Monday, July 23, 2007

கவிதை குறித்தான என் புரிதல்கள் மற்றும் சில பகிர்வுகள்




கவிதையை விட வேறெதுவும் என்னை இட்டு நிரப்பமுடியுமா என்பது சந்தேகம்தான்.கவிதை என்கிற வடிவம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் தமிழின் தொன்மையும் வரலாற்றையும் வேறெந்த வடிவம் கொண்டும் சிறப்பாய் பதிவித்திருக்க முடியாது.தொன்மையான வடிவமான இக்கவிதையே நம் மொழியின் அடையாளமாக கலையின் பிறப்பிடமாக அமைந்திருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து மாறிக்கொண்டும் வடிவத்தை அவ்வப்போது ஒழுங்கமைத்துக் கொண்டும் தன் இருப்பை மீள்பதிவித்துக்கொள்ளும் கவிதையின் வடிவம் எல்லைகளற்றது.

பாப்லோ நெருடாவின் துயரமான இந்த இரவில் ஒரு கவிதை எழுதலாம் என்கிற நிலைப்பாடுதான் வெகு இணக்கமாக இருக்கிறதெனக்கு வாழ்வு நம் மீது செலுத்துகிற வன்முறையாலோ அல்லது உணர்வுகளை அசைத்துப்பார்க்கும் மென் தொடுகையாலோ கவிதை தனக்கான விதைகளை ஒரு தனிப்பட்ட சுயத்திற்க்குள் விதைத்துவிட்டு காணாமல் போய்விடுகிறது.துளிர் விடும் விதைகள் சூழல்களின் ஒத்திசைவில் செடியாகவோ மரமாகவோ தன் இருப்பை வடிவமைத்துக் கொள்கிறது.

கவிதை ஒரு சொல் விளையாட்டோ அல்லது அழகியல் வடிவமோ அல்ல.அது தன்னுள் கொண்டிருக்கும் இலட்சியம் அபரிதமானது.தனக்குள் உயிர்ப்பாய் இருக்கும் கவிதையை பிரபஞ்சத்தில் ஒரு உயிரெனக் கொள்ளலாம். இயக்கத்திலிருக்கும் அல்லது வளர்ச்சியடையும் பொருட்கள் மட்டுமே உயிருள்ளதென கருதப்படுவது போல் வளர்த்தெடுக்கப்படும் கவிதை வடிவங்கள் மட்டுமே உயிருள்ளது.பழைய அல்லது திரிந்த வடிவத்தை பிரகடனப்படுத்தியபடி வார்த்தைகளை பிடித்துத் தொங்கும் வடிவங்கள் கவிதையாகாது.அவை நாற்றமெடுத்த இறந்துபோன உடலின் துண்டங்கள் மட்டுமே.

தானாகவே உருவாகும் அல்லது நேரும் ஒரு வடிவமே கவிதை. திட்டமிட்டு செய்யப்படும் ஒன்று கவிதையாகாது. வார்த்தைகள் துருத்திக்கொண்டோ அதீதமாகவோ இருக்குமெனில் அந்த வடிவம் தனக்கான உயிர்ப்பை இழக்கிறது. சமகால கவிதைகள் குறித்து முன் வைக்கப்படும் விமர்சனங்களில் புரிவதில்லை எனும் பொத்தாம் பொதுவான கருத்தொன்று வானம்பாடிகளின் கவசமாய் நம் தமிழ் மூளைகளை இன்னமமும் பாதுகாத்துக்கொண்டு வருகிறது.மேம்போக்கான, செத்த,பழைய அணுகுமுறைகளை தனக்கான அடையாளமாக கொண்ட சில,பல பழகிய மூளைகள் தங்களின் பாதுகாப்புணர்வின் மிகுதியால் தொடர்ச்சியாய் முன்வைக்கப்படும் வாதங்களில் ஒன்றுதான் கவிதைகளில் ஆபாசம்.

