Monday, November 19, 2007

கோபி கிருஷ்ணன் - இறப்பு,எழுத்து மற்றும் வாழ்வு



மே 10,2003 ல் தன் இறுதி சடங்கிற்கான பணத்தைக்கூட சேர்த்து வைத்துக் கொள்ள முடியாமல் / தன் குடும்பத்தினருக்கு தந்திடாமல் இறந்துபோனான் தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாளன் கோபி கிருஷ்ணன்.ஒரு உண்மையான கலைஞனின் வாழ்வைப் போலவே மரணமும் பெரும் அலைக்கழிப்பாய் இருப்பது தமிழ்சூழலுக்கு ஒன்றும் புதிதில்லை.ஒருவேளை இவ்விதம் இறப்பது மட்டுமே உண்மைக்கான சரியான அடையாளமாய் இருக்கும் என்பதுபோன்ற தீர்மானங்களையும் நாம் நாளையடைவில் பெற்றுவிடக்கூடும்.

கோபி கிருஷ்ணன் தன்னுடைய உயிர்ப்பு - நாட்குறிப்பு பதிவுகள் எனும் ஒரு சிறுகதையில்(குறிப்புகளை சிறுகதையாக்கிய நவீன பாணி எழுத்தாளுமைகளை நிறைவேற்றிக் காட்டியவர்களில் இவர் முக்கியமானவர்)இவ்வாறு சொல்லியிருப்பார்,
12.89' இன்று நிறைய நண்பர்களைப் பார்த்ததில் மனம் சந்தோஷத்தால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.இன்றைக்கு இந்த சந்தோஷத்திலேயே செத்துப்போனால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று எண்ணத் தோன்றிற்று.அந்த நைட்டிங்கேல் பறவையின் நாத இனிமையில் சாக விரும்பிய கீட்ஸ் நினைவில் நின்றார்.அந்த இளம் அழகி கொடுத்த அன்னியோன்ய சந்தோஷத்தின் பூரணத்துவத்தில் தன்னை மாய்த்துக்கொண்ட 'அப் அட் த வில்லா'வில் வரும் கார்ல் என்ற கதாபாத்திரம் மனதில் தங்கிற்று.இன்று கிடைத்த மனநிறைவு மீண்டும் கிடைக்குமா என்கிற ஏக்கம் மனதில் தோன்றி நிலைத்தது.


தோழமை மிக்க மனிதராக,விமர்சனங்களின் மீதும் காழ்ப்புணர்வுகளின் மீதும் எப்போதும் நம்பிக்கை கொண்டிராத,நண்பர்களை மிகவும் நேசித்த கோபிகிருஷ்ணனின் மரணத்திற்கு மிக சொற்பமானவர்களே குழுமி இருந்தனர்.வளர்மதி உள்ளிட்ட நண்பர்கள் அவரது இறுதி சடங்கிற்கான பணத்தை திரட்டித் தந்திருக்கிறார்கள்.வெளி ரங்கராஜன்,லதா ராமகிருஷ்ணன் போன்றோர் திண்ணை மூலமாக சிறுதொகை யொன்றை கோபி கிருஷ்ணனின் குடும்பத்திற்கு திரட்டித் தந்திருக்கின்றனர்.நிதியுதவி அளித்தோர் பட்டியலில் தமிழின் ஆகச்சிறந்த,வசதி படைத்த படைப்பாளிகளின் பெயர்களைத் தேடிப்பார்த்ததில் வெறுமையே எஞ்சியது.

விளிம்பு நிலை மனிதர்கள்,கீழ்த்தட்டு மனிதர்கள்,நடுத்தர வர்க்கம்,அதிகாரங்களுக்குப் பழகிய இயந்திரமயமாகிப்போன மனிதர்கள் என இவரது கதைமாந்தர்கள் இயலாமையின் உச்சத்திலிருந்து சமூகத்தின் போலி மதீப்பீடுகளை விசாரணைக்குள்ளாக்குபவர்கள்.உளவியல் சிக்கல்கள்,அக மனதின் விசாரங்கள் என இவரது துறை சார்ந்த செறிவான உள்ளீடுகளையும் இவரது படைப்பில் காணலாம்.வாழ்வின் மீது மறைமுகமாகப் படிந்துபோயிருக்கும் குரூரத்தினை தனது அடையாளமாகவே ஏற்றுக் கொள்ளும் வாழ்வின் உச்சகட்ட இயலாமைகளை மிகவும் புதுமையான ஒரு நடையில் நமக்கு அறிமுகப்படுத்துவதாகவே இவரது கதைகள் இருக்கின்றன.

