Saturday, July 28, 2007

மனதின் பைத்திய நிழல் – நகுலனின் சுசீலா



நகுலனின் மொத்த நாவல்களும் கைக்கு கிடைத்தபோது சிறிது பதட்டமாகத்தானிருந்தது அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருந்த சில கவிதைகளே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்த மொத்த எழுத்தையும் படிக்கும்போது ஒரு வெளியில் தன்னைத்தானே தொலைக்க நேரிடுமோ என்கிற பயம் நிகழ்ந்தேவிட்டது.1965 லிருந்து 2002 வரை அவரால் எழுதப்பட்ட நிழல்கள்,நினைவுப்பாதை,நாய்கள்,நவீனன் டைரி,சில அத்தியாயங்கள்,இவர்கள்,வாக்குமூலம்,அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி என்கிற வெவ்வேறு பெயரில் எழுதப்பட்ட ஒரே தளத்தில் இயங்குகிற நாவல்களின் தொகுப்பு அல்லது ஒரே ஒரு நாவலின் வெவ்வேறு அத்தியாயங்கள் என்பதுதான் பொருத்தமாக இருக்க கூடும்.

மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சுயத்தின் வெளிப்பாடாய் இருக்கிறதவர் எழுத்துக்கள்.வேறெந்த பாத்திரத்தையும் முன் வைக்காது நவீனன் அல்லது நகுலன் என்கிற பெயரில் உலவும் ஒருத்தருக்கு நேரும் மிகவும் தனிமைப்பட்ட அனுபவங்களே இவரின் படைப்புகள்.எழுத்து என்பதின் போதையை இவர் நன்கு அனுபவித்திருக்கிறார்.எழுத்தின் தாத்பர்யம் இவரை வேறெதிலும் இயங்கவிடாது இறுக்கப்பிடித்து கொண்டுள்ளது.பரவலாய் வாசிப்பதும் மிகவும் உள் சார்ந்த தனிமையில் ஆழ்ந்துபோவதும் வளர்ச்சிக்காய் புகழுக்காய் தன் சுயங்களை தொலைக்கும் மனிதர்களை விட்டு விலகியும் அவர்களின் மீதான எள்ளலும் எல்லாவிடங்களிலும் வெளிப்படுகிறது.

பெரும்பாலான வாசகர்கள் நகுலனை அவர் படைத்த சுசீலாவின் மூலம்தான்
அடையாளப்படுத்துகிறார்கள்.நகுலன் இறந்த அன்று எல்லாரும் சுசீலா வை நினைத்துக்கொண்டோம்.இனி சுசீலாவின் கதியென்ன என்பதுதான் என் நண்பர்களின் வருத்தமாக இருந்தது.தான் படைத்த ஒன்று தன்னை முன்னிருத்துவது எத்தனை ஆனந்தமாக இருந்திருக்கக்கூடும்.நினைவுப்பாதையில் சிவன் யார் சுசீலா எனும் கேள்விக்கு என் மனதின் பைத்திய நிழல்தான் சுசீலா என்கிறார்.மேலும் அவள திருமணமாகிப்போய்விட்டாள் என்கிற தகவலையும் சொல்லுகிறார்.இல்லாத ஒன்றினை உருவாக்கி கொண்டு உருகும் அந்த மனத்தை பிரம்மிப்பாய் பார்க்க வேண்டியிருக்கிறது.

தன்னை ஒரு தோல்விக்கலைஞன் என சொல்லிக்கொண்ட நகுலன் தோற்பதின் சுவையறிந்திருக்க வேண்டும்.உள்விழிப்புபெற்ற மனிதனால் மட்டுமே தோல்வியை கொண்டாட முடியும்.ஒஷோ வாழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது தோற்பவர்கள் மட்டுமே இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியும் என்கிறார் நகுலனுக்கும் அதே போன்றதொரு மனோநிலை வாய்த்திருக்க வேண்டும்.இந்த அளவுகோல்களைப் புரிந்துகொள்ளமுடியாத ஞானக்கூத்தன் போன்றோர் அவருக்கான இரங்கல் கட்டுரையிலும் கூட இவர் பெரிதாய் ஒன்றும் சாதித்துவிடவில்லை என்பது போன்ற கூற்றையே ஆனந்தமாக முன் வைக்கிறார்கள்.