இந்த வெற்று விவாதங்களுக்கு பதில் சொல்வதை விட கவிதைகளில் படிமம் என்பதென்ன?அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்துப் பார்ப்போம். கவிதைப் படிமம் (poetic image) என்பது பொருள், எண்ணம், கருத்து, உணர்வு என்பவைகளைப் புலன்வழிக் காட்சிகளாகவோ, நுண்காட்சிகளாகவோ, புலனுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களாகவோ மாற்றி வழங்குவது.படிமம் அலைந்து திரிவதில்லை. யோசனைக்கும் தீவிர சிந்தனைக்கும் அறிவுக்கும் இட்டுச் செல்லாமல் அனுபவத்தின் நுழைவாசலில் சுருக்கமாக இயங்குகிறது. அடுத்த நிமிஷத்தில் அந்த இயக்கம் மறைந்து படிமமே அனுபவமாகிறது.

'பாம்புப் பிடாரன் சுருள் சுருளாக வாசிக்கிறான் ' இது பாரதியின் படிமம், இசையை கண்களில் கொண்டு வந்து நிரப்பும் உணர்வைப் பெற முடிகிறதல்லவா?.


இன்னும் சில படிமங்கள்


'கூழாங்கற்களின் மெளனம்- கவிஞனுடைய உலகில் அஃறிணை என்பது இல்லை. 'மூலைகள் வெடித்துப் பெருகி இன்னும் இன்னும் மூலைகள் ' 'ஒருகை மீது இப்போது மழைவீழ்கிறது, மற்றதிலிருந்து புல் வளர்கிறது ' 'ஒரு நாள் கூந்தல் இழைகளிடை காற்று பிணங்கள் இழுத்துக் கொண்டோடியது ' இந்த சர்ரியலிசப் படிமங்கள் தம் இருப்பிடங்களில் 'விநோதம் ' என்று தோன்றாமலே வித்தியாசமான உணர்வுகளை எழுப்பக் கூடியவை
'என் பிடறியில் குடியிருக்கும் இருள் கலைந்து புறப்பட்டு நிசப்தத்தில் வானை நிரப்புகிறது '
இது இன்னொரு சிறந்த படிமம்

பாஷோவின் ஒரு ஹைகூ கவிதையை பார்ப்போம்


நங்கூரத்தின் மீது

ஒரு கடற்பறவை

அமைதியாக

திடாரென்று நங்கூரம்

நீரில் மூழ்கியது

காற்றில் அலை மோதி

வானில் ஏறியது பறவை.


இதில் நங்கூரம், பறவை ஆகியவை வாசகனால் எப்படியும் அர்த்தம் தரப்படலாம். இக்கவிதை ஒரு அர்த்த சட்டகத்தை உருவாக்கவில்லை. ஒரு உள நிகழ்வின் சட்டகத்தை மட்டுமே உருவாக்குகிறது
இப்படி நல்ல கவிதைப் படிமங்கள் ஏராளமாகச் சொல்லிப் போகலாம். மொத்தத்தில் இன்றைய படிமங்கள் அரூப நிலைகளை நோக்கியவை; மெளனத்தைத் தொடமுயல்பவை. இந்தவிதமான நுண்மையை உவமை உருவகம் கொண்டு சாதிக்க முடியாது. அவை செல்வாக்கு இழந்ததற்கு இது ஒரு காரணம், அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டது; அலங்கரிக்க, சாமர்த்தியம் காட்ட, விளக்கம் சொல்ல எனக் கவிதைக்குப் புறம்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டது. மற்றபடி இன்றும் இனியும் நல்ல உவமைகளுக்கு மதிப்பு இல்லாமல் போய்விடாது.


அடர்வு தன்மை கொண்ட அரூப கவிதைகள் ஒருபுறமும் படிமமும் நுட்பமும் புனைவும் மாந்திரீக யதார்த்தவியங்களும் ஒருபுறமும் கண்ணில் படுவதையெல்லாம் கவிதையாக்கும் யுக்தி ஒருபுறமும் விளிம்பின் வலிகளை அப்பட்டமாய் முகத்திலறைவது போல பதிவித்தபடி எந்த கட்டுக்களிலும் அடங்காத கவிதைகள் ஒருபுறமுமாய் தமிழ்க் கவிதைகள் தனக்கான நகர்வுகளில் திருப்தியாகவே இருக்கிறது.செத்த உடல்களை புணர்ந்து திரியும் பரிதாபத்திற்க்குரிய வாசகனையும் வெற்றுச் சொற்களால் பரப்பை நிறைக்கும் தமிழ்க்கவி சல்லிகளையும் புறந்தள்ளியபடி முன் நகர்கிறது உயிர்ப்பான கவிதை.


