Monday, October 13, 2008

தமிழ் சினிமா இன்னுமொரு தொடர்

சினிமா தொடர் பதிவுகளை தவிர்க்கும் பொருட்டே (எல்லாரும் சொல்லியவையே என்னுடைய பதிலாகவுமிருக்கும் என்கிற காரணத்தினால்)சென்ற பதிவில் சில தமிழ்சினிமா நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு தப்பித்து விட நினைத்தேன். நண்பர்கள் பரத்தும் சித்தார்த்தும் அழைத்ததும் வேறுவழியில்லாமல் இதோ .....

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஏழு வயதில், என் கிராமத்தினையடுத்த பக்கத்துச் சிறுநகரத்திற்கு என் சகோதரனுடனும் அவரின் நண்பர்களுடனும் மிதிவண்டியில் சென்றது நிழலாடுகின்றது.பார்த்த படம் நீங்கள் கேட்டவை காட்சிகள் எதுவும் நினைவிலில்லை ஆனால் அந்த நிலாக்கால இரவில் முன் கம்பியில் உட்கார்ந்து பயணித்தது சுகானுபவம்.விழிநிறை தூக்கத்தோடு, மெல்லிய குளிரும், பேய் குறித்தான பயங்களோடும் திரும்பி வந்தது இன்னமும் நினைவிலிருக்கிறது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

இராமன் தேடிய சீதை வேண்டிய மட்டும் முன்பதிவில் வாரிவிட்டதால் விமர்சனம் எதுவுமில்லை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பார் மகளே பார் போன மாதம் விடுமுறைக்குச் சென்றபோது என் வீட்டில் பார்த்தது. வீம்பும் கர்வமும் கொண்ட பணக்கார சிவாஜி,தியாக விஜயகுமாரி,எந்தக் காட்சியில் வில்லனாக மாறுவரோ என பதபதைத்துப் பார்க்கச் செய்து, கடைசிவரை நல்லவராகவே நடித்திருந்த நடிகவேள் எம் ஆர் ராதா,இளம் வயதிலேயே முதியவராகவே நடித்த பாவம் வி.கே ராமசாமி என எல்லாரையும் ரசித்தேன் 'நீரோடும் வைகையிலே' உள்ளிட்ட அற்புதமான பாடலகள். படம் மிகவும் பிடித்திருந்தது.மிகவும் திருப்தியாக உணர்ந்தேன்.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பூவே பூச்சூடவா,இப்போதும் ஜேசுதாஸின் குரலில் அந்த பாடல் என்னமோ செய்கிறது.மிகச்சிறிய வயதிலேயே காதலிக்கத் தூண்டிய நதியா, அந்த மறக்கவே முடியாத மணியோசைச் சிறுவர்கள், என முதன்முதலில் என்னை ஈர்த்த தமிழ்படமிது.அடுத்ததாய் குணா கிட்டத்தட்ட பைத்திய மனநிலைக்கு என்னை இட்டுச் சென்ற படமிது.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஷோபா,சில்க ஸ்மிதா இரண்டுப் பேரழகின் தற்கொலைகள்.ஷோபாவின் தற்கொலைக்கு காரணமாய் நான் நினைத்திருந்த பாலுமகேந்திராவின் மீது கோபமுமிருந்தது.ஆனால் சமீபத்திய பாலுவின் அனுவுடனான பேட்டியில் பாலு இப்படி சொல்லியிருந்தார்.யாருக்குமே கெடைக்காத அபூர்வமான, அற்புதமான, அழகான ஒரு பொண்ணு என் வாழ்க்கைல கொஞ்ச நாள் வந்திட்டு போய்ட்டா... அந்த பிரிவை என்னால தாங்கிக்கவே முடியல ....மூன்றாம் பிறைல நான் சொல்லியிருந்த அந்த பிரிவுத் துயர் என்னோட துயரங்களில வெகுசொற்பம்தான் என சொல்லியபோது பாலுவை இன்னமும் அதிகமாக நேசிக்கத் துவங்கினேன்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் இதயத்தை திருடாவில் ஒரு காட்சி வரும்.உன் மடில படுத்துக்கவா எனக் கேட்கும் நாயகியை நாயகன் மார்போடு அணைத்தபடி கட்டிலில் அமர்ந்திருப்பான் பனிப்புகை அந்த அறையை மெல்ல சூழும். இந்த காட்சி என்னால் வெகு காலத்திற்கு மறக்க முடியாதிருந்தது.மற்றபடி நானொரு ஒளிப்பதிவு ரசிகன்.பாலுவின் கேமராவிற்கு அதிதீவிர ரசிகன்.நீங்கள் கேட்டவை பிள்ளை நிலா பாடல் ,உதிரிப்பூக்கள் அழகிய கண்ணே பாடல் இவ்விரண்டையும் அற்புதமான திரைக்கவிதை என்பேன்.ஒளிப்பதிவு தாண்டிய தொழில் நுட்பமெனில் மணியின் ஆயுத எழுத்து எடிட்டிங்க் உத்தி, அலைபாயுதே உத்தி, கமலின் விருமாண்டி எடிட்டிங்க் உத்தி என நினைவில் நிற்கும் பல தொழில் நுட்பங்கள் தமிழில் உண்டு.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