இவரது படைப்புகள் ஒவ்வாத உணர்வுகள்,முடியாத சமன்,உணர்வுகள் உறங்குவதில்லை,தூயோன்,மானிட வாழ்வு தரும் ஆனந்தம்,டேபிள் டென்னிஸ்,உள்ளிருந்து சில குரல்கள்,இடாகினிப் பேய்களும்-நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும் என்னும் பெயர்களில் புத்தகங்களாக வந்துள்ளது.இதில் உள்ளேயிருந்து சில குரல்கள் நாவல் வடிவத்திலும்,உணர்வுகள் உறங்குவதில்லை குறுநாவல் தொகுதியாகவும்,டேபிள் டென்னிஸ் குறுநாவலாகவும்,மற்றவைகள் சிறுகதைத் தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளது.இவரது உள்ளிருந்து சில குரல்கள் உளவியல் ரீதியிலான சிக்கல்களை பேசும் மிகச் சிறந்த நாவல்.கோபி கிருஷ்ணனின் மாஸ்டர் பீஸ் என பெரும்பாலானவர்களால் இவரது டேபிள் டென்னிஸ் கொண்டாடப்படுகிறது.இது தவிர்த்து பல உளவியல் கட்டுரைகளும்,மொழிபெயர்ப்பு கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டிருக்கிறது.இவரது படைப்புகளை முழுத்தொகுதியாய் வெளிக்கொண்டு வந்தால் அத்தொகுப்பு தமிழின் சிறந்த அடையாளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மதுரையில் பிறந்த கோபிகிருஷ்ணன் உளவியல் துறையிலும்,சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆத்மன் ஆலோசனை மையம் என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.எந்த ஒரு வடிவிலும் குரூரத்தை தாங்கிக் கொள்ளாத மனநிலையே இவருக்கு வாய்த்திருக்கிறது.இவரது மானிட வாழ்வு தரும் ஆனந்தம் எனும் சிறுகதைத் தொகுப்பில் இந்த மென்மையான மனதைப் பார்க்கலாம்.காசாப்புக் கடையில் ஆட்டின் கழுத்தை அறுக்கும் வன்முறையை பார்த்த காட்சி அவனை மதிய உணவை சாப்பிட விடாமல் செய்வதை ஒரு துண்டு சிறுகதையிலும் சாலையோர பிச்சைக்காரனுக்கு தினம் உணவளிக்கும் இன்னொருவனை நடைபாதை உறவு எனும் சிறுகதையிலும் காணலாம்.அதிகார மய்யங்களுக்கெதிரான குரலை எழுப்ப முடியாமல் போவதின் துயரங்களையும் எழுப்புகிறவன் மீதெழும் இயல்பான கவர்ச்சி மற்றும் இயலாமைகள் ஆசான் சிறுகதையில் நேர்த்தியாய் வெளிப்பட்டிருக்கும்.

கோபி கிருஷ்ணனின் வாழ்வையும் எழுத்தையும் தனித்தனியே பார்க்க முடியவில்லை வாழ்வே எழுத்தாகவும் எழுத்தே வாழ்வாகவும் கொண்ட சொற்பமான மனிதர்களுள் கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்.அதிகமான மனவழுத்தம் காரணமாக பலமுறை தற்கொலைக்கு முயன்றவர்.தொடர்ந்து சாப்பிட்டு வந்த உளநல மருந்துகள் ஏற்படுத்திய பலகீனம் காரணமாக் நோய்மையுற்று இறந்தார்.ஆத்மாநாமினுடையது போன்ற வெளிப்படையான தற்கொலை இல்லையெனினும் இதுவும் ஒருவித மறைமுக தற்கொலையாகவே அவரது நெருக்கமானவர்களால் சொல்லப்படுகிறது.பிரதியூடான வாசிப்புகளை புதுமைப்பித்தன் வரை நிகழ்த்திக் காட்டிய மார்க்ஸ் உள்ளிட்ட அறிவுஜீவிகள் கோபி கிருஷ்ணனை எப்படி அனுகுகிறார்கள் எனத் தெரியவில்லை.எப்படியிருப்பினும் மிக நேர்மையான எழுத்து என்பதற்கு இவரை உதாரணமாக சொல்லலாம்.