சமூகத்திலிருந்து விலகியிருப்பது தப்பித்தலுக்கான ஒரு முயற்சியின் நீட்டிப்பே.தன்னை தன் எழுத்துக்களை அடையாளப்படுத்திக்கொள்ள/பெரிதாய் நிரூபிக்க படைப்பாளிகள் துணியும்போது அவர்களின் தனித்தன்மை அடிப்பட்டுப்போய்விடலாம்.சமூகம் என்பதே சமரசங்களின் கூடாரம் அல்லது பெரும்பான்மைகளின் ஆக்கிரமிப்புதானே.ஆனாலும் கைத்தட்டல்கள் மீதான வசீகரங்கள் எல்லாக் கலைஞனுக்கும் பொதுதான்.தன் எழுத்துக்களை தன் நண்பர்களிடம் கொடுத்துவிட்டு கூடவே அஞ்சலட்டையும் இணைத்து கொடுக்கும் வழக்கமும் கடிதத்திற்க்கான எதிர்பார்ப்புகளும் தாமதமானால் எழும் கோபங்களும் எந்த பாசாங்குமில்லாமல் பதியப்பட்டிருக்கிறது.

மாற்றுக் கருத்துக்கள் மாற்று சிந்தனைகள் வழக்கொழித்தல் போன்றைவைகளின் மீதான வெறுப்பும் பயமும் பெரும்பான்மைகளுக்கு சற்று அதிகம்தான்.உன் படைப்பு விலைபோகவில்லை! உன் எழுத்து எவனுக்கும் புரிவதில்லை நீ! என்ன கிறுக்கா? என்பது போன்ற கேள்விகளின் மூலமாய் தங்களின் இருப்பை உறுதிசெய்துகொண்ட எழுத்து வணிகர்களை அவர்களின் சொந்த பெயர்களிலேயே தன் படைப்புகளில் கிண்டலடித்திருக்கிரார்.

சுசீலா நிஜமா? என்பது போன்ற பத்தாம்பசலித்தனமான கேள்விகள் எழும்பினாலும் அந்த சுசீலா வின் மீதான இவரின் காதல் பைத்தியம் கொள்ளச் செய்கிறது.மனதின் அக அடுக்குகள் ஏற்படுத்திக்கொள்ளும் பிம்பங்கள்தான் எத்தனை துயரமானவை. காதல், காமம், ஆராதனை, போகம்,வெறுப்பு,கோபம் என எல்லா உணர்வுகளும் சுசீலாவை முன்நிறுத்துகிறது. கிட்டதட்ட 37 வருடங்களாக சுசீலா பிம்பம் அவரை விட்டகலவில்லை.வாழ்வின் அபத்தங்களை,துயரங்களை எள்ளலோடும் வெறுமையோடும் பதிவித்தவர்களில் நகுலன் முக்கியமானவர்.

நவீனன் டைரி யிலிருந்து சில துளிகள்.

3.12.73
வரிகள்
பல கட்டங்களில் நான் அவளை சந்தித்திருக்கிறேன் பல அனுபவ உச்ச கட்டங்களில்-நான் அவள் பேசுவாள் என்று எதிர்பார்த்த சமயங்களில் அவ்ள் பேசவில்லை-ஏன் அவள் என்னிடம் பேசினதே இல்லை.எதிர்பார்த்த நேரங்களில் அவள் வந்ததுமில்லை.இனி வரவும் மாட்டாள் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் நான் தனியாகப் போகும்பொழுது,இருக்கும்பொழுது,இந்தத் தெருவிலிருந்து அந்தத் தெருவிவுக்குத் தாண்டும்போது யாரோ எனக்கு முன் சென்று மறைவது போன்ற ஒரு தோற்றம்.
நான் வாழ்க்கையில் எவ்வளவோ ஆட்களைப் பார்த்திருக்கிறேன்.பல்லாக்கித் தூக்கிகளை,வாடகைக்குப் பிணம் சுமப்பவர்களை புதுப்பணம் படைத்தவர்களை சாதாரன மனிதனைக் கண்டால் புருவம் உயர்த்திப் பேசுபவர்களை இலக்கிய ரெளடிகளை இயற்கையாகவே கோபத்தினால் வசைபாடும் விற்பன்னர்களை பணக்கார வீட்டுப் பெண்களை எனக்கு நான்