உண்டு, ஆனால் தமிழில் தமிழ் சினிமா குறித்தான நல்ல விமர்சனங்கள் வருவதில்லை.பெரும்பாலான விமர்சனங்கள் ஒருதலைப்பட்சமானது அல்லது தட்டையானது அல்லது மேம்போக்கானது.எம்.ஜி.சுரேஷ்,சாரு,யமுனா ராஜேந்திரன் போன்றோர்களின் தமிழ்சினிமா விமர்சனங்கள் மிகப்பெரும் எரிச்சலைத் தந்தன.

7. தமிழ்ச்சினிமா இசை?

எனக்குத் தெரிந்த ஒரே இசை தமிழ்சினிமா இசைதான்.பெரும்பாலான தனிமையை, இரவுகளை, பதின்மக் காதலை, கனவுகளைத் தந்தது இளையராசாவின் இசைதான்.மற்றபடி மென்மையான பாடலை யார்தந்தாலும் அவர்கள் என் நேசத்திற்குரியவர்கள்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

இந்திய சினிமாவில் மலையாளம்,வங்காளம்,இந்தி மொழிப்படங்களின் பரிச்சயம் உண்டு.உலகப்படங்களில் சிலவற்றைக் குறிப்பிட வேண்டுமெனில் கதறி அழச் செய்த Children of Heaven,Life is Beautiful குரூரத்தையும் வினோதத்தையும் ஒருங்கே தந்த Purfume,வாழ்வின் மீது மிகப்பெரும் சலிப்பை ஏற்படுத்திய Bicycle theif,பைத்தியம் பிடிக்க வைத்த Mirror,Solaris,I Could read the sky நெகிழச்செய்த Cinema paradiso,Amilie,Cindrella man,Forrest gump, கிளர்வுகளைத் தூண்டிய A Short Film about Love, வியப்புகளைத் தந்த Dreams பயமுறுத்திய Birds எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பேரரசு,விஜய்,அஜித் இன்னபிற புரட்சிபட்டங்களை சுமந்து திரியும் பாலாபிசேக நாயகர்களை வைத்துக்கொண்டு பிரகாசமாய் இருக்கும் எனச் சொல்ல தயக்கமாய் இருக்கின்றது.அபூர்வமாய் வருடத்திற்கு இரண்டு படங்கள் வரலாம் வணிகம், கலை என இருவேறு பார்வைகளை களைந்து கலை என்கிற ஒரே பார்வையை பார்வையாளனும், பிரதானமானவனும் கொள்ளாதவரை தமிழ்சினிமாவின் எதிர்காலம் நீர்க்குமிழியை ஒத்ததுதான்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு ஒன்றுமில்லை. வலைப்பதிவர்கள் பதிவிட திண்டாடிப்போகலாம்.மொக்கைப்பட மொக்கை விமர்சனங்களை படிப்பதிலிருந்து நானும் தப்பித்துக்கொள்வேன்.தமிழர்களின் நிலை கவலைக்கிடம்தான்.

இத்தொடரினை தொடர நான் அழைப்பவர்கள்.....

இயக்குநர் வளர்மதி
தமிழ் சினிமா பிரமுகர் ஆடுமாடு
பதிவே போடாத பைத்தியக்காரன்
பெங்காலி சினிமா நிர்மலா
இலக்கியவாதி லேகா

14 comments:

சென்ஷி said...

அருமையான தொகுப்பாய் இருந்தது அய்யனார்.

//பார் மகளே பார் போன மாதம் விடுமுறைக்குச் சென்றபோது என் வீட்டில் பார்த்தது. //

எனக்கும் மிகப்பிடித்த படம் அது :)

MSK / Saravana said...