தொடர்புடைய சுட்டிகள்
மேதமைகளைப் பின் தொடரும் இருண்மை-அய்யனார்
கோபி கிருஷ்ணனின் பீடி சிறுகதை
கோபி கிருஷ்ணன் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம்
தமிழ் விக்கி பீடியாவில் கோபிகிருஷ்ணன்
உருபடாதது நாரயணனின் சிலாகிப்பு

18 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கோபிக்ருஷ்ணனின் கிட்டத்தட்ட எல்லா எழுத்துக்களையும் வாசித்துள்ளேன். அவருக்கே உரித்தான நகைச்சுவை மிளிரும் நடை அவருடையது.

நகுலனுக்குப் பிறகு ennui இவரிடமே சிறப்பாக வந்திருப்பதாக அசோகமித்திரன் சொல்லியிருப்பார் ஓரிடத்தில்.

இந்தப் பதிவினையும் தொடர்புடைய சுட்டிக்களையும் படித்த பிறது, இன்னொரு முறை அவரை வாசிக்க வேண்டும் போலிருக்கிறது...

Anonymous said...

பகிர்தலுக்கு நன்றி அய்யனார்.
....
கோபி கிருஷ்ணனின் ஒரு சில சிறுகதைகளையே வாசித்திருக்கின்றேன், ஆனால் சாரு, ஜெயமோகன் (சொல்புதிதிலா?) போன்றோர் இவர் படைப்புக்கள் குறித்து எழுதிய விரிவான கட்டுரைகளை வாசித்தது நினைவினிலுண்டு.

கிருத்திகா said...

இவரைப் போலவேதான் G நாகராஜனும். நாளை மற்றொரு நாளே வாசித்துப் பாருங்கள், நல்ல பாசஙகற்ற எழுத்து. அடித்தட்டு மக்களின் அன்றாட வலியும் வேதனையும் பீறிட்டு வெளிப்படுவதை. தமிழ் எழுத்து சூழலில் வறுமையும் திறமையும், பாலிலிட்ட டிகாக்சன் போல பிரித்தறிய முடியாது. ஓரு முறை கல்கியிடம் ஒருவரை எழுத்தாள்ர் என்று அறிமுகபடுத்திய போது "அப்ப சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்ட நிலமை இன்னும் மாறவில்லை.

Vassan said...

வணக்கம்.

நேற்றுகூட திரும்பவும் 'மானிட வாழ்வு தரும் ஆனந்தத்தை' படித்துக் கொண்டிருந்தேன். கோபி காலமான போது திண்ணையில் எழுதியிருந்தார்கள். அவர் குடும்பத்திற்காக நன்கொடை சேகரமும் செய்தனர். இதற்கு பின்னர்தான் கோபிகிருஷ்ணன் தெரிந்து அவருடைய 2 நூல்களை படித்தேன். அடிக்கடி இன்னமும் படித்துக் கொண்டுள்ளேன்.

ஒரு தகவலுக்கு

http://vassan.kollidam.com/?p=19

கோபிருஷ்ணனின் இடாகினி பேய்களை... படித்துவிட்டு அவர் பாணியில் தமிழில் எழுதி பார்க்க வேண்டும் என்றொரு முனைப்பில் எழுதியது மேலுள்ள பதிவு.

Ayyanar Viswanath said...

சுந்தர்

கோபிகிருஷ்ணனின் எள்ளல்,கிண்டல் தன்மை வரிக்கு வரி இழையோடும் நகைக்சுவை எனக்கும் மிகப் பிடித்த ஒன்று.நகுலனுக்குப் பிறகு என்னை அசைத்துப் பார்த்த எழுத்து இவருடையது..மறுவாசிப்பில் இன்னும் சில தடங்களை பிடிக்க முடியும் என்பதால் உங்கள் மறுவாசிப்பை துரிதப்படுத்துங்கள் :)

Ayyanar Viswanath said...