ஒப்பீடு


அபி நேர்காணல்

தேவதேவன் நேர்காணல்

ஜெயமோகன் குற்றால பதிவுகள் இலக்கிய அரங்கு 2

33 comments:

லக்ஷ்மி said...

நல்லா இருக்கு அய்யனார்.
//தன் இருப்பை மீள்பதிவித்துக்கொள்ளும் கவிதையின் வடிவம் எல்லைகளற்றது//

எங்கேயோ படித்த காதல் கவிதையொன்று

ஒவ்வொரு முறையும் நாம் எல்லை கடந்து விட்டதாய் எண்ணாதே தோழி
நாம், நமது எல்லைகளை விரிவு செய்கிறோம்

இது காதலுக்கு மட்டுமில்லை, கவிதைக்கும் மொழியின் எல்லா வடிவங்களுக்குமே பொருந்தும்தானே?

Ayyanar Viswanath said...

நல்ல கவிதை லக்ஷ்மி

எல்லைகளை விரிவு செய்வதுதானே உயிர்ப்பானதாய் இருக்க முடியும்..பகிர்ந்ததிற்க்கு நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\வாழ்வு நம் மீது செலுத்துகிற வன்முறையாலோ அல்லது உணர்வுகளை அசைத்துப்பார்க்கும் மென் தொடுகையாலோ கவிதை தனக்கான விதைகளை ஒரு தனிப்பட்ட சுயத்திற்க்குள் விதைத்துவிட்டு காணாமல் போய்விடுகிறது.//

.. நல்ல கவிதைகள் தன்னைத்தானே தான் எழுதிக்கொள்கின்றன என்று சொல்வார்கள் இங்கே கவிதைக்கான விதையை கவிதையே போட்டது என்கிறீர்கள்...கவிதை எழுதவில்லை என்றாலும் கவிதையைப்பற்றி எழுதிவிட்டீர்கள்.

அபி அப்பா said...

அருமை அய்யனார் கீப்பிட்டு அப்பு!

சாலிசம்பர் said...

கவிதை என்றாலே காததூரம் ஓடும் ஒரு வாசகனுக்கு ,இப்பதிவு புதிய நடைக் கவிதைகளை படிக்கத் தூண்டுவதாகவும்,படித்துப் புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும்,புரிந்து கொள்ள சில வழிகளைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.

இளங்கோ-டிசே said...

நன்று.
....
இவ்வார நட்சத்திரத்திற்கு வாழ்த்து!

Jazeela said...

பாடுபொருள், செய்நேர்த்தி, சொற்சிக்கனம், படிம யுத்திகள், சொல்லும் விதம் (அதில் அழகுணர்வு தன்னால் வெளிப்படுதல்)
, உணர்ச்சிபூர்வமாக அல்லாது உணர்வுபூர்வமான அணுகுமுறை இவைகள்தான் உரைவீச்சை கவிதையாக மாற்றும் காரணிகளாகுகிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால் உங்களுடைய கருத்தோடு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியிருக்க வேண்டாம்.

//இயக்கத்திலிருக்கும் அல்லது வளர்ச்சியடையும் பொருட்கள் மட்டுமே உயிருள்ளதென கருதப்படுவது போல் வளர்த்தெடுக்கப்படும் கவிதை வடிவங்கள் மட்டுமே உயிருள்ளது.பழைய அல்லது திரிந்த வடிவத்தை பிரகடனப்படுத்தியபடி வார்த்தைகளை பிடித்துத் தொங்கும் வடிவங்கள் கவிதையாகாது.அவை நாற்றமெடுத்த இறந்துபோன உடலின் துண்டங்கள் மட்டுமே.// இது உங்கள் புரிதலாகுமே தவிர இதுதான் கவிதை என்று வரையறுக்க முடியாது.

//தானாகவே உருவாகும் அல்லது நேரும் ஒரு வடிவமே கவிதை. // ஏன் அழகியல் வடிவத்தில் தானாக உருவாகாதா என்ன?

//திட்டமிட்டு செய்யப்படும் ஒன்று கவிதையாகாது. // நீங்கள் சிலாகிக்கும் வடிவம் வளர்த்தெடுக்கப்படுகிறது ஆனால் அழகியல் வடிவத்தில் வந்து விழுந்தால் அது மட்டும் திட்டமிட்டு செய்யப்படுகிறது அப்படித்தானே? நல்லா இருக்கு உங்க நியாயம்.