அட. அய்யனார் கூட தொடர்பதிவு எழுதுவாரா??

நல்லா எழுதி இருக்கீங்க வழக்கம் போல்..

MSK / Saravana said...

//ஷோபாவின் தற்கொலைக்கு காரணமாய் நான் நினைத்திருந்த பாலுமகேந்திராவின் மீது கோபமுமிருந்தது.ஆனால் சமீபத்திய பாலுவின் அனுவுடனான பேட்டியில் பாலு இப்படி சொல்லியிருந்தார்.யாருக்குமே கெடைக்காத அபூர்வமான, அற்புதமான, அழகான ஒரு பொண்ணு என் வாழ்க்கைல கொஞ்ச நாள் வந்திட்டு போய்ட்டா... அந்த பிரிவை என்னால தாங்கிக்கவே முடியல ....மூன்றாம் பிறைல நான் சொல்லியிருந்த அந்த பிரிவுத் துயர் என்னோட துயரங்களில வெகுசொற்பம்தான் என சொல்லியபோது பாலுவை இன்னமும் அதிகமாக நேசிக்கத் துவங்கினேன்.//

இப்போதுதான் முதன் முறையாக கேள்விபடுகிறேன்..

MSK / Saravana said...

//அடுத்ததாய் குணா கிட்டத்தட்ட பைத்திய மனநிலைக்கு என்னை இட்டுச் சென்ற படமிது.//

இன்னும் குணா பார்க்கவில்லை... பார்க்க விரும்பும் படம்..

ஆயில்யன் said...

//பூவே பூச்சூடவா,இப்போதும் ஜேசுதாஸின் குரலில் அந்த பாடல் என்னமோ செய்கிறது//


எனக்குள்ளும் ஏதோ செய்யும் அந்த குரல் மற்றும் பாடல் வரிகள்


ரொம்ப அருமை :)

கோபிநாத் said...

இன்னும் எதிர்பார்த்தேன் ;)

வால்பையன் said...

உங்கள் பதிவை போலவே
நீங்கள் அழைத்தவர்கள் பதிவும் சுவாரிசியமாக இருக்கும் என்று நம்புகிறேன்

கார்க்கிபவா said...

//பூவே பூச்சூடவா,இப்போதும் ஜேசுதாஸின் குரலில் அந்த பாடல் என்னமோ செய்கிறது//

இரண்டு பெண்கள் வரும் அந்தப் பாடலுக்கு ஒரு ஆண் குரல்.. ஆனால் அதை நெருடல் இல்லாமல் படமாக்கியிருப்பார்கள். யாரும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.

//வணிகம், கலை என இருவேறு பார்வைகளை களைந்து கலை என்கிற ஒரே பார்வையை பார்வையாளனும், பிரதானமானவனும் கொள்ளாதவரை தமிழ்சினிமாவின் எதிர்காலம் நீர்க்குமிழியை ஒத்ததுதான்//

ஒரு வகையில் சரி என்றாலும், இந்த பக்குவம் உங்களுக்கு எப்போது எப்படி வந்தது? அந்த வாய்ப்புகள் தமிழகத்தில் எல்லோருக்கும் கிட்டுமா? படிப்பறிவும் இல்லாது, சரியான வழிகாட்டுதலும் இல்லாது திரியும் இளைஞர்களுக்கு ஒரே பொழுது போக்காய் இருப்பது திரைப்படங்களே.. நான் அதை ஞாயப்படுத்த முனையவில்லை. அவர்கள் மேல் பிழையில்லை என்கிறேன். வெறும் கலையாக மட்டும் பார்க்கும் சமூகம் உலகில் எங்குமே இல்லை என்பது திண்ணம். பொழுதுபோக்கு படங்களும் தேவை என்பது என் கருத்து. ஆனால் அது பேரரசு ரக படங்கள் இல்லை.

anujanya said...

