Tuesday, July 24, 2007
அடையாளம் தந்த நூலகங்களின் முகவரி
புத்தகம் வாங்கிப் படிக்கும் வழக்கமெல்லாம் கடந்த ஒரு வருடங்களாகத்தான் அதற்க்கு முன்பு வரை நூலகங்களின் இடுக்குகளில்தான் எங்காவது ஒளிந்துகொண்டிருப்பேன்.ஊர் ஊராக சுற்ற நேர்ந்த வாழ்வு பெரும் நண்பர்களை சேர்த்ததோடு மட்டுமில்லாமல் பல நூலகங்களின் அறிமுகத்தையும் கொண்டுவந்து சேர்த்தது.மழையில் நனைந்த மரமல்லிப்பூக்களின் வாசம் என் சிறு வயதினை நினைவுபடுத்துவது போல் புத்தகங்களை நுகரும்போதெல்லாம் மனக் கண் முன் நூலகங்கள் வந்துவிட்டுப்போகும்.பதின்ம வயதோரும் சிறார்களும் இப்போதெல்லாம் நூலகத்திற்க்கு செல்கிறார்களா எனத் தெரியவில்லை.நகரங்களில் இருக்காதெனத்தான் தோன்றுகிறது.வளர்ந்துவிட்ட அறிவியலின் தாக்கங்கள் நூலகத்தினை மறக்கடிக்க செய்துவிட்டிருக்கலாம்.பொழுதுபோக்கும் கணினி விளையாட்டுக்களும் அவர்தம் மூளைகளில் இருந்து உணர்வுகளை மழுங்கடிக்க செய்துவிட்டிருக்கலாம்.எனினும் எங்காவது ஒரு கிராமத்தின் சந்தடிகளற்ற தெருவின் கடைசியில் அமைந்திருக்கும் நூலகத்தில் இடையூறுகளில்லாது இன்றும் பதின்ம வயதோறும் சிறார்களும் படித்துக் கொண்டிருக்கலாம்.
ஏழு வயதில் நான் முதலில் சென்ற நூலகம் திருவண்ணாமலையில் என் வீட்டிற்க்கு அருகிலிருக்கும் ரமணா நூற்றாண்டு நூலகம்.ஆசிரமத்திற்க்கு வருவோர் தங்குவதற்க்கென வீடுகள் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியினுள் நூலகம் இருக்கும்.அந்த நீளமான காம்பவுண்டு சுவரை ஓணான் குச்சியினால் கோடிழுத்தபடி நடந்து சென்றது இன்னும் நினைவிருக்கிறது.சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த ரம்மியமான இடம் நூலக சன்னலை ஒட்டி நாகலிங்க பூ மரம் நெடு நெடு வென வளர்ந்திருக்கும்.இனிப்பாய் காய்க்கும் கொய்யா மரமும் இரண்டு மாமரங்களும் பாதாம் மரங்களும் முன்புறம் நிழல் போர்த்தியபடி இருக்கும்.பதினோரு மணி வெயிலில் காக்கைகள் கரைவது மட்டும் கேட்டபடி நாகலிங்கப் பூ வின் கிறக்கமான வாசனைகளோடு படித்த பூந்தளிரும் அம்புலிமாமாவும் இன்னும் நினைவிலிருக்கிறது.திரும்பும்போது பாதாம் மரத்திலிருந்து உதிர்ந்த சிவப்பு நிறக்கொட்டைகளை கால் சட்டைப் பைகளுள் திணித்தபடி வீடு திரும்புவேன.பதின்மத்தை தொடும் வரையில் என் எல்லா விடுமுறை தினங்களும் இப்படித்தான் போயிற்று.
மேலும் என் அலைவுகளில் ஒதுங்கிய சில இடங்களின் பெயர்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்
1.ரமணா நூற்றாண்டு நூலகம் - திருவண்ணாமலை
2.கீதாஞ்சலி வாடகை நூல் நிலையம் - திருவண்ணாமலை
3.மாவட்ட மைய நூலகம் - திருவண்ணாமலை
4.மாவட்ட மைய நூலகம் -கிருஷ்ணகிரி
5.கிளை நூலகம் - ஓசூர்
6.ரோமண்ட் ரோலண்ட் நூலகம் - பாண்டிச்சேரி
7.கிளை நூலகம் - மத்திகிரி
8.மாவட்ட மைய நூலகம் - திருவள்ளூர்
9.கிளை நூலகம் - பூங்கா நகர் திருவள்ளூர்
10.கன்னிமாரா நூலகம் - சென்னை
11.மைய நூலகம் - மதுரை
12.கிளை நூலகம் -ஒத்தக்கடை மதுரை
இதில் பள்ளி கல்லூரி நூலகங்களை சேர்க்கவில்லை.அங்கிருக்கும் சொற்பமான துறை தவிர்த்த நூல்களை படித்துவிட்டு நூலகரை எப்போது புதிதாய் புத்தகங்கள் வருமென நச்சரிப்பேன்.