//இந்த வெற்று விவாதங்களுக்கு பதில் சொல்வதை விட // விவாதங்கள் என்று வந்த பிறகு வெற்றுக்கெல்லாம் பதில் சொல்லித்தான் ஆகணும். :-)

Ayyanar Viswanath said...

முத்துலக்ஷ்மி

நல்ல கவிதைகள் தன்னைத்தானே எழுதிக்கொள்வதற்க்கான விதையையும் அதுவே இடுகிறது (நாம் இருவர் சொல்வதும் ஒன்றுதான் )
செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே,முன் தீர்மாணங்கள்,சிறுமை மனநோவு இவைகளை துரத்திவிட்டு மனதை திறந்து வைத்துக்கொள்ள வேண்டும் மற்றதெல்லாம் கவிதை பார்த்துக்கொள்ளும்

Ayyanar Viswanath said...

அபிஅப்பா நன்றி

ஜாலி சந்தோசம்..இந்த எழுத்து சரியா போய் சேருமான்னு சந்தேகம் இருந்தது..

Ayyanar Viswanath said...

நன்றி டிசே

Ayyanar Viswanath said...

நன்றி டிசே

Ayyanar Viswanath said...

ஜெஸிலா
கவிதை குறித்தான என் புரிதல்கள்தான் இவை ..இதுதான் சரி என்று சொல்லவில்லையே

செய்யப்படும் எதுவுமே கவிதையாகுதுங்கிறது என்னோட அனுமானம்..1000ரூபா கொடுக்கிறேன் நீ ஒரு குத்து பாட்டு எழுதுங்கிறதுதான் செய்யப்படுவது. அழகியலை முன் வைக்கும் கவிதைகளும் நிறைய இருக்கு ஜெஸிலா..

/அலங்கரிக்க, சாமர்த்தியம் காட்ட, விளக்கம் சொல்ல எனக் கவிதைக்குப் புறம்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டது. மற்றபடி இன்றும் இனியும் நல்ல உவமைகளுக்கு மதிப்பு இல்லாமல் போய்விடாது. /

இதுல ஒத்துகிட்டு இருக்கனே நல்ல உவமைகள் அழகுன்னு :)

ILA (a) இளா said...

ஜெசிலாவின் கேள்விகள் நியாயமானவை. எதிர் அழகியல் பற்றியும் சொல்லி இருக்கலாம். தமிழ்ப்பதிவர்களுக்கு ரொம்பவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்குங்க, என்னையும் சேர்த்து

கண்மணி/kanmani said...

அய்யனார் உங்க எழுத்து சற்று ஆழமானது அடர்த்தியானதும் கூட.ஒப்புக்கிறேன்.
ஒரு சேலஞ்ச் இந்த நட்சத்திர வாரத்தில் கொஞ்சம் ஜாலியாவும் லைட்டாவும் பதிவிடுங்கள்.முடியுமா?
கவிதை,பின்நவீனத்துவத்தை உங்க ரசிகர்களுக்கும்
மொக்கை,கும்மியை உங்க பா.குடும்பத்திற்கும் தர முடியுமா?சேலஞ்ச் ???
[அபி அப்பா அய்ஸுக்கு ஆப்பு ரெடி ;)]

கண்மணி/kanmani said...

அப்படியே உங்க பிளாக்கு பேரின் [தனிமையின் இசை ]பான்ட் சைஸ் கொஞ்சம் கம்மி பண்ணா இன்னும் பிளீஸிங்கா இருக்கும்.

Ayyanar Viswanath said...