டிசே

கோபி கிருஷ்ணனை வலையில் தேடி சலித்துப் போனேன்...நீங்கள் சொல்வதுபோல் விரிவான கட்டுரை எழுதப்பட்டிருந்தால் மகிழ்ச்சியே..நானும் தேடிப்பார்க்கிறேன்

ஒரு அறிமுக நோக்கிலே இக்கட்டுரை எழுதப்பட்டது..இவரின் இடாகினி பேய்கள் குறுநாவலை விரிவாய் எழுதவும் எண்ணம்

Ayyanar Viswanath said...

ராஜா

ஜி.நாகராஜனின் எழுத்துக்கள் பரிச்சயமானவைதான்..நாளை மற்றுமொரு நாளே எனக்கு மிகவும் பிடித்த படைப்புகளில் ஒன்று..இவரது குறத்தி முடுக்கு குறுநாவலும் எல்லா சிறுகதைகளுமே திரும்ப திரும்ப வாசிக்கப்பட வேண்டியவை...

Ayyanar Viswanath said...

வாசன்
பிராணிகள் சுட்டிக்கு நன்றி..அப்படியே உங்கள் பக்கத்தையும் படித்துவிட்டு பதிலெழுதுகிறேன்

ஜமாலன் said...

பின்னோட்டம் எழுத வந்தேன் அது நீண்டுவிட்டதால் பதிவாக ஒட்டிவிட்டேன் அதை..

http://jamalantamil.blogspot.com/2007/11/blog-post_20.html

நினைவுகளை தூண்டிய இப்பதிவிற்கு நன்றி.

தமிழ்நதி said...

உபயோகமான பதிவு. கொடுத்திருக்கும் இணைப்புகளைத் தொடர்ந்து சென்று மிகுதியை வாசித்துக்கொள்கிறேன். 'மரணத்தின் பின்னான வாழ்வு'என்பது எழுத்தாளர்களுக்குத்தான் பொருந்தும்போலும். இறப்பின் பிறகுதானே பெரும்பாலும் அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

ரூபன் தேவேந்திரன் said...

நல்ல பதிவு. ஆனால் வெட்கத்தை விட்டுச் சொல்ல வேண்டுமானால் நான் கோபி கிருஸ்ணன் என்னும் பெயரை இப்போதுதான் கேள்விப்படுகின்றேன். சிறந்த எழுத்தாளர்களின் அறிமுகம் அவர்களின் இறப்பின் போதே எனக்கு கிடைப்பது துரதிஸ்ரம் தான். உதாரணம் நகுலன், லா.ச.ரா, இப்போது கோபி கிருஸ்ணன்.

ஆனால் உங்களின் இது போன்ற பதிவுகள் எனது வாசிப்புக்கு நிச்சயம் வழிகாட்டியாக அமைகின்றது.

வளர்மதி said...

தமிழின் சிறந்த படைப்பாளுமைகளுள் ஒருவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி அய்யனார்.

நண்பர் சஃபி வழி அவருடன் உரையாடும் சந்தர்ப்பங்கள் வாய்க்கப்பெற்றிருக்கிறேன். மிக மென்மையானவர். முதல் சந்திப்பின்போது அவருடந்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதறியாமலேயே ... அவர் கவனித்துக்கொண்டிருந்தார் ... நாங்கள்தான் அளவளாவிக்கொண்டிருந்தோம் :)

அவருடைய மரணம் நோயால் அன்று, தற்கொலை என்றே நினைவிருக்கிறது ... இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் அவருடைய நெருக்கமான நண்பர்களுக்கு தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்...நண்பர் சஃபி ஒருமுறை தொலைபேசியில் என்னை அழைத்து அவரைப் பார்த்து வருமாறு கேட்டுக்கொண்டதும் மங்கலாக நினைவிலிருக்கிறது.