அய்ஸ்,

சினிமா என்பதனால் கூடுதல் சுவாரஸ்யமான பதிவு. தமிழ் படங்களில் கிட்டத்தட்ட உங்கள் ரசனை போலவே எனக்கும் இருப்பது மகிழ்ச்சி. ஆயினும், உங்களுடைய இந்திய மொழி, உலக மொழி (எட்டாம் கேள்வி) நீங்கலாக, மற்றவை எனக்கும் மிகப் பரிச்சயமான ஒன்று என்பதால், எப்போதும் கழுத்தை வளைத்து உங்களை அண்ணாந்து பார்க்கும் அனுபவம் இந்த முறை இல்லை. அதில் ஓரளவு ஏமாற்றம்தான். நாகார்ஜுன் முதல் சுரேஷ் கண்ணன் வரை, லக்கி முதல் பரிசல் வரை, எல்லாப் பதிவுகளும் சுவாரஸ்யம் தந்தாலும், nothing earth shattering. அந்த வகையில் நாகார்ஜுன் சொல்வதுபோல் தமிழனையும் சினிமாவையும் பிரிப்பது மிகக்கடினம். அதனாலேயே 'ஹும், புதிதாக ஒண்ணுமில்ல, எல்லாம் நமக்கும் தெரிந்ததுதான்' என்ற செருக்குடன் படிக்க முடிகிறது. ஸ்ரீதர் நாராயணனின் பதிவு நேர்த்தியாக இருந்தது. வளர் மற்றும் பை.காரன் அதகளமாக எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன்...

அனுஜன்யா

ஆமாம், தமிழ் மணத்திலிருந்து விலகி விட்டீர்களா? இடுகைகளிலோ, மறுமொழிகளிலோ பார்க்கவேயில்லை உங்கள் பதிவை. இல்லை மிஸ் பண்ணிவிட்டேனா?

Ayyanar Viswanath said...

நன்றி சென்ஷி

தொடர்பதிவு ஒண்ணையும் விட்டதில்ல சரவணக்குமார் :)
குணாவை சீக்கிரம் பாருங்க

நன்றி ஆயில்யன்

கோபி விளையாட்டுன்னா அப்படித்தான் :)

ஆம் வால்பையன் நானும் காத்திருக்கிறேன்

Ayyanar Viswanath said...

கார்க்கி வணிக படம் எதுவென்பதுதான் நம் சூழலில் இருக்கும் மிகப்பெரும் குழப்பமே நானும் வணிகப் படங்கள் என சொல்லப்படும் பொழுதுபோக்குப் படங்களுக்கு எதிரானவன் அல்ல ஆனால் நம் சூழலில் வணிகப் படங்கள் என சொல்லப்படும் படங்களில் கிஞ்சித்தும் கலையுணர்வு இருப்பதில்லை.சினிமா குறித்தான ஒரு குறைந்த பட்ச விழிப்பு நம்மவருக்கு வரவேண்டும் என்பதுதான் என் ஆதங்கமே....இதில் பிழை என்கிற பேச்சுக்கே இடமில்லை அவரவருக்கான உலகங்களை பழிப்பதோ குறை சொல்வதோ என் நோக்கம் இல்லை இருப்பினும் சற்றே பெரிய உலகம் ஒன்றும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் பக்குவம் நம்மவரிடம் குறைவு..அதேபோல பார்வையாளனை அடிமுட்டாளாக பார்க்கும் வியாபாரிகளின் மேலோட்டமான பார்வையும் மிகப்பெரும் எரிச்சலை வரவழைக்த் தவறுவதில்லை..

Ayyanar Viswanath said...

அனுஜன்யா..
பணிச்சூழலின் காரணமாய் இணையத்தை முன்பு போல பயன்படுத்தமுடியவில்லை..வீட்டிற்கு திரும்பிய பின்னரே பதிவையும் பின்னூட்டங்களையும் வெளியிடமுடிவதால் பகலில் என் பதிவுகள் இல்லாமலிருக்கலாம்..எதைவிட்டும் விலகும் எண்ணம் தற்போதைக்கு இல்லை :)

தமிழ்சினிமா பிரிக்க முடியாத ஒன்றுதான் ..ஸ்ரீதர் நன்றாக எழுதியிருந்தார்..மேலதிகமாய் எல்லா பதிலகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கமுடியும் ஒரே சூழலில் இயங்கும் நம்முடைய மிகப்பெரிய ஒற்றுமைகளை இதுபோன்ற தொடர் விளையாட்டுகளின் மூலம் ஒவ்வொரு முறையும் உணர்ந்து கொள்ள முடியும்..

ஆடுமாடு said...

நல்லாயிருக்கு அய்யனார்.

//தமிழ் சினிமா பிரமுகர் ஆடுமாடு//

என்ன டமாஸு இது.

வளர்மதி said...

//இயக்குநர் வளர்மதி//

ம்ம்ம் ... இரு அப்பு ... உனக்கு இருக்கு ஆப்பு ;)

Featured Post

test

 test