சிலுவையாக இருக்கும் என்னை
எங்கிருந்தோ
வந்தவள்
யாரையோ மணந்தவள்
இன்று இருக்கிறாளோ
இல்லையோ
என்று கூடத் தெரியாத

ஒருத்தி ஒரு கணத்தில் கண்டது முதல் இந்த கட்டை கீழே விழும் வரை என்னில் இருக்கும் சுசீலா என்ற என் சாபத்தை இவர்களையெல்லாம் இவர்களையெல்லாம் இவைகளையெல்லாம்விட
நீதான் எனக்கு
வேண்டியிருக்கிறது
நீ வரவும் மாட்டாய்
போகவும் மாட்டாய்
நீ இருக்கிறாயோ
இல்லையோ
என்பதுகூட
எனக்கு நிச்சயமாகத் தெரியாது
இருந்தாலும் எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் என்ன நேர்ந்தாலும் எப்படிப்போனாலும் யார் வந்தாலும் யார் போனாலும் உன்னைத் தூண்டில் இட்டுப் பிடிக்க முடியுமானால் கடிவாள்ம் கட்டி செலுத்த முடியுமானால்

பல்லக்குத் தூக்கிகளால் பிரயோஜன
மில்லை
கிருஷ்ணன் என்று

புதிய வாசகர்களுக்கு நகுலனின் நடை சற்று சலிப்பைத் தரலாம்.ஒன்றும் புரியாமல் என்ன எழுத்து இது? என்பது போன்ற சலிப்புகளும் கூடவே எழலாம். தன்னை தன் அனுபவங்களை எந்த சமரசங்களுக்கும் வியாபார நோக்கங்களுக்கும் உட்படுத்திக்கொள்ளாமல் பதிவித்த கலைஞனின் எழுத்துக்களை சற்று மெதுவாகத்தான் அணுகவேண்டியிருக்கிறது.அந்த தடத்தினைப் பிடித்து விட்டால் அது உங்களைக் கொண்டு செல்லுமிடம் உங்கள் மனதின் பைத்திய நிழலாய்க்கூட இருக்கக்கூடும்.

சன்னாசியின் நகுலன் நாவல்கள் இடுகை இப்புத்தகத்தை அணுக உதவியாக இருக்கும்

நகுலன் நாவல்கள்
தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம்
காவ்யா, டிசம்பர் 2004.
விலை: ரூ. 450.00

கொடுத்த புத்தகப் பட்டியல்களை இந்தியாவிலிருந்து தவறாமல் வாங்கி வந்த சார்ஜா சிங்கம் கோபிக்கு நன்றியும் அன்பும்.

13 comments:

Anonymous said...

நகுலனின் எல்லா நாவல்களும் படித்து விட்டீர்களா....

பொறாமையா இருக்குய்யா உன்னைப் பார்த்தா????

இந்த வாரம் ஃபுல்லாவே அமர்க்களப்படுத்திக்கிட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்.

குசும்பன் said...

"தாத்பர்யம்" அய்ஸ் அப்படின்னா என்னா? புரியவில்லை,
உங்களுக்கா நானும் இது போன்ற புத்தகங்களை படிப்பது என்று முடிவு செய்து விட்டேன்.

காயத்ரி சித்தார்த் said...

//சமூகத்திலிருந்து விலகியிருப்பது தப்பித்தலுக்கான ஒரு முயற்சியின் நீட்டிப்பே.தன்னை தன் எழுத்துக்களை அடையாளப்படுத்திக்கொள்ள/பெரிதாய் நிரூபிக்க படைப்பாளிகள் துணியும்போது அவர்களின் தனித்தன்மை அடிப்பட்டுப்போய்விடலாம்//

ரொம்பச்சரி அய்யனார்.. உங்கள் எழுத்து வழக்கமான பிரமிப்பு மற்றும் தாக்கத்தை இப்போதும் விட்டுப்போயிருக்கிறது மனதில்.

Anonymous said...

சில சிறுகதைகள் மட்டும்தான் எனக்கு பரிச்சயம். உங்களின் அறிமுகமும், சன்னாசியின் புத்தகம் பற்றிய பதிவும் விரைவில் வாங்கி படிக்கும் ஆவலை அதிகப்படுத்தியிருக்கின்றன. நன்றி.