இளா

மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை சிறிது கடினம்தான்..பழக்கப்பட்ட அல்லது தான் நம்பும் ஒன்றை சிதைக்க இயலாத குறுகிய மனங்களே கவிதையில் ஆபாசம் என ஓ வென்று கத்துகிறார்கள்.புரியவில்லை என புலம்புகிறார்கள்..
கவிதை என்பதென்ன பாஸ்ட் புட்டா போகிற போக்கில் சாப்பிட்டு கொள்ள உணர்வு ரீதியிலிருந்து வெளிப்படுவை ..என்னை கேட்டால் உயிருள்ளவை.. கவிதையை அணுகும் மனோநிலை இல்லாதவர்கள் தவிர்ப்பது நல்லது ..வெற்றுக்கூச்சல்கள் மூலம் தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் சிக்கலான மனங்கள் தான் இப்படி புலம்பும் ..இதிஅ பற்றி பேசி நேரத்தை வீணாக்குவதை விட புரிந்து கொள்ள ஆவலிருப்பவர்களுக்கு உதவியாய் ஏதேனும் செய்யலாம் என்றுதான் வீண் விவாதங்களை முன் வைக்கவில்லை

லொடுக்கு said...

//புரிந்து கொள்ள ஆவலிருப்பவர்களுக்கு உதவியாய் ஏதேனும் செய்யலாம் என்றுதான் வீண் விவாதங்களை முன் வைக்கவில்லை
//

அதாவது, உங்கள் கவிதைகள் சிலருக்கு மட்டும் தான்!! :(

-/பெயரிலி. said...

/அது தன்னுள் கொண்டிருக்கும் இலட்சியம் அபரிதமானது./

அடடா!
அஃது எதுவோ? எதற்கோ? ;-)

Suka said...

//கவிதை ஒரு சொல் விளையாட்டோ அல்லது அழகியல் வடிவமோ அல்ல.அது தன்னுள் கொண்டிருக்கும் இலட்சியம் அபரிதமானது.தனக்குள் உயிர்ப்பாய் இருக்கும் கவிதையை பிரபஞ்சத்தில் ஒரு உயிரெனக் கொள்ளலாம். இயக்கத்திலிருக்கும் அல்லது வளர்ச்சியடையும் பொருட்கள் மட்டுமே உயிருள்ளதென கருதப்படுவது போல் வளர்த்தெடுக்கப்படும் கவிதை வடிவங்கள் மட்டுமே உயிருள்ளது.பழைய அல்லது திரிந்த வடிவத்தை பிரகடனப்படுத்தியபடி வார்த்தைகளை பிடித்துத் தொங்கும் வடிவங்கள் கவிதையாகாது.அவை நாற்றமெடுத்த இறந்துபோன உடலின் துண்டங்கள் மட்டுமே.//

முற்றிலும் உண்மை. எதுகையும் மோனையும் அணிகளும் அற்புதமான உவமைகளும் காட்டுவது ஒரு தேர்ந்த கலைஞனின் மொழித் திறனைத் தானே தவிர ..உணர்வுகளை முற்றிலுமான பிரதிபலிப்பதில்லை ..

மொழிகள், கவிதைகளை பகிர்ந்துகொள்ளப் பயன்படும் வெறும் பாத்திரம் தானே..

எழுத்து வடிவத்தில் கவிதைகளை ரசிப்பது ஒருவிதமான ஊனமுற்ற நிலை தானோ..

வாழ்த்துக்கள்
சுகா

ஜீவி said...

எல்லாம் சரி. 'குமுதம்' பத்திரிகை
போல், எதற்கந்தப் படம்?

ILA (a) இளா said...

மன்னிக்கனுங்க அய்யனார்.
//இதிஅ பற்றி பேசி நேரத்தை வீணாக்குவதை விட புரிந்து கொள்ள ஆவலிருப்பவர்களுக்கு உதவியாய் ஏதேனும் செய்யலாம் என்றுதான் வீண் விவாதங்களை முன் வைக்கவில்லை//
என் கேள்வியும் புரிந்து கொள்வதற்காக கேட்டதுதான். ஏற்கனவே இப்படி ஒரு சர்ச்சை வந்ததும் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். உங்கள் விருப்பம். எதிரழகியல் பற்றி சொன்னால் வீண் விவாதம் வரும்னு நினைச்சா சரி, ஃபிரீயா விடுங்க.

Ayyanar Viswanath said...

கண்மணி டீச்சர் வம்பில் மாட்டி விடுறீங்களே :(
நகைச்சுவை சாம்பவான்களான நீங்க அபிஅப்பா மத்தியில நான் எழுதுனா கிச்சு கிச்சு அளவிற்க்கு கூட இருக்கது..லைட்டான பதிவு நிச்சயம்

ஃபாண்ட் சைஸ் எப்படி மாத்துவதுன்னு தெரியலியே

Ayyanar Viswanath said...