மறக்கவே முடியாத நூலகங்களில் ரமணர் நூலகத்திற்க்கும் பாண்டிச்சேரி ரோமண்ட் ரோலண்டுக்கும் முக்கிய இடம்.ரோமண்ட் ரோலண்ட் நூலகத்திற்க்கு எதிர்புறம் பூங்காவும் சற்றுத்தள்ளி கடற்கரையும் நூலகத்தை சுற்றி உயரமான மரங்களுமடர்ந்த சன சந்தடி குறைந்த ஒரு நூலகம்.வழக்கமாய் எல்லாரும் படிக்குமிடத்தில் அமராது நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரி இடைவெளிகளில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பேன்.
எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே முதலில் தேடிக் கண்டுபிடிப்பது நூலகங்களைத்தான்.
கடைசியாய் துபாய் வருவதற்க்கு முன் என்னிடம் குவிந்திருந்த நூலக அட்டைகளை என்ன செயவதென்று தெரியாமல் ஒரு பெட்டியுனுள் பத்திரப்படுத்திவிட்டு வந்துவிட்டேன்.
நீங்கள் படித்த நூலகங்களை பற்றியும் சொல்லுங்களேன்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
23 comments:
நாங்க படிச்ச புக்கை பத்தி சொல்ல வேண்டுமானால் பிளாக்கே பத்தாது அம்புட்டு புக்கு படிச்சோம்
ஒன்னாவதுல அ அம்மா (அம்மா படம் போட்டு இருக்கும் ) ஆ ஆடு (ஆடு படம் போட்டு இருக்கும்)..
இது சாம்பிள்தான் இதுமாதிரி நிறையா படிச்ச அனுபவமுண்டு
அப்புறம் நூலகத்தில் போய் என்சோகுலோபிடியாவா அது ???
அதுவாங்கி மூனு வருசம் வைச்சியிருந்தது... :)
/அதுவாங்கி மூனு வருசம் வைச்சியிருந்தது... :)/
திருப்பி தந்தியா மின்னல்? கண்டிப்பா தந்திருக்க மாட்ட :)
அய்யனார்,
என்னவோ தெரியல சில நாட்களாகவே என்னுடைய கிராமத்து நூலகம் எனக்கு ஞாபகம் வந்து கொண்டிருக்கிறது. அதில் உள்ள வெளித்திண்ணையில் இருந்து/படுத்து/உருண்டு படித்த ஞாபகங்கள் வந்து போனது. அது எப்படி உங்கள் காதுக்கு வந்துச்சுன்னு யோசிக்க வைச்சிட்டீங்க. Co-incident!! :)
எனக்கு ஊரில் இரண்டே பொழுது போக்கு விளையாட்டு (கிரிக்கெட்/வாலிபால்/கால்பந்து) அல்லது நூலகம். புதிய நூற்களை வாசிக்கும் ஆவலில் நூலகரை நச்சரித்த ஞாபகங்கள் இன்னும் பசுமையாய்.
ஆனாலும், எத்தனையோ வாசித்தும் விளங்காத ஒன்றென்றால் தமிழ்மணத்தில் உலவும் இந்த பி.ந-வும் அதற்கான சப்பைக்கட்டுகளும். :(
Minnal on song!! Keep going minnal!!!
எங்க ஊர் நூலகர் அங்கமுத்து சக்கரை இன்னமும் என்னை தேடிகிட்டு இருப்பதாக எங்க அப்பா சொன்னார். :)
நூலகத்தின் புத்தகங்கள்னு பாக்காம என்னோட தாராள மனசு இரவல் கொடுத்து அது திரும்ப வராமபோயிடுச்சி.
கடேசி வரைக்கும் புத்தகம் எங்க இருக்குன்னு கண்டே புடிக்க முடில என்னையும் அவர் கண்டுபுடிக்கல.
கச்சிராயர்பாளையம் கிளை நூலகம்
பெரம்பலூர் மாவட்ட மைய நூலகம்.
சித்தலிங்கமடம் கிளைநூலகம்.
தாயுமானவர் லெண்டிங் லைப்ரெரி கச்சிராயர்பாளையம்.