சிவா.

தமிழ்நதி said...

நல்லதொரு பதிவு அய்யனார். வாசிப்பு அமர்க்களமாகப் போய்க்கொண்டிருக்கிறாற் போலிருக்கிறது. வாழ்த்துக்கள்.

Ayyanar Viswanath said...

நந்தா

இன்னும் மூணு பாக்கி :)

மிக்க நன்றி

Ayyanar Viswanath said...

சரவணா அட்ராக்சன் இல்லன்னா மகத்தான உண்மை ன்னும் சொல்லலாம்

காயத்ரி மிக்க நன்றி

Ayyanar Viswanath said...

சிவா தவறாது படிங்க ..

ஆமாம் தமிழ்நதி நிறைய புத்தகங்கள் கைவசம் இருக்கு

சிவா said...

//ஒருத்தி ஒரு கணத்தில் கண்டது முதல் இந்த கட்டை கீழே விழும் வரை என்னில் இருக்கும் சுசீலா என்ற என் சாபத்தை இவர்களையெல்லாம் இவர்களையெல்லாம் இவைகளையெல்லாம்விட//

சிவா said...

//ஒருத்தி ஒரு கணத்தில் கண்டது முதல் இந்த கட்டை கீழே விழும் வரை என்னில் இருக்கும் சுசீலா என்ற என் சாபத்தை இவர்களையெல்லாம் இவர்களையெல்லாம் இவைகளையெல்லாம்விட//

'சுசீலா என்ற என் சாபத்தை' மிகவும் தாக்க மாகத்தான் இருக்கிறது. மனுசன் ரொம்பத்தான் நொந்து போய் இருக்கிறா மாதரி இருக்கு. அவர் நிஜமாகவே அனுபவிச்சிருந்தா என்ன சொல்றது

குசும்பன் அவர்களே.
"தாத்பர்யம்" என்றால்
intention,when a word or a sentence is uttered with a desire to convey something, it is called tatparya

மேலும் விபரங்களுக்கு;
http://www.bu.edu/wcp/Papers/Asia/AsiaGhos.htm
அய்யனார் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்ங்க வாழ்த்துக்கள்

சிவா said...

//ஒருத்தி ஒரு கணத்தில் கண்டது முதல் இந்த கட்டை கீழே விழும் வரை என்னில் இருக்கும் சுசீலா என்ற என் சாபத்தை இவர்களையெல்லாம் இவர்களையெல்லாம் இவைகளையெல்லாம்விட//

சுசீலா என்ற என் சாபத்தை'
மனுசன் நொந்து போய் எழுதினது போல் உள்ளது. அவைகளை அனுபவித்திருந்தால்... அய்யனார், இந்த தொகுப்பிற்கு நன்றி.

குசும்பன் அவர்களே
"தாத்பர்யம்" என்றால்
"intention", when a word or a sentence is uttered with a desire to convey something, it is called tatparya.
found here: www.bu.edu/wcp/Papers/Asia/AsiaGhos.htm

Jazeela said...

நல்ல வாசிப்பனுபவம். நான் ரமேஷ் பிரேம் முடித்து தந்த பிறகு நகுலன் :-) சரியா?

அப்புறம் அது 'தாத்பர்யம்' இல்லை அதான் குசும்பருக்கு புரியலை அது 'தாற்பரியம்' அதன் பொருள் கவர்ச்சி என்பதும் தவறு. உங்கள் வாக்கியத்தில்
//எழுத்தின் தாத்பர்யம் இவரை வேறெதிலும் இயங்கவிடாது இறுக்கப்பிடித்து கொண்டுள்ளது.// என்பது 'எழுத்தின் மீதான காதல், ஒருவித ஆவல், கிடைக்கும் பாராட்டுகள் அவரை வேறெதிலும் இயங்கவிடாது இருந்தது' என்று பொருள் கொள்ளலாம்.

Ayyanar Viswanath said...

வாசி பகிர்தல்களுக்கு நன்றி

ஜெஸிலா மிக்க நன்றி

சீக்கிரம் படித்து முடிங்க
:)

Featured Post

test

 test