அவருடைய வாழ்வின் மிக முக்கியமான ஒரு அம்சம் ... எந்தப் பணியிலும் 3 மாதங்களுக்கு மேல் நிலைத்திருக்கமாட்டார் ... நிறுவத்தின் பகுதியாவிடுவோமோ என்ற அச்சம் :)

ஒரு வகையில் அவருடைய எழுத்துக்களை இந்த நிலையாமையின் இன்பத்தைப் பற்றிய போற்றுதலாகவும் வாசித்துப்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

கிருத்திகா ஸ்ரீதர் said...

யார் என்கின்ற முக்கியத்துவம் தராமல் "அட நல்லா இருக்கே " என்று படித்த எழுத்துக்கள் இவருடையவை.. இத்தனை தகவல்கள் தந்ததிற்கு நன்றி.. ஜமாலனின் பதிவிற்கும்(பின்னூட்ட பதிவிற்கும்).. முடிந்தவரை படித்துவிட்டு வருகிறேன்

Ayyanar Viswanath said...

தமிழ்நதி
எப்போதும் வாழும் ஒருவன்/ஒருத்தியைப் போலவே என்றென்றைக்குமான எழுத்தை சாத்தியமக்கிய சொற்பமானவர்களில் ஒருவர்தான் கோபி உங்களின் வாசிப்பனுவத்தையும் நேரமிருக்கும்போது பதியுங்கள்.

Ayyanar Viswanath said...

நன்றி கோசலன்...

வளர்..
ஓவியர் அசோக்கிடம் பேசிக்கொண்டிருந்தபோதுதான் கோபியின் மரணம் மற்றும் உங்களின் பங்கு இவற்றை சொல்லிக்கொண்டிருந்தார்.மேலும் சஃபி கோபியைப் பற்றி பகிர்ந்து கொண்டவற்றையும் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.வலையில் இதுபோன்ற மறக்கப்பட்ட ஆளுமைகளைப் பற்றி அவரோடு தொடர்புடையவர்களுடன் உரையாடுவது மகிழ்வைத் தருகிறது.

Ayyanar Viswanath said...

கிருத்திகா

எவ்வித அடையாளங்களும் சிறந்த படிப்பிற்கு தேவையில்லை என்பதுதான் என் நிலைப்பாடும்..நன்றி

ச.முத்துவேல் said...

அய்யனார்,
கோபி கிருஷ்ணனை உங்களுடனான உரையாடல் மற்றும் போல நண்பர்கள் சிலரின் உரையாடல் மூலமே அறிந்து ஆர்வத்தோடு, அவர் சார்ந்த உங்கள் பதிவுகளைப் படித்தேன்.பகிர்வுக்கு நன்றி.

சற்று தொடர்பில்லாத, ஆனால், கொஞ்சம் அயர்ச்சி ஏற்படுத்திய உணர்வு இப்பகிர்வில் ஓரிடத்தில் எனக்கு ஏற்பட்டது.
/12.89' இன்று நிறைய நண்பர்களைப் பார்த்ததில் மனம்../

என்பதாக நீளும் ஒரு பத்தி, கோபியின் எழுத்துக்களாக வந்திருக்கிறது அல்லவா? இதைத்தான் குறிப்பிடுகிறேன்.

உயிரோசையில் வெளியாகியிருந்த என் கவிதை ஒன்று,”இன்றை” என்பது.அதில் நான் கிட்டத்தட்ட இதையேதான் எழுதியிருக்கிறேன்.அதில்,
போலச்செய்ததோ, படித்ததினால் வந்த பாதிப்போ இல்லாமல் உணர்ந்து எழுதியது.
இதற்காக நான் மகிழ்வதா,அயர்ச்சியடைவதா? இதுபோல், எனக்கு ஏற்கனவே சில பிரபலங்களின் எழுத்துக்களுடன் clash நடந்துள்ளது. என்னவோ சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சொல்லிவிட்டேன். நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கோபிகிருஷ்ணன் தொடர்பான அனைத்து இடுகைகளையும் உங்கள் மென்மையான எழுத்தில் வாசித்தேன்.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரின் உள்ளிருந்து சில குரல்களை மட்டும் உடனே வாசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

பகிர்வுக்கு நன்றி அய்யனார்

Featured Post

test

 test