கன்னிமாரா நூலகம்
புக்குக்கு உள்ள புக் வச்சு படிச்ச மின்னல் அத பற்றி ஒன்னும் சொல்லவே இல்ல!!!
இதோ என் வாசிகசாலை/ நூலக அனுபவம்
http://kanapraba.blogspot.com/2006/06/blog-post.html
லொடுக்கு
அப்பா பதிவுக்கு சம்பந்தமா ஒரு கமெண்ட் நன்றி நன்றி!!
டோண்ட் வொர்ரி லொடுக்கு எல்லாத்தையும் விளங்க வச்சிடலாம் ஆனா உண்மையாகவே உங்களுக்கு தெரிஞ்சிக்கனும் அப்படிங்கிற ஆர்வம் மட்டும் இருந்தா போதும்.
யோவ் தம்பி புத்தகம் வாங்கினா திருப்பி தர மாட்டேங்கிறது எனக்கு முன்பே தெரியாம போயிடுச்சே :(
கிராமத்து நூலகங்களுக்கு இருக்கும் அழகே தனிதான் இல்ல
பிரபா சுட்டிக்கு நன்றி வெகு அழகு உங்கள் தமிழும் எழுத்தும் ..
//விளங்க வச்சிடலாம் ஆனா உண்மையாகவே உங்களுக்கு தெரிஞ்சிக்கனும் அப்படிங்கிற ஆர்வம் மட்டும் இருந்தா போதும்.
//
எளிதா புரிய வைப்பதற்கு பதில் இவ்வளவு மெனக்கெட்ட வழியை ஏன் தேர்ந்தெடுக்கனும்??
லொடுக்கு
நம் தமிழ் இலக்கியம் மரபுவடிவம்,புது வடிவம்,நவீன வடிவம் இப்போது பின்நவீன வடிவம் என பல நிலைகளை கடந்து வந்திருக்கிறது.
எனக்கு படித்த அடுத்த நிமிசமே பின் நவீனம் விளங்கனும்னா அதற்கு முந்தய நிலைகள் பற்றிய தெளிவு இருக்கனும் ஒரு விசயத்தை பத்தி சரியா தெரிஞ்சிக்காம அதை விமர்சிப்பது சரிதானா?..மேம்போக்கான சிந்திக்க தயங்கும் மனோநிலை வலையில் இயங்கும் படித்தவர்களிடம் இருப்பது சற்று சலிப்பாகத்தான் இருக்கிறது.
ரொம்ப படிச்ச புள்ள போல நீங்க :)
தம்பி கிட்ட கொடுத்த புக்கும், பைனான்ஸ்ல போட்ட பணமும் திரும்பி வந்ததா சரித்திரமே இல்ல!!!
அய்யய்யோ இன்னிக்கு நான் மாட்டிக்கிட்டேனா! :)
என்னவோ அய்யனார், எனக்கு புரியுற மாதிரி அருவெறுப்பில்லாமல் எழுதுபவைதான் புடிச்சிருக்கு.
நூலக பட்டியலும் அதை நீங்கள் விவரித்த அழகும் நன்றாக இருக்கிறது.
எனது முதல் நூலக அனுபவம் எங்களது தாத்தா வீடுதான். மூன்று நான்கு பீரோக்களில் ஏராளமான புத்தகங்கள். வார இதழ்களில் வெளிவந்த கதைகளை தொகுத்து பைண்ட் செய்து வைப்பது மாமாவின் வழக்கம். பள்ளி விடுமுறை விட்டவுடன் பெரிய பையை எடுத்துக் கொண்டு போய் விடுவேன். கல்கி, சாண்டில்யன், சுஜாதா, ஜெயகாந்தன் என்று தொடங்கி பல புத்தகங்கள்.
அது என்னவோ அப்படி ஒரு மயக்கம். நாள் முழுவதும் படித்து, இரவில் தூங்க முடியாமல் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஒரு வெறி... :-)
மதுரை மத்திய நூலகம் - இங்கு தமக்கை, தமையனுடன் சென்று சில புத்தகங்களை படித்து இருக்கிறேன். ஆனால் வீடு மாதிரி சௌகர்யம் இல்லைதான்.
கொஞ்ச நாட்கள் நாங்களே வாடகை நூலகம் நடத்தினோம். நடத்தினோம் என்றால் நாங்கள்தான் பெரும்பாலும் படித்துக் கொண்டிருப்போம்.
இப்பொழுது இணையம்தான் நூலகம். புதுமைபித்தன், ஜெயமோகன், சு.ரா., சாரு நிவேதிதா என்று பல அறிமுகங்கள் இணையத்தின் மூலமாகத்தான். இப்பொழுது உங்கள் பக்கங்களின் மூலமாக இன்னும் சில அறிமுகங்கள். நன்றி!