பெயரிலி
உங்க கிண்டல் புரியுது :)
இலட்சியம் அல்லது நோக்கம் என்பது ஒரு சுயத்தை அசைத்துப்பார்ப்பது அல்லது தன்னுனர்வின் முழு வெளிப்பாடாய் இருப்பது மேலதிகமாய் சொல்லப்போனால் முழுமையான ஒன்றின் பாசாங்கற்ற பதிவுகளாய் இருப்பது.

எதற்கெனில் நாம் உயிராய்த்தான் இருக்கிறோம் என்பதை நிரூபிக்க.

Ayyanar Viswanath said...

/எழுத்து வடிவத்தில் கவிதைகளை ரசிப்பது ஒருவிதமான ஊனமுற்ற நிலை தானோ../

உண்மை சுகா.. புரிதலுக்கும் பகிர்தலுக்கும் நன்றி

Ayyanar Viswanath said...

லொடுக்கு :)

ஜீவி உரிர்ப்பான கவிதை பத்தி பேசும்போது உயிருள்ள ஒரு படம் தேவைப்பட்டது இப்படி குமுதம் ரேஞ்சிக்கு புரிஞ்சிகிட்டீங்களே :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம் நாம் இருவரும் சொல்லவந்தது ஒன்றுதான்..நான் படித்ததை எழுதிவிட்டு.."அதேபோல் " என்ற ஒரு வார்த்தை இணைத்து பின்னர் உங்கள் கருத்தை எழுதி இருக்கவேண்டும். :)

Ayyanar Viswanath said...

இளா
எதிரழகியலை புரிந்து கொள்ள தேவை சற்று பரந்த மனம் ..அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தான உந்துதல்கள்.அது நம்மவரிடம் இல்லை இந்நிலையில் மேலும் அதை கிளறுவதோ வம்புக்கிழுப்பதோ தேவையற்ற ஒன்றாகத்தான் படுகிறது

ஃப்ரியா விடுங்க :)

Ayyanar Viswanath said...

நீங்க சொல்ல வந்தது நேற்றே புரிந்தது முத்துலக்ஷ்மி மிகவும் நன்றி :)

-/பெயரிலி. said...

/இலட்சியம் அல்லது நோக்கம் என்பது ஒரு சுயத்தை அசைத்துப்பார்ப்பது அல்லது தன்னுணர்வின் முழு வெளிப்பாடாய் இருப்பது மேலதிகமாய் சொல்லப்போனால் முழுமையான ஒன்றின் பாசாங்கற்ற பதிவுகளாய் இருப்பது./

அய்யனார்,
தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் சொல்லியிருப்பதைச் சொல்ல/செய்ய கவிதை தேவையில்லையே. சொல்லப்போனால், முழுமையான ஒன்றின் பாசாங்கற்ற பதிவுகளாய் கவிதைகளிருக்கமுடியுமென்பது பாசாங்குத்தனமாகவே தோன்றுகின்றது. இறப்பையும் இழப்பையும் அழகான சொற்களிலே பதிந்து நளினப்படுத்துவதும் ஒரு பாசாங்குத்தனமே. ஜெயமோகன் போன்றோர் தம் படைப்புகளை இப்படியாக ஒரு வெடிக்கும் சரவெடி உணர்வோடு முன்வைப்பதைக் காண்கிறோம். கவிதை/கதை பிறக்கும்போது, எம்மையறியாமல் எம் சில இடுக்குகளின் துணுக்குகள் வந்து விழுந்துவிடுகின்றனவென்பதும் நாம் குழம்பிக்கொண்டிருப்பவை ஒரு கோவையாகப் படிந்துவருவதும் மெய்யே. ஆனால், சுயத்தை அசைப்பது என்பதெல்லாம் நாமே கொடுத்துக்கொள்ளும் பெரிதுபடுத்துதலும் -கவிதைக்கட்டுமானங்கள் அல்லாவிடினும்- கவிதை பற்றிய கட்டுமானங்களும் (பில்டப்) என்றே படுகின்றது. கவிதைக்கென்று -கவிதையென்றில்லை, எப்படைப்புக்குமென்று- எந்த இலட்சியமுமில்லை, படைப்பாளனின் ஒரு துக்கடா ஆகாமல், ஓர் உருப்படியாக ஆவது தவிர. ஆக, இலட்சியமெல்லாம் நாம் இருப்பதாக எண்ணிக்கொள்வதுதான். "ஆதித்தாயின் போக நரம்புகளை மீட்டிக்கொள்வ"திலே என்ன பாசாங்கற்ற சுயத்தினை அசைக்கும் இலட்சியமிருக்கமுடியும்? வெறும் அழகுவசப்படு(த்து)ம் படிமக்கற்பிதம் மட்டுமே எஞ்சமுடியும்.
உங்கள் கவனத்தைச் சிதறடிக்கவிரும்பவில்லை. நட்சத்திரவாரம் முடியட்டும்; பேசுவோம்.

