக்கும்... வாசிப்பு என்னை மூர்ச்சையுறச் செய்து விட்டது...
ஒன்றே ஒன்று.. நீங்கள் திரும்பத்திரும்பப் படித்த நாவல்களில் ஒன்றினை மட்டும் நானும் திரும்பத்திரும்பப் படித்திருக்கிறேன்...
'செம்பருத்தி' இதில் தி.ஜா.ரா.. அக்ரஹாரம் விட்டுவந்திருப்பார் என நினைவு. பிள்ளைவாளின் வாழ்க்கை பற்றிச் சொல்லி இருப்பார்...
மற்ற நல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி..
நிறைய கேள்விகள். பெரிய பட்டியலுடன் பதில்கள். உங்கள் வாசிப்பு எதிர்பார்த்தது எனினும், மீண்டுமொருமுறை 'யப்பா' என்று சொல்லவைக்கிறது. உங்கள் முதல் கேள்விக்கான பதில் மட்டும் ஓரளவு என் நிலையை பிரதிபலித்தது. அப்புறம் நீங்கள் ரன்வேயில் டேக் ஆப் ஆன விமானம். உங்கள் வாசிப்பு அபாரம்.
சில ஆச்சரியங்கள்: புயலிலே ஒரு தோணி, நாளை மற்றுமொரு நாளே இரண்டும் உங்கள் பிடித்த பத்து நாவல்களில் இல்லாதது. பச்சைக் கனவு இருந்தது. அதே போல் ஜெயகாந்தன் மற்றும் சுஜாதாவைப் பற்றி ஒன்றுமே சொல்லாதது.
இவ்வளவு வாசிப்பிற்கு உங்களுக்கு மிகவும் பொறுமை - என்னைப்ப் போன்ற ஆர்வக்கோளாறுகளுக்கு பதில் சொல்வதில். நன்றி அய்ஸ் மற்றும் லேகா/உஷா
அனுஜன்யா
படிப்பதைப் பற்றி மற்றும் படிக்க பிடித்ததைக் குறித்தான பதிவுகள் படிக்க சலிப்பதில்லை ; நன்றி.
எனது கருத்தில் 3 நாவல்கள் : 18வது அட்சக்கோடு (அசோகமித்திரன்), பசித்த மானுடம் (கரிச்சான் குஞ்சு) &
சாய்வு நாற்காலி (தோப்பில் மு.மீரான்)
ஏனென்று புரியாத எரிச்சலை தந்தது நா.பா வின் துளசிமாடம்.
நாவலின்றி,
எத்தனை தடவைகள் திரும்ப-திரும்ப படித்தேன் என்பது ஞாபகத்தில் இல்லாத 2 கதை/உரைநடை தொகுப்புகள்: கோபி
கிருஷ்ணனுடைய 'இடாகினி பேய்களும் இடைத்தரகர்களும்' & 'மானிட வாழ்வு தரும் ஆனந்தம்'.
தலையைச் சுற்றி தூக்கி எறிய தூண்டியது மாலனின் சிறுகதை தொகுப்பு. சுத்தமாய் பிடிக்காத ஒரு தமிழருக்கு
பரிசாக கொடுக்கலாம் என்றெண்ணி இன்னும் தூக்கி எறியப்படவில்லை.
ஆம் தமிழ்பறவை செம்பருத்தி சற்று மாறுதலான தி.ஜா நாவல்தான் நன்றி
நன்றி அனுஜன்யா
புயலிலே ஒரு தோணியும் நாளை மற்றுமொரு நாளேவும் எல்லா பெரும்பாலான பட்டியல்களிலும் இடம்பெறுவதை தவிர்க்கவே மொழிபெயர்க்க வேண்டியதில் சேர்த்தேன் மற்றபடி அவை இரண்டும் எனக்கு மிகப்பிடித்தமானவைதாம்.ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன் எனக்கு மிகப்பிடித்த நாவல் ஆனால் பத்தில் எதை விட எதை குறிப்பிட என்கிற குழப்பத்தில் விட்டாயிற்று..மேலும் ஆதவன் அழகிய பெரியவன் என இன்னும் பல ஆதர்ச எழுத்தாளார்களையும் சொல்லாமல் விட்டாயிற்று..சுஜாதா சுவாரசியத்துக்கு மேல் எதையும் தராததால் அவரைக் குறிப்பிடவில்லை..
வாசன் உங்கள் இடாகினிப் பேய்களும் படித்த நினைவு...மற்றபடி அசோகமித்திரனின் தண்ணீர் ஜமுனா என்னால் மறக்க முடியாத பாத்திரம்..துளசிமாடம் படிக்கவில்லை பொன்விலங்கும் பிறந்த மண்ணோடும் நா.பா வை நிறுத்திவிட்டேன்..மாலனை படித்ததில்லை படிக்கும் எண்ணமும் இல்லை :)
அய்யனார்,
புத்தக வாசம் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறீர்கள்.
"நிறைய புத்தகங்கள் வாசிக்கும் தமிழ்நதி" என்றொரு 'ஐஸ்'வேறு:) நதியலை நிறைய வாசிக்கிறவங்கதான். நான் இன்னும் நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது. அதனால் இன்னும் ஓராண்டு கழித்து இத்தொடரில் கலந்துகொள்வதே பொருத்தமென நினைக்கிறேன். கலந்துகொள்ள முடியாமைக்கு இத்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
// நிறைய தலைப்புகள் ஈர்த்ததுண்டு.கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் ரமேஷ் ப்ரேமின் இந்த தொகுப்பின் தலைப்பு என்ன வெகுவாய் ஈர்த்தது.//
நானும் இந்த தலைப்ப பாத்துதாங்க 2 வருஷம் முன்னாடி இந்த நாவலை வாங்கினேன்.அப்போ என்னால ஒரு 30 பக்கத்த தாண்ட முடியலை.இப்போ சமிபத்துலதான் படிச்சு முடிச்சேன்.
// நாம் உடன்படா அவர்களின் நிலைப்பாடுகளினை விமர்சிப்போம்,கேள்விக்குட்படுத்துவோம் ஒரேயடியாய் நிராகரிப்பது தேவையற்றது...//
சரிதான்.
\\
நூற்றாண்டுகால தனிமை - மார்க்வெஸ்
கசாக்குகள் - லியோ டால்ஸ்டாய்
மரணவீட்டின் குறிப்புகள் - தஸ்தாயெவ்ஸ்கி
அந்நியன் - ஆல்பெர் காம்யூ
தாய் - கார்க்கி
விசாரணை -காப்கா
விழியின் கதை - ழார் பத்தாய்
\\
இவற்றோடு..
நீங்கள் சொன்ன புத்தகங்கள் எல்லாமே...
இதெல்லாம் சென்னையில் கிடைக்குமா...குறிப்பாக கிடைக்க கூடிய இடம் ஏதாவது இருந்தால் சொல்லவும் நான் ஒரு நண்பரிடம் வாங்கி வரச்சொல்லலாம் என்று இருக்கிறேன்...
rajahparameswary@yahoo.co.in
Post a Comment