குசும்பரே தெரியாமப் போயிடுச்சே :(
வெங்கட் உங்களின் அற்புதமான நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மதுரையா நீங்கள் நான் துபாய் வருவதற்க்கு முன் அங்குதான் ஒரு 7 மாதம் இருந்தேன் (டிவிஎஸ்) பெரும்பாலும் நூலகத்தின் மூலையில் இருக்கும் பிளாஸ்டிக் நாற்காலிதான் என் எல்லா ஞாயிற்றுக்கிழமையின் புகலிடமும்.
அம்மா இந்தியன் எக்ஸ்ப்ரஸில் வேலை செய்துகொண்டிருந்த போது சனிக்கிழமை ஆனால் குஷி வந்துவிடும். அன்று எனக்கு பள்ளி விடுமுறை என்பதாலும் அம்மாவுக்கும் பாதி நாள் தான் வேலை என்பதாலும் என்னை இந்தியன் எக்ஸ்ப்ரஸின் நூலகத்திற்கு அழைத்துக்கொண்டு போவார்கள்.ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக்கொண்டிருந்த எனக்கு கனவுப்பிரதேசம் அது. சுற்றிலும் புத்தகங்கள், என்னைத்தவிர யாருமற்ற வெளி... டின்டின்,பூந்தளிர் தொகுப்பு , பழைய இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி செய்தித்தாள்கள் என வரையரையற்று நீளும் வாசிப்பு... இப்போது அங்கு எக்ஸ்பிரஸ் எஸ்டேட் இல்லை. அம்பத்தூரில் சிறிய இடத்திற்கு மாற்றிவிட்டார்களாம்.
அழகான நினைவுகள் சித்தார்த்..நமக்கு அடுத்து வர மக்கலாம் நூலகத்துக்கு போவாங்களான்னு தெரியல.இலக்கியம் கவிதை ன்னு உணர்வு ரீதியிலான இளைஞர்கள் ரொம்ப குறைந்து போயிட்டாங்க இல்லியா? அடுத்த 10 வருசத்துல கவிதை ன்னா இன்னா ன்னு கேட்டாலும் கேக்கக்குடும் ..ம்ஹிம்ம்..
அய்யனார் தி.மலையில் கீதாஞ்சலி வாடகை [லெண்டிங் லைப்ரரி] நூலகம் தெரியும்.ஒரிஜினலிருக்குதா?
நூலகங்களைப்பற்றி மிக அழகான விமர்சனங்கள். என் கிராமத்திலும் நூலகம் இருந்த்து, மன்னிக்கவும் இருக்கிறது. 10 வது படிக்கும் வரை காமிக்ஸ்தான். (6-10) நான் படித்த்து கன்னடம் பாதி தமிழ் பாதி. 10க்கு மேல் 5-6 வருடங்கள் கன்னட நாவல்கள். இடையில் தமிழும் உண்டு, சுஜாதா, சாண்டில்யன். மறக்க முடியாத இடம் கன்னிமாரா, பெங்களூர் (கப்பன் பார்க் உள்ளே உள்ளது). ஒரு அல்பமான விஷயம் (இப்பொழுது நினைக்கையில்தான்) பெங்களூர் நூலகத்தில் உறுப்பினராவது (அன்று) மிகவும் சிரம மான விஷயம். அங்குள்ள பணியாளர் ஒருவர் உறுப்பினர் அட்டை வாங்கித்தருவதாக சொல்லி அதிகமாக பணம் வாங்கி பணமும் இல்லை உறுப்பினரும் இல்லை என்றாகி விட்டது. ஒரு முறை reference section லிருந்து கணித புத்தகம்(அந்த பணியாளன் எடுத்து கொடுத்த்து) இரண்டை கொண்டு போனவன் தான் ..... ஹூம்... பழி வாங்கும் எண்ணம் யாரைத்தான் விட்டிருக்கிறது?. இப்பொழுதும் செல்கிறேன் அறிதாக, துபாய் தேய்ரா(Deira) வில் உள்ள நூலகத்திற்கு. பெரும்பாலும் technical. still not a member. (இப்பொழுது இந்த வலையே என்னை பயங்கரமாக பின்னிவிட்டது) அறிமுகமாகி ஒரு வாரம்தான் ஆகியுள்ளது, பெரும்பாலான நேரம் இதிலே கழிந்து விடுகிறது.
வாசி உங்கள் பகிர்தல்களுக்கு மிக்க நன்றி
Post a Comment