Ayyanar Viswanath said...

மிக்க நன்றி பெயரிலி அடுத்த வாரம் விரிவாய் பேசுவோம்

Jazeela said...

அய்யனார்
//கவிதை குறித்தான என் புரிதல்கள்தான் இவை ..இதுதான் சரி என்று சொல்லவில்லையே// இந்த மாதிரி ஒரு வரியை உங்க பதிவில் எந்த இடத்திலும் சேர்க்கவே இல்லையே?

//தானாகவே உருவாகும் அல்லது நேரும் ஒரு வடிவமே கவிதை. // இப்படி முடிப்பதற்கு பதிலாக அந்த வாக்கியத்தை தொடர்ந்து '....வடிவமே கவிதை என்பது என் புரிதல்' என்று போட்டிருந்தால் நான் கேட்டிருக்கவே மாட்டேன்.

//செய்யப்படும் எதுவுமே கவிதையாகுதுங்கிறது என்னோட அனுமானம்..1000ரூபா கொடுக்கிறேன் நீ ஒரு குத்து பாட்டு எழுதுங்கிறதுதான் செய்யப்படுவது. // குத்து பாட்டு, திரைப்பட பாடல் எப்படி கவிதையாகும்? பாடலில் சில வரிகள் கவிதை ஆகலாமே தவிர எல்லாப் பாட்டும் கவிதையாகாதே? //அழகியலை முன் வைக்கும் கவிதைகளும் நிறைய இருக்கு ஜெஸிலா..// அதையும் அழுத்தமாக சொல்லிருக்க வேண்டும் என்கிறேன்.

//இதுல ஒத்துகிட்டு இருக்கனே நல்ல உவமைகள் அழகுன்னு :) //- ஒப்புக்கு சப்பாவா?

Ayyanar Viswanath said...

ஜெஸிலா தலைப்பிலேயே சொல்லிட்டனே என் புரிதல்கள்னு :)

/அதையும் அழுத்தமாக சொல்லிருக்க வேண்டும் என்கிறேன்/
/ஒப்புக்கு சப்பாவா? /

புதுக்கவிதைகளுக்கு ஒரு தனிப்பதிவு போடுறேன் ஜெஸிலா..அதில அழுத்தமா சொல்ல முயற்சிக்கிறேன்

சிவா said...

இது (கீழ கோடிட்டு) என் கருத்து;
கவிதை- ஒருவன் பார்த்த-கேட்ட விஷயங்களை அவன் புரிதலுக்குள் வகைப்படுத்தி பிறகு அழகாக(முடிந்த மட்டிலும்), கோர்வையாக தொகுத்தளிப்பது.
பாட்டு- எளிதல் புரியும்படி வார்த்தைகளை கோர்த்து விஷயங்களை தொகுத்தளிப்பது. இரண்டும் பரிமாணத்தில் வேறு படுகிறது.

கவிதை எழுதும்போது புரிதல் தவறினால் அதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். அழகாக சொல்லவில்லையென்றால் உயிரற்று போய்விடும்.கோர்வை தவறினால் வெறும் வார்த்தைகளாகிவிடும் அது கவிதையாகாது.

பழைய கவிதைகள் எனக்கு புரிவதில்லை. (என் தமிழ் அறிவு அவ்வளவு தான்)நடைக் கவிதைகள் என்னைப்போன்ற பாமரனுக்கு புரிவதால் அதை ரசிப்பதற்கும் விமர்சனம் செய்வதற்கும் எளிதாகிறது.

Featured Post

test

 test